Showing posts with label National Youth Day. Show all posts
Showing posts with label National Youth Day. Show all posts

Wednesday, January 13, 2010

தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்

 சுவாமி விவேகானந்தர் - பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும் நிழலாடும். வலிமையே வாழ்வு முழுதும் போதித்தவர். கீழை தேசத்தின் மகிமையை உலகமெங்கும் எடுத்து சென்றவர், வேதாந்தத்தின் விளக்கம், ஒரு ஆன்ம ஒளி, இருண்ட தேசத்தின் வெளிச்ச விடிவெள்ளி என அவருக்கு நிறைய பக்கங்கள்.  அவரின் உருவத்திற்கும், அவரின் செயல்பாட்டுக்கும் அவர் என்றென்றும் இளைஞர். அவரின் பிறந்த நாளை இளைஞர் தினமாய் கொண்டாடுவது மிக மிக பொருத்தமானதே.

அவர் உருவாக்கிய உந்து சக்தி மிக மிக அரிதான செயல். நேதாஜி தன் வாழ்க்கை பயணத்தை சுவாமி விவேகானந்தரிடம் கற்று கொண்டவர். அவரின் பேச்சும் கருத்துமே நேதாஜிக்கு வாழ்வை, அதன் கட்டற்ற எழுச்சியை, தியாகத்தை விதைத்தது.


தன் இறுதி நாட்களில், போதும் நான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான பணியை முடித்து விட்டேன்... என சொல்ல முடிந்தது. ஒரு மனிதரின் கருத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழ முடியுமா? முடியும்.. புத்தர் நடை முறை உதாரணம்.. 
 
வாழ்வின் எல்லா வெற்றிகளையும், தன் குருதேவர் ஸ்ரீ ராம கிருஷ்ணரின், பாதத்திற்கே அர்பணிக்க முடிந்தது. அவரின் எல்லா செயல்களும், குருதேவரின் அனுமதியால் மட்டும் நடந்தவை. அப்படி ஒரு குருவும், அப்படி ஒரு சீடரும் அமைந்தது உலகம் செய்த பெரும் தவம்.  தனக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் குரு பரம்பரையை தோற்றுவித்து உலகுக்கு விட்டு சென்றது அவரின் எல்லா செயல்களுக்கும் சிகரம். 
 
தேசம் முழுதுமான அவரது பயணம் ஒரு தேசத்தின் சரியான நிலை எடுத்து சொன்னது. குமரி முனையில் அவர் செய்த தவம், ஒரு புத்தெழுச்சி மிக்க இந்தியாவை கொணர்ந்தது. 
 
ஒவ்வொரு இதயமும், வணக்கத்துக்கு உரியது என்பது அவர் கொண்ட அரிய நிலை.

விழிமின் எழுமின் கருதிய காரியம் கைகூடும் வரை ஓயாது உழைமின்.. இது எழுச்சி தீபம்...

அவரை தன் வாழ்வின் வழிகாட்டியாக எத்தனையோ மனிதர்கள் எண்ணி உள்ளனர். - என்றென்றும் பொய்க்காத  அடிவானத்து விடிவெள்ளி அவர்  . 

அது சுவாமி விவேகனந்தர் தன்  தாய் புவனேஸ்வரி அவர்களிடம் துறவுக்காய் அனுமதி கேட்டிருந்த காலம். ஒரு நாள் திடீரென நீ துறவு நெறிக்கு செல்லலாம் என அனுமதி தந்தார். சுவாமிஜி அவர்கட்கு ஆச்சர்யம். அதற்கான விளக்கத்தை அவரின் அம்மா தந்தார். ஒவ்வொரு நாளும் பழம் சாப்பிட, நறுக்க ஒரு கத்தியை அவரின் அம்மா எடுத்து வர சொல்வார். அன்று சுவாமிஜி கத்தியை தரும் பொழுது, கத்தியின் கூர் முனை அவரின் புறம் இருந்தது. அதை சுட்டி காட்டிய அவரின் அம்மா, உனது இதயம் எல்லா தியாகத்துக்கும் தயார் ஆகி விட்டது. இனி உன் முன் யார் வேண்டுமானாலும் பயம் இன்றி வந்து செல்லலாம் என சொன்னார்.
ஒவ்வொரு மனிதனும் இறைவனாக மாறலாம் என்பது அவர் கொடுத்த புது வெளிச்சம்.. அவர் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.. 
.