Thursday, October 15, 2009
நண்பருக்கு நல்வாழ்த்துக்கள்
நண்பர் சுதர்சனுடன் [ பெயர் மாற்றப்பட்டு உள்ளது ] சில கணங்கள் :
இப்படி தான் அந்த விவாதம் களை கட்டியது. யார் யாரை பற்றியோ பிளாக் எழுதுகிறீர்கள்.? ரோஜர் பெடரருக்கு, டெல் போர்டோவுக்கு, தியான் சந்துக்கு - இப்படி எழுதி கொண்டு இருந்தால் என்ன அர்த்தம். நாங்கள் எல்லாம் தடத்தில் போவதா?[ நீங்க ஆகாயத்தில் போனாலும், கண்மாயில் போனாலும் கவலை இல்லை!]. நாங்கள் உங்களோடு வேலை செய்கிறோம்.. எங்களை பற்றி எழுதினால் என்ன குறைந்தா போய்விடுவீர்கள்? என சுதர்சன் பல நாள் கேட்டபடி இருந்தார்..
அப்படி எல்லாம் இல்லைங்க, என கையை பிசைந்தேன் .. அப்படி இல்லை என்றால் பின்னே எப்படி என கேள்வி வந்தது. முன்னாடி பரோட்டா கடையில் கிலோ கணக்கில் மாவு பிசைந்து இருப்பானோ, என பார்த்தவர்கள் அச்சப்பட்டனர். சிலர் அங்கலாய்த்தனர். அப்படியே மோட்டு வளையை முறைத்தத்தில் அங்கே ஒட்டி இருந்த பல்லி கூட ஓடி போனது வேறு விஷயம்! எழுத பெரிதாய் ஏதும் தோன்றவில்லை. அதன் பின் என்னுள் ஒரே தீர்மானம். அங்கே, இங்கே என, கண்மணி, பொன்மணி, மானே, தேனே, பொன்மானே என போட்டு ஒப்பேற்றி விடலாம் எனும் பெரும் நம்பிக்கை என்னுள் வந்தது. அப்படி இருந்தாலும் கைகால் உதறுவது நிற்கவில்லை. :( என் செய்வேன்.
அப்படி நேர்மறை சிந்தையுடன் தொடங்கிய பின் தான் தெரிந்தது; வகை தொகை தெரியாமல் மாட்டி கொண்டது. நீங்கள் பதிவை போடவில்லை எனில் நாங்கள் " சிந்தனை காய்கள் " ஆரம்பித்து விடுவோம் எனும் எச்சரிக்கை மணி வேறு. [ஐயா சட்டு புட்டுனு ஆரம்பிங்க]. எல்லாவற்றையும் தாண்டி நான் நிச்சயம் எழுதுவேன் எனும் உறுதியை தந்தேன். " Simple, yet a Great Promise "
சிரமங்கள் இல்லாமல் சிகரங்கள் இல்லை :
பூரிச்சு புளங்காகிதம் அடைய இது பொன்னர் சங்கர் வசனம் பாரு?! .. போடறது அரை பிளேடு :) எப்படி இருந்தாலும் தலையை கொடுக்கறது நாங்கள்; ஞாபகம் இருக்கட்டும் என நீங்கள் சொல்வது காதில் விழாமல் இல்லை. ஆனாலும் யாரோ சொன்னது மாதிரி கஷ்டம் வந்தா ஒண்ணா தானே வரும். ஐய்யோ இப்பவே கண்ணை கட்டுதே..
இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள்; இவர் டிசைனர், சுதர்சன்; இனி உங்களுடன் பணி புரிவார் - என எங்கள் மேலதிகாரி அறிமுகம் செய்வித்தார். அந்த நவம்பர் மாதம் இருந்த ஏ. சி க்கு மேல் வேர்த்தது. பார்த்த பார்வையில், ஏதும் பெரிதாய் புலப்படவில்லை.. பச்சை புள்ளை மாதிரி தான் தெரிஞ்சார்[ பின்னர் தான் தெரிந்தது, நிஜத்தில் புள்ளை புடிப்பவர் என்று; மக்கா கொஞ்சம் உஷாரா இருக்கணும் புரிஞ்சிதா? ] . பொத்தாம் பொதுவாய் புன்னகைத்து வைத்தேன். அதன் பின் பெரும்பாலான பணிகளில் எங்களுடன் தான்; இல்லை இல்லை நான் அவருடன் பணிபுரியும் வாய்ப்பு பெற்றேன். ஒரு சில வாடிக்கையாளர்களை - அய்யா இது உங்கள் ஆள் என நேர்ந்தது விட்டார்.. அவ்வளவு அதீத அக்கறை ; ம்ம் .. நெனச்சா அழுவாச்சியா வருது :(
பின்னே என் செய்ய; எண்ணி துணிக கருமம் என வள்ளுவர் சும்மாவா சொல்லி இருப்பார்? போகட்டும். அதன் பின்
எனது வாடிக்கையாளர் அதை கேட்கிறார் இதை கேட்கிறார் என போய் நிற்பேன். நிரம்ப
அக்கறையுடன் முடித்து கொடுத்து வந்துள்ளார். குதூகலம் நிரம்பிய மாலை/இரவு தேநீர் நேரங்கள், நண்பகல் பொழுதுகள் என பல நேரம் பல விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும். விவாதங்கள் பல நேரம் வில்லங்கமாய், விவகாரமாய் முடிந்ததுண்டு.
சுதர்சனின் பதில்கள் பல நேரம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்து வந்துள்ளன. அய்யோடா சாமி ! இதுக்கெல்ல்லாம் உன்னால் தான் ஆச்சர்யப்பட முடியும் என நீங்கள் கொமட்டில் குத்த வருவது தெரிகிறது.. பொறுங்கள்! பொறுங்கள்! நல்ல நாளில் அதிகம் காயப்பட்டு கொள்ள எனக்கு விருப்பமில்லை.
பதிவர் உலகில் நான் நிறைய கத்துக்குட்டியாய் இருந்த நாட்கள் அவை. அன்று மட்டுமல்ல. இன்றும் அப்படி தான். நான் அவரிடம், அட! என்னங்க.. நிறைய பேர், பதிவர் உலகில் எழுதுவதை நிறுத்தி விட்டனர் என கேட்டேன். பின்னே! அவனவன் உருகி உருகி எழுதினா .. மற்றவர் அதை சங்கோஜம் எதுமிலாமல் அப்படியே உருவி தங்கள் சொந்த கவிதையாய், சரக்கை தருகின்றனர். அதில் நிறைய பேர் வெறுத்து போய், எழுதுவதை நிறுத்தி விட்டனர். என்றார்.
சில வாடிக்கையாளர், எங்களுக்கு லோகோ - நியுமராலஜி படி இந்த கலரில் வேணும் என வருவர். அப்படி இப்படி என வலைத்தளம் உருமாறி, கடைசியில், குட்டி சுவரில் வால்-போஸ்டர் ஒட்டியபடி அமைந்துவிடும். பல நேரங்களில் வாடிக்கையாளர் ரசனை அலைவரிசை நாம் கேட்டறியாத குரலில், பார்த்தறியாத நிறத்தில், சுவாசித்து அறியாத மணத்தில், அமைகிறது...
வெற்றி பெற்ற பல விஷயங்களுக்கு தங்கள் வரைகலையே, காரணம் என சொல்லி உள்ளார். ஆகா நாங்கள் ஒன்னும் செய்யலையா? என கேட்போம். நீங்க என்ன செய்யறீங்க ? சிந்தனை குதிரைக்கு ஒழுங்கா கொள்ளு கொடுத்தா தானே ஓடும்! கருப்பட்டி, வெள்ளம் எல்லாம் காட்டினா இப்படி தான் தறிகெட்டு கண்டபடிதான் ஓடும் என்பார்.. பதிவர் உலகில் நல்ல பதிவுகள், நல்ல பதிவர்களை இனம் காட்டி அறிமுகப்படுத்தியவர். சம
காலத்திய தொழில் நுட்பத்தை அவரிடம் நிறைய கற்றுள்ளேன். நக்கல், நையாண்டித்தனம், குத்தல், குறும்பு , குதூகலம், பல வண்ணங்களில் வலம் வருபவர்.
சில மனிதர்களை சுற்றி, எப்பொழுதும் சந்தோசம் களை கட்டி இருக்கும். அந்த இடம் கலகலப்பின் ஊற்றாய் இருக்கும். சில மனிதர்கள் நம்மை கடந்து சென்றால் அவர்களின் உற்சாகம் நம்முடன் ஒட்டி கொள்ளும். அந்த வகை மனிதர் அவர்..
இதோ வாழ்வின் அடுத்த படிக்கட்டில் அடியெடுத்து வைக்கிறார். ஆம்! வரும் நவம்பரில் அவருக்கு டும் டும் டும்.. ஒரு நல்ல பயணமாய், அவர் வாழ்வு தொடங்கிட, துலங்கிட நல்வாழ்த்துக்கள். அதே போல், இன்னொரு அலுவலக நண்பர் சங்கர நாராயணனும் மண விழா காண்கிறார். அவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.
எப்பொழுதும் கைபேசியை, முறைத்தபடி இருக்கும் அவருக்கு எதோ என்னால் ஆன முயற்சி.. இந்த பதிவும்.. இந்த கணமும்.. தீபாவளி தருணத்தில், ஒரு சில காமெடி நாடகம் வானொலியில் உலா வரும் அது போலவே இதுவும். அவரின் இனிய நினைவுகளுன் இதோ இவையும்.. பின் வருவன காதுகளுக்கு மட்டும்..
Labels:
நட்புக்காக
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்