Sunday, May 31, 2009
வாழ்வின் வளமைக்கு அடிப்படைகள்
வாழ்வை வளமாக்க, பொருள் பொதிந்ததாய் அமைந்திட, லட்சியம் நோக்கிய பயணத்தில், தவறாது பயணித்திட சில அடிப்படை விதிகள்... இவை வெற்றியின் உன்னத கூறுபாடுகளாய் போற்றப்படுபவை.
1. பார்வையை மாற்றுங்கள்:
உங்கள் பார்வை கோணத்தை மாற்றுங்கள். நேர்மறை சிந்தனை உங்களை ஆட்கொள்ளட்டும். நல்ல நட்பு, மகிழ்வான, அமைதியான நாட்களையே எதிர்பார்த்திருங்கள். ஏனெனில் நீங்கள் கேட்டதே கிடைக்கும்.
2. உடனுக்குடனே செய்து முடித்தல்:
வாழ்வு ஒன்றும் ஒத்திகை அரங்கல்ல. எடுத்த எந்த செயலையும் உடனுக்குடன் செய்து முடித்தல் வெற்றிக்கு அடிப்படை.
3. என்றென்றும் நன்றி உடையவர்களாய் இருங்கள்:
நமக்கான ஆசீர்வாதங்களை கணக்கு வைத்திடுங்கள். துன்பத்தை கணக்கு பார்க்காதீர்கள். என்றென்றும் இறைவனுக்கு, சக மனிதருக்கு நன்றி உடையவர்களாய் இருங்கள்.
4. கற்றல் என்றென்றும் தொடரட்டும்:
உங்களை உயர்த்திக்கொள்ள தொடர்ந்து முயலுங்கள். கற்றல் என்றென்றும் உங்களுடன் இருக்கட்டும். சக மனிதரை பற்றி அவதூறு பேசுவதை முற்றிலும் தவிர்த்திடுங்கள். [ எழுத்தாளர் சுஜாதா தன் வெற்றிக்கான ரகசியமாக பகிர்ந்து கொண்டது... நான் இன்னமும் தொடர்ந்து படிக்கிறேன். எனவே என்னால் என்றும் இளமையாய் எழுத முடிகிறது. ]
5. உங்களைப்பற்றிய மதிப்பீடு என்றென்றும் உயர்வாக இருக்கட்டும்:
உங்களை பற்றி நீங்கள் உயர்வாகவே எண்ணுங்கள். ஒருபோதும் உங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள். பிதாகரசின் அற்புதமான வரிகள் ... "உங்களையே நீங்கள் மதியுங்கள். அதையே மற்ற எல்லாவற்றிற்கும் மேலானதாய் கருதுங்கள் " என்பதே. சுய மதிப்பீட்டை வளர்த்துக்கொள்ள எளிய வழி ... "உங்களுக்கு அன்பாகவோ, பொருளாகவோ திருப்பி செலுத்த முடியாத மனிதனுக்கு நீங்கள் உதவ வேண்டும்." பிரதி பலன் பாராது செய்திடும் உதவி உங்கள் சுய மதிபீட்டை விண்ணுயரம் கொண்டு செல்லும்.
6. எதிர்மறை எண்ணத்திலிருந்து விலகி இருங்கள்:
ஒரு மனிதனின் கட்டுகோப்பான வளர்ச்சி, நல்ல எண்ணங்கள் நல்ல நட்பால் மட்டும் வளர்வதில்லை. அவன் தவிர்க்கும் எதிர்மறை சக்திகளிடமிருந்தும் வருகிறது.
7. செயல்களை, பணிகளை மகிழ்வுடன் ஏற்று கொள்ளுதல்:
எது தேவையோ, எது முடியுமோ அதை முடித்திட முன்வர வேண்டும். மேலும் செய்கிற பணிகள் மன நிறைவோடு செய்திட பழக வேண்டும்.
8. ஒவ்வொரு நாளையும் நேர்மறை சிந்தையோடும் தெளிவோடும் அணுகுங்கள் :
வெற்றியாளருக்கு ஒவ்வொரு நாளும் முக்கியம். துவங்கும் அந்த நாள் நிறைய தெளிவோடும் நேர்மறை சிந்தையோடும் இருக்கட்டும். உங்கள் வாழ்வை மாற்ற எண்ணினால் உடனடியாக செயல் புரிதலை வளர்க்க வேண்டும்.
1) எப்பொழுதும் சிதறும் புன்னகை
2)என்றென்றும் கூடவரும் அளவு கடந்த அன்பு
3) அறிவில் சிறந்த மனிதர்களிடம் நாம் பெரும் மதிப்பு .
4)சரியான விமர்சனங்களை அவை கசப்பாக இருப்பினும் - உண்மை என்றால் ஏற்று கொள்ளுதல்
5)அடுத்தவர்களிடம் உள்ள அருங்குனங்களை மதித்தலும், ஊக்குவித்தலும்
6) எப்பொழுதும் உற்சாகம் பொங்கி வழியட்டும்..
நம் வாழ்வே ஒரு எதிரொலி போன்றது தான். நாம் எதை கொடுக்கிறோமோ அதையே நாம் திரும்ப பெறுகிறோம்.
[இந்த கருத்துகள் என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தவை. அரிதாயும், நேர்த்தியாகவும் உள்ள தொகுப்பு. ]
.
.
Labels:
வாழ்வியல்
படித்ததில் பிடித்தது
ஒரு சில சிந்தைகள் எண்ணம் முழுதும் ஆட்கொள்ளும். சில இதயம் தொட்டு என்றென்றும் ஞாபகத்தில் உறவாடும். அவற்றில் சில ...
- வாழ்வு ஒரு பந்தயம் அல்ல. அது ஒரு தொடர் பயணம்.
- மற்ற எவரையும் விட முதலாவதாய் வருவதில் பெரிதாய் பெருமை கொள்ள எதுவுமில்லை. தன்னோடு வரும் மற்றவரையும் போட்டியாளராய் கருதாமல், ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி வழிநடத்தி சென்றால் அதை விட மனதிற்கு மகிழ்ச்சி தருவது உலகில் எதுவுமில்லை.
- நம்மோடு தொடரும் பதற்றத்தில், அரிதான தருணங்களை தவற விடுகிறோம். அடுத்து என்ன என்று தேடி ஓடுவதை காட்டிலும், இந்த கணத்தை முழுதும் உணர்ந்து உன்னதத்தை அனுபவியுங்கள்.
- எனக்கு இதுவேண்டும், அது வேண்டும் என்ற தேவைகளின் பட்டியலை நிறுத்தினால் போதும். நம்மிடம் குவிந்து கிடக்கும் ரத்தினங்கள் கண்ணுக்கு புலப்படும். நம் ஒவ்வொருவரும் ஆண்டவனால் அதிகமாகவே ஆசீர்வதிக்கப்பட்டு உள்ளது புலப்படும்.
- வாழ்வு வேகமாக நகரும் தருணங்களில் வேகம் மகிழ்வு தருவதாய் இருக்கும். ஆனால் வேகம் மட்டுமே நம் ஒட்டுமொத்த அனுபவமாய் மிஞ்சிட கூடாது. அதற்க்கு மேலும் சந்தோசப்பட வாழ்வில் நிறைய உள்ளது.
- வாழ்வு முழுதும் அற்புதமானதும், ஆச்சர்யம் தரக்கூடியதுமான நிமிடங்களை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. நிதானத்துடன் நகர்ந்தால் மட்டுமே, அதன் அருமையை பருக முடியும்.
- ஒரு தனித்துவமான மனிதனை சந்திக்க ஒரு நிமிடம் தேவைப்படுகிறது. ஒருவரை பாராட்டிட, ஊக்குவித்திட ஒரு மணிநேரம் நமக்கு தேவைப்படுகிறது. அவர்களிடம் அன்பு செய்திட ஒரு நாள் பிடிக்கிறது. ஆனால் அந்த மனிதனின் நினைவுகள் வாழ்வு முழுவதும் நம்முடன் சக பயணியாய் பயணிக்கிறது.
ஒரு சில மனிதர்களை பார்த்த பார்வையில் நம்முள் பெரிதாய் எந்தவொரு மாற்றத்தையும் உருவாக்குவதில்லை. ஆனால் நீண்ட நெடிய வாழ்வியல் பயணத்தில், நம்மில் நெருங்கிய நட்பாக இறுகி இருப்பார். பார்வை கோணங்கள் பல நேரம் தவறாகவும் முடிகின்றன.
[இந்த பகுதி என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது. வார்த்தைகளின் வசீகரம் கருதி இந்த பகிர்தல் சாத்தியப்பட்டு உள்ளது. ]
.
.
Labels:
படித்ததில் பிடித்தது
கணினி முன் தான் உங்கள் வாழ்வா? - இதோ உங்களுக்காக
எல்லா பொழுதும் கணினி முன் செலவளிப்பவரா நீங்கள்? விசைப்பலகையில் முன் நெற்றி பட்டு ரத்த காயம் உருவாகும் வரை மோதி முடிப்பவரா நீங்கள்? ஏன் நிறுத்தி விட்டாய் நீலவேணி? வீடு இடியும் வரை ஆடு என்பது போல் கணினியை தட்டி தீப்பொறியை கிளப்புபவரா நீங்கள்? வாரான், வாரான் பூச்சாண்டி! இரயிலு வண்டியிலே! வாரணாசி கோட்ட தாண்டி ரயிலு வண்டியிலே! இரயிலு வண்டியிலே! மெயிலு வண்டியிலே! .... இந்த பாட்டு உங்களுக்காக இட்டு கட்டி பாடப்பட்டதாய் உங்கள் அறை நண்பன் சொல்கிறானா? ( நடு இராத்திரியில் அடைமழை நாளில் கதவை தட்டி எழுப்பிய காண்டு அவனுக்கு என்றும் உண்டு) அட உங்களை அல்லவா இத்தனை நாள் தேடிக்கொண்டு இருந்தேன்... நீங்கள் தான் இப்பொழுது வேண்டும்..
சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும் - நான் போட்டோ ஷாப் முதல் வெறும் தரை வரை எங்கும் வரைவேன் எனும் பதில் காதில் விழுகிறது... இருந்தாலும்.. நாம் செய்திடும் வேலை மிக பல சமயம் கண்ணை விற்று ஓவியம் வாங்கும் முயற்சி தான். அத்தனை உணர்ச்சிகளையும் வெளியிடும் கண்ணையும் ஒரு பார்வை பார்ப்போமே..
திரையை தொடர்ந்து முக்கண்ணனாய் முறைப்பதால் உங்கள் பார்வையில் ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? உங்கள் கண் நல்ல நிலையில் உள்ளதா? கணினி சார்ந்த பார்வை கோளாறுகள் உங்களுக்கும் உள்ளதா? எப்படி தெரிந்து கொள்வது? இரண்டு மணி நேர தொடர் உழைப்புக்கு பின் பின்வருவனவற்றில் ஏதாவது இருந்தால் சற்றே நீங்கள் கவனிக்க வேண்டும்...
- சோர்வான/எரிச்சலான/ சிவப்பேறிய கண்கள்
- கண்களில் வறட்சி (Dry Eyes)
- தலைவலி, கவனம் குவியாமை
- இரட்டை பார்வைகள் ( jeans aishwaryaarai)
- மங்கிய பார்வை ( Blurred Vision)
- கண் கூசுதல்.
- கழுத்து, தோள்பட்டை, முதுகு வலிகள்
- காண்டக்ட் லென்ஸ் தரும் அசௌகர்யம்
பிரச்சினைகளின் துவக்க புள்ளி:
திரையில் தெரியும் எழுத்துக்கள் மைய பகுதி அதிக அழுத்தத்துடனும், அதன் முனை பகுதிகள் சற்றே மங்கியும் அமையும். அதுவே அச்சடிக்கப்பட்ட புத்தகம் போன்றவற்றில் எழுத்தின் முனைகளும் சரியாக அமைந்திருக்கும்,. இங்கு படிப்பதில் சிரமம் இல்லை. ஆனால் திரையில் சிக்கல் உருவாகிறது.
கணினியில் படிக்கிறேன், பார்கிறேன் பேர்வழி என அஷ்ட கோணலாய், திருவிக்கிரம வடிவமாய், நாராயணனின் அத்தனை தோற்றத்தையும் காட்டி அமர்நதிருந்தால் , நிச்சயம், கழுத்து முதுகுவலி வந்தே தீரும்.
பார்வை பிரச்சனைக்கு அதி முக்கிய காரணிகள்:
1) நீங்கள் சரிவர கண்களை இமைப்பதில்லை.
2) கண்களை அளவுக்கு மீறி அகல விரித்து திரையை உற்று நோக்குவது
3) உங்கள் அலுவலக வெளிச்சமும், கணினி திரையும் சாதகமாய் இல்லாமை.
எப்படி சரி செய்வது:
1) கண்களில் இமைத்தலில் பிரச்சனை:
அடிக்கொருமுறை இமைப்பதை நடைமுறையில் கொணருங்கள். தொடர் உழைப்பில் சிறிய இடைவெளி அவசியம். திரையில் இருந்து கண்களை சற்றே எடுத்து வெவ்வேறு தூரத்தில் இருக்கும் பொருட்களை கவனியுங்கள்(சுவர், சுவர் கடிகாரம், ஜன்னலுக்கு வெளியே பாரதிராஜா கைகள் வழியே காட்டுவது போல், அடிவானத்து குருவிகள், மைனாக்கள், வெளியே கிளை தாவும் அணில்)
பிரகாசமான ஒளியால் வரும் பிரச்சனை:
வெளியில் இருந்தும், அரை விளக்கில் இருந்தும் வெளிவரும் வெளிச்சம், அதிதமாக கணினி திரையில் பட்டு ஒளிர்தல்.
- கணினியை கண் கூசாதபடி சரியான இடத்தில் வைத்தல்.
- கணினி திரையை உங்கள் கண் பார்வையில் இருந்து கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளுதல்.
- ஜன்னல் திரையை சரிவர உபயோகித்தல்( கண்களுக்கும், திரைக்கும் பொருந்துகிற நிலையில்).
- தலைக்கு மேலே உள்ள விளக்கு அதிக வெளிச்சம் தருகிறதா? சற்றே வெளிச்சம் குறைவான விளக்குக்கு மாறுங்கள்
- கணினி திரைக்கு முன் ஒரு கண்ணாடி திரை உங்களுக்கு சரியான வெளிச்சத்தை பெற்று தரும் (attach a glare filter)
- விசைப்பலகை மற்றும் சுட்டி இவை முழங்கை உயரத்திற்கும் தாழ்வாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.
- உங்கள் இருக்கைகள் சரியான கை - தாங்கிகள்(Arm Rests) இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- கணினி திரை உங்களை விட்டு சற்றே விலகியும், உங்கள் கண் பார்வைக்கு கீழும் இருக்கட்டும்( ஒரு புத்தகம் வாசிப்பது போன்ற நிலை).
- இருபது நிமிடத்திற்கு ஒருமுறை நிறுத்தி இருபது முறை இமைக்கவும்.
- பார்வையை நகர்த்தி 20- அடிக்கு வெளியே உள்ள பொருளை 20-நொடிகள் பார்க்கவும்.
- உங்களுக்கு (20/20) (6/6) பார்வை உள்ளதா என சரிபார்த்து தேவைப்படின் மூக்கு கண்ணாடி அணியவும்.
--- நன்றி COmputer Vision Syndrome , சங்கரா கண் மருத்துவமனை
.
.
Labels:
கண்கள் மொழி
Sunday, May 10, 2009
அன்னையர் தினம் - ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு பூங்கொத்து
இன்றைய தினம் - அன்னையர் தினம். என்றென்றும், சுய நலத்தின் சுவடின்றி தம் குழந்தைகளுக்காக பிரார்த்திக்கும் அன்பு இதயங்களுக்கு நன்றி. என்றென்றும் நம்பிக்கையும், நல்லறிவும் புகட்டி தனது குழந்தைகளை நல்ல மனிதர்களாய் வார்த்தெடுக்கும் அந்த கரங்களுக்கு வணக்கங்கள். உணவையும், அன்பும் ஒன்றே போல் குலைத்து கொடுக்கும் இதயங்கள். ஒரு குழந்தை சமூகத்தில் நல்லவண்ணம் வளர்ந்திருந்தால், அந்த நன்றி பெருக்கின் முதல் துளி அன்னையை சேரும். தைரியம் தருவதாய் இருக்கட்டும், புத்தி புகட்டுவதாய் இருக்கட்டும் அவர்கள் வழியே தான் நம்மை ஆட்கொள்கின்றன பல பண்பு நலன்கள். தாய் மொழியை நாவில் துளிர்க்க விட்டு, தந்தையை, உறவுகளை, இறையை அறிமுகம் செய்வித்து, நம்முள் என்றென்றும் உறைகிறார்கள்.
தாயே! முன்பு உடல் தந்து, உயிர் பேணி, உருவம் தந்து உலகில் உலவ விட்டாய். தாயே! குழந்தை பொருட்டு ஏற்ற நோன்புகள் எத்தனை. மழலையில் உளம் மகிழ்ந்து தளிர் விரல் பற்றி நடை பயின்ற நாட்கள் என்றென்றும் உனது நினைவில் ஒரு பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறாய் என்பதை அறிவோம் .
நான் எனது நல் அறிவுக்கும், நன்நடத்தைக்கும் என் தாய்க்கு ஆயிரமாயிரம் முறை கடன்பட்டு இருக்கிறேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
ஒரு குட்டி கதை...
ஒரு மனிதன் இருநூறு மைல் தொலைவில் இருக்கும் தனது தாய்க்கு, மலர் கொத்து அனுப்பும் எண்ணத்தில், ஒரு மலர்களை விற்கும் கடைக்கு வருகிறான். அவன் வந்த தருணத்தில், கடை வாசலில் ஒரு சிறுமி சோக மயமாய் அமர்ந்து இருக்கிறார்.
சிறுமியின் வாட்டத்தை அறிந்த அந்த மனிதன் அந்த சிறுமியிடம் சென்று காரணம் கேட்கிறான். அதற்கு அந்த சிறுமி, எனக்கு ஒரு சிவப்பு ரோஜா வேண்டும் என்கிறாள். புன்னகை பூத்த அந்த மனிதன், இவ்வளவு தானே! வா! நான் வாங்கி தருகிறேன் என்கிறார்.
சொன்ன படியே அந்த மனிதன் சிறுமிக்கு ஒரு ரோஜாவை வாங்கி தருகிறான். அதன் பின்பு அவன் தனது தாய்க்கு பூக்களை வாங்குகிறான். அதை சரியான முகவரி தந்து அனுப்பி வைக்குமாறு சொல்கிறார். அதன் பின்னர் அந்த சிறுமியை தன்னுடன் காரில் வர அழைக்கிறார். அதற்கு அந்த சிறுமியும், நீங்கள் என் தாய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்கிறாள்.
அந்த மனிதருக்கு வழி காட்டியபடியே காரில் பயணித்து வந்த சிறுமி, புதிதாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு சமாதியில் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு ரோஜாவை வைத்து வணங்கி திரும்பினாள்.
இந்த நிகழ்வை கவனித்த மனிதன், திரும்பவும் தான் புறப்பட்ட மலர் கடைக்கு வருகிறான். முன்பு தன் தாய்க்கு அனுப்ப சொன்னதை திரும்ப பெற்று கொண்ட அவன், தானே, ஒரு மலர்கொத்தை கையில் எடுத்து கொண்டு தன் தாய் இருக்கும் கிராமம் நோக்கி புறப்பட்டான்.
"தாயே!
உன்பொருட்டு தர
உலகில் மதிப்பானது எதுவுமில்லை!
உனது அன்பை உலக பொருட்கள்
எதை கொண்டும் ஈடாக்க வழியில்லை!
உன் கையால் இன்னுமொரு கவளம்!
அதுவே என்னால் முடிந்த கைம்மாறு!"
ஆண்டு தோறும் மனமுருக தாயை தொழுது பாடும், முருக பக்தர், முருகதாஸ் அவர்களின் பாடல் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது.
"அம்மா என்று அழைப்போமே!
அவளை அம்மா, அம்மா என்று அழைப்போமே!
வானில் உலவும் நிலவை காட்டி
வாயில் ஊட்டினாளே! மாயை எனும் உலகை காட்டி
உலகில் விரட்டினாளே!
பட்டு புரிந்து கெட்டு தெரிந்து முடிவில் அறிந்தோமே!
அவளை அம்மா, என்று அழைப்போமே! "
.
.
.
Labels:
அன்னையர் தினம்
Sunday, May 3, 2009
அடப்பாவமே! இப்படியுமா!
ஒரு சிறிய கதை - என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது. அதன் பகிர்வு இங்கே ...
அது ஒரு மாலை நேரம். இது ஒரு பொன் மாலை பொழுது - நிழல்கள் பட பாடல் போல் தான். ஏன், "ஒரு மாலை இளவெயில் நேரமாக " சூர்யா பாடி வைத்தது போல் கூட இருக்கலாம்.
கணவன், தன் வீடு திரும்பும் வழியில் , மனைவியையும் அழைத்து செல்லும் முனைப்பில், மனைவியின் அலுவலகம் வருகிறான். அந்த நேரம், மனைவி வந்த பாடில்லை. எனவே காரை ஓரமாக நிறுத்தியபடி காத்து இருக்கிறான். பொழுது போகாததால், சற்றே, தன் காரை துடைத்தபடி உள்ளான். அந்த தருணத்தில், ஒரு பிச்சைக்காரன், அருகே இருந்த, திண்ணையில் அமர்கிறான். அந்த தருணத்தில், அந்த மனிதனின் நிலையை பார்க்க பரிதாபமாய் உள்ளது. அங்கங்கே கிழிந்து தொங்கும் உடைகள்! அழுக்கேறிய தோற்றம்!
அந்த பிச்சைக்காரன், சற்றே தயக்கத்துடன், காரில் வந்த மனிதனிடம், பிச்சை கேட்கிறான். சற்றே யோசித்த கார் மனிதன், தன் சட்டை பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை அளித்து புகைக்க சொல்கிறான். அதை வாங்க மறுத்த பிச்சை காரன், ஐயா புகை பிடிப்பதால், புற்று நோய் வரும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்றான்.
சரி அதை விடு என கூறியவன், தன் காரில் இருந்து மது புட்டியை எடுத்து, இந்தா! இதை வைத்து கொள். இன்றைய பொழுதை இன்பமாக கழி! என்றார். அதற்கு பிச்சைக்காரன், அய்யா, நான், மது அருந்துவதில்லை. நீங்கள் அறியாததா! மது அருந்தினால், குடல், கல்லீரல் இவை பாதிக்கும். முடிவில், உடல் சீர்குலைந்து விடும் என்றான்.
அவனது பதிலில் திருப்தி அடைந்த கார் மனிதன், சரி, என்னிடம், பணம் உள்ளது. இருவரும் பந்தய சாலையை அடைவோம். என்னிடம் உள்ள எல்லா பணத்தையும் வைத்து, குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவோம் என்றான். அதற்கு பிச்சை காரன், அய்யா, சூதாடுவது குற்றம். அதை, என்னை செய்ய சொல்கிறீர்களே! என்றான்.
அந்த நிலையில், பிச்சைகாரனின் நிலை - இவன் ஏதாவது தர்மம் செய்வானா என்பதே! அந்த நிலையில், கார் மனிதன், நீ எங்களுடன் வரவேண்டும் என்கிறான். பிச்சைக்காரன், குழம்பியவனாய் பார்க்க, என் மனைவி, எப்பொழுதும், புகைப்பது, மது அருந்துவது, சூதாட்டம் பழக்கம் இல்லாத மனிதனை பார்க்க வேண்டும் என்று உள்ளாள். என்னையும் அப்படி இருக்க வேண்டும் என சொல்லி வந்தாள். அப்படி நான் இருந்தால், எப்படி இருப்பேன் என்பதை காட்ட தான் உன்னை என்னோடு அழைத்து செல்கிறேன் என்றான்.
.
.
.
Labels:
நகைச்சுவை
ஆனந்த விகடனில் புதிய பகுதி - என்னைச் செதுக்கிய 7 நாட்கள்
விகடனில் புதிய பகுதியாக, ஒரு தன்னம்பிக்கை தொடராக, என்னைச் செதுக்கிய ஏழு நாட்கள் தொடர் துவங்கி உள்ளது. சமூக பரப்பினில், அரிதாக இனம் காணப்பட்ட, பட்டை வைரங்களாய் சுடர் விடுபவர்கள், தம்மை அதிகம் பாதித்த, அதீத முக்கியத்துவம் வாய்ந்த ஏழு தருணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். மொத்தத்தில், அவர்களின் வாழ்கை நதியில் பயணப்படும் அனுபவம். இந்த வாரம் வரை, இந்த பகுதியில், ஏ. ஆர். முருகதாஸ், மயில்சாமி அண்ணாதுரை, எஸ். ராமகிருஷ்ணன், தமிழருவி மணியன் போன்றோர் தம் எண்ணத்தை வெளியிட்டனர். அவற்றில் என்னை தொட்டவை..
ஏ. ஆர். முருகதாஸ் ( A. R. Murugadoss)
அது, பெற்றோர் தம் குழந்தைகளை படம் பார்க்க கூட அனுப்பாத தருணம். அந்த தருணத்தில், எனது தந்தை, உனக்கு இதுதான் சரிவரும் என்றால், அதையே எடுத்துக்கொள் என்றார். ஒரு தருணத்தில், திடீர் என என் தந்தை மறைந்து விட்டார். மயானத்தில் இருந்து திரும்புகையில், ஒருவர், என் தந்தையை குறிப்பிட்டு, ஒரு சுகத்தையும் அவர் காணவில்லை. மகன்களை தறுதலையாய் வளர்த்து விட்டு, இறந்தது விட்டார் என்றார். அந்த வார்த்தைகள், என்றும் என்னுள் உந்தி தள்ளுகின்றன. அது எதிர்மறை வார்த்தைகள் என்றாலும், அவை என்னை பொறுத்தவரை ஊக்க சக்திகள் என்கிறார் முருகதாஸ் .
மயில்சாமி அண்ணாதுரை (Mayilsamy-Annadurai):
1) அது சந்திராயன் திட்டத்திற்கான, செயல் திட்ட இயக்குனரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு. இஸ்ரோ தலைவர், மாதவன் நாயர், ஒவ்வொருவராக நேர்முகம் செய்கிறார். அது அண்ணாதுரையின் முறை. அப்பொழுது, சந்திராயன் திட்டத்திற்கு, அண்ணாதுரை, தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். மாதவன் நாயர், அந்த முறை, ஒரு கேள்வியை முன்வைக்கிறார். உங்களை சந்திராயன் திட்டத்திற்கு அனுப்பினால், தற்போது நீங்கள் கவனித்து வரும், இன்சாட் தொடர்பான பணிகள் முடக்கி போகாதா என்பது அவரின் கேள்வி. அதற்கு பதிலளித்த அண்ணாதுரை, 'நான், எங்கள் குழுவில், நிறைய தலைவர்களை உருவாக்கி உள்ளேன். அவர்கள் எனது இடத்தை அருமையாக நிரப்புவர்' என்றார். ஒருவர், நம் குழுவில், அதித வளர்ச்சி அடைந்தால், சிறப்பாக முன்னேறினால், அவர் நமக்கு போட்டியாளராக, உருவெடுத்து விடுவான் என எண்ணுவது அர்த்தமற்றது என்கிறார். எல்லா தருணத்திலும் நம் அடுத்த நிலையில் இருப்பவரை முக்கியமானவராக வார்த்தெடுக்க வேண்டும் என்கிறார். இன்னொருவரை போட்டியாளராக எண்ணினால், அனைத்து கதவுகளும் அடைபட்டு போகும் என்பது அவர் நம்பிக்கை.
2) இது மற்றொருநாள். இடம், சென்னை விமான நிலையம். அந்த தருணத்தில், சில விமானங்கள், ஓடுதளம் இடம் கிடைக்காமல், வானில் பொறுமையுடன் வட்டமிட்டபடி இருந்தன. தனக்கான இடம் காலியாகும் வரை அவை காத்திருக்கும். அதன் பின் அவை இறங்கின. இதே விதியை சந்திராயனில், பயன் படுத்த திட்டமிடப்பட்டது. முதலில் சந்திராயன் செயற்கை கொள் காலநிலை நமக்கு அனுகூலமாக இருக்கும், தருணத்தில் ஏவப்பட்டது. நிலவு பூமியை நெருங்கும் தருணத்தில், நிலவில் வெற்றிகரமாக காலடி பதித்தது. இப்படி வாழ்கை, நமக்கான பாடத்தை எங்கெங்கோ ஒளித்து வைத்துள்ளது. இப்படியான நாட்கள் அவர்க்கு முக்கியத்துவம் பெறுகின்றன.
எஸ். ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan):
1) தன் நண்பர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா மறைந்த புதனை, அதிகம் பாதித்த நிகழ்வாக சொல்கிறார். கொடிதினும் கொடிது நண்பனின் மரணம்.
2) அடுத்த நிகழ்வு, தன் முதல் கதை, 'பழைய தண்டவாளங்கள்', வெளியான நாள். மதுரையில் இருந்து விருது நகர் செல்லும் பேருந்தில் இருந்து தன் அடுத்த பயணி வைத்திருந்த புத்தகம் மூலம், தன் கதை வெளியாகி இருப்பதை அறிகிறார். அதன் பின், பின்னிரவில், அலைந்து திரிந்து தூங்கி கொண்டிருந்த தன் நண்பரை எழுப்பி தன் கதையை படிக்க கொடுக்கிறார். படித்த நண்பர், அருகில் இருந்த கடையில், தேநீர் வாங்கி தந்துள்ளார். ஒரு கோப்பை தேநீர், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பன், இவை இன்று வரையான தன் எழுத்தை இயக்குகின்றன என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.
தமிழருவி மணியன் (Tamilaruvi Manian):
1)பத்தாவது படிக்கும் பொழுது, ராமையா வாத்தியாரிடம் கணக்கு பாடம் பயில அனுப்பினார்கள். அப்போது ஒரு நாள், எனது தாயார், கடைக்கு சென்று ஒரு சில பொருள்கள் வாங்கிவர சொன்னார்கள். நான், மறுத்து, போக்கு காட்டிக்கொண்டு இருந்தேன். என்னை அழைத்த ராமையா வாத்தியார் , 'மணியா! நன்றி உணர்ச்சியின் முதல் துளி எப்போதுமே நம் பெற்றவர்க்கு உரித்தானது. நன்றி படர்ந்து இருக்கும் இதயம் தானே இறைவனின் இருப்பிடம். சொத்து, சுகம், ஆஸ்தி, அந்தஸ்து என ஒருவன் வாழ்ந்திருந்தாலும், பெற்றோரை பேணி காத்து இருந்தால் மட்டுமே அவனது மறைவிற்கு பிறகும் வாழ்ந்திருப்பான். அப்படி பட்டவர்கள் ஆண்டாண்டு காலம், நிலைத்து நின்று உச்சகட்ட மதிப்பு பெரும் தேக்கு மரத்திற்கு ஒப்பாவர். பெற்றவர்களை உதாசீனப்படுத்துபவர்கள், எளிதில் வெட்டி வீழ்த்தி விடக்கூடிய முருங்கை மரத்துக்கு ஒப்பானவர்கள்.
நீ தேக்கா, முருங்கயா? என்று கேட்டார். இன்று வரை தேக்கு மரமாக நிலை கொள்ளும் வகையில் தான், எனது நடவடிக்கைகளை அமைத்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு பொழுது புலர்கையில், என் பெற்றோரை மானசீகமாக என் மனதில் நிறுத்தி வழிபடுகிறேன்.
2) நான் அப்போது , ஆறாம் வகுப்பு மாணவன். அப்போது கல்கி இதழில் வெளிவந்த நா. பார்த்தசாரதியின், 'குறிஞ்சி மலர்' தொடர் கதையை என் தந்தை ஆழ்ந்து வாசிப்பார். அப்படி என்னதான் அவர்களை ஈர்த்து இழுக்கிறது என்று நானும் அந்த தொடர் கதையை வாசிக்க தொடங்கினேன். மயிலிரகாகவும், வாள் முனையாகவும் வார்த்தைகளை நா.பா. பிரயோகித்த விதம் பேராச்சர்யம்!
பனித்துளியை விட பரிசுத்தமாக கதையின் நாயகன் அரவிந்தன் தன் வாழ்கையை அமைத்துக்கொண்டு இருப்பான். 'தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்பார்கள். ஆனால், சின்ன விதிவிலக்காக தீதும் நன்றும் தரவல்லது ஒரு புத்தகம். இன்று நான் செழும் செல்வத்தையும், அதிகார அரியணையையும் கைக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல மனிதனாக, எனது ஆயுளை இந்நாள் வரை கழிப்பதற்கு அந்த அரவிந்தனுக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
[குறிப்பு: நிஜம் தான். உங்களை போலவே நாங்களும், செதுக்கப்பட்டுள்ளோம். நா. பா. என்கிற மணிவண்ணன் அவர்களின் பாத்திரங்கள் எவ்வளவு தனித்துவம் மிக்கவை. ஒரு அரவிந்தன், பூரணி, சத்திய மூர்த்தி, மோகினி, பாரதி' - காலத்தை வென்றெடுத்த கதா மாந்தர்கள். என்றென்றும் பொருந்தும் உதாரண மனிதர்கள். அன்றாட வாழ்வில், அரவிந்தன், பூரணி என பெயர்களை அறியும் பொழுது மனம் தானாகவே, தீபம் நா. பார்த்தசாரதியை(N.Paarthasaarathy) ஞாபகத்திற்கு கொணர்கிறது. ]
[இவற்றில் பெரும்பாலானவை, என் சொந்த வார்த்தைகளின் வழியே, அவர்களின் உணர்வை பிரதிபலித்திட முயன்று உள்ளேன். ]

வாசிப்பு உலகம்
Subscribe to:
Posts (Atom)