Tuesday, September 1, 2009

நடிகர் சிவக்குமாருடன் ஒரு நேருக்கு நேர் - நிகழ்ச்சி - ஜி தமிழ் தொலைக்காட்சி



இந்த ஞாயிறு எதேச்சையாக தொலைக்காட்சியை கண்ட தருணத்தில், நடிகர் சிவக்குமாருடன் பேட்டியை காணும் வாய்ப்பு பெற்றேன் ( தமிழர் பார்வை - சுதாங்கனுடன் நேர்முகம்). சிவக்குமார் அவர்களின் பேச்சை கேட்பது ஒரு சுகானுபவம். ஒரு கால பெட்டகம், வாழ்வின் அர்த்தத்தை, தன் நடந்து வந்த சுவடுகளை, அரிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாய் அமைந்தது சிறப்பு. சமீப நாட்களில் சிவக்குமார் பங்கு பெரும் அனைத்து நிகழ்வுகளும் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. இதோ நேற்று பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் சிவக்குமார் பேசி இருக்கிறார்...

இரண்டு மணி நேரம் தொடர்ந்த அந்த தொலைக்காட்சி, பேட்டி ஒரு உணர்வு குவியலாய் மாறி மகிழ்ச்சி தந்தது. குற்றாலத்தில் குளிக்கும் போது, எந்த துளி என்னை தொட்டு சென்றது என இனங்காட்ட முடிவதில்லை... அப்படித்தான் அவரது பேச்சும்.. ஒரு பிரவாகமாய் நீள்கிறது..

இனி அவரது எண்ணங்களில்..
எம். ஜி ஆருடன் தொடர்ந்த பயணம், சிவாஜியுடன் தொடர்ந்த நட்பு, ஜெய் சங்கருடன் பூண்ட நட்பு என அவரது வார்த்தைகளில் பேட்டி சென்றது. அனைத்தும்.. சம்பவங்கள் வழியாகவே..



உங்களின்
மூன்று படங்கள் - துவக்கத்திலேயே வெற்றி - ஆனால் நீங்கள் எதிர்பார்த்த உயரம் தொடவில்லையே...?
எனது படம் அன்னக்கிளி - சுஜாதாவின் நடிப்புக்காக ஓடியது. அடுத்து வந்த ஆட்டுக்கார அலமேலு-ஆட்டிற்காக ஓடியது. அது தான் நிஜம். வாழ்வில் நான் எண்ணியது.. வாழ்வு முழுவதும் சினிமா சோறு போடும் என்பதே.. அது நடந்தது. சினிமா என்னை கைவிட வில்லை என்றார். நான் எந்த தருணத்திலும், அண்ணா நீங்கள் படம் எடுக்கிறீர்கள் போல் கேள்விப்பட்டேன் என எப்போதும் தொடர்பு கொண்டு கேட்டதில்லை. அனைத்து வாய்ப்புகளும் என் கதவை தட்டியவையே...

உங்கள் வாழ்வை எப்படி அமைத்து கொண்டீர்கள்:
நான் எனக்காக ஒரு கிராப் வைத்து இருந்தேன் . ஒரு கட்டுபாடான, ஒழுக்கமும், நேர்த்தியும் உள்ளதாய் நடந்து வந்தேன் என்கிறார். அதையே என் குழந்தைகளுக்கும், பால பாடமாய் போதித்து வந்தேன் என்கிறார்.

காதல் திருமணம் பற்றி..
எனி வருங்காலம் முழுதும், காதல் திருமணமே நிறைந்து இருக்க போகிறது. காதலர்கள் திருமணம் செய்த பின், சிறிது காலத்தில் பிரிந்து போகாமல், பிரச்சனைகளை கண்டு ஒதுங்காமல், அடுத்த தலைமுறைக்கு உதாரணமாய் வாழ்ந்தது காட்ட வேண்டும் என்கிறார்.

மக்களில் நான் எவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறேன் என்பதே எனது வெற்றி என்கிறார். புகழும், பணமும் நிலையற்றவை. அதன் பின் ஓடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்கிறார். இன்னொரு மனிதனை வாழ வைக்க பணம் பயன்பட்டால் அது சிறப்பானது என்கிறார்.

எனது ஊரை நேரம் வாய்க்கும் பொழுது எல்லாம் தரிசிக்கிறேன். என் பள்ளியில் என்னுடன் படித்தவர்கள், என் குடும்பத்துக்கு ஆரம்பம் முதல் உழைத்து வந்த சலவை தொழிலாளி, என் வீட்டை கட்டிய கொத்தனார், அவரது குடும்பம், இன்னும் அதே நிலையில் உள்ளது. ஆக நான் ஆண்டவனால், அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர்கிறேன் என்கிறார். தான் தொடர்ந்தது சக மனிதனுக்கு உதவுகிறேன் என்கிறார்.

எப்படி நீங்கள் இலக்கியத்துக்கு வந்தீர்கள்?
நான் தனிமையை விரும்புபவன். சினிமா இனி போதும் என முடிவுக்கு வந்த பின், வாழ்வின் எனது எஞ்சிய நாட்களை இலக்கியத்தில் செலவிட முடிவு செய்தேன் என்கிறார். தமிழ் இலக்கியம் அவரை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை. சிவக்குமார் என்ற மனிதன் வாழ்ந்தான் என அடுத்த தலைமுறை சொல்ல சில நல்ல விஷயங்களை கொடுத்து செல்ல முனைகிறேன் என்கிறார். அடுத்த தலைமுறைக்கு நம் தொன்மையை, நல்ல இலக்கியத்தின் சாற்றை பிழிந்து தர முனைகிறேன் என்கிறார். பேச்சு கம்பராமாயணம் பக்கம் திரும்புகிறது. சென்ற ஒரு ஆண்டில், கம்பராமாயணத்தில், முழுக்கவும், பயணித்து இருக்கிறார்... சிவக்குமார்.

ஏன் கம்பராமாயணம்? எது ஈர்த்தது? ஈடுபாடு எதனால்?
கம்பன் என்னை ஈர்த்தான் என்கிறார். " கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு.. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என பாரதி வள்ளுவனை பின்னுக்கு கொண்டு சென்று கம்பனை முன்வைத்தான் என்கிறார். தான் அதிகம் கலங்கிய பகுதி.. ராவணன் மரணம், பிரம்மனின் பேரன் மரணம் தான் கலங்கி போக காரணமாய் அமைந்தது என்கிறார். இமய மலையை தூக்கியவன், சிவனை புகழ்ந்து சாம கானம் தீட்டியவன் ராவணன்.. ராமன் முழுக்க முழுக்க நல்லவன் அல்ல.. ராவணன் முழுக்க முழுக்க தீயவன் அல்ல என்பது சிவக்குமார் கருத்து..

பாரதியும், கண்ணதாசனும் இலக்கியத்தில் தன்னை அதிகம் ஈர்த்தவர்கள் என்கிறார்.

இன்னொரு பிறவி உங்களுக்கு கிடைத்தால் ?
எனக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை. " பிறவாமை வேண்டும்.. மீண்டும் பிறப்புண்டேல் என்றும் உன்னை மறவாமை வேண்டும்" அப்படி பிறப்பு கிடைத்தால்.. தமிழ் மண்ணில், இன்னொரு முறை கலை உலகில் பயணித்திட வேண்டும், ஓவியனாய் மாற வேண்டும் என்கிறார். முத்தாய்ப்பாக.. என் தாய்க்கே மீண்டும் மகனாக வேண்டும் என்கிறார். பிரவாகமாய் வந்த பேச்சு தன் தாயின் நினைவால் தழுதழுத்த குரலை அடைகிறார்.

தான் எஸ் எஸ் வாசனை முன் மாதிரியாய் கொண்டு இருந்தேன் என்கிறார். வாசன் அற்புதமான திறமை கொண்ட மனிதர். தனக்கு இருக்கும் நோயை இறுதி வரை கூட தன் மகனுக்கு சொல்லாதவர். தனது மறைவும் கூட எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி முடிய வேண்டும் என விரும்பினார் என்கிறார்.

சிவக்குமார் அவர்களின் சொல் ஆழம், கருத்துக்களில் தெளிவு அவரது வாழ்வை படிகமாய் பிரதிபலிக்கிறது.. மறைந்த பின்பும் மக்கள் ஒரு மனிதனை நினைவு கொள்கிறார்கள் என்றால் அவன் வாழ்வு அர்த்தம் நிறைந்தது என்கிறார்.

[ சிவக்குமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் : உங்களின் எனண்ணங்கள் எங்களை செழுமைக்கு எடுத்து செல்கின்றன. உங்கள் எண்ணங்கள் எங்களை நிறைய தழுவ வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒரு சக பயணியாய், உங்கள் கைகளை பற்றிய படி பயணிப்பது போல் இருந்தது உங்கள் நேர்முகம்.. உங்களுக்கு, நன்றியும் எங்களின் ,உளமார்ந்த வணக்கமும்.. ]
.
.
.

2 comments:

Anonymous said...

கந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com

Unknown said...

Your writing skill is very good anna

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்