Saturday, August 24, 2019

தொண்ணுறுகளின் நாட்கள் - இசையால் நிரம்பிய பயணம்


சமீபமாய் தினமும் தொண்ணுறுகளின் நாட்கள் ஏதோ  ஒரு வகையில் நினைவுக்கு கொண்டுவரப்படுகின்றன. ஆயிரம் தான் இருந்தாலும், எங்க காலம் மாதிரி வருமா? என்ற அங்கலாப்பு அனைவருக்கும் உண்டு.  அப்படியான என் nostalgic பயணம் இங்கே. அன்றைய  கமர்கட், தேன் மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், பூமர், சுத்துற மிட்டாய், HMT கடிகாரத்தின் பொருட்டு சேகரித்த க்ளோப் தீப்பெட்டி அட்டைகள் என இவை  தாண்டி பின்னோக்கிய பயணம் இங்கே ..

அன்றைய நாள் வார ஏடுகள்: 
அன்றைய வார ஏடுகள் இன்னும் கண்ணில் மின்னுகின்றன. அன்றைக்கு வந்த எல்லா வார பத்திரிக்கையிலும் தவறாமல் தொடர்கதைகள் ஆக்கிரமித்திருந்தன; கல்கி இதழில் தவறாமல், அட்டகாசமான படங்களுடன் தொடர்ந்து பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு தொடர்ந்தது. விகடனும், குமுதமும் தொடர்ந்து தொடர் கதைகளை வெளியிட்டன. நிச்சயம் அந்த கணங்கள் உவப்பானவை; என் ஞாபகத்தில் தொண்ணுறுகள் இறுதியில், இரண்டாயிரம் துவக்கத்தில் இந்த போக்கு இருந்தது. இன்றைய இதழ்கள் ஒற்றை சிறுகதையுடன் முடித்து விடுகின்றன.நிரம்பவே ஏமாற்றம்.. அன்றைய நாள் இந்திய டுடே அருமை. அன்று தேடி படித்த சாம்பியன் புத்தகம், ஸ்போர்ட்ஸ் ஸ்டார், அம்புலி மாமா, கோகுலம், சிறுவர் மலர் யாவும் பொக்கிஷங்கள். அன்றைய விகடனில் வந்த அரட்டை - அணு, அக்கா, ஆன்டி, குமுதத்தில் வந்த ராட் க்ரிஷ் அரட்டை இன்னும் நினைவில் உள்ளது.

வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜன்
சுஜாதா - பூக்குட்டி,  யவனிகா, இரண்டாவது காதல் கதை, கற்றதும் பெற்றதும், சுஜாதாட்ஸ், ஏன் எதற்கு எப்படி.,  இன்னும் பல..
வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்.,
பாலகுமாரன் - அப்பம் வடை தயிர்சாதம்.
ஸ்டெல்லா புரூஸ் - மாய நதிகள், குமாரசாமி mbbs பெண் தேடுகிறான்
பாஸ்கர் சக்தி - ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்
பிரபஞ்சன் - கனவுகளை தின்போம்
சுபா - கண்மணி சுகமா ?
 மடிசார் மாமி
ரவிக்கந்தன் - லவ் 2K
தமிழருவி மணியன்  - ஊருக்கு நல்லது சொல்வேன்
எஸ்.ராமகிருஷ்ணன்  - துணை எழுத்து
ஹாய் மதன்
நானும் விகடனும்
இனிக்கும் இலக்கியம் - தமிழண்ணல்
சங்க சித்திரங்கள் - ஜெய மோகன்
க சி சிவகுமார் - ஆதிமங்கலத்து விசேஷங்கள்
ராஜேஷ் குமார் - கொஞ்சம் மேகம், கொஞ்சம் நிலவு.
இந்திரா பார்த்தசாரதி - கிருஷ்ணா கிருஷ்ணா 
க்ரேஸி மோகன் - அமெரிக்காவில் கிச்சா 
ரா கி ரங்கராஜன் -  நான் கிருஷ்ண தேவராயன் 


அன்றைய விளம்பரங்கள்:
அன்றைய விளம்பரங்கள் சாமானியரை கொள்ளை கொண்டவை. காற்றின் வண்ணங்களை வார்த்தைகளால் , இசையால் நிரம்பியவை. அன்றைய பெப்சி விளம்பரம் மறக்க முடியாதது. 96 உலக கோப்பையை முன்னிட்டு அது எடுக்கப்பட்டது;


(இந்த விளம்பரம் சலிக்காமல் பார்த்த ஞாபகம் - சச்சின் )
தொடர்ந்த பூஸ்ட் விளம்பரம் (முன்பு கபில் - சச்சின், பின் சச்சின் சேவக், பின் தோனி  )

 ஒவ்வொரு புது சோப்பு விளம்பரத்தை பார்த்து ஒவ்வொரு சோப்பை உபயோகித்து மகிழ்ந்தோம்; அவர்களும் நம்மை அப்படியே நம்ப வைத்தனர்;


சொட்டு நீலம் - ரீகல், உஜாலா - நீயும் உஜாலாவுக்கு மாறிட்டாயா ? நானும் உஜாலாக்கு மாறிட்டேன்...

நிர்மா 
பஜாஜ் ஸ்கூட்டர் 
லிரில் 
காம்பிளான் - நான் வளர்க்கிறேன் மம்மி 
பெப்சி, கோக், ரின், ஹமாம், சந்தூர், சந்திரிகா ,
கோகுல் சாண்டல்   

மிராண்டா, ஒனிடா 
கண்ணன் ஜூப்ளி காபி - ரஹ்மானின் தெளிந்த/மயக்கும்  இசை.. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.   
நரசுஸ் காபி - பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு 

கவர்ந்த தொலைக்காட்சி தொடர்கள்:
அன்றைய நாள் தொலைக்காட்சி DD யில் தொடங்கி DD யில் முற்று பெற்றது. கிரேஸி மோகனின் அத்தனை நாடகங்களும் அற்புதமானவை. அனைத்து சுதந்திர தினத்திலும் ரோஜா படம் கட்டாயம் இடம் பெறும்.  திரை மாலை, எதிரொலி, கண்மணி பூங்கா, வயலும் வாழ்வும் தாண்டி அன்றைய விருப்ப  தொடர்கள்:

1. என் இனிய இயந்திரா
- நாவல் தொடர் 
2. அம்மாவுக்கு கல்யாணம் 
3. பொன் விலங்கு - நாவல் தொடர் 
4. இரும்பு குதிரைகள் - நாவல் தொடர் 
5. இது ஒரு மனிதனின் கதை - நாவல் தொடர் 
6. நெஞ்சினலைகள் - நாவல் தொடர் 
7. ஸ்ரீ கிருஷ்ணா 
8. அம்பிகாபதி 
9. இருட்டிலே தேடாதீங்க 
10. துப்பறியும் சாம்பு 
11. மால்குடி டேய்ஸ் 
12. கிருஷ்ணா லீலா தரங்கிணி 
13. டாக்சி டாக்சி 
14. மேல் மாடி காலி 
15. சந்திர காந்தா 
16. ஜுராசிக் பேபி 
17. சங்கர்லால் துப்பறிகிறார் 
18. தாயுமானவன் - நாவல் தொடர் 
19. ரமண மகரிஷி - வாழ்வு 
20. சாணக்யா 
21. அக்பர் தி கிரேட் 
22. சின்ன சாம்பு 
23. தினேஷ் கணேஷ் 
24. அடடே மனோகர்.
25. ஆலிஃப் லைலா  
25. கள்வனின் காதலி - - நாவல் தொடர் 
26. வசந்தம் காலனி 
27. here is crazy 
28. வாஷிங்டனில் திருமணம் - சாவியின் நாவல் தொடர் 
29. மின்னல் மழை மோஹினி - ஜாவர் சீதாராமன் தொடர்.
30. திருக்குறள் கதைகள் 
31. ஜெய் ஹனுமான் 
32. நான் தில்லி நகரம் 

Saturday, December 8, 2018

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


இந்த ஆண்டத்திய சாஹித்ய அகாடமி விருது பெறும் எஸ்.ரா. அவர்களுக்கு மனம் நிறைந்த நாள் வாழ்த்துக்கள்!!! இசை கலைஞர்கள்  பற்றி முன்பே  நிறைய எழுதி உள்ள எஸ். ரா. அவரின் சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருதை பெறுகிறார். இந்த நாவல் இசை கலைஞர்களை பற்றி பேசுகிறது. 

வீரயுக நாயகன் வேள்பாரி - தொடர் : அரியதோர் புனைவுலகுபாரி பாரி என்றுபல ஏத்தி 
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் 
பாரி ஒருவனும் அல்லன் 
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
“பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும் இருக்கின்றது.”
மேகத்தைப் போன்றவன் பாரி என நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய உத்தி நினைதற்குரியது.

வீரயுக நாயகன் வேள்பாரி தொடர்,  அரியதோர் புனைவுலகு தன்னை தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது.  முதலில், தொடாத ஒரு சிற்றரசனை, அவ்வைக்கும்,  கபிலனுக்கும் பின் பாடுபொருளாக்கிய சு.வெங்கடேசனுக்கும், அவரின் எண்ணத்தை, தன் உயிர் ஓவியத்தால் கதையை கண் முன் நிகழ்த்தி காட்டிய ஓவியர் மணியன்செல்வன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்; தன் வழியே அரிய படைப்பை அளித்த விகடனுக்கு வாழ்த்துக்கள்; கல்கியை, சாண்டில்யனை, அகிலனை, நா. பாவை,கோவி மணிசேகரன், கலைமாமணி விக்ரமன் அவர்களை, ரா சு நல்லபெருமாள் அவர்களின் படைப்புகளை படித்த நான், இந்த மிகு புனைவில் கட்டுண்டேன். குறிஞ்சி கபிலனை கண் முன்  நிறுத்தியமைக்காக நன்றிகள். நட்புக்கு உதாரணமான மனிதர்கள் கபிலனும் பாரியும் சேர்த்தே. பாரி உயிர் நீத்த நிலையில், கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தது நட்பின் நவிலல்;


 பாரியின் கதை  சொல்லி, குறிஞ்சி பாட்டுடை தலைவனை, விட்டு விட்டால் எப்படி; முருகனும் வள்ளியும் அவர்களின் காதலும் பொழிந்தபடி செல்கிறது மழை மேகமாய்;

ஓவியரை எப்படி சொல்வதென தெரியவில்லை; கண்களில் வியப்பு மேலிட பார்த்துக்கொண்டே இருக்கலாம். எப்பொழுதும் - போல ம. செ. அவர்களின் ராஜ பாட்டை இதிலும் தொடர்கிறது. அந்த பாரியின் ஓவியம், முருகன் வள்ளி, போர் நிகழ்வுகள், யானைகள், குதிரைகள்,  காடு, மரம்,தொடும்  பச்சைகள், கபிலர், பாணர்கள், மேக கூட்டம்,விண்மீன் திரள்கள், அட அந்த தேர், ,சுனைகள்    - அசாதாரணமான எண்ண  ஓவியம்;


பல இடங்களில், மிகு கற்பனையில், நம்மை முகிழ்க்க ஆசிரியர் தவறவில்லை. ஒரு காடு - காடரிதல், வண்டுகள், நொச்சி புகை, ஆட்கொல்லி மரம், எலி, தேவ வாக்கு விலங்கு  என அது ஒரு தனி கற்பனை உலகம். முருகனை சொல்லி தினை காத்தலை சொல்லாமல் விட்டால் எப்படி; காட்டை, மழையை, மனிதர்களை, விலங்குகளை, பறவையை அத்தனையும் கபிலரை போலெ இங்கும் பாடுபொருள்.  காட்டில் அமைத்த பரண், கொண்டாட்டங்கள், உண்ட கள் வியப்பு தான்; போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள், விற்கள், விந்தையான வாள் - ஒவ்வொன்றின் பின்னும் அதன் தனி சிறப்புகள் அதன் விவரிப்புகள் அற்புதமானவை;
       
இது வரையில், இப்படி ஒரு போர்க்கள விவரிப்பை, விறு விறுப்பாய் படித்ததில்லை; பொற்சுவையின் தியாகத்தை மறக்க முடிவதில்லை; பாரியை அவன் வீரத்தை கண்முன் கொண்டு வந்ததில் பெரும் வெற்றி ம. செ அவர்களுக்கு உரியது.

பாரியின் கதை வழியே அறிமுகமான பெயர்கள் அற்புதம் - திசைவேலர், பொற் சுவை, தேக்கன், முடியன், இறவாதான், செங்கண சோழன், பொதிய வெற்பன், உதிரன், கருங்கைவாணன்  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு கதை களத்துக்கு நம்மை கரம் பற்றி இட்டு சென்ற சு. வெங்கடேசன் பாராட்டுக்கு  உரியவர். தொடரட்டும் உங்கள் பயணம்.. வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்;


தமிழ் வரலாற்று நாவலாசிரியர்கள் - படைப்புகள்
maniyan selvam, su venkatesan

https://www.vikatan.com/news/tamilnadu/136950-velpari-100th-episode-writer-svenkatesan-praises-readers.html

https://www.vikatan.com/anandavikatan/2018-sep-26/serials/144328-vel-paari-historical-hero.html

https://www.vikatan.com/anandavikatan/2018-apr-04/serials/139649-vel-paari-historical-hero.html

http://www.tamilvu.org/courses/degree/d011/d0114/html/d0114210.htm
நன்றி : Tamilvu, விகடன் 

நிசப்த போராளி - கெளதம் கம்பீர் (Gautam Gambhir)


இதோ இந்த வாரத்துடன், கெளதம் கம்பீர் அவர்களின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது. அருமையான ஒப்பனராகவும், கிரிக்கெட்டின் அனைத்து விதமான வடிவங்களில், தன் தனி முத்திரையை பதித்தவர். அவரின் அருமையான ஆண்டு 2008. 2009 ஆம் ஆண்டில் தனி முத்திரையுடன் ஐசிசி விருதை(சிறந்த டெஸ்ட் வீரர்   விருதை) பெற்றார். அந்த ஆண்டு அவர் தொட்டதெல்லாம் பொன்னானது.

களத்தில்  ஆக்ரோஷமாக செயல்படுவதில், இக்கட்டான தருணத்தில் அணியை மீட்பதில், இவருக்கு இணை யாருமில்லை. இந்தியா பெற்ற அருமையான வெற்றிகளில், பிறரின் ஆட்டத்தில், காம்பிர் மறைந்து போனார். ஆனால் அவரில் ஆட்டம் மறக்க முடியாதது. விலை மதிப்பற்றது; அவரின் துணிச்சல் பிறரும் பின்பற்ற வேண்டிய அம்சம். இரண்டு ஐ பி எல். தொடர்களில், கேப்டனாக கொல்கத்தாவுக்காக கோப்பையை வென்று தந்தவர். சற்றே தாமதமாக அணிக்குள் வந்து, தன் இடத்தை தக்கவைத்து கொண்டவர். திடீர் பார்ம் சரிவும், அணிக்குள் இருந்த புகைச்சலும், அவரை திடீரென ஓரம் கட்டியது காலத்தின் மறையாத கோலம்.

அவரின் சிறந்த ஆட்டங்கள்:
1. 2007 - டி 20 இறுதி  ஆட்டம்
2. 2011 - உலக கோப்பை இறுதி  ஆட்டம்
3. நியூசிலாந்து டெஸ்ட் தொடர். - 2009
4. ஆஸ்திரேலியாவின்  இந்திய டெஸ்ட் தொடர் - 2008
5. 2011 - உலக கோப்பை - காலிறுதி ஆட்டம் - இந்தியா ஆஸ்திரேலியா

மிக குறுகிய ஆண்டுகளே விளையாட முடிந்தாலும், பல வடிவங்களில், பத்தாயிரம் ரன்களை தொட்ட கம்பிர் சாதனைகள்  கொண்டாட பட வேண்டியதே. அவரே அரிய சாதனை நாயகன். தனக்கு கொடுத்த ஆட்ட நாயகன் விருதை, அன்றைய இளம் வீரர் கோலிக்கு(விராட் கோஹ்லி ) கொடுக்க சொன்ன அவரின் இதயம் மகத்தானதே. வாழ்த்துக்கள் காம்பிர். ஒரு நாள்  நீங்களும் அணியை வழி  நடத்துவீர் என எதிர்பார்த்தோம். அவ்வளவே!!!