Sunday, May 30, 2010

வாய் விட்டு சிரிக்ககுழந்தைகள் நாம் யோசிக்க எண்ணாத கோணங்களில் நிறையவே பயணப்படுகின்றனர்.  அவர்களின் உலகை எட்டி பார்த்த பொழுது.. டேய்! இது எல்லாம் கண்ணாடி ஜாடி, தொட்டு விடாதே! எல்லாம் ஒடஞ்சிடும். இது நம் அக்கறை; அறிவுரை; அடுத்த பத்தாவது நிமிடம் கண்ணாடி ஜாடி நிச்சயம் சுக்கலாய் உடைந்திருக்கும். இன்னும் சில பையன்கள் உள்ளனர். கண்ணாடி பாட்டில் இருந்தால், போகிற போக்கில் ஒரு தள்ளு. அது உடைந்தால் எப்படி இருக்கும் என பார்க்க வேண்டாமா? யாராவது செயல் முறை விளக்கம் கொடுத்தால் தானே? நண்பர் ஒருவர் தான் சந்தித்த சம்பவத்தை விவரித்து இருந்தார். அவரது குடும்பம் முழுதும் ஒரு வாரம் மூணார் போய் விட்டு வந்து இருந்தனர். வரும் பொழுது, அங்கிருந்தே ஐந்து  கிலோ வரை தேயிலை தூள் வாங்கி வந்திருந்தனர். ஊருக்க வந்த ஒரு சில நாளில், அவர் வீட்டு வாண்டு, தன் நண்பர்களை அழைத்து, அந்த ஐந்து கிலோ டப்பாவை கீழே  கவிழ்த்து, இதோ பாருங்கள்! இது தேயிலை. இதை நாங்கள் மூணாறில் இருந்து வாங்கி வந்தோம் என விளக்கம் கொடுத்து கொண்டிருந்தான். அவனது கை நிறைய தேயிலையை அலைந்ததும், தரை நிறைய மண்ணாய் இருந்ததும் வேறு விஷயம்.


இந்த தொகுப்பு என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது.
அது ஒரு காலை நேரம். அந்த சமயம் சிறுவன் பாபி, சமையலறையை எட்டி பார்கிறான். அவனது அம்மா மதிய சமையலுக்காக, மும்முரமாய் வேலை செய்து கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவனது பிறந்த நாள் வர போகின்றது. தனக்கு என்ன வேண்டும் என்பதை இப்பொழுதே சொல்லி உறுதிபடுத்தி கொள்ளவேண்டும் என்பது அவனது அவா. பாபி அவன் அம்மாவை நெருங்கி, அம்மா எனக்கு என் பிறந்த நாளுக்காய் ஒரு பைக் வாங்கி தா என்கிறான்.
 
சிறுவன் பாபி நிறையவே குறும்புகள் செய்வபன். பள்ளியிலும் சரி,  வீட்டிலும் சரி, அவனது வால்தனம்?! சற்றே அதிகம். பாபியை நோக்கி திரும்பிய அவன் அம்மா.. நீ நிஜமாய், பைக்கை பெற அருகதை உள்ளவனா? யோசித்து பார் என கேட்டார்.. பாபி தனக்குள் அந்த தகுதி இருப்பதாகவே நினைத்தான். அவனது அம்மா, அவனது கடந்த ஒரு வருட செயல்களை நினைவுக்கு கொணர முயன்றார். அவர் பாபியிடம் நீ உன் அறைக்கு சென்று, சென்ற ஒரு வருடத்தில் எப்படி நடந்து கொண்டாய் என யோசித்து பார் என சொன்னார். மேலும் அதன் பின், நீ எவ்வளவு தூரம் தகுதியானவன் என்பதை சொல்லி கிருஷ்ண பகவானுக்கு கடிதம் எழுது என்றார். தன் அறைக்கு வந்த பாபி கிருஷ்ணனுக்கு கடிதம் எழுத அமர்ந்தான்.


கடிதம் 1
அன்புடைய கிருஷ்ணா,
நான் இந்த வருடம் நிறையவே,  நல்ல பையனாக இருந்தேன். நான் எனது பிறந்த நாளுக்காய், ஒரு பைக்கை எதிபார்க்கிறேன். அதன் நிறம் சிவப்பாய் இருக்கட்டும்.

உன் நண்பன்,
பாபி.

பாபிக்கு தெரிந்த வரையில் தான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. ஆகவே இந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத ஆரம்பித்தான்.

 கடிதம் 2
அன்புடைய கிருஷ்ணா,
இது உன் நண்பன் பாபி. நான் இந்த வருடம் நல்ல பையனாய் இருந்தேன். நான் சிவப்பு நிற பைக்கை பெற ஆவலாய் உள்ளேன். நன்றி,

நட்புடன்,
பாபி.

இதன் பின் பாபி யோசித்தான். தான் சொன்னது பொய்யே. அதனால் அந்த கடிதத்தை கிழித்து விட்டு இன்னொரு கடிதம் எழுத துவங்கினான்.  

கடிதம் 3
அன்புடைய கிருஷ்ணா,

நான் இந்த வருடம் பரவாயில்லை ரகத்தில் இருந்தேன். இருப்பினும் எனக்கு ஒரு பைக் வேண்டும்.
பாபி.

இந்த கடிதத்தையும் இறைவனுக்கு அனுப்ப முடியாது என பாபிக்கு தெரியும். ஆகவே அதையும் கிழித்து விட்டு நான்காவது கடிதத்துக்கு தாவினான்.

கடிதம் 4
கிருஷ்ணா,
எனக்கு தெரியும்! நான் நல்ல பையனாய் இந்த வருடம் இருக்கவில்லை. நான் அதற்காக வருத்தபடுகிறேன். நான் இனி நல்ல பையனாய் இருப்பேன். ஆகவே எனக்கு பைக்கை தயவுகூர்ந்து  அனுப்பி வை.  நன்றி.
பாபி.

பாபி அறிந்தவரை இது உண்மையாய் இருப்பினும், இறைவன் தனக்கு பைக்கை அனுப்ப மாட்டான் என எண்ணினான். துக்கம் அவனை ஆட்கொண்டது. அதன் பின், அவனது அம்மாவிடம் சென்று தான் கோயிலுக்கு சென்று வருவதை சொல்லி சென்றான். அந்த நிலையில் அவனது அம்மா தனது எண்ணம் வெற்றி கண்டதாய் எண்ணினார். பாபியின் முகம் வாடி இருந்ததே அதற்க்கு காரணம். அந்த நிலையில் அவனது அம்மா பாபியிடம் மறக்காமல், மதிய உணவுக்கு வருமாறு ஞாபகப்படுத்தினார். கீழே இறங்கி வந்தே பாபி, தன் தெருவில், இறுதி திருப்பத்தில் இருந்த கிருஷ்ணர் கோவிலை சென்றடைந்தான்.

கோவிலில் சுற்றும் முற்றும்  பார்த்தான். யாரும் இல்லை. அந்த நிலையில் குனிந்து அங்கு இருந்த ராதை சிலையை எடுத்தான். எடுத்தவன், ராதை சிலையை, தன் சட்டை இடைவெளியில் மறைத்து கொண்டான். பின் அங்கிருந்த தன் வீட்டுக்கு ஓட்டம் எடுத்தான். பின் தன் அறைக்கு வந்த அவன் வீட்டு கதவை தாளிட்டான். அதன் பின் ஒரு தாளுடன், கிருஷ்ணனுக்கு  கடிதம் எழுத அமர்ந்தான்.

கடிதம் 5
நான் உன் பிரிய காதலியை கடத்திக்கொண்டு வந்து விட்டேன். அவளை மீண்டும் பார்க்க வேண்டும் எனும் எண்ணம் இருந்தால், எனக்கு பைக்கை உடனடியாக அனுப்பி வை!!!!!

இப்படிக்கு,
பாபி.
.
.

மொபைலும், க்யுபிட் தேவதையின் கையும்


கைபேசியின் உபயோகம் வரமா சாபமா என ஒரு பக்கம் பட்டிமன்றம் நீள்கிறது. நான் கண்ட வரையில் வரமே! பல நேரங்களில், கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் அருமையாய், சில சமயம் ஆச்சர்யத்தோடும்[ நிறைய உள்குத்தோடும் ] வருகின்றது..   குறுஞ்செய்தி வந்துள்ளதை உணர்த்தும் அழைப்பு அதை விட அருமை.. "மாமாமா......  நீங்க எங்க இருக்கீங்க" வில் துவங்குகிறது அதன் பரிணாமம். "மாமா! மெசேஜ் வந்திருக்கு பாரு.. " - இது ஒரு வகை.  அடுத்த வகை சற்றே வித்தியாசமானது.  முதலில், பி பி. சி குரலில்..  " Excuse me Boss!" வடிவேலு குரலில் சற்றே எரிச்சலுடன்  "என்னா ? " ."You have a text message !" திரும்பவும் வடிவேலு.. "அது தான் சொல்லியாச்சு அல்ல! கெளம்பு!"

குறுஞ்செய்திகள் பல வகை ஒவ்வொன்றும் ஒரு வகை.. ம்ம். ஆகட்டும்! ஆகட்டும்!

  • வேதனை கவிதை: ஒரு நண்பன் அருகில் இருந்தும் பேச முடியவில்லை.. உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை ! எக்சாம் ஹால்! என்ன கொடுமை சார்? [ எதோ சிவாஜி ரேஞ்சில் பீல்! மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் பிரிந்து விட்டன! சந்தித்த போது பேச முடியவில்லையே!]
  • திராட்சை பிழியப்பாடாவிடின், நல்ல ஒயின் கிடைப்பதில்லை. மலர்கள், சாறு எடுக்கபடாவிடின், நல்ல வாசனை திரவியம் இல்லை. ஆகவே வாழ்வில், நீங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டால், வாழ்வு உங்களிடமிருந்து அற்புதமான மனிதனை வெளி கொணர்கிறது என அர்த்தம்.
  •  ஒரு குடை, மழையை தடுத்து நிறுத்தாது,. ஆனால், மழையிலும், நாம் தொடர்ந்து நிற்கவும் பயணப்படவும் முடியும். அது போலவே, தன்னம்பிக்கை வெற்றியை தருவதில்லை. ஆனால், எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் வல்லமையை தருகிறது.
  • வாழ்க்கை நாம் எண்ணுகிற திசையில் எல்லாம், திரும்புவதில்லை. ஆனால் நம்மால், நாம் எண்ணுகின்ற  வகையில்  சிறப்பாய் வாழ முடியும். நம் வாழ்வை நறுக்கு தெரித்தது போல், மிக சரியாய் வாழ முடியா விடினும் அந்த இடத்தை,  அர்த்தம் நிறைந்த நிமிடங்களால் இட்டு நிரப்ப முடியும்! ஒவ்வொரு நிகழ்வையும் அர்த்தம் நிறைந்ததாய் மாற்ற முடியும். 
  • வாழ்கையில், நிறைய தருணங்களில், நமக்கான அனைத்து கதவுகளும் அடைபட்டு விட்டதாய் எண்ணுகிறோம். அப்படி ஒரு சமயத்தில், நாம் ஒரு விஷயத்தை  நினைவில் கொள்வோம். அடைபட்ட கதவுகள் பூட்ட்டப்படாமல் இருக்கும்.
  • நீ இப்பொழுது ஓய்வாய் உள்ளாயா? உன்னோடு சில நிமிடம் மனம் விட்டு பேச வேண்டும் நேரம் கிடைத்தால் என்னை அழை. அதற்க்கு பின்   இரண்டு வரிகள் விட்டு.. "ஒன்றுமில்லை நாளை, அரபிக்கடல் விலைக்கு வருகிறது.!  நாம வாங்கி போடலாமா? "
  • அமைதி பூத்த உதடுகள், நிறைய தருணங்களில் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். ஆனால் புன்னகை பூக்கும் உதடுகள், நிறைய பிரச்சனைகளை தீர்க்க உதவும். ஆகவே உன் முகம் எப்பொழுதும் புன்னகையால் நிரம்பட்டும்!
  • வாழ்விடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதே! எதிர்பார்ப்புகள் மன வருத்தத்தை கொணர்பவை. எதிபார்ப்புகள் இல்லை என்றால், ஒவ்வொரு நிமிடமும், ஆச்சர்யமானதே!. ஆச்சர்யம், நிறைய மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்.
  • ஒவ்வொரு இதயமும், தன்னுடன் நிறையவே  வலியை சுமந்து செல்கின்றது. அதில் ஒரே வித்தியாசம்,  ஒரு சிலர் அதை தன் கண்களில் மறைக்க முயல்கின்றனர். சிலர், புன்னகையால் கடக்க முயல்கின்றனர்.
  • ஒரு முடியக்கூடிய வேலையை உங்களால் செய்து முடிக்க முடிந்தால், அது உங்கள் திறமை. ஒரு முடிக்க முடியாத பணியை, நீங்கள் முயன்று முடிக்க முன் வந்தால் அது உங்கள் தன்னம்பிக்கை. - பிடல் காஸ்ட்ரோ
இந்த குறுஞ்செய்திகள் இரவு முழுதும் வந்து நம்மை தொல்லை தருவது இன்னொரு விஷயம். அப்படி ஒரு நாள், நான் அறைக்கு வந்த பொழுது அறை நண்பர், இன்னொரு புதிய மனிதரை அறிமுகம் செய்வித்தார். அதன் பின் அவர்கள் உறங்க இன்னொரு அறைக்கு சென்றனர்   அப்பொழுது எனக்கு தெரியவில்லை. ஒரு குட்டி சாத்தானையும் விட்டு செல்கின்றனர் என... அதன் பின் அவரது கை பேசியில் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொரு நிமிடமும், "மாமா மெசேஜ்  வந்திருக்கு பாரு ! " என ஆரம்பித்தால் எப்படி இருக்கும். ஒரு வழியாய் அப்படி இப்படி என அந்த கைபேசியை முயன்று மௌனமாக்கினேன். இதற்கு எல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு நிகழ்ச்சி காலையில் நடந்தது.

மார்கழி குளிரில், இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி கைபேசி மூலம் காத்திருந்தது . அவரது கை பேசி, காலை நாலரை மணி  அளவில், உச்ச ஸ்தாயியில், " வண்டியிலே மாமன் பொண்ணு! ஓட்டுறவன் செல்ல கண்ணு!  " என ஆரம்பித்தது. அதன் பின், அவர்  சாவகாசமாய் வந்து அதை நிறுத்தியது தனி கதை. போகும் பொழுது, நம் நண்பர் ரொம்ப அப்சட் ஆயிட்டாரு போல என, அறை நண்பரிடம் சொல்லி போனார். நானும் இல்ல அய்யா! இல்ல! ராத்திரியிலே ஒரு சுத்தியல் கெடைக்காம போயிருச்சு என சொல்லி கொண்டேன்.

அதன் பின் என் அறை நண்பர் கதையை, ஒரு நாள் ஆரம்பித்தார். நம் விருந்தினர் ஒரு நாள், ஒரு எண்ணிற்கு தொடர்பு கொள்கையில், அது வேறொரு எண்ணிற்கு போய் விட்டது. அது தான் துவக்கம். அந்த எண், இன்னொரு ஊரில் இருந்த முகம் தெரியாத பெண்ணுடையது. சாதாரணமாய் பேச ஆரம்பித்த நட்பு, இறுதியில் நிறைய இறுகி போனது. இந்த பையன், நான் பார்ப்பதற்கு சாயிப் அலி கான் மாதிரி இருப்பேன் என சொல்ல, அந்த அம்மிணியும், நான், தீபிகா படுகோன் தங்கச்சி போல் இருப்பேன்[ பிரகாஷ் படுகோனே அவர்களுக்கு ஒரே பொண்ணு தான் என நீங்கள் லாஜிக் சொல்லி, கண்ணை குத்த வராதீர்கள்..  ] என சொல்லி இருக்கிறது.  லைலா, மஜ்னு, அம்பிகா, அமராவதி, ரோமியோ, ஜூலியட் வரிசையில் இன்னொரு இணை என இருவரும் பெருமை பட்டு கொண்டிருந்தனர். வைரமுத்து வார்த்தைகளில் சொன்னால், ஷெல்லியின், பைரனின் கல்லறை தூக்கத்தை கலைத்திட ஆவலோடு இருந்தனர். 

இப்படி போன காதல் உற்சவம், ஒரு நாள் இன்னொரு திருப்பத்துக்கு வந்தது. இருவரும் சந்திப்பது என்றும், அந்த பெண் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது என்றும் முடிவானது. பையனும், முதல் நாள் இரவே பயணப்பட்டு,  இருநூறு  கிலோமீட்டரை பேருந்தில் கடந்து போய் சேர்ந்து விட்டான். காலை எட்டரை மணிக்கு, பேருந்து நிலையம் வந்தாகி விட்டது. அந்த நிலையில், தன் கை பேசியில், பேச எத்தனிக்கிறான். அந்த நிலையில் அவனுக்கு சற்று தள்ளி ஒரு பெண், சற்றே பரபரப்போடும், கை பேசியை முறைத்தபடியும் இருந்துள்ளது. நண்பன் எதிர்பார்க்காத முற்றிலும் வேறொரு உருவம் எதிரில்....  ஊரில் இருந்த எல்லா குல சாமிகளையும் வேண்டி கொண்டு,[ இந்த பெண்ணாய் மட்டும் இருக்க கூடவே கூடாது என  ... ] அழைத்து இருக்கிறான். நீங்கள் யூகித்தது சரி தான். அந்த பெண் தான் அது. அட நீங்கள் இங்கே தான் இருந்தீர்களா? என பேச்சு தொடர்ந்துள்ளது.

அதன் பின், அந்த ஊரில் இருந்த பெரிய கடையில் சிற்றுண்டி உண்டு, துணிகள் வாங்கி, மதியம் ஒரு திரைப்படம் பார்த்து, ஊரை நன்றாக வளம் வந்து, பிரியா விடை கண்டு திரும்பி இருக்கிறார்கள். அட! அதன் பின் என்ன ஆச்சு!  இன்னமும் நட்பு தொடர்கின்றதா? என ஆவல் கொண்டோம்.  அந்த பையன் வரும் வழியில், எதிர்பட்ட ஆற்று போக்கில், தன் சிம்மை விட்டெறிந்து இருக்கிறான். இது தான் நடந்திருக்கிறது. இந்த தொடரில், சம்பந்தம் இல்லாமல், மேலே உள்ள,  அறை நிகழ்வு, எதற்கு என்கிறீர்களா?  இந்த கதையின் மத்திய பகுதியின் ஒரு நாள் தான், நான் சந்தித்ததும், மண்டை காய்ந்ததும்..அட ராத்திரியில் கூட குறுஞ்செய்திகளா! என நீங்கள் ஆச்சர்ய பட கூடும். ஆனால் காதலுக்கு தான் நேரம் காலம் கத்தரிக்காய் எதுவும் இல்லையே!
.
.

Friday, May 21, 2010

தைர்யத்தின் மறு உருவம் - அனு அம்மா

எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மிக அதிர்ச்சியாய் இருந்தது. மருத்துவமனைக்கு படையெடுப்பதும், பின் நோய்களில் இருந்து விடுபட்டு அதை அற்புத அனுபவமாய் நகை சுவையோடு சொல்லும் அவர் இன்று இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. கண்கள் நீர் சொறிந்தபடி அவரது வாழ்வை, புரட்டுகின்றன. மரணம் ஒரு கருப்பு ஆடு. அது பூச்செடிகளை தின்று விடும் என்பதை மீண்டும் உணர வேண்டி உள்ளது.

முன்பொருமுறை மங்கையர் மலர் இதழில், இது நான் கடந்து வந்த பாதை.. என தன வாழ்வையே மற்றவர்களுக்கு ஒளிவு மறைவின்றி படிப்பினையாய் தந்தவர் அவர். கணவனை இழந்ததும், தன குடும்பத்துக்காக உழைத்ததும், ஈடுபாட்டோடு தன்னை பெரும் போராட்டத்துக்கு தயார்படுத்தியதும், அவருக்கே உரித்தானவை. எஸ். வீ. சேகரிடம் ஸ்டில் போட்டோ கிராபி கற்றவர். நேவி ப்ளு சட்டை கண்ணில் தட்டு பட்டால், அது தன் ரமணன் என எண்ணி, அட அவர் தான் போய்விட்டாரே என சமாதானம் கொண்டவர். தனக்கு கஷ்டம் என்றால் தயிர் சாதத்துடன் வீட்டு வாசலில் வந்து நின்ற தன் தாத்தா பாட்டியை அவர் அறிமுகம் செய்ய தவறியதில்லை. அவரது படைப்புகள் மூலம் நம்மை இன்னும் ஆட்கொண்டு வருபவர். நாவல்கள், சிறுகதை, பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாய் மிளிர்ந்தவர். நம்பிக்கையும், துணிவும் அவரது படைப்பெங்கும் கிளை விரித்திருக்கும். பெண்களை காட்சி படுத்துவதில் , அக உணர்வுகளை சொல்லி செல்வதில், படித்துறையில் கால் நனைக்கும் குழந்தையின் சிலிர்ப்பை போல் இருக்கும்.


நிறைய குடும்பங்களுக்கு தன் வழிகாட்டுதல் மூலம் ஒளி ஊட்டியவர். அவரின் கடிதங்கள் ஒவ்வொன்றும் அம்மாவின் துணிச்சலை சொல்லி செல்லும். குழப்பங்கள் கூடு கட்டும் எத்தனையோ மனங்களுக்கு இருள் நீக்கி நல்வழிக்கு கொணர்ந்திருக்கிறார். நேற்று விகடன் படித்தபொழுது தான் உணர்ந்தேன், அவர் அற்புதமான இசை விமர்சகர் என.. காமேஸ்வரி அய்யர் என விகடனில் வந்த இசை விமர்சனங்கள் அனு அம்மா அவர்களுடையது என. அவரது சிறுகதைகள், நாவல்கள் நிறைய ஆற்றுபடுத்தி உள்ளன.

பல வியாதிகள் அவரை தொந்தரவுக்கு உள்ளாகிய பொழுதும், தன் எழுத்து பணியை ஆத்ம திருப்தியாய் செய்தவர். நான் உடம்புக்கு சரி இலாத பொழுது யாராவது என்னை பார்க்க வந்தால் அவர்களை வர வேண்டாம் என சொல்லி விடுவேன். அவர்கள் வந்து நான் கஷ்டப்படுவதை பார்ப்பதை விரும்பவில்லை என தன்வழி விளக்கம் சொன்னவர். தன் புன்னகையை மட்டுமே இறுதி வரைக்கும் தன் அடையாளமாய் விட்டு சென்றுள்ளாரோ? . தன் அர்த்தமுள்ள பக்கங்களை தன் அடையாளமாய் விட்டு சென்றுளார். ஒரு முறை குறிப்பிட்ட பொழுது கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை நூறு முறைக்கு மேல் படித்திருப்பேன் என சொன்னார். பிறரை குட்டுவதாகட்டும், வழி  காட்டுவதாகட்டும் அனு அம்மா தனித்துவமானவரே.தன் இறுதி நாட்களில் கூட, மலர் மருத்துவமனையில், செவிலியருடன் கலகலப்பாய், நாட்களை கழித்திருக்கிறார். இறுதியாக தன் மகளிடம், "தைர்யமாக இரு. Be Positive" என சொல்லி இருக்கிறார். அழியாத மன உறுதியும், எதையும் எதிர்கொள்ளும் தைர்யமுமே அவரை அவர் வாழ்வை முன்னெடுத்து சென்றுள்ளன. அவரது மறைவுக்கு பின், அவரது கண்கள், இருவர்க்கு வெளிச்சத்தை தந்த வண்ணம் இருக்கின்றன.  போய் வாருங்கள் அம்மா. உங்கள் பயணம் தனித்துவமானதே!
.
.

Sunday, May 16, 2010

பால்யத்தின் கோடை நாட்கள் [ ஐம்பதாவது பதிவு ]

பால்ய நதியில் புரண்டு வந்தபின், சிதறும் நீர்த்துளிகள், அவ்வளவு எளிதில் உதிர்ந்து, உலர்ந்து போவதில்லை. வளர்ந்த பின், கோடை நாட்கள் அவ்வளவாக சுவாரஸ்யம் கொள்ளவில்லை; ஏன், வருடங்கள் புரள்வது கூட ஆச்சர்யம் கொள்ளவைக்கின்றது. பால்யத்தில் ஒவ்வொரு கோடையும், மனதுக்கு நெருக்கமாய் நிகழ்வுகளை தந்திருக்கின்றது. அந்த வருட வசந்தத்தின் துவக்கமாய், மரம் முழுதும் துளிர்விடும் இளம் துளிர்களை போல் பசுமையானவை. மழை துளிகளுக்காய் காத்திருக்கும் சிப்பியை போல் கோடையை எண்ணி குதூகலித்த நாட்கள் அவை.

பால்யத்தில் ஒவ்வொரு கோடையும் ஒரு பெரிய கொண்டாட்டம். இனி இரண்டு மாதங்களுக்கு பாடப்புத்தகம், பரீட்சை தேவை இல்லை என மனம் உற்சாகம் கொள்ளும்; இறுதி பரீட்சை எழுதும் தருணத்தில் இருந்தே, மனதில் வரும் நாட்களின் நிகழ்வுகள் ஊர்வலம் போக துவங்கும். இறுதி நாளில், எதிர்படும் நண்பனை, எதிரியை, யாவரையும் மையில் வகையாய் குளிப்பாட்டி, தலை முதல் கால் வரை ஹோலி கொண்டாடி, நமக்கே நம்மை அடையாளம் தெரியாதபடி வீடு வந்து சேர்வோம். விடுமுறை துவங்கி, சில நாட்களில் தாத்தா ஊர்களுக்கு பயணமாவோம்; அன்று துவங்கும் பேருந்து பயணம் ஒரு வசீகர பக்கம். கடந்து போகும் ஊர்கள், புதிய மனிதர்கள் என புதிய உலகம் கண்முன் விரியும்.

உறவினர் இல்லத்தில், காலையில் மட்டும், மனம் காலண்டர் தாள்களை புரட்டி இன்னும் எத்தனை நாள் விடுமுறை மீதம் உள்ளதென கணக்கிட்டபடி இருக்கும். வாழ்வின் சுவாரஸ்ய பக்கங்களில் பால்யமே அலாதியானது. விடுமுறை முதல் நாளில் இருந்து, கொய்யா, மா மரங்கள் எங்களை போன்ற வாண்டுகளால் குத்தகைக்கு எடுத்து கொள்ளப்படும். அணில்கள் கூட எங்களின் அனுமதியின் பேரில் காயை கொண்டு செல்லும். நண்பகல் பொழுதில், நுங்கு மரங்கள் எங்கள் தாகங்களை தணிக்க பயன்படும். வாரத்தில் இரு நாட்கள் பலா பழங்கள் சுவை கூட்டும். கிணற்று தோனியும், தண்ணீர் தொட்டிகளும் மீன் குஞ்சுகளாய் நம்மை மாற்ற பிரயத்தனப்படும். கிணற்று மேடுகளிடம் தான் காலம் தோறும் எத்தனை எத்தனை கதைகள் கைவசம்?  அன்று பாட்டிகளின் வற்புறுத்தலின் பேரில் தவறாமல் உண்டு வந்த விருந்துகள் இன்றும் தித்திகின்றன.

பெரிய பாட்டியின் வீட்டில் விருந்துண்ண போகாத நாட்களில் அவர்கள் முற்றிலும் கோபித்து கொண்டதுண்டு. அவர்களின் அன்பின் வெளிப்பாடே அந்த கோபம் என இன்று புலப்படுகின்றது. ஆண்டு தோறும் சந்திக்கும் நட்பு வட்டம், முதிய உறவினர்கள், அவர்களின் சுவாரஸ்ய அளவளாவல் மகிழ்ச்சி தரும். அன்றைய விளையாட்டு முடிவில், இன்னும் இந்த நாள் தொடராதா என ஏக்கம் கொண்டதுண்டு. விளையாடி, கை வலிக்கிறது, கால் வலிக்கிறது என அழுத நாட்களை, பாட்டி சொன்ன வார்த்தை வாழ்க்கைகான பாடம்.. "சுமையாய் இருந்தால் நானும் கொஞ்ச நேரம் சுமக்கலாம்.. இதில் நீ மட்டுமே பொறுத்து வலியை தாங்கி கொள்." என்பார். 

கோடையில் வந்த அம்மை நோயும், பாட்டியின் கைகளை பிடித்தபடி கடந்த நடந்துபோன அந்த நாட்களும், பாட்டியின் மறைவிற்கு பின்னான பல வருடங்களுக்கு பின்பும் நெஞ்சில் நிழலாடுகின்றன. வைகாசி முதலில் மழை ஆரம்பிக்கும். விடுமுறை முடிந்ததென ஊருக்கு புறப்பட்டு வந்த நாட்களில் மனம் இன்னொரு விடுமுறைக்காய் தவம் செய்ய துவங்கும். ஊருக்கு வந்திறங்கினால், மழை தன கரங்களால், நிறைய மாறுதலை தந்து ஊரையே உருமாற்றம் தந்திருக்கும். தண்ணீர் மேவிய மண் பரப்பு, வெள்ளம் துடைத்துவிட்டு போன வரப்புகள், குட்டை குட்டையாய் தேங்கி நிற்கும் மழைநீர் என பரவசம் தருவதாய் ஊர் மாறி இருக்கும். குளுமை கால் விரல்களை தொட, ஈர மண்ணில் தடம்பதிக்கும் காளைகளை ரசிக்கலாம்.

தண்ணீர் பாயும் ஈர நிலம் தோறும் நாம் செய்யும் களிமண் பொம்மைகள், நம்மை பார்த்து, என்ன விளையாட வரமாட்டாயா? என இன்னமும் அழைத்தபடி இருக்கின்றன. அன்று செய்த குட்டி சட்டியும், குறு அகப்பையும் அடுத்த மழை நாள் வரையில் அப்படியே கரையாமல் இருந்திருக்கும். மழை நாட்களில் எங்கிருந்தோ கொண்டு வந்த ரோஜா பதியங்களும், முருங்கை கொப்பும், ஒவ்வொரு நாளும் துளிர் விட்டுள்ளதா? என மனம் நோட்டம் விட்டபடி இருக்கும். தூர்ந்த பானைகளில் இட்ட செம்மண்ணும், அதை அலங்கரிக்கும் துளசியும் இன்னும் அழகே! எங்கிருந்தோ வந்து சேர்ந்த வாடா மல்லியும், துலுக்க மல்லியும் காலி இடத்தை அழகுபடுத்தும். மறக்காது என்றும் தொழும் கருப்பராயன், என்ன வந்தாயா என தலை திருப்பி புன்முறுவல் பூக்கும்..

கோடையின் இன்னொரு சுவாரஷ்யம் கதை இரவுகள். சிந்துபாத் கதைகள், பாரத கதைகள், ஷேக்ஸ்பியர் தொகுப்புகள்[ குட்டையை அவ்வப்பொழுது கிளப்பும் பக் கதாபாத்திரம் நிஜமாகவேஅருமை ] என கதை கேட்டல் சுவாரஷ்யமானவை. அருகில் அமைந்த நூலகமும் நம்மை மகிழ்ச்சிபடுத்தும். இன்றும் கண்கள் அம்புலிமாமா, கோகுலத்தை தேடுகின்றன. வேதாளத்துடம் முருங்கை மரத்தில் இருந்து இறங்கும் விக்கிரமாதித்தன் போல், நாமும் புதிருக்காய் தவமிருப்போம். எதிர்படும் பூதங்கள், இரவிலும் பயம் கூட்டும். சீதா பாட்டியும், அப்புசாமியும், ரச குண்டும், இன்னும் ஞாபக நதியில் உள்ளனர்.  சிறுவர்க்கான ராமாயணம், மகாபாரதம் இன்னும் நாட்களை அர்த்தபடுத்தும். அன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பான ராமானந்த சாகரின் ராமாயணமும், சோப்ராவின் மகாபாரதமும் நினைவுக்கு வருகின்றன. மகாபாரதத்தை விட, அதில் வரும் கதை யுத்தம், வாள் சண்டை, பேப்பர் வாயிலாக அன்று ஒளிபரப்பாகும் தொடர் பற்றிய விளக்கம் இன்னும் காலை நேரத்தை பரபரப்பாக்கும்.

அதன் பின் வந்த நாட்களில்,  பள்ளிக்கான புதிய நோட்டு புத்தகங்கள், புதிய பள்ளி சீருடைகள், புத்தம் புது காலணிகள் என நாட்கள் மாறி போகும். பழைய மை பேனாக்கள் சுத்தம் செய்து, புதிதாய்  கைகளுக்கு வந்துவிடும். சென்ற வருடத்து ஆசிரியர்கள், மாணவர்கள் விடை பெற்று, மனம் புதிய ஆசிரியர்களை எதிர்பார்க்க துவங்கிடும். புதிதாய் விடுதிக்கு வரும் மாணவர்கள் கண்ணீரோடு பெற்றோருக்கு விடை தருவர். இன்று எண்ணும் பொழுதும், அந்த கடந்து போன நாட்கள் தித்திகின்றன. இன்று,  பள்ளி துவங்கும் நாளில், எதிர்படும் சிறுவர்கள் அந்த நாட்களை நினைவுக்கு கொணர்கின்றனர். கடந்துபோன அந்த கனா காலங்களுக்கு நன்றி. வாழ்க்கை பயணம் இனிதே தொடர்கிறது.
.
.