Sunday, March 15, 2009

வெற்றியின் பாதை


வாழ்வின் ஒவ்வொரு மனிதனும் தனது செயலில் வெற்றி காண முயல்கிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் வெற்றிக்கான சூத்திரங்கள் வேறுபடுகின்றன. ஆனால் வெற்றிக்கான அடிப்படை தகுதிகள் எந்த நாளும் மாறுவதில்லை. கடின உழைப்பும், திட்டமிட்ட தொடர் முயற்சியுமே அவை. நாம் ஒவ்வொருவரும் வெற்றி பெற எண்ணும் பொழுது நம் முன் சில கேள்விகள் எழுகின்றன. அந்த கேள்விகளும் அதை தொடரும் பதிலும்...

நாம் யாரும் சக மனிதன் அறிவுரை சொல்வதை ஏற்று கொள்வதில்லை. உலகில் மிக மிக எளிதாக கிடைக்கும் ஒரு விஷயம் அறிவுரை. ஆனால் ஒரு சில மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளை மிக அதிக சிரத்தையோடு ஏற்று கொள்கிறோம். அந்த மனிதன் தன் வாழ்வில் சாதித்து இருப்பின் அவனின், ஒவ்வொரு வார்த்தைகளும் அர்த்தம் நிறைந்ததாய் போற்றப்படுகின்றன. கலாமும், "அக்கினி சிறகுகளும்" உணர்த்தும் அரிதான விஷயம் இது.

வெற்றி பெற ஏதாவது சூத்திரம் உள்ளதா? உள்ளது என்பதே உண்மை. நம்மை நாமே சற்றே திறனாய்வு செய்வது மிக மிக நலம். நம்முள் எப்பொழுதும், எல்லா காலமும் ஒரு பெரும் நெருப்பு எரிய வேண்டும். அந்த தீயை எந்த நாளும் அணைய விடல் ஆகாது. லட்சியம் எனும் நெருப்பே அது. அதற்கு ஆகுதியாய் நம்மையே, நம் உழைப்பையே தர முன் வர வேண்டும். நமக்குள் எப்பொழுதும், பெரும் நெருப்பு திகு திகு என எரிகிறதா என கவனித்தபடி இருங்கள். அந்த பெருநெருப்பு உங்களை சிகரத்தில் அமர்த்தும் வல்லமை கொண்டது. விளையாட்டு, படிப்பு, தொழில் எதுவாயினும், மூலக்கூறுகள் என்றென்றும் மாறுவதில்லை.

கபில் தேவ் தனது சுயசரிதையில் இதையே தன் வெற்றிக்கான மந்திரமாய் முன் மொழிகிறார். கபிலின் துவக்க நாட்களை இப்படி விவரிக்கிறார். அது இளைஞர்களுக்கான பயிற்சி முகாம். ஒவ்வொரு இளைஞனும் எழுந்து, தனது லட்சியத்தை சொல்லி வந்தான். கபிலின் முறையும் வந்தது. கபில் சொன்ன வார்த்தைகள் அவனின் அப்போதைய லட்சியம். இந்தியாவின் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வரவேண்டும் என்பதே அது. கபில் சொன்ன வார்த்தைகளை கேட்டு அங்கு வந்திருந்த ஒரு பயிற்சியாளர் கேலியாக சிரித்தார். பின்னாளில் கபில் இந்தியா வியக்கும் பந்து வீச்சாளராக உருவெடுத்தார்.

நான் நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும், சிறப்புற வளர வேண்டும் என விரும்பிய தந்தை, அடுத்த நாள், நிறைய பால் அருந்த வேண்டும் என ஒரு பசுமாட்டை வாங்கி வீட்டில் கட்டினார். கபிலின் இளவயதில், மாலை நேரம் முழுதும் கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும். சாதிக்க வேண்டும் என வந்த பின், கடின உழைப்புக்கு அஞ்ச கூடாது என தன் வாழ்வின் பாதையை நினைவு கூர்கிறார் ஹரியானா சிங்கம்.

வெற்றி வேண்டுமானால், சாதிக்க வேண்டும் எனும் வெறி நம்முள் ஊற்றெடுக்க வேண்டும் என்கிறார் வைரமுத்து. இதே தருணத்தில், வெற்றிக்கு தூண்டு கோலாக அமையும் ஒரு கதை ஞாபகம் வருகிறது. இது வெற்றிக்கான வழியும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரில் ஒரு தம்பதியர், செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். இருவரும் திருமணம் முதல், மகிழ்வுடன் ஆத்மார்த்த தம்பதியராய் வாழ்ந்து வந்தனர். நமது கற்பனையில் வரும் சொந்த வீடு, கார், நிரந்தர வேலை என அனைத்தும் அவர்களுக்கு அமைந்து இருந்தன. இப்படி வாழ்ந்த வாழ்வு அவர்கட்கு ஒரு கட்டத்தில் ஒருவித சலிப்பை உண்டு பண்ணியது. (இந்த டீ-இல் நிறமில்லை, இந்த டீ-இல் குணமில்லை; இந்த டீ-இல் திடமில்லை; இது டீ இல்லை; காபி;) அனைத்தும் இருந்தும் அவர்கட்கு எதுவோ ஒன்றை இழந்தது போல் ஒரு எண்ணம்.

ஒவ்வொரு நாளும் காலையில் எழுதல்; பணிக்கு செல்லுதல்; வீடு திரும்புதல்; இரவு உணவு; டிவி பார்த்தல்; உறங்க செல்லுதல் என என்றும் என்றென்றும். ஒரே மாதிரியான, ஒவ்வொருவர்க்கும் வாய்த்த அதே நடைமுறை வாழ்வு; அவர்களுக்கு, அவர்களின் சம்பாத்தியம், வெளிநாடு செல்லல், ஆப்பிரிக்காவை கண்டு வருதல் இவற்றிற்கு போதுமானதாய் இல்லை. அதனால் எதை இழக்கிறார்கள்? அவர்கள் வெற்றிக்காக ; வாழ்விற்கான எழுச்சியை, தீவிரத்தை(passion) அடையவில்லை. இங்கு அரிந்தம் சவுத்தரி வார்த்தை நினைவுக்கு வருகிறது.(Why we are not quite successful? Because were not passionate about our dreams.)

ஒருநாள் மனைவி தன்னுள் இருந்த மனக்குமுறலை வெளிப்படுத்துகிறாள். பொருள் இல்லாத, ஏதோ வாழ்ந்தோம் எனும் வாழ்வை இனியும் தொடர்வதற்கு அவள் தயார் இல்லை. அவர்கள் வாழ்விற்கான, எழுச்சியை, முழுமையை, அடைய எண்ணம் கொண்டனர். இன்னும் சாதிக்க முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.. இருப்பினும் அவர்களால் இதற்கு மேல் ஏன் எதுவும் சாதிக்க முடியவில்லை என்பதற்கான காரணம் அறிய முடியவில்லை. வெற்றி என்பது அவர்கள் மொழியில் கோடிகளுக்கு அதிபதி ஆவது அல்ல. மாறாக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும், ஒவ்வொரு விஷயத்திலும் புத்தெழுச்சியை கொணர்தல் அவர்களின் உயர் நோக்கம். கணவனும் அருமை மனைவியின் கருத்தினில் உடன்பட்டான். ஏனெனில் பல நாட்களாய் அவனுள்ளும் இந்த எண்ணம் குடைந்தபடி இருந்துள்ளது.

அந்த தருணத்தில் வெற்றிகரமாக வலம் வரும் தன் நண்பன் மூலம் ஒரு சர்க்கரை செய்தி அவர்களை வந்தடைகிறது. வெகு தொலைவில் உள்ள மலை உச்சியில், வெற்றியின் அனைத்து கூறுபாடுகளும், அறிந்த குரு இருக்கிறார் என்பதே அது. இதை அறிந்தவுடன் அந்த கணவன் பேருவகை உற்றான். மனைவியுடன் தொடர் பேச்சுக்கு பின் இருவரும் ஒரு முடிவிற்கு வருகின்றனர். வெற்றி பெற வாழ்வை சாதனையாய் மாற்ற, குருவினிடம் அணுகி அறிவுரை கேட்பது எனும் தீர்மானத்திற்கு இருவரும் உடன்படுகின்றனர். தங்கள் வேலை செய்திடும் நிறுவனத்தில் விடுப்பு எடுத்து, தங்கள் பயண செலவிற்கான பணத்துடன் குருவை தேடி இருவரும் புறப்பட்டு விட்டனர்.

பல மாத பயணத்திற்கு பிறகு, தங்கள் குரு வாழும் மலையை அவர்கள் அடைந்தனர். அந்த இடத்தை அடைந்ததன் பொருட்டு மகிழ்ந்த அவர்கள், கிடுகிடுவென உயர்ந்து இருந்த மலையை கடினத்துடன் ஏறி மலை உச்சியை அடைந்தனர். அவர்களால், உலகை அதி உயரத்தில் இருந்து தெளிவுற காண முடிந்தது. அமைதியும், தன்னம்பிக்கையும் அவர்களிடம் இப்போது போட்டியிட்டன. அந்த தருணத்தில், அவர்கள் முன் இருந்த ஒரே கேள்வி.. எப்படி குருவை கண்டுபிடிப்பது? எப்படி அடையாளம் காண்பது என்பதே. அவர்கள் வியப்புறும் வகையில் ஒரு முதிய மனிதன் ஒரு மலை பாறையின் விளிம்பில் அமர்ந்தது இருந்தான்.

பாறை விளிம்பில் அமர்ந்து இருப்பது மிக மிக அபாயகரமானதே. ஏனெனில், சற்றே தவறினாலும், எலும்புகளை எண்ணித்தான் எடுக்க முடியும். வாழ்வின் கதி அதோ கதி தான். நேரே மோட்சத்தை தொட்டுவிடலாம். ஆகவே, மனைவி, மெதுவாக அந்த முதிய மனிதனுடன் பேசலானார். நீங்கள் தான் வெற்றியை கற்று தரும் குருவா? நாங்கள் குருவை தேடி இவ்வளவு தூரம் வந்தோம் என்றார். அந்த நிலையில், முதிய மனிதன் எந்த சலனத்தையும் வெளிக்காட்ட இல்லை. அந்த நிலையில் மனைவி திரும்பவும் அதே கேள்வியை கேட்டார். இந்த நிலையில் பாறை விளிம்பில் அமர்ந்து இருந்த குரு இப்பொழுது அழுந்து நின்றார். அங்கு எழுந்து நிற்பது இன்னும் அபாயமானதே. சற்றே தவறினும் அவ்வளவே. இந்த நிலையில், அவர்களிருவரும், குருவே பார்த்து நில்லுங்கள்; என எச்சரிக்கிறார்கள். அவர்களின் எச்சரிக்கையை சட்டை செய்யாத குரு உங்களுக்கு வெற்றியின் மந்திரம் வேண்டுமானால் அதை கற்க வேண்டுமானால் என் அருகே இருவரும் வாருங்கள் என்று அழைத்தார்.

அவர்கள் வெற்றியை பற்றி அறிய வேண்டுமானால் குருவின் கட்டளைக்கு பணிந்திட வேண்டும். அதித அச்சம் மேலிட இருவரும் குருவின் அருகே வந்தனர். தற்போது கணவனும் மனைவியும் குருவின் இரு புறமும் உள்ளனர். இந்த நிலையில் மூவரும் மலையின் வெளிப்புறத்தை காண்கின்றனர். இந்த தருணத்தில் இருவரின் இதயமும் சப்தத்துடன் துடிக்கிறது. அவர்கள் இருக்கும் இடம் அப்படியானது. இந்த தருணம் அவர்கட்கு புதிரானது,. அமைதியும், பதற்றமும் அவர்களோடு ஒட்டி உள்ளது. இப்போது அவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்களாய் உள்ளனர். அதே சமயம் எங்கே விழுந்து விடுவோமோ என்கிற பயமும் உள்ளது. அந்த தருணத்தில், கணவன் அந்த மில்லியன் டாலர் கேள்வியை குருவிடம் கேட்கிறான்.

அறிவில் சிறந்த குருவே... வெற்றியின் மந்திரம் தான் என்ன?
குரு புன்னகை புரிந்தவராய் 'இங்கிருந்து நமக்கு கீழே உள்ள உலகை காணுங்கள் என்கிறார்'.
அங்கிருந்து உலகை கண்ட அவர்களால் உலகை தெளிவாக காண முடிகிறது.

திடீரென, குரு அவர்கள் இருவரையும் பிடித்து கீழே தள்ளி விட்டார். நம்ப முடியவில்லை! (சோகமான கதையல்லவா? )

இருவரும் கீழே விழுகின்றனர். அலறலொடு கீழே விழும் பொழுது அவர்கள் ஒரு விஷயத்தை உணர முடிகிறது. அவர்களால் பறக்க முடியும் என்பதே அது. அவர்கள் தொடர்ந்து பறக்கிறார்கள். இவ்வளவு நாளும் அவர்கள் தங்களால் பறக்க முடியும் என்பதை மறந்து இருந்தனர்;

இதில் இருந்து பெறுகிற படிப்பினை ஆழமானது:
௧) சில பேர் தன்னால் பறக்க முடியும் என்பதை முற்றிலும் மறந்து இருப்பர். ஆகவே அவர்கள் முயன்றதில்லை.

௨)இன்னும் சிலர் முன்பு பறந்து இருப்பார். ஆனால் தற்பொழுது ஞாபகத்தில் இல்லை. ஆகவே இவர்கள் எப்பொழுதும் ஞாபகம் கொள்வதில்லை.

௩)சிலர் தம்மால் பறக்க முடியும் என்பதை அறிந்து உள்ளனர். ஆனால் பறக்க முன் வருவதில்லை; ஏனெனில் அவர்கள் முழுதும் பயத்தின் பிடியில் அகப்பட்டு உள்ளனர்.

௪)சிலர் அடுத்தவர் பறக்கட்டும், பின்பு நாம் பார்க்கலாம் என உள்ளவர்கள்; இவர்கள் என்றென்றும் காத்திருப்போர்;

௫)சிலர் தனக்கு ஆசான் வந்து கற்று தர வேண்டும் என நினைப்பார்; அவர்களும் காத்திருப்போர் பட்டியலில்..

௬)இன்னும் சிலர் முன்பு பறந்து கீழே விழுந்து இருப்பார். ஆகவே அவர்கள் பறப்பது ஆபத்தானது, உபயோகமற்றது என்று முயற்சியையே விட்டு இருப்பார்.


ஆனால் சில மனிதர்கள் தினமும் பறக்கின்றனர். வானத்தை உற்று நோக்கியபடி அகன்ற வானத்தில் சிரகடிக்கின்றனர். ஏனெனில் அவர்கள் பறப்பதற்கான முதல் படியை முன் எடுத்தவர்கள்..

நான் எனக்கான பறக்கும் பாடத்தை கற்று உள்ளேன். நிறைய தடவை விழுந்தும் உள்ளேன். ஆனால் எனக்கான சிறகுகளை நான் மீண்டும் கண்டறிந்து விட்டேன். நீங்கள் இன்னும பறக்க எத்தனிக்க வில்லையா? முயலுங்களேன்!


முயன்றால் முடியாத விஷயம் உலகத்தில் உள்ளதா என்ன?

.
.
.



No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்