Sunday, January 24, 2010

சுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி


சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வில் அபூர்வமாய் அமையும். சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நல்ல மனிதர்களின் தொடர் பழக்கம், நம் ஒட்டுமொத்த வாழ்வை புரட்டி போடுகின்றது. சில மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்க முடியவில்லையே என மனம் வருத்தம் கொள்கிறது. அந்த வருத்தத்தை போக்க நம்மிடம் இருப்பது அவர்கள் விட்டு சென்ற அவர்களின் புத்தகம், அனுபவங்கள், கருத்துக்கள்.. . ஒரு மனிதரை பற்றிய புத்தகங்கள், அவரோடு நாம் வாழ்ந்த அனுபவத்தை நமக்கு தரவல்லவை என்கிறார் பரமன் பச்சைமுத்து.

அப்படி நான் புத்தகங்கள் மூலம் அறிந்த மனிதர் சுவாமி ரங்கநாதானந்தர். சுவாமி ரங்கநாதானந்தர் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் பதின்மூன்றாவது தலைவராய் இருந்தவர். மிகப்பெரிய மாறுதல்களை தன்னகத்தே கொண்டிருந்த சென்ற நூற்றாண்டோடு, இவரது வாழ்வும் பின்னி பிணைந்திருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை.


வெறும் பள்ளி படிப்போடு இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர், சுவாமி ரங்கநாதானந்தர். மடத்தில் இணைந்தவுடன், அவர் மேற்கொண்ட பணி, சமையலில் உதவுவதும், தோட்ட வேலைகளை கவனிப்பதுவும்.. அப்படி எளிமையாய் துவங்கிய அவரது பணி, உலகம் முழுவதும் கிளை பிரித்து பரந்திருக்கும், இயக்கத்தின் தலைவரானதும், ஒப்புயர்வு அற்ற பேச்சாளராய், உலகம் முழுவதும், வேதாந்தத்தை, சுவாமி விவேகானந்தரின், ஸ்ரீ ராம கிருஷ்ணரின் எண்ணங்களை பரப்பிய வானம்பாடியாய் என அவரின் பயணம், அவரது விஸ்வரூபம், ஆச்சரியமும், உவகையும் கொண்டது.

அவர் மிக எளிய மனிதர். யாரும் அவரை அணுகும் வண்ணம் இருந்தது அவரின் அரிய பலம். அவரது நீண்ட பயணத்தில், எல்லா காரியங்களையும் சாத்தியமாக்கக கூடியவராய் இருந்தார். ஒரு துறவியின் வாழ்வில், உலகை நன்கு உணர்ந்தவராய் இருந்தார். நேரு , இந்திரா காந்தி துவங்கி, எல். கே அத்வானி, இன்றைய பிரதமர் மன்மோகன் வரை இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள். இஸ்லாம் பற்றிய இவரது பேச்சை கேட்ட, ஜின்னா, ஒரு முகமதியன் எப்படி வாழ வேண்டும் என இன்று கற்று கொண்டேன் என்கிறார். சமூக பரப்பினில், இவரது பேச்சு, நிறைய இதயங்களை ஆற்று படுத்தி உள்ளது.       

ஹைதராபாத், கராச்சி, கல்கத்தா, பர்மா[ரங்கூன்] , தில்லி என இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், தன் பணியில் தனி முத்திரை பதித்தவர். தில்லியில் ஞாயிறு அன்று நடக்கும் இவரது தொடர் சொற்பொழிவு மிக பிரபலம். மைசூர் மற்றும் பெங்களூரில், சிறை கைதிகளுக்கு வகுப்புகள் நடத்தி உள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பிறந்த நாள் விழா சிறையில் நடந்தது. அனைத்து கைதிகளும் சுவாமிஜியிடம் ஆசி பெற்றனர். ஹரி கதையுடன் அன்று நடந்த நிகழ்வை, நிறைய பேர் உள்ளன்போடு வரவேற்று மகிழ்ந்தனர்..

எனது அறை நண்பர், பேலூர் ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி ரங்கநாதானன்தரை சந்தித்ததையும், அவர் வரவேற்று உபசரித்ததையும், உவகையோடு இன்றும் நன்றியோடு நினைவு கூர்கிறார். தான் வாழ்ந்த நாட்களில், தன்னை பற்றி எந்த புத்தகத்தையும் அனுமதிக்காத உண்மை துறவி. அவர் ஏற்று கொண்ட துறவு நெறிக்கு ஏற்ப, வாழ்வு முழுதும் அப்பழுக்கு அற்று , சக மனிதர்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காக, அவர்களின் மறுமலர்ச்சிக்காக தொடந்து போராடியவர்.   

மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி ஒரு முறை இப்படி குறிப்பிட்டார். " நமது நாடு அதன் தொன்மை கலாச்சாரத்தாலும், தத்துவ சிறப்பாலும், உயரிய எண்ணங்களாலும், ஒப்புமை அற்றது. ஆனால், இவற்றை பற்றி பல தருணங்களில், வெளிநாட்டிலோ, ஏன், நம் மக்களிடையே கூட, வெளிச்சமிட்டு காட்டியதில்லை. இதில் இருவர் விதிவிலக்கானவர்கள். அவர்கள், சுவாமி விவேகானந்தரும், சுவாமி ரங்கநாதனந்தரும் ஆவர்."

தேசிய நல்லிணக்கத்துக்கான, இந்திரா காந்தி விருதை முதன் முதலில் பெற்றவர் சுவாமி ரங்கநாதானந்தர். எந்த விருதாக இருந்தாலும், தனக்கு, தன் பெயரில் அளிக்காமல், இராம கிருஷ்ண இயக்கத்துக்கு அளித்தால், ஏற்று கொள்வேன் என உறுதியாக நின்றவர். துறவிக்கு விருதுகள் தேவையில்லை என்பதும், நான் செய்த எல்லா செயல்களும், என் சகோதர துறவிகளோடு இணைந்தே நிறைவேற்றினேன் என்பது அவரின் எண்ணம். 

பதினெட்டு வயதில், இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர் ஏறக்குறைய, எழுபத்தெட்டு ஆண்டுகள், இயக்கத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தற்போதைய ராம கிருஷ்ண இயக்க தலைவர் சுவாமி ஆத்மஸ்தானந்தர் வார்த்தைகளில் சொன்னால், " நான் தவறாக குறிப்பிட்டால், என்னை மன்னியுங்கள்.. சுவாமி விவேகானந்தருக்கு பின், சுவாமி ரங்கநாதானந்த மகாராஜ் போல், உலகமெங்கும் ஆன்மீக கருத்துக்களை பரப்பியவர் வேறு யாரும் இல்லை " என்கிறார்.

    "நீ ஆன்மீக மலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாயா ?
     நீ மற்றவரை நேசிக்கிறாயா? அனைவருடனும்
     ஒன்றிய நிலையை நீ உணர்கிறாயா? உன்னுள்
      அமைதியை உணர்ந்து, அதை உன்னை சுற்றிலும்,
     சுடர்விட செய்கிறாயா? அது தான்
     ஆன்மீக வளர்ச்சியாகும்.....
     அகமுகமாக தியானத்தாலும், புற முகமாக
     சேவை மனப்பான்மையுடன் செய்யும் பணியாலும்
     அது விழிப்படைகிறது."    - சுவாமி ரங்கநாதானந்தர்.
.
.
.சுவாமி ரங்கனதானந்தரின் சொற்பொழிவு..


மற்றொரு சொற்பொழிவு - நடைமுறை வேதாந்தம்

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்