Sunday, January 25, 2009

பெற்றோரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்பெற்றோர் அன்பும், தொடர்ந்த ஊக்கமும், குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்கின்றன. பெற்றோர் தரும் ஆசிகளே, தம் புதல்வர்களை வாழ்நாள் முழுதும், மேன்மைக்கும் இட்டு செல்ல வல்லவை. இறையின் கருணையை விட பெற்றோரின் பங்களிப்பு குழந்தைகளை, சமூகத்தில் நல்லவண்ணம் வாழ வைக்க பேருதவி புரிகின்றன. அவர்களின் எதிர்பார்ப்பு எப்படிப்பட்டது? தம் குழந்தைகளை எப்படி உணர்கிறார்கள் என்பதை தேடியபொழுது..


நண்பனொருவன், தான் பணிசெய்த நிறுவனத்தில் இருந்து மிக சமீபத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டான். அதுவும் தற்காலிகமானதே. அவனும் நல்ல திறமையும், பெரும் நம்பிக்கையும் உடையவன். இந்த விஷயம், பெற்றோரிடம் சொல்ல மிகவும் சங்கடப்பட்டான். தான் சொல்வதை பெற்றோர் சரியான கோணத்தில் எடுத்துக்கொள்வார்களா?, தன்னை சரிவர புரிந்து கொள்வார்களா என பெரிய கேள்விகள் அவனுள். முக்கியமாக தான் தனது பெற்றோர் முன் கூனி குறுகி நிற்க வேண்டும்; அவர்களின் பெரும் பேச்சுக்கு ஆளாக வேண்டும் எனும் பெரும் கவலை. பிறிதொரு நாளில், அந்த செய்தியும் பெற்றோர் காதுகளுக்கு எட்டியது.

இந்த நிலைக்கு யார் காரணம். பிள்ளைகளை தம்மிடம், பிரச்சனையை பகிர்ந்து கொள்ள முடியாத நிலையை உருவாக்கியது பெற்றோர் தவறா; அல்லது பெற்றோர் தவறாக புரிந்து கொள்வர் என தன்னை தானே தடுத்துக்கொண்ட புதல்வனின் தவறா. எந்த சுவர் இருவரையும் பிரிக்கிறது. பிரச்சனைகள் முளைவிடும் பொழுதெல்லாம், பெற்றோர் அல்லவா ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.

பெற்றோர் இன்னும் தன் குழந்தை வளரவில்லை, போதுமான திறமையை, இந்த உலகை எதிர்கொள்ளும் வல்லமை அடைய வில்லை என எண்ணுகிறார்களா? இந்த கேள்வி என்னுள் எழுகிறது. இது ஒரு சாதாரண நிகழ்வு. வேலை இழப்பும், வேலை திரும்ப பெறுவதும், தன்னை முன்பை விட மெருகேற்றி கொள்வதும் யதார்த்தமானவை. அதன் பொருட்டே, பெற்றோர் நல்ல கல்வியை தந்துள்ளனர். வாழ்நாள் முழுதும் பெற்றோர், பிள்ளைகளோடு ஓடி வர அவசியமில்லை. அவர்கள் தம் குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க முயல்கின்றனர்.

விழுவதும், விழுந்தபின், எழுந்து நடப்பதுமே, மனிதனின் அருங்குணம். நம்முள் எப்பொழுதும் ஒரு போராட்ட குணம் நிரம்பி உள்ளது. வேலை இழப்பு என்பது மிக நீண்ட வாழ்க்கை பயணத்தில் ஒரு திருப்பமே. இதே முற்றுபுள்ளி அல்ல.
மனிதன் வாழ்வது உண்ணும் உணவாலும், சுவாசிப்பதாலும் மட்டுமல்ல. தளராத நம்பிக்கை மட்டுமே மனிதனை முன்னெடுத்து செல்கிறது. எல்லா இரவுகளும் விடியவே செய்கின்றன. கோடை காலம் வந்தால் என்ன, வசந்த காலம் ஒரு நாள் வராமலா போய்விடும் என்ற தொடர் நம்பிக்கை மட்டும் மனிதனை அஞ்சாமல் போராட வைக்கிறது.

பெற்றோர், தம் குழந்தைகளின் தவறை சுட்டி காட்டுவதை மட்டுமே, தம் வேலையாய் கொள்ளலாகாது. ஆரோக்கிய விவாதத்திற்கு குழந்தை இட்டு செல்லப்பட வேண்டும். அந்த சூழலை, சரியாக அமைத்து கொடுப்பது பெற்றோரின் கடமையும், உரிமையும். தவறுகள் சுட்டி காட்டப்படும் வேலையில், அவையும் மிக மிக நாசுக்காக கையாளப்பட வேண்டும். இல்லையேல் பெரும் சுவர், பிள்ளைக்கும் பெற்றோர் நடுவிலும் அமைந்துவிடும்.

நிறைய நம்பிக்கையை எடுத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் நீங்கள் பக்க பலமாய் இருங்கள். நீங்கள் மட்டுமே அவர்கட்கு பலம் சேர்க்க முடியும். 'மு. மேத்தா' அவர்களின், 'கண்ணீர் பூக்கள்' தொகுப்பில் இருந்து ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..


"நம்பிக்கை நார்மட்டும்
நம்கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும் வந்து
ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்
கழுத்து மாலையாகவும் தானே
கட்டிக்கொள்ளும்"
நிஜம்தானே!
.
.

தளிர் விரல்களும், சிதறும் புன்னகையும்


சிறுவர்களோடு பழகுவதும், நேரம் செலவழிப்பதும், ஓர் இனிய அனுபவம். நெஞ்சம் நிறைய தித்திப்பை கொணர்பவை அந்த நிமிடங்கள். இயற்கையை உணர்வதும், குழந்தைகளோடு கைகோர்ப்பதும், நிசப்தத்தின் லயிப்பை உணர்த்தும் பொன் நிமிடங்கள். ஒற்றை புன்னகை, ஒற்றை மழலை வார்த்தை, அத்தனை துயரையும் விரட்ட வல்லவை. மருள் விழியும், மந்தகாச புன்னகையும், அவர்களின் இனிய சொத்து. தேடித் தேடி இணைக்கும், வார்த்தை சொல்லாடல், அவர்களின் பெரிய பொக்கிஷம். உலகிற்கு வரும் பொழுதே ஆயிரம் விசயங்களை, இறையின் தூதராய் கற்று தர வருகிறார்கள்.

சிறுவர்களின்
உலகு ஆச்சர்யம் நிரம்பியவை. ஒவ்வொரு நிகழ்வையும், உலகின் நகர்வையும், உற்று நோக்கும் வல்லமை குழந்தை மனதிற்கே உரியது. எல்லா கற்பனையும், அந்த உள்ளத்திற்கே உரித்தானவை. ஏன் அது எல்லைகள் கடந்ததும் கூட.. அவர்களின் ஒவ்வொரு செயலும் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்தவை.. எனது பார்வை கோணத்தில் ..

சில நாட்களுக்கு முன் ஒரு விருந்து நிகழ்வுக்கு சென்று இருந்தேன். விருந்தில், அனைவர்க்கும் வாழைப்பழம் கொடுத்து இருந்தனர். விருந்து முடிந்த தருவாயில், அனைவரும் தத்தம் உணவு தட்டை சேகரித்து எடுத்து எடுத்து சென்றனர். அந்த குடும்பத்தோடு வந்திருந்த ஒரு சிறுவனும், மிக்க உற்சாகத்தோடு முன் சென்றான். நல்ல ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் நோக்கோடு, அவனை அழைத்த அவன் அம்மா, அவன் தட்டையும், எடுத்து வர சொனனார். சிறுவன் தயங்கிய படியே, தட்டை எடுத்து திரும்பி நடந்தான்.

நடந்த நிகழ்வை சரி பார்த்த அவன் அம்மா, வாழை பழ தோல் அப்படியே இருப்பது கண்டு, சிறுவனை திரும்ப அழைத்தார். சிறுவனும், அது என்னுடையது அல்ல; அக்காவின் வாழை பழம் என சொன்னான். அவன் சொன்னது நிஜம் தான். அவர்களின் உலகில், எது நேர்மையோ, அது இம்மி பிசகாமல், கடைபிடிக்க படுகிறது. ஒரு அர்த்தமுள்ள ஒழுங்கு அவர்களுடன், இயைந்துள்ளது.

சிறுவர்களின் பார்வை கோணம் பல நேரங்களில் நாம் உணராதவை. புலன்களனைத்தும் விழிப்பு நிலையிலேயே இருப்பதால், அவர்கட்கு நிறைய விஷயங்கள் சாத்தியப்படுகிறது. பேருந்தில் எங்களுடன் பயணித்த சிறுமி, ஜன்னலோர இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்தாள். அது , அவர்கட்கு உலகை அறியும் இடம். சிறிது நேரத்தில், வெளியே, சுட்டி காட்டிய அவள், நாய் பைக்கில் போகுது பார் என சொன்னாள். சிறுவர்கள் உலகிற்கு, பிராணிகள் எங்கிருந்தாலும், உடனடியாக அவர்களின் கவன வட்டத்துள் வந்துவிடுகின்றன.

அந்த சிறுமி, சுட்டி காட்டியது நிஜம் தான். குழந்தைகள் அமர்வது போல், நாயும், இரு சக்கர வாகன ஒட்டி முன் அமர்ந்து அழகாக பயணித்து சென்று கொண்டிருந்தது. நானும், சற்றே குறும்பாக, சிறுமியை நோக்கி, பார், நாய் குட்டி எவ்வளவு அழகாக வாகனம் ஒட்டுகிறது. மனிதன் பின்னால் உட்கார்ந்து செல்கிறான் என்றேன். அவளும், அது நிஜம் தானோ என நம்பி, பின்பு தெளிவு கண்டு இல்லையே என மலர்ந்து சிரித்தாள்.

இந்த வகையில், சிக்கன் சூப் கதைகள் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை. அவற்றுள் ஒன்றை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன். நாம் சில சில தருணங்களில் தோல்வியை தழுவுகிறோம். அறிவு உடைய அனைவராலும் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ள முடியும். கற்றல் நிகழ்வின் ஒரு பகுதியே நாம் அடையும் தோல்விகள். ஆனால் பெற்றோரான நாமும், ஆசிரியரும் இதை பல நேரங்களில் ஒத்துக்கொள்ள முடிவதில்லை, அல்லது ஒத்துக்கொள்ள மறுக்கிறோம். நம் செயல்களின் மூலமும், பேச்சின் மூலமும் அவர்கட்கு தோல்வியுறுவதை ஒரு அவமானகரமான செயலாக போதிக்கிறோம். எல்லா தருணத்திலும், பெரிய நிகழ்வையே குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டி அவர்களை, அதை அடைய தூண்டி வருகிறோம்.

அப்படி குழந்தைகள் நெருக்குதலுக்கு உட்படும் பொழுதெல்லாம் எனக்கு டானியின் நினைவு வரும்.

டானி - என்னிடம் மூன்றாவது வகுப்பு பயிலும் சிறுவன். அவன், சற்றே கூச்சமும், பதற்றமும் கொண்டவன். ஆனால் அவனது ஒவ்வொரு செயலும் மிக சரியாக இருக்கும், இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பான். அவனது, தோல்வியை பற்றிய பயமானது, அவனை பள்ளி வகுப்பறை விளையாட்டிலிருந்து ஒதுங்கியே இருக்க வைத்தது. அவன் ஒருபோதும் பள்ளியில் விடை அளித்ததில்லை. பொதுவாக, வீட்டு பாடம் தொடரும் தருவாயில், தொடர்ந்து என்னிடம் தான் எழுதிய வற்றை சரிபார்த்தபடி இருப்பான். அதனால், அவனால் சரியாக எதையும் செய்திட முடிவதில்லை. முக்கியமாக கணிதம் அவனுக்கு மிகுந்த ஆயாசம் தருவதாய் அமைந்தது.

நானும் முடிந்த வரையில், அவனிடம், தன்னம்பிக்கையை புகட்டிய படி இருந்தேன். நானும், தொடர்ந்து இறையிடம், நல்ல வழி காட்ட பிரார்த்தித்த படி இருந்தேன். ஆனால் அரையாண்டு வரையில் எதுவுமே பலிக்கவில்லை. அந்த தருணத்தில் தான் வகுப்புக்கு, மாணவ ஆசிரியை "மேரி அனே" நியமிக்கப்பட்டார். மாணவ ஆசிரியர் நியமிப்பு எப்பொழுதும் உள்ள நடைமுறை. அவர் குழந்தைகள்பால் பேரன்பு உடையவராய் இருந்தார். டானியும் அவர்கள்பால், பெருமதிப்பு கொண்டிருந்தான்.

குழந்தைகள் மீது நிறைய ப்ரியம் வைத்து இருந்த மேரி அனே கூட, இந்த சிறுவனால் பெரிதும் அதிர்ந்தார். சிறுவனின் பலவீனமே, தான் எங்கே தவறு செய்து விடுவோமோ என்கிற ஒற்றை பயம் மட்டுமே. அதுவே அவனை முடக்கிட போதுமானதாக இருந்தது.

ஒரு நாள் அது கணித வகுப்பு. கணக்குகள் அனைத்தும், கரும்பலகையில் போடப்பட்டு இருந்தது. டானி அப்போது, மிகுந்த சிரத்தையுடன் தனது நோட்டு புத்தகத்தில் எழுதி வந்தான். மிக மிக நேர்த்தியாக அவன் தன் வேலையில் முனைந்து இருந்தான். அப்பொழுது முதல் வரியை எழுதிட ஆரம்பித்து இருந்தான். அவனது சிரத்தைக்கான பெருமிதத்துடன், குழந்தைகளை 'மேரி அனே' வின் பார்வையில் விட்டு விட்டு நாள் வெளியில் சென்று வந்தேன்.

திரும்பி வந்த எனக்கு அதிர்ச்சி. டானி - பெருகும் கண்ணிரோடு அமர்ந்திருந்தான். அவன் மூன்றாவது வரியை தவற விட்டிருந்ததே அதற்கு காரணம். அவன் அருகே 'மேரி அனே' சென்ற பொழுது, அவன் இயலாமையை கட்டுப்படுத்த முடியவில்லை. 'மேரி அனே' வின் பார்வையில் மிகுந்த இயலாமை தொக்கி நின்றது.

அந்த நிலையில், ஆசிரியையின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. எங்களின் இருக்கைக்கு சென்று வந்த அவர் கைகளில், பென்சில் பெட்டி இருந்தது. டானியின் அருகே சென்ற அவர் அவனுடன் அமர்ந்தார். அப்போதும் டானி அழுதபடி அமர்ந்திருந்தான். அவன் முகத்தை நிமிர்த்திய ஆசிரியை, உன்னிடம் ஒன்றை காண்பிக்க போகிறேன் என்றார். சொன்ன அவர் அந்த பெட்டியில் இருந்து, ஒவ்வொரு பென்சிலாக எடுத்து மேசை மீது வைத்தார்.

இங்கே பார், இவை அனைத்தும், நானும் மற்றொரு ஆசிரியரும் பயன்படுத்தும் பென்சில்கள். அதன் தலை பகுதியில் அழிப்பனும் பொருத்தப்பட்டு இருந்தது. அதை சுட்டிக்காட்டிய ஆசிரியை, பார், நாங்கள் உபயோகித்த அழிப்பான் பகுதியை என்றார்; நிஜம் தான், எல்லா பென்சில்களின் அழிப்பானும் , நிறையவே தேய்ந்து இருந்தது.

நாங்களும் எழுதும் பொழுதும் நிறையவே, தவறுகள் செய்கிறோம். அதன் பொருட்டு நாங்கள் ஒருபோதும் வருத்த படுவதில்லை. மாறாக, அழித்து திருத்தவும் செய்கிறோம். நீ திரும்பவும் முயற்சி செய்திட கற்றுக்கொள் என்றார்.

நான் இப்பொழுது, உன் மேசையில் ஒரு பென்சிலை விட்டு செல்கிறேன். ஆசிரியர்களும், எவரும், தவறுகள் செய்வார்கள் என்பதை, இது உனக்கு நினைவூட்டியபடி உன்னிடம் இருக்கட்டும் என்றார். அவனை முத்தமிட்டபடி, அவனிடம் மேரி விடை பெற்றார். அவன் கண்களில் அன்று அன்பும், சந்தோஷமும் போட்டியிட்டன. அவனது முகத்தில், அந்த வருடத்தில், அன்று தான் நான் சந்தோசத்தையும், அமைதியையும் கண்டேன்.

அந்த பென்சில் அதன் பின் டானியின் விலை மதிப்பு அற்ற பொக்கிஷமாக அவனுடன் இருந்தது. இதன் பின், மேரியின் தொடர்ந்த நம்பிக்கையூட்டலும், தொடர் ஊக்குவிப்பும், அவனிடம் புது மாற்றத்தை கொணர்ந்தது. அவனுள்ளும் ஒரு புது தெளிவு பிறந்தது. தவறுகள் செய்தலும், பின் திருத்திக்கொள்வதும், தொடர் முயற்சியும் அவனை ஆட்கொண்டன.

[இந்த கதை என்னையே நான் திரும்பி பார்ப்பது போல் அமைந்து இருந்தது.]Sunday, January 11, 2009

தந்தையின் கரங்களை பற்றியபடிநாம் பெரியவர்களாக வளர்ந்து விட்ட பின் பெற்றோரை பெரும் சுமையாக கருதுகிறோமா என்பது இன்றுள்ள பெரிய கேள்வி. முதியோர் இல்லத்தில் இருந்த தாயும் அன்று அர்ச்சனை செய்தாளாம். அன்று தன் மகனுக்கு பிறந்த நாள் என்ற பூரிப்பு அவளுக்கு. எல்லா தருணங்களிலும் பெற்றோருக்கு தன் குழந்தைகள், குஞ்சு குளுவான்களே. ஆனால் பிள்ளைகள் எவ்வளவு தூரம் உணர்ந்துள்ளோம்? அதற்கான விடை இந்த சம்பவம் மூலம்...

ஒரு தந்தை, தன் மெத்த படித்த மகனுடன் அறையின் வரவேற்பறையில் அமர்ந்துள்ளார். அவர்களின் ஜன்னலோரம் ஒரு காகம் வந்தமர்கிறது. அந்த தருணத்தில், தந்தை, தன் மகனிடம் இது என்ன என கேட்டார். மகன் தந்தையிடம், இது, "காகம்" அப்பா என சொன்னான்.

சில நிமிடங்களுக்கு பின்னர், தந்தை மகனிடம் அதே கேள்வியை கேட்டார். பதிலுக்கு மகன், அப்பா, இப்பொழுது தான் உங்களிடம் சொன்னேன், "இது காகம்" என பதில் சொன்னான்.

சில கணங்களுக்கு பின்னர் தந்தை தன் மகனிடம், மூன்றாவது முறையாக அதே கேள்வியை கேட்டார். இந்த முறை மகன் மிகுந்த எரிச்சல் அடைந்தவனாய், "இது காகம் அப்பா! காகம்" என சொன்னான்.

இதன் பின்னரும் தந்தை நான்காவது முறையாக, இது என்ன? என மகனிடம் கேட்டார். இந்த முறை, மகன் மிகுந்த சப்தத்துடன், "இதே கேள்வியை எத்தனை முறை கேட்பீர்கள். நான் முன்பே சொன்னேன், இது காகம். உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா?" என சொன்னான்.

சிறிது நேரத்திற்கு பின், தன் அறைக்கு சென்று திரும்பிய தந்தை, தன் பழைய டயரி உடன் திரும்பி வந்தார். அந்த டயரி தன் மகன் பிறந்தது முதல், அவர் பயன்படுத்தி, காத்து, வந்துள்ளார். ஒரு பக்கத்தை புரட்டிய தந்தை, அதை மகனிடம் தந்து படிக்க சொன்னார். அதில் பின்வரும் சம்பவம் விவரிக்கப்பட்டு இருந்தது.

நான் என் மூன்று வயது மகனுடன், வீட்டின் வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தேன். அப்போது ஒரு காகம், சன்னலோரம் வந்து அமர்ந்தது. அப்போது என் மகன், மொத்தம் இருபத்து மூன்று முறை, இது என்ன என்ற கேள்வியை என்னிடம் கேட்டான். நானும், அவனிடம் சலிக்காமல், இது காகம் என சொல்லி வந்தேன். இதன் காரணமாய், நான் ஒருபோதும் எரிச்சல் அடையவில்லை. மாறாக என் மகன் மேல், நிறைய பிரியம் வளர்ந்தது. அவனது வெகுளி நிலையை நான் ரசிக்கவும் செய்தேன்.

மகனுக்கு இருபத்து மூன்று முறை அதே கேள்விக்கு பதில் சொன்னபோது, அவர் எரிச்சல் அடையவில்லை. ஆனால், மகன் நான்கு கேள்விக்கே, நிறைய கோபமும், வெறுப்பும் அடைகிறான்.

எனவே, உங்கள் பெற்றோர் வயதான படியால், அவர்களை வெறுத்து ஒதுக்குவதோ, சுமையாக எண்ணுவதோ கூடாது. அவர்களிடம் எல்லா தருணத்திலும் அன்பும் கருணையும் காட்டுங்கள். நிறைய பொறுமையும், பணிவையும் அவர்கட்கு அளியுங்கள். எப்பொழுதும் இதை உங்கள் கருத்தில் ஆழமாக பதித்து வைத்திருங்கள்.

உங்களுக்குள் இதை அனுதினமும் சப்தத்துடன் உச்சரியுங்கள். "நான் என் பெற்றோரை எல்லா தருணத்திலும் மகிழ்ச்சியுடன் காண ஆசை படுகிறேன். அவர்கள் நான் பிறந்த நாள் முதலாய், அக்கறையோடு காத்து வந்துள்ளனர். எல்லை இல்லாத, தன்னலம் அற்ற அன்பை எப்பொழுதும் என்மேல் சொரிந்து வந்துள்ளனர். அவர்கள், என்னை சமூகத்தில் நல்ல நிலைக்கு உயர்த்திட, எத்தனையோ குன்றுகளையும், பள்ளத்தாக்குகளையும், வெப்பத்தையும் குளிரையும் பொருட்படுத்தாது கடந்து வந்துள்ளனர்".

ஆகவே இறைவனிடம் இப்படி பிரார்த்தியுங்கள். "நான் என் பெற்றோருக்கு சிறப்பான முறையில் சேவை செய்வேன். என் அன்பான பெற்றோருடன், கனிவுடன் பேசுவேன். அவர்கள் எப்படி நடந்துகொண்டாலும் என் நற்சொல் மாறாது."

[ இந்த எழுத்துக்கள், மின்னஞ்சல் மூலம், என்னை வந்தடைந்தவை. நிறைய யோசிக்கவும், நிறைய நடைமுறைப்படுத்தவும் எனக்கு உதவியவை. ஆகவே, இவை என் வரையில் அர்த்தம் நிறைந்தவை. ]
.
.

உங்களை உணர - யோகா"விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர் கேட்டேன்!"

என்பது பாரதியின் மொழிகள். உயிர் இயக்கம் முழுதும் உடல் சார்ந்ததே! உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே! என்பது திருமூலர் வாக்கு. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால், மனிதனுக்கு அதை விட வேறு செல்வம் தேவை இல்லை. உடல் எந்த பகுதியில் பிரச்சனை என்றாலும், மனிதனின் ஒட்டுமொத்த செயல் திறனும் கேள்விக்கு உள்ளாகிறது. தனிச்சிறப்பு பெற்ற இந்த உடலை சரிவர பேனுகிறோமா? உலகின் அத்தனை அறிவியல் மேதைகளும் இணைந்தாலும் இந்த அற்புத உடல் போல் ஒன்றை வடிவமைத்திட முடியாது. உடலை சரிவர பராமரித்திட, உயிர் உன்னதம் பெற்றிட அரிய வரப்பிரசாதம் நம்முன் இருக்கும் யோகா. உடல் வலுப்பெற, இந்த கலை போதும்.

ஜீவாத்மாவை, பரமாத்மாவுடன் இணைக்கும் இனிய செயலாய் யோகா அணுகப்படுகிறது. பதஞ்சலி முனிவரால் யோக சூத்திரங்கள் வகுக்கப்பட்டு அவை நடைமுறைக்கு கொணரப்பட்டன.

யோகா ஒரு தொடர் நிகழ்வாக பின்பற்றப்பட வேண்டும். பிற கலைகள் போல் கற்று வைத்துக்கொள்வதால் யோகாவில் ஒரு பயனும் இல்லை. தொடந்த பயிற்சியாக யோகா கடைபிடிக்கப்பட வேண்டும். அப்படி யோகா பயிற்சி செய்திட, உடலும் மனமும் ஒருசேர புத்துணர்ச்சி அடையும். நம்முள் கிடைக்கும் புத்துணர்ச்சி உணர கூடியதாய் இருக்கும். மனமும் உடலும் , உடலின் ஒவ்வொரு செல்லும் நம் ஆரோக்கியத்தை உணரும்.

தூக்கமின்மை, உடல் பிரச்சனைகள், இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பதற்றம், மன அழுத்தம் இவற்றிற்கு யோகா ஓர் அரிய வரப்பிரசாதம். யோகா கற்றலும், தொடர்ந்த பயிற்சியும் ஒரு இனிய அனுபவம். தொடர்ந்த யோகா நம்முள் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கவல்லது. இத்துடன், உணவுப்பழக்க வழக்கம் சிறப்புற நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நல்லதொரு குருவிடம், யோகா கற்றல் நலமானது. யோகா செய்திட அதிகாலை பொழுது பரிந்துரைக்கப்படுகிறது. அசைவ உணவுகள், முற்றிலும் தவிர்க்கப்படல் அவசியமாகிறது. மிளகாய், மைதா பொருட்கள் தவிர்க்கப்படல் அவசியம். யோகா பயிற்சிக்கு தளர்வான உடை பரிந்துரை செய்யப்படுகிறது.

யோகாவில் கற்று தரப்படும், பிரணாயாமம் பயிற்சி நம் சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது. நம் உடலை இயக்கும் பெரிய சக்தியான ஆக்சிஜன், தடையின்றி கிடைத்திட உதவுகிறது. அடுத்த நிகழ்வு, சீரான ரத்த ஓட்டம். தொடர் பயிற்சிகள் நல்ல ரத்த ஓட்டத்திற்கு உத்திரவாதம் தருகின்றன. இதனால் இதயமும், நுரை ஈரலும், வலுவடைகின்றன. சரியான நேரத்திற்கு உறங்குதல், சரியான நேரத்திற்கு விழிப்பு, சரியான நேரத்திற்கு உணவு உண்ணுவது அனா வாழ்வு இங்கு திட்டமிடப்படுகிறது. பிற கலைகள் போன்று, இங்கு பெரும் தொகை வசூலிக்கப்பட்டு, கற்று தரப்படுவதில்லை. உன்னதமான ஆசிரியர்கள், எந்த எதிர்பார்ப்பும் அற்ற அறிய உள்ளங்கள் இந்த கற்பித்தலில் தங்களை தோய்த்து உள்ளனர். குரு, மாணவர் பக்தி முதல், வாழ்விற்கான நல்ல பழக்கங்கள் கற்று தருதல் வரை, அவர்களின் ஈடுபாடு அற்புதமானது. பிராணாயாமம் துவங்கி, சூரிய நமஸ்காரம் வரையான பயிற்சி உங்களை பூரண ஆரோக்கியத்திற்கு இட்டு செல்ல வல்லவை.

நம் முன் தடையாய் இருப்பது ஒரே கேள்வி. ஒரே பதில் . இதற்க்கு எல்லாம் நேரம் எங்கே உள்ளது. எனக்கும் யோகா செய்திட ஆசை தான்; ஆனால் நேரம் வேண்டுமே! என்பதே நம் பெரும்பாலோர் பதில். என் யோகா ஆசிரியர் கேள்வி கேட்டு பதிலையும் சொன்னார். அந்த பதில் எல்லா தருணத்திலும், யோசிக்க வைத்தது. அவசர நவீன உலகில், இதே பதற்றத்துடன், ஓடிக்கொண்டு இருந்தால், உங்களுக்கு ஐம்பது வயதில் இரத்த கொதிப்போ, இருதய பாதிப்போ, நீரிழிவு நோயோ ஆட்கொண்டு விடும். அதன் பிறகு உங்களின் வாழ்வு முடங்கிப்போகும் அபாயம் அதிகம். அப்படி பிந்தைய நாட்களில் அவதியுறுவதை காட்டிலும் தற்போது நேரம் ஒதுக்கலாமே!

ஒரு நாளின், இருபத்து நாலு மணி நேரத்தில், உங்களின் முதலீடு வெறும் 45- நிமிடங்களே. அதன் பின் நீங்கள், அன்று பிறந்தது போல் உணர்வீர்கள். அத்தனை மகிழ்ச்சியும், உவகையையும், உங்கள் உடம்பு வெளிப்படுத்தும். அந்த நாளுக்கான அத்தனை உற்சாகத்தையும், அந்த மணித்துளிகள் பெற்று தர வல்லவை. நம் உடலின் ஆரோக்கியம் , நம்முடைய கட்டுப்பாட்டில். ராமானுஜர் பாமரர் அனைவரும் முக்தியுற அனைவர்க்கும் நாராயண மந்திரம் சொன்னது போல், மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்திட யோகா துணை புரியும்.

உடற்பயிற்சி கூடம் சென்று, பளு தூக்குதல் போன்றவற்றை செய்யும் பொழுது உங்கள் சக்தி செலவழிக்கப்படும். ஆனால் யோகாவில் மட்டும், உங்கள் சக்தி முழுக்க உங்கள் உடலில் சேர்ந்துகொள்ளும்.

புட்டபர்த்தியில் உள்ள ஒயிட் பீல்ட் மருத்துவமனை முதல், யோகா நிலையங்கள் வரை ஒரு நல்ல வாசகம் பளிச்சிடும். "Curry, Worry and hurry will spoil your health. " இது முற்றிலும் நிதர்சனமே! ஓடும் ஓட்டத்தில், ஆரோக்கியத்தையும் கவனிப்போமே!