தி.ஜானகிராமனுடைய எழுத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கதவு திறக்கும். அவரது கதையில், ஒவ்வொரு வசனத்துக்கும் ஒரு தேவை இருக்கும். ஒரேயொரு வசனத்தை நீக்கினாலும் கதையில் உள்ள ஏதோவொன்று வெளியே போய்விடும். ஒவ்வொரு வார்த்தையிலும் கதை ஓர் அலகு முன்னேறும். கதையின் இறுதிப் புள்ளியை நோக்கி மெல்லிய நகர்வு நிகழ்ந்தபடியே இருக்கும். ஆனால் அது கண்ணுக்கு புலப்படாது. நுட்பமாக கதைகூறும் திறனும் கவித்துவ நடையும் அவருடைய முத்திரை. விருந்து மண்டபம் ஒன்றுக்கு ஓர் அழகி நேர்த்தியாக உடையணிந்து, அலங்கரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறாள். உடனே அங்கிருக்கும் அத்தனை பெண்களும் தங்கள் தங்கள் உடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறார்கள். அப்படித்தான், தி.ஜாவின் எழுத்தை படிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஒருமுறை திரும்பவும் பார்த்துக் கொள்வார்கள். - எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
இது தி.ஜானகிராமன் அவர்களின் பிறந்த நூற்றாண்டு. ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டம் தந்த ஆகப் பெரிய ஆளுமைகளில் ஜானகிராமன் முதன்மையானவர்.
தமிழ் கூறும் நல்லுலகில், ஜானகிராமன் விட்டு சென்ற நல்முத்துக்கள் - சிறுகதை, நாவல், பயண இலக்கியம், நாடகம் என விரவிக்கிடக்கிறது. கொத்தமங்கலம் சுப்பு எப்படி தஞ்சையின் கலைப்பொக்கிஷங்களை தில்லானா மோகனாம்பாள் என வார்த்தைகளில் வடித்தாரோ, அப்படியே ஜானகிராமன் தன் எழுத்து வழியே ஜீவித்ததோடு வாழ்கிறார்.
ஜானகிராமன் எழுத்துக்களில் வரும் மனிதர்கள், அபூர்வமான மன இயல்பு கொண்டவர்கள். வியாசரின் பாரதம், மனிதரின் எல்லா மனக்கோணங்களையும், சிப்பி எப்படி சிதறினால் விழுமோ அப்படி படியெடுத்திருப்பார். அப்படியே, மாறுபாடில்லாத எழுத்துக்களை தன்னிடம் கொண்டவை ஜானகிராமன் எழுத்துக்கள்.
நான் சில எழுத்துக்களை படித்து, சில காலத்துக்கு பின் மீண்டும் படிக்க நேர்ந்தால், அட! இந்த எழுத்தையா நான் மாய்ந்து மாய்ந்து படித்தேன் என வியப்பேன். ஆனால் ஜானகிராமன் எழுத்துக்களை 30 ஆண்டுகள் கழித்து படித்தாலும், அதே சிலிர்ப்பு மேலிடுகிறது என்கிறார் சுஜாதா.
ஜானகிராமன் புதினங்கள் தொட்ட வாசிப்பு பரவலை, அவரது சிறுகதைகள் தொடாதது வருத்தமே! ஆனால் அவரது சிறுகதைகள் அத்தனை அற்புதமானவை(முள்முடி, பாயாசம் இன்னும் நினைவில் வந்து போகின்றன )...
ஜானகிராமன் கதைகளில் வரும் ஆழ்ந்த, மிக நுண்ணிய இசை குறிப்புகள் அவருக்கு உரியவை;தனித்துவம் மிக்கவை; அவர் எந்த ஒரு வாசகனையும், தன் எழுத்தின் ஆற்றலால், மேல் துண்டில் முடிகிற வெற்றிலை சீவல் போல் முடிச்சிட்டு முடிந்தவர்; வெல்ல பாகை போல் எழுத்து சுவை மிக்கது;
அவரது புதின தலைப்புகளே ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும்; ஒரு புதினத்தில் கண்ட பாத்திரம், இன்னொரு புதினத்தில், சற்றே மாறி உப பாண்டவங்களை சமைத்தது போல் உரு கொள்ளும்; அம்மா வந்தாள், மோக முள், உயிர் தேன், நள பாகம், மரப்பசு என சொல்லிக்கொண்டே போகலாம்;
ஜானகிராமனுக்கு பின் எழுத வந்தவர்களில், நிறைய பேரிடம், அவரின் தாக்கம் இருப்பதை உணர முடியும்;புத்தாயிரம் ஆண்டுகளில், தினமணி கதிர், எழுத்தாளர்களின் முதல் கதை பிரசுரித்த அனுபவத்தை கொண்டு "முதல் பிரசவம்" என தொடர்ந்து வெளியிட்டது; அப்படி ஒரு வாரம், தமிழின் ஆக பெரிய ஆளுமை(பெண் எழுத்தாளர்), ஜானகிராமன் மறைந்த அந்த நாளை, ஆகப்பெரிய துயரம் தன்னை போர்த்தியதாய் குறிப்பிட்டார்;
ஜானகிராமன் சொல்லும் உவமைகள், என்றென்றும் திகட்டாதவை; அடிக்கரும்பின் நுனியின் சுவைகொண்டவை; அவரின் வார்த்தைகளில் சொன்னால்"...
"அப்பா ஈர வேட்டியை உதறி 'இந்தா' என்று கட்டிக்கொள்ள கொடுத்தார் ; பிறகு அவரே இடையை சுற்றி அதை கட்டி விட்டார்;விபூதியை குழைத்து நெற்றியில் இட்டார்; பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்கட்டு வித்தை போல, வானத்தில் நட்சத்திரம் முளைப்பது போல, ஈரம் உலர்ந்து விபூதி பளிச்சிட வெண்மை".
ஜானகிராமன் கதைகளும், காவிரியும் பிரிக்க முடியாத இரட்டை தண்டவாளங்கள்;அவர் எங்கு பயணப்பட்டாலும், அவருள் காவிரி அடியாழத்தில், நொப்பும் நுரையுமாக பயணப்படுகிறது; இதயத்தில் ஓடும் இரத்த நாளங்கள் போல் தான், அவருள் ஓடும் காவிரியும்; வெகு நாட்கள் தில்லியில் வாழ்ந்தாலும், சென்னையில் வாழ்ந்தாலும், பால்யத்து காவிரி அப்படியே உள்ளங்கையில்; காவிரி இல்லாத அவர் எழுத்து, நினைத்து பார்க்க முடியாதது; சில நேரங்களில், சுளித்து ஓடும், சில நேரங்களில் துள்ளி குதிக்கும், சில நேரங்களில் காட்டருவியாய் பேரோசையோடு ஆர்ப்பரித்து ஓடும்;
அவரது பயண இலக்கியத்தில், உதய சூரியனுக்கும், நடந்தாய் வாழி காவேரிக்கும் அற்புத தடமுண்டு; அம்மா வந்தாள் நாவலில், ஒரு பாத்திரம் அப்பு; லிங்கங்களில், ஒவ்வொன்றையும் மனிதன் பஞ்ச பூதத்துக்கு அர்பணித்தான்;அப்படி நீர் லிங்கத்தின், பெயர் - அப்பு. அப்படி நீரின் அத்துணை குணாதிசயங்களையும் தன்னுள் கொண்டது அந்த படைப்பு;
ஜானகிராமன் கதைகளில் வரும் பெண்கள் மிக மிக அபூர்வமானவர்கள்; மிக மிக மனத்தால் வலியவர்கள்;ஏன் ? அவரின் கதைகளின் மைய நீரோட்டமே பெண்கள் தான்; தான் படைக்கும் பாத்திரங்களில், பெண்களை மிக உயர்வாய் உரு கொடுத்திருப்பார்; அவர்களுடன் ஒப்பீட்டளவில் ஆண் பாத்திரங்கள், உச்சுக்கொட்டுகிற அளவில் மட்டுமே உள்ளனர்; அலங்காரம், பவானியம்மாள், இந்து, யமுனா, அனுசுயா,செங்கம்மா என அப்படியோர் அற்புத ஸ்ருஷ்டி;
ஜானகிராமன் எழுத்துக்களுக்கு, புதிதாக சாமரம் தேவையில்லை; காலம் தோறும், அவரின் நினைவோடு அவரின் அத்தனை பாத்திரங்களும் புத்தியல்போடு பயணப்படும்; தஞ்சையின் மாறாத தமிழ் சுவையோடு, அவரின் எழுத்து என்றென்றும் ஜீவித்திருக்கட்டும்;
காடுகள் அனைத்திலும் காற்றைப் பரப்பினான் வருணன்;குதிரைகளுக்கு வேகம் ஊட்டினான். பசுக்களிடம் பாலை நிரப்பினான்; இதயத்தில் அறிவை வைத்தான்; நீரில் அக்கினியை வைத்தான்; வானில் இரவியை வைத்தான்; மலை மீது சோமத்தை வைத்தான்; வானம், பூமி, நடுவானம் எங்கும் முகில்களை பரப்பி கவிழ்த்தான்; அதனால் பூமி நனைந்தது - மழையில் நனையும் தானியம் போல; பால் வேண்டும் போது பரந்த பூமியும், விண்ணையும் நனைக்கிறான் வருணன்; அப்போது, மலை முகில்களை போர்த்திக் கொள்கிறது; மருந்துகள் வந்து அவற்றை இழுத்து வெளியே விடுகிறார்கள்;
இந்த தேவன் பேரறிஞன்; அவனுடைய அதிசய வல்லமையை யார் மறுக்க முடியும்?
வருணனே நண்பன், தோழன், சகோதரன், அண்டை வீட்டுக்காரன் என்று நெருங்கியவர்களுக்கு எல்லாம் எப்பொழுதாவது நாங்கள் பாபம் இழைத்திருக்கலாம்; முன் பின் தெரியாதவர்க்கும் இழைத்திருக்கலாம்; அதிலிருந்து எங்களை விடுவித்து விடு;
வருணனே! சூதாடியை போல அறிந்தோ, அறியாமலோ நாங்கள் ஏமாற்றுக்கள் புரிந்திருக்கலாம்; அவற்றை எல்லாம் நீக்கிவிடு; உன் அன்பும், கருணையும் எங்களுக்கு வேண்டும்;
.
.
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்