Thursday, November 17, 2011

லா. ச. ராமாமிர்தம் அவர்களின், சிந்தா நதி
அமிர்தத்தை சுவைத்து பார்த்ததுண்டா நீங்கள்? லா. ச. ரா வின் சிந்தாநதி, தாக்ஷாயணி, த்வனி, பாற்கடல், அபிதா, காயத்ரி என அவர் எழுத்துக்களை படித்து பாருங்கள்; புரியும்!

தாக்ஷாயணி யில் அவள் அவனிடம் சொல்கிறாள்... "எப்படியும் நீங்கள் ஆச்சர்யமான நிமிடங்கள் படைத்தவர்!" - அது லா. ச.ரா-வுக்கும் பொருந்தும்.
நீ ஒரு காகிதத்தில், உன் எழுத்துத் திறமையின் முழுச் சக்திப் பிரயோகத்துடன் , "நெருப்பு" என்று எழுதினால், அந்த காகிதத்தில், பொசுங்கின வாடை வர வேண்டும் என்பார் லா. ச. ரா.
--- லா. ச. ரா. பற்றி நடிகர் சிவக்குமார்.

"நான் பழுத்திருந்த போது
பழம் கடிக்க வராமல்
உளுத்து விட்டதும்
புழு பொறுக்க
ஓடி வரும்
மனம் கொத்தி
நீ!"

-இதை நான் எழுதி இருபத்து ஐந்து வருடங்கள் கூட இருக்கலாம். கவிதைக்கு அபிதா என்ற தலைப்பு கொடுத்திருந்தேன். லா ச ரா- வின் தலைப்பு. இதழ்கள், பச்சைக் கனவு, ஜனனி என்றும், புத்ர, சிந்தா நதி, பாற்கடல் என்றும் பரந்து அலையடித்துக் கிடக்கின்ற லா.ச.ரா வின் இன்னொரு தெறி அபிதா. லா ச ராவின் ஞாபகத்துடன் அபிதாவை படிக்க வேண்டும் போல இருந்தது....

--- அகம் புறம் தொகுப்பினில் இருந்து, வண்ணதாசன்.


தமிழ் மொழிக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில், மிக முக்கியமானவர் லா. ச.ரா. நனவோடை உத்தியை தமிழுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் அவர் தான்.

எப்போதும் இருக்கிற பழக்கம் போல், அன்றும் ஒரு புத்தகத்தை விரித்து, பேருந்து பயணத்தில் வாசித்தபடி பயணித்தேன். எனக்கு சற்று தூரத்தில் இருந்தவர் என்னை நோக்கி ஏதோ சொன்னார். எனக்கு எதுவும் விளங்கவில்லை. என் கையில் இருந்த புத்தகம், லா. ச. ரா வின் சிந்தா நதி. சக பயணி இறங்கும் போது என்னிடம் சொன்னார். எப்படி லா. ச. ரா. புத்தகத்தை படிக்கிறீர்கள்?. ஒன்றுமே புரியாதே!.. என்றார். அவருக்கு நானும் எனக்கு நல்லா புரியுதுங்க என சொல்லி பேருந்தில் இருந்து இறங்கினேன்.


சிந்தா நதி, லா. ச. ரா.வுக்கு சாகித்ய அகடமியை தேடி தந்த புத்தகம். அவரது நினைவலைகளின் தொகுப்பு. அவரது பாற்கடல், அவரின் இளமை நினைவுகளின் தொகுப்பு. மிகப்பெரியசக்தி உபாசகர் - லா. ச. ரா. அவரின் புத்தகம் எங்கும் அது அவ்வப்பொழுது கொப்பளிக்கிறது.

தன் எழுத்துக்களை, மற்றவர்கள் புரியவில்லை என சொல்வதை கூட, எள்ளல் தொனியோடு சொல்லி செல்கின்றார். தினமணி கதிரில் வார வாரம் வந்த தொடர் கட்டுரைகள் இவை. தன் பயணத்தில் நதி சந்திக்கிற படித்துறை, அதில் முங்கி குளிக்கிற மனிதர்கள் போல், வாழ்வில் நடந்த நிகழ்வுகளை சொல்லி செல்கிறார்.

தான் பங்கெடுத்த மணிக்கொடி எழுத்தாளர் கூட்டம், வாகினி ஸ்டூடியோவில் தட்டச்சு பணி செய்பவர்களாக வாழ்ந்த நாட்கள், தன் வங்கி உத்தியோக நிகழ்வுகள், தந்தையிடம் பொய் சொன்னது, அவரிடம் கற்ற பாடங்கள், ஆசையாய் வளர்த்த நாயின் மரணம், தான் சந்தித்த
பகவான் தாஸ் என அவரின் வாழ்க்கை பயணம் ஒரு நெகிழ்ச்சி பக்கம் ..தனது கதையை, எங்கிருந்து சுட்டாய் என ஒரு பத்திரிகை ஆசிரியர் அவ நம்பிக்கையோடு சொன்னதை கூட சொல்லி செல்கிறார்.


யுக மணம், இந்திரா, யாகம், கோவர்த்தன், FIDO - இவை நான் ரசித்தபக்கங்கள்(நினைவுகள்) ...

நான் விந்தியா
நான் மேரு
நான் வான்
நான் நித்தியன்....


நீ காலத்தை போக்க இங்கு வரவில்லை.
நீ காலத்தோடு போகவும் இங்கு வரவில்லை.
நீ காலத்தை நிறுத்த வந்திருக்கிறாய்.
ஒரு கணத்தில் ஒரு யுகம் பண்ண வந்திருக்கிறாய்
நீ நித்யன்...