Sunday, May 31, 2009

கணினி முன் தான் உங்கள் வாழ்வா? - இதோ உங்களுக்காக


எல்லா பொழுதும் கணினி முன் செலவளிப்பவரா நீங்கள்? விசைப்பலகையில் முன் நெற்றி பட்டு ரத்த காயம் உருவாகும் வரை மோதி முடிப்பவரா நீங்கள்? ஏன் நிறுத்தி விட்டாய் நீலவேணி? வீடு இடியும் வரை ஆடு என்பது போல் கணினியை தட்டி தீப்பொறியை கிளப்புபவரா நீங்கள்? வாரான், வாரான் பூச்சாண்டி! இரயிலு வண்டியிலே! வாரணாசி கோட்ட தாண்டி ரயிலு வண்டியிலே! இரயிலு வண்டியிலே! மெயிலு வண்டியிலே! .... இந்த பாட்டு உங்களுக்காக இட்டு கட்டி பாடப்பட்டதாய் உங்கள் அறை நண்பன் சொல்கிறானா? ( நடு இராத்திரியில் அடைமழை நாளில் கதவை தட்டி எழுப்பிய காண்டு அவனுக்கு என்றும் உண்டு) அட உங்களை அல்லவா இத்தனை நாள் தேடிக்கொண்டு இருந்தேன்... நீங்கள் தான் இப்பொழுது வேண்டும்..

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் - நான் போட்டோ ஷாப் முதல் வெறும் தரை வரை எங்கும் வரைவேன் எனும் பதில் காதில் விழுகிறது... இருந்தாலும்.. நாம் செய்திடும் வேலை மிக பல சமயம் கண்ணை விற்று ஓவியம் வாங்கும் முயற்சி தான். அத்தனை உணர்ச்சிகளையும் வெளியிடும் கண்ணையும் ஒரு பார்வை பார்ப்போமே..

திரையை தொடர்ந்து முக்கண்ணனாய் முறைப்பதால் உங்கள் பார்வையில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? உங்கள் கண் நல்ல நிலையில் உள்ளதா? கணினி சார்ந்த பார்வை கோளாறுகள் உங்களுக்கும் உள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது? இரண்டு மணி நேர தொடர் உழைப்புக்கு பின் பின்வருவனவற்றில் ஏதாவது இருந்தால் சற்றே நீங்கள் கவனிக்க வேண்டும்...

 • சோர்வான/எரிச்சலான/ சிவப்பேறிய கண்கள்
 • கண்களில் வறட்சி (Dry Eyes)
 • தலைவலி, கவனம் குவியாமை
 • இரட்டை பார்வைகள் ( jeans aishwaryaarai)
 • மங்கிய பார்வை ( Blurred Vision)
 • கண் கூசுதல்.
 • கழுத்து, தோள்பட்டை, முதுகு வலிகள்
 • காண்டக்ட் லென்ஸ் தரும் அசௌகர்யம்

பிரச்சினைகளின் துவக்க புள்ளி:
திரையில் தெரியும் எழுத்துக்கள் மைய பகுதி அதிக அழுத்தத்துடனும், அதன் முனை பகுதிகள் சற்றே மங்கியும் அமையும். அதுவே அச்சடிக்கப்பட்ட புத்தகம் போன்றவற்றில் எழுத்தின் முனைகளும் சரியாக அமைந்திருக்கும்,. இங்கு படிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் திரையில் சிக்கல் உருவாகிறது.

கணினியில் படிக்கிறேன், பார்கிறேன் பேர்வழி என அஷ்ட கோணலாய், திருவிக்கிரம வடிவமாய், நாராயணனின் அத்தனை தோற்றத்தையும் காட்டி அமர்நதிருந்தால் , நிச்சயம், கழுத்து முதுகுவலி வந்தே தீரும்.

பார்வை பிரச்சனைக்கு அதி முக்கிய காரணிகள்:
1) நீங்கள் சரிவர கண்களை இமைப்பதில்லை.
2) கண்களை அளவுக்கு மீறி அகல விரித்து திரையை உற்று நோக்குவது
3) உங்கள் அலுவலக வெளிச்சமும், கணினி திரையும் சாதகமாய் இல்லாமை.

எப்படி சரி செய்வது:
1) கண்களில் இமைத்தலில் பிரச்சனை:
அடிக்கொருமுறை இமைப்பதை நடைமுறையில் கொணருங்கள். தொடர் உழைப்பில் சிறிய இடைவெளி அவசியம். திரையில் இருந்து கண்களை சற்றே எடுத்து வெவ்வேறு தூரத்தில் இருக்கும் பொருட்களை கவனியுங்கள்(சுவர், சுவர் கடிகாரம், ஜன்னலுக்கு வெளியே பாரதிராஜா கைகள் வழியே காட்டுவது போல், அடிவானத்து குருவிகள், மைனாக்கள், வெளியே கிளை தாவும் அணில்)

பிரகாசமான ஒளியால் வரும் பிரச்சனை:
வெளியில் இருந்தும், அரை விளக்கில் இருந்தும் வெளிவரும் வெளிச்சம், அதிதமாக கணினி திரையில் பட்டு ஒளிர்தல்.

 • கணினியை கண் கூசாதபடி சரியான இடத்தில் வைத்தல்.
 • கணினி திரையை உங்கள் கண் பார்வையில் இருந்து கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளுதல்.
 • ஜன்னல் திரையை சரிவர உபயோகித்தல்( கண்களுக்கும், திரைக்கும் பொருந்துகிற நிலையில்).
 • தலைக்கு மேலே உள்ள விளக்கு அதிக வெளிச்சம் தருகிறதா? சற்றே வெளிச்சம் குறைவான விளக்குக்கு மாறுங்கள்
 • கணினி திரைக்கு முன் ஒரு கண்ணாடி திரை உங்களுக்கு சரியான வெளிச்சத்தை பெற்று தரும் (attach a glare filter)
 • விசைப்பலகை மற்றும் சுட்டி இவை முழங்கை உயரத்திற்கும் தாழ்வாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
 • உங்கள் இருக்கைகள் சரியான கை - தாங்கிகள்(Arm Rests) இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
 • கணினி திரை உங்களை விட்டு சற்றே விலகியும், உங்கள் கண் பார்வைக்கு கீழும் இருக்கட்டும்( ஒரு புத்தகம் வாசிப்பது போன்ற நிலை).
ஞாபகம் இருக்கட்டும்: 2020விதிகள்:
 • இருபது நிமிடத்திற்கு ஒருமுறை நிறுத்தி இருபது முறை இமைக்கவும்.
 • பார்வையை நகர்த்தி 20- அடிக்கு வெளியே உள்ள பொருளை 20-நொடிகள் பார்க்கவும்.
 • உங்களுக்கு (20/20) (6/6) பார்வை உள்ளதா என சரிபார்த்து தேவைப்படின் மூக்கு கண்ணாடி அணியவும்.

  --- நன்றி COmputer Vision Syndrome , சங்கரா கண் மருத்துவமனை
  .
  .4 comments:

குப்பன்_யாஹூ said...

useful post. thanks

கவின் said...

எனக்கு அவசியமான பதிவு! நீங்க சொன்ன அத்தனை அறிகுறிகளுமே இருக்கின்றனா??!

Hickson said...

Informative n useful

THIRUMALAI said...

தங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி நண்பர்களே.

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்