Thursday, April 2, 2015

அன்புள்ள அம்மா - எழுத்து சித்தர் பாலகுமாரன்


எழுத்து சித்தர் தன் தாயின் நினைவுகளை பதிவு செய்கிறார். இந்த எழுத்து  சில வருடங்களுக்கு முன், குமுதத்தில் வெளி வந்தது. போகிற போக்கில், அனைவர்க்கும் திரும்பி பார்க்க வைக்கும் சொற்சித்திரம் இது. கண்களில் நீர் திவலைகள் உருள்வதை தவிர்க்க முடியவில்லை. பாலகுமாரன் அவர்களின் அபூர்வ ஆளுமை என்றும் போல்..


" தாய் என்பவள் தெய்வ வடிவத்தின் மனித வடிவம் என்று உலகம் புகழ்கிறது. அந்த தெய்வ வடிவம், இடது கன்னத்தில் ஓங்கி குத்து வாங்கி கரு ரத்தம் கட்டி நிற்க, உதடு பல்லில் குத்தி கிழித்து இரத்தம் வழிய, முதுகு, புஜம், கை, இடுப்பு எல்லாவற்றிலும் விசிறிக் காம்பால் பட்டை பட்டையாக அடி வாங்கி மனம் சோர்ந்து உடல் துவண்டு உட்கார்ந்து இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா ? தாய், அதாவது கலியுக கண்கண்ட தெய்வம் அப்படி இருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்."



ஆணாதிக்கம், 'மேல் சாவனிஸம் '  என்ற வார்த்தைகள் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால்  அகம்பாவம் என்ற வார்த்தை எனக்குத் தெரியும். என் அப்பாவின் அகம்பாவம் என்னுள் வந்து விடவே கூடாது என்பதற்கு நான் போராடத் தயாரானேன். என்   அகம்பாவம் முளைகட்டி எழும்போதே அதன் முனையை முறிக்கிற வித்தையை சிரமப்பட்டு தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையைப் பற்றிய வெதும்பலில் இருந்தும், துக்கத்திலிருந்தும் என்னை ஒருவர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. என் தாய் தான்.

"வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, சந்தன பொட்டு ,சாப்பாடு இதைத்தவிர உலகத்துல நிறைய இருக்குடா" என்று அப்பாவுக்கு அப்பால் இருக்கின்ற உலகத்தைக் காண்பித்தாள் . 

தன்னுடைய பள்ளிக்கூடத்து லைப்ரரியில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து படிக்க சொல்லி திருப்பி கொண்டு போய் வைப்பாள். இந்த தீனி எனக்கு போதவில்லை என்று வாரத்துக்கு ஒரு ரூபாய் கொடுப்பாள். 'லெண்டிங் லைப்ரரியை  ' அறிமுகப்படுத்தி என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது அம்மா தான். 

"உன் சினேகிதா யாரும் ஒரு லெவலுக்கு மேல வளரப்போவதில்லை. அந்த மாதிரி சூழ்நிலையிலே அவங்க இல்லை. அதனால் சிநேகிதர் இல்லாமல் தனியாக இருக்க பழகிக்கொள்" என்றார். 


அம்மா சொல்லை மீறாமல் கடைபிடித்தேன். இன்றுவரை இந்த அறுபத்தைந்து வயது வரை உயிருக்கு உயிர் ஆன நண்பர்கள் ஒருவருமில்லை.

எனக்கு சிநேகிதமாக அம்மாதான் இருந்தாள். நான் எழுத ஆரம்பித்து "சாவி " யில் என் கொடி பறக்கத் துவங்கியதும் அம்மா குதூகலித்தாள்.

அப்போது எனக்கு இன்ஷ்யூரன்ஷ்   கம்பெனியில் நூத்தி என்பது ரூபாய் சம்பளம். முப்பது ரூபாயை கையில் கொடுத்து நூத்தி ஐம்பது ரூபாயை வீட்டு செலவுக்கு வைத்து கொள்வாள். என்னால் முப்பது ரூபாயும் செலவு செய்ய முடியாது. செலவு செய்ய தெரியாது.


என் அம்மா என் சிநேகிதி என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. என் தவறுகளை மிக நிதானமாக சுட்டிக் காட்டுவாள்.

அம்மா ஆசிரியை. தமிழ்ப் பண்டிதை. முப்பத்தாறு வருடம் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர். மோனஹன்   பெண்கள் உயர்நிலை பள்ளிகூடத்தில், ஒரு சிறிய சேப்பல் இருக்கும். அந்த பிரார்த்தனை கூடம் அம்மாவுக்கு மிகப் பிடித்தது. வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள மிக சாதாரண அறை தான் அது.  பிரார்த்தனை செய்து செய்து அந்த அறை, அந்த இடம் அதிர்வோடு இருந்தது.

நாங்கள் முரட்டுத்தனமான இந்து அல்ல. மதம் மாறிய கிறிஸ்தவரும் அல்ல. கடவுள் என்ற விஷயம் தான் முக்கியம். யார் கடவுள் என்பது முக்கியமல்ல. எல்லாம் தாண்டி கடந்தது கடவுள். மதத்தை மதம் சொல்கிற புத்தகத்தையும் தாண்டியது. அது மிகப் பிரமாண்டமானது என்பதை என் அம்மா எனக்கு பேசியும் பாடியும் விளக்கி இருக்கிறார். அவர் போட்ட விதை இன்று என்னுள் பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

தேவாரமும்,  திருவாசகமும், நாலாயிர திவ்விய பிரபந்தமும், பைபிளும் கிறிஸ்துவ மத கீர்த்தனைகளும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களும் மனதில் சுடர் ஏற்றி வைத்தன.

அம்மா எனக்கு பாலூட்டி. அம்மா எனக்கு தாதி. அம்மா எனக்கு ஆசிரியை. அம்மா எனக்குத் தோழி, அம்மா எனக்கு வழிகாட்டி , அம்மா எனக்கு இடித்து உரைப்பவள்.அம்மா என் இலக்கிய ஆசான். அம்மா என் வாழ்வின் ஒளி விளக்கு.



வெறும் தமிழ் மட்டும் சொல்லி கொடுத்திருந்தால் அவள் ஆசிரியை. அம்மா உள்ளே எனக்குள் சுடர் ஏற்றினாள். எனவே அவள் தெய்வ ரூபம். அம்மா என்பவள் மனித ரூபம் என்பது உலகோர் வழக்கம்.

என்  தாய் துன்ப பட்டதால், நான் துளிர்த்து எழுந்தேன். வாழ்க்கை சிலரை வெறும் உரமாகவும், சிலரை செடியாகவும் மாற்றுகிறது. என்ன செய்ய.

இந்த செடியும் நல்ல உரமாக வேண்டும். இதுவே பிரார்த்தனை. என் தாய்க்கு செய்யும் கைம்மாறு. அன்பு. காணிக்கை. 


[குறிப்பு : அவரின் எழுத்தில் சில பகுதியை மட்டும் இங்கு பகிந்துள்ளேன். நன்றி: குமுதம், ம.செ.]

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்