Sunday, January 25, 2009

பெற்றோரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்



பெற்றோர் அன்பும், தொடர்ந்த ஊக்கமும், குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு இட்டு செல்கின்றன. பெற்றோர் தரும் ஆசிகளே, தம் புதல்வர்களை வாழ்நாள் முழுதும், மேன்மைக்கும் இட்டு செல்ல வல்லவை. இறையின் கருணையை விட பெற்றோரின் பங்களிப்பு குழந்தைகளை, சமூகத்தில் நல்லவண்ணம் வாழ வைக்க பேருதவி புரிகின்றன. அவர்களின் எதிர்பார்ப்பு எப்படிப்பட்டது? தம் குழந்தைகளை எப்படி உணர்கிறார்கள் என்பதை தேடியபொழுது..


நண்பனொருவன், தான் பணிசெய்த நிறுவனத்தில் இருந்து மிக சமீபத்தில் இடை நீக்கம் செய்யப்பட்டான். அதுவும் தற்காலிகமானதே. அவனும் நல்ல திறமையும், பெரும் நம்பிக்கையும் உடையவன். இந்த விஷயம், பெற்றோரிடம் சொல்ல மிகவும் சங்கடப்பட்டான். தான் சொல்வதை பெற்றோர் சரியான கோணத்தில் எடுத்துக்கொள்வார்களா?, தன்னை சரிவர புரிந்து கொள்வார்களா என பெரிய கேள்விகள் அவனுள். முக்கியமாக தான் தனது பெற்றோர் முன் கூனி குறுகி நிற்க வேண்டும்; அவர்களின் பெரும் பேச்சுக்கு ஆளாக வேண்டும் எனும் பெரும் கவலை. பிறிதொரு நாளில், அந்த செய்தியும் பெற்றோர் காதுகளுக்கு எட்டியது.

இந்த நிலைக்கு யார் காரணம். பிள்ளைகளை தம்மிடம், பிரச்சனையை பகிர்ந்து கொள்ள முடியாத நிலையை உருவாக்கியது பெற்றோர் தவறா; அல்லது பெற்றோர் தவறாக புரிந்து கொள்வர் என தன்னை தானே தடுத்துக்கொண்ட புதல்வனின் தவறா. எந்த சுவர் இருவரையும் பிரிக்கிறது. பிரச்சனைகள் முளைவிடும் பொழுதெல்லாம், பெற்றோர் அல்லவா ஆதரவு கரம் நீட்ட வேண்டும்.

பெற்றோர் இன்னும் தன் குழந்தை வளரவில்லை, போதுமான திறமையை, இந்த உலகை எதிர்கொள்ளும் வல்லமை அடைய வில்லை என எண்ணுகிறார்களா? இந்த கேள்வி என்னுள் எழுகிறது. இது ஒரு சாதாரண நிகழ்வு. வேலை இழப்பும், வேலை திரும்ப பெறுவதும், தன்னை முன்பை விட மெருகேற்றி கொள்வதும் யதார்த்தமானவை. அதன் பொருட்டே, பெற்றோர் நல்ல கல்வியை தந்துள்ளனர். வாழ்நாள் முழுதும் பெற்றோர், பிள்ளைகளோடு ஓடி வர அவசியமில்லை. அவர்கள் தம் குழந்தைகள் விழுந்து விடாமல் இருக்க முயல்கின்றனர்.

விழுவதும், விழுந்தபின், எழுந்து நடப்பதுமே, மனிதனின் அருங்குணம். நம்முள் எப்பொழுதும் ஒரு போராட்ட குணம் நிரம்பி உள்ளது. வேலை இழப்பு என்பது மிக நீண்ட வாழ்க்கை பயணத்தில் ஒரு திருப்பமே. இதே முற்றுபுள்ளி அல்ல.
மனிதன் வாழ்வது உண்ணும் உணவாலும், சுவாசிப்பதாலும் மட்டுமல்ல. தளராத நம்பிக்கை மட்டுமே மனிதனை முன்னெடுத்து செல்கிறது. எல்லா இரவுகளும் விடியவே செய்கின்றன. கோடை காலம் வந்தால் என்ன, வசந்த காலம் ஒரு நாள் வராமலா போய்விடும் என்ற தொடர் நம்பிக்கை மட்டும் மனிதனை அஞ்சாமல் போராட வைக்கிறது.

பெற்றோர், தம் குழந்தைகளின் தவறை சுட்டி காட்டுவதை மட்டுமே, தம் வேலையாய் கொள்ளலாகாது. ஆரோக்கிய விவாதத்திற்கு குழந்தை இட்டு செல்லப்பட வேண்டும். அந்த சூழலை, சரியாக அமைத்து கொடுப்பது பெற்றோரின் கடமையும், உரிமையும். தவறுகள் சுட்டி காட்டப்படும் வேலையில், அவையும் மிக மிக நாசுக்காக கையாளப்பட வேண்டும். இல்லையேல் பெரும் சுவர், பிள்ளைக்கும் பெற்றோர் நடுவிலும் அமைந்துவிடும்.

நிறைய நம்பிக்கையை எடுத்து செல்லுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு எப்போதும் நீங்கள் பக்க பலமாய் இருங்கள். நீங்கள் மட்டுமே அவர்கட்கு பலம் சேர்க்க முடியும். 'மு. மேத்தா' அவர்களின், 'கண்ணீர் பூக்கள்' தொகுப்பில் இருந்து ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது..


"நம்பிக்கை நார்மட்டும்
நம்கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்களும் வந்து
ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்
கழுத்து மாலையாகவும் தானே
கட்டிக்கொள்ளும்"
நிஜம்தானே!
.
.

5 comments:

TamilBloggersUnit said...

நல்லா எழுதியிருக்கிறீங்க...

சென்ஷி said...

நல்ல கருத்துக்கள் நண்பரே... பெற்றோருக்கு மட்டுமல்லாது எல்லோருக்கும் தேவையான கருத்து இது..

Unknown said...

நண்பருக்கு,

தங்கள் எண்ணம் மிகவும் அருமை !!! வாழ்த்துக்கள்

அன்புடன்
முருகேசன்
ரியாத்

தமிழ் said...

/"நம்பிக்கை நார்மட்டும்

நம்கையில் இருந்தால்

உதிர்ந்த பூக்களும் வந்து

ஒவ்வொன்றாய் ஒட்டிக்கொள்ளும்

கழுத்து மாலையாகவும் தானே கட்டிக்கொள்ளும்"

நிஜம்தானே!/

அருமையான வரிகள்

THIRUMALAI said...

தங்களின் கருத்துக்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள்.தங்களின் வருகைக்கும், பின்னூட்டம் இட்டமைக்கும் என் நன்றிகள்..

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்