Sunday, March 1, 2009

கிருஷ்ணனும் பிருந்தாவனமும்




மிக சமீபத்தில் 'Krishna in Vrindhavan' கார்ட்டூன் தொடரை கார்ட்டூன் நெட்வொர்க் மூலம் காண நேர்ந்தது. இந்த தொடரை 'கிரீன் கோல்டு' நிறுவனம் தயாரித்து உள்ளது. கார்ட்டூன் தொடரின் தரம், வசன உச்சரிப்புகள், கதா பாத்திரங்களின் உருவாக்கம், அரிதான கதை சொல்லும் உத்திகள், பழைய நாட்களை கண்முன் கொண்டு வருதல் என என்னை வியப்புற வைத்தது.

எளிதான ஆங்கிலம், கதா பாத்திரங்களுடன் இயைந்த பேச்சு நடை என இது சிறுவர்களை கவர்ந்ததில், ஆச்சர்யம் ஏதுமில்லை. சிறுவர்களின் வானத்தில் வந்த இன்னொரு சிறகு இது. இந்த தொடரில் வரும் கிருஷ்ணன் பால்ய வயதிலிருந்து அடுத்த நிலையில் உருவகப்படுத்தப்பட்டு உலவ விடப்பட்டு விட்டான். அவன் திருடும் வெண்ணையை போல், காணும் அத்துணை மனதையும் கன்னமிடுவதில் வல்லவனே.

பிருந்தாவனத்தில், கண்ணனின் பயணங்கள், அவனது, அவனுக்கே உரித்தான குறும்புகள் என காட்சிகள் விரிகின்றன. கொஞ்சம் வருடங்கள் முன் நம் வீட்டு பெரியவர்கள் எப்பொழுதும் கதைகளை தம்மோடு வெற்றிலை சீவல் போல் முடிந்து வைத்து இருந்தார்கள். அந்த நாட்களில் மதிய பொழுதுகளும், பின் இரவு வரை கேட்டு வந்த கதைகளும் இன்னமும் எல்லோரது ஞாபக நதியில் திளைத்தபடி உள்ளன. சிந்துபாத் கதைகள் முதல், ஷேக்ஸ்பியர் தந்த 'பக்' கதாபாத்திரம் வரை அத்தனையும் இனியவை.

கதைகள் எப்பொழுதும் அலுப்பதில்லை. அதுவும், கிருஷ்ணனை பற்றிய கதைகள், எத்தனை முறை கேட்டாலும், வெல்ல கட்டியாக உருகியபடி நாவில் தித்திக்கிறது. கை முழுதும் மிட்டாய் வைத்து இருக்கும் குழந்தை, மிட்டாய் வேண்டுமா என கேட்பின், கண்கள் விரிய கையை வேண்டுமென நீட்டும்; அது போன்றதே கண்ணன் கதைகளும்; எவ்வளவு கேட்டாலும், எந்த வயதிலும் அது சலிப்பு தட்டுவதில்லை.

பெரிய கரிய கண்கள், கரு நீல நிற மேனி, மயிற்பீலி, புல்லாங்குழல் என கண்ணனின் உருவம் விழியோரம் விரிகிறது. கண்ணனின் விளையாட்டும், கண்ணனின் அத்தனை குறும்பும், நம்மின் ஒவ்வொருவரின் பால்யத்தை நினைவூட்டுகின்றன. பால்யம் முதல் நமக்கே உரித்தான குறும்புகளுடன் கண்ணனும் புனயப்படுவான்.

கிருஷ்ணனின் குழலோசை போன்றே அவன் கதைகளும், இனிமை ததும்பும் தேவ கானங்கலாய் உள்ளன. கண்ணனையும் அவன் குழலையும் யாரும் பிரித்தரிவதில்லை. பால்ய வயதில் மனதிற்கு மிக நெருக்கமாய் கண்ணனின் கதைகள் புத்தகம் இருந்தது. கண்ணனின் புன்னகை போன்றே அதுவும் தனி சிறப்பு உடையதாய் இருந்தது. வாழ்வின் எல்லா தருணங்களையும் புன்னகையால் புன்னகையுடன் வெல்லும் நினைவு - உலகில் கண்ணனுக்கு மட்டுமே சாத்தியப்பட்டு இருக்கும் என எண்ணம் வலுப்படுகிறது .

கார்டூன் தொடரை கண்ட பொழுது, கண்ணனின் பிருந்தாவனத்தில், நாமும் உலவுவது போன்றே எண்ணம். கண்ணன் உலவிய பிருந்தாவனத்தில், யமுனை நதி, காளிந்தி மடு என எல்லா இடங்களிலும் நாமும் துள்ளி திரிவது போன்றே ஒரு எண்ணம். கண்ணனின் கதைகள் நம் ஒவ்வொருவரின் பால்யத்தை ஒத்து இருக்கின்றன. நமது கனவுகளும் பால்யத்தில் கண்ணனை போன்றே இருந்தன. மொத்தத்தில் கடந்த காலத்தின் நினைவுகள் விழியெங்கும்...
.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்