Monday, August 30, 2021

நூற்றாண்டை கடந்து தடம் பதிக்கும் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்



நூற்றாண்டுகளை கடந்து பரிமளிக்கும் 'ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்' இதழுக்கு நல்வாழ்த்துக்கள். எப்பொழுதும் போல் புத்திளமையோடு வீறுநடையிடட்டும். என்றென்றும் பக்தியையும், நல்லொழுக்கத்தையும் சமூகத்திற்று வாரி வழங்கிடட்டும்.

Saturday, July 10, 2021

தி.ஜானகிராமன் அவர்களின் பிறந்த நூற்றாண்டு




தி.ஜானகிராமனுடைய எழுத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுக் கதவு திறக்கும். அவரது கதையில், ஒவ்வொரு வசனத்துக்கும் ஒரு தேவை இருக்கும். ஒரேயொரு வசனத்தை நீக்கினாலும் கதையில் உள்ள ஏதோவொன்று வெளியே போய்விடும். ஒவ்வொரு வார்த்தையிலும் கதை ஓர் அலகு முன்னேறும். கதையின் இறுதிப் புள்ளியை நோக்கி மெல்லிய நகர்வு நிகழ்ந்தபடியே இருக்கும். ஆனால் அது கண்ணுக்கு புலப்படாது. நுட்பமாக கதைகூறும் திறனும் கவித்துவ நடையும் அவருடைய முத்திரை. விருந்து மண்டபம் ஒன்றுக்கு ஓர் அழகி நேர்த்தியாக உடையணிந்து, அலங்கரித்துக்கொண்டு உள்ளே நுழைகிறாள். உடனே அங்கிருக்கும் அத்தனை பெண்களும் தங்கள் தங்கள் உடைகளை ஒருமுறை சரிபார்த்துக் கொள்கிறார்கள். அப்படித்தான், தி.ஜாவின் எழுத்தை படிக்கும் ஒவ்வொரு முறையும் மற்ற எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை ஒருமுறை திரும்பவும் பார்த்துக் கொள்வார்கள். - 
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் 


இது தி.ஜானகிராமன் அவர்களின் பிறந்த நூற்றாண்டு. ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டம் தந்த ஆகப் பெரிய ஆளுமைகளில் ஜானகிராமன் முதன்மையானவர்.


தமிழ் கூறும் நல்லுலகில், ஜானகிராமன் விட்டு சென்ற நல்முத்துக்கள் - சிறுகதை, நாவல், பயண இலக்கியம், நாடகம் என விரவிக்கிடக்கிறது. கொத்தமங்கலம் சுப்பு எப்படி தஞ்சையின் கலைப்பொக்கிஷங்களை தில்லானா மோகனாம்பாள் என வார்த்தைகளில் வடித்தாரோ, அப்படியே ஜானகிராமன் தன் எழுத்து வழியே ஜீவித்ததோடு வாழ்கிறார்.

ஜானகிராமன் எழுத்துக்களில் வரும் மனிதர்கள், அபூர்வமான மன இயல்பு கொண்டவர்கள். வியாசரின் பாரதம், மனிதரின் எல்லா மனக்கோணங்களையும், சிப்பி எப்படி சிதறினால் விழுமோ அப்படி படியெடுத்திருப்பார். அப்படியே, மாறுபாடில்லாத எழுத்துக்களை தன்னிடம் கொண்டவை  ஜானகிராமன் எழுத்துக்கள்.

நான் சில எழுத்துக்களை படித்து, சில காலத்துக்கு பின் மீண்டும் படிக்க நேர்ந்தால், அட! இந்த எழுத்தையா நான் மாய்ந்து மாய்ந்து படித்தேன் என வியப்பேன். ஆனால் ஜானகிராமன் எழுத்துக்களை 30 ஆண்டுகள் கழித்து படித்தாலும், அதே சிலிர்ப்பு மேலிடுகிறது என்கிறார் சுஜாதா.

ஜானகிராமன் புதினங்கள் தொட்ட வாசிப்பு பரவலை, அவரது சிறுகதைகள் தொடாதது வருத்தமே! ஆனால் அவரது சிறுகதைகள் அத்தனை அற்புதமானவை(முள்முடி, பாயாசம் இன்னும் நினைவில் வந்து போகின்றன )...





தஞ்சைக்கு சில சிறப்புகள் உண்டு. பல நாட்களுக்கு முன் என் பேராசிரியர் குறிப்பிட்டவை என் மனதில் நிழலாடுகிறது. தஞ்சையின் பின் மதியங்களில், எல்லா வீடுகளிலும் ஊஞ்சல் சப்தம் கேட்டபடி இருக்கும். தஞ்சையின் மக்கள், அப்படி ஒரு சுகானுபவத்தில் வாழ்பவர்கள். 

ஜானகிராமன் கதைகளில் வரும் ஆழ்ந்த, மிக நுண்ணிய இசை குறிப்புகள் அவருக்கு உரியவை;தனித்துவம் மிக்கவை; அவர் எந்த ஒரு வாசகனையும், தன் எழுத்தின் ஆற்றலால், மேல் துண்டில் முடிகிற வெற்றிலை சீவல் போல் முடிச்சிட்டு முடிந்தவர்; வெல்ல பாகை போல் எழுத்து சுவை மிக்கது; 

அவரது புதின தலைப்புகளே ஆயிரமாயிரம் கதைகள் சொல்லும்; ஒரு புதினத்தில் கண்ட பாத்திரம், இன்னொரு புதினத்தில், சற்றே மாறி உப பாண்டவங்களை சமைத்தது போல் உரு கொள்ளும்; அம்மா வந்தாள், மோக முள், உயிர் தேன், நள பாகம், மரப்பசு என சொல்லிக்கொண்டே போகலாம்;

ஜானகிராமனுக்கு பின் எழுத வந்தவர்களில், நிறைய பேரிடம், அவரின் தாக்கம் இருப்பதை உணர முடியும்;புத்தாயிரம் ஆண்டுகளில், தினமணி கதிர், எழுத்தாளர்களின் முதல் கதை பிரசுரித்த அனுபவத்தை கொண்டு "முதல் பிரசவம்" என தொடர்ந்து வெளியிட்டது; அப்படி ஒரு வாரம், தமிழின் ஆக பெரிய ஆளுமை(பெண் எழுத்தாளர்), ஜானகிராமன் மறைந்த அந்த நாளை, ஆகப்பெரிய துயரம் தன்னை போர்த்தியதாய் குறிப்பிட்டார்;

ஜானகிராமன் சொல்லும் உவமைகள், என்றென்றும் திகட்டாதவை; அடிக்கரும்பின் நுனியின் சுவைகொண்டவை; அவரின் வார்த்தைகளில் சொன்னால்"...

"அப்பா ஈர வேட்டியை உதறி 'இந்தா' என்று கட்டிக்கொள்ள கொடுத்தார் ; பிறகு அவரே இடையை சுற்றி அதை கட்டி விட்டார்;விபூதியை குழைத்து நெற்றியில் இட்டார்; பார்த்துக்  கொண்டிருக்கும் போதே கண்கட்டு வித்தை போல, வானத்தில் நட்சத்திரம் முளைப்பது போல, ஈரம் உலர்ந்து விபூதி பளிச்சிட வெண்மை".  

ஜானகிராமன் கதைகளும், காவிரியும் பிரிக்க முடியாத இரட்டை தண்டவாளங்கள்;அவர் எங்கு பயணப்பட்டாலும், அவருள் காவிரி அடியாழத்தில், நொப்பும் நுரையுமாக பயணப்படுகிறது; இதயத்தில் ஓடும் இரத்த நாளங்கள் போல் தான், அவருள் ஓடும் காவிரியும்; வெகு நாட்கள் தில்லியில் வாழ்ந்தாலும், சென்னையில் வாழ்ந்தாலும், பால்யத்து காவிரி அப்படியே உள்ளங்கையில்; காவிரி இல்லாத அவர் எழுத்து, நினைத்து பார்க்க முடியாதது; சில நேரங்களில், சுளித்து ஓடும், சில நேரங்களில் துள்ளி குதிக்கும், சில நேரங்களில் காட்டருவியாய் பேரோசையோடு ஆர்ப்பரித்து ஓடும்;  

அவரது பயண இலக்கியத்தில், உதய சூரியனுக்கும், நடந்தாய் வாழி காவேரிக்கும் அற்புத தடமுண்டு; அம்மா வந்தாள் நாவலில், ஒரு பாத்திரம் அப்பு; லிங்கங்களில், ஒவ்வொன்றையும் மனிதன் பஞ்ச பூதத்துக்கு அர்பணித்தான்;அப்படி நீர் லிங்கத்தின், பெயர் - அப்பு. அப்படி நீரின் அத்துணை குணாதிசயங்களையும் தன்னுள் கொண்டது அந்த படைப்பு; 


ஜானகிராமன் கதைகளில் வரும் பெண்கள் மிக மிக அபூர்வமானவர்கள்; மிக மிக மனத்தால் வலியவர்கள்;ஏன் ? அவரின் கதைகளின் மைய நீரோட்டமே பெண்கள் தான்; தான் படைக்கும் பாத்திரங்களில், பெண்களை மிக உயர்வாய் உரு கொடுத்திருப்பார்; அவர்களுடன் ஒப்பீட்டளவில் ஆண் பாத்திரங்கள், உச்சுக்கொட்டுகிற அளவில் மட்டுமே உள்ளனர்; அலங்காரம், பவானியம்மாள், இந்து, யமுனா, அனுசுயா,செங்கம்மா என அப்படியோர் அற்புத ஸ்ருஷ்டி; 


ஜானகிராமன் எழுத்துக்களுக்கு, புதிதாக சாமரம் தேவையில்லை; காலம் தோறும், அவரின் நினைவோடு அவரின் அத்தனை பாத்திரங்களும் புத்தியல்போடு பயணப்படும்; தஞ்சையின் மாறாத தமிழ் சுவையோடு, அவரின் எழுத்து என்றென்றும் ஜீவித்திருக்கட்டும்; 

காடுகள் அனைத்திலும் காற்றைப் பரப்பினான் வருணன்;குதிரைகளுக்கு வேகம் ஊட்டினான். பசுக்களிடம் பாலை நிரப்பினான்; இதயத்தில் அறிவை வைத்தான்; நீரில் அக்கினியை வைத்தான்;   வானில் இரவியை வைத்தான்; மலை மீது சோமத்தை வைத்தான்; வானம், பூமி, நடுவானம்   எங்கும் முகில்களை பரப்பி கவிழ்த்தான்; அதனால் பூமி நனைந்தது - மழையில் நனையும் தானியம் போல; பால் வேண்டும் போது பரந்த பூமியும், விண்ணையும் நனைக்கிறான் வருணன்; அப்போது, மலை முகில்களை போர்த்திக் கொள்கிறது; மருந்துகள் வந்து அவற்றை இழுத்து வெளியே  விடுகிறார்கள்;

இந்த தேவன் பேரறிஞன்; அவனுடைய  அதிசய வல்லமையை யார் மறுக்க முடியும்?
 
 வருணனே நண்பன், தோழன், சகோதரன், அண்டை வீட்டுக்காரன் என்று நெருங்கியவர்களுக்கு எல்லாம் எப்பொழுதாவது நாங்கள் பாபம் இழைத்திருக்கலாம்; முன் பின் தெரியாதவர்க்கும் இழைத்திருக்கலாம்; அதிலிருந்து எங்களை விடுவித்து விடு; 
 
வருணனே!  சூதாடியை போல அறிந்தோ, அறியாமலோ நாங்கள் ஏமாற்றுக்கள் புரிந்திருக்கலாம்; அவற்றை எல்லாம் நீக்கிவிடு; உன் அன்பும், கருணையும் எங்களுக்கு வேண்டும்;
.
.
 








 

Saturday, August 24, 2019

தொண்ணுறுகளின் நாட்கள் - இசையால் நிரம்பிய பயணம்


சமீபமாய் தினமும் தொண்ணுறுகளின் நாட்கள் ஏதோ  ஒரு வகையில் நினைவுக்கு கொண்டுவரப்படுகின்றன. ஆயிரம் தான் இருந்தாலும், எங்க காலம் மாதிரி வருமா? என்ற அங்கலாப்பு அனைவருக்கும் உண்டு.  அப்படியான என் nostalgic பயணம் இங்கே. அன்றைய  கமர்கட், தேன் மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், பூமர், சுத்துற மிட்டாய், HMT கடிகாரத்தின் பொருட்டு சேகரித்த க்ளோப் தீப்பெட்டி அட்டைகள் என இவை  தாண்டி பின்னோக்கிய பயணம் இங்கே ..

அன்றைய நாள் வார ஏடுகள்: 
அன்றைய வார ஏடுகள் இன்னும் கண்ணில் மின்னுகின்றன. அன்றைக்கு வந்த எல்லா வார பத்திரிக்கையிலும் தவறாமல் தொடர்கதைகள் ஆக்கிரமித்திருந்தன; கல்கி இதழில் தவறாமல், அட்டகாசமான படங்களுடன் தொடர்ந்து பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்தீபன் கனவு தொடர்ந்தது. விகடனும், குமுதமும் தொடர்ந்து தொடர் கதைகளை வெளியிட்டன. நிச்சயம் அந்த கணங்கள் உவப்பானவை; என் ஞாபகத்தில் தொண்ணுறுகள் இறுதியில், இரண்டாயிரம் துவக்கத்தில் இந்த போக்கு இருந்தது. இன்றைய இதழ்கள் ஒற்றை சிறுகதையுடன் முடித்து விடுகின்றன.நிரம்பவே ஏமாற்றம்.. அன்றைய நாள் இந்திய டுடே அருமை. அன்று தேடி படித்த சாம்பியன் புத்தகம், ஸ்போர்ட்ஸ் ஸ்டார், அம்புலி மாமா, கோகுலம், சிறுவர் மலர் யாவும் பொக்கிஷங்கள். அன்றைய விகடனில் வந்த அரட்டை - அணு, அக்கா, ஆன்டி, குமுதத்தில் வந்த ராட் க்ரிஷ் அரட்டை இன்னும் நினைவில் உள்ளது.

வாலி - அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜன்
சுஜாதா - பூக்குட்டி,  யவனிகா, இரண்டாவது காதல் கதை, கற்றதும் பெற்றதும், சுஜாதாட்ஸ், ஏன் எதற்கு எப்படி.,  இன்னும் பல..
வைரமுத்து - கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம்.,
பாலகுமாரன் - அப்பம் வடை தயிர்சாதம்.
ஸ்டெல்லா புரூஸ் - மாய நதிகள், குமாரசாமி mbbs பெண் தேடுகிறான்
பாஸ்கர் சக்தி - ஏழு நாள் சூரியன், ஏழு நாள் சந்திரன்
பிரபஞ்சன் - கனவுகளை தின்போம்
சுபா - கண்மணி சுகமா ?
 மடிசார் மாமி
ரவிக்கந்தன் - லவ் 2K
தமிழருவி மணியன்  - ஊருக்கு நல்லது சொல்வேன்
எஸ்.ராமகிருஷ்ணன்  - துணை எழுத்து
ஹாய் மதன்
நானும் விகடனும்
இனிக்கும் இலக்கியம் - தமிழண்ணல்
சங்க சித்திரங்கள் - ஜெய மோகன்
க சி சிவகுமார் - ஆதிமங்கலத்து விசேஷங்கள்
ராஜேஷ் குமார் - கொஞ்சம் மேகம், கொஞ்சம் நிலவு.
இந்திரா பார்த்தசாரதி - கிருஷ்ணா கிருஷ்ணா 
க்ரேஸி மோகன் - அமெரிக்காவில் கிச்சா 
ரா கி ரங்கராஜன் -  நான் கிருஷ்ண தேவராயன் 


அன்றைய விளம்பரங்கள்:
அன்றைய விளம்பரங்கள் சாமானியரை கொள்ளை கொண்டவை. காற்றின் வண்ணங்களை வார்த்தைகளால் , இசையால் நிரம்பியவை. அன்றைய பெப்சி விளம்பரம் மறக்க முடியாதது. 96 உலக கோப்பையை முன்னிட்டு அது எடுக்கப்பட்டது;


(இந்த விளம்பரம் சலிக்காமல் பார்த்த ஞாபகம் - சச்சின் )
தொடர்ந்த பூஸ்ட் விளம்பரம் (முன்பு கபில் - சச்சின், பின் சச்சின் சேவக், பின் தோனி  )

 ஒவ்வொரு புது சோப்பு விளம்பரத்தை பார்த்து ஒவ்வொரு சோப்பை உபயோகித்து மகிழ்ந்தோம்; அவர்களும் நம்மை அப்படியே நம்ப வைத்தனர்;


சொட்டு நீலம் - ரீகல், உஜாலா - நீயும் உஜாலாவுக்கு மாறிட்டாயா ? நானும் உஜாலாக்கு மாறிட்டேன்...

நிர்மா 
பஜாஜ் ஸ்கூட்டர் 
லிரில் 
காம்பிளான் - நான் வளர்க்கிறேன் மம்மி 
பெப்சி, கோக், ரின், ஹமாம், சந்தூர், சந்திரிகா ,
கோகுல் சாண்டல்   

மிராண்டா, ஒனிடா 
கண்ணன் ஜூப்ளி காபி - ரஹ்மானின் தெளிந்த/மயக்கும்  இசை.. இன்னும் காதில் ரீங்கரிக்கிறது.   
நரசுஸ் காபி - பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கு 

கவர்ந்த தொலைக்காட்சி தொடர்கள்:
அன்றைய நாள் தொலைக்காட்சி DD யில் தொடங்கி DD யில் முற்று பெற்றது. கிரேஸி மோகனின் அத்தனை நாடகங்களும் அற்புதமானவை. அனைத்து சுதந்திர தினத்திலும் ரோஜா படம் கட்டாயம் இடம் பெறும்.  திரை மாலை, எதிரொலி, கண்மணி பூங்கா, வயலும் வாழ்வும் தாண்டி அன்றைய விருப்ப  தொடர்கள்:

1. என் இனிய இயந்திரா
- நாவல் தொடர் 
2. அம்மாவுக்கு கல்யாணம் 
3. பொன் விலங்கு - நாவல் தொடர் 
4. இரும்பு குதிரைகள் - நாவல் தொடர் 
5. இது ஒரு மனிதனின் கதை - நாவல் தொடர் 
6. நெஞ்சினலைகள் - நாவல் தொடர் 
7. ஸ்ரீ கிருஷ்ணா 
8. அம்பிகாபதி 
9. இருட்டிலே தேடாதீங்க 
10. துப்பறியும் சாம்பு 
11. மால்குடி டேய்ஸ் 
12. கிருஷ்ணா லீலா தரங்கிணி 
13. டாக்சி டாக்சி 
14. மேல் மாடி காலி 
15. சந்திர காந்தா 
16. ஜுராசிக் பேபி 
17. சங்கர்லால் துப்பறிகிறார் 
18. தாயுமானவன் - நாவல் தொடர் 
19. ரமண மகரிஷி - வாழ்வு 
20. சாணக்யா 
21. அக்பர் தி கிரேட் 
22. சின்ன சாம்பு 
23. தினேஷ் கணேஷ் 
24. அடடே மனோகர்.
25. ஆலிஃப் லைலா  
25. கள்வனின் காதலி - - நாவல் தொடர் 
26. வசந்தம் காலனி 
27. here is crazy 
28. வாஷிங்டனில் திருமணம் - சாவியின் நாவல் தொடர் 
29. மின்னல் மழை மோஹினி - ஜாவர் சீதாராமன் தொடர்.
30. திருக்குறள் கதைகள் 
31. ஜெய் ஹனுமான் 
32. நான் தில்லி நகரம் 

Saturday, December 8, 2018

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்


இந்த ஆண்டத்திய சாஹித்ய அகாடமி விருது பெறும் எஸ்.ரா. அவர்களுக்கு மனம் நிறைந்த நாள் வாழ்த்துக்கள்!!! இசை கலைஞர்கள்  பற்றி முன்பே  நிறைய எழுதி உள்ள எஸ். ரா. அவரின் சஞ்சாரம் நாவலுக்காக இந்த விருதை பெறுகிறார். இந்த நாவல் இசை கலைஞர்களை பற்றி பேசுகிறது. 

வீரயுக நாயகன் வேள்பாரி - தொடர் : அரியதோர் புனைவுலகு



பாரி பாரி என்றுபல ஏத்தி 
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் 
பாரி ஒருவனும் அல்லன் 
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே
“பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும் இருக்கின்றது.”
மேகத்தைப் போன்றவன் பாரி என நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய உத்தி நினைதற்குரியது.

வீரயுக நாயகன் வேள்பாரி தொடர்,  அரியதோர் புனைவுலகு தன்னை தமிழ் வாசக நெஞ்சங்களுக்கு அறிமுகப்படுத்தியது.  முதலில், தொடாத ஒரு சிற்றரசனை, அவ்வைக்கும்,  கபிலனுக்கும் பின் பாடுபொருளாக்கிய சு.வெங்கடேசனுக்கும், அவரின் எண்ணத்தை, தன் உயிர் ஓவியத்தால் கதையை கண் முன் நிகழ்த்தி காட்டிய ஓவியர் மணியன்செல்வன் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்; தன் வழியே அரிய படைப்பை அளித்த விகடனுக்கு வாழ்த்துக்கள்;



 கல்கியை, சாண்டில்யனை, அகிலனை, நா. பாவை,கோவி மணிசேகரன், கலைமாமணி விக்ரமன் அவர்களை, ரா சு நல்லபெருமாள் அவர்களின் படைப்புகளை படித்த நான், இந்த மிகு புனைவில் கட்டுண்டேன். குறிஞ்சி கபிலனை கண் முன்  நிறுத்தியமைக்காக நன்றிகள். நட்புக்கு உதாரணமான மனிதர்கள் கபிலனும் பாரியும் சேர்த்தே. பாரி உயிர் நீத்த நிலையில், கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்தது நட்பின் நவிலல்;


 பாரியின் கதை  சொல்லி, குறிஞ்சி பாட்டுடை தலைவனை, விட்டு விட்டால் எப்படி; முருகனும் வள்ளியும் அவர்களின் காதலும் பொழிந்தபடி செல்கிறது மழை மேகமாய்;

ஓவியரை எப்படி சொல்வதென தெரியவில்லை; கண்களில் வியப்பு மேலிட பார்த்துக்கொண்டே இருக்கலாம். எப்பொழுதும் - போல ம. செ. அவர்களின் ராஜ பாட்டை இதிலும் தொடர்கிறது. அந்த பாரியின் ஓவியம், முருகன் வள்ளி, போர் நிகழ்வுகள், யானைகள், குதிரைகள்,  காடு, மரம்,தொடும்  பச்சைகள், கபிலர், பாணர்கள், மேக கூட்டம்,விண்மீன் திரள்கள், அட அந்த தேர், ,சுனைகள்    - அசாதாரணமான எண்ண  ஓவியம்;


பல இடங்களில், மிகு கற்பனையில், நம்மை முகிழ்க்க ஆசிரியர் தவறவில்லை. ஒரு காடு - காடரிதல், வண்டுகள், நொச்சி புகை, ஆட்கொல்லி மரம், எலி, தேவ வாக்கு விலங்கு  என அது ஒரு தனி கற்பனை உலகம். முருகனை சொல்லி தினை காத்தலை சொல்லாமல் விட்டால் எப்படி; காட்டை, மழையை, மனிதர்களை, விலங்குகளை, பறவையை அத்தனையும் கபிலரை போலெ இங்கும் பாடுபொருள்.  காட்டில் அமைத்த பரண், கொண்டாட்டங்கள், உண்ட கள் வியப்பு தான்; போரில் பயன்படுத்தும் ஆயுதங்கள், விற்கள், விந்தையான வாள் - ஒவ்வொன்றின் பின்னும் அதன் தனி சிறப்புகள் அதன் விவரிப்புகள் அற்புதமானவை;
       
இது வரையில், இப்படி ஒரு போர்க்கள விவரிப்பை, விறு விறுப்பாய் படித்ததில்லை; பொற்சுவையின் தியாகத்தை மறக்க முடிவதில்லை; பாரியை அவன் வீரத்தை கண்முன் கொண்டு வந்ததில் பெரும் வெற்றி ம. செ அவர்களுக்கு உரியது.

பாரியின் கதை வழியே அறிமுகமான பெயர்கள் அற்புதம் - திசைவேலர், பொற் சுவை, தேக்கன், முடியன், இறவாதான், செங்கண சோழன், பொதிய வெற்பன், உதிரன், கருங்கைவாணன்  இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு கதை களத்துக்கு நம்மை கரம் பற்றி இட்டு சென்ற சு. வெங்கடேசன் பாராட்டுக்கு  உரியவர். தொடரட்டும் உங்கள் பயணம்.. வெல்லட்டும் உங்கள் முயற்சிகள்;


தமிழ் வரலாற்று நாவலாசிரியர்கள் - படைப்புகள்
maniyan selvam, su venkatesan

https://www.vikatan.com/news/tamilnadu/136950-velpari-100th-episode-writer-svenkatesan-praises-readers.html

https://www.vikatan.com/anandavikatan/2018-sep-26/serials/144328-vel-paari-historical-hero.html

https://www.vikatan.com/anandavikatan/2018-apr-04/serials/139649-vel-paari-historical-hero.html

http://www.tamilvu.org/courses/degree/d011/d0114/html/d0114210.htm
நன்றி : Tamilvu, விகடன் 

நிசப்த போராளி - கெளதம் கம்பீர் (Gautam Gambhir)


இதோ இந்த வாரத்துடன், கெளதம் கம்பீர் அவர்களின் கிரிக்கெட் வாழ்வு முடிவுக்கு வருகிறது. அருமையான ஒப்பனராகவும், கிரிக்கெட்டின் அனைத்து விதமான வடிவங்களில், தன் தனி முத்திரையை பதித்தவர். அவரின் அருமையான ஆண்டு 2008. 2009 ஆம் ஆண்டில் தனி முத்திரையுடன் ஐசிசி விருதை(சிறந்த டெஸ்ட் வீரர்   விருதை) பெற்றார். அந்த ஆண்டு அவர் தொட்டதெல்லாம் பொன்னானது.

களத்தில்  ஆக்ரோஷமாக செயல்படுவதில், இக்கட்டான தருணத்தில் அணியை மீட்பதில், இவருக்கு இணை யாருமில்லை. இந்தியா பெற்ற அருமையான வெற்றிகளில், பிறரின் ஆட்டத்தில், காம்பிர் மறைந்து போனார். ஆனால் அவரில் ஆட்டம் மறக்க முடியாதது. விலை மதிப்பற்றது; அவரின் துணிச்சல் பிறரும் பின்பற்ற வேண்டிய அம்சம். இரண்டு ஐ பி எல். தொடர்களில், கேப்டனாக கொல்கத்தாவுக்காக கோப்பையை வென்று தந்தவர். சற்றே தாமதமாக அணிக்குள் வந்து, தன் இடத்தை தக்கவைத்து கொண்டவர். திடீர் பார்ம் சரிவும், அணிக்குள் இருந்த புகைச்சலும், அவரை திடீரென ஓரம் கட்டியது காலத்தின் மறையாத கோலம்.

அவரின் சிறந்த ஆட்டங்கள்:
1. 2007 - டி 20 இறுதி  ஆட்டம்
2. 2011 - உலக கோப்பை இறுதி  ஆட்டம்
3. நியூசிலாந்து டெஸ்ட் தொடர். - 2009
4. ஆஸ்திரேலியாவின்  இந்திய டெஸ்ட் தொடர் - 2008
5. 2011 - உலக கோப்பை - காலிறுதி ஆட்டம் - இந்தியா ஆஸ்திரேலியா

மிக குறுகிய ஆண்டுகளே விளையாட முடிந்தாலும், பல வடிவங்களில், பத்தாயிரம் ரன்களை தொட்ட கம்பிர் சாதனைகள்  கொண்டாட பட வேண்டியதே. அவரே அரிய சாதனை நாயகன். தனக்கு கொடுத்த ஆட்ட நாயகன் விருதை, அன்றைய இளம் வீரர் கோலிக்கு(விராட் கோஹ்லி ) கொடுக்க சொன்ன அவரின் இதயம் மகத்தானதே. வாழ்த்துக்கள் காம்பிர். ஒரு நாள்  நீங்களும் அணியை வழி  நடத்துவீர் என எதிர்பார்த்தோம். அவ்வளவே!!!

Wednesday, March 29, 2017

வெண்ணிற இரவுகள்(White Nights) - தமிழ் மொழிபெயர்ப்பு - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி


வெண்ணிற இரவுகள்(White Nights) - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoyevsky)


வெண்ணிற இரவுகள்(White Nights) - தாஸ்தோவ்ஸ்கி அவர்களால் 169 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்டது. அதன் தமிழாக்கத்தை "எதிர்" வெளியீடாக "ரா. கிருஷ்ணய்யாவின்" மொழியாக்கத்தில் படிக்க நேர்ந்தது. தாஸ்தோவ்ஸ்கியின் எழுத்தை முதல் முதலில், முழுமையாக வாசிப்பது உண்மையில் பேரனுபவம்; முன்னர் நான் வாசிக்க முற்பட்ட 'The Ediot' புத்தக அலமாரியில் நீண்ட துயில் கொள்கிறது.  அருமையான  வடிவமைப்பில், ருஷ்ய சிறுகதை தமிழில். எஸ். ரா. அவர்களின் இந்த கதை பற்றிய எண்ண ஓட்டங்கள் கதையின் முன்னுரையாக தரப்பட்டுள்ளது சிறப்பு.



அந்த நாளைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கதை நிகழ்கிறது. பகல் நீண்ட இரவிலும் சூரியன் நீளும் உலகு கதையில்  விரிகிறது. இரண்டு  ஆண்கள்,ஒரு  இளம் பெண், ஒரு பாட்டி என கதை மாந்தர்கள் சொற்பமானவர்களே; இந்த கதை சொல்லி அவரின் வாயிலாகவே கதை விரிகிறது; அவர்க்கு என பெயர் இல்லை; அவர் ஒரு கனவுலக வாசி;

கதையின்  துவக்கத்தில்,அன்று உச்சத்தில் இருந்த கவிஞர் துர்கனேவ் அவர்களின் 'பூக்கள்' தொகுப்பின் கவிதை இடம்பெற்று உள்ளது.

"நின்காதல் நிழல் தன்னில்
நின்று மகிழ்வோம்
மின்னி மறையும்
கண்ணிமை பொழுதெனினும்
போதுமது என்றெண்ணிப்
பிறந்தானோ ?.."

"The Flower" by Ivan Turgenev....

"And was it his destined part
Only one moment in his life
To be close to your heart?
Or was he fated from the start
to live for just one fleeting instant,
within the purlieus of your heart."

இந்த கவிதையே கதைதனை சொல்லிவிடுகிறது; தாஸ்தோவ்ஸ்கி கதையில் அவரின் வாழ்வனுபவம் ஏராளம் இடம் பெறும். இந்த கதையின் பின் தாஸ்தோவ்ஸ்கி நின்று பேசுவது போல் கதை உள்ளது; அவரின் எல்லா நாவல்களும் அவரின் வாழ்வே! என்ன; அங்கங்கே ஒவ்வொரு கதா பாத்திரம்.. அவ்வளவே ? ஏனெனில் தாஸ்தோவ்ஸ்கி வாழ்ந்த வாழ்வும், தொடர்ந்த நிழல் போன்ற நெருக்கடிகளும், சுமைகளும் அத்தகையவை; தாஸ்தோவ்ஸ்கி அவர்களின் அக உலகம் போன்றது தான் இந்த கதை நாயகனின் உலகமும்; ஏன் - நம்மில் பெரும்பான்மையானவர்கள் இயைபும் அப்படி தானே! நான்கு இரவுகள், ஒரு பகல் என கதை முடிந்து விடுகிறது;கதை நாயகன் தன்னை ஒரு கூச்ச சுபாவம் கொண்டவராய், தனிமையில் உழல்பவராய் தன்னை சுட்டுகிறார்;

அவர் ஒரு இளம்  பெண்ணுக்கு உதவ போய்(நாஸ்தென்கா), அறிமுகமாகி,  அவளின் காதலுக்கு உதவுகிறார்; இந்த தருணத்தில் அவர்க்கு நாஸ்தென்கா மீது காதல்; நாஸ்தென்கா - வின் கடிதத்துடன் அவரின் காதலரை சந்திக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,ஓர் இடத்தில் சந்திக்கும் இவர்களின் எண்ண ஓட்டம், தொடர் பேச்சு, அழுகை , மகிழ்ச்சி, நட்பு, சுய மதிப்பீடுகள் இவை  கதையை நகர்த்துகின்றன. நாஸ்தென்கா தன் கண் தெரியாத பாட்டியுடன் வாழ்வபள்.    ஒரு வருடத்துக்கு பின், தன் காதலன் வரவை இப்பொழுது எதிர்பார்த்து காத்திருப்பவள்;

நான்காவது நாள், தன் காதலன் வராத நிலையில் நாஸ்தென்கா கலங்குவதும்,  கதையின் நாயகனிடத்தில் தானும் காதல் வயப்படுவது போல் கதை நகர்ந்து, திடீர் திருப்பமாய் காதலன் அங்கே உதயமாகிறான்; அந்த நிலையில், கதை நாயகனிடம் நாஸ்தென்கா விடைபெறுகிறாள்;

அடுத்த நாள் , பகல் பொழுதில் நாஸ்தென்காவின் கடிதத்தை கண்ணீரோடு வாசிப்பதோடு கதை முடிகிறது; நீ எங்கிருந்தாலும் வாழ்க! உன் மங்கள குங்குமம் வாழ்க! என்பதாய் திரை விழுகிறது;

" உன் வானம் என்றும் நிர்மலமாய் ஒளிர்வதாக! உனது இனிய புன்னகை துன்பத்தால்  தீண்டப்படாது என்றும் ஒளி வீசுவதாக;"


My God, a moment of bliss. Why, isn't that enough for a whole lifetime?

I am a dreamer. I know so little of real life that I just can’t help re-living such moments as these in my dreams, for such moments are something I have very rarely experienced. I am going to dream about you the whole night, the whole week, the whole year.


May you be for ever blessed for that moment of bliss and happiness which you gave to another lonely and grateful heart. Isn't such a moment sufficient for the whole of one's life?May your sky always be clear, may your dear smile always be bright and happy, and may you be for ever blessed for that moment of bliss and happiness which you gave to another lonely and grateful heart. Isn't such a moment sufficient for the whole of one's life?


http://www.sramakrishnan.com/?p=689

Sunday, March 5, 2017

க சீ சிவகுமார் - நினைவஞ்சலி

சமீபத்தில் மறைந்த க.சீ சிவகுமார் பற்றிய பதிவுகள், நினைவுகள்:


 பாஸ்கர் சக்தி அவர்கள் விகடனில் சிவகுமார் பற்றிய தன்  எண்ணத்தை வார்த்தைகளாய் வடித்துள்ளார்; அதன் பதிவு:
http://www.vikatan.com/anandavikatan/2017-feb-15/interviews---exclusive-articles/128535-writer-kasi-sivakumar-death.html

அவரின் ஒரு சிறுகதை (விகடனில் வெளிவந்தது)
http://www.vikatan.com/anandavikatan/2012-oct-03/stories/24432.html



சமீபத்தில் மறைந்த க.சீ சிவகுமார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவஞ்சலி நடந்துள்ளது. அதன் பதிவுகள் இங்கே:


(எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நினைவுகள் )



(நண்பர் பாஸ்கர் சக்தி அவர்களின் நினைவுகள்)



(அகர முதல்வன் மற்றும் பலர்... )


(அவரின் எழுத்து பாடலாய்...)



( )





Saturday, March 4, 2017

டாக்டர் வா.செ.குழந்தைசாமி நினைவுகள்



தமிழ் கூறும் நல் உலகுக்கு நன்கு அறிமுகமானவர்  டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள்; கடந்த டிசம்பர் 10 ஆம் நாள் நம்மிடம் இருந்து விடைபெற்றார். நல்ல தமிழறிஞரும், அருமையான கல்வியாளராகவும், மிக  சிறப்பான நிர்வாகியாகவும் நிலை கொண்டவர் குழந்தைசாமி அவர்கள். தன்னை எப்பொழுதும் தமிழ்  மாணவன்,சிறந்த பொறியாளன் என அறிவித்து கொள்வதில் பேருவகை அவருக்கு உண்டு. "குலோத்துங்கன் கவிதைகள்", வள்ளுவம்  என அவரின் படைப்புலகு அற்புதமானது; 'வாழும் வள்ளுவம்' என்ற நூலுக்காக சாகித்ய அகாடமியின் விருது பெற்றவர்; இன்றைய கரூர்   மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்; எழுத்து வாசனை அதிகம் இல்லா ஊரில்  இருந்து புறப்பட்டு கரக்பூர் ஐ ஐ டி, இல்லினோயிஸ் பல்கலை வரை  சென்றவர்; நீரியல் துறை  வல்லுநர்  அவர்; மதுரை காமராஜர் பல்கலை கழக துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலை துணை வேந்தர், தமிழ் இணைய பல்கலைக்கழகம் என அவர் நிர்வகித்தவை, முத்திரை பதித்தவை ஏராளம்;


பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரின் கைகளால் மேடையில் பரிசு பெறும் வாய்ப்பு பெற்றேன்; அந்த விழாவில் அவரின் பேச்சு சுவை பட இருந்தது; சிந்திக்க வைத்தது; அவற்றின் சில துளிகள் இங்கே:

  • என் வாழ்வில் இருந்து பேசுவதற்காக மன்னிக்கவும்; நான் பேராசிரியராக பணிபுரிந்த நாட்களில், எந்த நாளிலும் வகுப்புக்கு காலம் தாழ்த்தி சென்றதில்லை. ஆசிரியர் பணிக்கு காலம் தாழ்த்தாமை மிக மிக முக்கியம். 
  • ஒரு ஆசிரியருக்கு, அவரின் மாணவர் மேல் அதீதமாக நேசிக்கும் பக்குவம் வேண்டும்;  ஒரு போதும்  சலித்தல், எரிச்சல் படல் கூடாது. தன் சுய துக்கங்கள் மாணவரிடம் காண்பிப்பது ஆகாது;
  • அவர் கற்பிக்கும் பாடத்தை, ஆசிரியர் தொழிலை,  அவர் உளமார நேசிக்க வேண்டும்; 
  • மாணவர்களிடம் பாரபட்சம் கூடாது;
  •  அறிவியலை, செயல்முறை கல்வியாக கற்க  ஆர்வம் காட்டுங்கள்; 
  •  தன் தாய்  மொழியில் கல்வி கற்பது, நல்ல கற்பனை  வளம் பெற உதவும்; கற்றலை மேம்படுத்தும்; ஜப்பான், சைனா நல்ல உதாரணம்;
  • சுய கெளரவம் மிக  முக்கியம்;
  • வெளி நாட்டவர்க்கும், நம்மவர்க்கும் உள்ள வேறுபாடு: நம்மவர்க்கு பிறரிடம் பேச, பழக தெரிவதில்லை என்பதே உண்மை; 
  • நம்மவர்கள் ஓர் இடத்தில் நிற்க வேண்டும் என்றால் ஏதாவது கைப்பிடியை பிடித்துக்கொண்டோ, சுவரில் சாய்ந்து கொண்டோ தான் நிற்க முயல்கின்றனர்;
  • இரயில் பயணத்தில் ஒரு நாள் நம்மவர் தம் சக பயணியிடம் உரத்த குரலில் உரையாடி வந்தார்; அதை சுட்டிய   வெளிநாட்டவர் ஒருவர், அவர் தன் பக்கத்தில் இருப்பவரிடம் தானே பேசுகிறார்; ஏன் ஒட்டுமொத்த இரயில் பெட்டிக்கும்  கேட்பது  போல் பேசுகிறார், பக்கத்தில் இருப்பவர் கேட்கும் தொனியில் பேசினால் போதாதா  என கேட்டார் என அந்த நிகழ்வை பகிர்ந்து  கொண்டார்;
  • நான் என் சிறு  வயதில்,என் கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு என் தாய் தந்தையருடன்  செல்வேன்; இன்று அந்த கோவில் பாழ்பட்டு  நிற்கிறது;ஆனால் நான் குடி இருக்கும் பெசன்ட் நகரில் கடந்த சில ஆண்டுகளில், நான்கைந்து கோயில்கள் புதிதாக வந்து  விட்டன;நான் எண்ணுகிறேன், மனிதர்களை தொடர்ந்து கடவுளும் கிராமத்தை விட்டு நகரத்துக்கு குடிபெயர்ந்து விட்டாரோ என சொல்லி சென்றார்;
  • அவரின் எண்பதாவது பிறந்த நாளை அண்ணா பல்கலை கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது;
  • .அவரின் இணைய  பக்கம் : http://kulandaiswamy.com/index.htm

Sunday, February 5, 2017

பட்டாம்பூச்சி கனவுகள்




Hope for the Flowers - இந்த புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன்; குழந்தைகளை நோக்கி அவர்களை ஈர்க்கும் வகையில் படைக்கப்பட்டுள்ள புத்தகம்; வெகு நாட்களுக்கு பின், புத்தக நேர்த்திக்காகவும், வடிவமைப்புக்காகவும், கதை சொல்லும் திறனுக்காகவும் நேசிப்புக்கு உரியதாய் இது உள்ளது; புத்தகம் முழுக்க - வண்ண  படங்கள்: படங்கள் வழியே கதை நகர்த்தும் அதிசயம்;


ஒரு கம்பளி பூச்சி, எப்படி கூட்டுப்புழு ஆனது - பின் அது எப்படி வண்ணத்து பூச்சியாய் மாறி சிறகடித்தது என்கிற கதை; கதையின் மூலம் : தற்போது இருக்கும் நிலையை முற்றும் துறந்தால் மட்டுமே உருமாற்றம் சாத்தியம் என சொல்கிறது; கம்பளி  பூச்சி தன்னை உரு மாற்ற முன் வராத வரை, அதற்கு கூண்டு புழு  சாத்தியம் இல்லை அல்லவா;   ஒரு கோடுகள் நிறைந்த கம்பளி பூச்சி தன் வழியில் மஞ்சள் நிறம்  கொண்ட கம்பளி பூச்சியை காண்பதும் அதை விட்டு  பிரிவதுவும், மீண்டும் வந்து காண்பதுவுமாய் கதை நகர்கிறது; வாசிக்கவும், நேசிக்கவும் நல்ல படைப்பு;



ஆசிரியர் : Trina Paulus




https://en.wikipedia.org/wiki/Hope_for_the_Flowers

பட்டாம் பூச்சிகள் இல்லாவிடில் பூக்கள் இனம் அருகி போய்விடும்; பட்டாம் பூச்சி ஆவதற்கே நீ படைக்க பட்டாய்; அது தன் அழகிய சிறகுகளால் இந்த மண்ணையும் அந்த சொர்கத்தையும் இணைத்தது; அது பூக்களில் தேனை அருந்தி அன்பின் விதையை ஒரு பூவிலிருந்து, இன்னொரு பூவிற்கு தூவிச்சென்றது !!!
.

க.சீ.சிவக்குமார் நினைவுகள் - கொங்கு மண்ணின் மாறாத வாசம்



க.சீ.சிவக்குமார்[கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்] அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி மிக அதீத அதிர்ச்சியை தந்தது. நக்கலும், நய்யாண்டியோடும், புனைவோடும், கொங்கு மண்ணின் வாசனையை, வட்டார வழக்கை, மண்ணின் மாந்தர்களை, அப்படியே கண் முன் படைத்து உலவ விடும் ஆற்றல் அவருக்கே  உரியது.எப்பொழுது எல்லாம் அவரின் எழுத்துக்கள் கண்ணில் படுகிறதோ அந்த தருணங்கள் நம்மை அப்படியே கட்டி போட்டு விடும்; எடுத்த புத்தகம், பிரித்த பத்தி அதை படித்து முடித்த பின்பே வைக்க தோன்றும்; சமீபத்தில் அவரின் எழுத்து  தாங்கி வந்த இதழ்கள் என் கண்ணில் படுகின்றன; மனம் அசைபோடுகிறது;

அவர் முதல் முதலில், எனக்கு அறிமுகம் ஆனது அவரின் 'ஆதிமங்கலத்து விசேஷங்கள் ' என்கிற  ஜூ.வி. தொடர் கட்டுரைகள் மூலமாக. அதில் அவர் உலவ விட்டிருக்கும் ஊர் மாந்தர்கள் ஆர். கே.நாராயணனின் "மால்குடியை " ஞாபகப்படுத்துபவை; அவரின் ஊரோடு பிணைத்து எழுதாமல், அவரின் எந்த  தொடரும்,சிறுகதையும் நிறைவு  பெறுவதில்லை; நிலம் சார்ந்த படைப்புகள் அவருக்கு கைவந்த கலை. அது சின்ன தாராபுரமாகட்டும், கொடைக்கானல், கன்னிவாடியாகட்டும், மூலனூர்,  கரூர், ஏன் தாராபுரத்தில் அடையாளமான உப்பாறு ஆகட்டும்  - கதையில் நடு நாயகமாக அவரின் ஊரும் அதன் வெள்ளந்தி மனிதர்களுமே; ஊருக்கு புதிதாய் வந்த மினி பஸ் ஆகட்டும், கிணறு வெட்டும் ஆள், கிணற்று மேடுகள் அதில் கவலை ஓட்டும் தொனி ஆகட்டும், சால் பறி விவரிப்புகள்;  காளைகள்,ஆடுகள், நாய்கள் என ஆகப்பெரிய காட்சிப்படுத்துதல் அவருடையது;

அவரின் ஆதி மங்கலத்து விசேஷங்கள் தொகுப்பு சிரித்து வயிறு புண்ணாக்கும் வல்லமை பெற்றவை; ஊருக்குள் எப்படி தொழில்   நுட்பங்கள் நுழைந்தன என்பதை இதை விட  அழகாக சொல்ல முடியாது; அட அந்த பி பி காரர், ரேடியோவோடு மரம் ஏறும் மனிதன், எண்ணெயில் எரியும் தெரு விளக்குகள், முதல் தொலைபேசி இணைப்பு - பரவசமான விவரிப்புகள்;

அவரும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியும் பிரிக்க முடியாத இரு வல்லவர்கள்; மண் மணம் மாறாமல் எழுத்தை பரிமாறுபவர்கள்; அவரின் ஊர் போல் அவரின் எழுத்து  பயணம்  நினைவெங்கும்  தித்திக்கிறது; கொங்கு மண்டலத்தை அழகாக காட்சிப்படுத்தி, ஆவணப்படுத்திய இன்னொரு எழுத்து ஜாம்பவானின் அவசரமான விண்  பயணம் விழிகளில் நீர் சுரக்கவைக்கிறது.

 படைப்புகள்:
‘கன்னிவாடி’ - சிறுகதைத் தொகுப்பு,
 ‘ஆதிமங்கலத்து விசேஷங்கள்’ - புத்தகம் - விகடன் பிரசுரம் (ஜுவியில் தொடராக வந்தது),
‘என்றும் நன்மைகள்’ - சிறுகதைத் தொகுப்பு,
 ‘குணசித்தர்கள்’,
 ‘கானல் தெரு’ - குறுநாவல்,
 ‘உப்புக் கடலைக் குடிக்கும் பூனை’ சிறுகதைகள்,
 ‘நீல வானம் இல்லாத ஊரே இல்லை’ - கட்டுரைகள் 

பிற பதிவுகள்:
http://www.vikatan.com/news/miscellaneous/79734-writer-kasisivakumar-memorial-article.art

தமிழ் ஹிந்து 
http://www.sramakrishnan.com/
http://www.athishaonline.com/2017/02/blog-post.html

http://www.jeyamohan.in/95052



அவரின் பேச்சு :
https://www.youtube.com/watch?v=7cdT43HGaaY
https://www.youtube.com/watch?v=z9RUeuSIvzw
https://www.youtube.com/watch?v=l15scWagiHs
https://www.youtube.com/watch?v=0LXPnhYSfcA

.
.

Saturday, November 5, 2016

இரு வல்லவர்கள் - சாவி, ல. ச. ராமாமிர்தம்


 இந்த ஆண்டு இரு வல்லவர்கள் நூற்றாண்டு காண்கிறார்கள்; ஒருவர் சாவி, மற்றவர் ல. ச. ராமாமிர்தம்.

எழுத்தாளர், பத்திரிக்கையாளர் சாவி:

பன்முக திறமை கொண்டவராக அறியப்படுபவர் சாவி; 'அக்கிரகாரத்தில் தோன்றிய அதிசய மனிதர் என புகழுக்கு சொந்தக்காரர்.' அவரின் வாஷிங்டனில் திருமணம் இப்பொழுதும் வாசிக்க திகட்டுவதில்லை; அவரின் வாஷிங்டனில் திருமணம் தூர்தர்ஷனில் தொடராய் வந்த காலத்தில் ரசித்து பார்த்தேன். பல முறை நாடகமாய் மேடை ஏறிய நகைச்சுவை படைப்பு அது. இளம் எழுத்தாளர்களை கண்டறிவதில், ஊக்குவிப்பதில், அவரின் எழுத்துக்களை கொண்டுவருவதில் சாவி கெட்டிக்காரர் தான்; அப்படி அவர் அறிமுகம் செய்வித்தவர்கள், முன்னுக்கு வந்தவர்கள் ஏராளம்; திறமையை என்றும் ஊக்குவிப்பது அவரின் பாணி;

அடுத்தது அவரின் பத்திரிக்கையை சர்குலேஷனை அதிகரிக்கும் வித்தியாசமான முயற்சிகள்; அத்தனையும் அசாதாரணமானவை; வெற்றிகரமாக பத்திரிகையை தொடங்குதல், நடத்துதல் அவரின் பாணி அற்புதமானது; அவருக்கு இருந்த தொடர்புகள், முக்கிய மனிதர்களை பேட்டி கண்டவை முக்கியத்துவமானவை; மகாத்மாவை நேரடியாக கண்டு அவர் வெளியிட்ட கட்டுரை முக்கியமானது(நவகாளி பயணம்);

அவர் ஆசிரியராய் இருந்து வந்த தினமணி கதிர், சாவி, குங்குமம் இதழ்கள் சுவையானவை; தலைப்புகள் கொடுப்பதும், தேர்ந்தெடுப்பதும் அவருக்கு அத்துப்படி;  கல்கியை தன் குருவாய் கொண்டு பயணித்த சாவி, தனக்கு ஏற்பாடு செய்த பாராட்டு விழாவில், பேசியபடியே மயங்கி உயிர்  விட்டது அதிர்ச்சியானது;

'இதழாசிரியர் மூவர்' எனும் விக்ரமன் அவர்களின் புத்தகம் சாவியை பற்றி விரிவாக அலசுகிறது;

அவரை பற்றிய பிற பதிவுகள்:
http://www.vikatan.com/news/coverstory/67019-writer-saavi-100th-anniversary.art
http://www.vikatan.com/news/coverstory/67018-writer-saavi-100th-anniversary.art
http://epaper.dinamani.com/897190/Kadir/07082016#dual/1/1

http://epaper.dinamani.com/897190/Kadir/07082016#dual/2/1
http://vannapetti.blogspot.com/2016/09/theervugal-how-writer-saavi-inspired.html?m=0


ல ச ராமாமிர்தம்:



லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் - பெற்றோர்கள் தவமிருந்து பெற்ற பிள்ளை; தன் வங்கி பணியோடு எழுத்தையும் தொடர்ந்தவர்; தப்பி பிழைத்தவர் என்கிற காரணத்தாலோ என்னவோ, இவரின் எழுத்து வாழ்வையும், மரணத்தையும் விட்டு வைப்பதில்லை; தன்னை பிதாமகர் என அழைப்பது பற்றிய சுய எள்ளலாய் இருக்கட்டும், இவரின் எழுத்து புரியவே இல்லை என சொல்வதாய் இருக்கட்டும், இந்த கதை எங்கே திருடினாய் - நாம் சரியான ராயல்டி தந்து விடலாம் என பத்திரிகை ஆசிரியர் கலாய்த்ததாய் இருக்கட்டும் - அத்தனையும் ஒரு பகடியாய் கடந்து விடுவார்;

அவரின் சிந்தா நதி, பாற்கடல் இரண்டும் வாழ்வின் பயணங்களை இளமை, முதுமை அனுபவம் என சொல்லி செல்கிறது; அவரின் அபிதா அற்புதமான படைப்பாய் விரிகிறது; எழுத்து எங்கும் சக்தியின் வழிபாட்டை தரிசிக்கலாம்;

ஒரு முறை ஜெயகாந்தனும், ல ச ரா அவர்களும் ஒரே மேடையில்; என்ன நீ இப்போ எழுதறாதே இல்லை என ஜெயகாந்தனிடம் கேட்டு விட்டார் ல ச ரா; அதற்கு ஜெ கே - எல்லாம் எழுதி முடிச்சாச்சு ல ச ரா என்றிருக்கிறார்; அதற்கு இவர் - 'என்ன நீ இப்படி சொல்றே? சரஸ்வதியே இன்னும் புஸ்தகத்தை கீழே போடாமே வெச்சிருக்காளேப்பா ' என்று சொல்லியிருக்கிறார் ;  ஜெயகாந்தன் வாஞ்சையுடன் ல ச ராவின் கைகள் மேல் கை வைத்து வாஸ்தவம் தான் என்றார்;

http://en.thamizhagam.net/nationalized%20books/La%20Sa%20Ramamirtham.html

(நன்றி - விகடன், தினமணி கதிர், கல்கி)

Sunday, October 23, 2016

சுவாமி விவேகானந்தரின் இறுதி நாட்கள்

"கண்ணுக்கு தெரிபவற்றை  காட்டிலும், மண்ணுக்குள் புதையுண்டு போன கல் ரதங்கள்  தான் பார்க்கப்பட வேண்டியவை" - வண்ணதாசன் (அகம் புறம்)

 "இறைவன்  மட்டுமே நித்தியமானவன் ! மற்றவை யாவும் ஒரு நாள் தேய்ந்து அழிந்து போவனவே; யாவும் மரணிக்க கூடியனவே !  தேவதைகள்,  மனிதர்கள், விலங்குகள், இந்த பூமி,  சூரியன், நிலா, நட்சத்திரங்கள் யாவும்  அழியக்கூடியனவே; அனைத்தும் மாற்றத்துக்கு உட்பட்டவையே ! இன்று மலையாய் இருப்பவை முன்பொரு காலத்தில் பெருங்கடலாய் இருந்தவையே; அவை நாளை மீண்டும் பெருங்கடலாய் மாறும்; ஆனால் ஒன்று நிரந்தரமானது; அது மாற்றத்துக்கு  அப்பாற்பட்டது; அது இறைவன்; நாம் இறைவனை நெருங்கினால், நம்மால் நிச்சயமாக இயற்கையை வென்றெடுக்க முடியும்" - சுவாமி விவேகானந்தர்



ஒரு நூற்றாண்டை கடந்தும், இன்றைக்கும், விவாத  பொருளாய்,ஆச்சர்ய வினாவாய் தொடுக்கப்படுவது சுவாமி விவேகானந்தரின் மரணம். நாற்பது வயதை தொடும் முன்னரே, தன் வாழ்வின் இறுதி உரையை எழுதி முடித்த சுவாமிஜி ஒரு ஆச்சர்ய துருவம். மின்னல் கீற்று போலும் அதை தொடரும் இடி முழக்கத்தை போலும், அவரது பேச்சு வான் முகடுகளை தொட்டு பார்த்தது. அசுரத்தனமான உழைப்பு, சலிப்பேதும் இல்லா  பயணம், தேசத்தின் மண்ணை காலால் நடந்து அறிந்து கொண்ட அனுபவம், அவர் பெற்ற அபூர்வ ஆன்ம ஞானம் அவரை காலம் தோறும் மிகப்பெரும் ஆச்சர்ய புருஷராய் இனம் கண்டு கொண்டது.காலம் அவரை மண்ணில் தோன்றிய மாபெரும் புனிதராய் புரிந்து கொண்டது. தொண்டும், தியாகமும் தேசத்தின் லட்சியம் என பேச வைத்தது.

என்றென்றும் இளைஞராய், எல்லோரிடமும் எக்காலத்தும் உத்வேகத்துடன் பயணப்படும் ஸ்வாமிஜி, நல்ல நம்பிக்கையை விதைக்கும் எண்ணங்களை தூவி சென்ற துறவி என யுகத்திற்கும் நிலைபெற்று விட்டார். 'வலிமையே வாழ்வு ' என உடலை வலுப்படுத்த சொன்ன சுவாமிஜி யின் பயணம் நிச்சயம் அதிசயமானதே!. 'கீதையை படிப்பதை காட்டிலும் கால்பந்தின் மூலமே நீங்கள் சொர்கத்திற்கு மிக அருகில் இருப்பீர்கள்' என சொல்ல வைத்தது'. 'அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே' - என யாவரையும்அழைக்கிறார். அவரே ஒரு முறை குறிப்பிட்டதை போல 'போதும், நான் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கான பணியை முடித்து விட்டேன்' என்கிற எண்ணம் அவரிடம் வேர்விட்டு இருந்தது.

அவர் நாற்பதை தாண்டியும் வாழ பிரிய படாமல் போனதற்கு இரு காரணங்கள் இருந்திருக்கலாம்.. பெரிய மரங்கள் இருக்கிற இடத்தில், சிறிய மரங்கள் செழித்து வளர்வதற்கு வாய்ப்பில்லை. பெரிய மரமே கிளை பிரித்து நிழல் பரப்பி ஒட்டுமொத்த இடத்தையும் ஆக்கிரமித்து கொள்ளும்; அது போல குருமார்கள் தொடந்து வழிகாட்டியபடி இருந்தால், சீடர்களால் தனித்து ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி பெற முடியாது. இன்னொரு காரணம் வேடிக்கையானது; ஆனால் பொருள் பொதிந்ததே!.

இறை ஒரு கழுதையை  படைத்து நீ காலையில் இருந்து இரவு வரை உழைத்து கொண்டு இருப்பாய். உன் முதுகில் பெரிய பாரத்தை தூக்கி கொண்டு செல்வாய். உனக்கு நான் ஐம்பது ஆண்டுகளை வாழ்நாளாக தருகிறேன்; உனக்கு பெரிய அளவில் அறிவு இருக்காது என்றது. ஐம்பது வருடம் என்பது எனக்கு அதிகம்; எனவே எனக்கு இருபது வருடங்கள் போதும் என்றது கழுதை. இறை அதை ஏற்று கொண்டது. அடுத்து நாயை இறைவன் படைத்தான்; அப்படி படைத்து இறைவன் நீ மனிதனுக்கு தோழனாய் இருப்பாய்; அவன் வீட்டை காப்பாய்; அவன் எதை உணவாக தருகிறானோ, அதை உண்பாய்; உனக்கு நான் இருபத்து ஐந்து வருடங்களை வாழ்நாளாக தருகிறேன் என்றது; அதற்கு நாய், எனக்கு பத்து வருடங்கள் போதுமானது என்றது; இறைவனும் ஏற்று கொண்டான்;

அடுத்து இறை ஒரு குரங்கை படைத்து நீ இருபது ஆண்டுகள் வாழ்வாய்; உனக்கு கிளைக்கு கிளை தாவும் வல்லமை உண்டு; நீ சில நேரங்களில் வேடிக்கையாய் நடந்து கொள்வாய்; என்றது. ஐயோ! எனக்கு பத்து வருடங்களே போதும் அய்யா என்றது குரங்கு; அதற்கு இறைவன் சரி என ஒப்பு கொண்டார்; அடுத்து இறைவன் மனிதனை படைத்தான்; அதன் பின் நீ பகுத்தறிவு உள்ளவன்; உனக்கு மற்ற மிருகங்களை தன்  வழி படுத்தும் ஆற்றல் உண்டு; நீ உலகை ஆளலாம்; உனக்கு இருபது ஆண்டுகள் வாழ்நாள் என்றது; அதற்க்கு மனிதன் எனக்கு நீங்கள் அந்த கழுதை விட்ட முப்பது ஆண்டுகள், நாய் விட்ட 15 ஆண்டுகள், குரங்கு வேண்டாம் என சொன்ன 10 ஆண்டுகளை என் இருபது ஆண்டுகள் ஆயுளோடு தாருங்கள் என்றது; மனிதனாய் இருக்கும் நான் இருபது வருடங்கள் வாழ்ந்து எதையும்  சாதிக்க முடியாது என வேண்டினான்; இறைவனும் ஒப்பு கொண்டார்;

அது முதல் மனிதன், தன் முதல் இருபது ஆண்டுகள் மனிதனாகவும் அதன் பின் அடுத்த முப்பது ஆண்டுகள் கழுதையை போல் குடும்ப பாரத்தை சுமப்பவனாகவும் இருக்கிறான்; பின் பதினைந்து ஆண்டுகள் பிள்ளைகள் வீட்டை விட்டு கிளம்பிய பின் நாயை போல் வீட்டை பாதுகாக்கும் வேலையை பார்க்கிறான்; அடுத்த பத்து வருடங்கள் அவனது பணி ஓய்வு வருடங்கள்; அதில் அவன் குரங்கை போல் காரணமடித்து பேர குழந்தைகளை மகிழ்விக்கிறான்; இது வேடிக்கையாய் சொன்னாலும் மனிதனின் திறனோடும் பிணையப்பட்டதே; மனிதனின் முதல் நாற்பது ஆண்டுகள் பேராற்றலாலும், அளப்பரிய உந்து சக்தியாலும் நிறைந்தவை; காற்றாற்று வெள்ளம் போல் கரைபுரண்டு போக கூடியது; உலகிற்கு பயன் தரும் நாட்கள் அவை;

தான் வாழ்ந்த இறுதி நாட்களில், பேலூர்  ராமகிருஷ்ண மடத்தின், துறவியர் கட்டிடத்தின் தென் கிழக்கு மூலையில் இருந்த அறையை சுவாமிஜி  உபயோகித்தார்; இந்த அறையில் தான் தன் இறுதி சுவாசத்தை விட்டார்; அந்த அறை  இன்றும் பழமை மாறாமல், புத்துரு குன்றாமல், அப்படியே பராமரிக்கப்பட்டு வருகிறது; அந்த அறையின் நாட்காட்டி 1902 ஆம் ஆண்டின் ஜூலை 4 ஐ, இன்றும்  காட்டுகிறது;

அவர் உபயோகிக்கும் மேசை, பேனா, மை புட்டி, அவரின் புகைப்படம், அவர் தியானத்திற்கு உபயோகித்த மானின் தோல், அவர் உபயோகித்த தேனீர் குடுவை, அவரின் கட்டில் அப்படியே உள்ளது; இந்த அறையில் தான் தன் விருந்தினர்களையும், சகோதர துறவிகளையும் சந்தித்து  அளவளாவி வந்தார்; அருகே சுளித்து ஓடும் கங்கை நதியையும், அதன் செஞ்சாம்பு நிறத்தையும், அதன் வேகத்தையும், துடுப்பு போடுவதையும் மேலை நாட்டினருக்கு தன் கடிதத்தில் குறிப்பிட்டார்;

அவரின் இரண்டாவது மேலை நாட்டு பயண தருவாயில் இருந்தே அவரின் உடல் நலிவுற தொடங்கி விட்டது; அவரின் இறுதி ஒன்றரை வருடத்தில், அவரிடம் சர்க்கரை நோய் அவரை பற்றி இருந்தது; அவர் தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பில் இருந்தார்; அவருக்கு இருந்த பத்தியத்தில் 21 நாட்கள் அவர் தண்ணீரும், உப்பும் எடுத்துக்கொள்ள கூடாது என்பது; அதன் படியே அவரின் தொண்டை ஒரு சொட்டு நீரை கூட கடந்து செல்ல அனுமதிக்கவில்லை; "உடல் மனதின் ஒரு கருவி; மனம் எதை எண்ணுகிறதோ அதை உடல் சரிவர முடிக்க வேண்டும் " என்பார் அவர். பார்வை பாதிப்புக்கு உள்ளான தருணத்தில், அட நான் சுக்ராச்சார்யார் போல் ஆகி விட்டேன் என குறும்பாக குறிப்பிட்டும் உள்ளார்;

இறுதி ஆண்டுகளில், அவர் முக்கிய விஷயங்களில் இருந்து தன்னை விடுவித்து கொண்டார்; முடிவெடுப்பதில் இருந்தும் மடத்தின் சொத்துக்களை தனக்கு பின் யார் கவனிப்பார் என்பதை முடிவெடுத்து செயல்படுத்தினார்; அதன் பின்  தன்   அறையில் செல்ல பிராணிகளை வளர்க்க ஆரம்பித்தார்; அவர் அதன் பின் தன் தாயை அழைத்துக்கொண்டு தீர்த்த யாத்திரை புறப்பட்டார்; ஆதி சங்கரரின் வாழ்வை அவர் இங்கு நினைவு கூர்கிறார் ; வாழ்வு முழுவதும் அவர்களுக்கு நான் பல தொல்லைகள் தந்து உள்ளேன்; ஒரு விதவை தாயின் கடைசி ஆசையை, தன்  மகன் நிறைவேற்ற வேண்டும் அதை செய்கிறேன் என ஜனவரி 26 அன்று திருமதி ஓலே புல் அவர்கட்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்; அதன் பின் அவர்  தீர்த்த யாத்திரையின் ஒரு பகுதியாக டாக்கா நகரையும், சந்திரநாத் நகரையும் தரிசிக்கிறார்; அவரின் உடல் நிலையை முன்னிட்டு அஸ்ஸாமில் - ஷில்லாங் நகரில் தங்குகிறார்; அங்கு அவர் ஹென்றி காட்டன் அவர்களை சந்திக்கிறார்; அங்கு இருவரும் நிறைய கருத்துக்களை பரிமாறி கொள்கின்றனர்; அதன் பின் ஸ்வாமிஜி மே மாதம் இரண்டாவது வாரம் பேலூர் மடத்துக்கு திரும்புகிறார்;

அதன் பின்னான நாட்கள் மடத்தை ஒழுங்கு படுத்துவதிலும்,ராமகிருஷ்ண மடம் தொடர்ந்து எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், வகுக்க துவங்கினார்; அவர் மடத்துக்குள் தொடர்ந்து தியானம், சத்சங்கம், கற்றல், இறை ஆராதனை இவை  நடப்பதை விரும்பினார்; நான்கு மணிக்கு மணி அடிக்க படும்; துறவிகள் தம்முள் தயார் படுத்தியபடி அனைவரும், தியான அறையை/பூஜை அறையை அடைய வேண்டும்; மடத்தினில், தொடர்ந்து வகுப்புகள், சொற்பொழிவுகள், தியானம் இவை தொடர வேண்டும் என்பதில் பெரும் அக்கறை அவருக்கு இருந்தது; அனைவருக்கும் முன்பு மூன்று மணிக்கு எழும் அவர் முதல் மனிதராய் தியானத்தில் வடக்கு நோக்கி அமரவும் இரண்டு மணி நேரம் எந்த அசைவும் இன்றி தியானத்தில் லயித்து  ஈடுபடுவதில் அவர் நடை முறையில் இருந்தது; தியான சித்தர் என பெயர் எடுத்தவர் அல்லவா அவர்; அதன் பின் சிவ சிவ எனும் மந்திரத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் திரு உருவ படத்தை வீழ்ந்து அடிபணிந்து வணங்கி மாடியில் இருந்து கீழ் இறங்கி செல்வார்;

ஒரு முறை ஸ்வாமிஜி அவர்களின் உடல் நிலை ஒத்துழைக்காத  நிலையில், சில நாட்கள், பிற பிரம்மசாரிகளுடன் தியான வகுப்பை தொடர  முடியவில்லை; ஒரு நாள் பிரார்த்தனை மண்டபம், ஒரு சில துறவி மக்களால் மட்டுமே நிரம்பி இருக்கிறது; மற்றவர் யாரும் அந்த நியதியை பின்பற்றவில்லை என எண்ணுகிறார் ஸ்வாமிஜி; அன்று தவறியவர் யாவரையும், வெளியில் போய் பிட்ச்சை எடுத்து உணவை உட்கொள்ளும் தண்டனை தரப்படுகிறது; இதில் மூத்த சகோதர துறவிகளும் தப்பவில்லை;



அந்த நாளில்,ஒரு அதிகாலையில்,  சுவாமி சிவானந்தர்( மகா புருஷ் மஹராஜ் ) எழுந்து பிரார்த்தனை அறைக்கு வரவில்லை[உடல் நோய்மையை முன்னிட்டு அவரால் முடியவில்லை]; அவரிடம் சென்ற சுவாமிஜி, சகோதரா! நீ  குருதேவரின் பூரண அருள் பெற்றவன்; உன்னால் முக்தியை எளிதில்  எட்ட முடியும்; ஆனால் பிற இளம் உள்ளங்கள் உன்னை பார்த்து, கற்பவர்க்கு நீ உதாரணமாய் இருக்க வேண்டாமா! அவசியம் நீ, பிரார்த்தனையில், ஒவ்வொரு நாள் காலையிலும் சென்று அமர வேண்டும்; தியானம் செய்ய வேண்டும் என்றார்; அவரின் வார்த்தைக்கு மதிப்பளித்து சுவாமி சிவானந்தர் தன் வாழ்வின் இறுதி வரை அவரின் உடல் ஒத்துழைக்காத இறுதி நாட்கள் வரை அப்படியே இம்மிபிசகாமல் கடைபிடித்தார்;

அவரது இறுதி நாளுக்கு முந்தைய வாரம்; அவர் தன்னுடைய சீடர் ஒருவரிடம், வங்காளி பஞ்சாங்கத்தை கேட்டு பெற்றுள்ளார்; அதன் பின், ஒரு குறிப்பிட்ட தேதிக்காக அதை திரும்ப திரும்ப புரட்டி உள்ளார்; அவரது மறைவிற்கு பிறகே, பிற  துறவியர்க்கு இதன் அர்த்தம் புரிந்துள்ளது; தான் இந்த பிரபஞ்ச வாழ்வை முடிக்கும் நாளுக்காகவே, அவர் தேடி இருந்துள்ளார்; முன்பு பரமஹம்சரும், அவரின் இறுதிக்கு முன், இப்படி தான் வங்க பஞ்சாங்கத்தை புரட்டி தன் மண்ணுலக இறுதி நாளை முடிவு செய்துள்ளார்;

இறுதி மூன்று நாட்களுக்கு முன், மாலையில் உலாவ சென்ற அவர், சகோதர துறவி சுவாமி பிரேமானந்தரிடம், ஒரு வில்வ மரத்துக்கு கீழே சுட்டிக்காட்டி, என் இந்த உடலை, இந்த இடத்தில் எரியூட்டுங்கள் என குறிப்பிட்டு உள்ளார்; ஆக யாவும் அவருள் திட்டமிட்டே நடைபெற்று உள்ளன;

சகோதரி நிவேதிதை, தனக்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளை கோர்வையாக பதிவு செய்துள்ளார்; அது புதன் கிழமை; அன்று சுவாமிஜி உபவாசம் இருந்தார்; அன்று மடத்துக்கு வருகை தந்த நிவேதிதை, தன் பள்ளி பற்றி சில ஆலோசனைகளை கேட்டு உள்ளார்; அதில் தன்னை ஈடுபடுத்தாத சுவாமிஜி, தன் சகோதர துறவிகளை அணுக பணித்துள்ளார்; ஆனால், அன்றைய காலை உணவை, அவரே நிவேதிதைக்கு பரிமாறுகிறார்; அன்று நன்கு வேக  வைத்த பலா கொட்டைகள்,உருளை கிழங்கு, அரிசி உணவு இவற்றுடன் நல்ல பால் பரிமாற்ற பட்டது; அன்று வழக்கத்துக்கு மாறாக, சந்தோஷமும் கேலியும், கரைபுரண்டு ஓடியது; உணவு உண்டு முடித்த பின், அவரே கைகளை கழுவிட நீர் விட்டு, கைகளை துடைத்து விடுகிறார்;

அப்போது நிவேதிதை, சுவாமிஜி! நீங்கள் என்னுடைய குரு! பார்க்க போனால், நான் அல்லவா இந்த பணிவிடைகளை செய்ய வேண்டும் என கேட்டுள்ளார்; அதற்கு சுவாமிஜி, 'ஏன்! இயேசு கிறிஸ்து தன் அருமை சீடர்களுக்கு பாதங்களை கழுவி விடவில்லையா!' - என கேட்கிறார்; ஆனால் அது இறுதி முறை அல்லவா!, வார்த்தைகள் நிவேதிதாவின் உதடு வரை வந்து உறைந்து போய் நின்று விட்டன!

அன்று ஜூலை 4,  வெள்ளி கிழமை, வழக்கத்துக்கு மாறாக மிக அதிக ஆரோக்கியத்துடன் தென்பட்டார்; அதிகாலையில் எழுந்த அவர், தனியாக மடத்து தியான அறைக்கு சென்று மூன்று மணி நேரம் தியானத்தில் அமர்ந்துள்ளார்; வழக்கத்துக்கு மாறாக அந்த அறையை அவர் பூட்டிய பின் அமர்ந்துள்ளார்; அன்று காளி தேவியை வழிபட வேண்டும் என்கிற அவரின் விருப்பத்தை சொல்லி உள்ளார்; மடத்தில், அதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன; அதன் பின் தன சீடர் சுத்தானந்தரிடம், யஜுர் வேதத்தில் ஒரு பகுதியை சொல்லி அதை அதன், தெளிவுரை விளக்கத்தோடு படித்து காட்ட சொல்லி உள்ளார்; அன்று பிற சகோதர துறவிகளுடன் அமர்ந்து மதிய உணவை மகிழ்ச்சியுடன் உண்டு உள்ளார்; அதன் பின் பிற பிரம்மச்சர்ய துறவிகளுக்கு, ஏறக்குறைய மூன்று மணி நேரம் சமஸ்கிருத இலக்கண வகுப்பை எடுத்துள்ளார்; அன்று மாலையில் சுவாமி பிரேமானந்தருடன் இரண்டு மைல் தூரம் நடந்து சென்று வந்துள்ளார்;

மாலை ஏழு மணிக்கு தன் அறைக்கு சென்ற சுவாமிஜி, தன்  சீடரை அழைத்து தான் அழைக்காத வரை தன் அறைக்கு யாரும் வர வேண்டாம் என சொல்லி உள்ளார்; அப்படி போனவர், ஒரு மணி நேரம் தியானத்தில் இருந்துள்ளார்; அதன் பின் தன் சீடரை அழைத்து, அறை  ஜன்னல்களை திறந்து விட சொல்லி,  தனக்கு விசிறி விட சொல்லி உள்ளார்; அதன் பின் தன் படுக்கைக்கு தானே சரிந்துள்ளார்; சீடருக்கு அவர் உறக்கத்தில் உள்ளார் என்ற நினைவு;

ஒரு மணி நேரத்துக்கு பின், அவர் கைகள் சற்றே அதிர்ந்துள்ளன; ஒரு ஆழ்ந்த சுவாசத்தை அவர் எடுத்து உள்ளார்; சில நிமிட நிசப்தத்துக்கு பின் இன்னுமொரு ஆழ்ந்த சுவாசம்; அதன் பின் அவரின் கண்கள், புருவ மையத்தில் நிலை பெறுகின்றன. முகம் ஒரு தெய்வீகத்தை வெளிப்படுத்துகிறது; அப்பொழுது அவரின் சீடர், சில இரத்த துளிகளை, மூக்கு, கண், வாயில் காண்கிறார்; யோக சாத்திரத்தின் படி, ஒரு யோகியின் உயிர், இறுதி ஸ்வாசம், உச்சசந்தலையில் உள்ள துளை வழியே வெளியேறுகிறது என்கிறது;   அது அவர்க்கு இரத்த துளிகளாய்  வெளிப்பட்டு உள்ளது; பரந்துபட்ட வானத்தில் சிறகடித்து பறந்து, வான் முகடுகளில் கூடுகட்டி வாழ்ந்த ராஜாளி பறவை, விண்ணுலகம் நோக்கி சென்ற நொடி அது; அவரை பரிசோதித்த மருத்துவர், அவரின் இதயம் துடிப்பதை நிறுத்தி விட்டது என்கிறார்; செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு காத்திருந்த  பின், நள்ளிரவில், அவர் மறைந்து விட்டார் என அறிவிக்க படுகிறது;

அடுத்த நாள் காலையில், இந்த செய்தி வெளிப்பட்டு மக்கள் எல்லா இடத்தில் இருந்தும் வந்து குவிந்து விட்டனர்; சகோதரி நிவேதிதை, அவரின் உடலுக்கு காலையில் இருந்து அருகே இருந்து விசிறியபடி இருந்துள்ளார்; கால் மற்றும் கை அச்சுகள் படி எடுக்க படுகின்றன ; மதியம் இரண்டு மணிக்கு கீழே எடுத்து வரப்பட்ட உடல், காவி துணியாலும், மலராலும் அலங்கரிக்க பட்டு,  அவர் சுட்டி சென்ற அதே வில்வ மரத்துக்கு இறுதி யாத்திரையாய் எடுத்து செல்லப்படுகிறது; சிதை மூட்டப்படுகிறது; இதே கங்கையின் மறு கரையில், பதினாறு ஆண்டுகளுக்கு முன் ராமகிருஷ்ணரின் உடலும் இப்படி தான் அக்கினிக்கு அர்ப்பணிக்க பட்டது;

இதை பார்த்தபடி இருந்த நிவேதிதை ஒரு சிறு குழந்தை போல் அழுது புரள்கிறார்; அந்த தருணத்தில், காற்றில் வெளிப்பட்ட சிறு காவி துணி, நிவேதிதாவின் மடியை அடைகிறது; அதை அவர் தனக்கு அமைந்த ஆசீர்வாதமாய் எடுத்து கொள்கிறார்; அங்கு பெறப்பட்ட அஸ்தி கங்கையில் கரைக்க படுகிறது; அதே இடத்தில் இன்று விவேகானந்தருக்கு கோயில் எழுப்ப பட்டு உள்ளது;

நான் இந்த உடலை விட்டு வெளியேறி விட்டேன் என்றால் நான் வேலை செய்வதை விட்டு விட்டேன் என்று அர்த்தமில்லை!. நான் எங்கும் மனிதர்களை ஊக்க படுத்துவேன்! உலகம் யாவும் இறை தான் என உணர்கிற நாள் வரையில் என் பணி  தொடரும்.

[இந்த பகுதி என் நண்பரின் வேண்டுதலால், பதிவிடுகிறேன்.  மேலும் ஆழ்ந்து பயணப்பட, சுவாமி விவேகானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறை காணவும் - சுவாமி ஆசுதோஷானந்தர் ][Vivekananda - a  Biography - swami Nikhilananda ]




சுவாமி விவேகானந்தர் அறை - பேலூர் மடம் :









அவரின் அறை - யூ டியூப் காணொளி 
https://www.youtube.com/watch?v=naOqN6BXZ9k



Sunday, August 2, 2015

கொண்டாடப்படவேண்டிய அப்துல் கலாம்






திரும்பி பார்க்கிற எல்லா திசைகளிலும், கடந்த சில நாட்களாய், கலாம் வியாபித்து இருக்கிறார். வியப்பும், திகைப்பும் என்னை ஒருங்கே ஆக்கிரமித்து உள்ளது. நினைத்து பார்க்க முடியாத உயரத்தை கலாம் தொட்டிருக்கிறார். அவர் மறைவும், அதன் பின் எழுந்த பேரலையும் அசாத்தியமானவை. தெரு, வீடு என எல்லா இடங்களிலும் மனிதர்கள், தங்களின் இல்ல உறுப்பினர் மறைவாய், துக்கம் தோய்ந்து இருந்தனர்.

குடியரசு தலைவர் ஆன பின்பும், அதன் பின்னான சமீப நாட்கள் வரை அவரின் பணி எந்த தொய்வும் அடையவில்லை. அவரின் ஆகப்பெரிய குறிக்கோள், இளைய தலைமுறையை, நம்பிக்கை கொள்ள செய்வதும், அவர்களை அடுத்து   வரும் சவால்களுக்கு தயார் படுத்துவதுமாய் இருந்தது. அவர்களிடமே, தன் எண்ணத்தை பகிர்ந்தார். அவர்களின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொன்னவர், இதை செய், இதை செய்யாதே என வழி காட்டினார். பெரியவர்களுடன் பேசி எந்தவொரு பயனும் இல்லை என நன்றாக உணர்ந்திருந்தார் . அந்த வகையில் உலகை நன்கு புரிந்து வைத்திருந்த ஞான ஆசான் அவர் . வைரமுத்து ஒரு முறை எழுதியது போல் "காற்றும் கவிஞனும் மரிப்பதில்லை" என்பதில், கலாமும் அடங்குவார் அல்லவா?

அவர் தேச விடுதலைக்காக போராடிய, காலமெல்லாம் சிறையில் கழித்த  நெல்சன் மண்டேலா போன்ற வீரர் அல்ல. சிதறி போய்விடும் நிலையில் இருந்த தேசத்தை ஒருங்கிணைத்து, தன்  உயிரை தாரை வார்த்த லிங்கன் இல்லை. ஆனால் பாரதத்தை பொறுத்த வரை, தன் அருமை தவ புதல்வன். நேசமிகு தலைவன்.

எனக்கு கலாம் அறிமுகம் ஆனது அவரின்  "Wings of Fire" அறிமுகம் ஆன 1999 ஆம் ஆண்டு. நானும் என் நண்பனும், மும்பையில் ஒரு  தமிழ்  கலாசார ஆசிரியரை  சந்தித்த பொழுது, அவர் தெற்கில்  இருந்து புறப்பட்ட சில தேர்ந்த மனிதர்களை பட்டியல் இட்டு, நீங்களும் அவர்கள் போல் முன்னேறுங்கள் என்றார். அன்று அவர் சுட்டி சென்றவர்கள், கஸ்துரி ரங்கன், அப்துல் கலாம், M S சுவாமிநாதன், ஆர் . சிதம்பரம் ஆகியோரை.,

அதன்   பின் நண்பன் கண்ணா, "Wings of Fire" புத்தகம் பற்றி அருமையாக எழுதி என்னையும் படிக்கும்படி சிபாரிசு செய்திருந்தார். அவரின் "அக்கினி சிறகுகள்" வெளியாகி அதன் பின்பே அதனை படிக்க முடிந்தது. விடுதியின் நாட்களில், ஒரு மாலையில் படிக்க தொடங்கிய புத்தகம், அன்று பின்னிரவு, அதிகாலை வரை நீண்டது. அது வரையில் நான் படித்திருந்த மிக முக்கியமான சுயசரிதை  புத்தகம் அது தான். இன்று வரை, அந்த எழுத்து, கை ரேகை போல், மங்காமல் இருக்கிறது. உணர்வு குவியலாய், அக்கினியையும், அமிர்தத்தையும் ஒரு சேர கடந்து வந்த உணர்வு அதை படித்த கணமும், அதை உள்வாங்கி கிரஹித்த கணமும்.

நீங்கள் மறைந்த அந்த இரவு, முழுதும் அந்த எழுத்தே என் எண்ணங்களை ஆக்கிரமித்து இருந்தன.

"Wings of Fire" புத்தகத்தை தமிழாக்கம் செய்திருந்த சிவலிங்கம் அவர்கள், கலாம் அவர்களே தமிழில் எழுதியது போல், ஒரு அற்புதமான நடை கொண்டு வந்தார். அதுவே புத்தகத்தின் ஆக பெரிய பலம். புத்தகம் தந்த வீச்சும், சொல்லாக்கமும், அறிவியலை அற்புதமாக கண் முன் நிகழ்த்தி காட்டியதும் ஒரு ராசவாத வித்தை.

எந்த வேறு புத்தகமும், தமிழகத்தின் கல்லூரிகளில் இவ்வளவு தூரம் பாடமாகவில்லை. அந்த வகையில் அது மாறாத ஒரு மைல் கல். "பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  " என தன உழைப்பை, நம்பிக்கையை, வெற்றியை, படிப்பாற்றலை, படைப்பாற்றலை பந்தி வைத்த தருணம் அது. " உலக வழக்கப்படி, இந்த கலாமுக்கு எந்த ரத்த சொந்தமும் இல்லை. என் எழுத்துக்கள் யாரோ ஒரு சிலருக்கு உந்து சக்தியை தர முடிந்தால்,  அதுவே இந்த புத்தகத்தின் வெற்றி" என சொல்லி செல்கிறார் கலாம்.



கலாமை கொண்டாட நான் எண்ணிய சில நிலைகள்..
1. எந்த தேசமும், தன் சுய சார்பு கொள்கையுடன் வளர வேண்டும் என சொன்ன அவரின் கனவுகளும் அவரின் விளக்கமும்..  நாமே நமக்கான உபகரணத்தையும், அதன் தொழில் நுட்பத்தையும் படைத்தல். எத்தனை  முறை தான்  நாம்  நுகர்வோர் ஆக தொடர்வது. இன்று வரையிலும் ராணுவ தளவாட கொள்முதல் முதல், அணு உலைகளுக்கான உபகரணம் வரை, ஹெலிகாப்டர் முதல், போர் விமானம், போர் கப்பல் வரை,  மற்றவர்களை  நம்பி உள்ளோம். நமக்கு எந்த ஒரு பொருளும் விற்கின்ற  நாடு ஒரு போதும் அதன் மூல சூத்திரத்தை தர தயார் இல்லை. நாம் என்றும் நுகர்வோராக இருந்தால் போதும்  என எண்ணியபடி உள்ளனர் . இதை கலாம் என்றும் நினைவுபடுத்தி உள்ளார். இந்த நிலை மாற வேண்டும். சமீபத்திய ஆச்சர்ய ஆரவார வெற்றி - இஸ்ரோவின் பாய்ச்சல்.

2. தேச பாதுகாப்பு முக்கியம்: எதிரியின் வலிமை உணர்ந்து, நம்மை காலத்துக்கு தேவையானபடி மேம்படுத்துதல். 200 ஆண்டுகள் அடிமைப்பட்ட தேசம் அல்லவா இது ? அறுபத்து இரண்டில் நடந்த சீன யுத்தமும், நம் கையறு நிலையும் யாவரும் அறிந்ததே..

3. நதிகளை இணைத்தல்: தீபகற்ப இந்தியாவில், என்றும் நிரந்தர தேவை இது.

4. ஊழல் இல்லாத தேசம் வேண்டும் என்கிற அறைகூவல்.

5. ஒவ்வொரு மாநிலத்துக்கும் அவர் தந்த நடைமுறை முன்னேற்ற சத்தியங்கள் வரை - சமீபத்தில் அவர்   அகிலேஷ் யாதவை சந்தித்து அவரின் மாநிலத்திற்கான சத்தியங்களை வரையறுத்து தந்தது.

6. தன்னை ஒரு மாநிலத்தை சேர்ந்தவராக அடையாளப்படுத்தாமல், தேசத்தின்  குடிமகனாக, ஏன் ? உலக முழுமைக்குமான மனிதராக எண்ணியது..

7. என்றென்றும் குடிகொண்டிருந்த எளிமைக்கும், நாணயத்துக்கும்..

8. பல பேர் உங்களை, உங்களின் படிப்புக்கு, நீங்கள் முன்னிலை  படுத்தப்பட்டமைக்கு வருந்தியபோதும், தூற்றிய போதும், சாதாரணமாய் எடுத்துக்கொண்ட உங்கள் மனம்..

9. அணுசக்தி துறைக்கு ஒரு ஹோமி ஜகாங்கீர் பாபா. விண்வெளிக்கும், அந்த துறைக்கும் விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், என பாதுகாப்புத்துறையில்,உங்கள் பெயரும் முன்னிலை பெற்று உள்ளது. ஒரு துறையை நாட்டில் உலவ விட்டு அதன் வளர்ச்சியை கண்ணால் கண்ட நீங்களும் ஆச்சர்யமே. 

10. விக்ரம் சாராபாய், சதீஷ் தவன், பிரம்ம பிரகாஸ், ராஜ ராமண்ணா என நீங்கள் சிறப்பித்து முன்னிலைப்படுத்திய மனிதர்கள் உங்களால் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார்கள்.

11. துறை தோறும் உள்ள வளர்ச்சியை, இன்னொரு துறையில் உபயோகித்தல். தொடர் அறிவியல் பகிர்தல்.

12. எந்த புது பொருளை கண்டுபிடித்தாலும் அதன் உரிமையை பதிவு செய்தல்.

போய்வாருங்கள் கலாம்.. உங்களின் இறுதி தீர்ப்பு நாளில், நீங்கள் பார்த்தவர் யாவரும் உங்களை மனமுவந்து தழுவியிறுப்பர் ..

Thursday, April 2, 2015

அன்புள்ள அம்மா - எழுத்து சித்தர் பாலகுமாரன்


எழுத்து சித்தர் தன் தாயின் நினைவுகளை பதிவு செய்கிறார். இந்த எழுத்து  சில வருடங்களுக்கு முன், குமுதத்தில் வெளி வந்தது. போகிற போக்கில், அனைவர்க்கும் திரும்பி பார்க்க வைக்கும் சொற்சித்திரம் இது. கண்களில் நீர் திவலைகள் உருள்வதை தவிர்க்க முடியவில்லை. பாலகுமாரன் அவர்களின் அபூர்வ ஆளுமை என்றும் போல்..


" தாய் என்பவள் தெய்வ வடிவத்தின் மனித வடிவம் என்று உலகம் புகழ்கிறது. அந்த தெய்வ வடிவம், இடது கன்னத்தில் ஓங்கி குத்து வாங்கி கரு ரத்தம் கட்டி நிற்க, உதடு பல்லில் குத்தி கிழித்து இரத்தம் வழிய, முதுகு, புஜம், கை, இடுப்பு எல்லாவற்றிலும் விசிறிக் காம்பால் பட்டை பட்டையாக அடி வாங்கி மனம் சோர்ந்து உடல் துவண்டு உட்கார்ந்து இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா ? தாய், அதாவது கலியுக கண்கண்ட தெய்வம் அப்படி இருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்."



ஆணாதிக்கம், 'மேல் சாவனிஸம் '  என்ற வார்த்தைகள் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால்  அகம்பாவம் என்ற வார்த்தை எனக்குத் தெரியும். என் அப்பாவின் அகம்பாவம் என்னுள் வந்து விடவே கூடாது என்பதற்கு நான் போராடத் தயாரானேன். என்   அகம்பாவம் முளைகட்டி எழும்போதே அதன் முனையை முறிக்கிற வித்தையை சிரமப்பட்டு தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையைப் பற்றிய வெதும்பலில் இருந்தும், துக்கத்திலிருந்தும் என்னை ஒருவர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. என் தாய் தான்.

"வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, சந்தன பொட்டு ,சாப்பாடு இதைத்தவிர உலகத்துல நிறைய இருக்குடா" என்று அப்பாவுக்கு அப்பால் இருக்கின்ற உலகத்தைக் காண்பித்தாள் . 

தன்னுடைய பள்ளிக்கூடத்து லைப்ரரியில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து படிக்க சொல்லி திருப்பி கொண்டு போய் வைப்பாள். இந்த தீனி எனக்கு போதவில்லை என்று வாரத்துக்கு ஒரு ரூபாய் கொடுப்பாள். 'லெண்டிங் லைப்ரரியை  ' அறிமுகப்படுத்தி என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது அம்மா தான். 

"உன் சினேகிதா யாரும் ஒரு லெவலுக்கு மேல வளரப்போவதில்லை. அந்த மாதிரி சூழ்நிலையிலே அவங்க இல்லை. அதனால் சிநேகிதர் இல்லாமல் தனியாக இருக்க பழகிக்கொள்" என்றார். 


அம்மா சொல்லை மீறாமல் கடைபிடித்தேன். இன்றுவரை இந்த அறுபத்தைந்து வயது வரை உயிருக்கு உயிர் ஆன நண்பர்கள் ஒருவருமில்லை.

எனக்கு சிநேகிதமாக அம்மாதான் இருந்தாள். நான் எழுத ஆரம்பித்து "சாவி " யில் என் கொடி பறக்கத் துவங்கியதும் அம்மா குதூகலித்தாள்.

அப்போது எனக்கு இன்ஷ்யூரன்ஷ்   கம்பெனியில் நூத்தி என்பது ரூபாய் சம்பளம். முப்பது ரூபாயை கையில் கொடுத்து நூத்தி ஐம்பது ரூபாயை வீட்டு செலவுக்கு வைத்து கொள்வாள். என்னால் முப்பது ரூபாயும் செலவு செய்ய முடியாது. செலவு செய்ய தெரியாது.


என் அம்மா என் சிநேகிதி என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. என் தவறுகளை மிக நிதானமாக சுட்டிக் காட்டுவாள்.

அம்மா ஆசிரியை. தமிழ்ப் பண்டிதை. முப்பத்தாறு வருடம் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர். மோனஹன்   பெண்கள் உயர்நிலை பள்ளிகூடத்தில், ஒரு சிறிய சேப்பல் இருக்கும். அந்த பிரார்த்தனை கூடம் அம்மாவுக்கு மிகப் பிடித்தது. வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள மிக சாதாரண அறை தான் அது.  பிரார்த்தனை செய்து செய்து அந்த அறை, அந்த இடம் அதிர்வோடு இருந்தது.

நாங்கள் முரட்டுத்தனமான இந்து அல்ல. மதம் மாறிய கிறிஸ்தவரும் அல்ல. கடவுள் என்ற விஷயம் தான் முக்கியம். யார் கடவுள் என்பது முக்கியமல்ல. எல்லாம் தாண்டி கடந்தது கடவுள். மதத்தை மதம் சொல்கிற புத்தகத்தையும் தாண்டியது. அது மிகப் பிரமாண்டமானது என்பதை என் அம்மா எனக்கு பேசியும் பாடியும் விளக்கி இருக்கிறார். அவர் போட்ட விதை இன்று என்னுள் பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

தேவாரமும்,  திருவாசகமும், நாலாயிர திவ்விய பிரபந்தமும், பைபிளும் கிறிஸ்துவ மத கீர்த்தனைகளும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களும் மனதில் சுடர் ஏற்றி வைத்தன.

அம்மா எனக்கு பாலூட்டி. அம்மா எனக்கு தாதி. அம்மா எனக்கு ஆசிரியை. அம்மா எனக்குத் தோழி, அம்மா எனக்கு வழிகாட்டி , அம்மா எனக்கு இடித்து உரைப்பவள்.அம்மா என் இலக்கிய ஆசான். அம்மா என் வாழ்வின் ஒளி விளக்கு.



வெறும் தமிழ் மட்டும் சொல்லி கொடுத்திருந்தால் அவள் ஆசிரியை. அம்மா உள்ளே எனக்குள் சுடர் ஏற்றினாள். எனவே அவள் தெய்வ ரூபம். அம்மா என்பவள் மனித ரூபம் என்பது உலகோர் வழக்கம்.

என்  தாய் துன்ப பட்டதால், நான் துளிர்த்து எழுந்தேன். வாழ்க்கை சிலரை வெறும் உரமாகவும், சிலரை செடியாகவும் மாற்றுகிறது. என்ன செய்ய.

இந்த செடியும் நல்ல உரமாக வேண்டும். இதுவே பிரார்த்தனை. என் தாய்க்கு செய்யும் கைம்மாறு. அன்பு. காணிக்கை. 


[குறிப்பு : அவரின் எழுத்தில் சில பகுதியை மட்டும் இங்கு பகிந்துள்ளேன். நன்றி: குமுதம், ம.செ.]