Sunday, April 19, 2009

மகாத்மாவோடு நெடிய பயணம்


சில நாட்களுக்கு முன் ஒரு சிறு விவாதம்; நண்பன், காந்தி முழுக்க முழுக்க ஒரு சுயநல வாதியாகவே வாழ்ந்து உள்ளார். தேச பிதாவாக இருக்க அப்படி ஒன்றும் அவர் நாட்டிற்க்கு செய்திடஇல்லை. காந்தி ஒன்றும் அப்படி கொண்டாட வேண்டிய மனிதரில்லை என்பதே அவனது விவாதம்.

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பொழுதும், பின்னரும் அவர் சொத்து குவித்தார். எப்பொழுதேனும், அவர் தன் வாழ்விற்கு உழைக்கவில்லை. ஆனால் வாழ்வு முழுதும் அவர் பட்டினி கிடக்கவில்லை - என்பதாய் விவாதம் நீண்டது. காந்தியின் மறைவிற்கு பின்னான அறுபது வருடம் கழித்து, இளைய தலை முறை எப்படி காந்தியை நினைவு கூர்கிறது; அது ஒரு காலம். காந்தியின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு விரல் அசைவும், எத்தனையோ இளைய உள்ளங்களை இயக்கின; இன்று நினைத்தாலும் மலைப்பாகவே உள்ளது; அத்தனை பெரிய தேசம் ஒரு மனிதனின் கட்டளைக்கு காத்து இருந்த தருணம். இறைக்கு இணையாக போற்றிய தருணம். அப்படியான காந்தியின் சுவடுகளை பின்னோக்கி பார்த்த பொழுது.. நிறையவே நண்பனின் கேள்விக்கு விடை கிடைத்தது. மகாத்மாவின் சுய ரூபத்தை தரிசித்த திருப்தி. பல தருணங்களில் நல்ல முத்துக்கள் சிதறியபடி உள்ளன. ஒரு சில தருணத்தில் மட்டும் நாம், சிதறிய முத்துக்களில் சிலவற்றை எடுக்கிறோம்.. "http://www.mkgandhi.org/" இணைய தளம், புதிய கருத்துக்களை சொல்லி சென்றது. அவற்றை பகிர்ந்து கொள்ளும் நிமிடங்கள் இவை..

இருண்ட கல்கத்தா நகரமும், ஒளிர்ந்த டெல்லியும்:
அது "1947" ஆம் ஆண்டு. இந்து முஸ்லீம் கலவரத்தால் சமூகம் சீர்குலைந்து இருந்தது. இருண்டு கிடந்த கல்கத்தா நகரத்திற்கு, கலவரத்தால், சிதைந்திருந்த கல்கத்தாவிற்கு காந்தி அமைதியை மீட்டு கொண்டிருந்த தருணம். இன்னொரு புறம், ஒளிரும் டெல்லி நகரம்; ஆகஸ்ட் பதினான்கு, "1947" டெல்லி விழா கோலம் பூண்ட தருணம்.. பண்டித ஜவகார்லால் நேருவின் வரிகள்.. "உலகம் விழித்திடும் நேரத்தில், இந்தியா புதிய எழுச்சியோடு சுதந்திர காற்றை சுவாசம் செய்கிறது. உறங்கி கொண்டிருந்த இந்த தேசத்தின் ஆன்மா, விழித்து எழுகிறது" என்பதாய் நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த இரவில் காந்தி டெல்லியில் இல்லை. தொலைதூர கல்கத்தா நகரில், ரணமான ஊருக்கு மருந்திடும் பணியில் காந்தி.. எவ்வளவு வித்தியாசம்..

சுதந்திரம் அடைவதற்கு முந்தைய வாரத்தில் ஒரு நாள். நேரு மற்றும், படேலின் தூதர் ஒருவர் காந்தியை காண கல்கத்தா விரைகிறார். அவர் கல்கத்தா அடைந்த நேரம், நள்ளிரவு. அப்பொழுதும், கல்கத்தா கலவர மேகம் சூழ்ந்து உள்ள தருணம். அந்த சிறப்பு தூதர், நான் நேருவிடமும், சர்தார் படேல் இடமிருந்தும் ஒரு முக்கிய கடிதத்துடன் உங்களை காண வந்துள்ளேன் என்றார். அப்பொழுது காந்தி, நீங்கள் இரவு உணவு உண்டாகி விட்டதா? என்றார். 'இல்லை' என பதில் வரவே, காந்தி அவருக்கு இரவு உணவு பரிமாறினார்.

அதன் பின் காந்தி அவர் கொணர்ந்த கடிதத்தை பிரித்து படித்தார். கடிதம் இப்படி சென்றது. "பாபுஜி, நீங்கள், தேச தந்தை, நாடு விடுதலை அடையும் தருணத்தில் ஒரு மகிழ்வான தருணத்தில், நீங்கள் டெல்லியில் இருக்க வேண்டும். எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்" என சென்றது. இதற்கு பதிலளித்த காந்தியின் பதில் இதயம் தொடுபவை. "என்ன முட்டாள் தரமான எண்ணம் இது! வங்காளம் பற்றி எரிகிறது. இந்துக்களும், முஸ்லீம்களும், ஒருவரை ஒருவர் கொன்று கொள்கின்றனர். அவர்களின் வேதனையை, தீனமான குரலை இருண்ட வங்கத்தில் கேட்கிறேன்! இந்த தருணத்தில், என்னால் எப்படி விழா கோலத்தில் திளைக்கும் டெல்லியை அடைய முடியும்," என சொன்னார். "அமைதியை கொணர நான் கல்கத்தாவில் இருந்தாக வேண்டும்; ஏன்; எனது உயிரை தந்தாவது, அமைதியையும், நல்லிணக்கத்தையும் மீட்டு எடுப்பேன்" என்கிறார்.

அடுத்த நாள் காலையில் தூதர், டெல்லிக்கு புறப்படுகிறார். அது மனிதம் மலர்ந்த தருணம்; அந்த தருணம் காந்தி ஒரு மரத்தின் கீழ் நிற்கிறார். அந்த சமயம், ஒரு உலர்ந்த இலை மரத்தில் இருந்து கீழே விழுகிறது. காந்தி கீழே விழுந்த இலையை கைகளில் எடுத்து கொண்டபடி, "நண்பரே நீங்கள் டெல்லிக்கு திரும்புகிறீர்கள். நேருவிற்கும், படேலுக்கும், இந்த காந்தியால் என்ன பரிசு கொடுக்க முடியும். நான் அதிகார பலமோ, பண பலமோ அற்ற சாதாரண மனிதன். நேருவிடமும், படேலிடமும், இந்த காய்ந்த இலையை சுதந்திர தின பரிசாக கொடுக்கவும்" என்கிறார். அந்த தருணத்தில், வந்த தூதரின் விழியெல்லாம், கண்ணீர். அந்த தருணத்திலும், தன் நகைச்சுவை உணர்வை கைவிடாத காந்தி, "கடவுள், எவ்வளவு உயர்வானவர்? அவர் காந்தியிடம் இருந்து ஒரு உலர்ந்த இலையை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை, இப்பொழுது இலை ஈரமாகி விட்டது என்றார்; இந்த இலையை உங்களின் கண்ணீர் உடன் எடுத்து செல்லுங்கள்" என்றார்.

நவகாளி அமைதி யாத்திரை:
நவகாளி அமைதி இன்றி மத கலவரம் சூழ்ந்து இருந்த தருணம். அன்று இருந்தது ஒரே காந்தி. ஊர் ஊராக சென்று, மத நல்லிணக்கத்தை கொண்டுவந்து கொண்டிருந்தார். ஒரு தனி மனிதனின், இரக்கமும், தைரியமும், அமைதியை மீட்டெடுக்க உதவின. அவர் ஒருவரால் மட்டுமே முடியக்கூடிய வேலை அது. சுதேச கிருபாலினி, காந்தியுடன் பயணித்த ஒருவரின் நேரடி அனுபவம் இது. காந்தி கிராமம் கிராமமாய், கைகளில் புனித புத்தகம் சுமந்தவராய்(குர்ரானும், கீதையும்) அமைதியை கொணர்கிறார். ஒவ்வொரு இடமும், அமைதிக்கு கூட்டு பிரார்த்தனை. அமைதிக்காக இந்து முஸ்லீம் மக்களுடன், நல்லிணக்க உறுதி மொழி. ஊரில் அமைதி திரும்புவதை, உறுதி மொழி கடை பிடிப்பதை காணுதல்; அடுத்த ஊர்; இப்படியான தொடர் பயணம் அது. அந்த தருணம் ஒரு நெஞ்சை தொடும் சம்பவம்..


அந்த ஊரில் இந்து முஸ்லீம் மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து வந்துள்ளனர். எப்பொழுதும் போல் அன்றும், காந்தியும், இந்து முஸ்லீம் பெரியவர்களை வீட்டை விட்டு வெளியில் அழைகிறார். அவரது எண்ணம், கூட்டு வழிபாடு, மத நல்லிணக்க உறுதி மொழி. ஆனால் அவரது அழைப்புக்கு யாரும் செவி சாய்த்தாய் தெரியவில்லை. அந்த தருணத்தில், காந்திக்கு இன்னொரு எண்ணம். இந்து முஸ்லீம் சிறுவர்களை அழைக்கிறார். நீங்கள் இறைவனின் குழந்தைகள்; உங்களில் வேற்றுமை கிடையாது என்கிறார். அவரிடம் கொண்டு சென்றிருந்த பந்து உள்ளது. சிறுவர்களை தன்னுடன் விளையாட அழைக்கிறார். முதலில் தயங்கியவர்கள், பின் ஒருவர் ஒருவராய், காந்தி அமர்ந்து இருந்த மேடையை அடைகிறார்கள். அவர்களிடம் காந்தி வீசிய பந்துகள் அவரிடம் திரும்பி வருகின்றன. சிறுவர் சிறுமியரிடம், அரை மணி நேரம் விளையாடிய காந்தி பின்வருமாறு கிராமத்தவரிடம் பேசலானார்.

"பெரியவர்களான உங்களிடம், தைரியம் இல்லை.. உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்று கொள்வது நலம் என்கிறார். ஒரு இந்து குழந்தை, முஸ்லீம் குழந்தை கண்டு அச்சப்படவில்லை, அதே போல், முஸ்லீம் குழந்தை இந்து குழந்தையை கண்டு " அச்சப்படவில்லை என்கிறார். அவர்கள் ஒன்றாக என்னிடம் வந்தனர். என்னிடம் அரை மணி நேரம் விளையாடி களித்தனர் என்றார். அவர்களிடம் இருந்து, பெரியவர்களான நீங்கள் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள முன்வாருங்கள். உங்களுக்குள், அக தைரியம் இல்லாவிட்டால், உங்கள் குழந்தைகளிடம் கற்று கொள்ளுங்கள் என்கிறார்.
அதன் பின் இந்து முஸ்லீம் பெரியவர்கள் ஒருவர் ஒருவராய், காந்தியை சந்திக்கின்றனர். அந்த நிலையில், அவர்களிடம், ஒருவர் மற்றவரை கொல்வதில்லை எனும் உறுதி மொழியை அனைவரிடமும் எடுக்க வைக்கிறார். அமைதி திரும்புகிறதா, என்ற காத்திருப்பு காந்தியின் வழக்கம். இப்படியாய் காந்தியின் பயணம், தொடர்கிறது. இப்படி கிராமம், கிராமமாய், நவகாளியை சுற்றியலைந்து, அமைதியை கொணர்கிறார்.


ஹோரஸ் அலக்சாண்டர், ஒரு முன்னணி பத்திரிகை ஆசிரியர் தான் பார்த்த அனுபவத்தை ஒரு தலைவரிடம் விவரிக்கிறார்.
ஒரு நாள், காந்தியின், பிரார்த்தனை சென்றுகொண்டு உள்ளது. அந்த நிலையில் ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியை தாக்கினார். அந்த மனிதர் காந்தியின் கழுத்தை பிடித்து கொண்டார். காந்தி முழுவதுமாய் நிலை குலைந்து விட்டார். அப்பொழுது கீழே விழும் தருணத்தில், குரானில் இருந்து ஒரு அழகான மொழியை உதிர்த்தார். குரான் மொழியை கேட்ட மனிதர், காந்தியின் கால்களை தொட்டு வணங்கினார். தன் செயலுக்கு மன்னிப்பு கோரிய அவர், தனது செயலுக்கு வெட்கப்படவும் செய்திட்டார். "நான் ஒரு பாவம் செய்திட்டேன். நான் உங்களுடன் இருப்பேன், உங்களுக்கு துணையாய் இருப்பேன். எனக்கு ஏதாவது பணி இருந்தால் சொல்லுங்கள்" என்றார். அந்த தருணத்தில் இரக்கம் மிக்கவராய், "யாரிடமும், இங்கு நடந்ததை சொல்லாதே, இல்லாவிட்டால் மீண்டும் இந்து முஸ்லீம் கலவரம் உருவாகலாம்.. என்னையும், உன்னையும் முற்றிலும் மறந்து விடு" என்கிறார். நடந்த செயலுக்கு வருந்தியவனாய் அந்த மனிதன் அந்த நிமிடம் விடைபெற்று சென்றான்.


கருணையும் கொடூரமும்:
மற்றொரு வலிகள் நிறைந்த சம்பவம். இந்த சம்பவம், ஆச்சார்யா கிருபாலினி யின் மனைவி சுதேச கிருபாலினி விவரித்தது. அவர் காந்தியின், அமைதி யாத்திரையில் நவகாளியில் உடன் சென்றவர். ஒரு நாள் நள்ளிரவில் சில முஸ்லிம் மனிதர்கள், அமைதி யாத்திரையில் உடன் வரும் மூன்று இந்து இளம் பெண்களை கடத்திட திட்டமிட்டு உள்ள தகவல் கிடைக்கிறது. அது கலவரம் சூழ்ந்த நாட்கள். நள்ளிரவில், அருகில் இருந்த முஸ்லீம் மனிதரின் கதவை தட்டிய கிருபாலினி, இந்த மூன்று பெண்களையும், உங்கள் கட்டுப்பாட்டில் விட்டு செல்கிறேன். நீங்கள் இவர்களை உங்களின் பெண்களாக கருதி பாதுகாத்து வர வேண்டுகிறார். அந்த மனிதரும், இசைகிறார். மூன்ற மாதம் கழித்து கலவரம் ஒரு வழியாய் முடிவுக்கு வருகிறது. மூன்று பெண்களும் அவர்களின் வீடு செல்கின்றனர். அந்த நிலையில், அவர்களின் பெற்றோர் நீங்கள், முஸ்லீம் வீட்டில், மூன்ற மாதம் இருந்து வந்துளீர். ஆகவே ஆச்சாரமானே, வைதீகமான வீட்டில், உங்களுக்கு இடமில்லை என விரட்டுகின்றனர். அப்படி நிராதரவானவர்க்கு, காந்தியின் ஆசிரமமே இல்லமாய் போனது. அவர்களை திருமணம் செய்திட யாரும் முன்வரவில்லை. இது காந்தியை மிக மிக அதிகம் வருந்த செய்திட்டது.

இப்படி காந்தியின் வழியெல்லாம், மனித நேயம் மணம் பரப்புகிறது.
.
.
.

Sunday, April 12, 2009

இனிய சொல், இனிய செயல்


வார்த்தைகள் மனிதன் கண்டறிந்த, மனிதனுக்கு வாய்த்த அரிய வரம். பல நேரங்களில் அதுவே சாபமாய் முடிவது பரிதாபமானது. செய்கைகள், ஒற்றை சப்தங்கள் மூலம் மட்டுமே, மனிதன் தன் எண்ணத்தை சொன்னவன், மொழியை கண்டறிந்து வார்த்தைகளை பிரயோகித்த நிமிடம், மனிதன் அடுத்த தளத்திற்கு தன்னை உயர்த்திய நிமிடமே. சந்தோசம், துக்கம் என மனிதன் வார்த்தை மூலம் வெளிப்படுத்துகிறான். மனித பேச்சுக்களே அற்று போனால், மனிதனும் மரம் போல் எந்த நகர்வும் இல்லாமல் இருந்திருப்பான்.

பல நேரங்களில் நமது காதுகள், நாம் பேசுவதை லயித்து கேட்கிறது. அதன் இனிமையில், இன்னொரு மனிதனின் நேரம் வீணாவதை அறிய முயல்வதில்லை. நிறைய பேசுவதால், என்ன பேசுகிறோம், சரியான வார்த்தை கோர்வைகளா என்பதை கவனிக்க தவறுகிறோம். பல நேரங்களில் எதிராளி முகம் சுளித்த பின்போ, எதிர் தாக்குதலை துவக்கிய பின்போதான், நாம் பேசிய வார்த்தை ஆழம் நமக்கு புலப்படுகிறது. பேசுவதற்கு முன் ஒரு முறை, வார்த்தைகளை மனிதில் ஓடிட விட்டாலே போதும். சரியான வார்த்தைகளை உபயோகிப்பவராய் மாறிப்போவோம். நமது எண்ணமும், செயலும் ஒன்றி போகும்.

ராம கிருஷ்ணா மடத்தை சார்ந்த சுவாமி ரங்கனதானந்தர், தன் வாழ்வில் நடந்த நிகழ்வை விவரிக்கிறார். அந்த நாட்கள் ரங்கனாதானந்தரின் பால்ய பருவம். அப்பொழுது அவருக்கு ஒரு தருணத்தில், மிக அதிகமாக கோபம் வருகிறது. கோபத்தில், எதிரே இருந்த மனிதரிடம், வார்த்தைகளால், மிக அதிகமாக அர்ச்சித்து விடுகிறார். அந்த சமயம், அங்கு வந்த ரங்கனாதானந்தரின் தாய், அதிர்ச்சி அடைந்தவராய், "உனது நாக்கு, கலைமகள் அமரும் இடம். இப்படி நீ சுடு சொற்களை உபயோகித்தால்,. கலைமகள் உன்னை விட்டு நிரந்தரமாய் விலகி விடுவாள்" - என்கிறார். அது முதல் என் வாழ்வில் எத்தனையோ தருணங்களில் அந்த வார்த்தைகள், என் வாழ்வை மாற்றி உள்ளன என நினைவு கூர்கிறார். தாயின் வார்த்தைகள் நிச்சயம் அதித மதிப்பு உடையவையே! தாயின் கனிவும், தொடர் வழி காட்டலும், எத்தனையோ மனிதரை மாற்றி உள்ளன. ஆகவே எங்கும், வார்த்தைகளே வலம் வருகின்றன.

தாயிடம் இருந்து ஒரு நாளும், நீ கெட்டு போவாய் என்ற வார்த்தை குழந்தையை அடைய கூடாது. டி. டி. ரங்கராஜன், ஒருமுறை தன் கருத்தரங்கில் இதை பகிர்ந்து கொண்டார். மனிதன் உடம்பில் இருந்து வெளிப்படும் அத்தனையும், ரத்தம், வியர்வை, கண்ணீர், அனைத்தும், உவர்ப்பு சுவை உடையவையே! மனிதனால், வெளிப்படுத்த முடிந்த தித்திப்பான விஷயம் என்றால் அது நல்ல பேச்சு மட்டும் என்றார். எவ்வளவு நிஜமான வார்த்தைகள்!. ஆகவே நல்ல சொற்களையே தொடர்ந்து பேசுவோம்.

டி. டி. ரங்கராஜன் மேலும் தொடர்கிறார்...
கோபம், வெறுப்பு, மரணம், தோல்வி, பிரச்சனை, பயம், பின்லேடன் என வாக்கியங்களை சிந்தித்து பாருங்கள். அதே சமயம், அன்பு, கருணை, வெற்றி, வலிமை, ஆரோக்கியம், சந்தோசம், புத்தன், கிருஷ்ணன் என வார்த்தைகளை சிந்தித்து பாருங்கள். எதிர்மறை வார்த்தைகளை விட, நேர்மறை எண்ணங்களும், வார்த்தைகளும், பெரிதாய் உள்ளன. ஏன், அவையே வலிமை கொண்டவையாய் உள்ளன. எதை எங்கு தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம்மை பொறுத்த விஷயமே!

இந்த தருனத்தினில் ஒரு கதை எனக்கு ஞாபகம் வருகிறது. இரு நண்பர்கள் ஒரு பாலைவன பிரதேசத்தில் நடந்து செல்கின்றனர். அந்த தருணத்தில், இருவருக்கும் ஒரு சிறு வாக்குவாதம். அந்த தருணத்தில், ஒரு நண்பன் மற்றவனின் கன்னத்தில் அறைந்து விடுகிறான். அடி வாங்கிய மனிதன், மிகவும் வருந்துகிறான். அந்த வருத்தத்துடன், மணலில், "இன்று என் இனிய நண்பன் கன்னத்தில் அறைந்தான்" என எழுதுகிறான்.

அந்த தருணத்தில், ஒரு ஓடை எதிர்படுகிறது., இருவரும், அதில் குளிக்கின்றனர். அந்த நிலையில், கன்னத்தில் அறை வாங்கிய மனிதன், நீரில், மூழ்குகிறான். அந்த நிலையில் மற்றொரு நண்பன் அவனை காப்பாற்றுகிறான். பயத்தில் இருந்து தெளிவு பெற்ற மனிதன், அங்கு இருந்த பாறையில், "இன்று என் உயர் நண்பன், என் உயிரை காத்தான்!" என பொறிக்கிறான்.
அந்த நிலையில், தன் நண்பனின் செயலுக்கு விளக்கம் கேட்பான் நண்பன். நீ முன்பு கன்னத்தில் அறைந்த பொழுது, மணலில் என், செயலை எழுதினாய். இப்பொழுது, பாறையில் பொறிக்கிராயே! என்ன காரணம் என்றான். அப்பொழுது நண்பன், நான் மணலில் எழுதியதை, மன்னிப்பு என்கிற காற்று அழித்து அதன் சுவடே இல்லாமல் செய்து விடும்!
ஆனால் ஒரு நல்ல செயல் நடந்து இருந்தால், அதை கற்களில் பொறிக்க வேண்டும். ஏனெனில், எந்த காற்றும், அதை எந்நாளும், அழித்து விடாது. நல்ல செயல்கள் அப்படி தான். நம் மனமாகிய நந்த வனத்தில் எந்நாளும் அழியா வண்ணம் பொறித்து இருக்க வேண்டும்!
.

உற்சாகம் பொங்கும் வேலை நேரங்கள்

நம்மில் ஒவ்வொருவரும் நாம் ஈடுபட்டிருக்கும் வேலையை எவ்வளவு ஈடுபாட்டுடனும், உற்சாகத்துடனும் செய்கிறோம் என்பது இன்று நம் முன் உள்ள கேள்வி. ஒவ்வொரு வேலையை துவங்கும் போதும் நிறைய உற்சாகம் உள்ளது. ஆனால் நேரம் செல்ல, செல்ல உற்சாகம் சுத்தமாக வடிந்து விடுகிறது. இன்னும் ஒரு சிலர் உள்ளனர்; நான் பெறுகிற சம்பளத்திற்கு, இப்படி வேலை செய்தால் போதுமானது என்றே பதில் சொல்கின்றனர்.

நாம் செய்திடும் வேலை ஆத்மார்த்தமானது. அதை லயித்து செய்திட வேண்டும். அரிதான விஷயங்கள்,அற்புத அனுபவங்கள், புதிய வாழ்வியல் கற்றல் என அதில் இருந்தே எண்ணற்றவை வெளிப்படுகின்றன. பதஞ்சலி முனிவர் வார்த்தைகள் இங்கு பொருத்தமானவை - "நீங்கள் செய்கிற வேலையை தவம் மாதிரி செய்திட பழகுங்கள். அப்படி செய்தால், வானத்தில் இருக்கும் அபூர்வ சக்திகள் அனைத்தும் உங்களுக்கு துணைவரும் " என்பதே.

நீங்கள் உங்களை ஒரு விளையாட்டில் ஈடுபடுத்தி கொள்கிறீர்கள். நீங்கள் அதில் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என தொடர்ந்து விளையாடுகிறீர்கள். ஆனால் நீங்கள் அந்த நிலையிலும், சோர்வடைவதில்லை. இரண்டு மணி நேரத்திற்கு பிறகும், உங்களிடம் அதே உற்சாகம். ஏன், எவ்வளவு மணி நேரம் தொடர்ந்து விளையாடினாலும், உங்களிடம் ஆர்வம் பெருகுகிறது. பொழுது விழுந்தால் கூட, நீங்கள் விளையாட்டை தொடர முயல்கிறீர்கள்.

இதே விஷயம் ஏன் நம்மால் செய்கிற வேலையில் கொணர முடியவில்லை. எல்லா நேரத்திலும், உற்சாகமும், மகிழ்வும் ஒட்டி கொண்டு இருக்க வேண்டியது அவசியம். சாதாரண மனிதர் யாரும், பெறுகிற பணத்தின் மதிப்பை வைத்து, வேலை செய்வதில்லை. வாழ்வின் ஒரு நிலையின் மேல், தனக்கான தேவைகள் பூர்த்தியாகியும் உள்ள மனிதர் இவ்வாறு உள்ளனர்.

நான் மதுரையை அடுத்த ஊரிலே, ஒரு நகை கடையில் பணிபுரிய வாய்ப்பு பெற்றேன். அங்கு பணியில் உள்ள பெண்கள், பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து இருப்பார். மாத வருமானம் ஆயிரத்து இருநூறு. தினப்படி பத்து ரூபாய் கொடுக்கப்படும். அதன் பொருட்டு, அவர்களின் அன்றாட நிகழ்வாக, அவ்வப்பொழுது, திட்டுக்களும் கிடைத்தபடி இருக்கும். இதற்காக அவர்கள் யாரும் கோபிப்பதில்லை. "வசவுக்கு வருத்தப்பட்டா, வாழ முடியுமா" என்பதே அவர்களின் கேள்வி. அவர்கள் யதார்த்தத்தை புரிந்து உள்ளனர்.

வேலையை அனுபவித்து , ஒரு கடமையாய் செய்திடாமல், ஒரு இனிய அனுபவமாய் தொடர்ந்திட முன்வர வேண்டும். அப்படி இருந்தால் நாம் எங்கு செலவிடுகிற நேரமும் இனியதாய், அர்த்தமுள்ளதாய் மாறிப்போகும்.


மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஒருமுறை இப்படி குறிப்பிட்டார்.
"ஒரு மனிதன் தெரு சுத்தம் செய்பவன் என்றால், அவன் மைக்கல் ஏஞ்சலோ ஓவியம் வரைவது போன்றோ, பீத்தோவன் தன் இசை கோலங்களை வடிப்பது போன்றோ, ஷேக்ஸ்பியர் கவிதை புனைவது போன்றோ தெருவை சுத்தம் செய்திடல் வேண்டும். அந்த வழியே செல்லும் வானவரும், மனிதரும், இங்கு ஒரு அரிதான தெரு சுத்தம் செய்திடும் மனிதன் வாழ்கிறான். தன் கடமையை சரிவர செய்பவன் இருக்கிறான் என புகழும் படி இருக்க வேண்டும் " என்கிறார்.

.
.

வாழ்வை முழுமையாக்கும் தருணங்கள்

வாழ்வை முழுமையாக்கும் தருணங்கள் எவை என்கிற கேள்வி சில நாட்களுக்கு முன் எழுந்தது.. அதற்கான விடையை தேடிய பொழுது..

ஒருமுறை விகடன் சந்திப்பில், வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் இப்படி குறிப்பிட்டார். "வாழ்கை என்பது வாழும் காலத்திலேயே திருத்தப்பட்டு மறைந்த பின்பு படிக்கப்பட வேண்டிய மாபெரும் கவிதை" என்று. அப்படியான வாழ்வை நாம் எப்படி செழுமை படுத்துகிறோம் என்கிற கேள்வி எழாமல் இல்லை. வாழ்வில் எல்லா தருணத்திலும் நம்மை திருத்திக்கொள்ள தருணங்கள் இருக்கின்றன. ஒருமுறை மட்டும் அமைவதில்லை. அது நம் இறுதி முடிவில்.

நம் வாழ்வில் பெற்றோரை சந்திப்பது, நண்பர்களை சந்திப்பது, உறவுகளை புதிப்பிப்பது, இறையை தேடிடும் நிமிடங்கள், அரிதான புத்தகங்கள், குழந்தைகளோடு உரையாடுதல் என இந்த விஷயங்கள் வாழ்வை முழுமை ஆக்குகின்றன. கோபம், வரைமுறை அற்ற தடித்த பேச்சுகள், உறவுகளை கீறி ரனப்படுத்துகின்றன. நாம் கோபமுடன் எதிராளி மீது வார்த்தை வீசும் தருணத்தில், திராவகம் வெளி வருகிறது என்பதை மறந்து விடுகிறோம். எத்தனையோ நட்புகள், ஒற்றை வார்த்தைகளில் முறிந்து காணாமல் போனதாய் இருக்கின்றன. "நாம் சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் அதிபதி. நாம் சொன்ன வார்த்தைகள் நமக்கு அதிபதி!" இது என்றும் பொது மொழி.

நிறைய தருணங்களில் மனதை மீண்டும் சேர்த்திட, குறுக்கே நிற்பவை முன்பு உதிர்த்த அக்னி வார்த்தைகளே. செய்த செயல்களை விட வார்த்தைகளே நெஞ்சில் என்றென்றும் நிழலாடி வேதனையை விதைத்து செல்கிறது. ஒரு திருமண நிகழ்வு, ஒரு பண்டிகை தினம், ஒற்றை நல விசாரிப்பு, இதழோரம் விரியும் இனிய புன்னகை இவை உறவுகளை அதிகம் வலுப்பட செய்கின்றன. விசு ஒருமுறை இப்படி குறிப்பிட்டார். "வாழ்வின் ஒவ்வொரு விஷயமும் கொஞ்ச நேர சந்தோசத்திற்காக இல்லாமல், நீண்ட நாளைய குதூகலத்திற்காக இருக்க வேண்டும்" என்று.

ஒவ்வொரு நாளையும், புதிதாக பார்போம். நேற்றைய நாள், நேற்றுடன் முடிந்தது. நேற்றைய வருத்தம், கோபம், இவை நேற்றுடன் இருக்கட்டும். அவை இன்றைய பொழுதின் இனிமையை கெடுக்க வேண்டாம். மனம் எப்பொழுதும், ஒரு வெள்ளை காகிதமாகவே இருக்கட்டும்.

"மனிதா..
வருகின்ற பூகம்பம்
வரட்டும் என்றாவது ..
போர்களை நிறுத்து
புன்னகை உடுத்து..
பூமியை நேசி
பூக்களை ரசி
மனிதரை மதி
மண்ணை துதி
இன்றாவது.. "
- வைரமுத்து
.