நம்மில் ஒவ்வொருவரும் நாம் ஈடுபட்டிருக்கும் வேலையை எவ்வளவு ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் செய்கிறோம் என்பது இன்று நம் முன் உள்ள கேள்வி. ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும் நிறைய உற்சாகம் உள்ளது. ஆனால் நேரம் செல்ல, செல்ல உற்சாகம் சுத்தமாக வடிந்து விடுகிறது. இன்னும் ஒரு சிலர் உள்ளனர்; நான் பெறுகிற சம்பளத்திற்கு, இப்படி வேலை செய்தால் போதுமானது என்றே பதில் சொல்கின்றனர்.
நாம் செய்திடும் வேலை ஆத்மார்த்தமானது. அதை லயித்து செய்திட வேண்டும். அரிதான விஷயங்கள்,அற்புத அனுபவங்கள், புதிய வாழ்வியல் கற்றல் என அதில் இருந்தே எண்ணற்றவை வெளிப்படுகின்றன. பதஞ்சலி முனிவர் வார்த்தைகள் இங்கு பொருத்தமானவை - "நீங்கள் செய்கிற வேலையை தவம் மாதிரி செய்திட பழகுங்கள். அப்படி செய்தால், வானத்தில் இருக்கும் அபூர்வ சக்திகள் அனைத்தும் உங்களுக்கு துணைவரும் " என்பதே.
நீங்கள் உங்களை ஒரு விளையாட்டில் ஈடுபடுத்தி கொள்கிறீர்கள். நீங்கள் அதில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என தொடர்ந்து விளையாடுகிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த நிலையிலும், சோர்வடைவதில்லை. இரண்டு மணி நேரத்திற்கு பிறகும், உங்களிடம் அதே உற்சாகம். ஏன், எவ்வளவு மணி நேரம் தொடர்ந்து விளையாடினாலும், உங்களிடம் ஆர்வம் பெருகுகிறது. பொழுது விழுந்தால் கூட, நீங்கள் விளையாட்டை தொடர முயல்கிறீர்கள்.
இதே விஷயம் ஏன் நம்மால் செய்கிற வேலையில் கொணர முடியவில்லை. எல்லா நேரத்திலும், உற்சாகமும், மகிழ்வும் ஒட்டி கொண்டு இருக்க வேண்டியது அவசியம். சாதாரண மனிதர் யாரும், பெறுகிற பணத்தின் மதிப்பை வைத்து, வேலை செய்வதில்லை. வாழ்வின் ஒரு நிலையின் மேல், தனக்கான தேவைகள் பூர்த்தியாகியும் உள்ள மனிதர் இவ்வாறு உள்ளனர்.
நான் மதுரையை அடுத்த ஊரிலே, ஒரு நகை கடையில் பணிபுரிய வாய்ப்பு பெற்றேன். அங்கு பணியில் உள்ள பெண்கள், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து இருப்பார். மாத வருமானம் ஆயிரத்து இருநூறு. தினப்படி பத்து ரூபாய் கொடுக்கப்படும். அதன் பொருட்டு, அவர்களின் அன்றாட நிகழ்வாக, அவ்வப்பொழுது, திட்டுக்களும் கிடைத்தபடி இருக்கும். இதற்காக அவர்கள் யாரும் கோபிப்பதில்லை. "வசவுக்கு வருத்தப்பட்டா, வாழ முடியுமா" என்பதே அவர்களின் கேள்வி. அவர்கள் யதார்த்தத்தை புரிந்து உள்ளனர்.
வேலையை அனுபவித்து , ஒரு கடமையாய் செய்திடாமல், ஒரு இனிய அனுபவமாய் தொடர்ந்திட முன்வர வேண்டும். அப்படி இருந்தால் நாம் எங்கு செலவிடுகிற நேரமும் இனியதாய், அர்த்தமுள்ளதாய் மாறிப்போகும்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார்.
"ஒரு மனிதன் தெரு சுத்தம் செய்பவன் என்றால், அவன் மைக்கல் ஏஞ்சலோ ஓவியம் வரைவது போன்றோ, பீத்தோவன் தன் இசை கோலங்களை வடிப்பது போன்றோ, ஷேக்ஸ்பியர் கவிதை புனைவது போன்றோ தெருவை சுத்தம் செய்திடல் வேண்டும். அந்த வழியே செல்லும் வானவரும், மனிதரும், இங்கு ஒரு அரிதான தெரு சுத்தம் செய்திடும் மனிதன் வாழ்கிறான். தன் கடமையை சரிவர செய்பவன் இருக்கிறான் என புகழும் படி இருக்க வேண்டும் " என்கிறார்.
.
.
2 comments:
தொடர்ந்து எழுதுங்கள்..
வாழ்த்துக்கள்...
உற்சாகம் பொங்கும் வேலை நேரங்கள் :
நம் வேலை நேரங்களில் நம் மனதை கட்டுப்படுத்தி வேலைசைய வேண்டும் மனத்திரிப்தியுடன் வேலைசெய்தால் எந்த வற்றுபடும் இல்லை.
இவன் நடராஜசிவம்
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்