எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின், உப பாண்டவம் புதினம் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. விஜயா பதிப்பகம் சென்று வந்த நாட்களில், என்றாவது ஒரு நாள் இந்த புத்தகம் படிக்கவேண்டும் என்ற எண்ணம் உண்டானது. பாரதத்தை கேட்ட நாட்களில், மனது அதிக உற்சாகம் கொள்கின்றது.. இந்த கதைகளின் சுவாரஸ்யம் வேறு கதைகளில் இல்லை.. பாரதம் கேட்ட நாட்களில், அஸ்தினாபுரம், இந்திரபிரஸ்தம் , துவாரகை, மதுரா, பிருந்தாவனம், கோகுலம், இவற்றை என்றாவது ஒருநாள் காண வேண்டும் எனும் ஆவல் எழுந்தது.. எஸ் ராமகிருஷ்ணன் தன் தேசாந்திரி வாழ்வில், மகாபாரதத்துகாகவே பல இடங்களை சுற்றி வந்திருக்கிறார்.. அந்த வகையில் அவரின் கை பிடித்து நடப்பது போல் ஒரு பிரமை கதையெங்கும்..
இது நாள் வரையில், நாங்கள் அறிந்த பாரதம் பாண்டவர் ஐவரை பற்றியே அதிகம் பேசி இருந்தது. அதற்கு அப்பால், பாண்டவர்களின் புதல்வர்கள் அபிமன்யு, கடோத்கஜன், அரவான் இவர்களை அறிந்து இருந்தோம். ஆனால், பாஞ்சாலியின் புதல்வர்களை அவ்வளவாக தெரியாது. இந்த புதின தலைப்பே உப பாண்டவம்.. பாண்டவர் ஐவருக்கும், பாஞ்சாலிக்கும் பிறந்தவர்கள்..
இந்த புதினம், தொடர்ச்சியான கதையால் பின்னப்படாமல், சம்பவங்களால், விவரிக்கப்பட்டு உள்ளது.. சிறுவயது முதல், கதையில் அடுத்து என்ன ? என்ற கேள்வியோடு படித்து பழகி இருப்பதால், இது வேறொரு வடிவம் கொள்கிறது.. உப பாண்டவம், மனிதர்களின் மன ஓட்டத்தை, அவர்களின் இதய அலைவரிசையை படம் பிடிக்கின்றது. மனிதனுக்கே உண்டான அத்துணை குணங்களையும் பத்திரங்கள் கொண்டுள்ளன. குழந்தைகள் பிறந்தவுடன், பிரிந்துவரும் பாஞ்சாலி - அவளின் என்ன ஓட்டம், ஒரு தாய்க்கே உரித்தான தவிப்புகள் இங்கே பதிவு செய்யப்பட்டு உள்ளது. குழந்தைகளை பிறந்தவுடன், அவர்களை திஷ்ட யுத்தமனிடம் கொடுத்துவிடும் அவள், அவர்களின் தவள்தலை, அவர்களின் மழலையை, அவர்களின் தளிர் நடை, அவர்களின் இளம்பிராயம் இவற்றை கண்டதில்லை.. உப பாண்டவர்கள் யாரும் தங்களின் தந்தையை கொண்டு இல்லை. அதற்கு அளிக்கப்படும் பதில் , அவர்கள் மனத்தால் வளர்கிறார்கள்.. உடலால் அல்ல.. அப்படி மனத்தால் வளரும்பொழுது இன்னும் வலிமை உள்ளவர்களாய் இருப்பர் என்பதே.
குந்தியின் எண்ண ஓட்டங்கள் இதில் அதிகம் பகிர்ந்து கொள்ளப்பட்டு உள்ளன. மாத்ரியின் மரணம், அதன் பின் மாத்ரி மேல் குந்தி கொண்ட கோபம் விவரிக்கப்பட்டு உள்ளது.. சல்லியன், பாண்டவர் அணியில் தலைமை ஏற்க அனுமதிக்கப்படவில்லை.. அந்த பொறுப்புக்கு குந்தி, திஷ்ட யுத்தமனை கொண்டு வருகிறாள். நகுல, சகாதேவர்கள், திஷ்ட யுத்தமனை விட, சல்லியனே, ஆக பெரிய வில்லாளி என சொல்லி வருகின்றனர். இறுதி நாட்களை, எண்ணி கொண்டிருக்கும் பீஷ்மரிடம் ஒவ்வொருவரும் வந்து சந்திக்கின்றனர். அந்த பகுதி சரியாக செதுக்கப்பட்டு உள்ளது. கர்ணனிடம் பீஷ்மர், கர்ணா மனிதன், பிறப்பால், அறியப்படுவதில்லை. அவனது செயல்களால் அறியப்படுகிறான் என்கிறார்
விதுரனின் உலகம் ஆச்சர்யத்தோடு விரிகின்றது. இறுதி கணம் வரை, பேசியபடியே இருந்த சத்ய விரதரும், எங்கே தன்னை மீறி பேச்சு வெளிப்பட்டு விடுமோ என கானகத்தில் அலைந்து திரிந்த நாட்களில், வாயில் கூலாங்கட்களை அடக்கி கொண்ட விதுரனும் ஆச்சர்ய துருவங்கள். பல நேரங்களில், அஸ்தினாபுரம், கங்கா புத்திரரின் தேசமோ என சந்தேகம் வருகிறது. ஆனால், அவர் தனக்கும், தன்னை சுற்றி நடக்கும் எதற்கும் சம்பந்தம் இல்லை என்பதாய் நடந்து செல்கிறார். குதிரைகளின் தாகம் தீர்க்க அமைந்த குளக்கரை - அஸ்திர குளக்கரை, மறைந்த பின்பும், சில நாட்களில் .. நதியில் இருந்து எழுந்து வரும, இறந்த அனைத்து மனிதர்களின் காட்சியும், எதோ ஒரு புது விவரிப்பை தந்தவண்ணம் உள்ளன.
சஞ்சயன், தனிமையில் உழலும் காந்தாரி, திருதராஷ்டிரன், அவர்களின் இறுதி நாட்கள், என ஒரு புதிய அக உலகம் அவர்களுடையது. கிருஷ்ணனின் புதல்வன் பிரத்யூம்ணனை அதிகம் கேட்டு உள்ளோம்.. ஆனால் சாம்பவனை கேள்விப்பட்டதில்லை. கிருஷ்ணனை அவன் கண்டதும், அதன் பின் கிருஷ்ணனின் சாபம், நோய் பீடித்த சாம்பவன் என இது புதிய விவரிப்பு.. அவனது உலகம், ஒவ்வொரு மனிதனின் மனசாட்சி போல் அரற்றியபடி உள்ளது..
துரோணரை முன் மாதிரியாய் வைத்து, வித்தை கற்ற ஏகலைவன், தன வித்தையை காண்பிக்கும் காலத்திற்கு ஏங்குகிறான். ஒரு நாள் அஸ்தினாபுர இளவரசர்கள், கானகம் வருகின்றனர். அந்த நிலையில் தன் தேர்ச்சியை நிரூபிக்க, வழியே வந்த நாயின் வாயை, அஸ்திரம் கொண்டு பூட்டுகிறான்.. நாயில் இருப்பே, அதன் குலைப்பு தான். அவனது அந்த நிகழ்வுக்கு உடனே பலன் கிடைக்கிறது. அவன் கட்டை விரல் பரிபோகின்றது.. அம்பாவை குறிப்பிடும்பொழுது, அவமானத்தின் வலிகள் உடல் முழுதும், முறிந்த அஸ்திரம் போல் என்றென்றும் உள்ளதை சொல்கிறார். எவ்வளவு நிஜம்..
துரோணரின் மகன் அஸ்வத்தாமன்.. போரின் இறுதியில், அவனுக்கு வாய்த்த வரமாய், அவன் யுக யுகமாய், சாவு வராமல் எங்கும் சுற்றி அலைவதாய் சொல்லப்பட்டு உள்ளது.. மனிதனுக்கு வாழ்வு எவ்வளவு நிஜமாய் இருக்கிறதோ அப்படியே சாவும்.. மரணமிலாத வாழ்வை போல் ஒரு தண்டனை உலகில் இல்லை போலும்.. எஸ். ராம கிருஷ்ணனின் படைப்பு ஒரு அற்புதமான அனுபவத்தை தந்தது..அற்புதமான படைப்பு உலகுக்கு இட்டு சென்றது.. தங்களுக்கு நன்றியும், நல்வாழ்த்துக்களும்.
வெகு நாட்களுக்கு முன், என் வீட்டில், பாரதத்தை பற்றி பேச்சு எழுந்தது. எல்லா துயரங்களுக்கு பின்பும் கூட, நாம், அரிச்சந்திரனை ஒரு நாளும் பொய் பேசிடாத மனிதனாய் கொண்டாடுகிறோம்.. ஆனால், தருமன், அந்த தகுதியை, பதவி ஆசையால், இழந்து விட்டான் என சொல்லி சென்றனர். துரோணரிடம் பொய் பேசாதவரை, யுதிஷ்டிரனின் தேர் கூட மண்ணை தொடாமல், அந்தரத்தில் பயணித்ததாம். அவன் முதல் பொய் சொன்ன பின், தேர் தரையை தொட்டதாம். இப்படி சொல்கிற யுதிஷ்டிரன், பூமியை விட்டு விலகும் தருணத்தினில், தான் விட்ட இடத்தை பிடித்து கொள்கிறான். தன்னை தொடர்ந்து வந்த சொறி நாயை, ஆற்று வெள்ளம், தன தலைக்கு மேல் வந்த பொழுதும், தன் உயிர் போன பின் , அந்த நாயின் உயிர் போகட்டும் என தன் தலைக்கு மேல் உயர்த்தி பிடிக்கிறான்.. அந்த நிலையில், நீர் தாழ்ந்து இயல்புக்கு வருகிறான்.. அவனது அந்த செயலே, தர்மர் என்ற பெயருக்கான செயலாய் சொல்லப்பட்டு வருகிறது. தன்னை நம்பி வந்தவரை நட்டாற்றில் விடகூடாத குணம் மனிதனுக்கு வேண்டும்.. அப்படி ஒரு குணம் இல்லை என்றால், நம் உயிர் போகும் தருணத்தில் கூட அந்த செயல் மிகுந்த வருத்தத்தை, வலியை தரும்.
.
.
7 comments:
நல்லா எழுதியிருக்கீங்க...
அருமையா எழுதறீங்க... வாழ்த்துக்கள்..
அருமை...
பயனுள்ள பதிவு...பணி தொடர வாழ்த்துக்கள்.. :)
வாக்களித்தவர்கள், மறுமொழி இட்ட பதிவர்கள் அனைவர்க்கும் என் நன்றி..
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்