Sunday, June 13, 2010

சுஜாதா அவர்களின் " பிரிவோம் சந்திப்போம்"


சுஜாதா அவர்களின் எழுத்து, தொண்ணூறுகளின் மத்தியில் அறிமுகமானது. அவரது புத்தகங்களை படித்த தருணங்களில் அவரின் முகம் அறிந்தவன் இல்லை நான். பின் அவரின் ஜீனோம் பார்க்க கிடைத்தது. சுஜாதா அவர்களை, வெகு ஜன பத்திரிகைகளில் படித்து வந்த நான், அவரின் எழுத்தை சமீபத்தில் வாசித்தேன். நிறைய பேர் அவரின் "பிரிவோம் சந்திப்போம்" நாவலை புகழ்ந்ததை கேட்டு, ஏதாவது ஒரு நாள் படிக்க வேண்டும் எனும் ஆவல் கொண்டேன். சில புத்தகங்கள், ஏதோ ஒரு மழை நாட்களுக்காய், புத்துரு மாறாமல், தவம் இருக்கின்றன. அப்படி ஒரு மழை நாளும், இரவும், சுவாசம் நிரப்பும் குளிரும் அந்த நிமிடங்களை அருமையாக்குகின்றன. புத்தகத்தை படித்த நிமிடங்களை விட, அதை அசை போடும் நிமிடங்கள் தித்திப்பானவை.


எண்பதுகளில் துவக்கத்தில், இந்த நாவலை எழுதி இருக்கிறார். ஏதோ நேற்று எழுதியது போல் அப்படி ஒரு வசீகரம் அதன் பக்கங்களில். முதல் பாகத்தை முதலில் படித்து, சற்றே இடைவெளி விட்டு, இரண்டாவது பாகத்தை படிக்க எடுத்தேன். அவரும் விகடனில், முதல் பாகத்தை முடித்து, சற்றே இடைவெளி தந்து இரண்டாவது பாகத்தை தந்திருக்கிறார். இந்த புத்தகத்தை பற்றி சொன்னால், "படித்தேன்; ஒவ்வொரு பக்கமும் ஒரு படி தேன்!" என தயங்காமல் சொல்லலாம்.

அவரின் இந்த புத்தகத்தை கொண்டு "ஆனந்த தாண்டவம்" திரைப்படம் வந்தது. இந்த திரைப்படத்தின் இறுதி பகுதியை தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. " கனா காண்கிறேன்! கனா காண்கிறேன்! கண்ணா..  " பாடல் இன்னும் செவியில் முட்டுகின்றது. திரைப்படத்தை கண்டாலும், எழுத்தின் சுவாரஸ்யம் தனி தான்.முதல் பாகத்தை எடுத்த பின், புத்தகத்தை கீழே வைக்க முடியவில்லை. அவ்வளவு வசீகர ஒழுங்கு அவரது எழுத்தில். சுவாரஷ்யமான எழுத்து, விறுவிறுப்பான நடை என அவரது ரசிகர்கள் ஏன் கொண்டாடுகின்றனர் என காரணம் புரிந்தது. முதல் பாகத்தை நான்கு நாட்களில் படித்து முடித்தேன். இதில் மிக மிக சுவாரஷ்யம், ரகுபதி கதாபாத்திரத்தின் அப்பா..  இது ஏதோ சுஜாதாவே அதற்கு  பின் நின்று பேசுகிறார் என தோன்றியது.

பாபநாசத்தில் துவங்குகிற கதை, சென்னையில் வலம் வந்து, அமெரிக்க நகரங்களில் முடிகின்றது. வாழ்வில் இதுவும் கடந்து போகும் என புரிய வைக்கின்றது கதை களம். பாபநாசத்தில் துவங்குகின்ற கதை எதோ நம்மை பாபநாசத்தை தரிசித்த அனுபவத்தை அளிக்கின்றது. ரகுபதி வெளிப்படுத்தும் தவிப்புகள், கோபங்கள், மகிழ்ச்சி நம்மையும் தொற்றி கொள்கின்றது. சாதாரணமாய் வாழ்வை எதிகொள்ளும் மனிதனின் மேல் சமூகம் பதிக்கும்  பிம்பங்கள் சற்றே அதிகம். சமூகமே ஒரு மனிதனிக்கு முத்திரை குத்தவும் செய்கின்றது. சமூகம் தானாய் சித்தரித்த உருவத்தில், ஒரு இளைஞன் படும் அவதி நம்மையும் நிஜம் தானே என சொல்ல வைக்கின்றது.

ரகுபதி எடுக்கும் தவறான முடிவுகள் இருபதுகளில் நாமும் அப்படி தான் இருந்தோம், அப்படி தான் முடிவெடுத்து இருந்தோம் என சொல்ல முடிகின்றது. அவன் அடையும் தடுமாற்றங்கள், ஏமாற்றங்கள் நம்மையும் பதறவும் பரிதவிக்கவும் செய்கின்றன. வாழ்வில் எதிர்படும் காதலும் அதை எதிகொள்ளும் பக்குவமும் ஒரு இளைஞனின் வாழ்க்கை போக்கை எப்படி மாற்றுகின்றன என சொல்கிறது கதை. கதையில் இன்னொரு சுவாரஷ்யம் ரகுபதி பொறியியல் மாணவனாய் உருவகப்படுத்தப்பட்டு  உள்ள விதம். அட சுஜாதாவும் அப்படி தானே! ஒரு பொறியியல் பட்டதாரி என ஞாபகம் வந்தது.அட அதே எலக்ட்ரானிக்ஸ்!  அவரின் மன ஓட்டம் அப்படியே! அவரை அவரது நண்பர்களும், "வாடா! எஞ்சினியர்! " என வாஞ்சையோடு அழைத்துள்ளனர்.

முதல் பாதியில் ரகுபதி காதல் தோல்வியில் தற்கொலைக்கு முயல்வதும் அவனது தந்தை ஆற்றுபடுத்தி அவனின் குறிக்கோளை ஞாபகம் செய்வதும் கதை போக்கை மாற்றுகின்றன. அவனது தந்தை சமூகம் குத்தும் முத்திரைக்கு அப்பாற்பட்டவராய், அரிய தைர்யத்தோடு முன்னெடுத்து செல்கிறார்.  வாழ்கையில் ஒவ்வொரு மனிதனும் எண்ணற்ற திருப்பங்களை சந்திக்கின்றான். ஒரு சில அவனது வாழ்வின் போக்கையே புரட்டி போட்டு விடுகின்றன.

இராண்டாவது பாகம் அமெரிக்காவில் பயணப்படுகின்றது. அன்றைய அமெரிக்க மக்களின் பழக்க வழக்கம், சமூகம் கொடுக்கின்ற போலி அடையாளம் இவற்றை  சுஜாதா நையாண்டி செய்ய தவறவில்லை. " ராதா அமெரிக்க வாழ்க்கைக்கு தன்னை தயார்படுத்தி விட்டான். நீ இன்னமும் இந்தியனாய் இருக்கிறாய். படித்து முடித்துவிட்டு இந்தியா போய் சேரும் வேலையை  பார்!"  என அறிவுறுத்தும் இடங்கள் அருமை. அன்றைய அமெரிக்க நகரங்கள், சூதாட்ட பொழுதுபோக்குகள், அன்றைய நாள் "பேசிக்" மென்பொருள், எதோ பழைய நாட்களை கண்முன் நிறுத்துகின்றன.

ரகுபதியின் "மேலாண்மை படிப்பு!" இன்றைய கல்விமுறை, மேற்கத்திய கல்விமுறையை ஒரு கை பார்க்கின்றது. அடுத்த கதா பாத்திரம் மதுமிதா! முடிவெடுக்க எத்தனிக்காத வாழ்க்கை தருணம், அடுத்தவர் எடுத்த முடிவில் தன்னை, தன வாழ்வை ஒப்பு கொடுத்த தருணங்கள், பின் வாழ்வில் வெகுதூரம் வந்தபின் எடுக்கும் உடனடி முடிவுகள் என அதிர்ச்சியை தருகின்றன. வெகுளி தனம் அப்படி ஒன்றும் நல்லதில்லை என சொல்கின்றது அந்த மது கதா பாத்திரம்.

அடுத்த அருமையான பாத்திரம் நிச்சயம் "ரத்னா" கதா பாத்திரம். ஒரு ரத்தினமாகவே கதையில் ஜொலிக்க செய்கின்றாள். இந்திய கலாசாரத்தின் மேல் கொள்ளும் ஈடுபாடு, ரகுபதியை யதார்த்ததோடு புரிந்துகொள்ளும் திறன் என அவளின் உலகம் வேறு மாதிரியாய் வளர்கின்றது. .
நிச்சயதார்த்தம் நடக்கின்ற தருணத்திலும், அவளது பிறழாத வாழ்க்கை யதார்த்தம், வாழ்வை பற்றிய நடை முறை உண்மை பொட்டில் அறைகின்றது. அப்பா உங்களை, வீடியோவில் "தங்கையின் நாட்டியம் பார்க்க வைக்க போகின்றார்" என அவள் கொடுக்கும் முன் ஜாக்கிரதை நம்மில் நிறைய பேரை ஞாபகத்திற்கு கொண்டு வருகின்றன. நாமும் வீட்டுக்கு வரும் விருந்தினர் கைகளில் கல்யாண ஆல்பத்தை தந்து அதில் உள்ளவர் இன்னார் என சொல்லி அவர் எதற்கு வந்தார் என்பதை மறக்க வைக்கின்றோம். முடித்தால் அவர் பார்த்து முடிக்கும் வரை காபி கூட கைக்கு வராது..


என்றென்றைக்கும் சுஜாதா ராஜ்ஜியம், தொடரும்., அவரது எழுத்து இன்னும் நிறைய பேரை சென்று சேரட்டும். வாழ்வை நேசிக்கவும், மனிதரை அற்புதமாய் புரிந்துகொள்ளவும் உதவும் புத்தகம் எனக்கு "பிரிவோம் சந்திப்போம்" வகையில் வந்தது. காதலில் தோல்வி கொள்ளும் இதயங்களை ஆற்றுபடுத்தும் அற்புதமான களஞ்சியம். அவரின் அற்புதமான நடைக்கு, கதை சொல்லும் திறனுக்கு ஒரு ராயல் சல்யூட். அவரின் நினைவுகளுக்கு இனிய பூங்கொத்து.
.
.
.    

8 comments:

Raghav said...

மிகவும் சரி.. அதிலும் அசை போடும் தருணங்கள் இந்த நாவலைப் பொறுத்த வரை இனிமையானவை..

shiv said...

Pirivon Santhipom is one my favourites from our vaathiyaar.....But the Movie was disappointing...
Have you read "Nilaa Nizhal"? Vaathiyar apdiyey teen age kannu munnadi kondu vandhirupaar....

ஸ்ரீராம். said...

சுஜாதா...எழுத்துலகில் இனி அபபடி ஒரு ஆளுமை வருமா?

ஸ்ரீராம். said...

இளமை விகடன் 'குட் ப்ளாக்ஸ்' பகுதியில் பார்த்து இங்கு வந்தேன்..!

dondu(#11168674346665545885) said...

//இதில் மிக மிக சுவாரஷ்யம், ரகுபதி கதாபாத்திரத்தின் அப்பா.. இது ஏதோ சுஜாதாவே அதற்கு பின் நின்று பேசுகிறார் என தோன்றியது.//
ரகுபதியின் அப்பா பாத்திரத்துக்கு மூலமே சுஜாதாவின் தந்தைதான் என்று நினைக்கிறேன். அணைக்கட்டு மேலேயே சைக்கிள் விட்டுச் சென்ற நிகழ்ச்சிகள் இருவருக்குமே பொது.

சுஜாதா தனது தந்தையின் இறுதி நாட்கள் பற்றி எழுதும்போது குறிப்பிட்ட அவரது வாழ்க்கை நிகழ்வுகள் என்னை இம்முடிவுக்கு கொண்டு வந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பத்மநாபன் said...

அருமையான வெளிப்பாடு...பிரிவோம் சந்திப்போம் படிப்பவர்கள் அனைவருக்கும் படித்து முடித்தவுடன் ஒரு கலவையான உணர்வில் ஒரு நாலு வரியாவது எழுத தோன்றும்...நிங்களாவது முழு புத்தகமாக படித்தீர்கள்..நாங்கள் 80 களில் வியாழக்கிழமைகளில் அண்ணாச்சி கடையில் தவமிருப்போம்..வெள்ளிக்கிழமை இந்த கதை டிஸ்கஸன் தான் நண்பர்களோடு நடக்கும்...

THIRUMALAI said...

பதிவை பார்த்தவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள்[நரசிம்மன் ராகவன், பத்மநாபன், ராகவ், ஷிவ், ஸ்ரீராம் ] அனைவர்க்கும் என் நன்றி. குட் ப்ளாக்ஸ் வரிசையில் வெளியிட்ட யூத்புல் விகடனாருக்கு நன்றி. நண்பர் ஷிவ், நான் இது வரையில் நிலா நிழல் படித்ததில்லை.

Abarajithan Gnaneswaran said...

எனக்கு சுயபுத்தியில்லாமல், வெகுளியாக வரும் மதுமிதாவை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவளை, வெறும் அழகுக்காக மட்டுமே, மற்ற குறைகளை மறந்துவிட்டு, இப்படிப்பட்ட வெகுளியை வைத்துக்கொண்டு எப்படி வாழப்போகிறோம் என கொஞ்சமும் நடைமுறையில் யோசிக்காத, அதை காதல் என்று சொல்லி, தற்கொலை, கொலை வரை போகும் ரகுவையும் பிடிக்கவில்லை. அமெரிக்க வர்ணனைகளும், ரகுவின் அப்பாவும் சுவாரஸ்யம்.

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்