Saturday, October 11, 2014

அருட்செல்வர் நா. மகாலிங்கம்( குறைவிலா நிறைவே)இதோ சென்ற வாரத்துடன் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் பிரியா விடை கொடுத்து விட்டார்கள். சோமன்துறை சித்தூரிலே துவங்கிய பயணம் தொண்ணூற்று ஒரு ஆண்டுகளுக்கு பின் சென்னையிலே முடிந்துள்ளது. கொங்கு மண், தன்னுடைய மிக முக்கிய ஆசானை, இழந்து விட்டது.

தான் எடுத்துக்கொண்ட எதுவாயினும், அதை அதி கவனத்துடன் செயல்படுத்துவது மகாலிங்கம் அவர்களின் வழக்கம். அவர் எடுத்துக்கொண்ட கல்வி பணியாகட்டும், ஆன்மீக பணியாயினும், பதிப்பு துறை ஆனாலும் அதில்   தன் தனி முத்திரையை பதிக்க தவறியது இல்லை. அவரின் ஆசிரியராய் கொண்டு வெளி வந்த "ஓம் சக்தி" இதழ் அதற்கு உதாரணம். அதில் வரும் ஒவ்வொரு தலையங்கமும், மிக மிக ஆழமாய் அலசப்பட்டு  இருக்கும். மண்ணுக்கும், மக்களுக்கும் உகந்ததை அவர் சொல்ல தயங்கியது இல்லை.

தன் குடும்பத்தில், தனக்கு பின் உள்ள இரண்டு தலைமுறையை சரியாக வழி நடத்தியதும், தன் பணிகள் எதுவும் தொய்வுராமல் அவர்களின் ஆதரவை இறுதி நாள் வரை பெற்றது அவருக்கு இருந்த ஆளுமை தான். அவர் உயிர் நீத்த   சென்னை விழாவும்( காந்தி ஜெயந்தி ) அவர் ஆண்டாண்டாய் தொடர்பவை. சிலர் போதும் இந்த பொது வாழ்வு என ஒரு கட்டத்தில் முடிவுக்கு  வருவர். இவர் அதற்கு நேர் எதிராய் வாழ்ந்து மறைந்துள்ளார்.

வைரமுத்து அவர்கள் 2012 ஆம் ஆண்டில், கோவையில் நடந்த மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் திருக்கடவூர் நூல் வெளியீட்டு விழாவில் இப்படி குறிப்பிட்டார்.

"இந்த மண் அவருடைய பெருமைகளை எழுபதாண்டுகள் அனுபவித்து கொண்டுள்ளது. அந்த பெருமகன் நூறாண்டுகள் தாண்டியும் வாழவேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் இயற்கையை இறைஞ்சுகிறோம்.

காரணம், இந்த நாட்டில் பெரியவர்களுக்கான இடம் காலியாகிக்கொண்டே போகிறது. மூத்தவர்கள், சான்றோர்கள், ஒரு சபைக்கு அலங்காரமாய் இருப்பவர்கள் , மக்களால் மதிக்கப்படுகின்ற மாமனிதர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதை எண்ணி, நான் கவலைப்படுகின்றேன்.

எனவே எங்கள் அகராதியாக, எங்கள் முன்னனுபவமாக, எங்களின்  முன்னோட்டமாக அந்த பெருமகன் நூறாண்டு வாழ வேண்டும் என்று மன்றத்தில் நான் மகிழ்ச்சியோடு வேண்டுகின்றேன்.  "

வைரமுத்து தன் "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் " தொகுப்பில், திரு மகாலிங்கம் அவர்களை குறிப்பிட்டு "ஊருக்கு சர்க்கரை ஆலை வைத்து வழங்கும் அவர் உடம்பில் சர்க்கரை இல்லை " என மகிழ்வோடு குறிப்பிடுவார்.

மகாலிங்கம் அவர்கள் "தேசிய நதிகள் இணைப்புக்கு " பல முறை முனைந்தவர். அவரின் வாழ்நாளில் அது செயல் வடிவம் பெறாமலே போய்விட்டது. ஒரு முறை தன் வளர்ச்சிக்கான காரணத்தை சொல்லும் பொழுது சரியான இடங்களில் மிக சரியானவரை நியமிப்பதே சூட்சுமம் என்றார்.

பொள்ளாச்சியை சுற்றிய எல்லா ஊர்களிலும், அவரை பற்றி எண்ணங்களை நினைவு கூர்வார்கள். மகாலிங்கம் அவர்களின் இல்ல திருமணத்தை, காண சென்று வந்த கதையை நிறைய பேரிடம் கேட்டு உள்ளேன். தன் கல்வி நிறுவனத்தில் "அற்புதமான பேராசிரியர்களை " அழைத்து வந்தது அவருக்கு இருந்த மிக பெரிய ஆர்வம். கல்வியாளர்களை போற்றுவதும் அவரின் இயல்பு. அவரின் நிறுவனத்தில் நுழைபவர்கள், ஏதோ கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த பிரமை இருக்க கூடும்.  அப்படி தான் அவரின் நிறுவனங்கள் காட்சி தருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பொள்ளாச்சியில் நடக்கும் மாரியம்மன் பண்டிகையில், முதல் பூவேடு அவருடையது. இனி வரும் ஆண்டுகளில் அதை காண முடியாது என்பது துரத்ரிஷ்டமானதே.பன்னிரு திருமுறைகளை, திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளிகொணர்வதிலும், அதை நிறைய பேருக்கு சென்று சேர்ப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.   அவரை பற்றி பதிப்பகத்தார் ஒவ்வொருவரும் ஒரு நெடிய கதை சொல்ல, பண்பை சொல்ல வாய்ப்பு அதிகம். வள்ளலாரின் கருத்துக்களை, எங்கும்  கொண்டு சேர்த்த பெருமை இவர்க்கு உண்டு.

அவரின் ஓம் சக்தி இதழின் அட்டை படங்களும், அதில் வந்த தேர்ந்த எழுத்து ஓவியங்களும் கண்ணில் மினுங்குகின்றன. தேர்ந்த எழுத்தை போற்றி .வரவேற்றவர் அவர்.

சென்ற வார கல்கி இதழ் அவரின் அவரின் புகைப்படத்தை முகப்பில் ம. செ. வின் ஓவியத்துடன் வெளியிட்டு பெருமை சேர்த்தது. கல்கி இதழ் வெளியிட்ட தலைப்பு போல் அவரின் வாழ்வு "குறைவிலா நிறைவே."அதே இதழில், ஓம் சக்தி இதழின் பொறுப்பு ஆசிரியர் திரு சிதம்பரநாதன் அவரின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாய் இருந்தது.


அவர் கலந்து கொண்ட விழாவின் இறுதி நிமிடங்களில் அவர்...


அவரின் ஓம் சக்தி இதழ் ..அவரின் நீண்ட ஊக்கத்துக்கும், பணிக்கும் எங்களின்  வணக்கங்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்  படும்.

(நன்றி : கல்கி, தி  ஹிந்து )
.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்