Sunday, March 22, 2009

அவசர யுகம் - தொடரும் ஓட்டம் -பயணப்படாத சாலைஇன்றைய யுகம் ஆச்சர்யம் நிரம்பியதே. நம் எண்ண பரப்பினில் வராத ஆயிரம் விஷயங்கள் கணத்தினில் நம்மை கடந்தபடி இருக்கின்றன. காற்று வெளியில் இலக்கின்றி பறக்கும் இறகை போன்றே மனித வாழ்வும் அமைந்து விட்டது தான் வேடிக்கை. நாய்க்கும் வேலை இல்லை - ஆனால் நிற்க தான் நேரமில்லை - என்பது ஊர் புறம் சொல்லும் வழங்கு மொழி. அவசர யுகம் கற்று தந்த ஒரு பழக்கம் - பதற்றம். எல்லா தருணத்திலும் மனமும், கைகளும் பதறியபடி இருக்கின்றன. இன்றைய நடவடிக்கை அனைத்தும், கிடைத்ததை விட்டு கிடைக்காததை துரத்தும் ஓட்டம்.

ஒரு முறை ராம கிருஷ்ணா மடத்தை சேர்ந்த 'சுவாமி பௌத்தமயானந்தர்' தனது கருத்தரங்கில் பின்வருமாறு குறிப்பிட்டார். 'ஒவ்வொரு மனிதனும் தினமும் கடை பிடித்திட ஒரு யோசனை. ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கி, தன் வாழ்வின் லட்சியம் என்ன ? தான் எப்படி பயணிக்கிறோம்? தனக்கும் இந்த அகண்ட பிரபஞ்சத்திற்கும் தொடர்பு என்ன? தன் எண்ணங்கள் என்ன? தனக்குள் உருவாகும் ஆயிரம் கனவுகள்... அதை மெய்பிக்கும் வழிகள் இவற்றை சிந்திப்பது நலம் என அறிவுறுத்தினார். தனக்கான நற்சிந்தனைகள், துர் சிந்தனைகள், தன் பேச்சு, பழக்க வழக்கங்கள், தனது கோபம், ஆசைகள், நிராசைகள் இவற்றிற்கான திறனாய்வு மிக மிக அவசியம்.

இதில் சில கசப்பான உண்மைகளும் உண்டு. ஒரு நாளின் இருபத்து நாலு மணி நேரத்தில், நமக்காக, நம்மை பற்றி எத்தனை நிமிடங்கள் சிந்திக்கிறோம். நாம் பணிபுரியும் நிறுவனம் பற்றி, சக பணியாளர், ரோட்டில் இரைச்சலோடு கடக்கும் வாகனம், டெண்டுல்கருக்கு நேற்று நேர்ந்த காயத்தின் பாதிப்பு, .. என தொடர்ந்து மனம் எல்லா தளங்களிலும் பயணிக்கின்றது. ஆனால் மனம் எந்த நிமிடமும் உட்புறமாக குவிய முற்படுவதில்லை. அப்படி குவிய துவங்கினால், ஒட்டு மொத்த மாற்றமும் தனி மனிதனிடம் துவங்கும். அதுவே ஆரோக்கிய சமூகத்திற்கு அச்சாரம்.

ஒரு பார்வை இழந்த மனிதன் இரவு நேரத்தினில், கையில் விளக்குடன் வெளியே தெருவில் கிளம்பினான். அந்த சமயம், எதிரே வந்த மனிதன் பார்வை அற்றவன் உடன் மோதி விட்டான். பார்வை அற்றவன், கோபத்தோடு, நான்தான் பார்வை அற்றவன். நீ என் கையில் இருக்கும் விளக்கை பார்த்து சரியாக செல்ல கூடாதா, என் கடிந்து கொண்டான். பதிலுக்கு எதிரே வந்தவன், அய்யா நீங்கள் சொல்வது நிஜம் தான். ஆனால், உங்கள் கையில் உள்ள விளக்கு அணைந்து விட்டது என்றான். இது நமக்கும் பொருந்தும்; நாமும் ஓடுகிற ஓட்டத்தில் கையில் உள்ள தீபம் அணைந்தது தெரியாமல், ஓடுகிறோம். அப்படி ஓடுகிற வேகத்தில், உறவுகள், நட்புகள், நல்ல சிந்தனை என எத்தனை நல் முத்துகளை சிதற விடுகிறோம்.

சக மனிதனிடம், ஒற்றை புன்னகை சிந்த, வாய் விட்டு எப்படி இருக்கிறாய் என அக்கறையோடு நலம் விசாரிக்க முன் வருவதில்லை. 'புன்னகைக்க தெரியாதவன் ஒரு கடையை நடத்த தகுதியற்றவன்' என்கிறது ஒரு சீன பழமொழி. ஆனால் நாம் அமரும் தளம் அதை விட மிக உயர்ந்தது. ஆரோக்கியமாக செயல்பட வேண்டிய இதயம், அடகு வைக்கப்பட்டு, வாழ்வு முழுதும், மீட்க படாமலே மூழ்கி போகிறது. வாழ்வின் பெரும் பகுதியை, நாம் அர்த்தமற்ற முதலீடுகளில் தொடர்கிறோம்.

ஒரு மனிதன், அலுவலகத்தில் இருந்து நேரம் கழித்து மிகுந்த அயர்வோடு வீடு திரும்புகிறான். அப்போது அவரது ஐந்து வயது செல்ல மகன் அவரின் வருகைக்கு கதவோரம் காத்திருக்கிறான். அப்போதைய அவர்களின் உரையாடல்..

சிறுவன்: அப்பா, உங்கள் ஒரு மணி நேர சம்பளம் எவ்வளவு?

தந்தை: (ஆத்திரம் அடைந்த தந்தை கோபமொடு), அதை நான் உனக்கு சொல்ல அவசியம் இல்லை - என்கிறார்.

சிறுவன்: அப்பா தயவு செய்து சொல்லுங்கள், நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்..

தந்தை : நான் ஒரு மணி நேரத்தில் நூறு ரூபாய் பெறுகிறேன் என்கிறார்.

சிறுவன்: (தனக்குள் எண்ணமிட்டபடியே) அப்பா எனக்கு உங்களால் ஐம்பது ரூபாய் கடன் தர முடியுமா?

தந்தை: சிறுவனின் கேள்வியில் எரிச்சல் அடைந்தவராய்.. இந்த பணத்தை எடுத்து, தேவை இல்லாத, பொருட்களையும், பொம்மையும் வாங்கி குவிப்பாய் .. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறேன். நீ உன் அறையில் போய் தூங்கு என்கிறார். சிறுவனும் ஏமாற்றத்துடன் செல்கிறான்.

இதன் பின் சில நிமிடங்களில், தந்தை தன் தவற்றை உணர்கிறார். தன் வேலை பளுவை சின்ன குழந்தையிடம் காண்பித்து விட்டோமே என்பது அவர் எண்ணம். இன்னும் சற்றே கனிவுடன் அவனிடம் விசாரித்து இருக்கலாமே என்பது அவரது எண்ணம். அதே எண்ணத்துடன், மகனின் படுக்கை அறைக்கு வருகிறார்.

தந்தை: தம்பி என்ன தூங்கி விட்டாயா?

சிறுவன்: இல்லை அப்பா..

தந்தை: நான் உன்னிடம் கோபமாக நடந்து விட்டேன். எதற்கு உனக்கு பணம்? என்கிறார்.

சிறுவன்: தன் தலையணைக்கு அடியில் இருந்த ஐம்பது ரூபாய் எடுத்தபடியே.. இதோ என்னிடம் உள்ளதை ஐம்பது கொண்டு உங்கள் ஐம்பது ரூபாய் சேர்த்து கொள்ளுங்கள். என்கிறான். மொத்தத்தில் உங்கள் ஒரு மணி நேர சம்பளம்..
அப்பா உங்கள் வாழ்வில் நான் ஒரு மணி நேரத்தை கடனாக கேட்கிறேன் என்கிறான்.

சிறுவன்: அப்பா! நாளை நீங்கள் நேரத்தோடு வீட்டுக்கு வாருங்கள். உங்களோடு இரவு உணவு உண்ண விரும்புகிறேன் என்கிறான்.

இதில் மிக மிக முக்கியமானது, நம் வாழ்வின் மிக முக்கியமானவர்களோடு, நேரத்தை செலவழிக்க கூட முடியாத நிலை. நாம், சம்பாதிக்கும் நூறு ரூபாயை விட அவர்கள் அதி முக்கியத்துவம் மிக்கவர்கள். இது முழுக்க முழுக்க நான், மிக மிக கடினமாக உழைக்கிறேன் என்பவர்க்கு, ஒரு சிறிய நினைவூட்டல். நமக்கு எல்லாமும் ஆனவர்களோடு , நேரம் செலவழிக்க முடியாமல், வாழ்வை நம் விரல்கள் வழியே கசிந்து போக அனுமதிக்க முடியாது.

நடைமுறையில் யோசித்தால், ஒரு விஷயம் நமக்கு விளங்கும்.. நாம், மறைந்தால், நம் இடத்தை நிரப்ப நமது நிறுவனம், இன்னொரு மனிதனை எளிதில் கொணரும். ஆனால், நமது நட்பும், உறவுகளும், மட்டுமே, நமது இழப்பை பேரிழப்பாக உணர்வர். நாம், நமது உறவுகளை விட நிறுவனத்திற்கு நிறைய அரிதான நேரத்தை செலவழிக்கிறோம். எந்த மனிதரையும் தவிர்க்காதீர்கள். அனைவரையும் இனிய நேசத்துடன் எடுத்து செல்லுங்கள்.. உங்கள் வாழ்வில் நிறைய நேசத்தையும், அன்பையும் தவள விடுங்கள்.. நீங்கள் எப்படி பணிபுரிவதும், வாழ்வின் உன்னதத்தை தொடுவதும், முக்கியமோ அது போல் உறவுகளும் முக்கியமானவர்களே.

ஏனெனில், ஒரு நாள் நீங்கள் தூங்கி எழும் பொழுது கூலான் கற்களை தேடும் உங்கள் அவசரத்தில், முயற்சியில், அரிதான வைரத்தை இழந்து இருப்பிர்கள்.

1 comment:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்