Friday, May 21, 2010

தைர்யத்தின் மறு உருவம் - அனு அம்மா

எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மிக அதிர்ச்சியாய் இருந்தது. மருத்துவமனைக்கு படையெடுப்பதும், பின் நோய்களில் இருந்து விடுபட்டு அதை அற்புத அனுபவமாய் நகை சுவையோடு சொல்லும் அவர் இன்று இல்லை என்பதை நம்ப மனம் மறுக்கிறது. கண்கள் நீர் சொறிந்தபடி அவரது வாழ்வை, புரட்டுகின்றன. மரணம் ஒரு கருப்பு ஆடு. அது பூச்செடிகளை தின்று விடும் என்பதை மீண்டும் உணர வேண்டி உள்ளது.

முன்பொருமுறை மங்கையர் மலர் இதழில், இது நான் கடந்து வந்த பாதை.. என தன வாழ்வையே மற்றவர்களுக்கு ஒளிவு மறைவின்றி படிப்பினையாய் தந்தவர் அவர். கணவனை இழந்ததும், தன குடும்பத்துக்காக உழைத்ததும், ஈடுபாட்டோடு தன்னை பெரும் போராட்டத்துக்கு தயார்படுத்தியதும், அவருக்கே உரித்தானவை. எஸ். வீ. சேகரிடம் ஸ்டில் போட்டோ கிராபி கற்றவர். நேவி ப்ளு சட்டை கண்ணில் தட்டு பட்டால், அது தன் ரமணன் என எண்ணி, அட அவர் தான் போய்விட்டாரே என சமாதானம் கொண்டவர். தனக்கு கஷ்டம் என்றால் தயிர் சாதத்துடன் வீட்டு வாசலில் வந்து நின்ற தன் தாத்தா பாட்டியை அவர் அறிமுகம் செய்ய தவறியதில்லை. அவரது படைப்புகள் மூலம் நம்மை இன்னும் ஆட்கொண்டு வருபவர். நாவல்கள், சிறுகதை, பத்திரிகை ஆசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளியாய் மிளிர்ந்தவர். நம்பிக்கையும், துணிவும் அவரது படைப்பெங்கும் கிளை விரித்திருக்கும். பெண்களை காட்சி படுத்துவதில் , அக உணர்வுகளை சொல்லி செல்வதில், படித்துறையில் கால் நனைக்கும் குழந்தையின் சிலிர்ப்பை போல் இருக்கும்.


நிறைய குடும்பங்களுக்கு தன் வழிகாட்டுதல் மூலம் ஒளி ஊட்டியவர். அவரின் கடிதங்கள் ஒவ்வொன்றும் அம்மாவின் துணிச்சலை சொல்லி செல்லும். குழப்பங்கள் கூடு கட்டும் எத்தனையோ மனங்களுக்கு இருள் நீக்கி நல்வழிக்கு கொணர்ந்திருக்கிறார். நேற்று விகடன் படித்தபொழுது தான் உணர்ந்தேன், அவர் அற்புதமான இசை விமர்சகர் என.. காமேஸ்வரி அய்யர் என விகடனில் வந்த இசை விமர்சனங்கள் அனு அம்மா அவர்களுடையது என. அவரது சிறுகதைகள், நாவல்கள் நிறைய ஆற்றுபடுத்தி உள்ளன.

பல வியாதிகள் அவரை தொந்தரவுக்கு உள்ளாகிய பொழுதும், தன் எழுத்து பணியை ஆத்ம திருப்தியாய் செய்தவர். நான் உடம்புக்கு சரி இலாத பொழுது யாராவது என்னை பார்க்க வந்தால் அவர்களை வர வேண்டாம் என சொல்லி விடுவேன். அவர்கள் வந்து நான் கஷ்டப்படுவதை பார்ப்பதை விரும்பவில்லை என தன்வழி விளக்கம் சொன்னவர். தன் புன்னகையை மட்டுமே இறுதி வரைக்கும் தன் அடையாளமாய் விட்டு சென்றுள்ளாரோ? . தன் அர்த்தமுள்ள பக்கங்களை தன் அடையாளமாய் விட்டு சென்றுளார். ஒரு முறை குறிப்பிட்ட பொழுது கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை நூறு முறைக்கு மேல் படித்திருப்பேன் என சொன்னார். பிறரை குட்டுவதாகட்டும், வழி  காட்டுவதாகட்டும் அனு அம்மா தனித்துவமானவரே.



தன் இறுதி நாட்களில் கூட, மலர் மருத்துவமனையில், செவிலியருடன் கலகலப்பாய், நாட்களை கழித்திருக்கிறார். இறுதியாக தன் மகளிடம், "தைர்யமாக இரு. Be Positive" என சொல்லி இருக்கிறார். அழியாத மன உறுதியும், எதையும் எதிர்கொள்ளும் தைர்யமுமே அவரை அவர் வாழ்வை முன்னெடுத்து சென்றுள்ளன. அவரது மறைவுக்கு பின், அவரது கண்கள், இருவர்க்கு வெளிச்சத்தை தந்த வண்ணம் இருக்கின்றன.  போய் வாருங்கள் அம்மா. உங்கள் பயணம் தனித்துவமானதே!
.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்