Saturday, July 4, 2009

சாதனை பயணத்தில் - இன்னுமொரு சிகரம் தொடல் - ரோஜர் பெடெரெர்


இது ரோஜர் காட்டில் அடைமழை காலம். பின்னே! ஒரு மாத இடை வெளியில் இரண்டு கிராண்ட் ஸ்லாம்கள் ரோஜர் கைகளில் தவழ்கின்றது . இந்த டென்னிஸ் இளவரசனின் மட்டை தொட்டதெல்லாம் பொன்னாய் துலங்குகிறது. பிரெஞ்சு ஓபன் வெற்றியை கொண்டாடி முடிக்கும் முன் இதோ விம்பிள்டன் இறுதியில் ஆண்டி ரோடிக்கை வீழ்த்தி ரோஜர் சாம்பியன்.

தனது நீண்ட டென்னிஸ் பயணத்தில் புதியதொரு அத்தியாயத்தை துவங்கும் முனைப்பில் ரோஜர் இந்த விம்பிள்டன் தொடரில் காலடி வைத்தார் . தன் இருபத்து ஏழுவயதில் , ஏழாவதுவிம்பிள்டன் இறுதி போட்டியில் ஆரவாரமாக களம் கண்டார் . அட என்னவொரு ஆச்சர்யமான, அலட்டல் அதிகம் இல்லாத பயணம்.. அதுவும் தொடர்ச்சியாக ஏழாவது விம்பிள்டன் இறுதியில். ஏழுவிம்பிள்டன் பயணத்தில் ஆறில் சாம்பியன். தான் ஒரு தன்னிகரற்ற சாம்பியன் என்பதை நேற்றைய போட்டியில் அழுத்தமாக நிரூபித்துள்ளார்.
இந்த விம்பிள்டனை கைப்பற்றிய ரோஜர், பீட்சாம்ப்ரசின் பதினாலு கிராண்ட் ஸ்லாம் சாதனையை முறியடித்து , பதினைந்தாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற பிரபஞ்சத்தின் முதல் வீரர் என்ற தனிப்பெரும் சிறப்புக்கு முன்னேறி இருக்கிறார் . சென்ற ஆகஸ்டில், உலகின் முதல் நிலை வீரர் என்ற பட்டத்தைஇழந்தார்[தொடர்ந்து 237 வாரம்]. இழந்த முதல் இடத்தை, இந்த கிராண்ட் ஸ்லாம் வெற்றி மூலம் மீட்டு இருக்கிறார். தன் வாழ்நாளில் நிச்சயம் இந்த நாளை மறக்க மாட்டார் . இந்த விம்பிள்டன் ஞாயிறை நிச்சயம் வரலாறு தன் குறிப்பேட்டில் அழுத்தமாக இன்னொரு சாம்பியனை குறிப்பெடுத்து கொள்ளும். பாரம்பரியம் மிக்க விம்பிள்டன் மைதானம், எவ்வளவோ போட்டிகளை கண்ட அந்த பச்சை புல்தரை இன்னொரு அறிய பொக்கிசத்தை சப்தத்துடன் உலகுக்கு அறிவித்து தனக்கு புகழ் தேடி கொண்டது . இதோ இங்கொரு சாதனை சிகரம் என..

இந்த ஆண்டின் இதுவரையில் நடந்த மூன்று கிராண்ட்ஸ்லாம் இறுதியிலும் ரோஜர் இருந்தார். ஆஸ்திரேலிய ஒபனில், இறுதி வரை போராடி ரபெல் நடாலிடம் தோற்ற ரோஜர் பிரெஞ்சு ஓபெனில் புது எழுச்சியோடு களம் கண்டார். கோப்பையை வென்று எடுத்தவர் முகத்தில் அளவிட முடியாத ஆனந்தம்.. தன்னை எப்பொழுதும் தொடர்ந்தது கொண்டிருந்த நெருக்கடியில் இருந்து மீண்டவராய் பெருமூச்சு விட்டார். இனி தன்னை இன்னும் இவர் பிரென்ச்சு ஓபன் போட்டியை வென்றெடுக்க முடியாதவர் என கை நீட்ட முடியாது என்பது அவர் கருத்து. இந்த நிமிடமே டென்னிஸ் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுவது என்றாலும் தனக்கு பூரண சம்மதம் என அறிவித்தார்.

தன் பெரிய கனவை அடைந்தவருக்கு அதை கொண்டாட நேரம் இல்லை. இதோ விம்பிள்டன் இறுதியில் அசாத்திய மன உறுதியுடன் போராடி ஆண்டி ரோடிக்கை பின் தள்ளி புன்னகைக்கிறார் பெடரர். பிரென்ச்சு ஓபன் வென்றவருக்கு உலகம் ஆனந்தமாய் அன்பு ததும்பும் நீருற்றாய் மாறி போனது. இதோ அவரது எண்ணிலடங்கா ரசிகர்கள் அடுத்த ஒரு ஆனந்த தருணத்தை கொண்டாடி மகிழ்கிறார்கள். இதோ அவரது சுவிஸ் இல்லம் பழைய குதூகலம் மறையாமல் அடுத்த கொண்டாட்டத்துக்கு ரெடி. பேஸ் புக் மூலம் தன்னை இணைத்து கொண்டவருக்கு இதுவரையில் இரண்டு மில்லியன் விசிறிகள். அதன் மூலமே தன் அன்பு ரசிகர் வட்டத்துடன் பதிலளிக்கிறார்.

இந்த விம்பிள்டன் துவக்கத்திலேயே ரோஜரின் பெரிய போட்டியாளரும், சென்ற ஆண்டைய சாம்பியனும் முதல் நிலை வீரருமான நடால், மூட்டு பிரச்சனையால் விலக நேர்ந்தது. அப்படியே அவர் இந்த முறை ஆடி இருப்பினும் சிங்கம் எந்த சவாலுக்கும் ரெடி என தன் பிடரியை சிலுப்பி கொண்டே நின்றது. இதுவரையில் இவர்கள் இருவரும்,விளையாடும் ஆட்டங்களே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. சென்ற முறை ரோஜர் நடால் இடையே நடந்த போட்டி ஐந்து - அரைமணி நேரம் நடந்ததே இதற்கு சாட்சி. அவ்வளவு நேரம் நீண்ட ஒரு போட்டியை விம்பிள்டன் அது நாள் வரையில் கண்டதில்லை. அதற்க்கு சற்றும் குறையாமல் நேற்றைய போட்டியும் நீண்டு கொண்டே போனது வேறு விஷயம். இது நாள் வரையில், இருபது இறுதி போட்டிகளை கிராண்ட் ஸ்லாம் மூலம் தொட்டு உள்ளார் . அதில் பதினைந்து முறை வெற்றி. இருபத்து ஒரு முறை தொடர்ந்தது அரை இறுதியை தொட்டு உளார்.

விம்பிள்டன் ஒரு கனவு மைதானம். பச்சைபுல்தரை, வெண்மை உடை, விம்பிள்டன் போட்டிக்கே உரித்தான பாரம்பர்யம். டென்னிஸ் ராக்கெட் பிடிக்கும் ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும், புதிய மைல் கல்லை புதிய சிகரத்தை தொடும் நம்பிக்கையை ரோஜர் தோற்றுவித்து உள்ளார் . நேற்றைய போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சமிலாமல், சென்று கொண்டே இருந்தது. இருவரும் தொடர்ந்து போராடினர். யாரும் களைப்பு அடையவே இல்லை - பார்வையாளர் உட்பட தான் ... முதல் செட்டை இழந்த ரோஜர் அடுத்த செட்டையும் இழக்கும் தருவாயில் இருந்தார். ஆட்டம் முழுதுமாய் ரோடிக் ஆதிக்கம் செலுத்தும் நிலை அந்த நிமிடம் இருந்தது.அந்த நிலையில் இருந்து மீண்ட ரோஜர் அந்த செட்டில் வென்று அடுத்த செட்டையும் தனது ஆக்கினார் . நான்காவது செட்டை முழுதும் ரோடிக் ஆதிக்கம் செலுத்தினார்.

பட்டத்தை வெல்வது யார் என்பதை ஐந்தாவது செட் முடிவு செய்வதாய் இருந்தது. கடைசி செட் மட்டும் ஒன்றரை மணி நேரம் நீண்டது. முடிவில் ரோடிக்கின் சர்வை அதுவரையில் முறியடிக்க முடியாத ரோஜர் அந்த முறை முறியடித்தார். போட்டியும் அவர் வசம் வந்தது. இறுதியில் ரோடிக் அதிகம் வருத்தமுற்றவராய் தனது இருக்கையில் இருந்து எழ எண்ணமிலாமல் இருந்தார். மொத்தத்தில் இருவருக்கும், இடையில் மயிர் இழை வித்தியாசமே இருந்தது. ரோடிக்கும் நேற்று கோப்பையை வெல்ல கூடியவராய், ஏன், வென்றவராய் தோன்றியது. மூன்று முறை விம்பிள்டன் இறுதிக்கு முன்னேறி, மூன்று முறையும் ரோஜரின் கைகளில் கோப்பையை தவற விட்டார். நேற்றைய ஸ்கோர் கணக்கு இப்படி பிரதிபலித்தது. [5-7 7-6 (8-6) 7-6 (7-5) 3-6 16-14] கடைசி செட் ஏறக்குறைய மூன்று செட்களை விளையாடியது போல் இருந்தது.
முடிவில், ரோஜரின் பதட்டம் இல்லாத ஆட்டம், அவரின் தளராத மன உறுதி, புதிய சிகரத்தை உறுதி செய்தது,. ஆட்டத்தை தவிர அவர் எதிலும் கவனம் குவிப்பவர் அல்ல ரோஜர். அதே போல், என்றும், வெற்றியை தலைக்கு ஏற்றி கொள்ளாதவர் . என்றும் தவழும் அமைதி அவரின் இன்னொரு பரிணாமம். இன்னும் சாதிக்க வேண்டும் எனும் துடிப்பு அவரை முன்னெடுத்து செல்கிறது. நல்வாழ்த்துக்கள் ரோஜர். சாதனை தொடரட்டும்..

.

.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்