Sunday, May 10, 2009

அன்னையர் தினம் - ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு பூங்கொத்து


இன்றைய தினம் - அன்னையர் தினம். என்றென்றும், சுய நலத்தின் சுவடின்றி தம் குழந்தைகளுக்காக பிரார்த்திக்கும் அன்பு இதயங்களுக்கு நன்றி. என்றென்றும் நம்பிக்கையும், நல்லறிவும் புகட்டி தனது குழந்தைகளை நல்ல மனிதர்களாய் வார்த்தெடுக்கும் அந்த கரங்களுக்கு வணக்கங்கள். உணவையும், அன்பும் ஒன்றே போல் குலைத்து கொடுக்கும் இதயங்கள். ஒரு குழந்தை சமூகத்தில் நல்லவண்ணம் வளர்ந்திருந்தால், அந்த நன்றி பெருக்கின் முதல் துளி அன்னையை சேரும். தைரியம் தருவதாய் இருக்கட்டும், புத்தி புகட்டுவதாய் இருக்கட்டும் அவர்கள் வழியே தான் நம்மை ஆட்கொள்கின்றன பல பண்பு நலன்கள். தாய் மொழியை நாவில் துளிர்க்க விட்டு, தந்தையை, உறவுகளை, இறையை அறிமுகம் செய்வித்து, நம்முள் என்றென்றும் உறைகிறார்கள்.

தாயே! முன்பு உடல் தந்து, உயிர் பேணி, உருவம் தந்து உலகில் உலவ விட்டாய். தாயே! குழந்தை பொருட்டு ஏற்ற நோன்புகள் எத்தனை. மழலையில் உளம் மகிழ்ந்து தளிர் விரல் பற்றி நடை பயின்ற நாட்கள் என்றென்றும் உனது நினைவில் ஒரு பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறாய் என்பதை அறிவோம் .

நான் எனது நல் அறிவுக்கும், நன்நடத்தைக்கும் என் தாய்க்கு ஆயிரமாயிரம் முறை கடன்பட்டு இருக்கிறேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒரு குட்டி கதை...
ஒரு மனிதன் இருநூறு மைல் தொலைவில் இருக்கும் தனது தாய்க்கு, மலர் கொத்து அனுப்பும் எண்ணத்தில், ஒரு மலர்களை விற்கும் கடைக்கு வருகிறான். அவன் வந்த தருணத்தில், கடை வாசலில் ஒரு சிறுமி சோக மயமாய் அமர்ந்து இருக்கிறார்.

சிறுமியின் வாட்டத்தை அறிந்த அந்த மனிதன் அந்த சிறுமியிடம் சென்று காரணம் கேட்கிறான். அதற்கு அந்த சிறுமி, எனக்கு ஒரு சிவப்பு ரோஜா வேண்டும் என்கிறாள். புன்னகை பூத்த அந்த மனிதன், இவ்வளவு தானே! வா! நான் வாங்கி தருகிறேன் என்கிறார்.

சொன்ன படியே அந்த மனிதன் சிறுமிக்கு ஒரு ரோஜாவை வாங்கி தருகிறான். அதன் பின்பு அவன் தனது தாய்க்கு பூக்களை வாங்குகிறான். அதை சரியான முகவரி தந்து அனுப்பி வைக்குமாறு சொல்கிறார். அதன் பின்னர் அந்த சிறுமியை தன்னுடன் காரில் வர அழைக்கிறார். அதற்கு அந்த சிறுமியும், நீங்கள் என் தாய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்கிறாள்.

அந்த மனிதருக்கு வழி காட்டியபடியே காரில் பயணித்து வந்த சிறுமி, புதிதாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு சமாதியில் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு ரோஜாவை வைத்து வணங்கி திரும்பினாள்.

இந்த நிகழ்வை கவனித்த மனிதன், திரும்பவும் தான் புறப்பட்ட மலர் கடைக்கு வருகிறான். முன்பு தன் தாய்க்கு அனுப்ப சொன்னதை திரும்ப பெற்று கொண்ட அவன், தானே, ஒரு மலர்கொத்தை கையில் எடுத்து கொண்டு தன் தாய் இருக்கும் கிராமம் நோக்கி புறப்பட்டான்.

"தாயே!
உன்பொருட்டு தர
உலகில் மதிப்பானது எதுவுமில்லை!
உனது அன்பை உலக பொருட்கள்
எதை கொண்டும் ஈடாக்க வழியில்லை!
உன் கையால் இன்னுமொரு கவளம்!
அதுவே என்னால் முடிந்த கைம்மாறு!"


ஆண்டு தோறும் மனமுருக தாயை தொழுது பாடும், முருக பக்தர், முருகதாஸ் அவர்களின் பாடல் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது.

"அம்மா என்று அழைப்போமே!
அவளை அம்மா, அம்மா என்று அழைப்போமே!
வானில் உலவும் நிலவை காட்டி
வாயில் ஊட்டினாளே! மாயை எனும் உலகை காட்டி
உலகில் விரட்டினாளே!
பட்டு புரிந்து கெட்டு தெரிந்து முடிவில் அறிந்தோமே!
அவளை அம்மா, என்று அழைப்போமே! "
.
.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்