Sunday, December 28, 2008

பெற்றோர் - விலைமதிக்க முடியாத செல்வங்களேஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாயினும் பத்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுடனும், அறுபதை தாண்டிய முதியவர்களுடனும் செலவிட்டு பாருங்கள். அந்த நாள் சிறப்பாய் அமையும் என்கிறார்கள். அவர்களிடமே நமக்கு கற்பதற்கு ஆயிரம் விஷயம் இருக்கும். ஆனால் நாம் தயங்கி அந்த நல்ல சந்தர்பங்களை நழுவ விடுகிறோம்.

பின்வரும் சம்பவம் மனித உறவுகளுக்கான கருத்தரங்கில், இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பணிபுரியும் வெங்கடேஷ் பாலசுப்ரமணியம் விவரித்தது. இது தன் பெற்றோருக்கு முதல் விமான டிக்கெட் வாங்கி வந்த நிகழ்வும், அதன் பின் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சி பற்றியது. இனிஅவருடைய சொந்த உணர்வுகளில், ...

அன்று என் பெற்றோர் சொந்த ஊருக்கு புறப்பட தயார் ஆனார்கள். அவர்கட்கான டிக்கெட்டை அந்த முறை JetAirways மூலம் பதிவு செய்தேன். அதற்கு முன் எனது தந்தை விமானத்தில் பயணித்தது இல்லை. டிக்கெட்டை அவர் கைகளில் கொடுத்த பொழுது முற்றிலும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. அந்த நிமிடமே குதூகலம் அவர் முகத்தில் அப்பிகொண்டது. பயணிக்கும் நொடிக்கான காத்திருப்பு, ஒரு பள்ளி சிறுவன் போல் அன்று அவர் தன்னை தயார் படுத்திக்கொண்டார்.

நாங்கள் அனைவரும் அன்று அவரை வழியனுப்ப அவருடன் விமான நிலையம் சென்று இருந்தோம். சுமைகளை எடுத்து செல்லும் டிராலி முதல், விமான நிலைய சோதனைகள், விமானத்தில் ஜன்னலோர சீட் என பரபரப்போடும், மகிழ்ச்சியோடும் இருந்தார். அவர் முற்றிலும் இந்த பயணத்தை அனுபவித்து செல்வது போல் இருந்தது, அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும். அவரது மகிழ்ச்சியை, இந்த அனுபவத்தை கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவர் விமான சோதனைக்கு செல்லும் முன் என்னை நோக்கி வந்தார். அப்படி வந்தவர் கண்களில் நன்றி பெருக்கிற்கான ஈரம் தெரிந்தது. நெகிழ்ச்சியோடு என்னிடம் தன் நன்றியை தெரிவித்தார். அந்த தருணத்தில் என் தந்தை மிக மிக உணர்சிவயப்பட்டவராய் காணப்பெற்றார். நான் ஒன்றும் பெரிதாக செய்துவிடவில்லை. அது அவருக்கு மிக பெரியதாக தோன்றியுள்ளது. நான் அவரிடம் நன்றி சொல்ல இதில் எதுவும் இல்லை என சொன்னேன்.

இந்த நிதழ்ச்சியுடன் பின்னர் என் வாழ்வை பற்றி நான் சிந்தித்து பார்த்தேன். நாம் குழந்தையாய் இருந்த தருணங்களில் நம் பெற்றோர் நம் எத்தனையோ கனவுகளை நனவாக்கி உள்ளனர். அவர்களின் அப்போதைய பொருளாதார நிலையை உணராமல், நாம் கிரிக்கெட் மட்டைகள், துணிமணிகள், பொம்மைகள் என அவ்வப்போது நச்சரித்து உள்ளோம். அவர்களின் இயலாமையிலும், நம்முடைய எல்லா தேவைகளையும், பூர்த்திசெய்திட முன்வந்துள்ளனர். நாம் எப்போதாவது, நம் பொருட்டு அவர்களின் தியாகத்தை எண்ணி உள்ளோமா? நம் விருப்பங்களுக்கு அவர்கள் எவ்வளவோ இழந்துள்ளனர்.

நாம் இதுவரை நம்பொருட்டு அவர்கள் செய்தவற்றிற்கு நன்றி செய்துள்ளோமா? நம் மகிழ்ச்சியை நன்றியை சொல்லி உள்ளோமா? அதே போல், இன்று நம் குழந்தைகளுக்கு என்று வரும் பொழுது, நன்கொடையை பொருட்படுத்தாது நல்ல பள்ளியை தேர்ந்தெடுக்கிறோம். நம் குழந்தைகளுக்கு சிறப்பான பொம்மைகள், சிறப்பான தீம் பார்க்குகள் என பார்த்து பார்த்து செய்கிறோம்.
ஆனால் நாம் ஒன்றை முற்றிலும் மறந்து விட்டோம். நம் பெற்றோர் நம் மகிழ்ச்சிக்காக செய்த தியாகத்தை மறந்துவிட்டோம்.

ஆகவே நம்முடைய கடமை, அவர்களின் சிறிய சிறிய கனவுகளை நனவாக்க முயல்வதே. அவர்கள் இளமையில் பெற முடியாததை, அந்த சந்தோஷ தருணங்களை மீட்டு தருவதே. இவற்றை நாம் அவர்கட்கு அளித்தால் அவர்கள் வாழ்வு நிச்சயம் முழுமை அடையும்.

நிறைய தருணங்களில், என் பெற்றோர் சில கேள்விகளை கேட்பார்கள். அந்த தருணத்தில், பொறுமை இன்றி நான் பதில் சொல்லி உள்ளேன். ஆனால் அதற்கு மாறாக , இன்று என் மகள் கேட்கும் கேள்விகளுக்கு நிறைய மரியாதையோடு பதில் சொல்லிவருகிறேன். நான் தற்போது உணர்கிறேன். என் பெற்றோர் அடைந்த வருத்தத்தை, இன்று என்னால் உணர முடிகிறது.

முதியவர்கள் அனைவரும், தம் இரண்டாவது குழந்தை பருவத்தில் உள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும். இதுவும் நம் குழந்தைகளை போற்றி பாதுகாப்பது போன்றதே. அதே அக்கறையும், அதே சிரத்தையும், நம்முடைய முதிர்ந்த பெற்றோருக்கு அளிக்கப்பட வேண்டும்.

அவர்கள் பொருட்டு நேரம் ஒதுக்குவதும், பணிவோடு பதில் சொல்வதும், அவர்கட்கு மிக மிக அவசியம். அவர்களின் கண்ணை பார்த்து, மிக்க மகிழ்ச்சி வெளிப்பட பதில் சொல்ல வேண்டும் என்பதை உணர்கிறேன். பத்திரிக்கை படித்தவாறு ஒற்றை மொழியில் பதில் சொல்வதை தவிர்பேன். என்பொருட்டு அவர் நன்றி சொல்வதை விட்டு, இத்தனை காலம் அவரின் சின்ன சந்தோசத்தை நிறைவேற்றிட முன்வராமல் இருந்ததற்காக வருத்தபடுகிறேன். இன்று முதல் அவர்களின் சந்தோசத்திற்காக என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன்.

அவர்கள் முதியவர்கள் என்பதற்காக அவர்களின் எல்லா ஆசைகளையும், இனியும் பேர குழந்தைகளை எண்ணி விட்டுவிட வேண்டியதில்லை. அவர்கட்கும் நியாயமான ஆசைகள் நெஞ்சத்தில் உண்டு.

அக்கறையோடு பெற்றோரை காத்திடுங்கள். உங்கள் பெற்றோர் விலைமதிக்க முடியாதவர்கள்!

தொடரும் குதூகலம் - டாம் மற்றும் ஜெர்ரி


கண்கள் களைப்படைந்த பொழுதுகளிலும், மனம் உற்சாகம் இழந்து, சிக்கல்களில் நீந்துகிற நாட்களிலும், அந்த நிமிடங்களில் குதுகலத்தை மீட்டு தருவது எளிதல்ல. என் வரையில் அந்த பணியை சிறப்புற செய்பவை "TOM" பூனையும் "JERRY" எலியும். இவை எந்த மனிதனையும் குதுகலிக்க வல்லவை. இதற்கு பெரியவர் சிறியவர் என்ற பாகுபாடில்லை.

குழந்தையாய் இருக்கிற நாட்களில், நாம் நம்மோடு மகிழ்ச்சியையும் மற்றொரு ஆடையாய் அணிந்திருப்போம். துள்ளும் நடையும் , வெடி சிரிப்புமாய், கூத்தும் கும்மாளமும் நம்மோடு இயைந்திருக்கும். வளர்கிற பொழுதுகளில் அவை ஒவ்வொன்றாய் நம்மிடம் சொல்லிக்கொள்ளாமல் விடை பெற்றுவிட்டன. நம் முகத்தில் சிரிப்பு அமர்ந்திருக்கும் தருணங்கள் மிக மிக அரிதாகிவிட்டன.

இழந்த சிரிப்பை இந்த எலி பூனை கூட்டணி நிச்சயம் மீட்டு எடுக்கும் வல்லமை கொண்டவை . மனிதனுக்குள் இருக்கும் சண்டைகளை, மனிதனுக்குள் இருக்கும் கோபத்தை, மனிதனுக்குள் இருக்கும் கபடத்தை விலங்குகளுக்கு பொருத்தி பார்த்துள்ளோம். இது மொத்தத்தில் நம்மை நாமே உற்று நோக்குவதே. ஆனால் அது இவ்வளவு வேடிக்கையாய் இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.

பூனையை சோதனை குழாயில் நிரப்பினால் எப்படி இருக்கும்? பூனை, எலியை கொன்றிட ரயில் ஓட்டினால் எப்படி இருக்கும்? பூனை பேயை கண்டு பயந்தால் எப்படி இருக்கும்? என்று முடிவில்லாத கேள்விகளுக்கு விடைதர முயன்று இருக்கிறார்கள். பூனையை குதூகல உலகத்துக்கு அழைத்து வந்தால் இவ்வளவு விஷயங்கள் நடைபெறும் என்பது அபூர்வ கற்பனையே. எல்லா தருணங்களிலும் அததற்கான உடை சரியாக பொருந்துகிறது.

அனைத்து தருணங்களிலும், எலி செய்கிற சேஷ்டையும், அதனால் பூனை கோபம் கொள்வதும் எலியை துரத்தி பூனை செல்வதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால் இதை இவ்வளவு கதைகளாய், தொடர்ந்து எடுத்து செல்ல முடியுமா? வற்றாத கற்பனைக்கு நிச்சயம் சவாலானதே. ஆனால் எந்த தொடரை பார்த்தாலும் , சலிப்பு தோன்றுவதில்லை. அற்புதமான காலத்தை விஞ்சி நிற்கும் இனிய படைப்பு.

டாம் பூனைக்கும், ஜெர்ரி எலிக்கும் நடக்கும் முடிவில்லாத யுத்தம் இந்த தொடர், ஹன்னா மற்றும் பார்பரா எனும் இருவரால் மொத்தம் நூற்றி பதினாலு 'டாம் அண்ட் ஜெர்ரி' தொடர்கள் எழுதப்பட்டு இயக்கப்பட்டன. இது ஏழு முறை அகாடமி விருது பெற்ற சிறப்புடையது. இதற்கு முன் இதே கார்டூன் அனிமேஷன் பிரிவில் 'வால்ட் டிஸ்னி' யின் 'சில்லி சிம்போனி' பெற்றுள்ளது.

இந்த தொடரின், கதை மட்டும் நாயகன் இல்லை. கதை முழுதும் பின் தொடரும் பின்னணி இசை கதைக்கு ஊயிரோட்டம் கொடுக்கிறது. அபாய கட்டங்கள், குதூகல கட்டங்கள் என இசை அற்புதமாக பொருந்துகிறது. இசையை நீக்கி விட்டு பார்த்தால் அங்கே ஒன்றுமில்லை. கதையோடு இசையும் கைகோர்த்து மாபெரும் படைப்பை தந்திருக்கிறது.

Thursday, December 25, 2008

இல. செ. க. வின் கிராமத்து ஓவியங்கள்


தன்னம்பிக்கை இதழின் நிறுவனரும், வளரும் வேளான்மை இதழின் நிறுவன ஆசிரியருமான இல. செ. க. வின் கிராமத்து ஓவியங்கள் நூலை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. இந்த நூல் எண்பதுகளின் துவக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த நூல் பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுரிகளில் துணை நூலாகவும் அமைந்து இருந்த சிறப்புடையது.

ராசிபுரத்திற்கு அருகே பிறந்தவர் இல. செ. கந்தசாமி அவர்கள். பள்ளி ஆசிரியராக துவங்கியவர், பின் நாளில் கோவை வேளாண் பல்கலை துறை தலைவராக பணியாற்றினார். தமிழில் முதன் முயற்சியாக மனித நம்பிக்கையை மீட்டு எடுக்கும் நோக்கில் தன்னம்பிக்கை நூல் உதயமானது.

கிராமத்து ஓவியங்கள் நூலிற்கு வல்லிக்கண்ணன் அவர்கள் முன்னுரை வரைந்துள்ளார். இந்த நூல் நடை சற்றே வித்தியாசப்படுகிறது. இந்த நூலின் கதை மாந்தர்கள் மூலமாக அவர்களின் எண்ணத்தில் கதையை நகர்த்தி சென்றுள்ளார். நூலின் முன்னுரையில், ஆசிரியர், தன் நோக்கத்தை தெரிவிக்கிறார். ஒவ்வொருவரின் காலமும் விலைமதிக்க முடியாதது. என்னுடைய நோக்கம் யாருடைய நேரத்தையும் வீணாக்குவது அல்ல என சொல்லி துவங்குகிறார்.

அவர் படம் பிடிக்கும் கிராமம் இன்றைய நாட்களுக்கும் அப்படியே பொருந்துகிறது. சமூக நாவலாக இந்த நூலை தந்துள்ளார் ஆசிரியர். தனது பாத்திரங்கள் மூலம் நல்லதொரு கிராமம் எப்படி அமைய வேண்டும் என்பதை சொல்லி செல்கிறார். இதில் இடம்பெறும் மாந்தர்கள் அனைவரும் சமகால வாழ்வில் நாம் சந்திக்கும் மக்களே. ஊர் தோறும் தொடரும் குடிப்பழக்கம் என்றும் சக மனிதனின் அடையாளமாகி விட்டது. கிராம பொருளாதாரத்தின் மிகப்பெரும் பங்கு இன்றும் மது அருந்தும் இடத்தில் தான் செலவிடப்படுகிறது. அவர் சுட்டி செல்லும் திரை படங்கள் போன்றே இன்றும் சமூக அக்கறை அற்றவை மலிந்துவிட்டன. சுய லாபத்திற்காக அரசியல் செய்வது நாள்தொறும் பெருகிவருகிறது.

ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்றதாய், தன் தேவைகளை தானே நிறைவேற்றும் வல்லமை கொண்டதாய் அமைய வேண்டும் என வலியுறுத்துகிறார். மனிதரிடம் உள்ள பிற்போக்குத்தனம், ஏற்ற தாழ்வுகள், இளைய சமுதாயத்திடம் என்றும் உள்ள தடுமாற்றம் என மனித வாழ்விற்கு தேவையான கொள்கையோடு நாவல் நகர்கிறது. வாழ்விற்கு நல்ல சிந்தையை அறிமுகப்படுத்தும் முனைப்பு ஆசிரியரின் எளிய நடையில் பளிச்சிடுகிறது.

எழுத்துக்கள் மனித வாழ்விற்கு எந்நாளும் உரம் இடுகின்றன. அந்த வகையில் வந்த, வாழ்வின் உன்னதத்தை அறிமுகம் செய்யும் அரிய நூல் இது.

புத்தகத்தில் இடம்பெறும் சில சிந்தனைகள்:

  • அரும்புவதற்கு என்றும், மலர்வதற்கு என்றும், காய்ப்பதற்கு என்றும், கனிவதற்கு என்றும் ஒரு காலம் இருக்கின்றதல்லவா? சிலவற்றை அடைவதற்கு அந்த காலம் வரும் வரை பொறுத்திருக்கவும் வேண்டும்.
  • புகழ்ச்சி மிகப்பெரிய மயக்கத்தை உண்டாக்கிவிடும். அறிவை வேலை செய்ய விடாமல் மழுங்க செய்துவிடும். புகழ்ச்சிக்கு அடிமையாகி தங்களை இழந்தவர்கள் மிகப்பலர்.
  • வாழ்கையில் வருகின்ற துன்பமும், தோல்வியும் தான் மனிதனை முழுமையான மனிதனாக்குகிறது.
  • வாழ்கையில் அழுத்தமான குறிக்கோள் இருந்தால் மனிதன் அதை நோக்கியே சென்று கொண்டிருப்பான். அதனால் தவறுகள் அதிகம் நிகழாது.
  • சிதைந்த கனவின் துணுக்குகளை தழுவிக்கொண்டு சோர்ந்து கிடைப்பதற்காக மனிதன் பிறக்கவில்லை. வெறுமே 'கடந்த காலம்' என்ற இரும்பு சங்கிலி கொண்டு மனதை கட்டி வைக்க முடியாது. ' வருங்காலம் ' என்ற கருட சிறகு மனதுக்கு பெருவரமாக கிடைத்திருக்கிறது. கனவு ஒன்று காண்பது; அதை மலர்விப்பது; நடைமுறையில் அதை உண்மைப்படுத்துவது; அப்படி படுகிற பாட்டில் ஆனந்தம் கொள்ளை கொள்வது. இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக அந்த கனவு சிதைந்து அழிந்தாலும், சிறிதும் சோர்வுறாமல் அதன் துண்டுகளின்களின் மீது, ரத்தம் தோய்ந்த காலால் நடந்து வேறொரு கனவை நோக்கி ஓடுவது. இது தான் மனித மனப்பண்பு - எனும் காண்டேகரின் சிந்தனை.
பதிப்பு: விஜயா பதிப்பகம் - கோவை