Tuesday, September 22, 2009

நினைவுகள் - இன்று ஒரு தகவல் புகழ் தென்கச்சி அவர்கள்


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தினம் தோறும் வானொலி மூலமாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ நம் வரவேற்பறையை அலங்கரித்தவர். அவரின் எண்ணங்கள் பல நேரம் நம் பார்வையை விசாலப்படுத்தியவை. அவர் கையாண்ட எளிய நடை, அரிதான, சிக்கல் மிகுந்த விஷயங்களையும் யாருக்கும் கொண்டு சேர்க்கும் வல்லமை, அவருக்கே உரித்தான நகைச்சுவை, ஒரு அரிய மனிதரின் இழப்பை உணர செய்கின்றன.

எந்த மனிதருக்கும் கதைகள், எந்த வயதிலும் அலுப்பதில்லை; நாம் வாழ்வின் பல பகுதிகளில் கற்றலை, கதைகள் மூலமாக தெரிந்து இருக்கிறோம் . கதைகளை நம்மிடம் இருந்து பிரித்தால் நம் வளர்ச்சி அங்கு இல்லை. இந்த அரிய விஷயத்தை, நன்கு உணர்ந்தவர் சுவாமிநாதன் . கதைகளையும் நகைச்சுவையையும், பத்திரிக்கை  உலகம், வானொலி, தொலைக்காட்சி  என எல்லா ஊடக உலகிலும் தம்முடன் அழைத்து சென்றவர். அவரது பரிணாமம், ஆன்மிகம், சிந்தனை, நடந்த நிகழ்வுகள் என நீண்டு இருந்தது.

தம் முதல் விவசாய நிகழ்ச்சியில், எளிய நடையில், பயிர் பாதுகாப்பை, பூச்சிமருந்து தெளிப்பதை சொன்னவர், தம் எல்லா நிகழ்ச்சிகளிலும், அதே எளிய இனிய நடையை கொண்டு வந்தார். அவரது சிந்தனைகள், நிறையவே யோசிக்க வைத்தன. ஒவ்வொருவர் பார்வையிலும் , புதிய கோணத்தை அறிமுகம் செய்து வைத்த மிக முக்கிய மனிதர் சுவாமிநாதன். ஒரு நல்ல ஊடகவியலாளர். ஒரு நல்ல சமூக சிந்தனையாளர்.

தனது பணிக்காலம் முடிந்த பின், சமூகத்தின் பரபரப்பில் இருந்து ஒதுங்கி, அமைதியாக தனது வாழ்வை முன்னெடுத்து செல்ல முனைந்தவர்.  நல்லதொரு கேள்வி பதில் பகுதியை நடத்தி செல்லும் வல்லமை கொண்டவர்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ராமகிருஷ்ண குருபூஜை விழாவில், அவரை காணவும் அவர் பேச்சை கேட்கும் அரிய வாய்ப்பையும் பெற்றேன். முப்பது நிமிடங்கள் அவரது நகைச்சுவை பேச்சு நீண்டது. அவர் சொன்ன அரிதான இரு விஷயங்கள் இங்கே.

குரு, ஆசிரியர் இருவர்க்கும் என்ன வேறுபாடு?
ஆசிரியர் பாடங்களை போதிப்பவர்.அத்துடன் அவரது வேலை முற்று பெறுகிறது.  குரு வாழ்ந்து காட்டுபவர். உலகம் முழுவதும் , குருமார்களே மிக  அதிகம் மதிக்க படுகிறார்கள்.

பார்வை எப்படிப்பட்டது? நம் பார்வை எப்படி இருக்க வேண்டும்?
பல நேரங்களில் நம் பார்வை மாற வேண்டும், அதை நாம் மாற்றுவதில்லை. ஒரு அரசனுக்கு உடலில் மனதில் பிரச்சனை. அவன் உடல் நிலை சரியாக, அவன் பார்க்கும் எல்லாம் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என - ஒரு முனிவர் போகிற போக்கில் சொல்லி சென்றார். அவர் சென்று, இரண்டு மாதம் கழித்து ஊருக்கு திரும்பி வந்தார்.  வந்தவர், ஊரே பச்சை நிறமாய் மாறி இருப்பதை கண்டு திகைத்தார். அவரையும், பச்சை சாயத்தில் குளிப்பாட்ட முனைந்தனர் மன்னனின் ஏவல் சமூகத்தினர். காரணம் கேட்ட முனிவருக்கு தலை சுற்றியது; முனிவரே நீங்கள் சொன்னதை தான் நாங்கள் செய்தோம்; இப்போது பாருங்கள் ஊரே பச்சை நிறமாய் உள்ளது; மன்னன் பார்வை படும் இடம் எல்லாம் பச்சை நிறம் என்றனர்.  அவர்களை தடுத்த முனிவர்; நீங்கள் ஏன், அரசனுக்கு ஒரு பச்சை கண்ணாடி வாங்கி கொடுத்து இருக்க கூடாது என கேட்டார்? நம் பார்வைகள் பல நேரம் இப்படி இல்லையே என்பதே பிரச்சனை.

இந்த பதிவு மிக மிக காலம் தாழ்த்தி வந்ததே. ஆனாலும், ஒரு நல்ல உள்ளத்தின் மறைவு வார்த்தைகளாய் வருவதை தடுக்க முடியவில்லை. ஐயா, நீங்கள் உங்களுக்கே உரித்தான; உங்களின் ஏற்ற இறக்கத்துடன் சொல்லி வந்த அத்தனை விஷயங்களும், எங்கள் நினைவில் என்றென்றுன் நிழலாடும். போய்வாருங்கள். உங்கள் காலம், உங்கள் வார்த்தைகள்,  சக மனிதர் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.
.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்