எனது முந்தய பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு..
http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html
சுவாமி ரங்கநாதானந்தரின் இயற்பெயர் சங்கரன். சங்கரன் இந்த பூமிக்கு வந்த நாள், டிசம்பர் 15 , 1908 . அந்த தினம், தூய அன்னை சாரதா தேவியாரின் பிறந்த தினம்(அதே டிசம்பர் 15 ) .. கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகே உள்ள, திருக்குர் கிராமம் இவரது பிறந்த இடம். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், இவரது பார்வை மிக மிக விசாலமாய் இருந்தது. தான் உலகம் முழுமைக்குமான மனிதன் எனும் எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து இருந்தது. சிறு வயது முதல் நீச்சல் அவருக்கு விருப்பம் உடையதாய் இருந்தது. எங்கும் தண்ணீர் நிறைந்து இருப்பது கேரள மாநிலம்.. அவருக்கு நீர் விளையாட்டில் விருப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு மீன் குஞ்சை போல் அவருக்கு நீச்சல் எளிமையாய் இருந்தது..
அவரது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாய் கொண்டு இருந்தது. அவரது சிறு வயதில் நடந்த இரு சம்பவங்களை பின்னாளில் உவகையோடு நினைவு கூர்கிறார். அவர் பத்து வயதாய் இருந்த தருணத்தில், அவரது தாய் நோய்வாய்பட்டு இருந்தார். அவரது கிராமம் ஒரு நதியின் கரையில் இருந்தது. அந்த நிலையில், அவரது தாய்க்கு மருத்துவம் அளிக்க வேண்டிய நிலை. அது சரியான, அடைமழை காலம். நதி முழுக்க வெள்ள காடாக இருந்தது. ஒரு ஆயுர்வேத மருத்துவர் நதி கரைக்கு அப்பால் வசித்து வந்தார். அவர்களின் வீட்டு சமையல்காரர், அந்த வீட்டு பையன்களில் ஒருவர் அவருடன் வந்தால், தன்னால் நதியை கடந்து மருந்து கொண்டு வர முடியும் என நம்பினார். அந்த நிலையில், இளம் சங்கரன் தான் அவருடன் சென்று வர முன் வருகிறான்.. அவரின் முடிவிற்கான காரணத்தை அவரே சொல்கிறார். ஒன்று அன்னையிடம் கொண்ட ஈடிணை அற்ற அன்பு. மற்றொன்று சாகசத்தின் மேல் அவர் கொண்ட அலாதி பிரியம். அன்று துடுப்பு போடுவது, அவருக்கு ஒரு இனிய விளையாட்டாக இருந்திருக்க கூடும்..
வாழ்வு முழுவதும், அவர் எளிய பாதைகளை தேர்ந்தெடுத்ததில்லை. கடினமான பாதைகள் அவரை மிக நன்றாக உற்சாகப்படுத்தி உள்ளது. உவகை கொள்ள செய்துள்ளது.... அவர் குறிப்பிடும் மற்றொரு சம்பவம்.. இளம் சங்கரனுக்கு 12 அல்லது 13 வயது இருக்கும்.. அவர் அன்று வீட்டில் இருந்தார். அப்பொழுது அவர் வீட்டுக்கு அருகே ஒரு மனிதரை தகாத வார்த்தைகளால் நிந்திக்கிறார்.. அதை கவனித்து விட்ட அவரது தாய், உடனே அவரை இடைமறித்து, மகனே! உனது நாக்கு கலைமகளின் உறைவிடம்.. அதன் வாயிலாக, தகாத வார்த்தைகளை உச்சரித்து, களங்கப்படுத்தி விடாதே என்கிறார். அன்று அவரது தாய் சொன்ன விஷயம், நேராக அவரது மூளைக்கும், இதயத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது . பின்னர் நீண்ட எண்பது ஆண்டு கால வாழ்வில், அவரது வாழ்வில் பேரர்த்தம் உள்ள ஒரு விஷயமாய் மாறி போனது. ஒவ்வொரு முறையும், அது அவரது எண்ணத்தில் நிழலாடி, அவரை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி உள்ளது. தாயின் வார்த்தைகளுக்கு அவ்வளவு மகத்துவம்..
அவரது வாழ்வின் பதினைந்தாவது வயதில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. அப்பொழுது அவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த தருணத்தில், அவரது பள்ளி சகா திருச்சூர் நகர நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்திருந்தார். அந்த புத்தகத்தை இவரிடம் காண்பித்த நண்பர், இந்த புத்தகத்தை படிக்க விருப்பமா? என கேட்டார். ஆங்கிலத்தில் இருந்த அந்த புத்தகம்.. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், "அமுத மொழிகள்" தொகுப்பு - The gospels of sri ramakrishna .. நிறைய மனிதர்களின் வாழ்வை மாற்றிய அந்த புத்தகம், அவரது வாழ்வையும் மாற்றியது. புத்தகத்தை வாங்கிய அவர், முதல் நூறு பக்கங்களை படிக்கும் வரை புத்தகத்தை அவர் கீழே வைக்கவில்லை. ஸ்ரீ ராமகிரிஷ்ணரின் வார்த்தைகள் என்னை முழுமையாக ஆட்கொண்டன என்கிறார். வாழ்வை பற்றிய எண்ணங்களை விசாலமாக்கியத்தில் அந்த புத்தகம் மேற்கொண்ட பங்கு மிக மிக அதிகம்..
அதன் தொடர்ச்சியாக அவருக்கு சுவாமி விவேகானந்தரின் the complete works புத்தகத்தின், மூன்று, நான்கு தொகுப்புகளை படித்து முடித்தார்... அடுத்து அவருக்கு கிடைத்தது, சகோதரி நிவேதிதையின், "என் பார்வையில் ஆசிரியர்.. "[The master as i saw him ]. இந்த சமயத்தில், அவர் கற்ற பாடல் சுவாமி அபேதானந்தர், அன்னையை பற்றி எழுதிய மகத்துவமான வரிகள்.. [ பிரக்ரிதீம் பரமாம் அபயம் வர தாம்..] எனும் துதி பாடல்... தம் ஒட்டுமொத்த வாழ்க்கைகான விதை இங்கே அவருக்கு விழுகிறது. இறை மேல் கொண்ட பக்தி, மனிதர் மேலான பேரன்பாய் மாறி போகிறது.
அமுத மொழிகளின் தொகுப்பை படித்த பின், இளம் சங்கரனுக்கு, 'ம' - என்கிற மகேந்திர நாத் குப்தரின் மேல் அளப்பரிய மரியாதை தோன்றுகிறது. மகேந்திர நாத் குப்தர் - ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இல்லற சீடர்களில் ஒருவர். அவர் குருதேவர்- ராம கிருஷ்ணரை சந்தித்த தருணங்களில், அங்கு நடந்த உரையாடல்களை, அங்கு நடந்த நிகழ்வுகளை, கேட்டு குறிப்பெடுத்து கொண்டவர். அவையே அமுத மொழிகள் தொகுப்பாய் பின்னாளில் மலர்ந்தன.. சங்கரன் பின்னாளில், பிரம்மச்சர்ய தீட்சை பெற, 1929 ஆம் ஆண்டில், பேலூர் மேடம் வந்த நாட்களில், அவர் 'ம' வை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த சமயத்தில், 'ம' வை வணங்கி தன அன்பை காணிக்கையாக்கினார். அடுத்த சில நாட்களில், சில சாதுக்களோடு, ம - வை அவரது வீட்டில் சந்தித்தனர். அவர்கள் அங்கு இருந்த மூன்று மணி நேரத்தில், 'ம ' ஸ்ரீ ராம கிருஷ்ணரை பற்றி மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் என சுவாமி ரங்கநாதானந்தர் பின்னாளில் நினைவு கூர்கிறார் .
.
.
.
சுவாமி ரங்கநாதனந்தரின் சில சொற்பொழிவுகள் இங்கே..
மற்றொன்று உபநிடதத்தின் கருத்துக்கள் சொற்பொழிவுக்கு முன் சென்னையில் 1994
அன்னையை பற்றி
1 comment:
வாக்களித்தவர்கள் மற்றும் பதிவை பார்த்தவர்கள் அனைவர்க்கும் நன்றி!
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்