Sunday, April 7, 2013

வண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று !
வண்ணதாசன் அவர்களின் இன்று... ஒன்று... நன்று ! பகுதியை விகடன் அன்பளிப்பாய் கேட்க நேர்ந்தது. நிச்சயம் தித்திப்பான ஆச்சர்ய அனுபவம்.. இது நிச்சயம் மிக மிக உபயோகமான பங்களிப்பு விகடன் மூலம்.. நிறைய எழுத்தாளர்களின் எழுத்தை வாசித்த நமக்கு, அவர்களின் குரலை கேட்கும் பாக்கியம் கிட்டுவதில்லை. சமீபத்தில் ஒரு ப்ரொவ்சிங் சென்டரில் ஆச்சர்யமாக ஒரு சொற்பொழிவை கேட்க நேர்ந்தது. அங்கு வேலைக்கு இருக்கும் ஒருவர் சொற்பொழிவை கேட்டு கொண்டு இருந்தார்.

நானும் அவரை அணுகி, இது யாருடைய பேச்சு என கேட்டேன்.. அவர் இது கண்ணதாசன் குரலுங்க... நீங்க கேட்டதில்லையா என்றார். அட! நான்  தவழ்கிற வயதிலேயே ,  விடைபெற்ற கண்ணதாசனின்  எழுத்து, என்னை அடைந்ததை போல் அவரின் குரல் என்னை அடைந்ததில்லை.. அந்த புண்ணியத்தை இந்த முறை விகடன் கட்டி கொண்டது.. இந்த ஒலி வடிவம் வந்து ஏறக்குறைய ஆறு மாதம் இருக்கும்... இருந்தாலும் வண்ணதாசனின் பேச்சை, என் அப்போதைய பரவசத்தை வார்த்தைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி.  மழையை, உங்கள் குழந்தையை பார்க்க சொல்லுங்கள் என்கிறார்..

ஒவ்வொரு நாளும் அவரின் பதியப்பட்ட குரல் ஒலிபரப்பாகும்.. நான் கேட்டதும் பதிந்ததும் ஒரு நல்ல நாளின், காலையில்.... எழுத்தாளர் மாலன் ஒரு முறை எழுதியது போல 'ஓடுகின்ற கங்கையை ஒரு செம்புக்குள் எடுத்து வந்த திருப்தி!' உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்த பதிவு...  இனி அவரின் காந்தமாய் ஈர்க்கும் வார்த்தைகள்  ...

சமீப காலமாக எங்கள் வீட்டு பகுதியில் அவர் நடந்து போய்க்கொண்டு இருக்கிறார்... நேர்த்தியான மேலுடை, கால் சட்டை, காலணிகள்; அதை   விட முக்கியமான அடையாளம், நடந்து வரும் போதே அவர், விசில் அடித்து பாடிக்கொண்டே வருவது, அப்போது தான் விசில் அடிக்க கற்று  கொண்டது போல்  இருக்கும்..

காற்றும் அந்த  கிறிஸ்தவ கீதங்களில் மட்டும் தனி தனியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது போல விலகும்.. கையில் ஒரு நேர்த்தியான தோல்பட்டியில், மினுமினுக்கும் பித்தளை கண்ணியுடன் ஒரு நாயை கூட்டி கொண்டே வருவார்.  அவருடைய தோற்றத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம்  இல்லாமல் அந்த நாய் இருக்கும். நம்முடைய எந்த தெருவிலும், எந்த சந்திலும் பார்க்க முடிகிற, ஒரு சாதாரண நாய் அது. ஊட்டமாக கூட இராது; மெலிந்தே இருக்கும்; பொதுவாக நாய்கள், அதற்கு வேற்று  முகமாக  தெரிகிற நாயை பார்த்தால், தன்னுடைய அதிகாரத்தையோ, பயத்தையோ காட்டும் இல்லையா ? தன் அதிகார எல்லையை, நிரூபிக்க முயலும் இல்லையா? அப்படி கூட இராது அந்த நாய்.. இது குறைக்கவே இல்லை.  

ஏன் இப்படி ஒரு நாயை அவர் தனக்கு தேர்ந்தெடுக்கிறார் ? பார்த்தாலே விரட்டுகிற, கன்றுக்குட்டி உயர செல்லங்கள் எவ்வளவோ இருக்கின்றதே. இவர் ஏன் இதை போல ஒன்றை அழைத்து கொண்டார்? என்னால் கேட்காமலே இருக்க முடியவில்லை ..ஆனால் கேட்பதற்கு சற்று  தயக்கம்.. ஆனால் இந்த தயக்கம் எல்லாம் சங்கரி அம்மாவுக்கு கிடையவே கிடையாது.. அவர் கேட்டே விட்டார். நேரடியாக கேட்காமல், என்ன அதுக்கு உடம்பு சரி இல்லையா? அவர் விசில் அடிப்பதை நிறுத்தி விட்டு, சிரித்தாராம்.. ஏன் அது நல்லா தானே இருக்கு என நாயின் உச்சந்தலையை தடவினாராம்.. அது அவர் மேல் முன்காலை பதித்து, கொஞ்சுவது போல சத்தம் கொடுத்ததாம் ..  பார்த்தீங்களா என்பது போல, மறுபடியும் சிரித்தாராம்.. அவர் வேறு ஒன்றும் சொல்லவில்லையாம்.. மறுபடியும் விசில் அடித்து பாடி கொண்டே போய் விட்டாராம் . சங்கரி அம்மாவும், அதிகம் விவரிக்கவில்லை. 

இது நம்ம லச்சுமி தத்தெடுத்த கதயால்லமா இருக்கு என்று மட்டும் என்னிடம் சொன்னார். லச்சுமி என்பது அவருடைய சினேகிதி.. 

தாமதமாக தான், லட்சுமிக்கு கல்யாணம் ஆயிற்று கணவர், பஸ் ஓட்டுகிறவர்..மிகச்சின்ன வாடகை வீடு தான்.. சந்தோசமாக தான் இருந்தார்கள்.. பத்து பதினைந்து வருடங்கள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை அவர்களுக்கு .  இரண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தார்கள்.. இவர்களை போலவே, இன்னொரு சிறிய வாடகை வீட்டில் பிறந்த அந்த நான்கு வயது குழந்தையை, தத்தெடுத்து கொண்டார்கள்.. அதற்கு, நான்கு வயதுக்கு உரிய மனவளர்ச்சி இல்லை. சரியாக பேச்சு வரவில்லை.. அந்த குழந்தையை, லட்சுமியின் கணவர் கொஞ்சுவதை பார்க்க, ஆச்சர்யமாக இருக்கும்.. இதுவரை தரையில் படுக்கும் அவர், அந்த குழந்தைக்காக, ஒரு கட்டிலை வாங்கினார். சின்ன அளவு, தொலைகாட்சி பெட்டியை வாங்கினார். லட்சுமி, சங்கரி அம்மாவிடம் சொன்னார்களாம்.. ஓடி ஆடுகிற பிள்ளைகளை வளர்க்கத்தான், ஊர் உலகத்தில், ஆயிரம் பேர் இருக்காங்களே! 

நம்முடன் இப்படி ஒரு லட்சுமி இருக்கிறார்.. நம்முடன், நாயை கூடி கொண்டு , விசிலடித்து பாடியபடியே செல்கிற இப்படி ஒருவர் இருக்கிறார். இவர்களிடம் இருந்தும், இவர்களை போன்ற பலரிடம் இருந்தும் தான் நான்   கற்று கொள்கிறேன். நான் கற்றது கையளவு ! ஆனால் அந்த கையளவு எல்லாம், இது போன்ற மனிதர்களின் மனதளவு.. எல்லாவற்றுக்கும், மனம் தான் அளவு! எல்லாவற்றையும் விட, மனம் தான் அழகு!
.
இவை பிற நாட்களில், ஒலிபரப்ப பட்டவை..

2 comments:

Marketing Allinoneindia said...

Great article,thanks a lot for sharing this useful post with us, keep it up
latha

Joshva said...

Nice Article thanks for sharing this useful thing...

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்