கைபேசியின் உபயோகம் வரமா சாபமா என ஒரு பக்கம் பட்டிமன்றம் நீள்கிறது. நான் கண்ட வரையில் வரமே! பல நேரங்களில், கைபேசியில் வரும் குறுஞ்செய்திகள் அருமையாய், சில சமயம் ஆச்சர்யத்தோடும்[ நிறைய உள்குத்தோடும் ] வருகின்றது.. குறுஞ்செய்தி வந்துள்ளதை உணர்த்தும் அழைப்பு அதை விட அருமை.. "மாமாமா...... நீங்க எங்க இருக்கீங்க" வில் துவங்குகிறது அதன் பரிணாமம். "மாமா! மெசேஜ் வந்திருக்கு பாரு.. " - இது ஒரு வகை. அடுத்த வகை சற்றே வித்தியாசமானது. முதலில், பி பி. சி குரலில்.. " Excuse me Boss!" வடிவேலு குரலில் சற்றே எரிச்சலுடன் "என்னா ? " ."You have a text message !" திரும்பவும் வடிவேலு.. "அது தான் சொல்லியாச்சு அல்ல! கெளம்பு!"
குறுஞ்செய்திகள் பல வகை ஒவ்வொன்றும் ஒரு வகை.. ம்ம். ஆகட்டும்! ஆகட்டும்!
- வேதனை கவிதை: ஒரு நண்பன் அருகில் இருந்தும் பேச முடியவில்லை.. உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை ! எக்சாம் ஹால்! என்ன கொடுமை சார்? [ எதோ சிவாஜி ரேஞ்சில் பீல்! மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் பிரிந்து விட்டன! சந்தித்த போது பேச முடியவில்லையே!]
- திராட்சை பிழியப்பாடாவிடின், நல்ல ஒயின் கிடைப்பதில்லை. மலர்கள், சாறு எடுக்கபடாவிடின், நல்ல வாசனை திரவியம் இல்லை. ஆகவே வாழ்வில், நீங்கள் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டால், வாழ்வு உங்களிடமிருந்து அற்புதமான மனிதனை வெளி கொணர்கிறது என அர்த்தம்.
- ஒரு குடை, மழையை தடுத்து நிறுத்தாது,. ஆனால், மழையிலும், நாம் தொடர்ந்து நிற்கவும் பயணப்படவும் முடியும். அது போலவே, தன்னம்பிக்கை வெற்றியை தருவதில்லை. ஆனால், எந்த பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ளும் வல்லமையை தருகிறது.
- வாழ்க்கை நாம் எண்ணுகிற திசையில் எல்லாம், திரும்புவதில்லை. ஆனால் நம்மால், நாம் எண்ணுகின்ற வகையில் சிறப்பாய் வாழ முடியும். நம் வாழ்வை நறுக்கு தெரித்தது போல், மிக சரியாய் வாழ முடியா விடினும் அந்த இடத்தை, அர்த்தம் நிறைந்த நிமிடங்களால் இட்டு நிரப்ப முடியும்! ஒவ்வொரு நிகழ்வையும் அர்த்தம் நிறைந்ததாய் மாற்ற முடியும்.
- வாழ்கையில், நிறைய தருணங்களில், நமக்கான அனைத்து கதவுகளும் அடைபட்டு விட்டதாய் எண்ணுகிறோம். அப்படி ஒரு சமயத்தில், நாம் ஒரு விஷயத்தை நினைவில் கொள்வோம். அடைபட்ட கதவுகள் பூட்ட்டப்படாமல் இருக்கும்.
- நீ இப்பொழுது ஓய்வாய் உள்ளாயா? உன்னோடு சில நிமிடம் மனம் விட்டு பேச வேண்டும் நேரம் கிடைத்தால் என்னை அழை. அதற்க்கு பின் இரண்டு வரிகள் விட்டு.. "ஒன்றுமில்லை நாளை, அரபிக்கடல் விலைக்கு வருகிறது.! நாம வாங்கி போடலாமா? "
- அமைதி பூத்த உதடுகள், நிறைய தருணங்களில் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். ஆனால் புன்னகை பூக்கும் உதடுகள், நிறைய பிரச்சனைகளை தீர்க்க உதவும். ஆகவே உன் முகம் எப்பொழுதும் புன்னகையால் நிரம்பட்டும்!
- வாழ்விடம் இருந்து எதையும் எதிர்பார்க்காதே! எதிர்பார்ப்புகள் மன வருத்தத்தை கொணர்பவை. எதிபார்ப்புகள் இல்லை என்றால், ஒவ்வொரு நிமிடமும், ஆச்சர்யமானதே!. ஆச்சர்யம், நிறைய மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும்.
- ஒவ்வொரு இதயமும், தன்னுடன் நிறையவே வலியை சுமந்து செல்கின்றது. அதில் ஒரே வித்தியாசம், ஒரு சிலர் அதை தன் கண்களில் மறைக்க முயல்கின்றனர். சிலர், புன்னகையால் கடக்க முயல்கின்றனர்.
- ஒரு முடியக்கூடிய வேலையை உங்களால் செய்து முடிக்க முடிந்தால், அது உங்கள் திறமை. ஒரு முடிக்க முடியாத பணியை, நீங்கள் முயன்று முடிக்க முன் வந்தால் அது உங்கள் தன்னம்பிக்கை. - பிடல் காஸ்ட்ரோ
மார்கழி குளிரில், இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி கைபேசி மூலம் காத்திருந்தது . அவரது கை பேசி, காலை நாலரை மணி அளவில், உச்ச ஸ்தாயியில், " வண்டியிலே மாமன் பொண்ணு! ஓட்டுறவன் செல்ல கண்ணு! " என ஆரம்பித்தது. அதன் பின், அவர் சாவகாசமாய் வந்து அதை நிறுத்தியது தனி கதை. போகும் பொழுது, நம் நண்பர் ரொம்ப அப்சட் ஆயிட்டாரு போல என, அறை நண்பரிடம் சொல்லி போனார். நானும் இல்ல அய்யா! இல்ல! ராத்திரியிலே ஒரு சுத்தியல் கெடைக்காம போயிருச்சு என சொல்லி கொண்டேன்.
அதன் பின் என் அறை நண்பர் கதையை, ஒரு நாள் ஆரம்பித்தார். நம் விருந்தினர் ஒரு நாள், ஒரு எண்ணிற்கு தொடர்பு கொள்கையில், அது வேறொரு எண்ணிற்கு போய் விட்டது. அது தான் துவக்கம். அந்த எண், இன்னொரு ஊரில் இருந்த முகம் தெரியாத பெண்ணுடையது. சாதாரணமாய் பேச ஆரம்பித்த நட்பு, இறுதியில் நிறைய இறுகி போனது. இந்த பையன், நான் பார்ப்பதற்கு சாயிப் அலி கான் மாதிரி இருப்பேன் என சொல்ல, அந்த அம்மிணியும், நான், தீபிகா படுகோன் தங்கச்சி போல் இருப்பேன்[ பிரகாஷ் படுகோனே அவர்களுக்கு ஒரே பொண்ணு தான் என நீங்கள் லாஜிக் சொல்லி, கண்ணை குத்த வராதீர்கள்.. ] என சொல்லி இருக்கிறது. லைலா, மஜ்னு, அம்பிகா, அமராவதி, ரோமியோ, ஜூலியட் வரிசையில் இன்னொரு இணை என இருவரும் பெருமை பட்டு கொண்டிருந்தனர். வைரமுத்து வார்த்தைகளில் சொன்னால், ஷெல்லியின், பைரனின் கல்லறை தூக்கத்தை கலைத்திட ஆவலோடு இருந்தனர்.
இப்படி போன காதல் உற்சவம், ஒரு நாள் இன்னொரு திருப்பத்துக்கு வந்தது. இருவரும் சந்திப்பது என்றும், அந்த பெண் பேருந்து நிலையத்தில் காத்திருப்பது என்றும் முடிவானது. பையனும், முதல் நாள் இரவே பயணப்பட்டு, இருநூறு கிலோமீட்டரை பேருந்தில் கடந்து போய் சேர்ந்து விட்டான். காலை எட்டரை மணிக்கு, பேருந்து நிலையம் வந்தாகி விட்டது. அந்த நிலையில், தன் கை பேசியில், பேச எத்தனிக்கிறான். அந்த நிலையில் அவனுக்கு சற்று தள்ளி ஒரு பெண், சற்றே பரபரப்போடும், கை பேசியை முறைத்தபடியும் இருந்துள்ளது. நண்பன் எதிர்பார்க்காத முற்றிலும் வேறொரு உருவம் எதிரில்.... ஊரில் இருந்த எல்லா குல சாமிகளையும் வேண்டி கொண்டு,[ இந்த பெண்ணாய் மட்டும் இருக்க கூடவே கூடாது என ... ] அழைத்து இருக்கிறான். நீங்கள் யூகித்தது சரி தான். அந்த பெண் தான் அது. அட நீங்கள் இங்கே தான் இருந்தீர்களா? என பேச்சு தொடர்ந்துள்ளது.
அதன் பின், அந்த ஊரில் இருந்த பெரிய கடையில் சிற்றுண்டி உண்டு, துணிகள் வாங்கி, மதியம் ஒரு திரைப்படம் பார்த்து, ஊரை நன்றாக வளம் வந்து, பிரியா விடை கண்டு திரும்பி இருக்கிறார்கள். அட! அதன் பின் என்ன ஆச்சு! இன்னமும் நட்பு தொடர்கின்றதா? என ஆவல் கொண்டோம். அந்த பையன் வரும் வழியில், எதிர்பட்ட ஆற்று போக்கில், தன் சிம்மை விட்டெறிந்து இருக்கிறான். இது தான் நடந்திருக்கிறது. இந்த தொடரில், சம்பந்தம் இல்லாமல், மேலே உள்ள, அறை நிகழ்வு, எதற்கு என்கிறீர்களா? இந்த கதையின் மத்திய பகுதியின் ஒரு நாள் தான், நான் சந்தித்ததும், மண்டை காய்ந்ததும்..அட ராத்திரியில் கூட குறுஞ்செய்திகளா! என நீங்கள் ஆச்சர்ய பட கூடும். ஆனால் காதலுக்கு தான் நேரம் காலம் கத்தரிக்காய் எதுவும் இல்லையே!
.
.
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்