Thursday, April 2, 2015

அன்புள்ள அம்மா - எழுத்து சித்தர் பாலகுமாரன்


எழுத்து சித்தர் தன் தாயின் நினைவுகளை பதிவு செய்கிறார். இந்த எழுத்து  சில வருடங்களுக்கு முன், குமுதத்தில் வெளி வந்தது. போகிற போக்கில், அனைவர்க்கும் திரும்பி பார்க்க வைக்கும் சொற்சித்திரம் இது. கண்களில் நீர் திவலைகள் உருள்வதை தவிர்க்க முடியவில்லை. பாலகுமாரன் அவர்களின் அபூர்வ ஆளுமை என்றும் போல்..


" தாய் என்பவள் தெய்வ வடிவத்தின் மனித வடிவம் என்று உலகம் புகழ்கிறது. அந்த தெய்வ வடிவம், இடது கன்னத்தில் ஓங்கி குத்து வாங்கி கரு ரத்தம் கட்டி நிற்க, உதடு பல்லில் குத்தி கிழித்து இரத்தம் வழிய, முதுகு, புஜம், கை, இடுப்பு எல்லாவற்றிலும் விசிறிக் காம்பால் பட்டை பட்டையாக அடி வாங்கி மனம் சோர்ந்து உடல் துவண்டு உட்கார்ந்து இருப்பதை கவனித்து இருக்கிறீர்களா ? தாய், அதாவது கலியுக கண்கண்ட தெய்வம் அப்படி இருப்பதை நான் கவனித்து இருக்கிறேன்."



ஆணாதிக்கம், 'மேல் சாவனிஸம் '  என்ற வார்த்தைகள் அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால்  அகம்பாவம் என்ற வார்த்தை எனக்குத் தெரியும். என் அப்பாவின் அகம்பாவம் என்னுள் வந்து விடவே கூடாது என்பதற்கு நான் போராடத் தயாரானேன். என்   அகம்பாவம் முளைகட்டி எழும்போதே அதன் முனையை முறிக்கிற வித்தையை சிரமப்பட்டு தெரிந்து கொண்டேன்.

வாழ்க்கையைப் பற்றிய வெதும்பலில் இருந்தும், துக்கத்திலிருந்தும் என்னை ஒருவர் காப்பாற்றினார். அது வேறு யாருமல்ல. என் தாய் தான்.

"வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, சந்தன பொட்டு ,சாப்பாடு இதைத்தவிர உலகத்துல நிறைய இருக்குடா" என்று அப்பாவுக்கு அப்பால் இருக்கின்ற உலகத்தைக் காண்பித்தாள் . 

தன்னுடைய பள்ளிக்கூடத்து லைப்ரரியில் இருந்து புத்தகங்கள் எடுத்து வந்து படிக்க சொல்லி திருப்பி கொண்டு போய் வைப்பாள். இந்த தீனி எனக்கு போதவில்லை என்று வாரத்துக்கு ஒரு ரூபாய் கொடுப்பாள். 'லெண்டிங் லைப்ரரியை  ' அறிமுகப்படுத்தி என் படிக்கும் ஆர்வத்தை தூண்டியது அம்மா தான். 

"உன் சினேகிதா யாரும் ஒரு லெவலுக்கு மேல வளரப்போவதில்லை. அந்த மாதிரி சூழ்நிலையிலே அவங்க இல்லை. அதனால் சிநேகிதர் இல்லாமல் தனியாக இருக்க பழகிக்கொள்" என்றார். 


அம்மா சொல்லை மீறாமல் கடைபிடித்தேன். இன்றுவரை இந்த அறுபத்தைந்து வயது வரை உயிருக்கு உயிர் ஆன நண்பர்கள் ஒருவருமில்லை.

எனக்கு சிநேகிதமாக அம்மாதான் இருந்தாள். நான் எழுத ஆரம்பித்து "சாவி " யில் என் கொடி பறக்கத் துவங்கியதும் அம்மா குதூகலித்தாள்.

அப்போது எனக்கு இன்ஷ்யூரன்ஷ்   கம்பெனியில் நூத்தி என்பது ரூபாய் சம்பளம். முப்பது ரூபாயை கையில் கொடுத்து நூத்தி ஐம்பது ரூபாயை வீட்டு செலவுக்கு வைத்து கொள்வாள். என்னால் முப்பது ரூபாயும் செலவு செய்ய முடியாது. செலவு செய்ய தெரியாது.


என் அம்மா என் சிநேகிதி என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. என் தவறுகளை மிக நிதானமாக சுட்டிக் காட்டுவாள்.

அம்மா ஆசிரியை. தமிழ்ப் பண்டிதை. முப்பத்தாறு வருடம் ஒரு கிறிஸ்தவ மிஷனரி பள்ளியில் தமிழாசிரியராக இருந்தவர். மோனஹன்   பெண்கள் உயர்நிலை பள்ளிகூடத்தில், ஒரு சிறிய சேப்பல் இருக்கும். அந்த பிரார்த்தனை கூடம் அம்மாவுக்கு மிகப் பிடித்தது. வெளிச்சமும், காற்றோட்டமும் உள்ள மிக சாதாரண அறை தான் அது.  பிரார்த்தனை செய்து செய்து அந்த அறை, அந்த இடம் அதிர்வோடு இருந்தது.

நாங்கள் முரட்டுத்தனமான இந்து அல்ல. மதம் மாறிய கிறிஸ்தவரும் அல்ல. கடவுள் என்ற விஷயம் தான் முக்கியம். யார் கடவுள் என்பது முக்கியமல்ல. எல்லாம் தாண்டி கடந்தது கடவுள். மதத்தை மதம் சொல்கிற புத்தகத்தையும் தாண்டியது. அது மிகப் பிரமாண்டமானது என்பதை என் அம்மா எனக்கு பேசியும் பாடியும் விளக்கி இருக்கிறார். அவர் போட்ட விதை இன்று என்னுள் பெரும் ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது.

தேவாரமும்,  திருவாசகமும், நாலாயிர திவ்விய பிரபந்தமும், பைபிளும் கிறிஸ்துவ மத கீர்த்தனைகளும் குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்களும் மனதில் சுடர் ஏற்றி வைத்தன.

அம்மா எனக்கு பாலூட்டி. அம்மா எனக்கு தாதி. அம்மா எனக்கு ஆசிரியை. அம்மா எனக்குத் தோழி, அம்மா எனக்கு வழிகாட்டி , அம்மா எனக்கு இடித்து உரைப்பவள்.அம்மா என் இலக்கிய ஆசான். அம்மா என் வாழ்வின் ஒளி விளக்கு.



வெறும் தமிழ் மட்டும் சொல்லி கொடுத்திருந்தால் அவள் ஆசிரியை. அம்மா உள்ளே எனக்குள் சுடர் ஏற்றினாள். எனவே அவள் தெய்வ ரூபம். அம்மா என்பவள் மனித ரூபம் என்பது உலகோர் வழக்கம்.

என்  தாய் துன்ப பட்டதால், நான் துளிர்த்து எழுந்தேன். வாழ்க்கை சிலரை வெறும் உரமாகவும், சிலரை செடியாகவும் மாற்றுகிறது. என்ன செய்ய.

இந்த செடியும் நல்ல உரமாக வேண்டும். இதுவே பிரார்த்தனை. என் தாய்க்கு செய்யும் கைம்மாறு. அன்பு. காணிக்கை. 


[குறிப்பு : அவரின் எழுத்தில் சில பகுதியை மட்டும் இங்கு பகிந்துள்ளேன். நன்றி: குமுதம், ம.செ.]

Sunday, October 19, 2014

கார்டூனிஸ்ட் மதி அவர்களின் கார்டூன் அணிவகுப்பு

கார்டூனிஸ்ட் மதி அவர்களின் கார்டூன் சில நய்யான்டியாய் அன்றைய நிகழ்வுகளை விமர்சிக்க தவறுவதில்லை... அவற்றில் நான் கண்ட சில..

1. நல்ல வேளை :: தப்பிச்சு வந்தோம் :



2.இப்படி எல்லாம் பண்ண கூடாது..

3.தீபாவளி வந்தாச்சே :: நாங்க ரொம்ப நல்லவங்க :


4. நெசமாலுமா?


5.  என்னமோ போங்க :

6. முன்னமே சொன்னமே !
7. இப்படி இருந்தா நாங்க நம்ப முடியாது :


8. ஜப்பானிலே அப்படி :

 
(நன்றி : தினமணி )

Sunday, October 12, 2014

ராபின் ஷர்மா - who will cry when you die?


ராபின் ஷர்மா அவர்களின் "who will cry when you die?" புத்தகத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அவரின் முந்தய புத்தகங்களை போல், இதுவும் ஒரு வெற்றி புத்தகமே. கனடாவில் செட்டில் ஆகி விட்ட இந்தியர் இவர்.  நீங்கள் சுயமுன்னேற்ற  புத்தகம் வாசிக்க விருப்பம் உள்ளவரா? அப்படியாயின், இது உங்களுக்கே..

புத்தகத்தில் இருந்து.
1. வாழ்வை எப்படி அர்த்தத்துடன் வாழ்வது.
2. வாழ்வின் ஒவ்வொரு பொழுதையும் பயன்படுத்தும் முறை
3. நேரத்தை செலவழிக்கும் விதம்
4. உங்களின் நன்றி உணர்வு
5. அதிகாலை எழுதல் அதன் உடனடி பயன்
6. தியானம் பழகு
7. வாழ்வின் மிக முக்கிய மூன்று நண்பர்களை தேடி பிடி
8. உங்களின் குறிக்கோள் அட்டை
9. எதை எல்லாம் படிக்கலாம் ?
10. குடும்பத்துக்கு செலவிடும் மணித்துளிகள்.
11. உங்களுக்கு அருகே யார் வசிக்கிறார்கள்..
12. ஒவ்வொரு காலையும் எப்படி துவங்குகிறீர்கள்?

வாழ்வை கொண்டாடும் விதம், தான் பெற்ற அனுபவம் என ஆசிரியர் ஒவ்வொன்றையும் விவரிக்கிறார். பக்கத்துக்கு பக்கம் மிக சிறிய எளிய, அர்த்தமுள்ள கட்டுரைகள். இது நிச்சயம், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது.

தன் வாசிப்பு அனுபவத்தில், தன் பொக்கிஷமாய் நினைக்கும் புத்தகங்களை போகிற போக்கில் பட்டியல் இடுகிறார். அவை ஒவ்வொன்றும் அர்த்தம் பொதிந்தவை.

அவரின் இணைய  தளம்: http://www.robinsharma.com/
ஷர்மாவின் வலைப்பூ : http://www.robinsharma.com/blog/

ஒரு இந்திய மஹாராஜா இருந்தார். அவர் ஒவ்வொரு நாளும்தன் இறுதி யாத்திரையை நடத்த ஏற்பாடு செய்திருந்தார். இன்றோடுதன் வாழ்வு முடிந்தால் தான் விட்டு செல்லும் கடமைகள் என்னஎன அறியவும், வாழ்வு நிலையற்றது; தான் விரும்பிய செயல்களை செய்து முடிக்கவும் ஞாபகப்படுத்தவே அவர் அப்படி செய்தார். நேரத்தை சரி வர உபயோகிப்பது எப்படி என சொல்லி செல்கிறார். இந்த புத்தகத்தின் அடி நாதமும் அந்த கருத்தே உள்ளது.

ஒவ்வொரு நாளும் தான் பயணிக்கும் ரயிலில், தான் சந்திக்கும் ஒரு நபர் பற்றிய எண்ண ஓட்டம் : அவர் தினமும் ரயிலில் பயணிக்கும் நேரத்தில் சுற்றி இருப்பவர் யார் என பார்க்காமல், உடல் பயிற்சிகள் செய்ய ஆரம்பித்து விடுவார். நேரம் பயனுள்ளதாய் இருப்பது போலவே உடலும் வலு படும். நித்தமும் உடல் பயிற்சி செய்வது மிக மிக அவசியம் என்கிறார்.

தனிஅறை : தன் நேரம்: ஒவ்வொரு நாள் விடியலில் இந்த தனி இடத்தில்,தன் லட்சியங்களை நினைவு படுத்தவும், வேண்டிய புத்தகங்களை புரட்டவும், இந்த பயிற்சி பயன்படும். தனக்கான இடத்தையும் தேர்வு செய்து இவற்றை நடைமுறை படுத்த வேண்டும் என்கிறார்.
.
.


Saturday, October 11, 2014

அருட்செல்வர் நா. மகாலிங்கம்( குறைவிலா நிறைவே)







இதோ சென்ற வாரத்துடன் அருட்செல்வர் நா. மகாலிங்கம் அவர்கள் பிரியா விடை கொடுத்து விட்டார்கள். சோமன்துறை சித்தூரிலே துவங்கிய பயணம் தொண்ணூற்று ஒரு ஆண்டுகளுக்கு பின் சென்னையிலே முடிந்துள்ளது. கொங்கு மண், தன்னுடைய மிக முக்கிய ஆசானை, இழந்து விட்டது.

தான் எடுத்துக்கொண்ட எதுவாயினும், அதை அதி கவனத்துடன் செயல்படுத்துவது மகாலிங்கம் அவர்களின் வழக்கம். அவர் எடுத்துக்கொண்ட கல்வி பணியாகட்டும், ஆன்மீக பணியாயினும், பதிப்பு துறை ஆனாலும் அதில்   தன் தனி முத்திரையை பதிக்க தவறியது இல்லை. அவரின் ஆசிரியராய் கொண்டு வெளி வந்த "ஓம் சக்தி" இதழ் அதற்கு உதாரணம். அதில் வரும் ஒவ்வொரு தலையங்கமும், மிக மிக ஆழமாய் அலசப்பட்டு  இருக்கும். மண்ணுக்கும், மக்களுக்கும் உகந்ததை அவர் சொல்ல தயங்கியது இல்லை.

தன் குடும்பத்தில், தனக்கு பின் உள்ள இரண்டு தலைமுறையை சரியாக வழி நடத்தியதும், தன் பணிகள் எதுவும் தொய்வுராமல் அவர்களின் ஆதரவை இறுதி நாள் வரை பெற்றது அவருக்கு இருந்த ஆளுமை தான். அவர் உயிர் நீத்த   சென்னை விழாவும்( காந்தி ஜெயந்தி ) அவர் ஆண்டாண்டாய் தொடர்பவை. சிலர் போதும் இந்த பொது வாழ்வு என ஒரு கட்டத்தில் முடிவுக்கு  வருவர். இவர் அதற்கு நேர் எதிராய் வாழ்ந்து மறைந்துள்ளார்.

வைரமுத்து அவர்கள் 2012 ஆம் ஆண்டில், கோவையில் நடந்த மரபின் மைந்தன் முத்தையா அவர்களின் திருக்கடவூர் நூல் வெளியீட்டு விழாவில் இப்படி குறிப்பிட்டார்.

"இந்த மண் அவருடைய பெருமைகளை எழுபதாண்டுகள் அனுபவித்து கொண்டுள்ளது. அந்த பெருமகன் நூறாண்டுகள் தாண்டியும் வாழவேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் இயற்கையை இறைஞ்சுகிறோம்.

காரணம், இந்த நாட்டில் பெரியவர்களுக்கான இடம் காலியாகிக்கொண்டே போகிறது. மூத்தவர்கள், சான்றோர்கள், ஒரு சபைக்கு அலங்காரமாய் இருப்பவர்கள் , மக்களால் மதிக்கப்படுகின்ற மாமனிதர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே போவதை எண்ணி, நான் கவலைப்படுகின்றேன்.

எனவே எங்கள் அகராதியாக, எங்கள் முன்னனுபவமாக, எங்களின்  முன்னோட்டமாக அந்த பெருமகன் நூறாண்டு வாழ வேண்டும் என்று மன்றத்தில் நான் மகிழ்ச்சியோடு வேண்டுகின்றேன்.  "

வைரமுத்து தன் "இந்த குளத்தில் கல் எறிந்தவர்கள் " தொகுப்பில், திரு மகாலிங்கம் அவர்களை குறிப்பிட்டு "ஊருக்கு சர்க்கரை ஆலை வைத்து வழங்கும் அவர் உடம்பில் சர்க்கரை இல்லை " என மகிழ்வோடு குறிப்பிடுவார்.

மகாலிங்கம் அவர்கள் "தேசிய நதிகள் இணைப்புக்கு " பல முறை முனைந்தவர். அவரின் வாழ்நாளில் அது செயல் வடிவம் பெறாமலே போய்விட்டது. ஒரு முறை தன் வளர்ச்சிக்கான காரணத்தை சொல்லும் பொழுது சரியான இடங்களில் மிக சரியானவரை நியமிப்பதே சூட்சுமம் என்றார்.

பொள்ளாச்சியை சுற்றிய எல்லா ஊர்களிலும், அவரை பற்றி எண்ணங்களை நினைவு கூர்வார்கள். மகாலிங்கம் அவர்களின் இல்ல திருமணத்தை, காண சென்று வந்த கதையை நிறைய பேரிடம் கேட்டு உள்ளேன். தன் கல்வி நிறுவனத்தில் "அற்புதமான பேராசிரியர்களை " அழைத்து வந்தது அவருக்கு இருந்த மிக பெரிய ஆர்வம். கல்வியாளர்களை போற்றுவதும் அவரின் இயல்பு. அவரின் நிறுவனத்தில் நுழைபவர்கள், ஏதோ கோவிலுக்குள் அடியெடுத்து வைத்த பிரமை இருக்க கூடும்.  அப்படி தான் அவரின் நிறுவனங்கள் காட்சி தருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பொள்ளாச்சியில் நடக்கும் மாரியம்மன் பண்டிகையில், முதல் பூவேடு அவருடையது. இனி வரும் ஆண்டுகளில் அதை காண முடியாது என்பது துரத்ரிஷ்டமானதே.



பன்னிரு திருமுறைகளை, திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளிகொணர்வதிலும், அதை நிறைய பேருக்கு சென்று சேர்ப்பதிலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.   அவரை பற்றி பதிப்பகத்தார் ஒவ்வொருவரும் ஒரு நெடிய கதை சொல்ல, பண்பை சொல்ல வாய்ப்பு அதிகம். வள்ளலாரின் கருத்துக்களை, எங்கும்  கொண்டு சேர்த்த பெருமை இவர்க்கு உண்டு.

அவரின் ஓம் சக்தி இதழின் அட்டை படங்களும், அதில் வந்த தேர்ந்த எழுத்து ஓவியங்களும் கண்ணில் மினுங்குகின்றன. தேர்ந்த எழுத்தை போற்றி .வரவேற்றவர் அவர்.

சென்ற வார கல்கி இதழ் அவரின் அவரின் புகைப்படத்தை முகப்பில் ம. செ. வின் ஓவியத்துடன் வெளியிட்டு பெருமை சேர்த்தது. கல்கி இதழ் வெளியிட்ட தலைப்பு போல் அவரின் வாழ்வு "குறைவிலா நிறைவே."



அதே இதழில், ஓம் சக்தி இதழின் பொறுப்பு ஆசிரியர் திரு சிதம்பரநாதன் அவரின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டது சிறப்பாய் இருந்தது.


அவர் கலந்து கொண்ட விழாவின் இறுதி நிமிடங்களில் அவர்...


அவரின் ஓம் சக்தி இதழ் ..



அவரின் நீண்ட ஊக்கத்துக்கும், பணிக்கும் எங்களின்  வணக்கங்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வோன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்  படும்.

(நன்றி : கல்கி, தி  ஹிந்து )
.
.