Sunday, January 25, 2009

தளிர் விரல்களும், சிதறும் புன்னகையும்


சிறுவர்களோடு பழகுவதும், நேரம் செலவழிப்பதும், ஓர் இனிய அனுபவம். நெஞ்சம் நிறைய தித்திப்பை கொணர்பவை அந்த நிமிடங்கள். இயற்கையை உணர்வதும், குழந்தைகளோடு கைகோர்ப்பதும், நிசப்தத்தின் லயிப்பை உணர்த்தும் பொன் நிமிடங்கள். ஒற்றை புன்னகை, ஒற்றை மழலை வார்த்தை, அத்தனை துயரையும் விரட்ட வல்லவை. மருள் விழியும், மந்தகாச புன்னகையும், அவர்களின் இனிய சொத்து. தேடித் தேடி இணைக்கும், வார்த்தை சொல்லாடல், அவர்களின் பெரிய பொக்கிஷம். உலகிற்கு வரும் பொழுதே ஆயிரம் விசயங்களை, இறையின் தூதராய் கற்று தர வருகிறார்கள்.

சிறுவர்களின்
உலகு ஆச்சர்யம் நிரம்பியவை. ஒவ்வொரு நிகழ்வையும், உலகின் நகர்வையும், உற்று நோக்கும் வல்லமை குழந்தை மனதிற்கே உரியது. எல்லா கற்பனையும், அந்த உள்ளத்திற்கே உரித்தானவை. ஏன் அது எல்லைகள் கடந்ததும் கூட.. அவர்களின் ஒவ்வொரு செயலும் ஆயிரம் அர்த்தங்கள் நிறைந்தவை.. எனது பார்வை கோணத்தில் ..

சில நாட்களுக்கு முன் ஒரு விருந்து நிகழ்வுக்கு சென்று இருந்தேன். விருந்தில், அனைவர்க்கும் வாழைப்பழம் கொடுத்து இருந்தனர். விருந்து முடிந்த தருவாயில், அனைவரும் தத்தம் உணவு தட்டை சேகரித்து எடுத்து எடுத்து சென்றனர். அந்த குடும்பத்தோடு வந்திருந்த ஒரு சிறுவனும், மிக்க உற்சாகத்தோடு முன் சென்றான். நல்ல ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் நோக்கோடு, அவனை அழைத்த அவன் அம்மா, அவன் தட்டையும், எடுத்து வர சொனனார். சிறுவன் தயங்கிய படியே, தட்டை எடுத்து திரும்பி நடந்தான்.

நடந்த நிகழ்வை சரி பார்த்த அவன் அம்மா, வாழை பழ தோல் அப்படியே இருப்பது கண்டு, சிறுவனை திரும்ப அழைத்தார். சிறுவனும், அது என்னுடையது அல்ல; அக்காவின் வாழை பழம் என சொன்னான். அவன் சொன்னது நிஜம் தான். அவர்களின் உலகில், எது நேர்மையோ, அது இம்மி பிசகாமல், கடைபிடிக்க படுகிறது. ஒரு அர்த்தமுள்ள ஒழுங்கு அவர்களுடன், இயைந்துள்ளது.

சிறுவர்களின் பார்வை கோணம் பல நேரங்களில் நாம் உணராதவை. புலன்களனைத்தும் விழிப்பு நிலையிலேயே இருப்பதால், அவர்கட்கு நிறைய விஷயங்கள் சாத்தியப்படுகிறது. பேருந்தில் எங்களுடன் பயணித்த சிறுமி, ஜன்னலோர இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்தாள். அது , அவர்கட்கு உலகை அறியும் இடம். சிறிது நேரத்தில், வெளியே, சுட்டி காட்டிய அவள், நாய் பைக்கில் போகுது பார் என சொன்னாள். சிறுவர்கள் உலகிற்கு, பிராணிகள் எங்கிருந்தாலும், உடனடியாக அவர்களின் கவன வட்டத்துள் வந்துவிடுகின்றன.

அந்த சிறுமி, சுட்டி காட்டியது நிஜம் தான். குழந்தைகள் அமர்வது போல், நாயும், இரு சக்கர வாகன ஒட்டி முன் அமர்ந்து அழகாக பயணித்து சென்று கொண்டிருந்தது. நானும், சற்றே குறும்பாக, சிறுமியை நோக்கி, பார், நாய் குட்டி எவ்வளவு அழகாக வாகனம் ஒட்டுகிறது. மனிதன் பின்னால் உட்கார்ந்து செல்கிறான் என்றேன். அவளும், அது நிஜம் தானோ என நம்பி, பின்பு தெளிவு கண்டு இல்லையே என மலர்ந்து சிரித்தாள்.

இந்த வகையில், சிக்கன் சூப் கதைகள் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தவை. அவற்றுள் ஒன்றை இங்கு நான் பகிர்ந்து கொள்கிறேன். நாம் சில சில தருணங்களில் தோல்வியை தழுவுகிறோம். அறிவு உடைய அனைவராலும் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ள முடியும். கற்றல் நிகழ்வின் ஒரு பகுதியே நாம் அடையும் தோல்விகள். ஆனால் பெற்றோரான நாமும், ஆசிரியரும் இதை பல நேரங்களில் ஒத்துக்கொள்ள முடிவதில்லை, அல்லது ஒத்துக்கொள்ள மறுக்கிறோம். நம் செயல்களின் மூலமும், பேச்சின் மூலமும் அவர்கட்கு தோல்வியுறுவதை ஒரு அவமானகரமான செயலாக போதிக்கிறோம். எல்லா தருணத்திலும், பெரிய நிகழ்வையே குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டி அவர்களை, அதை அடைய தூண்டி வருகிறோம்.

அப்படி குழந்தைகள் நெருக்குதலுக்கு உட்படும் பொழுதெல்லாம் எனக்கு டானியின் நினைவு வரும்.

டானி - என்னிடம் மூன்றாவது வகுப்பு பயிலும் சிறுவன். அவன், சற்றே கூச்சமும், பதற்றமும் கொண்டவன். ஆனால் அவனது ஒவ்வொரு செயலும் மிக சரியாக இருக்கும், இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பான். அவனது, தோல்வியை பற்றிய பயமானது, அவனை பள்ளி வகுப்பறை விளையாட்டிலிருந்து ஒதுங்கியே இருக்க வைத்தது. அவன் ஒருபோதும் பள்ளியில் விடை அளித்ததில்லை. பொதுவாக, வீட்டு பாடம் தொடரும் தருவாயில், தொடர்ந்து என்னிடம் தான் எழுதிய வற்றை சரிபார்த்தபடி இருப்பான். அதனால், அவனால் சரியாக எதையும் செய்திட முடிவதில்லை. முக்கியமாக கணிதம் அவனுக்கு மிகுந்த ஆயாசம் தருவதாய் அமைந்தது.

நானும் முடிந்த வரையில், அவனிடம், தன்னம்பிக்கையை புகட்டிய படி இருந்தேன். நானும், தொடர்ந்து இறையிடம், நல்ல வழி காட்ட பிரார்த்தித்த படி இருந்தேன். ஆனால் அரையாண்டு வரையில் எதுவுமே பலிக்கவில்லை. அந்த தருணத்தில் தான் வகுப்புக்கு, மாணவ ஆசிரியை "மேரி அனே" நியமிக்கப்பட்டார். மாணவ ஆசிரியர் நியமிப்பு எப்பொழுதும் உள்ள நடைமுறை. அவர் குழந்தைகள்பால் பேரன்பு உடையவராய் இருந்தார். டானியும் அவர்கள்பால், பெருமதிப்பு கொண்டிருந்தான்.

குழந்தைகள் மீது நிறைய ப்ரியம் வைத்து இருந்த மேரி அனே கூட, இந்த சிறுவனால் பெரிதும் அதிர்ந்தார். சிறுவனின் பலவீனமே, தான் எங்கே தவறு செய்து விடுவோமோ என்கிற ஒற்றை பயம் மட்டுமே. அதுவே அவனை முடக்கிட போதுமானதாக இருந்தது.

ஒரு நாள் அது கணித வகுப்பு. கணக்குகள் அனைத்தும், கரும்பலகையில் போடப்பட்டு இருந்தது. டானி அப்போது, மிகுந்த சிரத்தையுடன் தனது நோட்டு புத்தகத்தில் எழுதி வந்தான். மிக மிக நேர்த்தியாக அவன் தன் வேலையில் முனைந்து இருந்தான். அப்பொழுது முதல் வரியை எழுதிட ஆரம்பித்து இருந்தான். அவனது சிரத்தைக்கான பெருமிதத்துடன், குழந்தைகளை 'மேரி அனே' வின் பார்வையில் விட்டு விட்டு நாள் வெளியில் சென்று வந்தேன்.

திரும்பி வந்த எனக்கு அதிர்ச்சி. டானி - பெருகும் கண்ணிரோடு அமர்ந்திருந்தான். அவன் மூன்றாவது வரியை தவற விட்டிருந்ததே அதற்கு காரணம். அவன் அருகே 'மேரி அனே' சென்ற பொழுது, அவன் இயலாமையை கட்டுப்படுத்த முடியவில்லை. 'மேரி அனே' வின் பார்வையில் மிகுந்த இயலாமை தொக்கி நின்றது.

அந்த நிலையில், ஆசிரியையின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது. எங்களின் இருக்கைக்கு சென்று வந்த அவர் கைகளில், பென்சில் பெட்டி இருந்தது. டானியின் அருகே சென்ற அவர் அவனுடன் அமர்ந்தார். அப்போதும் டானி அழுதபடி அமர்ந்திருந்தான். அவன் முகத்தை நிமிர்த்திய ஆசிரியை, உன்னிடம் ஒன்றை காண்பிக்க போகிறேன் என்றார். சொன்ன அவர் அந்த பெட்டியில் இருந்து, ஒவ்வொரு பென்சிலாக எடுத்து மேசை மீது வைத்தார்.

இங்கே பார், இவை அனைத்தும், நானும் மற்றொரு ஆசிரியரும் பயன்படுத்தும் பென்சில்கள். அதன் தலை பகுதியில் அழிப்பனும் பொருத்தப்பட்டு இருந்தது. அதை சுட்டிக்காட்டிய ஆசிரியை, பார், நாங்கள் உபயோகித்த அழிப்பான் பகுதியை என்றார்; நிஜம் தான், எல்லா பென்சில்களின் அழிப்பானும் , நிறையவே தேய்ந்து இருந்தது.

நாங்களும் எழுதும் பொழுதும் நிறையவே, தவறுகள் செய்கிறோம். அதன் பொருட்டு நாங்கள் ஒருபோதும் வருத்த படுவதில்லை. மாறாக, அழித்து திருத்தவும் செய்கிறோம். நீ திரும்பவும் முயற்சி செய்திட கற்றுக்கொள் என்றார்.

நான் இப்பொழுது, உன் மேசையில் ஒரு பென்சிலை விட்டு செல்கிறேன். ஆசிரியர்களும், எவரும், தவறுகள் செய்வார்கள் என்பதை, இது உனக்கு நினைவூட்டியபடி உன்னிடம் இருக்கட்டும் என்றார். அவனை முத்தமிட்டபடி, அவனிடம் மேரி விடை பெற்றார். அவன் கண்களில் அன்று அன்பும், சந்தோஷமும் போட்டியிட்டன. அவனது முகத்தில், அந்த வருடத்தில், அன்று தான் நான் சந்தோசத்தையும், அமைதியையும் கண்டேன்.

அந்த பென்சில் அதன் பின் டானியின் விலை மதிப்பு அற்ற பொக்கிஷமாக அவனுடன் இருந்தது. இதன் பின், மேரியின் தொடர்ந்த நம்பிக்கையூட்டலும், தொடர் ஊக்குவிப்பும், அவனிடம் புது மாற்றத்தை கொணர்ந்தது. அவனுள்ளும் ஒரு புது தெளிவு பிறந்தது. தவறுகள் செய்தலும், பின் திருத்திக்கொள்வதும், தொடர் முயற்சியும் அவனை ஆட்கொண்டன.

[இந்த கதை என்னையே நான் திரும்பி பார்ப்பது போல் அமைந்து இருந்தது.]5 comments:

சென்ஷி said...

ஒரு வார்த்தையில் அற்புதமான பதிவு என்று எழுதிவிட நகர முடியாமல் நிறுத்தி வைத்து விடுகிறது உங்கள் எழுத்தும் அனுபவமும்...

மழலைகளைப் பற்றிய உங்கள் பார்வை அழகு. அவர்களை பற்றிய விவரணக்குறிப்புகள் ஆசிரியரிடமிருந்து வரும்போது மிக நெருக்கமாக உணர முடிகிறது.

சாப்பாடு தட்டை எடுத்த, பழத்தோலை எடுக்காததற்கு காரணம் சொல்லும் சிறுவனும், பஸ்ஸின் ஜன்னல் ஓர இருக்கையில் இடம் பிடிக்கும் சிறுமியும் கடந்த காலத்தை உணர வைக்கிறார்கள்.

நீங்கள் சுட்டிக்காட்டிய மேரி ஆனே அவர்களின் பென்சில் உவமானம் மிக அழகு..

வாழ்த்துக்கள் நண்பரே...! நிறைய்ய எழுதவும்.

சென்ஷி said...

ஒரு சிறு விண்ணப்பம்..

உங்கள் மறுமொழி பெட்டியின் கீழ் வருகின்ற word verification நீக்கி விடவும். மறுமொழியிட சிரமமாய் இருக்கின்றது.

கோபிநாத் said...

\\இந்த கதை என்னையே நான் திரும்பி பார்ப்பது போல் அமைந்து இருந்தது.]\\

உங்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் தான்....அருமையாக எளிமையாக ரசிக்கும் படி இருக்கிறது உங்கள் எழுத்து நடை ;)

வாழ்த்துக்கள் ;)

கோபிநாத் said...

\\ சென்ஷி said...
ஒரு சிறு விண்ணப்பம்..

உங்கள் மறுமொழி பெட்டியின் கீழ் வருகின்ற word verification நீக்கி விடவும். மறுமொழியிட சிரமமாய் இருக்கின்றது.
\\

ஆமாங்க..தயவு செய்து இதை எடுத்துவிடுங்கள் ;)

THIRUMALAI said...

சென்ஷி, கோபிநாத்
தங்களின் கருத்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள். இந்த பகுதிக்கு நான் முற்றிலும் புதியவன். தங்களின் வழிகாட்டுதலின்படி நான் , word verification பகுதியை நீக்கி விட்டேன். தங்களின் வருகைக்கும், பின்னூட்டம் இட்டமைக்கும் என் நன்றிகள்..

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்