சென்ற டிசம்பர் 30 ஆம் நாள் பகவான் ரமண மகரிஷி அவர்களின் 132 ஆவது பிறந்த தினம். இளம் வயதில் தனக்குள் உதித்த எண்ணங்கள், அவரை பின்னாளில் ஒரு மெய் ஞானியாய், மனித புனிதராய் உயர்த்தியது. வழிகாட்டியாய் யாரும் இன்றி, அண்ணாமலை இறைவனை முதல்வனாய் கொண்டு நடந்த அவரது பாதை புதுமையானது.
காலம் தோறும் சக மனிதர்களுக்கு, நல்வழி காட்டிட, உன்னத மனிதர்கள் உதிப்பது பாரதத்திற்கு புதியதில்லை. ரமணர் சற்றே வித்தியாசமாவர். நம் முன், அறுபது ஆண்டுகள் முன்பு வாழ்ந்து மறைந்தவர். உடல் என்ற ஒன்றை மறந்து இறையில் கலந்தவர். தன் பதின் வயதில் திருவண்ணாமலை வந்தவர், அதன் பின் மகா சமாதி வரை எங்கும் சென்றதில்லை. தன்னை பற்றி பிரச்சாரம் செய்தவர் இல்லை.
முக்தியின் தேடல் உள்ளவர்கள் அவரை முழு முதலாய் பற்றினர். அவரது கடைசி பத்து ஆண்டுகள், உலகம் அவரை கண்டு கொண்டது. தேச எல்லைகள் தாண்டியும் தேடல் உள்ளவர் அனைவரும் அவரை தரிசிக்க முனைந்தனர். அது தான், இறை ஏற்படுத்தி வைத்த முடிவோ? மகரிஷியை பற்றிய நினைவு குறிப்புகள் இங்கே..
- ரமணர் பிறந்தது 1879 டிசம்பர் முப்பது. பிறந்த ஊர் திருச்சுழி. அவரது இயற் பெயர் வெங்கடராமன். தந்தை: சுந்தரம் அய்யர். தாய்: அழகம்மாள்.
- 1892 ஆம் ஆண்டு , தந்தையின் மரணத்திற்கு பின் ரமணரும் அவரின் சகோதரர் நாக சுவாமிக்கும் மீனாட்சி ஆட்சி புரியும் மதுரையில் வாசம். துவக்கத்தில் ஸ்காட் நடுநிலை பள்ளியிலும், பின் அமெரிக்கன் மிஷன் பள்ளியிலும் படிப்பு தொடர்ந்தது.
- ரமணர் விழிப்புணர்வை பெற்ற நாள் ஜூலை 17 , 1896. அன்று மரணத்தை பற்றிய எண்ணம் தலை தூக்கியது. அதன் பின் அவர் கண்டதே.. "நான் யார்?" என்ற தேடல். அந்த ஆத்ம சக்தியில் அவர் முழுதுமாய் கரைந்து போனார்.
- ரமணரின் வார்த்தைகளில் குறிப்பிட்டால் .. "நான் உன்னை எண்ணிய தருணத்தில், நீ என்னை இறுக பற்றி உன்னுள் புதைத்து கொண்டாய். அருணாசலா! உன் பெருமையை, உன் அருளை, யாரால் அளவிட முடியும்.. ".
- திருவண்ணாமலையை அறிந்த நாட்களில் இருந்து ரமணருக்கு இதயத்தில், இனம் புரியாத ஈர்ப்பு இருந்தது. பெரும் பந்தத்தின் தொடர்ச்சியாய் தோன்றி இருக்கின்றது..
- அது அவரின் பதினாறாவது வயது நடந்து கொண்டிருந்த காலகட்டம். மனம் முழுதும் இறை நிரம்பிய பின், உலக வாழ்வில் பற்று விடுபட்டு போனது. "என் தந்தையை தேடி, என் தந்தையின் கட்டளை படி, நான் இங்கிருந்து புறப்படுகிறேன்... " - இது ரமணர் அண்ணாமலைக்கு புறப்படும் முன் விட்டு சென்ற கடித வரிகள்.
- ரயிலிலும், கால் நடையிலும், அவரது திருவண்ணாமலை நோக்கிய பயணம் நிகழ்ந்தது.. செப்டம்பர் 1 , 1896 ஆம் நாள் அவரது தந்தையின் இருப்பிடத்தை(அருணாச்சலத்தை) அடைந்தார். நேராக அருணாச்சல இறைவன் சன்னதி வந்தவர்.. "தந்தையே இதோ உன் கட்டளை படி வந்துவிட்டேன்.. " என தன்னை ஒப்புவித்தார்..
- அன்றைய தினமே தன் தலை முடியை துறந்து வெறும் கௌபீனம் தரித்து, இந்த உலகுடனான பந்தத்துக்கு முற்று புள்ளி வைத்தார். அவரது வரவை தந்தை எதிர்பார்த்தாரோ என்னவோ, வானம் நான்கு நாட்களுக்கு கொட்டி தீர்த்தது.
- ரமணரின் நிஷ்டை நாட்கள் ஆயிரம் கால் மண்டபத்திலும், பின் பாதாள லிங்க அறையிலும் நிகழ்ந்தது. வெளி உலக தொடர்பு அற்று, உடலின் இயக்கம் மறந்து, உள்ளம் இறைவன் மேல் லயித்து போன நாட்கள் அவை. தன் சுய தேடலில், தன்னை மறந்து உள்முகமாகவே பயணம் தொடர்ந்தது.
அருகே இருந்தவர்கள் கவனித்து, ரமணரை பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டுவந்தனர். தொடை முழுதும், உடலின் பல பாகங்களில், எறும்பும், பிறவும் வாசம் செய்து.. ரணமாய் மாறி இருந்தது. உயிர் வதைக்கும் அந்த வலியில், அந்த சின்ன பையன், எப்படி உலக இயக்கம் அற்று உள்முகமாய் இருக்கிறான் என்பது சுற்றி இருந்தவருக்கு புரியாத புதிர்..
குருமூர்த்தத்தில் வாசம் செய்த நாட்களில், கோயில் தெருக்களில் ஏதாவது வீட்டின் முன் நின்று கையை தட்டுவார். அவரின் வரவுக்காய் நிறைய பேர் உணவோடு காத்திருப்பார்.. பல நாட்களில் மற்றவரை ஏமாற்றம் கொள்ள வைக்காமல் இடத்தை மாற்றி கொள்வார்.
குருமூர்த்தத்தில் இருந்து, ரமணர் இருபதாம் வயதில் விருபாக்ஷா குகைக்கு மாற்ற பட்டார்.1899 முதல் 1916 வரை பதினேழு ஆண்டுகள் இங்கு வாசம்.. இங்கு தான் அவரின் தாய் அழகம்மாள் வந்து தங்கியதும், மகன் தாய்க்கு உபதேசம் அளித்ததும்....
மௌனத்தை மட்டுமே தன் மொழியாய் கொண்டிருந்த ரமணர், 1907 இல் கணபதி முனிக்கு தன் முதல் உபதேசத்தை அளித்தார்.
ஆதி சங்கரரின் "விவேக சூடாமணி" யை உரை வடிவில் ரமணர் தந்தது விருபாக்ஷா குகை நாட்களில் தான்.
விருபாக்ஷா குகை நாட்களில், அவருக்கான உணவு, வெளியே வீடுகளில் பெறப்படும்.. கொண்டு வந்ததை, கலந்து அப்படியே கொதிக்க வைத்து அருகே உள்ளவர் அனைவர்க்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.. சில நாள் உப்புடன். சில நாள் அதுவும் இராது.
1916 முதல் 1922 வரை கந்த ஆஷ்ரமத்தில் வாசம்.. தண்ணீர் பிரச்சனைக்காக இங்கே இடம் மாறி வந்தார்.
1922 மே, பத்தொன்பதாம் நாள், ரமணர் அவரின் தாய் அழகம்மாளுக்கு முக்தியை தந்த நாள். காலையில் அவரது தாய் அருகில் சென்றவர், இரவு எட்டு மணிக்கு பிறப்பு இறப்பு அற்ற முக்தியை கொடுத்தார். அவரின் வலது கரம் தாயின் இதயத்திலும், இடது கரம் தலையிலும் இருந்தது. தாயின் இதயத்துக்கு, மனம் முழுதுமாய் இடம் மாறியது..
அதன் பின் அவரது வாசம் தற்போதைய ரமண ஆசிரமம். ரமண ஆசிரமத்தில் உள்ளவர் அனைவர்க்கும் ஒரே மாதிரியான மதிய உணவு வழங்கப்படும்.. அவர்களோடு ரமணரும் அமர்ந்து உணவை உட்கொள்வார்.
அணில், மயில், குரங்குகள், மான்(வள்ளி) , மாடு(லக்ஷ்மி) இவை ரமணர் பிரியத்தோடு பராமரித்து போற்றியவை. லக்ஷ்மிக்கும், வள்ளிக்கும் ரமணர் முக்தியை தந்தார்.
பால் ப்ரூடன், மவ்ரிஸ் ப்ரிட்மான்(Maurice Frydman ), சோமர்செட் மாம்(நோபல் பரிசு பெற்றவர்), மெர்சிடஸ் டி அகஸ்ட - சில மேற்கத்திய சீடர்கள் .
நரசிம்ம சுவாமி எழுதிய "self realization " பால் ப்ரூடனின் "search in secret India " ரமணரின் வாழ்வை பற்றி வெளி உலகுக்கு கொண்டு சென்ற முதல் புத்தகங்கள்..
மைசூர் மகாராஜா ரமணரை காண வந்தார். அவர்களின் சந்திப்பு மௌனத்திலே கழிந்தது.. அதை குறிப்பிட்ட ரமணர், அவருடன் பேச அவசியம் இல்லை அவரது ஆத்மா உயர் நிலையில் இருந்தது.. பார்வை பரிமாற்றமே போதுமானதாய் இருந்தது என்றார்.
ஏப்ரல் பதினான்கு, 1950 ரமணர் மகா சமாதி அடைந்த நாள். அவரது பேரொளி அருணாசல இறைவனுடன் கலந்த தருணம்.
"நீ உன் அறிவை, ஒருமையுடன் இதயத்தில் குவிப்பாயாக. அந்த இடமே ஆத்மா அமரும் இடம். இறைவனே அனைத்தையும் வலி நடத்துபவர். இறைவனே பிரபஞ்சத்தின் கடந்த காலம் எதிர்காலம் இவற்றை கட்டுபடுத்துபவர். அவரை நம்புங்கள்".
"உன்னிடம் "நான்" என்கிற எண்ணம் இல்லை என்றால் உனக்கு வேறு எண்ணம் தோன்றாது.. அப்படி எண்ணம் தோன்றினால் எங்கிருந்து அந்த எண்ணம் தோன்றுகின்றது என்பதை கண்டறி. அப்படி உள் முக பயணத்தில் ஒருவர் இதயத்தையும் மனத்தையும் அதன் மூலத்தையும் தொட்டால் அவர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள்"..
"நான் உடலாய் இருந்தால் மட்டுமே காலத்தாலும், இடத்தாலும் கட்டு படுத்தே படுவேன். நான் எங்கும் நிறைந்தவன்.. நான் காலங்களை கடந்தவன்"..
"நான் எங்கும் போய் விட வில்லை இங்குதான் இருக்கிறேன். வருத்தம் வேண்டாம் "..இவை ரமணர் உதிர்த்தவை..
"அருணாச்சல சிவ, அருணாச்சல சிவ அருணாச்சல சிவ அருணாச்சலா.. "
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்