Sunday, May 16, 2010

பால்யத்தின் கோடை நாட்கள் [ ஐம்பதாவது பதிவு ]

பால்ய நதியில் புரண்டு வந்தபின், சிதறும் நீர்த்துளிகள், அவ்வளவு எளிதில் உதிர்ந்து, உலர்ந்து போவதில்லை. வளர்ந்த பின், கோடை நாட்கள் அவ்வளவாக சுவாரஸ்யம் கொள்ளவில்லை; ஏன், வருடங்கள் புரள்வது கூட ஆச்சர்யம் கொள்ளவைக்கின்றது. பால்யத்தில் ஒவ்வொரு கோடையும், மனதுக்கு நெருக்கமாய் நிகழ்வுகளை தந்திருக்கின்றது. அந்த வருட வசந்தத்தின் துவக்கமாய், மரம் முழுதும் துளிர்விடும் இளம் துளிர்களை போல் பசுமையானவை. மழை துளிகளுக்காய் காத்திருக்கும் சிப்பியை போல் கோடையை எண்ணி குதூகலித்த நாட்கள் அவை.

பால்யத்தில் ஒவ்வொரு கோடையும் ஒரு பெரிய கொண்டாட்டம். இனி இரண்டு மாதங்களுக்கு பாடப்புத்தகம், பரீட்சை தேவை இல்லை என மனம் உற்சாகம் கொள்ளும்; இறுதி பரீட்சை எழுதும் தருணத்தில் இருந்தே, மனதில் வரும் நாட்களின் நிகழ்வுகள் ஊர்வலம் போக துவங்கும். இறுதி நாளில், எதிர்படும் நண்பனை, எதிரியை, யாவரையும் மையில் வகையாய் குளிப்பாட்டி, தலை முதல் கால் வரை ஹோலி கொண்டாடி, நமக்கே நம்மை அடையாளம் தெரியாதபடி வீடு வந்து சேர்வோம். விடுமுறை துவங்கி, சில நாட்களில் தாத்தா ஊர்களுக்கு பயணமாவோம்; அன்று துவங்கும் பேருந்து பயணம் ஒரு வசீகர பக்கம். கடந்து போகும் ஊர்கள், புதிய மனிதர்கள் என புதிய உலகம் கண்முன் விரியும்.

உறவினர் இல்லத்தில், காலையில் மட்டும், மனம் காலண்டர் தாள்களை புரட்டி இன்னும் எத்தனை நாள் விடுமுறை மீதம் உள்ளதென கணக்கிட்டபடி இருக்கும். வாழ்வின் சுவாரஸ்ய பக்கங்களில் பால்யமே அலாதியானது. விடுமுறை முதல் நாளில் இருந்து, கொய்யா, மா மரங்கள் எங்களை போன்ற வாண்டுகளால் குத்தகைக்கு எடுத்து கொள்ளப்படும். அணில்கள் கூட எங்களின் அனுமதியின் பேரில் காயை கொண்டு செல்லும். நண்பகல் பொழுதில், நுங்கு மரங்கள் எங்கள் தாகங்களை தணிக்க பயன்படும். வாரத்தில் இரு நாட்கள் பலா பழங்கள் சுவை கூட்டும். கிணற்று தோனியும், தண்ணீர் தொட்டிகளும் மீன் குஞ்சுகளாய் நம்மை மாற்ற பிரயத்தனப்படும். கிணற்று மேடுகளிடம் தான் காலம் தோறும் எத்தனை எத்தனை கதைகள் கைவசம்?  அன்று பாட்டிகளின் வற்புறுத்தலின் பேரில் தவறாமல் உண்டு வந்த விருந்துகள் இன்றும் தித்திகின்றன.

பெரிய பாட்டியின் வீட்டில் விருந்துண்ண போகாத நாட்களில் அவர்கள் முற்றிலும் கோபித்து கொண்டதுண்டு. அவர்களின் அன்பின் வெளிப்பாடே அந்த கோபம் என இன்று புலப்படுகின்றது. ஆண்டு தோறும் சந்திக்கும் நட்பு வட்டம், முதிய உறவினர்கள், அவர்களின் சுவாரஸ்ய அளவளாவல் மகிழ்ச்சி தரும். அன்றைய விளையாட்டு முடிவில், இன்னும் இந்த நாள் தொடராதா என ஏக்கம் கொண்டதுண்டு. விளையாடி, கை வலிக்கிறது, கால் வலிக்கிறது என அழுத நாட்களை, பாட்டி சொன்ன வார்த்தை வாழ்க்கைகான பாடம்.. "சுமையாய் இருந்தால் நானும் கொஞ்ச நேரம் சுமக்கலாம்.. இதில் நீ மட்டுமே பொறுத்து வலியை தாங்கி கொள்." என்பார். 

கோடையில் வந்த அம்மை நோயும், பாட்டியின் கைகளை பிடித்தபடி கடந்த நடந்துபோன அந்த நாட்களும், பாட்டியின் மறைவிற்கு பின்னான பல வருடங்களுக்கு பின்பும் நெஞ்சில் நிழலாடுகின்றன. வைகாசி முதலில் மழை ஆரம்பிக்கும். விடுமுறை முடிந்ததென ஊருக்கு புறப்பட்டு வந்த நாட்களில் மனம் இன்னொரு விடுமுறைக்காய் தவம் செய்ய துவங்கும். ஊருக்கு வந்திறங்கினால், மழை தன கரங்களால், நிறைய மாறுதலை தந்து ஊரையே உருமாற்றம் தந்திருக்கும். தண்ணீர் மேவிய மண் பரப்பு, வெள்ளம் துடைத்துவிட்டு போன வரப்புகள், குட்டை குட்டையாய் தேங்கி நிற்கும் மழைநீர் என பரவசம் தருவதாய் ஊர் மாறி இருக்கும். குளுமை கால் விரல்களை தொட, ஈர மண்ணில் தடம்பதிக்கும் காளைகளை ரசிக்கலாம்.

தண்ணீர் பாயும் ஈர நிலம் தோறும் நாம் செய்யும் களிமண் பொம்மைகள், நம்மை பார்த்து, என்ன விளையாட வரமாட்டாயா? என இன்னமும் அழைத்தபடி இருக்கின்றன. அன்று செய்த குட்டி சட்டியும், குறு அகப்பையும் அடுத்த மழை நாள் வரையில் அப்படியே கரையாமல் இருந்திருக்கும். மழை நாட்களில் எங்கிருந்தோ கொண்டு வந்த ரோஜா பதியங்களும், முருங்கை கொப்பும், ஒவ்வொரு நாளும் துளிர் விட்டுள்ளதா? என மனம் நோட்டம் விட்டபடி இருக்கும். தூர்ந்த பானைகளில் இட்ட செம்மண்ணும், அதை அலங்கரிக்கும் துளசியும் இன்னும் அழகே! எங்கிருந்தோ வந்து சேர்ந்த வாடா மல்லியும், துலுக்க மல்லியும் காலி இடத்தை அழகுபடுத்தும். மறக்காது என்றும் தொழும் கருப்பராயன், என்ன வந்தாயா என தலை திருப்பி புன்முறுவல் பூக்கும்..

கோடையின் இன்னொரு சுவாரஷ்யம் கதை இரவுகள். சிந்துபாத் கதைகள், பாரத கதைகள், ஷேக்ஸ்பியர் தொகுப்புகள்[ குட்டையை அவ்வப்பொழுது கிளப்பும் பக் கதாபாத்திரம் நிஜமாகவேஅருமை ] என கதை கேட்டல் சுவாரஷ்யமானவை. அருகில் அமைந்த நூலகமும் நம்மை மகிழ்ச்சிபடுத்தும். இன்றும் கண்கள் அம்புலிமாமா, கோகுலத்தை தேடுகின்றன. வேதாளத்துடம் முருங்கை மரத்தில் இருந்து இறங்கும் விக்கிரமாதித்தன் போல், நாமும் புதிருக்காய் தவமிருப்போம். எதிர்படும் பூதங்கள், இரவிலும் பயம் கூட்டும். சீதா பாட்டியும், அப்புசாமியும், ரச குண்டும், இன்னும் ஞாபக நதியில் உள்ளனர்.  சிறுவர்க்கான ராமாயணம், மகாபாரதம் இன்னும் நாட்களை அர்த்தபடுத்தும். அன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பான ராமானந்த சாகரின் ராமாயணமும், சோப்ராவின் மகாபாரதமும் நினைவுக்கு வருகின்றன. மகாபாரதத்தை விட, அதில் வரும் கதை யுத்தம், வாள் சண்டை, பேப்பர் வாயிலாக அன்று ஒளிபரப்பாகும் தொடர் பற்றிய விளக்கம் இன்னும் காலை நேரத்தை பரபரப்பாக்கும்.

அதன் பின் வந்த நாட்களில்,  பள்ளிக்கான புதிய நோட்டு புத்தகங்கள், புதிய பள்ளி சீருடைகள், புத்தம் புது காலணிகள் என நாட்கள் மாறி போகும். பழைய மை பேனாக்கள் சுத்தம் செய்து, புதிதாய்  கைகளுக்கு வந்துவிடும். சென்ற வருடத்து ஆசிரியர்கள், மாணவர்கள் விடை பெற்று, மனம் புதிய ஆசிரியர்களை எதிர்பார்க்க துவங்கிடும். புதிதாய் விடுதிக்கு வரும் மாணவர்கள் கண்ணீரோடு பெற்றோருக்கு விடை தருவர். இன்று எண்ணும் பொழுதும், அந்த கடந்து போன நாட்கள் தித்திகின்றன. இன்று,  பள்ளி துவங்கும் நாளில், எதிர்படும் சிறுவர்கள் அந்த நாட்களை நினைவுக்கு கொணர்கின்றனர். கடந்துபோன அந்த கனா காலங்களுக்கு நன்றி. வாழ்க்கை பயணம் இனிதே தொடர்கிறது.
.
.

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க.. சிலிர்க்குது.. ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்..:-)))

THIRUMALAI said...

கார்திகைப்பாண்டியன் தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்