Friday, December 25, 2009

மூச்சு முட்டவைக்கும் கல்வி சூழல் - காத்திருக்கும் கற்பாறைகள்
கற்பாறைகள் காத்திருக்கின்றன... ஒரு நல்ல சிற்பியின் உளி பட யுக யுகமாய் காத்திருக்கின்றன.. மழை, வெயில், கடும் பனி, கால மாற்றங்கள், இவை எல்லாம் கடந்து தன அக வெப்பம் மாறாமல், காத்திருக்கின்றன. ஒரு நல்ல சிற்பி, தான் கண்ட கற்பாறையை, சிற்பமாகவோ, மக்கள் தொழுதிடும் சிலையாகவோ, வடிவமைக்கிறான். அந்த கற்பாறையின், அவ்வளவு நாள் காத்திருப்புக்கு, அன்று பேரர்த்தம் கிடைக்கிறது. பல நேரங்களில், கற்பாறைகள், கண்டுகொள்ளப்படாமல், காலம் தோறும் நிலைப்படிக்கட்டாய், வெறும் கற்களாய், முடிந்து போவதுண்டு. அதன் இருத்தல், உணரப்படாமல்,  கடந்துபோவதுண்டு. அது போன்றதே, ஒவ்வொரு மனிதனின் வாழ்வும்... மாணவ பருவத்தில், நல்ல சிற்பியின்  கண்ணில் படும் பட்சத்தில், ஒளிர்ந்து உலகுக்கு ஒளி கொடுக்கும் ஞாயிறாய் மாறி போகிறார்கள். 

நான் கேட்டறிந்த ஒரு மாணவனின் வாழ்வு, பேரதிர்ச்சியை கொண்டு வந்தது. நிறைய பேர் அந்த முனைக்கும் பயணித்து வந்திருக்கிறார்கள் என்ற எண்ணம் மேலெழுந்தது. அந்த மாணவனின் தந்தை ஒரு ஆசிரியரும் கூட. தந்தை பணி புரியும் அதே பள்ளியில், மாணவனும் படிக்கிறான். பல தருணங்களில், மற்ற ஆசிரியர்களின் வாயிலாக, மகனை பற்றி புகார்கள் தந்தைக்கு வந்து குவிகின்றன. பள்ளி நாட்களில்,  நான் வீட்டுக்கு செல்கிறேன்; என சொல்லி வீட்டுக்கு வந்து விடுவான் இந்த மாணவன். மாணவனுக்கு அவன் தந்தையின், தோட்டமும், அதற்கே உரித்தான, மாடுகள், ட்ராக்டர் இவை உண்டு, வீட்டுக்கு வந்த மாணவன், தானே உழவு செய்வது, தோட்ட வேலைகளில் உற்சாகமாய் செயல்படுவது என இருப்பான். அவன் உள்ளம் படிப்பை விட,  தோட்ட பணிகளில் அதிக ஆர்வம் காட்டியது. அவனுக்கு மிக மிக பிடித்தமான விஷயமாய் விவசாயம் இருந்தது. தோட்டத்தில் இருக்கும் எல்லா வேலைகளையும, தான் எடுத்து செய்வது அவனுக்கு மிக மிக பிடித்திருந்தது.

இந்த நிலையில், இவனது போக்கு தந்தைக்கு பிடிக்கவில்லை. முதலில், கண்டித்து, பின் அடித்து பார்த்து விட்டார். பின் யோசித்தவர், ஐம்பது  கிலோமீட்டர் தள்ளி, ஒரு பெயர் பெற்ற பள்ளியில், விடுதியில் சேர்த்து விட்டார். சில பல தருணங்களில், பள்ளியில் அடி உதை விழுந்து இருக்கிறது. அப்படி இருக்க, ஓரிரு முறை பள்ளியில் இருந்து ஓடி வந்து உள்ளான். வீட்டில் உள்ளவர்களும், அவனை மிரட்டி, புத்திமதி சொல்லி, திரும்பவும் பள்ளியில் சேர்த்து உள்ளனர். அந்த முறை அவனும் தான், இனி நிலைமையை சமாளித்து விடுவேன், என சொல்லி சென்றுள்ளான். இது நடந்து ஒரு பதினைந்து நாட்களுக்கு பின், பள்ளியில் இருந்து ஓடி வந்த மாணவன், படிப்பில் இருந்து தப்பிக்க, வீட்டின் பின் இருந்த புளியமரத்தையும், முழக்கயிரையும் துணைக்கு அழைத்திருக்கிறான். அவனது பிரிவுக்கு பின், அவனது பெற்றோருக்கு, மனக்குருதி நிற்க பலநாட்கள் ஆனது. அவர்களால் தவறு எங்கே நிகழ்ந்தது என கண்டு சொல்ல முடியவில்லை.

இதை விட எனக்கு பேரதிர்ச்சி, இந்த தற்கொலை முயற்சி அவனுக்கு முதல் முயற்சி அல்ல. சில பல தடவைகள் முயன்று, இறுதியில் தான் அவன் வெற்றி பெற்றிருக்கிறான். மொத்தத்தில், நம்முன் இருக்கும் கேள்வி, கல்வி மட்டும், வாழ்க்கைக்கு அனைத்தையும் தந்து விடுகின்றதா? இங்கு இரண்டு கண்ணோடு இன்னொரு கண்ணாய் இருக்கும் என எதிர்பார்த்த கல்வி, வேடிக்கையாய், இருந்த கண்ணையும், குத்தி குருடாக்கி விட்டது. நண்பர் விவரித்த இன்னொரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வந்தது.

இது இன்னொரு மாணவனின் பயணம். பத்தாம் வகுப்புடன், அவனது படிப்புக்கு முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது. அது 1992 ஆம் வருடம். கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு நன்கு நினைவிருக்கும். அது ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை கிரிக்கெட் நடந்த ஆண்டு. 1987  இல் நடந்த ரிலையன்ஸ் உலக கோப்பை டி டி தொலைகாட்சியில் ஒளிபரப்பானது. இந்த உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் நடப்பதால், டி டி  யில் ஒளிபரப்பு  இல்லை என கைவிரிக்கப்பட்டது. இந்த நிலையில், கேபிள் டிவியின் அவதாரம் துவங்கியது. இந்த மாணவனும் அதை கையில் எடுத்தான். சரியான வருமானம். இன்றைய நிலையில், நன்றாக உழைத்து நல்ல நிலைக்கு வந்து விட்டான். இன்றைய நிலையில் அவனுக்கு  மூன்று நான்கு கால் டாக்சிகள் ஓடுகின்றன. எனக்கு ஏனோ இந்த இருவரையும், ஒப்பீடு செய்திட தோன்றியது.

சில ஆண்டுகளுக்கு முன், தொலைகாட்சியில் கண்ட ஒரு பேட்டி ஞாபகம் வருகிறது. அவர் ஒரு ஆதரவு அற்ற மாணவர்கள் விடுதியை நடத்தும் நிர்வாகி. அவர் தன பேட்டியில், தன் மாணவர்களுக்கு சமூகத்தில், சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் ரகசியத்தை சொன்னார. சமூக பரப்பினில், எல்லா காலத்திலும், ஒரு பிட்டர், எலக்ட்ரிசியன், தச்சர், இப்படியான மனிதர்கள் தேவை. ஆகவே நாங்கள் எங்கள் மாணவர்களுக்கு, தொழில் கல்வியை கொண்டு சேர்க்க முன் வருகிறோம். அவர்களை அதிக செலவு இல்லாமல், அவர்கள் வாழ்வுக்கு ஒளி தருகிறோம் என்றார். மேலே சொன்ன விவசாயமும் இதில் சேர்ந்தது தான்; ஏன், அது அதற்கும் மேலே. ஜீவ சேவை. சமூகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டு இருப்பது உழவனுக்கு தான்.  ஆனால் பழுதுகள் நம் பார்வையில் தான் உள்ளன.

பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு அதிகபட்சம் செய்ய முன் வருவது, தனி வகுப்புகள், நல்ல கைடு.. இவ்வளவே. இவை நல்ல மாணவனை உருவாக்குவதில்லை. அதே போல், குழந்தைகளின் கல்விக்கு வாரத்தில் எத்தனை மணி நேரம் நாம் ஒதுக்குகிறோம், எனும் கேள்வி எழுத்தால் நீண்ட பெருமூச்சு வருகிறது.. குறைந்த பட்சம், நாம் பிள்ளைகளிடம் என்ன பேசுகிறோம்? இந்த மாசம் என்ன ரேங்க்? பக்கத்து வீட்டு பையன் அவ்வளவு மார்க் எடுத்து உள்ளானே? உனக்கு எங்கே போனது புத்தி?  - என விடைகள் ஏதுமற்ற கேள்விகளே.. அதிக பட்சம் அவர்களின் படிப்பு சுமையை, நாம் அறிந்து கொள்ள முற்படுவதே இல்லை. அதே போல், ஒரு நல்ல நகைச்சுவை பகிர்ந்து கொள்ள இயலாதவராய் இருக்கிறோம்..

.ஒரு பாட்டியும் பேரனும் காட்டு வழியே பயணிக்கின்றனர். வழியில், ஒரு குளம் தென்படுகிறது. அந்த நிலையில், பேரன், ஒரு கல்லை எடுத்து குளத்தின் மத்தியில் எறிகிறான். கல் விழுந்த இடத்தில் இருந்து அலைகள் எழும்புகின்றன. அவை பெரிய வட்டமாய் உருக்கொண்டு கரை வரை நீள்கின்றன. அந்த அலை பட்டு இலைகள், கரையை ஒட்டி இருந்த தவளைகள் என குளத்தின் இருப்பில் நிறைய மாற்றம் உருவாகிறது. அங்கே உருவான அலை தொடர்ந்தது புது அலைகளை உருவாக்கி செல்கிறது. அதை சுட்டி காட்டிய பாட்டி பார், உனது செயல் எவ்வளவு மாற்றத்தை உருவாக்கி உள்ளது என்கிறாள். அதை போன்றதே மாணவர்களின் படிப்பும் வாழ்வும். அவர்களது நிகழ்வு, சிறு கல்லாய் இருக்கலாம். ஆனால் அதற்கு தொடர் நிகழ்வுகள் உண்டு. கலங்கிப்போன குளம் போல, குடும்பமும், குடும்பத்தின் அத்தனை அங்கத்தினரையும் ஒரு சிறுவனின் படிப்பு, அவனது நிலை, நிறைய பாதிப்பை உருவாக்குகிறது.

அது ஆஸ்திரேலியாவில் உள்ள துறவியர் மடம். அங்கு இருந்த மடத்தில், ஒரு தோட்டம் இருந்தது. பல தருணங்களில், வெளியில் இருந்து மாடுகள் வந்து தோட்டத்தை நாசம் செய்தன. அதை கவனித்த துறவி ஒருவர், அந்த மடத்துக்கு சுற்று சுவர் எழுப்ப முனைந்தார். அவரும் தன் சொந்த முயற்ச்சியில், தனி ஒருவராய் பாடுபட்டு சுவர் கட்டும் பணியை முடித்தார். அதன் பின், அந்த சுவற்றை கண்ட அவர், சற்றே துணுக்குற்றார். அந்த சுவரில் அவர் வைத்த ஒரு செங்கல், சுவருக்கு பொருந்தாமல், சற்றே திரும்பி இருந்தது. இந்த நிலையில் , அந்த மடத்தை பார்வையிட மூத்த துறவி ஒருவர், அந்த மடாலயத்தின் தலைமை நிலையத்தில் இருந்து வந்திருந்தார். வந்த அவர் துறவி கட்டி இருந்த சுவற்றை பார்வையிட்டு துறவியை பாராட்டினார். ஆனால் துறவியோ, அந்த ஒரு செங்கல்லை சுட்டி காட்டி, இந்த செங்கல் திரும்பி இருக்கிறது என்றார். ஆனால் மூத்த துறவியோ, சுவர் நேர்த்தியாகவும், உறுதியாகவும் கட்டப்பட்டுள்ளது என சொல்லி மகிழ்வோடு சென்றார்.


நாமும் பல நேரங்களில், அந்த துறவியை போல், ஒற்றை செங்கல்லை பிடித்தவண்ணம், காலம் காலமாய் புலம்பியபடி உள்ளோம். ஒவ்வொரு மனிதனையும் அந்த ஒற்றை செங்கல்லை கொண்டே எடை போடுகிறோம். அவனது மற்ற அற்புதமான விஷயங்கள் நம் கண்பார்வைக்கு என்றும்  வருவதில்லை.

பாராளுமன்றத்தில், உறுப்பினராய் இருந்த ஆர். கே. நாராயணன் ஒரு முறை மாணவர்களின் படிப்பு சுமையை பற்றிய கேள்வியை அவையில் எழுப்பினார். அவரது கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.  
 
.
.

Friday, December 11, 2009

பதின்மூன்று வருடத்திற்கு பின் ஒரு ஜிலீர் சந்திப்பு

பதின்மூன்று வருடத்திற்கு பின் எனது பள்ளி ஆசிரியரை சமீபத்தில் சந்தித்து அளவளாவி மகிழும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. பள்ளி நாட்கள் மனதில் என்றென்றும் பசுமையாக நினைவில் நிற்கின்றன. அன்றைய சீருடை, தினம் தோறும் தொடரும் தேசிய கீத ஒத்திகை, பொரி, கடலை  வாங்கி சுவைக்கும் மாலை நேரம், தனி வகுப்புகள், அந்த நாள் நட்பு வட்டம், பேருந்து காத்திருப்பு, மழை நாட்கள், மாணவர், ஆசிரியருக்கான பிரத்தியேக பெயர்கள் என எவ்வளவு விஷயங்கள் ஞாபகங்களில்..

எனது ஆசிரியரின் நடை பாவனையை வைத்து அவரை இனம் கண்டு கொண்டேன். அவரிடம் என்னை அறிமுகம் செய்வித்து, அவரின் நலம் விசாரித்தேன். அன்புடன் பதில் சொன்னவர், அந்த நாள்களை நினைவுக்கு கொணர்ந்தார். என்னுடன் படித்த சக மாணவர்களை நான் ஒப்பித்தேன். இன்று அவர், தான் பணி ஒய்வு பெற்று   விட்டதாகவும், அவரின் மகன்கள், மனைவி என குடும்ப உறுப்பினர்களை, அவர்களின் இன்றைய நிலை பற்றி, தற்போதைய அவரது பணி பற்றி சொன்னார். 

மற்ற ஆசிரியர்களை விட இவர் எங்களுக்கு மிக மிக முக்கியம்.ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் ஆசிரியர்;  பத்தாம் வகுப்பில், ஆங்கில ஆசிரியர். இவர்  நாள்தோறும் பள்ளியை விட்டு கிளம்பும் தருணத்தில், யாரோ ஒரு விடுதி  மாணவரை அழைத்து,  அவனின் இன்றைய படிப்பு, பாடத்தை எப்படி புரிந்து கொள்ளுவது, அடுத்த தேர்வில் சரி செய்யப்பட வேண்டியன என விளக்கி செல்வார். அதே போல் வகுப்பில், பல தருணங்களில் அவரின் கற்பனை உலகும், அதிலிருந்து கட்டாயம் நாரதரும் எட்டி பார்ப்பார்கள். ஓய்வு நேரம், பேருந்துக்கு காத்திருக்கும் தருணத்தில், பாடத்தை,  செய்யுளை, எப்படி ரீகால் செய்வது என சொல்லி தருவார். மழை நாட்கள், இரவு விளக்கு இல்லாத நாட்களுக்கு மெழுகுவர்த்தி வாங்கியாகி விட்டதா என அக்கறையோடு வினவுவார்.
( எனக்கு தெரிந்து எந்த ஆசிரியரும் இது பற்றியெல்லாம் விசாரிக்கிரார்களா?  )

பள்ளியில் நடக்கும் எல்லா கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் அவர் பொறுப்பு. சமயங்களில் போடப்படும் மேடை நாடகம், வானொலி நிகழ்ச்சிகள்[ குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சிகள் ] என எல்லாவற்றையும் அவர் முன் எடுத்து செல்வார். எப்பொழுதும் ஒப்பனைக்கு தேவையான ஒட்டு தாடி, மீசை கைவசம் இருக்கும்.  அவர் ஒரு தேர்ந்த இசை கலைஞர். புல்லாங்குழல் அவரின் விருப்பத்திற்கு உரியதாய் இருந்தது. அதை போன்றே அவர், ஓர்  அரிய கார்டூனிஸ்ட். இரண்டு கைகளாலும், பலகையில், நிமிடங்களில், கார்ட்டூன்  வரைவார். தினமும் அவரது கார்டூன் ஒன்று அறிவிப்பு பலகையை அலங்கரிக்கும்.நல்ல பாடகர் நல்லதொரு கவிஞர் அவர். பல நாட்களில் அவரது கவிதைகள், இசையோடு வகுப்பறைகளில் அரங்கேற்றத்திற்கு உள்ளாகும். அது புத்தாண்டாக இருக்கலாம், அது சுதந்தர தினத்துக்கு முந்தய நாள், குடியரசு தினத்துக்கு முந்தய நாள் இப்படி எதுவாகினும் இருக்கலாம்.    . மிக மிக ஆச்சர்ய நிமிடங்கள் அவை..

நான் குறிப்பிடும் விஷயம் பத்தாம் வகுப்பில் நடந்தவை. அவர் ஆங்கில இலக்கணம் எடுத்து செல்வார். முதல் மாத தேர்வுக்கு முன் வகுப்பில் ஒரு அடிப்படை தேர்வை நடத்தினார். இருபத்தைந்து வினாக்கள். பதில் எழுதியபின், எங்களின் நோட்டு புத்தகம் இடம் வலமாக பயணிக்கும். நமது பதில்களை இன்னொரு மாணவன் திருத்துவான். நமக்கு வேறொருவரது நோட்டு வந்து சேரும். அப்படி இருக்க, ஒவ்வொருவர் வாங்கிய மதிப்பெண் அடிப்படையில் எழுந்து நிற்க வேண்டும். நான் வாங்கிய மதிப்பெண் மூன்று. என்னையும் சேர்த்து ஐந்து மதிப்பெண்ணுக்கும்  குறைவாக  பெற்றவர் மூன்று பேர். ம்ம்.. எழுந்திரி என்றார். சூதில் அனைத்தையும் இழந்த பஞ்சபாண்டவர் போல், நாங்கள் நிராயுதபாணியாய் தலை தொக்கி நின்றோம்.

அதன் பின், சரி இனிமேல் நீங்கள் வகுப்பில் முன்னாள் வந்து அமர வேண்டும் என சொல்லி சென்றார். எங்களுக்கு தரப்பட்ட அடைமொழி "Future Bright Boys". அதன் பின், தினமும் காலையில் எங்கே அவர்கள் எனும் குரல் கேட்கும். நாங்களும் அகத்தி கீரையை அசைபோட்டபடியே முன் செல்லும் அஸ்வமேத யாக குதிரை போல் முன்னே சென்று தரையில் அமர்வோம். அதற்கு பின் காலாண்டு தேர்வு வந்தது,  காலாண்டு தேர்வில், ஐம்பது மதிப்பெண் எடுத்து இருந்தேன். அவரது சொல்படி ஐம்பது மதிப்பெண் எடுத்தால் எளிய பரிசு உண்டு. மதிப்பெண் வாசித்த தருணத்தில்,  அருகில் இருந்த நண்பன் வசந்த், எளிய பரிசு வாங்கிட்டே என்றான்.. என்னையும் சேர்த்து நான்கு பேர் எளிய பரிசு[ பென்சில் தான் ] பெற்றோம். உண்மையில் அரிதான, உவப்பான தருணம் அது.

அடுத்து வரும் நாட்களில், பள்ளியில் பேச்சு, பாட்டு, கட்டுரை போட்டிகள் நடக்கும். மாலையில் பள்ளியே கூடி அமர்ந்திருக்கும். மைக்கில்,  பேசவும், பாடவும் மாணவர்கள் ஒவ்வொருவராய் வந்து செல்வர். பாட்டு போட்டியில் அந்த ஆசிரியர் தான் நடுவர். அப்படி இருக்க ஒரு மாணவன், "தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு, அங்கே துள்ளி குதிக்குது கன்று குட்டி.. " எனும் தேசியகவி விநாயகம் பாடலை பாடினான். இரண்டு வரிகளுக்கு மேல் பாடல் வரவில்லை. அருகே இருந்த ஆசிரியர், " சொட்டு நீலம் டோய்! ரீகல் சொட்டு நீலம் டோய்.. என்ன வெண்மையோ! ஆஹா என்ன வெண்மையோ! சொட்டு நீலம் என்று கேட்காதீர்கள்! ரீகல் சொட்டு நீலம் என்று கேட்டு வாங்குங்கள்! " என தொடர்ந்தார். பாடிய பையன் தான் பாவம்! விதிர்விதிர்த்து போய்விட்டான்!

அதன் பின்னான வகுப்பு தருணங்களில், " இங்க பாரடா இவனை.. " என ஆசிரியரின் கலவர குரல் எழும். கட்டுரை நோட்டை சரி செய்கிறேன் என சொல்லி, ரப்பரால், பிளேடால் முடிந்தவரை சுரண்டி எழுதியதை திருத்தி இருப்போம். நடுவில் முடிந்தால், நோட்டு கிழிபட்டு ஆசிரியர் இன்னொரு பக்கத்தில் இருந்து பரிதாபமாய் பார்ப்பார். பல சமயங்களில், என்னடா எழுதி இருக்கே, சொல்லி தொலையேண்டா என ஒரு சிலரை கேட்பார். கட்டுரை காண்பிக்கும் அந்த மாணவனும் தலை குனிந்த படியே, அது ஒரு சிலரால் மட்டும் முடிந்த தேவ ரகசியம் என சொல்லி கொள்வான். 

ஆனால் வருடம் முடிந்த அந்த நாளில், "பாடித்திரிந்த பறவைகளே.. பாசம் நிறைந்த நினைவுகளே, பழகி களித்த தோழர்களே! நாம் பறந்து செல்கின்றோம்...   " என அவரோடு சேர்ந்து நாங்கள் பாடிய பாடல் இன்னும் எங்கள் காதில் ரீங்கரிக்கிறது.

.  
.

Thursday, November 12, 2009

இமைகொட்டும் விண்மீன்கள்

சில சமயம் கவிதைகளை முயற்சித்து பார்ப்பது வழக்கம். மிக மிக அரிதாய் சில நல்ல விஷயங்களும், சில அபத்தங்களும் வந்து விழும். இதோ அவற்றில் ஒரு சில ..

இமைகொட்டும் விண்மீன்கள்
"இலையில் சிதறும் மழைத்துளி
இமைகொட்டும் விண்மீன் சிதறல்

தூரிகை தூவும் வர்ணச்சிதறல்
தூவானம் தூவும் எல்லையிலா வானம்

பால்கொட்டி உலாவரும் வெள்ளி நிலா
பனிதூவி தேவார துயிலெழுப்பும் மார்கழி காலை

இமைபிரித்து  உலகறியும் மழலையின் மந்தகாசம்
இதயம் வருடி இதம்கூட்டும் குழலோசை

இறையின் திருமுன் அமர்ந்து தவமியற்றும் ஒற்றைப்பூ
இன்னிசை பாடிடும் புல்லினக்கூட்டம்

ஜதிகூட்டும் காட்டாற்று புதுவெள்ளம்
ஜாலம் காட்டும்  காட்டு மின்மினி

மகரந்தம் தூவும் மலர்ச்சரம்
மண்மீது துளிர்க்கும் ஒற்றைத்தாவரம்

தேன்குடித்து மயங்கி கிடந்த ராணி பட்டாம்பூச்சி
தின்று தித்தித்து இன்னும் கேட்ட திணை மாவு

பால் தேடி ஓடும் பாப்பா கன்றுக்குட்டி
கால் தொட்டு வளைந்து ஓடும் ஆட்டுகுட்டி

கதைகேட்க நீ! கதை சொல்ல நான்!
 பகல்களும், இரவுகளும் போதவில்லை!
நினைத்து சிரிக்கவும், கனவில் மிதக்கவும்..  "


அருவி
அரிதாகவே அகப்படுகின்றன
கத்தும் குருவியும்
கொட்டும் அருவியும்!

.

Thursday, October 15, 2009

மத்தாப்பு தருணங்கள்:பதிவர் உலகில் அனைவருக்கும் இனிய தீப திருநாள் நல்வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வு என்றென்றும் ஒளியின்  இயல்பை உடையதாய் மாறட்டும். வாழ்வு என்றெல்லாம், எந்தெந்த நிமிடங்களில்  களிப்பு தருகின்றதோ, அதெல்லாம் மத்தாப்பு தருணங்கள்.

வாழ்வின் நீண்ட பயணத்தில் பண்டிகைகள், வாழ்வை நேசிக்கவும், சக மனிதனை, உற்றார் உறவினரை புரிந்துகொள்ளவும், கற்று தருகின்றன . வாழ்வு நதி தரும் களிப்பில், அடுத்து வரும் நாட்கள் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. மனம், அந்த அழகிய நிமிடங்களை, தன் வசீகர முந்தானையில் முடிந்தபடி செல்கிறது. அடுத்த பண்டிகை வரையில் இந்த தித்திப்பு போதும்.

எல்லா வயதினருக்கும் தீப திருநாள் - ஓர் நினைவு தேடலும், பொக்கிஷமும் கூட.

நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்நண்பர் சுதர்சனுடன் [ பெயர் மாற்றப்பட்டு உள்ளது ] சில கணங்கள் :

இப்படி தான் அந்த விவாதம் களை கட்டியது. யார் யாரை பற்றியோ  பிளாக் எழுதுகிறீர்கள்.? ரோஜர் பெடரருக்கு, டெல் போர்டோவுக்கு, தியான் சந்துக்கு - இப்படி எழுதி கொண்டு இருந்தால் என்ன அர்த்தம். நாங்கள் எல்லாம் தடத்தில் போவதா?[ நீங்க ஆகாயத்தில் போனாலும், கண்மாயில் போனாலும்  கவலை இல்லை!]. நாங்கள் உங்களோடு வேலை செய்கிறோம்.. எங்களை பற்றி எழுதினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என சுதர்சன் பல நாள் கேட்டபடி இருந்தார்..

அப்படி எல்லாம் இல்லைங்க, என கையை பிசைந்தேன் .. அப்படி இல்லை என்றால் பின்னே எப்படி என கேள்வி வந்தது. முன்னாடி பரோட்டா கடையில் கிலோ கணக்கில் மாவு பிசைந்து இருப்பானோ, என பார்த்தவர்கள் அச்சப்பட்டனர். சிலர்  அங்கலாய்த்தனர். அப்படியே மோட்டு வளையை முறைத்தத்தில் அங்கே ஒட்டி இருந்த பல்லி கூட ஓடி போனது வேறு விஷயம்! எழுத பெரிதாய் ஏதும் தோன்றவில்லை. அதன் பின் என்னுள் ஒரே தீர்மானம். அங்கே, இங்கே என,  கண்மணி, பொன்மணி, மானே, தேனே, பொன்மானே என  போட்டு  ஒப்பேற்றி விடலாம் எனும் பெரும் நம்பிக்கை என்னுள் வந்தது. அப்படி இருந்தாலும் கைகால் உதறுவது நிற்கவில்லை. :( என் செய்வேன்.

அப்படி நேர்மறை சிந்தையுடன் தொடங்கிய பின் தான் தெரிந்தது; வகை தொகை தெரியாமல் மாட்டி கொண்டது. நீங்கள் பதிவை போடவில்லை எனில் நாங்கள் " சிந்தனை காய்கள் " ஆரம்பித்து விடுவோம் எனும் எச்சரிக்கை மணி வேறு. [ஐயா சட்டு புட்டுனு ஆரம்பிங்க]. எல்லாவற்றையும் தாண்டி நான் நிச்சயம் எழுதுவேன் எனும் உறுதியை தந்தேன். " Simple, yet a Great Promise "

சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லை :
 பூரிச்சு புளங்காகிதம் அடைய இது பொன்னர்  சங்கர் வசனம் பாரு?! .. போடறது அரை பிளேடு :) எப்படி இருந்தாலும் தலையை கொடுக்கறது நாங்கள்;  ஞாபகம் இருக்கட்டும் என நீங்கள் சொல்வது காதில் விழாமல் இல்லை. ஆனாலும் யாரோ  சொன்னது மாதிரி கஷ்டம் வந்தா ஒண்ணா தானே வரும். ஐய்யோ இப்பவே கண்ணை  கட்டுதே..

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்; இவர் டிசைனர்,  சுதர்சன்; இனி உங்களுடன் பணி புரிவார் - என எங்கள் மேலதிகாரி அறிமுகம் செய்வித்தார்.  அந்த நவம்பர் மாதம் இருந்த ஏ. சி க்கு    மேல் வேர்த்தது.   பார்த்த பார்வையில், ஏதும் பெரிதாய் புலப்படவில்லை.. பச்சை புள்ளை மாதிரி தான் தெரிஞ்சார்[ பின்னர் தான் தெரிந்தது, நிஜத்தில் புள்ளை புடிப்பவர் என்று; மக்கா கொஞ்சம் உஷாரா இருக்கணும் புரிஞ்சிதா? ] . பொத்தாம் பொதுவாய் புன்னகைத்து வைத்தேன்.    அதன் பின் பெரும்பாலான பணிகளில்  எங்களுடன்   தான்; இல்லை இல்லை நான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்றேன். ஒரு சில வாடிக்கையாளர்களை - அய்யா இது உங்கள் ஆள் என நேர்ந்தது விட்டார்.. அவ்வளவு அதீத அக்கறை ; ம்ம் .. நெனச்சா  அழுவாச்சியா வருது :(

பின்னே என் செய்ய;  எண்ணி துணிக கருமம் என வள்ளுவர் சும்மாவா சொல்லி இருப்பார்? போகட்டும்.  அதன் பின்
 எனது வாடிக்கையாளர் அதை கேட்கிறார் இதை கேட்கிறார் என போய் நிற்பேன்.  நிரம்ப
 அக்கறையுடன் முடித்து கொடுத்து வந்துள்ளார். குதூகலம் நிரம்பிய மாலை/இரவு தேநீர் நேரங்கள்,  நண்பகல் பொழுதுகள் என பல நேரம் பல விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும். விவாதங்கள் பல நேரம் வில்லங்கமாய், விவகாரமாய் முடிந்ததுண்டு.

சுதர்சனின் பதில்கள் பல நேரம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்து வந்துள்ளன. அய்யோடா சாமி ! இதுக்கெல்ல்லாம் உன்னால் தான் ஆச்சர்யப்பட முடியும் என நீங்கள் கொமட்டில் குத்த வருவது தெரிகிறது.. பொறுங்கள்! பொறுங்கள்! நல்ல நாளில் அதிகம் காயப்பட்டு கொள்ள எனக்கு விருப்பமில்லை.

பதிவர் உலகில் நான் நிறைய கத்துக்குட்டியாய் இருந்த நாட்கள் அவை. அன்று மட்டுமல்ல. இன்றும் அப்படி தான். நான் அவரிடம், அட! என்னங்க.. நிறைய பேர், பதிவர் உலகில் எழுதுவதை நிறுத்தி விட்டனர் என கேட்டேன். பின்னே! அவனவன் உருகி உருகி எழுதினா .. மற்றவர் அதை சங்கோஜம் எதுமிலாமல் அப்படியே உருவி தங்கள் சொந்த கவிதையாய், சரக்கை தருகின்றனர். அதில் நிறைய பேர் வெறுத்து போய், எழுதுவதை நிறுத்தி விட்டனர். என்றார். 

சில வாடிக்கையாளர், எங்களுக்கு லோகோ - நியுமராலஜி படி இந்த கலரில் வேணும் என வருவர். அப்படி இப்படி என  வலைத்தளம் உருமாறி, கடைசியில், குட்டி சுவரில் வால்-போஸ்டர் ஒட்டியபடி அமைந்துவிடும். பல நேரங்களில் வாடிக்கையாளர் ரசனை அலைவரிசை நாம் கேட்டறியாத குரலில், பார்த்தறியாத நிறத்தில், சுவாசித்து அறியாத  மணத்தில், அமைகிறது...  

வெற்றி  பெற்ற  பல விஷயங்களுக்கு தங்கள் வரைகலையே, காரணம் என சொல்லி உள்ளார். ஆகா நாங்கள் ஒன்னும் செய்யலையா? என கேட்போம். நீங்க என்ன செய்யறீங்க ? சிந்தனை குதிரைக்கு ஒழுங்கா கொள்ளு கொடுத்தா தானே ஓடும்! கருப்பட்டி, வெள்ளம் எல்லாம்  காட்டினா இப்படி தான் தறிகெட்டு கண்டபடிதான் ஓடும் என்பார்..      பதிவர்  உலகில் நல்ல பதிவுகள், நல்ல பதிவர்களை இனம் காட்டி அறிமுகப்படுத்தியவர்.  சம
 காலத்திய தொழில் நுட்பத்தை அவரிடம் நிறைய கற்றுள்ளேன். நக்கல், நையாண்டித்தனம், குத்தல், குறும்பு , குதூகலம், பல வண்ணங்களில் வலம் வருபவர்.

சில மனிதர்களை சுற்றி,  எப்பொழுதும் சந்தோசம் களை கட்டி இருக்கும். அந்த இடம் கலகலப்பின் ஊற்றாய் இருக்கும். சில மனிதர்கள் நம்மை கடந்து சென்றால் அவர்களின் உற்சாகம் நம்முடன் ஒட்டி கொள்ளும். அந்த வகை மனிதர் அவர்..

இதோ வாழ்வின் அடுத்த படிக்கட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஆம்! வரும் நவம்பரில் அவருக்கு டும் டும் டும்.. ஒரு நல்ல பயணமாய், அவர் வாழ்வு தொடங்கிட, துலங்கிட நல்வாழ்த்துக்கள். அதே போல், இன்னொரு அலுவலக நண்பர் சங்கர நாராயணனும் மண விழா காண்கிறார். அவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

எப்பொழுதும் கைபேசியை,  முறைத்தபடி இருக்கும் அவருக்கு எதோ என்னால் ஆன முயற்சி.. இந்த பதிவும்.. இந்த கணமும்..  தீபாவளி தருணத்தில், ஒரு சில காமெடி  நாடகம் வானொலியில் உலா வரும் அது போலவே இதுவும்.  அவரின் இனிய நினைவுகளுன் இதோ இவையும்.. பின் வருவன காதுகளுக்கு மட்டும்..   Friday, September 25, 2009

சில இனிய துளிகள் - யு . எஸ் ஓபன் 2009

இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பரபரப்புக்கு பஞ்சம் ஏதும் இல்லாமல்   இருந்தது. ஆறாவது முறையாக அமெரிக்க ஓபனை  வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஜர் இறுதி போட்டியில் தோற்றது, ஒரு குழந்தைக்கு தாயான பின் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியை வென்று அசத்திய கிம் க்ளிஷ்டர்ஸ், இரட்டையர் போட்டியில் வென்ற லியாண்டர் - லுகாஸ் ஜோடி என பல ஆச்சர்ய அதிசயங்கள்.


முதலில் பெண்கள் போட்டியில் வென்று சாதித்த கிம் கிளிஷ்டர்சுக்கு ஒரு ராயல் சல்யூட். ஒரு குழந்தைக்கு தாயாகி, நான்கு வருட இடைவெளிக்கு பின் களமிறங்கி, தன் அசாத்திய ஆட்டத்தால், பல முன்னணி வீராங்கனைகளை வென்று[ செரீனா உட்படவே  ], தன் பெயரில் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியை சேர்த்து கொண்டது. குழந்தையுடன், பரிசு கோப்பையுடன்   அவர் கையசைத்தது - அசத்தல் நிமிடங்கள்.

நிறைய கலகம் - அம்மணி செரினா வில்லியம்ஸ்- ஐ  சேரும். பின்னே ; ராக்கெட்டுக்கு அல்லவா தெரிந்திருக்கும் அந்த வலி; ஆக்ரோஷமாக ராக்கெட்டால் , கோர்ட்டை அடித்த பொழுது, பார்வையாளர்கள் அதிர்ந்தே போனார்கள். லைன் நடுவருடன் தகராறு, தான் எந்த தவறும் செய்திடவில்லை, இதற்க்கு எதற்கு மன்னிப்பு என முதல் நாள் சொன்னவர்; அடுத்த நாள் அந்தர் பல்ட்டியுடன் மன்னிப்பு கோரினார்; ஆனாலும் அபராதம் கட்டி பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார்.


அடுத்தது டெல் போர்டோ - இந்த ஆண்டு பிரன்ச்சு ஓபெனில் ரோஜருடன் மல்லு கட்டியவர், அரை இறுதியில் நேர்செட்களில் நடாலை தோற்கடித்து, இறுதியில் ரோஜரை தோற்கடித்து சாதித்து  காட்டியவர். இருபது வயதில் அவரது உயரம் போலவே அவரது ஆட்டமும் தொட முடியாத உயரத்தில் நின்றது. ரோஜர், நடால் தாண்டி இன்னொரு அற்புத ஆட்டக்காரர். .

இறுதி ஆட்டத்தில் தோற்ற ரோஜர். இந்த ஆண்டில் எல்லா கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் அசத்தியவர்[ எல்லா இறுதி ஆட்டத்திலும் ], இந்த தருணத்தில் எதிர்பாராத தோல்வி. ஆனாலும் சளைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்டம் அவர் கைகளில் தான் உள்ளதே. இந்த முறை அமைதியே ஆன ரோஜருக்கும் அபராதம் ஆனாலும் அதிகமே. தான் சில விநாடிகள் எடுத்து கொண்டாலும் தனக்கு நடுவர் பாரபட்சம் காட்டுகிறார் என சொன்னவர். சில பல தருணங்களில் தன்னால் மறு பரிசீலனைக்கு நடுவரை கோர முடியவில்லை என்பது அவர் வாதம்.


அடுத்த அசத்தல் - லியாண்டர் - லூகாஸ் ஜோடி. பல போட்டிகளில் இறுதி போட்டியில் கோப்பையை தவற விடுபவர்கள், இந்த முறை வென்று சாதித்தனர். அரை இறுதியில் பிரயன் ஜோடியை வென்றது அசாத்திய பாய்ச்சல். கலப்பு இரட்டையரில் வெல்லாவிடினும்,  இந்த வெற்றி அவரை நிச்சயம் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். வாழ்த்துக்கள் பயஸ். ஆட்டம் வயதாக வயதாக மெருகேறுகிறது. ஆனால் எதிர்த்து ஆடிய முன்னாள் பாட்னர் மகேசுக்கு திருப்தி பட்டுக்கொள்ள ரன்னர் அப் மட்டுமே. ம்ம். பார்க்கலாம் அடுத்த முறை..  
.
.
.

Tuesday, September 22, 2009

நினைவுகள் - இன்று ஒரு தகவல் புகழ் தென்கச்சி அவர்கள்


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தினம் தோறும் வானொலி மூலமாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ நம் வரவேற்பறையை அலங்கரித்தவர். அவரின் எண்ணங்கள் பல நேரம் நம் பார்வையை விசாலப்படுத்தியவை. அவர் கையாண்ட எளிய நடை, அரிதான, சிக்கல் மிகுந்த விஷயங்களையும் யாருக்கும் கொண்டு சேர்க்கும் வல்லமை, அவருக்கே உரித்தான நகைச்சுவை, ஒரு அரிய மனிதரின் இழப்பை உணர செய்கின்றன.

எந்த மனிதருக்கும் கதைகள், எந்த வயதிலும் அலுப்பதில்லை; நாம் வாழ்வின் பல பகுதிகளில் கற்றலை, கதைகள் மூலமாக தெரிந்து இருக்கிறோம் . கதைகளை நம்மிடம் இருந்து பிரித்தால் நம் வளர்ச்சி அங்கு இல்லை. இந்த அரிய விஷயத்தை, நன்கு உணர்ந்தவர் சுவாமிநாதன் . கதைகளையும் நகைச்சுவையையும், பத்திரிக்கை  உலகம், வானொலி, தொலைக்காட்சி  என எல்லா ஊடக உலகிலும் தம்முடன் அழைத்து சென்றவர். அவரது பரிணாமம், ஆன்மிகம், சிந்தனை, நடந்த நிகழ்வுகள் என நீண்டு இருந்தது.

தம் முதல் விவசாய நிகழ்ச்சியில், எளிய நடையில், பயிர் பாதுகாப்பை, பூச்சிமருந்து தெளிப்பதை சொன்னவர், தம் எல்லா நிகழ்ச்சிகளிலும், அதே எளிய இனிய நடையை கொண்டு வந்தார். அவரது சிந்தனைகள், நிறையவே யோசிக்க வைத்தன. ஒவ்வொருவர் பார்வையிலும் , புதிய கோணத்தை அறிமுகம் செய்து வைத்த மிக முக்கிய மனிதர் சுவாமிநாதன். ஒரு நல்ல ஊடகவியலாளர். ஒரு நல்ல சமூக சிந்தனையாளர்.

தனது பணிக்காலம் முடிந்த பின், சமூகத்தின் பரபரப்பில் இருந்து ஒதுங்கி, அமைதியாக தனது வாழ்வை முன்னெடுத்து செல்ல முனைந்தவர்.  நல்லதொரு கேள்வி பதில் பகுதியை நடத்தி செல்லும் வல்லமை கொண்டவர்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ராமகிருஷ்ண குருபூஜை விழாவில், அவரை காணவும் அவர் பேச்சை கேட்கும் அரிய வாய்ப்பையும் பெற்றேன். முப்பது நிமிடங்கள் அவரது நகைச்சுவை பேச்சு நீண்டது. அவர் சொன்ன அரிதான இரு விஷயங்கள் இங்கே.

குரு, ஆசிரியர் இருவர்க்கும் என்ன வேறுபாடு?
ஆசிரியர் பாடங்களை போதிப்பவர்.அத்துடன் அவரது வேலை முற்று பெறுகிறது.  குரு வாழ்ந்து காட்டுபவர். உலகம் முழுவதும் , குருமார்களே மிக  அதிகம் மதிக்க படுகிறார்கள்.

பார்வை எப்படிப்பட்டது? நம் பார்வை எப்படி இருக்க வேண்டும்?
பல நேரங்களில் நம் பார்வை மாற வேண்டும், அதை நாம் மாற்றுவதில்லை. ஒரு அரசனுக்கு உடலில் மனதில் பிரச்சனை. அவன் உடல் நிலை சரியாக, அவன் பார்க்கும் எல்லாம் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என - ஒரு முனிவர் போகிற போக்கில் சொல்லி சென்றார். அவர் சென்று, இரண்டு மாதம் கழித்து ஊருக்கு திரும்பி வந்தார்.  வந்தவர், ஊரே பச்சை நிறமாய் மாறி இருப்பதை கண்டு திகைத்தார். அவரையும், பச்சை சாயத்தில் குளிப்பாட்ட முனைந்தனர் மன்னனின் ஏவல் சமூகத்தினர். காரணம் கேட்ட முனிவருக்கு தலை சுற்றியது; முனிவரே நீங்கள் சொன்னதை தான் நாங்கள் செய்தோம்; இப்போது பாருங்கள் ஊரே பச்சை நிறமாய் உள்ளது; மன்னன் பார்வை படும் இடம் எல்லாம் பச்சை நிறம் என்றனர்.  அவர்களை தடுத்த முனிவர்; நீங்கள் ஏன், அரசனுக்கு ஒரு பச்சை கண்ணாடி வாங்கி கொடுத்து இருக்க கூடாது என கேட்டார்? நம் பார்வைகள் பல நேரம் இப்படி இல்லையே என்பதே பிரச்சனை.

இந்த பதிவு மிக மிக காலம் தாழ்த்தி வந்ததே. ஆனாலும், ஒரு நல்ல உள்ளத்தின் மறைவு வார்த்தைகளாய் வருவதை தடுக்க முடியவில்லை. ஐயா, நீங்கள் உங்களுக்கே உரித்தான; உங்களின் ஏற்ற இறக்கத்துடன் சொல்லி வந்த அத்தனை விஷயங்களும், எங்கள் நினைவில் என்றென்றுன் நிழலாடும். போய்வாருங்கள். உங்கள் காலம், உங்கள் வார்த்தைகள்,  சக மனிதர் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.
.
.

Saturday, September 12, 2009

இந்த நாள் இனிய நாளே


ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதும் அதன் அழகோடு பிறக்கிறது.  நம் பார்வைகளால் அந்த நாளை அதிர்ஷ்டம் கொண்டதாய், அர்த்தம் அற்றதாய் பார்க்க பழகுகிறோம். ஒவ்வொரு காலையும் பளிச் புன்னகையோடு,  நம்மை எதிர்கொள்ள தயார் ஆகிறது. ஒவ்வொரு செடியும், நான் இன்று இந்த இடத்தை, அழகு படுத்துகிறேன் என சொல்லியே சிரிக்கின்றன.சிறகடிக்கும் ஒவ்வொரு புள்ளினமும், இன்னொரு நாளை தன இனிய குரலால் துவங்கி தன் மகிழ்ச்சியை, இளம் நாளையும், காலையும் கொண்டாடுகின்றன.ஒவ்வொரு நாளும் பெறற்கரிய வரம்.

ஒவ்வொரு நாளும் நமக்குள் சிந்திக்கவும் செயல்படவும் சில..
 • இன்று நாம் ஒரு ஈவு இரக்கம் அற்ற பழி சொல்லை, இழி சொல்லை உதிர்க்கும் முன், பிறவி ஊமையாய் பிறந்த  இன்னொரு சக மனிதனை நினைப்போம். நம்மில் உணர்வு இருந்தால்,  நம் ஒவ்வொரு வார்த்தை தடத்திலும், கலைமகள் இடம்பெருவாள். சொல்லும் ஒவ்வொரு சொல்லும்,  ஆயிரம் அர்த்தம் நிறைந்த இதிகாசமாய் மாறி போகும்.
 • நம் உணவை குறை கூறும் முன், பிரபஞ்சத்தின் இன்னொரு மனிதன், உண்ண ஏதும் இல்லாமல் பரிதவிப்பவனை, ஒவ்வொரு ரொட்டி துண்டுக்கும், அலைபவனை நினைவுக்கு கொணர்வோம். உண்ணும் எல்லா பருக்கையும், நமக்கு அமிர்தமாய் மாறி போகும். 
 • உங்கள் மனைவியை/கணவனை குறை கூறும் முன் ஒரே ஒரு நிமிடம் யோசிப்போம்.  உலகில் எத்தனையோ  மனிதர்கள், துணைக்காக, சக மனிதனின் கரங்களுக்காக, வாழ்வின் பிடிப்புக்காக  இறைவனை மன்றாடுபவரை நினைவுக்கு கொணர்வோம்.
 • இன்று உங்கள்  வாழ்வை குறை கூறும் முன், வாழ்வில் மிக இளம் வயதிலேயே இந்த மண்ணில் இருந்து விடைபெற்ற ஒருவரை நினைவுக்கு கொணருங்கள்[ நிலநடுக்கத்தில் புதைந்தது போன ஒரு குஜராத் பள்ளி குழந்தையோ,  சுனாமியில் சுவடு மறைந்த ஒரு குழந்தையோ யாராயினும் பொருந்தும்  ]. 
 • இன்று ஒரு மனிதனை சுட்டி காட்டி நீ குற்றஞ் செய்தவன் என சுட்டும் முன், யோசிப்போம்... ' இங்கு யார் தான் குற்றம் குறை அற்றவர்கள்.?  பிரபஞ்சத்தின் எல்லோரும் எதோ ஒரு வழியில் குற்றம் புரிந்தவராய் இருப்பார். ஆனால் நம் கண்கள் இன்னொரு மனிதன் குறையே பெரிதுபடுத்தும் பூத கண்ணாடியாய் இருக்கிறது. அவ்வளவே. '
 • உங்களை எப்பொழுதெல்லாம், தாழ்வுணர்ச்சி ஆட்கொள்கிறதோ , உங்களை நீங்களே தரம் குறைந்தவராய் எண்ணம் உருவாகிறதோ அந்த நிமிடம் உங்களுள் எண்ணுங்கள் , நீங்கள் இன்னும் இந்த மண்ணில் உயிர் உடன் , உணர்வுடன் உலவுகிறீர்கள்.   ஒரு அர்த்தம் நிறைந்த புன்னகை உங்கள் முகத்தை அழகு படுத்தட்டும். 

முருகதாஸ் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. மும்பை பகுதியில், ஒரு தாய் தன மகளை வீட்டில் வைத்து பூட்டி செல்கிறார். அவரால் தொடர்ந்து ஆறு நாட்கள் வீடு திரும்ப முடியவில்லை. ஆறு நாட்களுக்கு பின் சிறுமியை பிணமாய் பார்க்க முடிந்தது. போஸ்ட் மார்டம் தகவல் சொன்னது, அவள் குடலில் ஒரு பருக்கை கூட ஒட்டி இருக்கவில்லை என. அந்த சிறுமிக்கு ஒரு ரொட்டி துண்டு இருந்திருந்தால் கூட அவள் இன்று நம்முடன் ஒட்டி இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை உணவை வீணடிக்கும் பொழுதும் இந்த சம்பவம் நினைவில் நிழலாடட்டும்.
.
.

Friday, September 4, 2009

ஆசிரியர் தினம்ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு தலைவர் பொறுப்பேற்ற தருணம், அவரை அணுகிய அவரது மாணவர் சிலர், அவரின் பிறந்த தினத்தை, கொண்டாடிட அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.

தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர்; ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியாக மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.

ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.

இது ஒரு கதை. ஒரு கவிதையின் உரை வடிவம். இறைவன் ஆசிரியனை உருவாக்கும் முயற்சியில் முனைந்து இருக்கிறான். அது இடைவிடாத ஆறாவது நாள் வேலை அவருக்கு. அவர் முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. இந்த வடிவை உருவாக்க ,நீங்கள் தேவைக்கும் அதிகமாக நேரத்தை எடுத்து கொள்கிறீர்கள் என தேவதை இறையிடம் முறையிட்டது. இறைவனை பொறுத்தவரையில், ஆசிரியன், தொழில் நிறைய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவர் நிறைய இளம் உள்ளங்களை சென்றடைய வேண்டியவர். அந்த நிலையில் இறைவனின் கைகளில் ஒரு செயல் விளக்கம். வேறு என்ன? ஆசிரியர் இந்த கலவையோடு இருக்க வேண்டும் எனும் குறிப்புகள் தான். அதை தேவதையின் கைகளில் கொடுத்த இறைவன், அதை சரிபார்க்க சொன்னார். அவை இப்படி சென்றது..


 • ஆசிரியன், அனைவர்க்கும் மேம்பட்டவராய் இருக்க வேண்டும், இத்துடன் மாணவரின் நிலைக்கு இறங்கி வர கூடியவராய் இருக்க வேண்டும்.
 • அவர் தான் கற்பிப்பதற்கு சம்பந்தம் இல்லாத நூற்று என்பது விஷயங்களை செய்திட கூடியவராய் இருக்க வேண்டும்.
 • முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக .
 • தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய்..
 • என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்லவராய் ..
 • மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய்..
 • மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும்..
ஆறு கரங்கள்.. அது முடியாத காரியம் என வியப்பு மேலிட தேவதை கேட்டது,. என்னை பொறுத்தவரையில்,. கைகளை அமைப்பதில் பிரச்சனை ஏதுமில்லை. பிரச்சனை.. மூன்று இணை கண்களை அமைப்பதில் தான் என்றது இறை .. ஒரு சாதாரண உருவாக்கத்தில், ஆறு கண்களா.. தேவதையால் நம்ப முடியவில்லை.


ஒரு இணை கண்கள், ஒரு மாணவனை அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அணுகிட.. அடுத்தவர் குத்தும் முத்திரைகளை ஏற்காத பக்குவம்.. அடுத்த இணை கண்கள், எதையும் காணாமல், அந்த மாணவனை பற்றி அறிந்து கொள்ள வழிவகுப்பதாய். இந்த கண்கள், தலையின் பின்புறம் அமையும். முன்புறம் உள்ள கண்கள், அவர்களை நோக்கி, நான் உன்னை புரிந்து கொண்டேன், உன் மீது மற்ற எவரையும் விட , என்றென்றும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உன் மேல் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன் என ஒரு வார்த்தையும் உரைக்காமல் சொல்ல..

அதற்கு தேவதை இது என் வரையில் பெரிய செயல் வடிவம் போல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் நாளை தொடர கூடாது என்றது. அதற்கு இறை, அது முடியாது. இங்கு நான், என்னை போல் ஒருவரை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவர்கள் நோயுற்ற தருணத்திலும் தம் பணியில் இருப்பார். தம் இதயத்தில், தம் மாணவர்க்கு என தனி இடம் கொடுத்து இருப்பார். எந்த மாணவரையும் சீர்தூக்கி பார்க்க கூடியவராய், மாணவர்களின் சிக்கல்களை புரிந்து கொள்ள கூடியவராய் இருப்பார்.

தேவதை அந்த உருவை, அந்த சிற்பத்தை, இன்னும் சற்று அருகே சென்று கண்டது. இது மென் இதயம் பெற்ற உரு இல்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டது ? அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது. இந்த உரு சிந்திக்க வல்லதா? ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது.

இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்க்கசிவு அல்ல. இது ஒரு கண்ணீர்த்துளி என்றது இறை. கண்ணீர் துளி? ஏன்? - இது தேவதை.

இறை நிறைய சிந்தனையுடன் சொன்னது.. இது ஆசிரியருக்கு அடிக்கடி வர கூடியதே. இது ஒரு ஆண்டு முழுவதும் மாணவர்களுடன் இருந்து, அவர்களை வழியனுப்பி விட்டு, புது மாணவரை வரவேற்கும் தருணத்தில் அரும்பும். ஒரு சில மாணவர்களை சரிவர அணுக முடியாமல் போன வருத்தத்தில் அரும்பும். அந்த மாணவரின் பெற்றோர் கொள்ளும் இரக்க உணர்வில், அவர்கள் மாணவர்கள் சாதிக்கும் சிறு சிறு விஷயங்களில் பெருமையுடன் கண்ணீர் துளிர்க்கும்,என் மாணவர்கள் புதிய சிகரங்களை, மேன்மையை அடையும் தருணங்களில் துளிர்க்கும் ,என இறை முடித்தது.

ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கரை வரையில் சென்று, ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலெக்சாண்டர்(Alexander) போனால், ஆயிரம் அலெக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.


என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. உங்கள் அரிய பணி தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்... உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.நீங்கள் அந்த வரிசையில் முதலில் உள்ளவர்கள்.
.
.

.

Tuesday, September 1, 2009

நடிகர் சிவக்குமாருடன் ஒரு நேருக்கு நேர் - நிகழ்ச்சி - ஜி தமிழ் தொலைக்காட்சிஇந்த ஞாயிறு எதேச்சையாக தொலைக்காட்சியை கண்ட தருணத்தில், நடிகர் சிவக்குமாருடன் பேட்டியை காணும் வாய்ப்பு பெற்றேன் ( தமிழர் பார்வை - சுதாங்கனுடன் நேர்முகம்). சிவக்குமார் அவர்களின் பேச்சை கேட்பது ஒரு சுகானுபவம். ஒரு கால பெட்டகம், வாழ்வின் அர்த்தத்தை, தன் நடந்து வந்த சுவடுகளை, அரிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாய் அமைந்தது சிறப்பு. சமீப நாட்களில் சிவக்குமார் பங்கு பெரும் அனைத்து நிகழ்வுகளும் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. இதோ நேற்று பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் சிவக்குமார் பேசி இருக்கிறார்...

இரண்டு மணி நேரம் தொடர்ந்த அந்த தொலைக்காட்சி, பேட்டி ஒரு உணர்வு குவியலாய் மாறி மகிழ்ச்சி தந்தது. குற்றாலத்தில் குளிக்கும் போது, எந்த துளி என்னை தொட்டு சென்றது என இனங்காட்ட முடிவதில்லை... அப்படித்தான் அவரது பேச்சும்.. ஒரு பிரவாகமாய் நீள்கிறது..

இனி அவரது எண்ணங்களில்..
எம். ஜி ஆருடன் தொடர்ந்த பயணம், சிவாஜியுடன் தொடர்ந்த நட்பு, ஜெய் சங்கருடன் பூண்ட நட்பு என அவரது வார்த்தைகளில் பேட்டி சென்றது. அனைத்தும்.. சம்பவங்கள் வழியாகவே..உங்களின்
மூன்று படங்கள் - துவக்கத்திலேயே வெற்றி - ஆனால் நீங்கள் எதிர்பார்த்த உயரம் தொடவில்லையே...?
எனது படம் அன்னக்கிளி - சுஜாதாவின் நடிப்புக்காக ஓடியது. அடுத்து வந்த ஆட்டுக்கார அலமேலு-ஆட்டிற்காக ஓடியது. அது தான் நிஜம். வாழ்வில் நான் எண்ணியது.. வாழ்வு முழுவதும் சினிமா சோறு போடும் என்பதே.. அது நடந்தது. சினிமா என்னை கைவிட வில்லை என்றார். நான் எந்த தருணத்திலும், அண்ணா நீங்கள் படம் எடுக்கிறீர்கள் போல் கேள்விப்பட்டேன் என எப்போதும் தொடர்பு கொண்டு கேட்டதில்லை. அனைத்து வாய்ப்புகளும் என் கதவை தட்டியவையே...

உங்கள் வாழ்வை எப்படி அமைத்து கொண்டீர்கள்:
நான் எனக்காக ஒரு கிராப் வைத்து இருந்தேன் . ஒரு கட்டுபாடான, ஒழுக்கமும், நேர்த்தியும் உள்ளதாய் நடந்து வந்தேன் என்கிறார். அதையே என் குழந்தைகளுக்கும், பால பாடமாய் போதித்து வந்தேன் என்கிறார்.

காதல் திருமணம் பற்றி..
எனி வருங்காலம் முழுதும், காதல் திருமணமே நிறைந்து இருக்க போகிறது. காதலர்கள் திருமணம் செய்த பின், சிறிது காலத்தில் பிரிந்து போகாமல், பிரச்சனைகளை கண்டு ஒதுங்காமல், அடுத்த தலைமுறைக்கு உதாரணமாய் வாழ்ந்தது காட்ட வேண்டும் என்கிறார்.

மக்களில் நான் எவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறேன் என்பதே எனது வெற்றி என்கிறார். புகழும், பணமும் நிலையற்றவை. அதன் பின் ஓடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்கிறார். இன்னொரு மனிதனை வாழ வைக்க பணம் பயன்பட்டால் அது சிறப்பானது என்கிறார்.

எனது ஊரை நேரம் வாய்க்கும் பொழுது எல்லாம் தரிசிக்கிறேன். என் பள்ளியில் என்னுடன் படித்தவர்கள், என் குடும்பத்துக்கு ஆரம்பம் முதல் உழைத்து வந்த சலவை தொழிலாளி, என் வீட்டை கட்டிய கொத்தனார், அவரது குடும்பம், இன்னும் அதே நிலையில் உள்ளது. ஆக நான் ஆண்டவனால், அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர்கிறேன் என்கிறார். தான் தொடர்ந்தது சக மனிதனுக்கு உதவுகிறேன் என்கிறார்.

எப்படி நீங்கள் இலக்கியத்துக்கு வந்தீர்கள்?
நான் தனிமையை விரும்புபவன். சினிமா இனி போதும் என முடிவுக்கு வந்த பின், வாழ்வின் எனது எஞ்சிய நாட்களை இலக்கியத்தில் செலவிட முடிவு செய்தேன் என்கிறார். தமிழ் இலக்கியம் அவரை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை. சிவக்குமார் என்ற மனிதன் வாழ்ந்தான் என அடுத்த தலைமுறை சொல்ல சில நல்ல விஷயங்களை கொடுத்து செல்ல முனைகிறேன் என்கிறார். அடுத்த தலைமுறைக்கு நம் தொன்மையை, நல்ல இலக்கியத்தின் சாற்றை பிழிந்து தர முனைகிறேன் என்கிறார். பேச்சு கம்பராமாயணம் பக்கம் திரும்புகிறது. சென்ற ஒரு ஆண்டில், கம்பராமாயணத்தில், முழுக்கவும், பயணித்து இருக்கிறார்... சிவக்குமார்.

ஏன் கம்பராமாயணம்? எது ஈர்த்தது? ஈடுபாடு எதனால்?
கம்பன் என்னை ஈர்த்தான் என்கிறார். " கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு.. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என பாரதி வள்ளுவனை பின்னுக்கு கொண்டு சென்று கம்பனை முன்வைத்தான் என்கிறார். தான் அதிகம் கலங்கிய பகுதி.. ராவணன் மரணம், பிரம்மனின் பேரன் மரணம் தான் கலங்கி போக காரணமாய் அமைந்தது என்கிறார். இமய மலையை தூக்கியவன், சிவனை புகழ்ந்து சாம கானம் தீட்டியவன் ராவணன்.. ராமன் முழுக்க முழுக்க நல்லவன் அல்ல.. ராவணன் முழுக்க முழுக்க தீயவன் அல்ல என்பது சிவக்குமார் கருத்து..

பாரதியும், கண்ணதாசனும் இலக்கியத்தில் தன்னை அதிகம் ஈர்த்தவர்கள் என்கிறார்.

இன்னொரு பிறவி உங்களுக்கு கிடைத்தால் ?
எனக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை. " பிறவாமை வேண்டும்.. மீண்டும் பிறப்புண்டேல் என்றும் உன்னை மறவாமை வேண்டும்" அப்படி பிறப்பு கிடைத்தால்.. தமிழ் மண்ணில், இன்னொரு முறை கலை உலகில் பயணித்திட வேண்டும், ஓவியனாய் மாற வேண்டும் என்கிறார். முத்தாய்ப்பாக.. என் தாய்க்கே மீண்டும் மகனாக வேண்டும் என்கிறார். பிரவாகமாய் வந்த பேச்சு தன் தாயின் நினைவால் தழுதழுத்த குரலை அடைகிறார்.

தான் எஸ் எஸ் வாசனை முன் மாதிரியாய் கொண்டு இருந்தேன் என்கிறார். வாசன் அற்புதமான திறமை கொண்ட மனிதர். தனக்கு இருக்கும் நோயை இறுதி வரை கூட தன் மகனுக்கு சொல்லாதவர். தனது மறைவும் கூட எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி முடிய வேண்டும் என விரும்பினார் என்கிறார்.

சிவக்குமார் அவர்களின் சொல் ஆழம், கருத்துக்களில் தெளிவு அவரது வாழ்வை படிகமாய் பிரதிபலிக்கிறது.. மறைந்த பின்பும் மக்கள் ஒரு மனிதனை நினைவு கொள்கிறார்கள் என்றால் அவன் வாழ்வு அர்த்தம் நிறைந்தது என்கிறார்.

[ சிவக்குமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் : உங்களின் எனண்ணங்கள் எங்களை செழுமைக்கு எடுத்து செல்கின்றன. உங்கள் எண்ணங்கள் எங்களை நிறைய தழுவ வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒரு சக பயணியாய், உங்கள் கைகளை பற்றிய படி பயணிப்பது போல் இருந்தது உங்கள் நேர்முகம்.. உங்களுக்கு, நன்றியும் எங்களின் ,உளமார்ந்த வணக்கமும்.. ]
.
.
.

Saturday, August 15, 2009

அந்த நாள் ஞாபகம் - ஒரு அபூர்வ ஆகஸ்ட் பதினைந்து
வருடங்கள் பல ஓடிவிட்டாலும் மலரும் நினைவுகள் அழகானதே. ஒரு வெற்றி. உலகின் அதி உச்சத்தில் நிற்பது போன்ற நிமிடங்கள். நிச்சயம் அது வைரமுத்து சொல்வது போல் பவுன் நிமிடங்கள். வாழ்நாள் முழுதும் பரவசப்படுத்தும் நிமிடங்கள். அந்த, ஆகஸ்ட் பதினைந்து போல் எதுவும் இன்று வரை இல்லை. தேசத்தின் சுதந்திர தினத்தை விடவும் இது நிச்சயம் ஒரு படி மேல். அந்த நாள், தியான் சந்த்- டைரியின் பக்கங்களில் பொன் எழுத்துக்களால் பூரித்திருக்கும். அது 1936- பெர்லின் ஒலிம்பிக் போட்டியில், இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்ற தருணம். அதுவும் அசாதாரண வெற்றி. எதிர் அணி ஹிட்லரின் ஜெர்மனி அல்லவா.!

இதுநாள் வரையில் பாரத தேசம் அப்படி ஒரு விளையாட்டு வீரனை இன்னொரு முறை உருவாக்கவில்லை. அது அன்றைய ஹாக்கி அணி தலைவன் - தியான் சந்த். ஒரு தன்னிகர் அற்ற விளையாட்டு வீரன். அந்த ஒலிம்பிக் போட்டியில் தன் சகோதரன் ரூப் உடன் கலந்து கொண்டார்.

ஜெர்மனியில் நடந்த அந்த ஒலிம்பிக்கில் இந்தியா தான் அப்போதைய நடப்பு சாம்பியன் . இந்தியா மேல் அன்று அளவு கடந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஒலிம்பிக் போட்டி துவங்கும் முன் நடந்த பயிற்சி ஆட்டத்தில், ஜெர்மன் அணியிடம் தோல்வி கண்டு அதிர்ச்சி அளித்தது. ஆனால் வீறு கொண்டு எழுந்த இந்திய அணி, அந்த முறையும் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்தது. அரை இறுதியில் பிரான்சை சந்தித்த இந்திய அணி அற்புத ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த ஆட்டத்தில் தியான் நாலு கோல்களை அடித்து இருந்தார்.

ஒட்டுமொத்த உலகமும், ஆவலோடு எதிர்பார்த்த அந்த இறுதி போட்டியும் வந்தது. அன்று தியான் ஹாக்கி மைதானத்தில், நிகழ்த்திய ஆச்சர்யம், சொல்லில் அடங்காதது. என்றென்றும் நினைவில் மங்காத இடத்தை அந்த போட்டி பெற்றது. முதலில் ஆகஸ்ட் பதினான்கில் போட்டி நடப்பதாய் இருந்தது,. அன்று சரியான அடை மழை. ஆக போட்டி ஆகஸ்ட் பதினைந்துக்கு மாறியது.

போட்டிக்கு முன் அன்றைய மேனேஜர் பங்கஜ் குப்தா இந்தியாவுக்கு சரியான எதிர் அணி ஜெர்மனி தான் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒத்துக்கொண்டார். அன்றைய நாளில் ஜெர்மனியிடம் தோற்ற முந்தய ஆட்டம், வீரர்களிடம், போட்டியின் முடிவை பற்றி ஒரு பரபரப்பை உண்டு பண்ணியது. இனி போட்டிக்கு செல்லலாம் எனும் நிலையில், வீரர்கள், மூவர்ண கோடி முன் நின்று வணங்கி புறப்பட்டனர். அன்றைய போட்டியை காண நிறைய பேர் குழுமி இருந்தனர். ஹிட்லர், அன்றைய பரோடா சமஸ்தான மன்னர் என நிறைய பிரபலங்கள் அன்றைய பார்வையாளர் வரிசையில்..

முதல் கோல் அடிப்பது மிக மிக முக்கியமாக இருந்தது. அந்த நிலையில் ஆட்டத்தின் முப்பத்து இரண்டாவது நிமிடம், ரூப் சிங் மூலம் முதல் கோல் இந்தியாவுக்கு கிடைத்தது. ஆட்டத்தின் இடை வரை போட்ட ஒரே கோல் அது மட்டுமே. அந்த நிலையில், அணியை பாராட்டிய தியான், ஒரு கோல் என்பது மிக மிக சிறிய வித்தியாசம் என நிலைமையை எடுத்து சொன்னார். உற்சாகம் கொண்ட இந்திய அணி அடுத்த பாதியில் ஆட்டத்தை முழுதும் தன் கட்டுப்பாட்டில் கொணர்ந்தது. ஆட்டத்தின் துவக்க நிமிடத்தில் தியான் கோல் அடித்தார். ஐந்து நிமிடத்தில் நான்கு கோல்கள் ஆட்டத்தின் முடிவை தீர்மானித்தன. ரூப் அந்த நிமிடத்தை கூர்ந்து நினைவுக்கு கொணர்கிறார்.

தன்னல ஆட்டத்தை எப்பொழுதும் ஆடாத தியான், அந்த நிமிடத்தில், வீரருக்கு கொடுத்த உத்தரவு, அவரை ஆச்சர்ய படுத்தியது. தேவை இல்லாமல், பந்து அவரது மட்டையில் தேங்குவது கிடையாது. அப்படி இருக்க.. நீங்கள் பந்தை என்வசம் செலுத்துங்கள். மற்றவற்றை நான் பார்த்து கொள்கிறேன் என்றார் தியான். மைதானம் இன்னும் ஈரம் மாறாமல் இருக்க, தயானும், சகோதரனும், காலனியை கழற்றி விட்டு வெறும் காலுடன் களத்தில் விளையாடினர். அன்று அவரின் ஹாக்கி மட்டை, ஒரு மந்திர கோல் போல் சொன்னதெல்லாம் கேட்டது.


ஒரு செய்தி தாள் தியானின் ஆட்டத்தை இப்படி வர்ணித்தது. "a flick of the wrist, a quick glance of his eyes, a sharp turn and then another turn, and Dhyan Chand was through." தன் மணிக்கட்டு நகர்வில், தன் ஒற்றை கண் பார்வையில், இரு திருப்பங்களில், ஒரு கோல் தியானுக்கு சாத்தியமாகிறது என எழுதியது.

இந்த நிலையில், ஜெர்மனி தன் கோல் கீப்பர் மூலம் ஒரு கோலை திருப்பியது. இந்தியா ஆறாவது கோலை போட்ட பின் ஜெர்மனியின் ஆட்டத்தில் மாற்றம் காணப்பட்டது. ஆக்ரோஷமான தாக்குதல், தியானை குறி வைத்து ஜெர்மனி தாக்கியது. ஜெர்மனி கோல் கீப்பரின் தயவில், தியானின் முன் பல் உடைந்தது. ஒரு சிறிய முதல் உதவிக்கு பின் களம் கண்ட தியான், தன் வீரருக்கு கோல் அடிக்கும் முயற்சியை நிறுத்துமாறு பணித்தார். பந்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதன் மூலம், எதிர் அணிக்கு நம்மால் பாடம் நடத்த முடியும் என்றார்.

எதிர் அணி கோல் கம்பம் வரை பந்தை எடுத்து சென்று, பந்தை தமக்கு உள்ளே திருப்பி கொண்டனர் வீரர்கள். இந்த உத்தி, ஜெர்மானியருக்கு, நிறையவே புதிராய் அமைந்தது. இறுதி நிமிடத்தில் முனைந்த தாரா, தியான் இந்தியாவுக்கு எட்டாவது வெற்றிகரமான கோலை மாற்றி கொடுத்தனர். இறுதியில் இந்தியா இந்த ஆட்டத்தை "8-1"என வென்றது.

போட்டி முடிவில் வீரர்கள், அதிக உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஆனால் தியான், வருத்தம் தோன்றியவராய் காண பட்டார். அவரது வருத்தம், இந்த வெற்றி மூவர்ண கொடிக்கு கிடைத்து இருந்தால் மகிழ்ச்சியாய் உணர்ந்தது இருப்போமே என்பதாகும்.

இன்றைய நாள் வரை தியானை நிறைய வீரர்கள், ஹிட்லரை எதிர்த்து வெற்றி கொண்ட தன்னிகர் அற்ற வீரராகவே கொண்டாடுகின்றனர். நாமும், ஒரு மகத்தான சாம்பியனை பெற்றமைக்காக, நம் முன் எல்லாமும் சத்தியம் என நிரூபித்தவருக்காக சிரம் தாழ்த்தி நன்றி சொல்வோம். அன்று வென்ற தங்கம் நிச்சயம் தியானுக்கும், அவரின் நெஞ்சுரத்துக்கும், அவரது ஈடிணை அற்ற குழுவின் முழு முயற்சிக்கான பரிசே. .
.
.

Sunday, July 26, 2009

அம்மா சொன்ன எட்டு பொய்கள்


வாழ்வின் எல்லா நாட்களிலும் போற்றுதலுக்கு உரியவர்கள் பெற்றோர். அதில் தாய் பெரும் முக்கியத்துவம் உலகில் எதற்கும் இல்லை. ஒரு மனிதன் தாழ்ந்தாலும், உயர்ந்தாலும் தாயின் வளர்ப்பையும், வழிகாட்டுதலையும் உலகம் முன் வைக்கிறது. குடி போதையில் தள்ளாடி, குழப்பம் செய்பவரையும், வழிக்கு கொணர அவனை பெற்ற தாயையே அணுகுகிறோம். அவளின் ஒற்றை வார்த்தை, இந்த மனிதனை நிலை கொள்ள செய்திடும் என்பது நம்பிக்கை.

தொடரும் இந்த கதை என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது., இதுவே பின் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இந்த கதை ஒரு மனிதனின் உணர்வாகவே சொல்லப்பட்டு உள்ளது. தன அன்னைக்கும் தனக்குமான நிகழ்வுகளை இங்கே சொல்லி சென்றுள்ளார். இது முற்றிலும் அவரவர்களை சார்ந்த கதை போல், அவரவர் வாழ்வு போல் விரிகிறது.
இனி அந்த மனிதனின் வார்த்தைகளில்..

1. இந்த கதை நான் குழந்தையாய் இருக்கும் பொழுது துவங்குகிறது. நான் ஒரு ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்தேன். நிறைய தருணங்களில் உண்ணும் உணவுக்கு கூட சிரமப்பட வேண்டி இருந்தது. உணவு உண்ணும் பொழுது பல நாட்களில், என் தாய் தனக்கான உணவை தந்து வந்துள்ளார். அப்படி உணவை என் தட்டுக்கு மாற்றும் பொழுது, சொல்லும் வார்த்தை.. "இந்த உணவை எடுத்துக்கொள்; எனக்கு பசி இல்லை" என்பதே. இது எனது தாயின் முதல் பொய்.

2. நான் வளரும் பருவத்தில், என்றும் முயற்சியுடைய எனது தாய், தன் ஓய்வு நேரத்தில், வீட்டுக்கு அருகில் செல்லும் ஆற்றில் மீன் பிடிப்பாள். அவள் பிடிக்கும் மீனை கொண்டு எனக்கு சத்துள்ள ஆகாரத்தை ஓரளவுக்கு கொடுக்க இயலும் என்பது அவள் நம்பிக்கை. சமைத்த மீன்களை எனக்கு பரிமாறுவாள்; அந்த நிலையில் நான் உண்டு வைக்கும் மீனின் மிச்ச துண்டுகளை அவள் எடுத்து உட்கொள்வாள்; குற்ற உணர்ச்சி தோன்ற என்னிடம் இருந்த மீனை எடுத்து உண்ண அவளிடன் நீட்டினேன். நான் பொதுவாக மீன் உண்ணுதலை விரும்ப மாட்டேன் என மறுதலித்த அவள் என்னையே உண்டுகொள்ள சொன்னார். அது அவர் உதிர்த்த இரண்டாவது பொய்.

3. நான் நடுநிலை பள்ளியில் படித்த நாளில் எனக்கு படிக்க ஆகும் செலவை சமாளிக்க உபயோகித்த தீ பெட்டிகளை ஒட்டி தரும் வேலையே எடுத்து கொண்டார். இது புதிய செலவுகளை சமாளிக்க உதவியாய் இருந்தது. பனி காலங்களில், நள்ளிரவில் சில தருணங்களில் எனக்கு விழிப்பு வரும். அந்த தருணத்திலும், ஒரு சிறு மெழுகுவர்த்தியின் துணையுடன் தீ பெட்டிகளை ஓட்டும் பணியை கர்ம சிரத்தையுடன் செய்வாள். அதிர்ச்சி அடைந்த நான், அம்மா இப்பொழுது நீ உறங்க செல்; நாளை உனக்கு வேலை இருக்கிறது; அதிக நேரம் கண் விழிக்காதே என்பேன். அந்த நிலையிலும், உனக்கே உரித்தான சிரிப்புடன், "நீ தூங்கு; நான் ஒன்றும் களைப்பாய் உணரவில்லை" என்பாய் - அது நீ உதிர்த்த மூன்றாவது பொய்.

4. நான் எனது பள்ளி இறுதி தேர்வுகளை எதிர்கொண்ட நாட்களில் என்னுடன் துணையாய் வருதல் பொருட்டு, என் தாய் தன் வேலையில் இருந்து விடுப்பு எடுத்தார். தேர்வு தருணத்தில், பகல் பொழுதில், தேர்வு மையத்துக்கு வெளியே வெயிலில் காத்திருப்பார். தேர்வு முடிந்து, கடைசி மணி அடித்த உடன் என்னை வரவேற்று தன் கையால் தயாரித்து இருந்த தேநீரை கொடுப்பார். அந்த அடர்த்தியான தேநீர் கூட என் தாயின் அளவுகடந்த அன்புக்கு ஈடாக இல்லை. வேர்வை ஆறில் குளித்தபடி நிற்கும் என் அம்மாவை கண்ட நான் எனது ஒரு கோப்பை தேநீரை கொடுத்து அவளையும் அருந்த சொன்னேன். அதற்கு அவர் "நீ அருந்து; நான் தாகமாய் உணரவில்லை" என்றார். அது எனது தாய் சொன்ன நான்காவது பொய்.

5. நோய்வாய்பட்ட என் தந்தை இறந்த பின், எனது தாய் என்னை, குடும்பத்தை காக்கும் முழு பொறுப்பையும் எடுத்து கொண்டார். எங்கள் வாழ்வு அந்த நிலையில் நிறைய சிக்கல் உடையதாய் மாறியது. எங்கள் நிலையை கண்டு மனமிரங்கிய ஒரு அன்பர், எங்களுக்காக சிறிதும் பெரிதுமான பல நல்ல உதவிகளை செய்திட்டார். எங்களின் போதாத நிலையை அறிந்து வருந்திய எங்களின் வீட்டுக்கு அருகே வசிப்போர் எனது தாயிடத்தில், இன்னொரு திருமணம் செய்து கொள்ள யோசனை தந்தனர். அதற்கு என் தாய், "நான் அன்பை எதிர்பார்க்கவில்லை" என் பதில் சொன்னார். அது எனது தாயின் ஐந்தாவது பொய்.

6. நான் படிப்பை முடித்து வேலையும் கிடைத்த தருணம், என் தாய் ஓய்வு கொள்ள வேண்டும் என எண்ணினேன். அந்த நிலையில் எனது கருத்தை அவர் ஏற்றுகொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு நாளும் தனது தேவைகளுக்காக காய்கறிகளை விற்று அதில் வரும்படி ஈட்டி வந்தார். அந்த தருணத்தில், இன்னொரு நகரத்தில் வசித்த நான், அவரின் அன்றாட தேவைகளுக்காக பணம் அனுப்பி வந்தேன். அந்த நிலையிலும், உறுதியாக அந்த பணத்தை வாங்க மறுத்து வந்தார். சில சமயம், பணத்தை எனக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அவர் சொல்லும் வார்த்தை " எனக்கு போதுமான பணம் உள்ளது" என்பதே . அது அவரின் ஆறாவது பொய்.

7. கல்லூரியில் இளங்கலை முடித்த நான், அதன் பின் முதுகலை பட்ட படிப்பை தொடர்ந்தேன். அமெரிக்க பல்கலை கழகம் அளித்த உதவி தொகையில் எனது படிப்பு சென்று கொண்டிருந்தது. இறுதியில் ஒரு நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் பணியில் அமர்ந்தேன். அந்த நிலையில் என் தாயை அமெரிக்க வாழ்வை அறிமுகப்படுத்தவும், நல்ல நிலையில் வைத்து கொள்ளவும் விரும்பினேன். அந்த நிலையில் "அது எனக்கு பழக்க படாதது " என மறுதலித்தார். அது எனது தாயின் எழாவது பொய்.

8. முதுமையை தொட்டிருந்த எனது தாய் புற்று நோயால் பீடிக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். கடல் கடந்த இருந்த நான் புறப்பட்டு வந்து எனது தாயை சந்தித்தேன். அறுவை சிகிச்சை முடிந்து, நிறைய பலவீனத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். நிறைய முதுமை தோற்றம் பெற்றிருந்த தாய், என்னை கண்டு தன் நோயை மறைத்தபடி புன்முறுவல் பூத்தார். நோய் இருந்த பிடியில் அவரால் முடியவில்லை. முகம் கடின நிலையில் இருந்தது. நோய் அவரை எந்த அளவு பாதித்து உள்ளது என எனக்கு புரிந்தது. மிகவும் மெலிந்து போய் இருந்த என் தாயை கண்டு நான் கண்ணீர் விட்டேன். ஆனால் என் தாய் தன் பலத்தை எல்லாம் திரட்டியபடி "அழாதே மகனே! நான் வலியை உணரவில்லை" என்றார். அது எனது தாயின் எட்டாவது பொய்.
இதை சொன்ன எனது தாய் இறுதியாக தன் கண்களை மூடினார்.
.
.
.

மறைந்து போன விஷயங்கள்/ கடந்து போன நாட்கள்


பால்யத்திலும், பதின் வயதுகளிலும் ஆடி மாதம் நிறைய குதூகலத்துடன் கடந்து போயிருக்கிறது. அதிலும் ஆடி பதினெட்டாம் நாள் சிறப்பானது. நாங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகையை விட ஆடி மாதத்தையும், ஆடி பதினெட்டையும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஊரை விட்டு நகரத்தில், படிக்கவும், பணிபுரியவும் வந்த பின், உள்ளூர் திருவிழாக்கள், இல்லத்தில் நடைமுறையில் இருந்த விழாக்கள் யாவும் மறந்து வருகின்றன. வீட்டில் உள்ளவர்கள் சொன்னால் மட்டுமே, அட ஆமாம்! என ஞாபகம் வருகிறது.

பள்ளி நாட்களில், ஆடி மாதம் துவங்கிய உடன், ஒரு சில விஷயங்கள் உடனே நினைவில் வந்து விழும். முதல் விஷயம் - பட்டம். இன்று ஊர் முழுக்க காற்றாலைகள் வந்து விட்டன. ஆனால் நாங்கள் அன்று பெரிதும் விரும்பியதும், ஆச்சர்யம் கொண்டதும் - பட்டங்கள் [காற்றாடிகள்] தான். சுழன்றடிக்கும் ஆடி காற்று அதற்கு தூது விடும்.. ஆடி மாதத்தில் முதல் தீர்மானம், ஒவ்வொரு வருடமும் கூட; இந்த வருடம் எப்படியாவது பட்டம் பறக்க விட வேண்டும் என்பதே. ஆனால் எங்கள் அதிர்ஷ்டம், இறுதி வரை பட்டம் சரியாக கட்ட வரவில்லை.

எதிர்ப்படும் எல்லா மனிதர்களையும் எப்படியாவது பட்டம் கட்டி தர கேட்டு வந்துள்ளோம். அவர்களும் ஆகட்டும் பார்க்கலாம் என சொல்லி வந்துள்ளனர். அதே நாட்களில் சிறுவர்கள், காகிதம், ஈர் குச்சிகள், அடர் நூல், பட்டம் ஒட்டிட மைதா மாவு - [அட அன்று முதல் இன்று வரை அதை அடிக்க ஆள் இல்லை] என திரிவார்கள். அந்த நாட்களில் பட்டம் கட்ட படுவதை நிறைய ஆவலோடு கண்டு உள்ளோம் [ கப்பல் கட்டுவதை விட இது எங்களுக்கு ஆச்சர்யம் நிறைந்தது. ]. ஆனால் இறுதி வரை எங்களுக்கு அந்த கம்ப சூத்திரம் வரவே இல்லை.

அன்று எங்கள் கிராமத்தில், ஆடி முதலில் இருந்து ஆடி இறுதி வரை தலையை உயர்த்தினால் , நிறைய பட்டங்கள் வானில் பறப்பதை காணலாம் . ஊரின் எந்த இடத்திலிருந்தும் பட்டங்கள் காண கிடைக்கும். மீன் பட்டம் , சதுர பட்டம் என நிறைய பெயர்களில், வெவ்வேறு நிறங்களில், வெவ்வேறு வடிவில்.. குறைந்தது ஒரு பட்டத்திற்கு இரு சிறுவர்கள் இருப்பார்கள். பட்டம் கீழே சரிந்தால், அதன் வால் பகுதியை சரி செய்து தூக்கி விட ஒரு சிறுவன், கயிற்றை பிடிக்க ஒரு சிறுவன் என இந்த நிகழ்வுக்கு நிச்சயமாய் இருவர் வேண்டும் . 'விர்ர்' என வீசும் காற்றில் நிறைய ரீங்காரம் இட்டபடியே பறக்கும் பட்டம் அற்புதமானதே. ஆடி பதினெட்டுக்கு அடுத்தநாள், பள்ளியில் தாங்கள் பறக்க விட்ட பட்டம் பற்றிய பெருமையே, நிறைய சிறுவர்களின் விவாதத்தில் நிறைந்திருக்கும்.

இப்படியான நாட்களில், அன்று ஆடி பதினெட்டாம் நாள். முன் காலை பொழுதில் வாய்க்காலை வலம் வந்த எங்கள் கைகளில் ஒரு பட்டம் சிக்கியது. பொதுவாய் தண்ணீர் வரும் வாய்கால் அன்று எங்கள் பொருட்டு பட்டத்தை எடுத்து வந்திருக்கிறது. ஆர்வமாய் அதை ஆராய்ந்த நாங்கள் கைகளில் இருந்த நூல் கொண்டு பறக்க விட்டோம். அதுவும் போக்கு காட்டி படுத்து விட்டது. அந்த வழியாக வந்த இன்னொரு நண்பன், எங்களின் கையறு நிலைகண்டு உதவிகரம் நீட்டினான். சற்றே பட்டத்தில் மாறுதல் செய்திட்ட அவன், அழகாக பட்டத்தை பறக்க விட்டான். அதன் பின் பட்டம், எங்கள் கைகளுக்கு வந்தது. அன்று நாங்கள் அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.

இந்த பத்து ஆண்டுகளில் யாரும் பட்டம் விடுவதை காணவில்லை. பட்டம் சிறுவர்கள் உலகில் இருந்து முற்றிலுமாய் விடைபெற்று விட்டது போல் தோன்றுகிறது.

அதே போல் ஆடி பதினெட்டில், தவறாமல் கடைபிடிக்க படும் இன்னொரு விளையாட்டு - ஊஞ்சல் விளையாட்டு [ எங்கள் வழங்கு மொழியில் தூரி ] . சிறுவர்களுக்கு எப்படி பட்டம் கைகளில் தர பட்டதோ , அதே போல் சிறுமிகளுக்கு தூரி. மரத்தின் ஏதாவது நீளும் கிளை, வீடுகளின் குறுக்கு சட்டம் இவை போதும். கயிறுகளில் உருவாகும் தூரி அந்த மாதம் முழுதும் அவர்கள் உலகை வசீகர படுத்தும். வரிசை நீண்ட படியே அடுத்து தான் என கூட்டம் இருந்த படி இருக்கும். சிறுவர்கள் மாலை ஆனவுடன் ஆட்டத்தில் அவர்களும் சேர்ந்து கொள்வர். தூரி மேல் நோக்கி செல்லும் பொழுது வரும் உற்சாகம் வேறு எதிலும் இல்லை. க்ரீச் ஒலி தொடர்ந்தது ஒலித்தபடி இருக்கும் . இன்றும் யாரும் தூரிகள் ஆடுகிறார்களா என தெரியவில்லை. ஒரே விதிவிலக்கு, எல்லா பண்டிகை காலத்திலும், கோயில் திருவிழாக்களில், ராட்டின தூரி முன் நிறைய கூட்டம் கூடுகிறது.

எப்பொழுதும் கதை கேட்கும் ஆவலில் உள்ள நாங்கள், இந்த ஆடி பதினெட்டை நாம் எதற்காக கொண்டாடுகிறோம் என பெரியவர்களை கேட்டு வந்துள்ளோம். அவர்களும், ஆடி பதினெட்டில், அந்த நாட்களில் [ பன்னெடும் காலத்திற்கு முன்] காவிரியில் புது வெள்ளம், இரு கரையை தொட்டபடி ஓடும். அன்று காவிரியில் கூடும் ஆண்களும் பெண்களும், கொண்டு வந்த உணவு பண்டங்கள் உண்டு முடித்த பின், குதூகலமாய் பொழுதை களிப்பர். ஆற்றின் கரை ஓரமாய் நிறைய ஆல மரம் வளர்ந்து இருக்கும். அந்த ஆல மர விழுதுகளில் ஊஞ்சல் கட்டி அந்த நாளை இனிமையாய் போக்குவர். அதன் தொடர்ச்சியாகவே நாம் என்றும் இந்த நாளை கொண்டாடுகிறோம் என்றனர். பின்னாட்களில் கல்கியின் " பொன்னியின் செல்வன் " - முதல் பாகம் படித்த பொழுது அவர்கள் சொன்னது அவ்வளவும் உண்மை என புலப்பட்டது.

ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் வளமையின் துவக்கம். கொட்டி தீர்த்த பருவ மழை, அந்த வருடமும் பொய்க்காத நீர்நிலை, வரும் ஆண்டின் புது நம்பிக்கை விதைப்பு என இயற்கைக்கு மனதார நன்றி பெருக்கை செலுத்தும் நல்ல நாள். அன்று பொங்கும் புது வெள்ளம் போல், வாழ்வு என்றென்றும் சிறப்புற வேண்டும் எனும் எதிபார்ப்பே அந்த நாள். ஆடி பட்டம் தேடி விதை என்பது பழமொழி. புது பட்டம்; புது விதைப்பு; புதிய நம்பிக்கை ஒளி கீற்று எல்லாவற்றிற்குமான துவக்கம் அன்று. நம் மூதாதையர் அரிதான கண்டுபிடிப்பு பண்டிகைகள், விழாக்களே.

காவிரி நடைபயிலும் ஊர்களில் இன்றும் - அன்றைய நாளில் தலையில் காசுகளை வைத்து நீரில் முங்கி குளித்தல் உள்ளதை அறிந்துள்ளேன். அந்த குதூகலம் என்றென்றும் தொடரட்டும். இந்த ஆண்டும், பருவமழை பொய்க்காது பெய்து புது நம்பிக்கையை கொடுத்து உள்ளது.

அனைவர்க்கும் இனிய ஆடி பதினெட்டாம் பெருக்கு திருநாள் நல்வாழ்த்துக்கள். அனைவர் வாழ்விலும் பொங்கும் புது புனலாய் மலர்ச்சி வந்து சேரட்டும்.
.
.
.

Saturday, July 18, 2009

விடைபெற்ற கான சரஸ்வதி - டி. கே. பட்டம்மாள்இதோ விடைபெற்று விட்டார் கான சரஸ்வதி டி. கே. பட்டம்மாள். முதிய வயதிலும், எந்த தளர்ச்சியும் இல்லாமல், பொலிவான முகத்துடன், தொலை காட்சிபெட்டியில் முகம் காட்டி சிரிக்கும் பட்டம்மாள் அவர்கள் இன்று இல்லை. தான் என்றென்றும் சுவாசிக்கும் இசையுடன் இரண்டற கலந்து விட்டார். இசைக்கு மகுடமாய் வழங்க பெரும் சங்கீத கலாநிதி பட்டம் , பத்ம பூசன் , பத்ம விபூசன் பட்டங்கள் அவரை அலங்கரித்தவை. பாரதியின் தேச பக்தி பாடல்களை மேடைக்கும், சாதாரண மனிதருக்கும் அறிமுகம் செய்திட்டவர் பட்டம்மாள். அந்த வகையில், தேச பக்தி பாடல்களும், இறை பாடல்களும் அவர் நாவில் நர்த்தனம் புரிந்து வந்துள்ளன.

கல்வியில் சிறந்த காஞ்சியில் பிறந்தவர் பட்டம்மாள். தன் பத்தாவது வயதில் முதன் முதலில் சென்னை வானொலியில் அவரின் இனிய குரல் ஒலித்தது., அதன் பிறகான மூன்றாவது வயதில் மேடையேறியது அவரது குரல். அதன் பின்னர் ஏறக்குறைய அறுபது ஆண்டு அவர் இசை ஆட்சி நடந்து உள்ளது. அவர் சம கால இசை அரசிகளான எம். எஸ். சுப்புலக்ஷ்மி, எம். எல். வசந்த குமாரி, இவர்களுடன் மதிக்க படுபவர். மூவரும், அரிதான இசை பாரம்பர்யத்தை, இசை பரம்பரையை இந்த மண்ணுடன் விட்டு சென்றுள்ளனர்.

திரையில் அவரது பாடல் முதன் முதலில் கல்கியின் அமர காவியமான "தியாக பூமியில் " ஒலித்தது. இசை மூவரில் ஒருவரான முத்து சாமி தீட்சிதரின் பாடல்களை அதிகம் மேடை ஏற்றிய இவர், பாபநாசன் சிவனின் பாடல்களையும் முன் நிறுத்தினார். பாபநாசன் சிவன் அவரை திரையில் அறிமுகம் செய்திட்டவர். மேடை கச்சேரியில் நிறைய புதுமைகளை புகுத்திய பெருமை பட்டம்மாள் அவர்களை சாரும். சாதாரண மனிதனை, அவன் இதயத்தை தொட்டவை பட்டம்மாள் குரல்கள் .

அவரின் பேத்தி "நித்ய ஸ்ரீ மகாதேவன்" ஆவார்கள். அவர் பட்டம்மாள் அவர்களின் இனிய இசை வாரிசு. சுதா ரகுநாதன் அவர்கள் தமது குருவாய் வசந்த குமாரியை வரித்து கொண்டவர் போல்,. நித்ய ஸ்ரீ அவர்கள் பட்டம்மாள் அவர்களை கொண்டாடுபவர்.

பாரதியின் பாடல்கள் அதுவரையில் பாமரனை அடையாத தருணம். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "விடுதலை விடுதலை", "தீராத விளையாட்டு பிள்ளை" பாடல்கள் அவரின் அரிதான பொக்கிஷம் - அவரால் மேடைக்கு இடம் பெயர்ந்தவை.. . தேசம் விடுதலை அடைந்த தருணம், அவரின் பாடல் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே.." வானொலியில் அதீத குதூகலத்துடன் ஒலித்திட்டது. இன்றும் எல்லா மேடைகளிலும், "கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை " பாடல் ஒலிக்கிறது . அதன் ஒவ்வொரு நிறைவிலும் பட்டம்மாள் நின்று ஒளிர கூடும்.

அது மூன்று நான்கு வருடத்திற்கு முந்தய தொலைக்காட்சி பேட்டி. அது நித்ய ஸ்ரீ , பாட்டியின் இயல்பான உரையாடலாய், ஒலித்தது. எப்பொழுதும் போல், பாரதி, அவருடன் சுடர்விட்டான் . அவர் விவரித்த ஒரு சம்பவம் நினைவில் உள்ளது. அது முன் ஒரு நாளைய மேடை நிகழ்ச்சி.. அவரும், எப்பொழுதும் போல், பாரதியின் பாடல்களை உணர்ச்சி ததும்ப பாடுகிறார். அதை பார்த்து கொண்டிருந்த முதல் வரிசையில் இருந்த பெண் தொடர்ந்து அழுத வண்ணம் உள்ளார். கச்சேரி முடிந்த பின் பட்டம்மாள் அந்த பெண்ணை சந்திக்கிறார். அது பாரதியின் பிரிய மனைவி செல்லம்மாள். . பட்டம்மாள் அவர்களால், அவரது வியப்பை அடக்கிட முடியவில்லை. அவரின் பாடல்களை அற்புதமாய் படுகிறீர்கள் என அந்த முதிய அம்மையார் வாழ்த்தி உள்ளார். பாரதியும், அவரின் வாழ்வு எதற்காக இயங்கியதோ அதன் முழு பொருளும் அடைந்து விட்டதாய் விண்ணுலகில் இருந்தபடியே வாழ்த்தி இருக்க கூடும்..

எங்களின் பணிவான வணக்கமும், நன்றிபெருக்கும், உங்கள் பாத கமலங்களில்..

போய் வாருங்கள் பாட்டி. உங்களின் ஒவ்வொரு தேச பக்தி கானமும் எங்களுக்கு, தேச பக்தியையும், புது உத்வேகத்தையும் கொடுத்து கொண்டே இருக்கும். உங்கள் குரலும் சூரிய சந்திரர் போல் சாஸ்வாதமானதே.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று .. "
.
.
.

Saturday, July 4, 2009

சாதனை பயணத்தில் - இன்னுமொரு சிகரம் தொடல் - ரோஜர் பெடெரெர்


இது ரோஜர் காட்டில் அடைமழை காலம். பின்னே! ஒரு மாத இடை வெளியில் இரண்டு கிராண்ட் ஸ்லாம்கள் ரோஜர் கைகளில் தவழ்கின்றது . இந்த டென்னிஸ் இளவரசனின் மட்டை தொட்டதெல்லாம் பொன்னாய் துலங்குகிறது. பிரெஞ்சு ஓபன் வெற்றியை கொண்டாடி முடிக்கும் முன் இதோ விம்பிள்டன் இறுதியில் ஆண்டி ரோடிக்கை வீழ்த்தி ரோஜர் சாம்பியன்.

தனது நீண்ட டென்னிஸ் பயணத்தில் புதியதொரு அத்தியாயத்தை துவங்கும் முனைப்பில் ரோஜர் இந்த விம்பிள்டன் தொடரில் காலடி வைத்தார் . தன் இருபத்து ஏழுவயதில் , ஏழாவதுவிம்பிள்டன் இறுதி போட்டியில் ஆரவாரமாக களம் கண்டார் . அட என்னவொரு ஆச்சர்யமான, அலட்டல் அதிகம் இல்லாத பயணம்.. அதுவும் தொடர்ச்சியாக ஏழாவது விம்பிள்டன் இறுதியில். ஏழுவிம்பிள்டன் பயணத்தில் ஆறில் சாம்பியன். தான் ஒரு தன்னிகரற்ற சாம்பியன் என்பதை நேற்றைய போட்டியில் அழுத்தமாக நிரூபித்துள்ளார்.
இந்த விம்பிள்டனை கைப்பற்றிய ரோஜர், பீட்சாம்ப்ரசின் பதினாலு கிராண்ட் ஸ்லாம் சாதனையை முறியடித்து , பதினைந்தாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற பிரபஞ்சத்தின் முதல் வீரர் என்ற தனிப்பெரும் சிறப்புக்கு முன்னேறி இருக்கிறார் . சென்ற ஆகஸ்டில், உலகின் முதல் நிலை வீரர் என்ற பட்டத்தைஇழந்தார்[தொடர்ந்து 237 வாரம்]. இழந்த முதல் இடத்தை, இந்த கிராண்ட் ஸ்லாம் வெற்றி மூலம் மீட்டு இருக்கிறார். தன் வாழ்நாளில் நிச்சயம் இந்த நாளை மறக்க மாட்டார் . இந்த விம்பிள்டன் ஞாயிறை நிச்சயம் வரலாறு தன் குறிப்பேட்டில் அழுத்தமாக இன்னொரு சாம்பியனை குறிப்பெடுத்து கொள்ளும். பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் மைதானம், எவ்வளவோ போட்டிகளை கண்ட அந்த பச்சை புல்தரை இன்னொரு அறிய பொக்கிசத்தை சப்தத்துடன் உலகுக்கு அறிவித்து தனக்கு புகழ் தேடி கொண்டது . இதோ இங்கொரு சாதனை சிகரம் என..

இந்த ஆண்டின் இதுவரையில் நடந்த மூன்று கிராண்ட்ஸ்லாம் இறுதியிலும் ரோஜர் இருந்தார். ஆஸ்திரேலிய ஒபனில், இறுதி வரை போராடி ரபெல் நடாலிடம் தோற்ற ரோஜர் பிரெஞ்சு ஓபெனில் புது எழுச்சியோடு களம் கண்டார். கோப்பையை வென்று எடுத்தவர் முகத்தில் அளவிட முடியாத ஆனந்தம்.. தன்னை எப்பொழுதும் தொடர்ந்தது கொண்டிருந்த நெருக்கடியில் இருந்து மீண்டவராய் பெருமூச்சு விட்டார். இனி தன்னை இன்னும் இவர் பிரென்ச்சு ஓபன் போட்டியை வென்றெடுக்க முடியாதவர் என கை நீட்ட முடியாது என்பது அவர் கருத்து. இந்த நிமிடமே டென்னிஸ் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவது என்றாலும் தனக்கு பூரண சம்மதம் என அறிவித்தார்.

தன் பெரிய கனவை அடைந்தவருக்கு அதை கொண்டாட நேரம் இல்லை. இதோ விம்பிள்டன் இறுதியில் அசாத்திய மன உறுதியுடன் போராடி ஆண்டி ரோடிக்கை பின் தள்ளி புன்னகைக்கிறார் பெடரர். பிரென்ச்சு ஓபன் வென்றவருக்கு உலகம் ஆனந்தமாய் அன்பு ததும்பும் நீருற்றாய் மாறி போனது. இதோ அவரது எண்ணிலடங்கா ரசிகர்கள் அடுத்த ஒரு ஆனந்த தருணத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். இதோ அவரது சுவிஸ் இல்லம் பழைய குதூகலம் மறையாமல் அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடி. பேஸ் புக் மூலம் தன்னை இணைத்து கொண்டவருக்கு இதுவரையில் இரண்டு மில்லியன் விசிறிகள். அதன் மூலமே தன் அன்பு ரசிகர் வட்டத்துடன் பதிலளிக்கிறார்.

இந்த விம்பிள்டன் துவக்கத்திலேயே ரோஜரின் பெரிய போட்டியாளரும், சென்ற ஆண்டைய சாம்பியனும் முதல் நிலை வீரருமான நடால், மூட்டு பிரச்சனையால் விலக நேர்ந்தது. அப்படியே அவர் இந்த முறை ஆடி இருப்பினும் சிங்கம் எந்த சவாலுக்கும் ரெடி என தன் பிடரியை சிலுப்பி கொண்டே நின்றது. இதுவரையில் இவர்கள் இருவரும்,விளையாடும் ஆட்டங்களே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. சென்ற முறை ரோஜர் நடால் இடையே நடந்த போட்டி ஐந்து - அரைமணி நேரம் நடந்ததே இதற்கு சாட்சி. அவ்வளவு நேரம் நீண்ட ஒரு போட்டியை விம்பிள்டன் அது நாள் வரையில் கண்டதில்லை. அதற்க்கு சற்றும் குறையாமல் நேற்றைய போட்டியும் நீண்டு கொண்டே போனது வேறு விஷயம். இது நாள் வரையில், இருபது இறுதி போட்டிகளை கிராண்ட் ஸ்லாம் மூலம் தொட்டு உள்ளார் . அதில் பதினைந்து முறை வெற்றி. இருபத்து ஒரு முறை தொடர்ந்தது அரை இறுதியை தொட்டு உளார்.

விம்பிள்டன் ஒரு கனவு மைதானம். பச்சைபுல்தரை, வெண்மை உடை, விம்பிள்டன் போட்டிக்கே உரித்தான பாரம்பர்யம். டென்னிஸ் ராக்கெட் பிடிக்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும், புதிய மைல் கல்லை புதிய சிகரத்தை தொடும் நம்பிக்கையை ரோஜர் தோற்றுவித்து உள்ளார் . நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமிலாமல், சென்று கொண்டே இருந்தது. இருவரும் தொடர்ந்து போராடினர். யாரும் களைப்பு அடையவே இல்லை - பார்வையாளர் உட்பட தான் ... முதல் செட்டை இழந்த ரோஜர் அடுத்த செட்டையும் இழக்கும் தருவாயில் இருந்தார். ஆட்டம் முழுதுமாய் ரோடிக் ஆதிக்கம் செலுத்தும் நிலை அந்த நிமிடம் இருந்தது.அந்த நிலையில் இருந்து மீண்ட ரோஜர் அந்த செட்டில் வென்று அடுத்த செட்டையும் தனது ஆக்கினார் . நான்காவது செட்டை முழுதும் ரோடிக் ஆதிக்கம் செலுத்தினார்.

பட்டத்தை வெல்வது யார் என்பதை ஐந்தாவது செட் முடிவு செய்வதாய் இருந்தது. கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரம் நீண்டது. முடிவில் ரோடிக்கின் சர்வை அதுவரையில் முறியடிக்க முடியாத ரோஜர் அந்த முறை முறியடித்தார். போட்டியும் அவர் வசம் வந்தது. இறுதியில் ரோடிக் அதிகம் வருத்தமுற்றவராய் தனது இருக்கையில் இருந்து எழ எண்ணமிலாமல் இருந்தார். மொத்தத்தில் இருவருக்கும், இடையில் மயிர் இழை வித்தியாசமே இருந்தது. ரோடிக்கும் நேற்று கோப்பையை வெல்ல கூடியவராய், ஏன், வென்றவராய் தோன்றியது. மூன்று முறை விம்பிள்டன் இறுதிக்கு முன்னேறி, மூன்று முறையும் ரோஜரின் கைகளில் கோப்பையை தவற விட்டார். நேற்றைய ஸ்கோர் கணக்கு இப்படி பிரதிபலித்தது. [5-7 7-6 (8-6) 7-6 (7-5) 3-6 16-14] கடைசி செட் ஏறக்குறைய மூன்று செட்களை விளையாடியது போல் இருந்தது.
முடிவில், ரோஜரின் பதட்டம் இல்லாத ஆட்டம், அவரின் தளராத மன உறுதி, புதிய சிகரத்தை உறுதி செய்தது,. ஆட்டத்தை தவிர அவர் எதிலும் கவனம் குவிப்பவர் அல்ல ரோஜர். அதே போல், என்றும், வெற்றியை தலைக்கு ஏற்றி கொள்ளாதவர் . என்றும் தவழும் அமைதி அவரின் இன்னொரு பரிணாமம். இன்னும் சாதிக்க வேண்டும் எனும் துடிப்பு அவரை முன்னெடுத்து செல்கிறது. நல்வாழ்த்துக்கள் ரோஜர். சாதனை தொடரட்டும்..

.

.
.

Sunday, June 21, 2009

தேடுவதும் தவிர்ப்பதும் - II


தேடுவதும் தவிர்ப்பதும் - இது சென்ற பதிவின் தொடர்ச்சி.. வாழ்க்கையில அதிகம் தேடுவதும், தவிர்க்க நினைப்பதுவுமான பட்டியல்.
நாம் சாரும் சமூகம்:
1) அடிக்கொரு முறை நமது குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை தொடர்பு கொள்ளுங்கள். [ கை பேசி, கடிதம், மின்னஞ்சல் எதுவாயினும் இருக்கலாம். அவர்கள் எப்பொழுதும் நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் எனும் அறிவிப்பாய் இல்லாதிருக்கட்டும்.. ]

2) ஒவ்வொரு நாளும் சக மனிதருக்கும் நல்லவற்றை அளித்திட முன் வாருங்கள். ஒரு இனிய சொல், ஒரு வழிகாட்டுதல், ஒற்றை புன்னகை, எதுவாயினும்..

3) எல்லோரையும் மன்னிக்க பழகுவோம்.

4) ஒவ்வொரு நாளும் எழுபது வயதிற்கும் அதிகமான முதியவரோடும், ஆறு வயதிற்கும் குறைவான குழந்தைகளோடு செலவழிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களிடம் கற்க ஆயிரம் விஷயம் அகப்படும்.

5) தினமும் குறைந்தது மூன்று மனிதர்களின் முகத்தில் புன்னகையை கொணருங்கள்.

6) நம்மை பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணும் எண்ணம் தேவையற்றது.

7) எப்பொழுதும் நண்பர் தொடர்பில் இருங்கள். அவர்களே உங்களுக்கு உதவும் கரங்கள்..

நமது வாழ்வு:
1) என்றென்றும் நல்லவற்றையும் சரியானதும் செய்திட முன் வாருங்கள். உங்களின் செயல்கள் மனதோடு ஒன்றி இருக்கட்டும்.

2) அர்த்தமற்ற, மகிழ்ச்சியை குறைக்கும் எந்த விஷயத்திலிருந்தும் உடனடியாக விலகுங்கள்.

3) இறைவனும் காலமும் எல்லா துயரையும் தீர்க்க வல்லவை. இறைவனின் பெரும் கருணையால் எல்லா ரணங்களும் குணப்படுத்த வல்லவை.

4) இதுவும் கடந்து போகும் எனும் நம்பிக்கை நமக்கு வேண்டும். நல்ல தருணம் ஆயினும், மோசமான தருணம் ஆயினும், அது மாறக்கூடியதே..

5) நல்ல நாளும் நல்ல நிமிடமும் இனி மேல் தான் வரப்போகிறது எனும் நம்பிக்கை கொள்ளுங்கள் .

6) ஒவ்வொரு நாளும் நீங்கள் துயில் எழும் பொழுதும் அந்த நாளை அளித்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஒவ்வொரு நாள் உறங்க செல்லும் பொழுதும் அந்த நாள் நல்லபடியாய் அமைத்து கொடுத்த இறைக்கு நன்றி சொல்லுங்கள்.

7)நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், விழித்து எழுங்கள்.. சோர்வை அனுமதியாதீர். அந்த நாள் உங்கள் நாளே.. வெற்றியும் உங்கள் பக்கமே..

[ இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது, அபூர்வ பட்டியல் என்னை நிறைய நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆட்படுத்தியது. அதை பகிர்ந்து கொள்கிறேன்... ]
.
.
.

தேடுவதும் தவிர்ப்பதும் - I


நம் ஒவ்வொருவர் நல்வாழ்வுக்கும் சில அடிப்படை விஷயங்கள் தேவைப்படுகின்றன. சில விஷயங்கள் ஒதுக்கப்பட வேண்டியவை. அப்படி தொகுக்கப்பட்ட விஷயங்கள் இங்கே. நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடி அடைவதும், அவற்றை இனங்கண்டு கொள்வதும் நமது வழக்கம். அதே போல், ஒரு நிகழ்வு நம்மை பாதிக்கும் என எண்ணினால் அதிலிருந்து ஒதுங்கி இருப்பதுவும் நம் கடமையே.. இந்த பட்டியல் அதிசயமாய் நம்மை உற்று நோக்க வைக்கிறது.. நாமும் நம்மை மறந்து சப்திப்போம்... அட, இத்தனை நாள் தெரியாமல் இருந்ததே என்று..

நம் ஆரோக்கியம்:
நாம் நம்மை ஆரோக்கியமாய் வைத்திட இந்த விஷயங்கள் அடிப்படை. நாமும் கடைபிடித்து தான் பார்க்கலாமே.
1) தினமும் அதிகமாக நீர் அருந்துங்கள்.

2) காலை உணவு ஒரு பேரரசனை போல் இருக்கட்டும். மதிய உணவு ஒரு இளவரசனை போல் இருக்கட்டும். இரவு உணவு ஒரு பிச்சை காரனை போல் குறைந்த அளவோடு இருக்கட்டும்.

3) மரம் மற்றும் நிலத்துக்கு வெளியே விளையும் காய்கறிகளை உணவில் நிறைய சேர்க்கலாம். நிலத்திற்கு அடியில் இருந்து பெறப்படும் காய்கறிகளை குறைவாக சேர்க்கவும்.

4) என்றென்றும் பெருகும் ஆற்றல், நல்ல உற்சாகம், நல்ல புரிதல் உங்களோடு உறவாடட்டும்.

5) உங்களின் ஒவ்வொரு நாளிலும் பிரார்த்தனைக்கும், தியானத்திற்கும், யோகா பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள். அதையும் உங்கள் வாழ்கை முறையாக, வாழ்வின் அங்கமாக கொணருங்கள். எல்லா நாளும் நல்ல நாளே.

6) நிறைய விளையாடவும் நேரம் ஒதுக்குங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கானது மட்டுமல்ல. எல்லோர்க்குமானதே. விளையாட்டு உங்கள் ஒவ்வொரு உடல் அணுக்களையும் இளமைக்கு இட்டு செல்கிறது.

7) சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு நீங்கள் படித்து முடிக்கும் புத்தகங்கள் அதிகமாக இருக்கட்டும்.

8) ஒவ்வொரு நாளும் அமைதியாக பத்து நிமிடங்கள் அமர்ந்து இருங்கள். மனம் முழுதும் பன்னீர் புஷ்பங்கள் உதிர்ந்தது போல் உணர்வீர்கள்.

9) ஒவ்வொரு நாளும் குறைந்தது ஏழு மணி நேரம் தூங்கி எழுங்கள். தூக்கத்தை போல் உடலையும் மனதையும் புத்துணர்ச்சிக்கு எடுத்து வரக்கூடிய பொருள் உலகில் வேறெதுவுமில்லை. நல்ல தூக்கம் ஆரோக்கியத்தின் அடையாளமும் கூட.

10) ஒவ்வொரு நாளும் குறைந்தது பத்து முதல் முப்பது நிமிடம் நடக்க பழகுங்கள். நடக்கும் பொழுது உங்கள் முகமும் உடலும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் வெளிப்படுத்தட்டும்.

உங்களின் ஆளுமை :
உங்களின் ஆளுமை வளர்ச்சி எப்படி இருக்கிறது. உங்கள் வளர்ச்சி, உங்கள் நடவடிக்கை உங்களுக்கு திருப்தியா? இல்லை; இன்னும் மாற்றம் வேண்டும். என்னுள் வளர்ச்சியும் வேண்டும்.. என் பார்வையில் இன்னும் விசாலம் வேண்டும்... என் அறை கதவு இன்னும் காற்றை அனுமதிக்கட்டும்.

1) உங்களின் வாழ்வை மற்றவரோடு எக்காரணத்தை கொண்டும் ஒப்பிட்டு பார்க்காதீர்கள். ஏனெனில் உங்களால் அவர்களின் பயணத்தை அறிந்திருக்க முடியாது. அவர்களின் பயணம் முற்றிலும் வேறு விதமாய் இருக்கலாம்.

2) உங்களுக்குள் எதிர்மறை சிந்தனைகள் தோன்றிட அனுமதிக்க வேண்டாம். உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை பற்றி வருத்தமும் கொள்ள வேண்டாம். எப்பொழுதும் உங்கள் எண்ணம் நேர்மறை சிந்தையுடன், முன் உள்ள செயங்களில் நிலை கொள்ளட்டும்.

3) முதுகுக்கு பின்னால் அவதூறு பேசுவதை விட்டொழியுங்கள். அதில் உங்கள் அளவிடமுடியாத ஆற்றல் வீணாகிறது.

4) விழிப்பு நிலையில் நிறைய கனவு காணுங்கள்.

5) பேராசை , பொறாமை இவை நம்மை அழிக்க வல்லது. நமது தேவைகள் நமக்கு முன்னரே திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டு விட்டன; நிறைவேறி வருகின்றன..

6) நேற்றைய தவறுகளையும் , பிரச்சனைகளையும் மறந்து விடுங்கள். உங்கள் துணைவரின் கடந்த கால தவறுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்த வேண்டாம். கவனமாய் இருங்கள். ஏனெனில், அவை தற்போதைய மகிழ்ச்சியை துடைத்து எடுத்து செல்லும் வல்லமை உள்ளவை.

7) வாழ்வு மிக மிக சிறிய எல்லை கொண்டது. பிறரை வெறுத்து ஒதுக்காதீர்கள். சக மனிதர்களிடம் அன்பு பாராட்டிடுவோம்.

8) கடந்த காலம், உங்களின் நிகழ்கால வாழ்வின் அமைதியை குலைக்க அனுமதியாதீர்.

9) உங்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு. யாரும் அதை கூட்டவோ குறைக்கவோ முடியாது. உங்கள் மகிழ்ச்சிக்கு முழுவதும் நீங்களே பொறுப்பு.

10) வாழ்வு ஒரு பள்ளிக்கூடம். இங்கு நாமனைவரும் பாடம் பயில வந்துள்ளோம் என்பதை நினைவில் வைத்திருங்கள். பிரச்சனைகள் நாம் கற்கும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போன்றே தோன்றுவதும் மறைவதுமாய் இருக்கும். ஆனால் நாம் கற்கும் ஒவ்வொரு பாடமும் வாழ்வு முழுதும் கூட வருபவை.

11) எல்லா விவாதத்திலும் நீங்களே வெல்ல வேண்டிய அவசியம் இல்லை. மாற்று கருத்து உள்ளவரையும் கண்ணியத்துடன் ஏற்று கொள்ளுங்கள்.

12) எதுவும் அளவோடு இருக்கட்டும். உங்களின் எல்லைகளை நீங்களே வரையருங்கள். எதையும் அதிதமாய் முயல வேண்டாம்.

13) எந்த விஷயத்தையும், பிரச்சனையும் அமைதியோடு அணுகுங்கள். அதிகமாய் பதறினாலும், கோபம் பெருகினாலும் பாதிப்படையும் முதல் நபர் நாம்தான்.

12) நிறைய புன்னகைக்கவும். முடிந்தால் அதிகமாய் வாய் விட்டு சிரிக்கவும். வாலியின் வரிகள் தான் ஞாபகம் வருகிறது...

"சந்தோசம் சந்தோசம் வாழ்கையின் பாதிபலம்.
சந்தோசம் இல்லையென்றால் மனிதர்க்கு
ஏதுபலம்.
உள்ளம் என்றும் கவலைகள் சேரும் குப்பை தொட்டி இல்லை.
உள்ளம் என்பது பூந்தொட்டி ஆனால் வாழ்கை துன்பமில்லை.
"


[ இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது, அபூர்வ பட்டியல் என்னை நிறைய நெகிழ்ச்சிக்கும், மகிழ்ச்சிக்கும் ஆட்படுத்தியது. அதை பகிர்ந்து கொள்கிறேன்... ]

.

.
.

Saturday, June 6, 2009

எழுச்சி கொண்ட ரோஜர் பெடெரர் - Roland Garros


இது ரோஜர் பெடெரர் - எழுச்சி கொண்ட நாட்கள். தனது நீண்ட நாள் கனவு, தொட முடியாதா என்னும் வெற்றியின் மிக மிக விளிம்பில் இருக்கிறார். டென்னிஸ் ஆட ஆரம்பித்து எல்லா வெற்றிகளையும் ரோஜரால் தொட முடிந்திருக்கிறது( கிராண்ட்ஸ்லாம், ஒலிம்பிக் தங்கம், நீண்ட நாள் தர வரிசையில் முதலிடம், அதிகமான சம்பாத்தியம்., ஈடிணை அற்ற ரசிகர்கள் உலகெங்கும்.. ). ஆனால் அவரின் எண்ணம் சொல் செயல் எல்லாம் - பிரெஞ்சு ஓபென்( Roland Garros) மேலே. இதோ அவரின் கனவை கைப்பற்ற இந்த ஞாயிறுக்காக தவமிருக்கிறார். அட ஒவ்வொரு ஸ்லாம் - பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் அனைத்தும் ஞாயிறு தான்.

நாளை அவர் ராபின் சொடர்லிங் உடன் பலப் பரிட்சையில் இருக்கிறார். சொடர்லின்க் வென்றால் அவருக்கு இது முதல் ஸ்லாம். ரோஜருக்கு களிமண் தரை போக்கு காட்டி வந்துள்ளது. நான்கு முறை தொடர்ந்து களிமண் தரையில் இறுதிக்கு முன்னேறி உள்ளார். மூன்று முறை அவர் நடாலிடம் தோற்று உள்ளார். களிமண் தரையை பொறுத்த வரையில் நடாலுக்கு Just like that ஊத்தி தள்ளி விட கூடியவர். ரோஜரும் மற்ற யாரையும் விடவும் நடால் மிக முக்கியம்,. ஏனெனில் தடைகளே இல்லாமல் முன்னேரியவரின் ராஜ்ஜியம் நடால் தலையீட்டால் தவிடு பொடியானது.

ஐந்து முறை நடாலிடம் இறுதியில் தோற்று உள்ளார்(மூன்று முறை - பிரெஞ்சு ஓபன், ஒரு விம்பிள்டன், ஒரு ஆஸ்திரேலியா ஓபன்). டென்னிஸ் அறிந்த எல்லோரும் ரோஜரை கொண்டாடி உள்ளனர். டென்னிஸ் வரலாற்றில் வேறு யாருக்கும் இல்லாத தகுதியும் திறமையும் ரோஜருக்கு உரியது. இன்றைய நாளில் எல்லா ஸ்லாம் இறுதிக்கும் முன்னேறியவர். நாளை பிரெஞ்சு ஓபன் போட்டியை வெல்லும் பட்சத்தில் பீட சம்ப்ரசின் பதினாலு கிராண்ட் ஸ்லாம் என்பதை சமன் செயபவராவர்.

இந்த பிரெஞ்சு ஓபன் மிக மிக அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்ததாய் உள்ளது. உலகின் முன்னணி வீரர் அனைவரும் ஒன்று சொன்னது போல் அனைவரும் வெளியேறி விட்டனர். அப்படி தான் நடாலுக்கும் ஆப்பு சொடர்லின்க் மூலமாய் வந்தது. எதிபாராமல் மண்ணை கவ்வி விட்டார். பிரெஞ்சு ஓபன் ஆட ஆரம்பித்தது முதல் தோல்வியில்லை. அந்த நாள் அது உடைந்தது.

ரோஜரை பொறுத்த வரை இந்த வருட அரை இறுதிஅற்புதமாய் இருந்தது. தனது செட்டை இழப்பதும் அடுத்ததில் மீட்பதுமாய் போராடினார். நேற்றைய போட்டியில் Back hand shot சிறப்பாய் இருந்தது. அவரது ஒவ்வொரு ஷாட்டும் ரசிக்கும் வகையில் இருந்தது. மூன்று மணி நேரத்திற்கும் அதிக நேரம் நீடித்த ஆட்டத்தில் டெல் போட்ரோவை போராடி வென்றார். டெல் ஒவ்வொரு தருணத்திலும் சிறப்பாக போராடினார்(3-6, 7-6 (2), 2-6, 6-1, 6-4.). அடுத்த ஸ்லாம் போட்டிகளில் அசத்த இன்னொரு முகம் ரெடி . நல்வாழ்த்துக்கள் டெல்.

ரோஜரை பற்றி விளையாட்டு விமர்சகர் பீட்டர் ரோபக் Peter Roebuck- இப்படி குறிப்பிட்டார். ரோஜரின் அற்புதமான வெற்றிக்கு காரணம், அவர் பந்துகளை சரியான பகுதிகளில் எப்படி செலுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளார் என்பது. He knows how to place the ball at right areas.. எந்த தருணத்திலும் பதற்றத்தை காண்பிக்காமல் செயல்படுவது ரோஜரின் வெற்றிக்கு துணை நிற்கிறது. ஜான் போர்க், இவன் லேண்டில், ஜான் மெக்கன்ரோ, ஸ்டீபான் எட்பர்க், போரிஸ் பெக்கெர், பீட் சாம்ப்ராஸ் இப்படி யாரும் எல்லா கிராண்ட் ஸ்லமிலும் கலக்கியதில்லை. நாற்பது ஆண்டு கால டென்னிஸ் வரலாற்றில் அகாசி மட்டுமே அதை சாதித்து உள்ளார்.

அதை சாதிக்கும் முழு தகுதியும், திறமையும் ரோஜருக்கு உள்ளது. தற்போது அவரின் வயது இருபத்து ஏழு. இப்பொது உள்ள நிலையில் தன் ஆட்டத்தை நிலை நிறுத்தினால், டென்னிஸ் உலகம் இதுவரை கற்பனை செய்திட முடியாத உயரத்தை தொடுவார். ரோஜர் தொடர்ச்சியாக இருபது ஸ்லாம் அரை இறுதியை தொட்டு உள்ளார். இது நினைத்து பார்க்க முடியாத பயணம். ரோஜருக்கு சமீபமாக அதிக சறுக்கல்கள். தனது பிரியமான விம்பிள்டன் தோல்வி, ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலியா ஓபன் தோல்வி என தவிப்புக்கு மேல் தவிப்பு. ஆஸ்திரேலியா ஓபெனில் ஐந்து செட்டிலும் போராடி அடக்க மாட்டாமல் கதறியதை உலகம் கரிசனத்துடன் நோக்கியது.

பார்க்கலாம். நாளை சொடர்லாங்கை வெல்லும் தருணத்தில், தான் இன்னும் சாம்பியன் தான், இன்னும் தன் பயணம் முடியவில்லை, தான் என்றும் கருப்பு குதிரை தான் என்பதை இன்னும் அழுத்தமாக நிரூபிப்பார். வரலாறு மீளும் என எதிர்பார்க்கலாம்.
.
.
.

Sunday, May 31, 2009

வாழ்வின் வளமைக்கு அடிப்படைகள்


வாழ்வை வளமாக்க, பொருள் பொதிந்ததாய் அமைந்திட, லட்சியம் நோக்கிய பயணத்தில், தவறாது பயணித்திட சில அடிப்படை விதிகள்... இவை வெற்றியின் உன்னத கூறுபாடுகளாய் போற்றப்படுபவை.
1. பார்வையை மாற்றுங்கள்:
உங்கள் பார்வை கோணத்தை மாற்றுங்கள். நேர்மறை சிந்தனை உங்களை ஆட்கொள்ளட்டும். நல்ல நட்பு, மகிழ்வான, அமைதியான நாட்களையே எதிர்பார்த்திருங்கள். ஏனெனில் நீங்கள் கேட்டதே கிடைக்கும்.

2. உடனுக்குடனே செய்து முடித்தல்:
வாழ்வு ஒன்றும் ஒத்திகை அரங்கல்ல. எடுத்த எந்த செயலையும் உடனுக்குடன் செய்து முடித்தல் வெற்றிக்கு அடிப்படை.

3. என்றென்றும் நன்றி உடையவர்களாய் இருங்கள்:
நமக்கான ஆசீர்வாதங்களை கணக்கு வைத்திடுங்கள். துன்பத்தை கணக்கு பார்க்காதீர்கள். என்றென்றும் இறைவனுக்கு, சக மனிதருக்கு நன்றி உடையவர்களாய் இருங்கள்.

4. கற்றல் என்றென்றும் தொடரட்டும்:
உங்களை உயர்த்திக்கொள்ள தொடர்ந்து முயலுங்கள். கற்றல் என்றென்றும் உங்களுடன் இருக்கட்டும். சக மனிதரை பற்றி அவதூறு பேசுவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். [ எழுத்தாளர் சுஜாதா தன் வெற்றிக்கான ரகசியமாக பகிர்ந்து கொண்டது... நான் இன்னமும் தொடர்ந்து படிக்கிறேன். எனவே என்னால் என்றும் இளமையாய் எழுத முடிகிறது. ]

5. உங்களைப்பற்றிய மதிப்பீடு என்றென்றும் உயர்வாக இருக்கட்டும்:
உங்களை பற்றி நீங்கள் உயர்வாகவே எண்ணுங்கள். ஒருபோதும் உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். பிதாகரசின் அற்புதமான வரிகள் ... "உங்களையே நீங்கள் மதியுங்கள். அதையே மற்ற எல்லாவற்றிற்கும் மேலானதாய் கருதுங்கள் " என்பதே. சுய மதிப்பீட்டை வளர்த்துக்கொள்ள எளிய வழி ... "உங்களுக்கு அன்பாகவோ, பொருளாகவோ திருப்பி செலுத்த முடியாத மனிதனுக்கு நீங்கள் உதவ வேண்டும்." பிரதி பலன் பாராது செய்திடும் உதவி உங்கள் சுய மதிபீட்டை விண்ணுயரம் கொண்டு செல்லும்.

6. எதிர்மறை எண்ணத்திலிருந்து விலகி இருங்கள்:
ஒரு மனிதனின் கட்டுகோப்பான வளர்ச்சி, நல்ல எண்ணங்கள் நல்ல நட்பால் மட்டும் வளர்வதில்லை. அவன் தவிர்க்கும் எதிர்மறை சக்திகளிடமிருந்தும் வருகிறது.

7. செயல்களை, பணிகளை மகிழ்வுடன் ஏற்று கொள்ளுதல்:
எது தேவையோ, எது முடியுமோ அதை முடித்திட முன்வர வேண்டும். மேலும் செய்கிற பணிகள் மன நிறைவோடு செய்திட பழக வேண்டும்.

8. ஒவ்வொரு நாளையும் நேர்மறை சிந்தையோடும் தெளிவோடும் அணுகுங்கள் :
வெற்றியாளருக்கு ஒவ்வொரு நாளும் முக்கியம். துவங்கும் அந்த நாள் நிறைய தெளிவோடும் நேர்மறை சிந்தையோடும் இருக்கட்டும். உங்கள் வாழ்வை மாற்ற எண்ணினால் உடனடியாக செயல் புரிதலை வளர்க்க வேண்டும்.

1) எப்பொழுதும் சிதறும் புன்னகை
2)என்றென்றும் கூடவரும் அளவு கடந்த அன்பு
3)
அறிவில் சிறந்த மனிதர்களிடம் நாம் பெரும் மதிப்பு .
4)சரியான விமர்சனங்களை அவை கசப்பாக இருப்பினும் - உண்மை என்றால் ஏற்று கொள்ளுதல்
5)அடுத்தவர்களிடம் உள்ள அருங்குனங்களை மதித்தலும், ஊக்குவித்தலும்
6) எப்பொழுதும் உற்சாகம் பொங்கி வழியட்டும்..

நம் வாழ்வே ஒரு எதிரொலி போன்றது தான். நாம் எதை கொடுக்கிறோமோ அதையே நாம் திரும்ப பெறுகிறோம்.
[இந்த கருத்துகள் என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தவை. அரிதாயும், நேர்த்தியாகவும் உள்ள தொகுப்பு. ]
.
.

படித்ததில் பிடித்தது


ஒரு சில சிந்தைகள் எண்ணம் முழுதும் ஆட்கொள்ளும். சில இதயம் தொட்டு என்றென்றும் ஞாபகத்தில் உறவாடும். அவற்றில் சில ...
 • வாழ்வு ஒரு பந்தயம் அல்ல. அது ஒரு தொடர் பயணம்.
 • மற்ற எவரையும் விட முதலாவதாய் வருவதில் பெரிதாய் பெருமை கொள்ள எதுவுமில்லை. தன்னோடு வரும் மற்றவரையும் போட்டியாளராய் கருதாமல், ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி வழிநடத்தி சென்றால் அதை விட மனதிற்கு மகிழ்ச்சி தருவது உலகில் எதுவுமில்லை.
 • நம்மோடு தொடரும் பதற்றத்தில், அரிதான தருணங்களை தவற விடுகிறோம். அடுத்து என்ன என்று தேடி ஓடுவதை காட்டிலும், இந்த கணத்தை முழுதும் உணர்ந்து உன்னதத்தை அனுபவியுங்கள்.
 • எனக்கு இதுவேண்டும், அது வேண்டும் என்ற தேவைகளின் பட்டியலை நிறுத்தினால் போதும். நம்மிடம் குவிந்து கிடக்கும் ரத்தினங்கள் கண்ணுக்கு புலப்படும். நம் ஒவ்வொருவரும் ஆண்டவனால் அதிகமாகவே ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளது புலப்படும்.
 • வாழ்வு வேகமாக நகரும் தருணங்களில் வேகம் மகிழ்வு தருவதாய் இருக்கும். ஆனால் வேகம் மட்டுமே நம் ஒட்டுமொத்த அனுபவமாய் மிஞ்சிட கூடாது. அதற்க்கு மேலும் சந்தோசப்பட வாழ்வில் நிறைய உள்ளது.
 • வாழ்வு முழுதும் அற்புதமானதும், ஆச்சர்யம் தரக்கூடியதுமான நிமிடங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. நிதானத்துடன் நகர்ந்தால் மட்டுமே, அதன் அருமையை பருக முடியும்.
 • ஒரு தனித்துவமான மனிதனை சந்திக்க ஒரு நிமிடம் தேவைப்படுகிறது. ஒருவரை பாராட்டிட, ஊக்குவித்திட ஒரு மணிநேரம் நமக்கு தேவைப்படுகிறது. அவர்களிடம் அன்பு செய்திட ஒரு நாள் பிடிக்கிறது. ஆனால் அந்த மனிதனின் நினைவுகள் வாழ்வு முழுவதும் நம்முடன் சக பயணியாய் பயணிக்கிறது.

  ஒரு சில மனிதர்களை பார்த்த பார்வையில் நம்முள் பெரிதாய் எந்தவொரு மாற்றத்தையும் உருவாக்குவதில்லை. ஆனால் நீண்ட நெடிய வாழ்வியல் பயணத்தில், நம்மில் நெருங்கிய நட்பாக இறுகி இருப்பார். பார்வை கோணங்கள் பல நேரம் தவறாகவும் முடிகின்றன.

  [இந்த பகுதி என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது. வார்த்தைகளின் வசீகரம் கருதி இந்த பகிர்தல் சாத்தியப்பட்டு உள்ளது. ]
  .
  .

கணினி முன் தான் உங்கள் வாழ்வா? - இதோ உங்களுக்காக


எல்லா பொழுதும் கணினி முன் செலவளிப்பவரா நீங்கள்? விசைப்பலகையில் முன் நெற்றி பட்டு ரத்த காயம் உருவாகும் வரை மோதி முடிப்பவரா நீங்கள்? ஏன் நிறுத்தி விட்டாய் நீலவேணி? வீடு இடியும் வரை ஆடு என்பது போல் கணினியை தட்டி தீப்பொறியை கிளப்புபவரா நீங்கள்? வாரான், வாரான் பூச்சாண்டி! இரயிலு வண்டியிலே! வாரணாசி கோட்ட தாண்டி ரயிலு வண்டியிலே! இரயிலு வண்டியிலே! மெயிலு வண்டியிலே! .... இந்த பாட்டு உங்களுக்காக இட்டு கட்டி பாடப்பட்டதாய் உங்கள் அறை நண்பன் சொல்கிறானா? ( நடு இராத்திரியில் அடைமழை நாளில் கதவை தட்டி எழுப்பிய காண்டு அவனுக்கு என்றும் உண்டு) அட உங்களை அல்லவா இத்தனை நாள் தேடிக்கொண்டு இருந்தேன்... நீங்கள் தான் இப்பொழுது வேண்டும்..

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் - நான் போட்டோ ஷாப் முதல் வெறும் தரை வரை எங்கும் வரைவேன் எனும் பதில் காதில் விழுகிறது... இருந்தாலும்.. நாம் செய்திடும் வேலை மிக பல சமயம் கண்ணை விற்று ஓவியம் வாங்கும் முயற்சி தான். அத்தனை உணர்ச்சிகளையும் வெளியிடும் கண்ணையும் ஒரு பார்வை பார்ப்போமே..

திரையை தொடர்ந்து முக்கண்ணனாய் முறைப்பதால் உங்கள் பார்வையில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? உங்கள் கண் நல்ல நிலையில் உள்ளதா? கணினி சார்ந்த பார்வை கோளாறுகள் உங்களுக்கும் உள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது? இரண்டு மணி நேர தொடர் உழைப்புக்கு பின் பின்வருவனவற்றில் ஏதாவது இருந்தால் சற்றே நீங்கள் கவனிக்க வேண்டும்...

 • சோர்வான/எரிச்சலான/ சிவப்பேறிய கண்கள்
 • கண்களில் வறட்சி (Dry Eyes)
 • தலைவலி, கவனம் குவியாமை
 • இரட்டை பார்வைகள் ( jeans aishwaryaarai)
 • மங்கிய பார்வை ( Blurred Vision)
 • கண் கூசுதல்.
 • கழுத்து, தோள்பட்டை, முதுகு வலிகள்
 • காண்டக்ட் லென்ஸ் தரும் அசௌகர்யம்

பிரச்சினைகளின் துவக்க புள்ளி:
திரையில் தெரியும் எழுத்துக்கள் மைய பகுதி அதிக அழுத்தத்துடனும், அதன் முனை பகுதிகள் சற்றே மங்கியும் அமையும். அதுவே அச்சடிக்கப்பட்ட புத்தகம் போன்றவற்றில் எழுத்தின் முனைகளும் சரியாக அமைந்திருக்கும்,. இங்கு படிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் திரையில் சிக்கல் உருவாகிறது.

கணினியில் படிக்கிறேன், பார்கிறேன் பேர்வழி என அஷ்ட கோணலாய், திருவிக்கிரம வடிவமாய், நாராயணனின் அத்தனை தோற்றத்தையும் காட்டி அமர்நதிருந்தால் , நிச்சயம், கழுத்து முதுகுவலி வந்தே தீரும்.

பார்வை பிரச்சனைக்கு அதி முக்கிய காரணிகள்:
1) நீங்கள் சரிவர கண்களை இமைப்பதில்லை.
2) கண்களை அளவுக்கு மீறி அகல விரித்து திரையை உற்று நோக்குவது
3) உங்கள் அலுவலக வெளிச்சமும், கணினி திரையும் சாதகமாய் இல்லாமை.

எப்படி சரி செய்வது:
1) கண்களில் இமைத்தலில் பிரச்சனை:
அடிக்கொருமுறை இமைப்பதை நடைமுறையில் கொணருங்கள். தொடர் உழைப்பில் சிறிய இடைவெளி அவசியம். திரையில் இருந்து கண்களை சற்றே எடுத்து வெவ்வேறு தூரத்தில் இருக்கும் பொருட்களை கவனியுங்கள்(சுவர், சுவர் கடிகாரம், ஜன்னலுக்கு வெளியே பாரதிராஜா கைகள் வழியே காட்டுவது போல், அடிவானத்து குருவிகள், மைனாக்கள், வெளியே கிளை தாவும் அணில்)

பிரகாசமான ஒளியால் வரும் பிரச்சனை:
வெளியில் இருந்தும், அரை விளக்கில் இருந்தும் வெளிவரும் வெளிச்சம், அதிதமாக கணினி திரையில் பட்டு ஒளிர்தல்.

 • கணினியை கண் கூசாதபடி சரியான இடத்தில் வைத்தல்.
 • கணினி திரையை உங்கள் கண் பார்வையில் இருந்து கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளுதல்.
 • ஜன்னல் திரையை சரிவர உபயோகித்தல்( கண்களுக்கும், திரைக்கும் பொருந்துகிற நிலையில்).
 • தலைக்கு மேலே உள்ள விளக்கு அதிக வெளிச்சம் தருகிறதா? சற்றே வெளிச்சம் குறைவான விளக்குக்கு மாறுங்கள்
 • கணினி திரைக்கு முன் ஒரு கண்ணாடி திரை உங்களுக்கு சரியான வெளிச்சத்தை பெற்று தரும் (attach a glare filter)
 • விசைப்பலகை மற்றும் சுட்டி இவை முழங்கை உயரத்திற்கும் தாழ்வாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
 • உங்கள் இருக்கைகள் சரியான கை - தாங்கிகள்(Arm Rests) இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
 • கணினி திரை உங்களை விட்டு சற்றே விலகியும், உங்கள் கண் பார்வைக்கு கீழும் இருக்கட்டும்( ஒரு புத்தகம் வாசிப்பது போன்ற நிலை).
ஞாபகம் இருக்கட்டும்: 2020விதிகள்:
 • இருபது நிமிடத்திற்கு ஒருமுறை நிறுத்தி இருபது முறை இமைக்கவும்.
 • பார்வையை நகர்த்தி 20- அடிக்கு வெளியே உள்ள பொருளை 20-நொடிகள் பார்க்கவும்.
 • உங்களுக்கு (20/20) (6/6) பார்வை உள்ளதா என சரிபார்த்து தேவைப்படின் மூக்கு கண்ணாடி அணியவும்.

  --- நன்றி COmputer Vision Syndrome , சங்கரா கண் மருத்துவமனை
  .
  .Sunday, May 10, 2009

அன்னையர் தினம் - ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு பூங்கொத்து


இன்றைய தினம் - அன்னையர் தினம். என்றென்றும், சுய நலத்தின் சுவடின்றி தம் குழந்தைகளுக்காக பிரார்த்திக்கும் அன்பு இதயங்களுக்கு நன்றி. என்றென்றும் நம்பிக்கையும், நல்லறிவும் புகட்டி தனது குழந்தைகளை நல்ல மனிதர்களாய் வார்த்தெடுக்கும் அந்த கரங்களுக்கு வணக்கங்கள். உணவையும், அன்பும் ஒன்றே போல் குலைத்து கொடுக்கும் இதயங்கள். ஒரு குழந்தை சமூகத்தில் நல்லவண்ணம் வளர்ந்திருந்தால், அந்த நன்றி பெருக்கின் முதல் துளி அன்னையை சேரும். தைரியம் தருவதாய் இருக்கட்டும், புத்தி புகட்டுவதாய் இருக்கட்டும் அவர்கள் வழியே தான் நம்மை ஆட்கொள்கின்றன பல பண்பு நலன்கள். தாய் மொழியை நாவில் துளிர்க்க விட்டு, தந்தையை, உறவுகளை, இறையை அறிமுகம் செய்வித்து, நம்முள் என்றென்றும் உறைகிறார்கள்.

தாயே! முன்பு உடல் தந்து, உயிர் பேணி, உருவம் தந்து உலகில் உலவ விட்டாய். தாயே! குழந்தை பொருட்டு ஏற்ற நோன்புகள் எத்தனை. மழலையில் உளம் மகிழ்ந்து தளிர் விரல் பற்றி நடை பயின்ற நாட்கள் என்றென்றும் உனது நினைவில் ஒரு பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறாய் என்பதை அறிவோம் .

நான் எனது நல் அறிவுக்கும், நன்நடத்தைக்கும் என் தாய்க்கு ஆயிரமாயிரம் முறை கடன்பட்டு இருக்கிறேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒரு குட்டி கதை...
ஒரு மனிதன் இருநூறு மைல் தொலைவில் இருக்கும் தனது தாய்க்கு, மலர் கொத்து அனுப்பும் எண்ணத்தில், ஒரு மலர்களை விற்கும் கடைக்கு வருகிறான். அவன் வந்த தருணத்தில், கடை வாசலில் ஒரு சிறுமி சோக மயமாய் அமர்ந்து இருக்கிறார்.

சிறுமியின் வாட்டத்தை அறிந்த அந்த மனிதன் அந்த சிறுமியிடம் சென்று காரணம் கேட்கிறான். அதற்கு அந்த சிறுமி, எனக்கு ஒரு சிவப்பு ரோஜா வேண்டும் என்கிறாள். புன்னகை பூத்த அந்த மனிதன், இவ்வளவு தானே! வா! நான் வாங்கி தருகிறேன் என்கிறார்.

சொன்ன படியே அந்த மனிதன் சிறுமிக்கு ஒரு ரோஜாவை வாங்கி தருகிறான். அதன் பின்பு அவன் தனது தாய்க்கு பூக்களை வாங்குகிறான். அதை சரியான முகவரி தந்து அனுப்பி வைக்குமாறு சொல்கிறார். அதன் பின்னர் அந்த சிறுமியை தன்னுடன் காரில் வர அழைக்கிறார். அதற்கு அந்த சிறுமியும், நீங்கள் என் தாய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்கிறாள்.

அந்த மனிதருக்கு வழி காட்டியபடியே காரில் பயணித்து வந்த சிறுமி, புதிதாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு சமாதியில் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு ரோஜாவை வைத்து வணங்கி திரும்பினாள்.

இந்த நிகழ்வை கவனித்த மனிதன், திரும்பவும் தான் புறப்பட்ட மலர் கடைக்கு வருகிறான். முன்பு தன் தாய்க்கு அனுப்ப சொன்னதை திரும்ப பெற்று கொண்ட அவன், தானே, ஒரு மலர்கொத்தை கையில் எடுத்து கொண்டு தன் தாய் இருக்கும் கிராமம் நோக்கி புறப்பட்டான்.

"தாயே!
உன்பொருட்டு தர
உலகில் மதிப்பானது எதுவுமில்லை!
உனது அன்பை உலக பொருட்கள்
எதை கொண்டும் ஈடாக்க வழியில்லை!
உன் கையால் இன்னுமொரு கவளம்!
அதுவே என்னால் முடிந்த கைம்மாறு!"


ஆண்டு தோறும் மனமுருக தாயை தொழுது பாடும், முருக பக்தர், முருகதாஸ் அவர்களின் பாடல் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது.

"அம்மா என்று அழைப்போமே!
அவளை அம்மா, அம்மா என்று அழைப்போமே!
வானில் உலவும் நிலவை காட்டி
வாயில் ஊட்டினாளே! மாயை எனும் உலகை காட்டி
உலகில் விரட்டினாளே!
பட்டு புரிந்து கெட்டு தெரிந்து முடிவில் அறிந்தோமே!
அவளை அம்மா, என்று அழைப்போமே! "
.
.
.