Saturday, March 4, 2017

டாக்டர் வா.செ.குழந்தைசாமி நினைவுகள்தமிழ் கூறும் நல் உலகுக்கு நன்கு அறிமுகமானவர்  டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள்; கடந்த டிசம்பர் 10 ஆம் நாள் நம்மிடம் இருந்து விடைபெற்றார். நல்ல தமிழறிஞரும், அருமையான கல்வியாளராகவும், மிக  சிறப்பான நிர்வாகியாகவும் நிலை கொண்டவர் குழந்தைசாமி அவர்கள். தன்னை எப்பொழுதும் தமிழ்  மாணவன்,சிறந்த பொறியாளன் என அறிவித்து கொள்வதில் பேருவகை அவருக்கு உண்டு. "குலோத்துங்கன் கவிதைகள்", வள்ளுவம்  என அவரின் படைப்புலகு அற்புதமானது; 'வாழும் வள்ளுவம்' என்ற நூலுக்காக சாகித்ய அகாடமியின் விருது பெற்றவர்; இன்றைய கரூர்   மாவட்டத்தில், வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர்; எழுத்து வாசனை அதிகம் இல்லா ஊரில்  இருந்து புறப்பட்டு கரக்பூர் ஐ ஐ டி, இல்லினோயிஸ் பல்கலை வரை  சென்றவர்; நீரியல் துறை  வல்லுநர்  அவர்; மதுரை காமராஜர் பல்கலை கழக துணை வேந்தர், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலை துணை வேந்தர், தமிழ் இணைய பல்கலைக்கழகம் என அவர் நிர்வகித்தவை, முத்திரை பதித்தவை ஏராளம்;


பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அவரின் கைகளால் மேடையில் பரிசு பெறும் வாய்ப்பு பெற்றேன்; அந்த விழாவில் அவரின் பேச்சு சுவை பட இருந்தது; சிந்திக்க வைத்தது; அவற்றின் சில துளிகள் இங்கே:

 • என் வாழ்வில் இருந்து பேசுவதற்காக மன்னிக்கவும்; நான் பேராசிரியராக பணிபுரிந்த நாட்களில், எந்த நாளிலும் வகுப்புக்கு காலம் தாழ்த்தி சென்றதில்லை. ஆசிரியர் பணிக்கு காலம் தாழ்த்தாமை மிக மிக முக்கியம். 
 • ஒரு ஆசிரியருக்கு, அவரின் மாணவர் மேல் அதீதமாக நேசிக்கும் பக்குவம் வேண்டும்;  ஒரு போதும்  சலித்தல், எரிச்சல் படல் கூடாது. தன் சுய துக்கங்கள் மாணவரிடம் காண்பிப்பது ஆகாது;
 • அவர் கற்பிக்கும் பாடத்தை, ஆசிரியர் தொழிலை,  அவர் உளமார நேசிக்க வேண்டும்; 
 • மாணவர்களிடம் பாரபட்சம் கூடாது;
 •  அறிவியலை, செயல்முறை கல்வியாக கற்க  ஆர்வம் காட்டுங்கள்; 
 •  தன் தாய்  மொழியில் கல்வி கற்பது, நல்ல கற்பனை  வளம் பெற உதவும்; கற்றலை மேம்படுத்தும்; ஜப்பான், சைனா நல்ல உதாரணம்;
 • சுய கெளரவம் மிக  முக்கியம்;
 • வெளி நாட்டவர்க்கும், நம்மவர்க்கும் உள்ள வேறுபாடு: நம்மவர்க்கு பிறரிடம் பேச, பழக தெரிவதில்லை என்பதே உண்மை; 
 • நம்மவர்கள் ஓர் இடத்தில் நிற்க வேண்டும் என்றால் ஏதாவது கைப்பிடியை பிடித்துக்கொண்டோ, சுவரில் சாய்ந்து கொண்டோ தான் நிற்க முயல்கின்றனர்;
 • இரயில் பயணத்தில் ஒரு நாள் நம்மவர் தம் சக பயணியிடம் உரத்த குரலில் உரையாடி வந்தார்; அதை சுட்டிய   வெளிநாட்டவர் ஒருவர், அவர் தன் பக்கத்தில் இருப்பவரிடம் தானே பேசுகிறார்; ஏன் ஒட்டுமொத்த இரயில் பெட்டிக்கும்  கேட்பது  போல் பேசுகிறார், பக்கத்தில் இருப்பவர் கேட்கும் தொனியில் பேசினால் போதாதா  என கேட்டார் என அந்த நிகழ்வை பகிர்ந்து  கொண்டார்;
 • நான் என் சிறு  வயதில்,என் கிராமத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு என் தாய் தந்தையருடன்  செல்வேன்; இன்று அந்த கோவில் பாழ்பட்டு  நிற்கிறது;ஆனால் நான் குடி இருக்கும் பெசன்ட் நகரில் கடந்த சில ஆண்டுகளில், நான்கைந்து கோயில்கள் புதிதாக வந்து  விட்டன;நான் எண்ணுகிறேன், மனிதர்களை தொடர்ந்து கடவுளும் கிராமத்தை விட்டு நகரத்துக்கு குடிபெயர்ந்து விட்டாரோ என சொல்லி சென்றார்;
 • அவரின் எண்பதாவது பிறந்த நாளை அண்ணா பல்கலை கழகம் அவரை அழைத்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது;
 • .அவரின் இணைய  பக்கம் : http://kulandaiswamy.com/index.htm

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்