Sunday, July 26, 2009

அம்மா சொன்ன எட்டு பொய்கள்


வாழ்வின் எல்லா நாட்களிலும் போற்றுதலுக்கு உரியவர்கள் பெற்றோர். அதில் தாய் பெரும் முக்கியத்துவம் உலகில் எதற்கும் இல்லை. ஒரு மனிதன் தாழ்ந்தாலும், உயர்ந்தாலும் தாயின் வளர்ப்பையும், வழிகாட்டுதலையும் உலகம் முன் வைக்கிறது. குடி போதையில் தள்ளாடி, குழப்பம் செய்பவரையும், வழிக்கு கொணர அவனை பெற்ற தாயையே அணுகுகிறோம். அவளின் ஒற்றை வார்த்தை, இந்த மனிதனை நிலை கொள்ள செய்திடும் என்பது நம்பிக்கை.

தொடரும் இந்த கதை என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது., இதுவே பின் ராமகிருஷ்ண விஜயம் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. இந்த கதை ஒரு மனிதனின் உணர்வாகவே சொல்லப்பட்டு உள்ளது. தன அன்னைக்கும் தனக்குமான நிகழ்வுகளை இங்கே சொல்லி சென்றுள்ளார். இது முற்றிலும் அவரவர்களை சார்ந்த கதை போல், அவரவர் வாழ்வு போல் விரிகிறது.
இனி அந்த மனிதனின் வார்த்தைகளில்..

1. இந்த கதை நான் குழந்தையாய் இருக்கும் பொழுது துவங்குகிறது. நான் ஒரு ஏழ்மை நிறைந்த குடும்பத்தில் பிறந்தேன். நிறைய தருணங்களில் உண்ணும் உணவுக்கு கூட சிரமப்பட வேண்டி இருந்தது. உணவு உண்ணும் பொழுது பல நாட்களில், என் தாய் தனக்கான உணவை தந்து வந்துள்ளார். அப்படி உணவை என் தட்டுக்கு மாற்றும் பொழுது, சொல்லும் வார்த்தை.. "இந்த உணவை எடுத்துக்கொள்; எனக்கு பசி இல்லை" என்பதே. இது எனது தாயின் முதல் பொய்.

2. நான் வளரும் பருவத்தில், என்றும் முயற்சியுடைய எனது தாய், தன் ஓய்வு நேரத்தில், வீட்டுக்கு அருகில் செல்லும் ஆற்றில் மீன் பிடிப்பாள். அவள் பிடிக்கும் மீனை கொண்டு எனக்கு சத்துள்ள ஆகாரத்தை ஓரளவுக்கு கொடுக்க இயலும் என்பது அவள் நம்பிக்கை. சமைத்த மீன்களை எனக்கு பரிமாறுவாள்; அந்த நிலையில் நான் உண்டு வைக்கும் மீனின் மிச்ச துண்டுகளை அவள் எடுத்து உட்கொள்வாள்; குற்ற உணர்ச்சி தோன்ற என்னிடம் இருந்த மீனை எடுத்து உண்ண அவளிடன் நீட்டினேன். நான் பொதுவாக மீன் உண்ணுதலை விரும்ப மாட்டேன் என மறுதலித்த அவள் என்னையே உண்டுகொள்ள சொன்னார். அது அவர் உதிர்த்த இரண்டாவது பொய்.

3. நான் நடுநிலை பள்ளியில் படித்த நாளில் எனக்கு படிக்க ஆகும் செலவை சமாளிக்க உபயோகித்த தீ பெட்டிகளை ஒட்டி தரும் வேலையே எடுத்து கொண்டார். இது புதிய செலவுகளை சமாளிக்க உதவியாய் இருந்தது. பனி காலங்களில், நள்ளிரவில் சில தருணங்களில் எனக்கு விழிப்பு வரும். அந்த தருணத்திலும், ஒரு சிறு மெழுகுவர்த்தியின் துணையுடன் தீ பெட்டிகளை ஓட்டும் பணியை கர்ம சிரத்தையுடன் செய்வாள். அதிர்ச்சி அடைந்த நான், அம்மா இப்பொழுது நீ உறங்க செல்; நாளை உனக்கு வேலை இருக்கிறது; அதிக நேரம் கண் விழிக்காதே என்பேன். அந்த நிலையிலும், உனக்கே உரித்தான சிரிப்புடன், "நீ தூங்கு; நான் ஒன்றும் களைப்பாய் உணரவில்லை" என்பாய் - அது நீ உதிர்த்த மூன்றாவது பொய்.

4. நான் எனது பள்ளி இறுதி தேர்வுகளை எதிர்கொண்ட நாட்களில் என்னுடன் துணையாய் வருதல் பொருட்டு, என் தாய் தன் வேலையில் இருந்து விடுப்பு எடுத்தார். தேர்வு தருணத்தில், பகல் பொழுதில், தேர்வு மையத்துக்கு வெளியே வெயிலில் காத்திருப்பார். தேர்வு முடிந்து, கடைசி மணி அடித்த உடன் என்னை வரவேற்று தன் கையால் தயாரித்து இருந்த தேநீரை கொடுப்பார். அந்த அடர்த்தியான தேநீர் கூட என் தாயின் அளவுகடந்த அன்புக்கு ஈடாக இல்லை. வேர்வை ஆறில் குளித்தபடி நிற்கும் என் அம்மாவை கண்ட நான் எனது ஒரு கோப்பை தேநீரை கொடுத்து அவளையும் அருந்த சொன்னேன். அதற்கு அவர் "நீ அருந்து; நான் தாகமாய் உணரவில்லை" என்றார். அது எனது தாய் சொன்ன நான்காவது பொய்.

5. நோய்வாய்பட்ட என் தந்தை இறந்த பின், எனது தாய் என்னை, குடும்பத்தை காக்கும் முழு பொறுப்பையும் எடுத்து கொண்டார். எங்கள் வாழ்வு அந்த நிலையில் நிறைய சிக்கல் உடையதாய் மாறியது. எங்கள் நிலையை கண்டு மனமிரங்கிய ஒரு அன்பர், எங்களுக்காக சிறிதும் பெரிதுமான பல நல்ல உதவிகளை செய்திட்டார். எங்களின் போதாத நிலையை அறிந்து வருந்திய எங்களின் வீட்டுக்கு அருகே வசிப்போர் எனது தாயிடத்தில், இன்னொரு திருமணம் செய்து கொள்ள யோசனை தந்தனர். அதற்கு என் தாய், "நான் அன்பை எதிர்பார்க்கவில்லை" என் பதில் சொன்னார். அது எனது தாயின் ஐந்தாவது பொய்.

6. நான் படிப்பை முடித்து வேலையும் கிடைத்த தருணம், என் தாய் ஓய்வு கொள்ள வேண்டும் என எண்ணினேன். அந்த நிலையில் எனது கருத்தை அவர் ஏற்றுகொள்ளவில்லை, மாறாக ஒவ்வொரு நாளும் தனது தேவைகளுக்காக காய்கறிகளை விற்று அதில் வரும்படி ஈட்டி வந்தார். அந்த தருணத்தில், இன்னொரு நகரத்தில் வசித்த நான், அவரின் அன்றாட தேவைகளுக்காக பணம் அனுப்பி வந்தேன். அந்த நிலையிலும், உறுதியாக அந்த பணத்தை வாங்க மறுத்து வந்தார். சில சமயம், பணத்தை எனக்கு திருப்பி அனுப்பி உள்ளார். அவர் சொல்லும் வார்த்தை " எனக்கு போதுமான பணம் உள்ளது" என்பதே . அது அவரின் ஆறாவது பொய்.

7. கல்லூரியில் இளங்கலை முடித்த நான், அதன் பின் முதுகலை பட்ட படிப்பை தொடர்ந்தேன். அமெரிக்க பல்கலை கழகம் அளித்த உதவி தொகையில் எனது படிப்பு சென்று கொண்டிருந்தது. இறுதியில் ஒரு நல்ல நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில் பணியில் அமர்ந்தேன். அந்த நிலையில் என் தாயை அமெரிக்க வாழ்வை அறிமுகப்படுத்தவும், நல்ல நிலையில் வைத்து கொள்ளவும் விரும்பினேன். அந்த நிலையில் "அது எனக்கு பழக்க படாதது " என மறுதலித்தார். அது எனது தாயின் எழாவது பொய்.

8. முதுமையை தொட்டிருந்த எனது தாய் புற்று நோயால் பீடிக்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தார். கடல் கடந்த இருந்த நான் புறப்பட்டு வந்து எனது தாயை சந்தித்தேன். அறுவை சிகிச்சை முடிந்து, நிறைய பலவீனத்துடன் படுக்கையில் படுத்திருந்தார். நிறைய முதுமை தோற்றம் பெற்றிருந்த தாய், என்னை கண்டு தன் நோயை மறைத்தபடி புன்முறுவல் பூத்தார். நோய் இருந்த பிடியில் அவரால் முடியவில்லை. முகம் கடின நிலையில் இருந்தது. நோய் அவரை எந்த அளவு பாதித்து உள்ளது என எனக்கு புரிந்தது. மிகவும் மெலிந்து போய் இருந்த என் தாயை கண்டு நான் கண்ணீர் விட்டேன். ஆனால் என் தாய் தன் பலத்தை எல்லாம் திரட்டியபடி "அழாதே மகனே! நான் வலியை உணரவில்லை" என்றார். அது எனது தாயின் எட்டாவது பொய்.
இதை சொன்ன எனது தாய் இறுதியாக தன் கண்களை மூடினார்.
.
.
.

3 comments:

Anonymous said...

really super. Congrats

THIRUMALAI said...

அனானி நண்பர் மற்றும் பதிவை வாசித்த அன்பர்கள் - தங்கள் வருகைக்கும் பின்னூட்டம் இட்டமைக்கும் நன்றி.

Kalaiselvan A said...

மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் , உங்கள் தாய் உங்களுக்கே மகளாக பிறக்க , நான் ஆண்டவனை வேண்டுகிறேன்

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்