ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதும் அதன் அழகோடு பிறக்கிறது. நம் பார்வைகளால் அந்த நாளை அதிர்ஷ்டம் கொண்டதாய், அர்த்தம் அற்றதாய் பார்க்க பழகுகிறோம். ஒவ்வொரு காலையும் பளிச் புன்னகையோடு, நம்மை எதிர்கொள்ள தயார் ஆகிறது. ஒவ்வொரு செடியும், நான் இன்று இந்த இடத்தை, அழகு படுத்துகிறேன் என சொல்லியே சிரிக்கின்றன.சிறகடிக்கும் ஒவ்வொரு புள்ளினமும், இன்னொரு நாளை தன இனிய குரலால் துவங்கி தன் மகிழ்ச்சியை, இளம் நாளையும், காலையும் கொண்டாடுகின்றன.ஒவ்வொரு நாளும் பெறற்கரிய வரம்.
ஒவ்வொரு நாளும் நமக்குள் சிந்திக்கவும் செயல்படவும் சில..
- இன்று நாம் ஒரு ஈவு இரக்கம் அற்ற பழி சொல்லை, இழி சொல்லை உதிர்க்கும் முன், பிறவி ஊமையாய் பிறந்த இன்னொரு சக மனிதனை நினைப்போம். நம்மில் உணர்வு இருந்தால், நம் ஒவ்வொரு வார்த்தை தடத்திலும், கலைமகள் இடம்பெருவாள். சொல்லும் ஒவ்வொரு சொல்லும், ஆயிரம் அர்த்தம் நிறைந்த இதிகாசமாய் மாறி போகும்.
- நம் உணவை குறை கூறும் முன், பிரபஞ்சத்தின் இன்னொரு மனிதன், உண்ண ஏதும் இல்லாமல் பரிதவிப்பவனை, ஒவ்வொரு ரொட்டி துண்டுக்கும், அலைபவனை நினைவுக்கு கொணர்வோம். உண்ணும் எல்லா பருக்கையும், நமக்கு அமிர்தமாய் மாறி போகும்.
- உங்கள் மனைவியை/கணவனை குறை கூறும் முன் ஒரே ஒரு நிமிடம் யோசிப்போம். உலகில் எத்தனையோ மனிதர்கள், துணைக்காக, சக மனிதனின் கரங்களுக்காக, வாழ்வின் பிடிப்புக்காக இறைவனை மன்றாடுபவரை நினைவுக்கு கொணர்வோம்.
- இன்று உங்கள் வாழ்வை குறை கூறும் முன், வாழ்வில் மிக இளம் வயதிலேயே இந்த மண்ணில் இருந்து விடைபெற்ற ஒருவரை நினைவுக்கு கொணருங்கள்[ நிலநடுக்கத்தில் புதைந்தது போன ஒரு குஜராத் பள்ளி குழந்தையோ, சுனாமியில் சுவடு மறைந்த ஒரு குழந்தையோ யாராயினும் பொருந்தும் ].
- இன்று ஒரு மனிதனை சுட்டி காட்டி நீ குற்றஞ் செய்தவன் என சுட்டும் முன், யோசிப்போம்... ' இங்கு யார் தான் குற்றம் குறை அற்றவர்கள்.? பிரபஞ்சத்தின் எல்லோரும் எதோ ஒரு வழியில் குற்றம் புரிந்தவராய் இருப்பார். ஆனால் நம் கண்கள் இன்னொரு மனிதன் குறையே பெரிதுபடுத்தும் பூத கண்ணாடியாய் இருக்கிறது. அவ்வளவே. '
- உங்களை எப்பொழுதெல்லாம், தாழ்வுணர்ச்சி ஆட்கொள்கிறதோ , உங்களை நீங்களே தரம் குறைந்தவராய் எண்ணம் உருவாகிறதோ அந்த நிமிடம் உங்களுள் எண்ணுங்கள் , நீங்கள் இன்னும் இந்த மண்ணில் உயிர் உடன் , உணர்வுடன் உலவுகிறீர்கள். ஒரு அர்த்தம் நிறைந்த புன்னகை உங்கள் முகத்தை அழகு படுத்தட்டும்.
முருகதாஸ் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. மும்பை பகுதியில், ஒரு தாய் தன மகளை வீட்டில் வைத்து பூட்டி செல்கிறார். அவரால் தொடர்ந்து ஆறு நாட்கள் வீடு திரும்ப முடியவில்லை. ஆறு நாட்களுக்கு பின் சிறுமியை பிணமாய் பார்க்க முடிந்தது. போஸ்ட் மார்டம் தகவல் சொன்னது, அவள் குடலில் ஒரு பருக்கை கூட ஒட்டி இருக்கவில்லை என. அந்த சிறுமிக்கு ஒரு ரொட்டி துண்டு இருந்திருந்தால் கூட அவள் இன்று நம்முடன் ஒட்டி இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை உணவை வீணடிக்கும் பொழுதும் இந்த சம்பவம் நினைவில் நிழலாடட்டும்.
.
.
No comments:
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்