Saturday, July 18, 2009

விடைபெற்ற கான சரஸ்வதி - டி. கே. பட்டம்மாள்இதோ விடைபெற்று விட்டார் கான சரஸ்வதி டி. கே. பட்டம்மாள். முதிய வயதிலும், எந்த தளர்ச்சியும் இல்லாமல், பொலிவான முகத்துடன், தொலை காட்சிபெட்டியில் முகம் காட்டி சிரிக்கும் பட்டம்மாள் அவர்கள் இன்று இல்லை. தான் என்றென்றும் சுவாசிக்கும் இசையுடன் இரண்டற கலந்து விட்டார். இசைக்கு மகுடமாய் வழங்க பெரும் சங்கீத கலாநிதி பட்டம் , பத்ம பூசன் , பத்ம விபூசன் பட்டங்கள் அவரை அலங்கரித்தவை. பாரதியின் தேச பக்தி பாடல்களை மேடைக்கும், சாதாரண மனிதருக்கும் அறிமுகம் செய்திட்டவர் பட்டம்மாள். அந்த வகையில், தேச பக்தி பாடல்களும், இறை பாடல்களும் அவர் நாவில் நர்த்தனம் புரிந்து வந்துள்ளன.

கல்வியில் சிறந்த காஞ்சியில் பிறந்தவர் பட்டம்மாள். தன் பத்தாவது வயதில் முதன் முதலில் சென்னை வானொலியில் அவரின் இனிய குரல் ஒலித்தது., அதன் பிறகான மூன்றாவது வயதில் மேடையேறியது அவரது குரல். அதன் பின்னர் ஏறக்குறைய அறுபது ஆண்டு அவர் இசை ஆட்சி நடந்து உள்ளது. அவர் சம கால இசை அரசிகளான எம். எஸ். சுப்புலக்ஷ்மி, எம். எல். வசந்த குமாரி, இவர்களுடன் மதிக்க படுபவர். மூவரும், அரிதான இசை பாரம்பர்யத்தை, இசை பரம்பரையை இந்த மண்ணுடன் விட்டு சென்றுள்ளனர்.

திரையில் அவரது பாடல் முதன் முதலில் கல்கியின் அமர காவியமான "தியாக பூமியில் " ஒலித்தது. இசை மூவரில் ஒருவரான முத்து சாமி தீட்சிதரின் பாடல்களை அதிகம் மேடை ஏற்றிய இவர், பாபநாசன் சிவனின் பாடல்களையும் முன் நிறுத்தினார். பாபநாசன் சிவன் அவரை திரையில் அறிமுகம் செய்திட்டவர். மேடை கச்சேரியில் நிறைய புதுமைகளை புகுத்திய பெருமை பட்டம்மாள் அவர்களை சாரும். சாதாரண மனிதனை, அவன் இதயத்தை தொட்டவை பட்டம்மாள் குரல்கள் .

அவரின் பேத்தி "நித்ய ஸ்ரீ மகாதேவன்" ஆவார்கள். அவர் பட்டம்மாள் அவர்களின் இனிய இசை வாரிசு. சுதா ரகுநாதன் அவர்கள் தமது குருவாய் வசந்த குமாரியை வரித்து கொண்டவர் போல்,. நித்ய ஸ்ரீ அவர்கள் பட்டம்மாள் அவர்களை கொண்டாடுபவர்.

பாரதியின் பாடல்கள் அதுவரையில் பாமரனை அடையாத தருணம். "ஆடுவோமே பள்ளு பாடுவோமே", "விடுதலை விடுதலை", "தீராத விளையாட்டு பிள்ளை" பாடல்கள் அவரின் அரிதான பொக்கிஷம் - அவரால் மேடைக்கு இடம் பெயர்ந்தவை.. . தேசம் விடுதலை அடைந்த தருணம், அவரின் பாடல் "ஆடுவோமே பள்ளு பாடுவோமே.." வானொலியில் அதீத குதூகலத்துடன் ஒலித்திட்டது. இன்றும் எல்லா மேடைகளிலும், "கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை " பாடல் ஒலிக்கிறது . அதன் ஒவ்வொரு நிறைவிலும் பட்டம்மாள் நின்று ஒளிர கூடும்.

அது மூன்று நான்கு வருடத்திற்கு முந்தய தொலைக்காட்சி பேட்டி. அது நித்ய ஸ்ரீ , பாட்டியின் இயல்பான உரையாடலாய், ஒலித்தது. எப்பொழுதும் போல், பாரதி, அவருடன் சுடர்விட்டான் . அவர் விவரித்த ஒரு சம்பவம் நினைவில் உள்ளது. அது முன் ஒரு நாளைய மேடை நிகழ்ச்சி.. அவரும், எப்பொழுதும் போல், பாரதியின் பாடல்களை உணர்ச்சி ததும்ப பாடுகிறார். அதை பார்த்து கொண்டிருந்த முதல் வரிசையில் இருந்த பெண் தொடர்ந்து அழுத வண்ணம் உள்ளார். கச்சேரி முடிந்த பின் பட்டம்மாள் அந்த பெண்ணை சந்திக்கிறார். அது பாரதியின் பிரிய மனைவி செல்லம்மாள். . பட்டம்மாள் அவர்களால், அவரது வியப்பை அடக்கிட முடியவில்லை. அவரின் பாடல்களை அற்புதமாய் படுகிறீர்கள் என அந்த முதிய அம்மையார் வாழ்த்தி உள்ளார். பாரதியும், அவரின் வாழ்வு எதற்காக இயங்கியதோ அதன் முழு பொருளும் அடைந்து விட்டதாய் விண்ணுலகில் இருந்தபடியே வாழ்த்தி இருக்க கூடும்..

எங்களின் பணிவான வணக்கமும், நன்றிபெருக்கும், உங்கள் பாத கமலங்களில்..

போய் வாருங்கள் பாட்டி. உங்களின் ஒவ்வொரு தேச பக்தி கானமும் எங்களுக்கு, தேச பக்தியையும், புது உத்வேகத்தையும் கொடுத்து கொண்டே இருக்கும். உங்கள் குரலும் சூரிய சந்திரர் போல் சாஸ்வாதமானதே.

"ஆடுவோமே பள்ளு பாடுவோமே,
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று .. "
.
.
.

3 comments:

iskcon said...

அம்மையாருக்கு சிறப்பான மரியாதை

கும்மாச்சி said...

ஒரு நல்ல இசைக் கலைஞரை காலன் கொண்டு சென்று விட்டான், இனி சொர்கத்தில் அவர் இசை இசைக்கும்.

THIRUMALAI said...

iskon, kummachchi.. & others Thanks for posting your comments...

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்