Tuesday, January 26, 2010

அம்மாவின் தோழி


சில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வர எங்கள் பேருந்துக்காக, புளிய மர நிழலில் காத்திருந்தோம். அந்த நிலையில், சம்பூ.. நல்ல இருக்கிறாயா? எனும் குரல் கேட்டது.. நானும், அம்மாவும் ஒரு சேர திரும்பி பார்த்தோம். அந்த சமயம் ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி, அம்மாவின் கைகளை பிடித்து குதூகலமாய் விசாரிக்க ஆரம்பித்தார். சற்றே மாநிரத்தொடு, ஐம்பது வயதுக்கான உடல் மாற்றங்களோடு, உற்சாகமாய் பேச ஆரம்பித்தார். அவரின் கூந்தலை கவனித்தேன்.. அன்று அணிந்த மல்லி - கனகாம்பர கதம்பம் அவர்களை அலங்கரித்தது. அவர்களின் பேச்சின் இடையே, நான் அருகில் இருப்பதை கவனித்த அந்த அம்மா.. யார் உன்னோட பையனா? என்ன பண்றான்? படிக்கிறானா? என விசாரிக்க ஆரம்பித்தார்.

என் அம்மாவும், முகம் முழுக்க சிரிப்போடு, என்னையும், தம்பியையும், குடும்ப உறுப்பினர்களையும் எடுத்து சொல்லி கொண்டு இருந்தார். அவர்களின் உரையாடலை கண்ட நான் அவர்கள் பால்ய தோழிகளாய் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன். அவ்வளவு அன்யோன்யம்.. அவ்வளவு சந்தோசமும் திருப்தியும் அவர்களது பேச்சில்.. வெகு நாட்கள் தொடர்பு விட்டு போய் நிகழ்ந்த சந்திப்பாய் இருக்க வேண்டும்.. நான் அவர்கள் பேச்சில், அந்த அம்மா.. நொடிக்கொருமுறை, சம்பூ.. என விளித்தார்.. எனக்கு தெரிந்து யாரும், என் அம்மாவை இப்படி அழைத்ததில்லை. ஏன், என் தந்தை கூட மணமான நாட்களில், இப்படி அழைத்திருப்பார் என எனக்கு தோன்றவில்லை. அப்பொழுது தான், அந்த பேருக்கு அவ்வளவு, மகத்துவம் இருக்கும் என்பது புரிந்தது.. பெயர் அவ்வளவு அழகாகி, கூப்பிடும் மனிதரும், பெயருக்கு சொந்தக்காரரும், அவ்வளவு சந்தோசம் கொள்வார்கள் என... ஒரு பெயர் அழைக்கப்படுவதில், மனிதரின் மன நிலை பொறுத்து, குயிலின் குரலாகவோ மயிலின் குரலாகவோ இருக்கிறது.

மணமாகி வந்தபின், பெண்களின் உலகம் முற்றிலும் மாறி போகிறது. அவர்களுக்கு என ஒரு குடும்பம், குழந்தைகள் மாமனார், மாமியார் என பிரிதொரு வட்டத்துக்குள் தம்மை முழுமையாக்கி கொள்கிறார்கள்.. அவர்களுக்கு பிறந்தகம் செல்வதும், தம் நட்பு வட்டத்தை காண்பதும் அபூர்வமாய் போகிறது. ஆண்களின் உலகம் அப்படி இல்லை. பல நேரங்களில், நண்பர்களை காண பேருந்து பிடித்து செல்வதும், அவர் இங்கு வந்து காண்பதுவும் நடக்கிறது. பெண்களின் உலகில், தம் பையன், பெண்களின் திருமணம், உறவு வட்ட திருமணம் என சில நிகழ்வுகளில், மட்டுமே நட்பு வட்டத்தை, உறவு வட்டத்தை காண முடிகிறது. அவர்கள் பகிர்ந்து கொள்ளவும் ஆயிரம் விஷயம் தம் மன குடுவையில் உள்ளது.. உண்மையில், நம் ஒட்டு மொத்த வாழ்வில், நமக்கு உவப்பான விஷயம், நமது பெயரே.. அந்த பெயரும், ஒரு சிலரின் அழைப்பில் இத்தனை அழகாய், இவ்வளவு பொருளாய், நாம் எதிபார்க்காத அளவில் இருக் கிறது.. பல நேரங்களில், நாம் வருத்தம் கொள்கிறோம் .. என்ன பெயர் இது என.. ஆனால் இந்த நிமிடங்கள், இது போன்ற தருணங்கள், அதை பொய் ஆக்குகின்றன.

பல தருணங்களில், வீட்டில் இருப்பவர்கள், பெயர் சொல்லி அழைப்பதில்லை.. சின்னம்மினி, பெரியம்மினி, பெரிய தம்பி, சின்ன தம்பி, ஊர் பெயர் சொல்லி அந்த அம்மணி என பெயர்கள் இன்னொரு வடிவம் எடுக்கின்றன.. சிரார்களாய் இருக்கும் தருணத்தில், சின்ன பாப்பா, பெரிய பாப்பா.. சின்ன பாப்பனா .. பெரிய பாப்பனா என பெயர்கள்.. இப்படி பெயர்கள் பல வடிவங்களில்..


சமீபத்தில், ஒரு சிறு செய்தி படித்தேன்.. சாண்டோ சின்னப்பா தேவரிடம் ஒரு பையன் வேலை கேட்டு வந்தான். அவனிடம் அவர் வைத்த ஒரு கோரிக்கை, அவன் பெயரை மாற்றி கொள்ள வேண்டும் என்பதே.. அன்று முதல் அவன் பெயர் முருகன் என மாறி போனது.. தேவர் வாய்க்கு வாய், முருகா முருகா என கூப்பிட்டு அகமகிழ்ந்தார்.. தேவர் பேசும் பொழுதும் மனிதர்களை நீங்கள் என சொல்வதற்கு பதிலாய், முருகா என சொல்லவும் பழகி இருந்திருக்கிறார்.. முருகன் என்ற பெயர் அவருக்கு அவ்வளவு தித்திப்பை தந்து இருக்கிறது. இன்றும் மருதமலைக்கு, கால்நடையாக, பயணித்து மலை ஏறினால், காணும் எல்லா கல் மண்டபங்களிலும், இளைப்பாறும் கற்கள்,  தேவரின் பெயர் தாங்கி நிற்கின்றன.  முருக பக்தர்கள் இளைப்பாறி செல்ல உதவுகின்றன.. தேவரும் அந்த நிலை மண்டப தூண்களில் ஏதாவது ஒன்றில் குடிகொண்டு யாவற்றையும் அர்த்தத்தோடு பார்த்து கொண்டு இருக்க கூடும்..
 
சில நாட்களுக்கு முன், அந்த பெண்மணி, எங்கள் இல்லம் வந்து, தன பெண்ணின் திருமணத்துக்கு அழைத்தார்.. அந்த பெண்மணி தன மகள் அமரிக்காவில் போய் வேலை செய்ய பிரியப்பட்டதாகவும், அப்படியே அங்கு போய் இரண்டு வருடங்களாக வேலை செய்வதாகவும் சொன்னார்.. அப்படி சொன்னவரின் முகத்தில், பெரு வெளிச்சம்.. மாப்பிள்ளையும், அமெரிக்காவில், வேலை  செய்வதை சொன்னார்.. அவர் சென்ற பின்னர், என் தாய், அவர்களின் வாழ்வை, ஒரு முப்பது, முப்பத்து ஐந்து வருடத்திற்கு பின்னான நாட்களை விவரித்து இருந்தார்..


அந்த நாட்களில், பெரிய படிப்புகள் ஏதும் இல்லை.. பச்சை பயறு , தட்டை பயறு - பறித்தல் , பருத்தி எடுத்தல், தென்னை மரத்துக்கு தண்ணீர் சுமந்து ஊற்றுதல் என அவர்களின் நாட்கள் இருந்து இருக்கின்றன..

கிராமத்துக்கு வரும் பாத்திரக்காரனிடம் பேரம் பேசி வாங்கும் எவர் சில்வர் பாத்திரங்கள், அவர்களுக்கே உரித்தான பழக்கம்.. வருடத்துக்கு ஒருமுறை வரும், மாகாளி அம்மன் திருவிழாவும், அவர்கள் விளையாடி களித்த தூரிகளும், அன்று சுவைத்த குச்சி ஐசும், திருவிழாவுக்கு வரும் வளையல் காரனிடம், வகைக்கு ஒன்றாய் கை நிறைய வளையல் இட்டு நிரப்பியதும், சைக்கிளில் துணி கொண்டு வருபவனிடம் பேரம் பேசி வாங்கிய திருவிழா துணி மணிகளும், அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது.. அதுவே அவர்களின் தித்திப்பு நிமிடங்கள். இரவுகளில், அவர்கள் கற்ற கோலாட்டமும், கும்மியும், என்றென்றும் ஞாபகம் கொள்ள வைக்கின்றன.. அவர்கள் விட்டு வந்த கோலாட்ட குச்சிகள், அற்புத வேலைப்பாடோடும், அதன் நிறம் மாறாமல், அவர்களின் நினைவை போல் அப்படியே இருக்கின்றன. நாட்கள் பல கடந்தும், யாரும் அதை பெற்று கொள்ளவோ, எடுத்து பழகவோ இல்லை.. ஒரு வேலை, அது வீடு இடிக்கும் பொழுது, தண்ணீர் அடுப்புக்கு விறகாய் போகலாம்..
 
அதன் பின், வீட்டில், பார்த்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்வில், வெகுதூரம் வந்து விட்டார்கள்.. அவர்களுக்கு, நன்றாக சிவப்பேறிய மருதாணி கைகள், உவகை கொள்ள, மற்றவர்களிடம், காண்பிக்க போதுமானதாய் இருந்தது.. திருமணமாகி வந்து பார்த்த படங்கள், குழந்தையின் அழுகையோடு பார்த்த படங்கள் அவர்கள் நினைவுகள் எங்கும்..  ஆனால் அவர்களின், பெண்கள் அப்படி இல்லை.. அவர்கள் நிச்சயம் பெருமை பட்டு கொள்ளலாம்.. சிலர் அமெரிக்காவிலும், சிலர் சிங்கபூரிலும் நிறைய ஆங்கிலம் பேசி வாழ்கிறார்கள். தங்களையும் வந்து தங்கிவிட்டு செல்லுமாறு பிள்ளைகள் அழைத்தபடி இருப்பதை சொல்லி பூரிக்கின்றனர். வாழ்க்கை மாற்றம் எப்படி இருக்கிறது? நிச்சயம் அழகான, ஆச்சர்யம் கொண்ட மாற்றமே..
.
.

3 comments:

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அழகிய பதிவு. வாழ்க்கையில் பல ஆச்சர்யங்கள் உள்ளடங்கித்தான் இருக்கிறது.

பெயர் குறிப்பு சிறப்பாக இருந்தது.

புன்னகை தேசம். said...

பழைய நினைவுகளும் கனவுகளும் சுகம்தான்..

அழகாக எழுதப்பட்டிருக்கு...

வாழ்த்துகள்

THIRUMALAI said...

வாக்களித்தவர்கள் மற்றும் பதிவை பார்த்தவர்கள் அனைவர்க்கும் நன்றி!

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்