Sunday, April 19, 2009

மகாத்மாவோடு நெடிய பயணம்


சில நாட்களுக்கு முன் ஒரு சிறு விவாதம்; நண்பன், காந்தி முழுக்க முழுக்க ஒரு சுயநல வாதியாகவே வாழ்ந்து உள்ளார். தேச பிதாவாக இருக்க அப்படி ஒன்றும் அவர் நாட்டிற்க்கு செய்திடஇல்லை. காந்தி ஒன்றும் அப்படி கொண்டாட வேண்டிய மனிதரில்லை என்பதே அவனது விவாதம்.

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பொழுதும், பின்னரும் அவர் சொத்து குவித்தார். எப்பொழுதேனும், அவர் தன் வாழ்விற்கு உழைக்கவில்லை. ஆனால் வாழ்வு முழுதும் அவர் பட்டினி கிடக்கவில்லை - என்பதாய் விவாதம் நீண்டது. காந்தியின் மறைவிற்கு பின்னான அறுபது வருடம் கழித்து, இளைய தலை முறை எப்படி காந்தியை நினைவு கூர்கிறது; அது ஒரு காலம். காந்தியின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு விரல் அசைவும், எத்தனையோ இளைய உள்ளங்களை இயக்கின; இன்று நினைத்தாலும் மலைப்பாகவே உள்ளது; அத்தனை பெரிய தேசம் ஒரு மனிதனின் கட்டளைக்கு காத்து இருந்த தருணம். இறைக்கு இணையாக போற்றிய தருணம். அப்படியான காந்தியின் சுவடுகளை பின்னோக்கி பார்த்த பொழுது.. நிறையவே நண்பனின் கேள்விக்கு விடை கிடைத்தது. மகாத்மாவின் சுய ரூபத்தை தரிசித்த திருப்தி. பல தருணங்களில் நல்ல முத்துக்கள் சிதறியபடி உள்ளன. ஒரு சில தருணத்தில் மட்டும் நாம், சிதறிய முத்துக்களில் சிலவற்றை எடுக்கிறோம்.. "http://www.mkgandhi.org/" இணைய தளம், புதிய கருத்துக்களை சொல்லி சென்றது. அவற்றை பகிர்ந்து கொள்ளும் நிமிடங்கள் இவை..

இருண்ட கல்கத்தா நகரமும், ஒளிர்ந்த டெல்லியும்:
அது "1947" ஆம் ஆண்டு. இந்து முஸ்லீம் கலவரத்தால் சமூகம் சீர்குலைந்து இருந்தது. இருண்டு கிடந்த கல்கத்தா நகரத்திற்கு, கலவரத்தால், சிதைந்திருந்த கல்கத்தாவிற்கு காந்தி அமைதியை மீட்டு கொண்டிருந்த தருணம். இன்னொரு புறம், ஒளிரும் டெல்லி நகரம்; ஆகஸ்ட் பதினான்கு, "1947" டெல்லி விழா கோலம் பூண்ட தருணம்.. பண்டித ஜவகார்லால் நேருவின் வரிகள்.. "உலகம் விழித்திடும் நேரத்தில், இந்தியா புதிய எழுச்சியோடு சுதந்திர காற்றை சுவாசம் செய்கிறது. உறங்கி கொண்டிருந்த இந்த தேசத்தின் ஆன்மா, விழித்து எழுகிறது" என்பதாய் நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த இரவில் காந்தி டெல்லியில் இல்லை. தொலைதூர கல்கத்தா நகரில், ரணமான ஊருக்கு மருந்திடும் பணியில் காந்தி.. எவ்வளவு வித்தியாசம்..

சுதந்திரம் அடைவதற்கு முந்தைய வாரத்தில் ஒரு நாள். நேரு மற்றும், படேலின் தூதர் ஒருவர் காந்தியை காண கல்கத்தா விரைகிறார். அவர் கல்கத்தா அடைந்த நேரம், நள்ளிரவு. அப்பொழுதும், கல்கத்தா கலவர மேகம் சூழ்ந்து உள்ள தருணம். அந்த சிறப்பு தூதர், நான் நேருவிடமும், சர்தார் படேல் இடமிருந்தும் ஒரு முக்கிய கடிதத்துடன் உங்களை காண வந்துள்ளேன் என்றார். அப்பொழுது காந்தி, நீங்கள் இரவு உணவு உண்டாகி விட்டதா? என்றார். 'இல்லை' என பதில் வரவே, காந்தி அவருக்கு இரவு உணவு பரிமாறினார்.

அதன் பின் காந்தி அவர் கொணர்ந்த கடிதத்தை பிரித்து படித்தார். கடிதம் இப்படி சென்றது. "பாபுஜி, நீங்கள், தேச தந்தை, நாடு விடுதலை அடையும் தருணத்தில் ஒரு மகிழ்வான தருணத்தில், நீங்கள் டெல்லியில் இருக்க வேண்டும். எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்" என சென்றது. இதற்கு பதிலளித்த காந்தியின் பதில் இதயம் தொடுபவை. "என்ன முட்டாள் தரமான எண்ணம் இது! வங்காளம் பற்றி எரிகிறது. இந்துக்களும், முஸ்லீம்களும், ஒருவரை ஒருவர் கொன்று கொள்கின்றனர். அவர்களின் வேதனையை, தீனமான குரலை இருண்ட வங்கத்தில் கேட்கிறேன்! இந்த தருணத்தில், என்னால் எப்படி விழா கோலத்தில் திளைக்கும் டெல்லியை அடைய முடியும்," என சொன்னார். "அமைதியை கொணர நான் கல்கத்தாவில் இருந்தாக வேண்டும்; ஏன்; எனது உயிரை தந்தாவது, அமைதியையும், நல்லிணக்கத்தையும் மீட்டு எடுப்பேன்" என்கிறார்.

அடுத்த நாள் காலையில் தூதர், டெல்லிக்கு புறப்படுகிறார். அது மனிதம் மலர்ந்த தருணம்; அந்த தருணம் காந்தி ஒரு மரத்தின் கீழ் நிற்கிறார். அந்த சமயம், ஒரு உலர்ந்த இலை மரத்தில் இருந்து கீழே விழுகிறது. காந்தி கீழே விழுந்த இலையை கைகளில் எடுத்து கொண்டபடி, "நண்பரே நீங்கள் டெல்லிக்கு திரும்புகிறீர்கள். நேருவிற்கும், படேலுக்கும், இந்த காந்தியால் என்ன பரிசு கொடுக்க முடியும். நான் அதிகார பலமோ, பண பலமோ அற்ற சாதாரண மனிதன். நேருவிடமும், படேலிடமும், இந்த காய்ந்த இலையை சுதந்திர தின பரிசாக கொடுக்கவும்" என்கிறார். அந்த தருணத்தில், வந்த தூதரின் விழியெல்லாம், கண்ணீர். அந்த தருணத்திலும், தன் நகைச்சுவை உணர்வை கைவிடாத காந்தி, "கடவுள், எவ்வளவு உயர்வானவர்? அவர் காந்தியிடம் இருந்து ஒரு உலர்ந்த இலையை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை, இப்பொழுது இலை ஈரமாகி விட்டது என்றார்; இந்த இலையை உங்களின் கண்ணீர் உடன் எடுத்து செல்லுங்கள்" என்றார்.

நவகாளி அமைதி யாத்திரை:
நவகாளி அமைதி இன்றி மத கலவரம் சூழ்ந்து இருந்த தருணம். அன்று இருந்தது ஒரே காந்தி. ஊர் ஊராக சென்று, மத நல்லிணக்கத்தை கொண்டுவந்து கொண்டிருந்தார். ஒரு தனி மனிதனின், இரக்கமும், தைரியமும், அமைதியை மீட்டெடுக்க உதவின. அவர் ஒருவரால் மட்டுமே முடியக்கூடிய வேலை அது. சுதேச கிருபாலினி, காந்தியுடன் பயணித்த ஒருவரின் நேரடி அனுபவம் இது. காந்தி கிராமம் கிராமமாய், கைகளில் புனித புத்தகம் சுமந்தவராய்(குர்ரானும், கீதையும்) அமைதியை கொணர்கிறார். ஒவ்வொரு இடமும், அமைதிக்கு கூட்டு பிரார்த்தனை. அமைதிக்காக இந்து முஸ்லீம் மக்களுடன், நல்லிணக்க உறுதி மொழி. ஊரில் அமைதி திரும்புவதை, உறுதி மொழி கடை பிடிப்பதை காணுதல்; அடுத்த ஊர்; இப்படியான தொடர் பயணம் அது. அந்த தருணம் ஒரு நெஞ்சை தொடும் சம்பவம்..


அந்த ஊரில் இந்து முஸ்லீம் மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து வந்துள்ளனர். எப்பொழுதும் போல் அன்றும், காந்தியும், இந்து முஸ்லீம் பெரியவர்களை வீட்டை விட்டு வெளியில் அழைகிறார். அவரது எண்ணம், கூட்டு வழிபாடு, மத நல்லிணக்க உறுதி மொழி. ஆனால் அவரது அழைப்புக்கு யாரும் செவி சாய்த்தாய் தெரியவில்லை. அந்த தருணத்தில், காந்திக்கு இன்னொரு எண்ணம். இந்து முஸ்லீம் சிறுவர்களை அழைக்கிறார். நீங்கள் இறைவனின் குழந்தைகள்; உங்களில் வேற்றுமை கிடையாது என்கிறார். அவரிடம் கொண்டு சென்றிருந்த பந்து உள்ளது. சிறுவர்களை தன்னுடன் விளையாட அழைக்கிறார். முதலில் தயங்கியவர்கள், பின் ஒருவர் ஒருவராய், காந்தி அமர்ந்து இருந்த மேடையை அடைகிறார்கள். அவர்களிடம் காந்தி வீசிய பந்துகள் அவரிடம் திரும்பி வருகின்றன. சிறுவர் சிறுமியரிடம், அரை மணி நேரம் விளையாடிய காந்தி பின்வருமாறு கிராமத்தவரிடம் பேசலானார்.

"பெரியவர்களான உங்களிடம், தைரியம் இல்லை.. உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்று கொள்வது நலம் என்கிறார். ஒரு இந்து குழந்தை, முஸ்லீம் குழந்தை கண்டு அச்சப்படவில்லை, அதே போல், முஸ்லீம் குழந்தை இந்து குழந்தையை கண்டு " அச்சப்படவில்லை என்கிறார். அவர்கள் ஒன்றாக என்னிடம் வந்தனர். என்னிடம் அரை மணி நேரம் விளையாடி களித்தனர் என்றார். அவர்களிடம் இருந்து, பெரியவர்களான நீங்கள் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள முன்வாருங்கள். உங்களுக்குள், அக தைரியம் இல்லாவிட்டால், உங்கள் குழந்தைகளிடம் கற்று கொள்ளுங்கள் என்கிறார்.
அதன் பின் இந்து முஸ்லீம் பெரியவர்கள் ஒருவர் ஒருவராய், காந்தியை சந்திக்கின்றனர். அந்த நிலையில், அவர்களிடம், ஒருவர் மற்றவரை கொல்வதில்லை எனும் உறுதி மொழியை அனைவரிடமும் எடுக்க வைக்கிறார். அமைதி திரும்புகிறதா, என்ற காத்திருப்பு காந்தியின் வழக்கம். இப்படியாய் காந்தியின் பயணம், தொடர்கிறது. இப்படி கிராமம், கிராமமாய், நவகாளியை சுற்றியலைந்து, அமைதியை கொணர்கிறார்.


ஹோரஸ் அலக்சாண்டர், ஒரு முன்னணி பத்திரிகை ஆசிரியர் தான் பார்த்த அனுபவத்தை ஒரு தலைவரிடம் விவரிக்கிறார்.
ஒரு நாள், காந்தியின், பிரார்த்தனை சென்றுகொண்டு உள்ளது. அந்த நிலையில் ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியை தாக்கினார். அந்த மனிதர் காந்தியின் கழுத்தை பிடித்து கொண்டார். காந்தி முழுவதுமாய் நிலை குலைந்து விட்டார். அப்பொழுது கீழே விழும் தருணத்தில், குரானில் இருந்து ஒரு அழகான மொழியை உதிர்த்தார். குரான் மொழியை கேட்ட மனிதர், காந்தியின் கால்களை தொட்டு வணங்கினார். தன் செயலுக்கு மன்னிப்பு கோரிய அவர், தனது செயலுக்கு வெட்கப்படவும் செய்திட்டார். "நான் ஒரு பாவம் செய்திட்டேன். நான் உங்களுடன் இருப்பேன், உங்களுக்கு துணையாய் இருப்பேன். எனக்கு ஏதாவது பணி இருந்தால் சொல்லுங்கள்" என்றார். அந்த தருணத்தில் இரக்கம் மிக்கவராய், "யாரிடமும், இங்கு நடந்ததை சொல்லாதே, இல்லாவிட்டால் மீண்டும் இந்து முஸ்லீம் கலவரம் உருவாகலாம்.. என்னையும், உன்னையும் முற்றிலும் மறந்து விடு" என்கிறார். நடந்த செயலுக்கு வருந்தியவனாய் அந்த மனிதன் அந்த நிமிடம் விடைபெற்று சென்றான்.


கருணையும் கொடூரமும்:
மற்றொரு வலிகள் நிறைந்த சம்பவம். இந்த சம்பவம், ஆச்சார்யா கிருபாலினி யின் மனைவி சுதேச கிருபாலினி விவரித்தது. அவர் காந்தியின், அமைதி யாத்திரையில் நவகாளியில் உடன் சென்றவர். ஒரு நாள் நள்ளிரவில் சில முஸ்லிம் மனிதர்கள், அமைதி யாத்திரையில் உடன் வரும் மூன்று இந்து இளம் பெண்களை கடத்திட திட்டமிட்டு உள்ள தகவல் கிடைக்கிறது. அது கலவரம் சூழ்ந்த நாட்கள். நள்ளிரவில், அருகில் இருந்த முஸ்லீம் மனிதரின் கதவை தட்டிய கிருபாலினி, இந்த மூன்று பெண்களையும், உங்கள் கட்டுப்பாட்டில் விட்டு செல்கிறேன். நீங்கள் இவர்களை உங்களின் பெண்களாக கருதி பாதுகாத்து வர வேண்டுகிறார். அந்த மனிதரும், இசைகிறார். மூன்ற மாதம் கழித்து கலவரம் ஒரு வழியாய் முடிவுக்கு வருகிறது. மூன்று பெண்களும் அவர்களின் வீடு செல்கின்றனர். அந்த நிலையில், அவர்களின் பெற்றோர் நீங்கள், முஸ்லீம் வீட்டில், மூன்ற மாதம் இருந்து வந்துளீர். ஆகவே ஆச்சாரமானே, வைதீகமான வீட்டில், உங்களுக்கு இடமில்லை என விரட்டுகின்றனர். அப்படி நிராதரவானவர்க்கு, காந்தியின் ஆசிரமமே இல்லமாய் போனது. அவர்களை திருமணம் செய்திட யாரும் முன்வரவில்லை. இது காந்தியை மிக மிக அதிகம் வருந்த செய்திட்டது.

இப்படி காந்தியின் வழியெல்லாம், மனித நேயம் மணம் பரப்புகிறது.
.
.
.

1 comment:

Anonymous said...

உங்களுக்குள் எழுகிற சிந்தனைகள் மிகவும் உபயுக இருந்தது. நன் தெரியாத கருத்துகள் சொன்னது.

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்