வருடத்தின் இறுதியில், கடந்து போன ஆண்டை, நாட்களை திரும்பி பார்க்க ஆசை கொண்டேன். அது தான் எல்லா பத்திரிக்கைகளும், வலை பதிவர்களும் ஒரு மாதமாய் பர பரவென எழுதி குவித்து விட்டனரே. இனியும் என்ன மிச்சம் இருக்கிறது எனும் உங்கள் கேள்வி புரிகிறது.
கடலை வியாபாரி ராமலிங்கத்தில் இருந்து பவரின் சிறை பிரவேசம் வரை, சுமார் மூஞ்சி குமார் முதல் தீயாய் வேலை செய்த குமார் வரை, தங்க மீன்கள் படைத்த ராம் முதல், மூடர் கூடம் சென்றாயன் வரை எத்தனை கலவையான முகங்கள்; புதிரான திருப்பங்களாய் எத்தனை சம்பவங்கள்; தமிழ் கூறும் நல் உலகில் இருந்தும், வெளியில் இருந்தும் கணக்கற்ற சம்பவங்கள்.
முதலில் சென்ற ஆண்டில் இனிய புதிதுகள் :
தமிழ் ஹிந்து :
பாரம்பரிய ஹிந்து ஆங்கில நாளிதழ் குடும்பத்தில் இருந்து இத்தனை காலத்துக்கு பின் அட்டகாசமான ஒரு தமிழ் பதிப்பு , நம்மை தாளம் போட்டு ரசிக்க வைக்கிறது. இலக்கியத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவது அருமை.
இந்த வருட ஹிந்துவின் தீபாவளி மலர் அருமையான வடிவமைப்பு. நிறைய இறை படங்களுடன், பல விஷயங்களை அலசி இருந்தது.
கல்கியில் மகாபாரத மாந்தர்கள் - காலம்தோறும் தர்மம் :
கல்கியில் ஒவ்வொரு வாரமும், ஒரு மகாபாரத மாந்தர்களை அறிமுகம் செய்விக்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். வேதாவின் ஓவியங்கள், அதற்கு அழகு சேர்க்கின்றன.
கர்ணன், தர்மன், திருதராஷ்ட்ரன், காந்தாரி, சகுனி என ஒவ்வொரு பாத்திரத்தோடு மனித ஆன்மாவின் ஆழம் தொடுகிறார். ராஜாஜி, சித்பாவானந்தர், எஸ். ராமகிருஷ்ணன் , சோ என பலரின் பாரதத்தை படித்திருந்தாலும், இது நிச்சயம் வித்தியாசமான கோணம். இதன் பொருட்டு இது வரை வந்த கதைகளோடு, வியாசரையும் தொட்டு செல்கிறார். மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்பதற்கு அவர் தரும் விளக்கம் சிலர் அப்படி தான்.
மாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன் :
இது இயக்குனர் , துணை இயக்குனர் , எழுத்தில் தடம் பதிக்கும் காலம் போலும்; விகடனில் வரும் தொடர்கள் யாவும், இவர்களிடம் இருந்து கனமுடன் வருகின்றன. பாஸ்கர் சக்தி, பாலா , சுகா, ராஜு முருகன் வரிசையில் செல்வராஜ் . ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான சம்பவங்களோடு நெகிழ வைத்து தொடரை கொண்டு சென்றார்.
பிடித்த சிறுகதை :
இந்த வாரம் விகடனில் இடம்பெற்ற "அம்மா " சிறுகதை எனக்கு பிடித்து இருந்தது. வழக்கறிஞர் சுமதியின் கதை நெக்குருக செய்து விட்டது. தாயையும்,மகளையும் இதை விட அழகாக பின்ன இயலுமா? எனக்கு தெரியவில்லை. அப்படி ஒரு நெகிழ்ச்சி ...
மணியன் செல்வனின் ஓவியங்கள் கதைக்கு எப்போதும் போல ஆகப்பெரிய பலம். கண்களை நகர்த்தவே முடியவில்லை.
அம்மாவையும் மகளையும் அப்படியே போர்டரேட் செய்து தாராளமாக வீட்டின் வரவேற்பு அறையை அலங்கரிக்க செய்யலாம். அப்படி ஒரு தூரிகை ஹைக்கூ அது. தந்தை, மகள் உள்ள படமும் அப்படியே...
நா. முத்துக்குமாரின் வேடிக்கை பார்ப்பவன் :
தன் அப்பாவின் நினைவுகள், பால்யத்தில் படிக்க தந்த புத்தக பட்டியல், இலக்கிய வட்டம், ல ச ராவை நேரில் கண்டது , அவரின் பள்ளிக்கூடம், தன் மகனின் பேச்சு என தண்ணீரின் அடி ஆழத்தில் தட்டுப்படும் பழுப்பு இல்லை போல அவரின் நினைவுகள் தொடரின் பத்திகள் எங்கும்.. அவரின் முந்தய தொடரான ... அணிலாடும் முன்றில் போல் இதுவும் நேர்த்தியாய் வலம் வரும்..
வண்ணதாசனின் கடிதம் :
வண்ணதாசனின் கடிதங்கள் சில அவரின் வலை பூவில் வாசிக்க கிடைக்கின்றன . அவரின் சில இறகுகள்; சில பறவைகள் தொகுப்பில் இடம் பெற்றவை அவை; ஜெய மோகனின் வெண் கடல் புத்தகத்துக்கு வண்ணதாசன் எழுதிய அனுபவ கடிதம் ஆத்மார்த்தமானது ..
நீங்காத கதா மாந்தர்கள் :
குமுதா ஹேப்பி அண்ணாச்சி என கூவும் சுமார் மூஞ்சி குமாரும், எதிலும் தன்னை வித்தியாசமாய் காட்டும் சென்றாயனும், சென்ற ஆண்டில் வெள்ளி திரை கண்ட இனிய பாத்திர படைப்புகள்..
உதிர்ந்த முத்துக்கள் :
தம்பிகளுக்கு நீங்கா விடை கொடுத்த அண்ணன் :
நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இளைய தலை முறையை தன் எழுச்சி மிக்க எழுத்தால்; எண்ண ஓட்டத்தால் வழி நடத்திய டாக்டர்
எம். எஸ். உதய மூர்த்தி (M S Udayamoorthi)அவர்களின் மறைவு நிகழ்ந்தது இந்த ஆண்டில் தான். இதோ அவரின் எண்ணங்கள் புத்தகம் 103 பதிப்புகளை தாண்டி வெற்றி நடை போடுகிறது. பாரதியை , கல்கியை தன் எழுத்தின் ஆதர்ஷமாய் கொண்டவர்.
வெற்றியை வெறுமனே போதிக்காமல் , தன் வாழ்வில் ஒவ்வொன்றையும் வெற்றிகரமாய் செதுக்கிய மேதை அவர். சமூக அக்கறை கொண்டு அவர் முன் எடுத்த நதி நீர் இணைப்பு , மது விலக்கு , அறிவு சார் தன்னம்பிக்கை பயிலரங்குகள் நிச்சயம் அவரை நிஜ வாழ்விலும் சாம்பியன் என காட்டியது.
திரைஉலக ஜாம்பவான்கள் :
பி பி சீனிவாஸ்
"மயக்கமா கலக்கமா" என வாழ்வுக்கு தன் பாட்டுக்கு மெல்லிய குரலால் வர்ணம் சேர்த்த பி பி சீனிவாஸ் மறைவு ஈடு இணை அற்ற இழப்பு.
டி எம் எஸ்
முருகனை வேண்டி அழைக்கும் டி எம் எஸ் மரணம் அவரின் பெரும்பாலான ரசிகர்களுக்கு பெரிய துன்ப நிகழ்வு. பக்தி மணம் கமழ இனிக்க இனிக்க "அழகென்ற சொல்லுக்கு முருகா " என அழைத்தவர் .. கற்பனை என்றாலும் எனும் பாடல்கள் மறக்க முடியாதவை. மலந்தும் மலராது பாடலை என்றும் மறக்க முடியாது.
கவிஞர் வாலி
ஒவ்வொருவர் மறைவிலும் அவர்களை பற்றி நினைவுகளை பகிரும் வாலி மறைந்தது வருத்தம் நிறைந்தது. கண்ணதாசனுக்கு அர்த்தமுள்ள இந்து மதம் போல் வாலி, தன பிந்தைய வாழ்வில் தீட்டிய ஓவியங்கள் என்றென்றும் நெஞ்சம் நிறைந்தவை. அவரின் அவதார புருஷன் தொடங்கி கிருஷ்ண விஜயம் வரை பாட்டால் ஆண்டது அதிகம்..
தூய உன் திருவடி துகளையே
அருளார்ந்த அட்சதை என்று
அடியேன் சிரசுகளில் அணிந்தேன்
எல்லா காலத்தும்
எஞ்ஞான்றும் அந்தர்யமாய் இருக்கும்
அவன்.. :: கிருஷ்ண விஜயம்
புரையற்ற புத்தியை
பேண்
காஞ்சனம் கல் ஒன்றாகக் காண்
உண்டியை குறை ஓரளவே
உதரத்தை உணவால் நிறை
தியானம் தினம் பயில்
தவிர் சோம்பல் துயில்
வெகுளி
வீக்கம் விடு
வேட்கைக்கு விடைகொடு ....
ஓம் சாந்தி ஓம் சாந்தி என்று
உச்சரித்து பழகு
சாந்தம்தான் தெய்வ சித்தத்திற்கு அழகு
(பாண்டவர் பூமி)
நம்மாழ்வார் :
இயற்கை விவசாயத்தை பரப்பிய நம்மாழ்வாரின் மறைவு விவசாயிகளுக்கு நுகத்தடியை இழந்தது போன்றது..
புஷ்பா தங்கதுரை
திருவரங்கன் உலா போன தங்கதுரை அவர்களின் மறைவு இந்த ஆண்டு நடந்தது.
ஜான் கோடார்டு
ஒரு மழை நாளில் பதினைந்து வயது பையன் ஜான் தன வாழ்வின் லட்சியங்களை ஒன்று இரண்டு என 127 ஐ பட்டியல் இடுகிறான். அவற்றில் 109 ஐ தன வாழ்வில் சாதித்தது அவர் வாழ்வை பிறரால் திரும்பி பார்க்க வைத்தது. அவரின் லட்சியம் ஒவ்வொன்றும் அசாத்தியம் ஆனது. நதிகளை அதன் முடி முதன் அடி வரை காண்பது, முக்கிய சிகரங்கள் பலவற்றை ஏறுவது என ஒவ்வொன்றும் மயிர் கூச்செறியும் சாகசங்கள்.
மிக மிக பெரிய லட்சியங்களை அடைந்த வாழ்வு அவருடையது. அது இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.
கருப்பு சூரியன்
இனவெறிக்கு எதிராகவும் , மனித சமத்துவத்துக்கும் வாழ்வெங்கும் போராடிய மண்டேலா அவர்களின் மரணம், உலகம் முழுக்க அனைவரையும் கலங்க வைத்து விட்டது.
.
.