Saturday, December 8, 2018

வீரயுக நாயகன் வேள்பாரி - தொடர் : அரியதோர் புனைவுலகு



பாரி பாரி என்றுபல ஏத்தி 
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் 
பாரி ஒருவனும் அல்லன் 
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
“பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும் இருக்கின்றது.”
மேகத்தைப் போன்றவன் பாரி என நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய உத்தி நினைதற்குரியது.

வீரயுக நாயகன் வேள்பாரி தொடர்,  அரியதோர் புனைவுலகு தன்னை தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது.  முதலில், தொடாத ஒரு சிற்றரசனை, அவ்வைக்கும்,  கபிலனுக்கும் பின் பாடுபொருளாக்கிய சு.வெங்கடேசனுக்கும், அவரின் எண்ணத்தை, தன் உயிர் ஓவியத்தால் கதையை கண் முன் நிகழ்த்தி காட்டிய ஓவியர் மணியன்செல்வன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்; தன் வழியே அரிய படைப்பை அளித்த விகடனுக்கு வாழ்த்துக்கள்;



 கல்கியை, சாண்டில்யனை, அகிலனை, நா. பாவை,கோவி மணிசேகரன், கலைமாமணி விக்ரமன் அவர்களை, ரா சு நல்லபெருமாள் அவர்களின் படைப்புகளை படித்த நான், இந்த மிகு புனைவில் கட்டுண்டேன். குறிஞ்சி கபிலனை கண் முன்  நிறுத்தியமைக்காக நன்றிகள். நட்புக்கு உதாரணமான மனிதர்கள் கபிலனும் பாரியும் சேர்த்தே. பாரி உயிர் நீத்த நிலையில், கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தது நட்பின் நவிலல்;


 பாரியின் கதை  சொல்லி, குறிஞ்சி பாட்டுடை தலைவனை, விட்டு விட்டால் எப்படி; முருகனும் வள்ளியும் அவர்களின் காதலும் பொழிந்தபடி செல்கிறது மழை மேகமாய்;

ஓவியரை எப்படி சொல்வதென தெரியவில்லை; கண்களில் வியப்பு மேலிட பார்த்துக்கொண்டே இருக்கலாம். எப்பொழுதும் - போல ம. செ. அவர்களின் ராஜ பாட்டை இதிலும் தொடர்கிறது. அந்த பாரியின் ஓவியம், முருகன் வள்ளி, போர் நிகழ்வுகள், யானைகள், குதிரைகள்,  காடு, மரம்,தொடும்  பச்சைகள், கபிலர், பாணர்கள், மேக கூட்டம்,விண்மீன் திரள்கள், அட அந்த தேர், ,சுனைகள்    - அசாதாரணமான எண்ண  ஓவியம்;


பல இடங்களில், மிகு கற்பனையில், நம்மை முகிழ்க்க ஆசிரியர் தவறவில்லை. ஒரு காடு - காடரிதல், வண்டுகள், நொச்சி புகை, ஆட்கொல்லி மரம், எலி, தேவ வாக்கு விலங்கு  என அது ஒரு தனி கற்பனை உலகம். முருகனை சொல்லி தினை காத்தலை சொல்லாமல் விட்டால் எப்படி; காட்டை, மழையை, மனிதர்களை, விலங்குகளை, பறவையை அத்தனையும் கபிலரை போலெ இங்கும் பாடுபொருள்.  காட்டில் அமைத்த பரண், கொண்டாட்டங்கள், உண்ட கள் வியப்பு தான்; போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள், விற்கள், விந்தையான வாள் - ஒவ்வொன்றின் பின்னும் அதன் தனி சிறப்புகள் அதன் விவரிப்புகள் அற்புதமானவை;
       
இது வரையில், இப்படி ஒரு போர்க்கள விவரிப்பை, விறு விறுப்பாய் படித்ததில்லை; பொற்சுவையின் தியாகத்தை மறக்க முடிவதில்லை; பாரியை அவன் வீரத்தை கண்முன் கொண்டு வந்ததில் பெரும் வெற்றி ம. செ அவர்களுக்கு உரியது.

பாரியின் கதை வழியே அறிமுகமான பெயர்கள் அற்புதம் - திசைவேலர், பொற் சுவை, தேக்கன், முடியன், இறவாதான், செங்கண சோழன், பொதிய வெற்பன், உதிரன், கருங்கைவாணன்  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு கதை களத்துக்கு நம்மை கரம் பற்றி இட்டு சென்ற சு. வெங்கடேசன் பாராட்டுக்கு  உரியவர். தொடரட்டும் உங்கள் பயணம்.. வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்;


தமிழ் வரலாற்று நாவலாசிரியர்கள் - படைப்புகள்
maniyan selvam, su venkatesan

https://www.vikatan.com/news/tamilnadu/136950-velpari-100th-episode-writer-svenkatesan-praises-readers.html

https://www.vikatan.com/anandavikatan/2018-sep-26/serials/144328-vel-paari-historical-hero.html

https://www.vikatan.com/anandavikatan/2018-apr-04/serials/139649-vel-paari-historical-hero.html

http://www.tamilvu.org/courses/degree/d011/d0114/html/d0114210.htm
நன்றி : Tamilvu, விகடன் 

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்