Sunday, May 10, 2009

அன்னையர் தினம் - ஒவ்வொருவர் கைகளிலும் ஒரு பூங்கொத்து


இன்றைய தினம் - அன்னையர் தினம். என்றென்றும், சுய நலத்தின் சுவடின்றி தம் குழந்தைகளுக்காக பிரார்த்திக்கும் அன்பு இதயங்களுக்கு நன்றி. என்றென்றும் நம்பிக்கையும், நல்லறிவும் புகட்டி தனது குழந்தைகளை நல்ல மனிதர்களாய் வார்த்தெடுக்கும் அந்த கரங்களுக்கு வணக்கங்கள். உணவையும், அன்பும் ஒன்றே போல் குலைத்து கொடுக்கும் இதயங்கள். ஒரு குழந்தை சமூகத்தில் நல்லவண்ணம் வளர்ந்திருந்தால், அந்த நன்றி பெருக்கின் முதல் துளி அன்னையை சேரும். தைரியம் தருவதாய் இருக்கட்டும், புத்தி புகட்டுவதாய் இருக்கட்டும் அவர்கள் வழியே தான் நம்மை ஆட்கொள்கின்றன பல பண்பு நலன்கள். தாய் மொழியை நாவில் துளிர்க்க விட்டு, தந்தையை, உறவுகளை, இறையை அறிமுகம் செய்வித்து, நம்முள் என்றென்றும் உறைகிறார்கள்.

தாயே! முன்பு உடல் தந்து, உயிர் பேணி, உருவம் தந்து உலகில் உலவ விட்டாய். தாயே! குழந்தை பொருட்டு ஏற்ற நோன்புகள் எத்தனை. மழலையில் உளம் மகிழ்ந்து தளிர் விரல் பற்றி நடை பயின்ற நாட்கள் என்றென்றும் உனது நினைவில் ஒரு பொக்கிஷமாய் பாதுகாத்து வருகிறாய் என்பதை அறிவோம் .

நான் எனது நல் அறிவுக்கும், நன்நடத்தைக்கும் என் தாய்க்கு ஆயிரமாயிரம் முறை கடன்பட்டு இருக்கிறேன் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

ஒரு குட்டி கதை...
ஒரு மனிதன் இருநூறு மைல் தொலைவில் இருக்கும் தனது தாய்க்கு, மலர் கொத்து அனுப்பும் எண்ணத்தில், ஒரு மலர்களை விற்கும் கடைக்கு வருகிறான். அவன் வந்த தருணத்தில், கடை வாசலில் ஒரு சிறுமி சோக மயமாய் அமர்ந்து இருக்கிறார்.

சிறுமியின் வாட்டத்தை அறிந்த அந்த மனிதன் அந்த சிறுமியிடம் சென்று காரணம் கேட்கிறான். அதற்கு அந்த சிறுமி, எனக்கு ஒரு சிவப்பு ரோஜா வேண்டும் என்கிறாள். புன்னகை பூத்த அந்த மனிதன், இவ்வளவு தானே! வா! நான் வாங்கி தருகிறேன் என்கிறார்.

சொன்ன படியே அந்த மனிதன் சிறுமிக்கு ஒரு ரோஜாவை வாங்கி தருகிறான். அதன் பின்பு அவன் தனது தாய்க்கு பூக்களை வாங்குகிறான். அதை சரியான முகவரி தந்து அனுப்பி வைக்குமாறு சொல்கிறார். அதன் பின்னர் அந்த சிறுமியை தன்னுடன் காரில் வர அழைக்கிறார். அதற்கு அந்த சிறுமியும், நீங்கள் என் தாய் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்கிறாள்.

அந்த மனிதருக்கு வழி காட்டியபடியே காரில் பயணித்து வந்த சிறுமி, புதிதாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு சமாதியில் தான் கொண்டு வந்திருந்த சிவப்பு ரோஜாவை வைத்து வணங்கி திரும்பினாள்.

இந்த நிகழ்வை கவனித்த மனிதன், திரும்பவும் தான் புறப்பட்ட மலர் கடைக்கு வருகிறான். முன்பு தன் தாய்க்கு அனுப்ப சொன்னதை திரும்ப பெற்று கொண்ட அவன், தானே, ஒரு மலர்கொத்தை கையில் எடுத்து கொண்டு தன் தாய் இருக்கும் கிராமம் நோக்கி புறப்பட்டான்.

"தாயே!
உன்பொருட்டு தர
உலகில் மதிப்பானது எதுவுமில்லை!
உனது அன்பை உலக பொருட்கள்
எதை கொண்டும் ஈடாக்க வழியில்லை!
உன் கையால் இன்னுமொரு கவளம்!
அதுவே என்னால் முடிந்த கைம்மாறு!"


ஆண்டு தோறும் மனமுருக தாயை தொழுது பாடும், முருக பக்தர், முருகதாஸ் அவர்களின் பாடல் காதில் ஒலித்த வண்ணம் உள்ளது.

"அம்மா என்று அழைப்போமே!
அவளை அம்மா, அம்மா என்று அழைப்போமே!
வானில் உலவும் நிலவை காட்டி
வாயில் ஊட்டினாளே! மாயை எனும் உலகை காட்டி
உலகில் விரட்டினாளே!
பட்டு புரிந்து கெட்டு தெரிந்து முடிவில் அறிந்தோமே!
அவளை அம்மா, என்று அழைப்போமே! "
.
.
.

Sunday, May 3, 2009

அடப்பாவமே! இப்படியுமா!


ஒரு சிறிய கதை - என்னை மின்னஞ்சலில் வந்தடைந்தது. அதன் பகிர்வு இங்கே ...
அது ஒரு மாலை நேரம். இது ஒரு பொன் மாலை பொழுது - நிழல்கள் பட பாடல் போல் தான். ஏன், "ஒரு மாலை இளவெயில் நேரமாக " சூர்யா பாடி வைத்தது போல் கூட இருக்கலாம்.

கணவன், தன் வீடு திரும்பும் வழியில் , மனைவியையும் அழைத்து செல்லும் முனைப்பில், மனைவியின் அலுவலகம் வருகிறான். அந்த நேரம், மனைவி வந்த பாடில்லை. எனவே காரை ஓரமாக நிறுத்தியபடி காத்து இருக்கிறான். பொழுது போகாததால், சற்றே, தன் காரை துடைத்தபடி உள்ளான். அந்த தருணத்தில், ஒரு பிச்சைக்காரன், அருகே இருந்த, திண்ணையில் அமர்கிறான். அந்த தருணத்தில், அந்த மனிதனின் நிலையை பார்க்க பரிதாபமாய் உள்ளது. அங்கங்கே கிழிந்து தொங்கும் உடைகள்! அழுக்கேறிய தோற்றம்!

அந்த பிச்சைக்காரன், சற்றே தயக்கத்துடன், காரில் வந்த மனிதனிடம், பிச்சை கேட்கிறான். சற்றே யோசித்த கார் மனிதன், தன் சட்டை பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை அளித்து புகைக்க சொல்கிறான். அதை வாங்க மறுத்த பிச்சை காரன், ஐயா புகை பிடிப்பதால், புற்று நோய் வரும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்றான்.

சரி அதை விடு என கூறியவன், தன் காரில் இருந்து மது புட்டியை எடுத்து, இந்தா! இதை வைத்து கொள். இன்றைய பொழுதை இன்பமாக கழி! என்றார். அதற்கு பிச்சைக்காரன், அய்யா, நான், மது அருந்துவதில்லை. நீங்கள் அறியாததா! மது அருந்தினால், குடல், கல்லீரல் இவை பாதிக்கும். முடிவில், உடல் சீர்குலைந்து விடும் என்றான்.

அவனது பதிலில் திருப்தி அடைந்த கார் மனிதன், சரி, என்னிடம், பணம் உள்ளது. இருவரும் பந்தய சாலையை அடைவோம். என்னிடம் உள்ள எல்லா பணத்தையும் வைத்து, குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவோம் என்றான். அதற்கு பிச்சை காரன், அய்யா, சூதாடுவது குற்றம். அதை, என்னை செய்ய சொல்கிறீர்களே! என்றான்.

அந்த நிலையில், பிச்சைகாரனின் நிலை - இவன் ஏதாவது தர்மம் செய்வானா என்பதே! அந்த நிலையில், கார் மனிதன், நீ எங்களுடன் வரவேண்டும் என்கிறான். பிச்சைக்காரன், குழம்பியவனாய் பார்க்க, என் மனைவி, எப்பொழுதும், புகைப்பது, மது அருந்துவது, சூதாட்டம் பழக்கம் இல்லாத மனிதனை பார்க்க வேண்டும் என்று உள்ளாள். என்னையும் அப்படி இருக்க வேண்டும் என சொல்லி வந்தாள். அப்படி நான் இருந்தால், எப்படி இருப்பேன் என்பதை காட்ட தான் உன்னை என்னோடு அழைத்து செல்கிறேன் என்றான்.
.
.
.

ஆனந்த விகடனில் புதிய பகுதி - என்னைச் செதுக்கிய 7 நாட்கள்


விகடனில் புதிய பகுதியாக, ஒரு தன்னம்பிக்கை தொடராக, என்னைச் செதுக்கிய ஏழு நாட்கள் தொடர் துவங்கி உள்ளது. சமூக பரப்பினில், அரிதாக இனம் காணப்பட்ட, பட்டை வைரங்களாய் சுடர் விடுபவர்கள், தம்மை அதிகம் பாதித்த, அதீத முக்கியத்துவம் வாய்ந்த ஏழு தருணங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். மொத்தத்தில், அவர்களின் வாழ்கை நதியில் பயணப்படும் அனுபவம். இந்த வாரம் வரை, இந்த பகுதியில், ஏ. ஆர். முருகதாஸ், மயில்சாமி அண்ணாதுரை, எஸ். ராமகிருஷ்ணன், தமிழருவி மணியன் போன்றோர் தம் எண்ணத்தை வெளியிட்டனர். அவற்றில் என்னை தொட்டவை..
ஏ. ஆர். முருகதாஸ் ( A. R. Murugadoss)
அது, பெற்றோர் தம் குழந்தைகளை படம் பார்க்க கூட அனுப்பாத தருணம். அந்த தருணத்தில், எனது தந்தை, உனக்கு இதுதான் சரிவரும் என்றால், அதையே எடுத்துக்கொள் என்றார். ஒரு தருணத்தில், திடீர் என என் தந்தை மறைந்து விட்டார். மயானத்தில் இருந்து திரும்புகையில், ஒருவர், என் தந்தையை குறிப்பிட்டு, ஒரு சுகத்தையும் அவர் காணவில்லை. மகன்களை தறுதலையாய் வளர்த்து விட்டு, இறந்தது விட்டார் என்றார். அந்த வார்த்தைகள், என்றும் என்னுள் உந்தி தள்ளுகின்றன. அது எதிர்மறை வார்த்தைகள் என்றாலும், அவை என்னை பொறுத்தவரை ஊக்க சக்திகள் என்கிறார் முருகதாஸ் .

மயில்சாமி அண்ணாதுரை (Mayilsamy-Annadurai):
1) அது சந்திராயன் திட்டத்திற்கான, செயல் திட்ட இயக்குனரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு. இஸ்ரோ தலைவர், மாதவன் நாயர், ஒவ்வொருவராக நேர்முகம் செய்கிறார். அது அண்ணாதுரையின் முறை. அப்பொழுது, சந்திராயன் திட்டத்திற்கு, அண்ணாதுரை, தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறார். மாதவன் நாயர், அந்த முறை, ஒரு கேள்வியை முன்வைக்கிறார். உங்களை சந்திராயன் திட்டத்திற்கு அனுப்பினால், தற்போது நீங்கள் கவனித்து வரும், இன்சாட் தொடர்பான பணிகள் முடக்கி போகாதா என்பது அவரின் கேள்வி. அதற்கு பதிலளித்த அண்ணாதுரை, 'நான், எங்கள் குழுவில், நிறைய தலைவர்களை உருவாக்கி உள்ளேன். அவர்கள் எனது இடத்தை அருமையாக நிரப்புவர்' என்றார். ஒருவர், நம் குழுவில், அதித வளர்ச்சி அடைந்தால், சிறப்பாக முன்னேறினால், அவர் நமக்கு போட்டியாளராக, உருவெடுத்து விடுவான் என எண்ணுவது அர்த்தமற்றது என்கிறார். எல்லா தருணத்திலும் நம் அடுத்த நிலையில் இருப்பவரை முக்கியமானவராக வார்த்தெடுக்க வேண்டும் என்கிறார். இன்னொருவரை போட்டியாளராக எண்ணினால், அனைத்து கதவுகளும் அடைபட்டு போகும் என்பது அவர் நம்பிக்கை.
2) இது மற்றொருநாள். இடம், சென்னை விமான நிலையம். அந்த தருணத்தில், சில விமானங்கள், ஓடுதளம் இடம் கிடைக்காமல், வானில் பொறுமையுடன் வட்டமிட்டபடி இருந்தன. தனக்கான இடம் காலியாகும் வரை அவை காத்திருக்கும். அதன் பின் அவை இறங்கின. இதே விதியை சந்திராயனில், பயன் படுத்த திட்டமிடப்பட்டது. முதலில் சந்திராயன் செயற்கை கொள் காலநிலை நமக்கு அனுகூலமாக இருக்கும், தருணத்தில் ஏவப்பட்டது. நிலவு பூமியை நெருங்கும் தருணத்தில், நிலவில் வெற்றிகரமாக காலடி பதித்தது. இப்படி வாழ்கை, நமக்கான பாடத்தை எங்கெங்கோ ஒளித்து வைத்துள்ளது. இப்படியான நாட்கள் அவர்க்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

எஸ். ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan):
1) தன் நண்பர் ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவா மறைந்த புதனை, அதிகம் பாதித்த நிகழ்வாக சொல்கிறார். கொடிதினும் கொடிது நண்பனின் மரணம்.
2) அடுத்த நிகழ்வு, தன் முதல் கதை, 'பழைய தண்டவாளங்கள்', வெளியான நாள். மதுரையில் இருந்து விருது நகர் செல்லும் பேருந்தில் இருந்து தன் அடுத்த பயணி வைத்திருந்த புத்தகம் மூலம், தன் கதை வெளியாகி இருப்பதை அறிகிறார். அதன் பின், பின்னிரவில், அலைந்து திரிந்து தூங்கி கொண்டிருந்த தன் நண்பரை எழுப்பி தன் கதையை படிக்க கொடுக்கிறார். படித்த நண்பர், அருகில் இருந்த கடையில், தேநீர் வாங்கி தந்துள்ளார். ஒரு கோப்பை தேநீர், பகிர்ந்து கொள்ள ஒரு நண்பன், இவை இன்று வரையான தன் எழுத்தை இயக்குகின்றன என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

தமிழருவி மணியன் (Tamilaruvi Manian):
1)பத்தாவது படிக்கும் பொழுது, ராமையா வாத்தியாரிடம் கணக்கு பாடம் பயில அனுப்பினார்கள். அப்போது ஒரு நாள், எனது தாயார், கடைக்கு சென்று ஒரு சில பொருள்கள் வாங்கிவர சொன்னார்கள். நான், மறுத்து, போக்கு காட்டிக்கொண்டு இருந்தேன். என்னை அழைத்த ராமையா வாத்தியார் , 'மணியா! நன்றி உணர்ச்சியின் முதல் துளி எப்போதுமே நம் பெற்றவர்க்கு உரித்தானது. நன்றி படர்ந்து இருக்கும் இதயம் தானே இறைவனின் இருப்பிடம். சொத்து, சுகம், ஆஸ்தி, அந்தஸ்து என ஒருவன் வாழ்ந்திருந்தாலும், பெற்றோரை பேணி காத்து இருந்தால் மட்டுமே அவனது மறைவிற்கு பிறகும் வாழ்ந்திருப்பான். அப்படி பட்டவர்கள் ஆண்டாண்டு காலம், நிலைத்து நின்று உச்சகட்ட மதிப்பு பெரும் தேக்கு மரத்திற்கு ஒப்பாவர். பெற்றவர்களை உதாசீனப்படுத்துபவர்கள், எளிதில் வெட்டி வீழ்த்தி விடக்கூடிய முருங்கை மரத்துக்கு ஒப்பானவர்கள்.
நீ தேக்கா, முருங்கயா? என்று கேட்டார். இன்று வரை தேக்கு மரமாக நிலை கொள்ளும் வகையில் தான், எனது நடவடிக்கைகளை அமைத்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு பொழுது புலர்கையில், என் பெற்றோரை மானசீகமாக என் மனதில் நிறுத்தி வழிபடுகிறேன்.
2) நான் அப்போது , ஆறாம் வகுப்பு மாணவன். அப்போது கல்கி இதழில் வெளிவந்த நா. பார்த்தசாரதியின், 'குறிஞ்சி மலர்' தொடர் கதையை என் தந்தை ஆழ்ந்து வாசிப்பார். அப்படி என்னதான் அவர்களை ஈர்த்து இழுக்கிறது என்று நானும் அந்த தொடர் கதையை வாசிக்க தொடங்கினேன். மயிலிரகாகவும், வாள் முனையாகவும் வார்த்தைகளை நா.பா. பிரயோகித்த விதம் பேராச்சர்யம்!
பனித்துளியை விட பரிசுத்தமாக கதையின் நாயகன் அரவிந்தன் தன் வாழ்கையை அமைத்துக்கொண்டு இருப்பான். 'தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்பார்கள். ஆனால், சின்ன விதிவிலக்காக தீதும் நன்றும் தரவல்லது ஒரு புத்தகம். இன்று நான் செழும் செல்வத்தையும், அதிகார அரியணையையும் கைக்கொள்ளாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஒரு நல்ல மனிதனாக, எனது ஆயுளை இந்நாள் வரை கழிப்பதற்கு அந்த அரவிந்தனுக்குக் கடமைப்பட்டு இருக்கிறேன்.
[குறிப்பு: நிஜம் தான். உங்களை போலவே நாங்களும், செதுக்கப்பட்டுள்ளோம். நா. பா. என்கிற மணிவண்ணன் அவர்களின் பாத்திரங்கள் எவ்வளவு தனித்துவம் மிக்கவை. ஒரு அரவிந்தன், பூரணி, சத்திய மூர்த்தி, மோகினி, பாரதி' - காலத்தை வென்றெடுத்த கதா மாந்தர்கள். என்றென்றும் பொருந்தும் உதாரண மனிதர்கள். அன்றாட வாழ்வில், அரவிந்தன், பூரணி என பெயர்களை அறியும் பொழுது மனம் தானாகவே, தீபம் நா. பார்த்தசாரதியை(N.Paarthasaarathy) ஞாபகத்திற்கு கொணர்கிறது. ]

[இவற்றில் பெரும்பாலானவை, என் சொந்த வார்த்தைகளின் வழியே, அவர்களின் உணர்வை பிரதிபலித்திட முயன்று உள்ளேன். ]


.


.

Sunday, April 19, 2009

மகாத்மாவோடு நெடிய பயணம்


சில நாட்களுக்கு முன் ஒரு சிறு விவாதம்; நண்பன், காந்தி முழுக்க முழுக்க ஒரு சுயநல வாதியாகவே வாழ்ந்து உள்ளார். தேச பிதாவாக இருக்க அப்படி ஒன்றும் அவர் நாட்டிற்க்கு செய்திடஇல்லை. காந்தி ஒன்றும் அப்படி கொண்டாட வேண்டிய மனிதரில்லை என்பதே அவனது விவாதம்.

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் பொழுதும், பின்னரும் அவர் சொத்து குவித்தார். எப்பொழுதேனும், அவர் தன் வாழ்விற்கு உழைக்கவில்லை. ஆனால் வாழ்வு முழுதும் அவர் பட்டினி கிடக்கவில்லை - என்பதாய் விவாதம் நீண்டது. காந்தியின் மறைவிற்கு பின்னான அறுபது வருடம் கழித்து, இளைய தலை முறை எப்படி காந்தியை நினைவு கூர்கிறது; அது ஒரு காலம். காந்தியின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு விரல் அசைவும், எத்தனையோ இளைய உள்ளங்களை இயக்கின; இன்று நினைத்தாலும் மலைப்பாகவே உள்ளது; அத்தனை பெரிய தேசம் ஒரு மனிதனின் கட்டளைக்கு காத்து இருந்த தருணம். இறைக்கு இணையாக போற்றிய தருணம். அப்படியான காந்தியின் சுவடுகளை பின்னோக்கி பார்த்த பொழுது.. நிறையவே நண்பனின் கேள்விக்கு விடை கிடைத்தது. மகாத்மாவின் சுய ரூபத்தை தரிசித்த திருப்தி. பல தருணங்களில் நல்ல முத்துக்கள் சிதறியபடி உள்ளன. ஒரு சில தருணத்தில் மட்டும் நாம், சிதறிய முத்துக்களில் சிலவற்றை எடுக்கிறோம்.. "http://www.mkgandhi.org/" இணைய தளம், புதிய கருத்துக்களை சொல்லி சென்றது. அவற்றை பகிர்ந்து கொள்ளும் நிமிடங்கள் இவை..

இருண்ட கல்கத்தா நகரமும், ஒளிர்ந்த டெல்லியும்:
அது "1947" ஆம் ஆண்டு. இந்து முஸ்லீம் கலவரத்தால் சமூகம் சீர்குலைந்து இருந்தது. இருண்டு கிடந்த கல்கத்தா நகரத்திற்கு, கலவரத்தால், சிதைந்திருந்த கல்கத்தாவிற்கு காந்தி அமைதியை மீட்டு கொண்டிருந்த தருணம். இன்னொரு புறம், ஒளிரும் டெல்லி நகரம்; ஆகஸ்ட் பதினான்கு, "1947" டெல்லி விழா கோலம் பூண்ட தருணம்.. பண்டித ஜவகார்லால் நேருவின் வரிகள்.. "உலகம் விழித்திடும் நேரத்தில், இந்தியா புதிய எழுச்சியோடு சுதந்திர காற்றை சுவாசம் செய்கிறது. உறங்கி கொண்டிருந்த இந்த தேசத்தின் ஆன்மா, விழித்து எழுகிறது" என்பதாய் நீள்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த இரவில் காந்தி டெல்லியில் இல்லை. தொலைதூர கல்கத்தா நகரில், ரணமான ஊருக்கு மருந்திடும் பணியில் காந்தி.. எவ்வளவு வித்தியாசம்..

சுதந்திரம் அடைவதற்கு முந்தைய வாரத்தில் ஒரு நாள். நேரு மற்றும், படேலின் தூதர் ஒருவர் காந்தியை காண கல்கத்தா விரைகிறார். அவர் கல்கத்தா அடைந்த நேரம், நள்ளிரவு. அப்பொழுதும், கல்கத்தா கலவர மேகம் சூழ்ந்து உள்ள தருணம். அந்த சிறப்பு தூதர், நான் நேருவிடமும், சர்தார் படேல் இடமிருந்தும் ஒரு முக்கிய கடிதத்துடன் உங்களை காண வந்துள்ளேன் என்றார். அப்பொழுது காந்தி, நீங்கள் இரவு உணவு உண்டாகி விட்டதா? என்றார். 'இல்லை' என பதில் வரவே, காந்தி அவருக்கு இரவு உணவு பரிமாறினார்.

அதன் பின் காந்தி அவர் கொணர்ந்த கடிதத்தை பிரித்து படித்தார். கடிதம் இப்படி சென்றது. "பாபுஜி, நீங்கள், தேச தந்தை, நாடு விடுதலை அடையும் தருணத்தில் ஒரு மகிழ்வான தருணத்தில், நீங்கள் டெல்லியில் இருக்க வேண்டும். எங்களை ஆசிர்வதிக்க வேண்டும்" என சென்றது. இதற்கு பதிலளித்த காந்தியின் பதில் இதயம் தொடுபவை. "என்ன முட்டாள் தரமான எண்ணம் இது! வங்காளம் பற்றி எரிகிறது. இந்துக்களும், முஸ்லீம்களும், ஒருவரை ஒருவர் கொன்று கொள்கின்றனர். அவர்களின் வேதனையை, தீனமான குரலை இருண்ட வங்கத்தில் கேட்கிறேன்! இந்த தருணத்தில், என்னால் எப்படி விழா கோலத்தில் திளைக்கும் டெல்லியை அடைய முடியும்," என சொன்னார். "அமைதியை கொணர நான் கல்கத்தாவில் இருந்தாக வேண்டும்; ஏன்; எனது உயிரை தந்தாவது, அமைதியையும், நல்லிணக்கத்தையும் மீட்டு எடுப்பேன்" என்கிறார்.

அடுத்த நாள் காலையில் தூதர், டெல்லிக்கு புறப்படுகிறார். அது மனிதம் மலர்ந்த தருணம்; அந்த தருணம் காந்தி ஒரு மரத்தின் கீழ் நிற்கிறார். அந்த சமயம், ஒரு உலர்ந்த இலை மரத்தில் இருந்து கீழே விழுகிறது. காந்தி கீழே விழுந்த இலையை கைகளில் எடுத்து கொண்டபடி, "நண்பரே நீங்கள் டெல்லிக்கு திரும்புகிறீர்கள். நேருவிற்கும், படேலுக்கும், இந்த காந்தியால் என்ன பரிசு கொடுக்க முடியும். நான் அதிகார பலமோ, பண பலமோ அற்ற சாதாரண மனிதன். நேருவிடமும், படேலிடமும், இந்த காய்ந்த இலையை சுதந்திர தின பரிசாக கொடுக்கவும்" என்கிறார். அந்த தருணத்தில், வந்த தூதரின் விழியெல்லாம், கண்ணீர். அந்த தருணத்திலும், தன் நகைச்சுவை உணர்வை கைவிடாத காந்தி, "கடவுள், எவ்வளவு உயர்வானவர்? அவர் காந்தியிடம் இருந்து ஒரு உலர்ந்த இலையை கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை, இப்பொழுது இலை ஈரமாகி விட்டது என்றார்; இந்த இலையை உங்களின் கண்ணீர் உடன் எடுத்து செல்லுங்கள்" என்றார்.

நவகாளி அமைதி யாத்திரை:
நவகாளி அமைதி இன்றி மத கலவரம் சூழ்ந்து இருந்த தருணம். அன்று இருந்தது ஒரே காந்தி. ஊர் ஊராக சென்று, மத நல்லிணக்கத்தை கொண்டுவந்து கொண்டிருந்தார். ஒரு தனி மனிதனின், இரக்கமும், தைரியமும், அமைதியை மீட்டெடுக்க உதவின. அவர் ஒருவரால் மட்டுமே முடியக்கூடிய வேலை அது. சுதேச கிருபாலினி, காந்தியுடன் பயணித்த ஒருவரின் நேரடி அனுபவம் இது. காந்தி கிராமம் கிராமமாய், கைகளில் புனித புத்தகம் சுமந்தவராய்(குர்ரானும், கீதையும்) அமைதியை கொணர்கிறார். ஒவ்வொரு இடமும், அமைதிக்கு கூட்டு பிரார்த்தனை. அமைதிக்காக இந்து முஸ்லீம் மக்களுடன், நல்லிணக்க உறுதி மொழி. ஊரில் அமைதி திரும்புவதை, உறுதி மொழி கடை பிடிப்பதை காணுதல்; அடுத்த ஊர்; இப்படியான தொடர் பயணம் அது. அந்த தருணம் ஒரு நெஞ்சை தொடும் சம்பவம்..


அந்த ஊரில் இந்து முஸ்லீம் மக்கள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்து வந்துள்ளனர். எப்பொழுதும் போல் அன்றும், காந்தியும், இந்து முஸ்லீம் பெரியவர்களை வீட்டை விட்டு வெளியில் அழைகிறார். அவரது எண்ணம், கூட்டு வழிபாடு, மத நல்லிணக்க உறுதி மொழி. ஆனால் அவரது அழைப்புக்கு யாரும் செவி சாய்த்தாய் தெரியவில்லை. அந்த தருணத்தில், காந்திக்கு இன்னொரு எண்ணம். இந்து முஸ்லீம் சிறுவர்களை அழைக்கிறார். நீங்கள் இறைவனின் குழந்தைகள்; உங்களில் வேற்றுமை கிடையாது என்கிறார். அவரிடம் கொண்டு சென்றிருந்த பந்து உள்ளது. சிறுவர்களை தன்னுடன் விளையாட அழைக்கிறார். முதலில் தயங்கியவர்கள், பின் ஒருவர் ஒருவராய், காந்தி அமர்ந்து இருந்த மேடையை அடைகிறார்கள். அவர்களிடம் காந்தி வீசிய பந்துகள் அவரிடம் திரும்பி வருகின்றன. சிறுவர் சிறுமியரிடம், அரை மணி நேரம் விளையாடிய காந்தி பின்வருமாறு கிராமத்தவரிடம் பேசலானார்.

"பெரியவர்களான உங்களிடம், தைரியம் இல்லை.. உங்கள் குழந்தைகளிடமிருந்து நீங்கள் கற்று கொள்வது நலம் என்கிறார். ஒரு இந்து குழந்தை, முஸ்லீம் குழந்தை கண்டு அச்சப்படவில்லை, அதே போல், முஸ்லீம் குழந்தை இந்து குழந்தையை கண்டு " அச்சப்படவில்லை என்கிறார். அவர்கள் ஒன்றாக என்னிடம் வந்தனர். என்னிடம் அரை மணி நேரம் விளையாடி களித்தனர் என்றார். அவர்களிடம் இருந்து, பெரியவர்களான நீங்கள் கொஞ்சமாவது கற்றுக்கொள்ள முன்வாருங்கள். உங்களுக்குள், அக தைரியம் இல்லாவிட்டால், உங்கள் குழந்தைகளிடம் கற்று கொள்ளுங்கள் என்கிறார்.
அதன் பின் இந்து முஸ்லீம் பெரியவர்கள் ஒருவர் ஒருவராய், காந்தியை சந்திக்கின்றனர். அந்த நிலையில், அவர்களிடம், ஒருவர் மற்றவரை கொல்வதில்லை எனும் உறுதி மொழியை அனைவரிடமும் எடுக்க வைக்கிறார். அமைதி திரும்புகிறதா, என்ற காத்திருப்பு காந்தியின் வழக்கம். இப்படியாய் காந்தியின் பயணம், தொடர்கிறது. இப்படி கிராமம், கிராமமாய், நவகாளியை சுற்றியலைந்து, அமைதியை கொணர்கிறார்.


ஹோரஸ் அலக்சாண்டர், ஒரு முன்னணி பத்திரிகை ஆசிரியர் தான் பார்த்த அனுபவத்தை ஒரு தலைவரிடம் விவரிக்கிறார்.
ஒரு நாள், காந்தியின், பிரார்த்தனை சென்றுகொண்டு உள்ளது. அந்த நிலையில் ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியை தாக்கினார். அந்த மனிதர் காந்தியின் கழுத்தை பிடித்து கொண்டார். காந்தி முழுவதுமாய் நிலை குலைந்து விட்டார். அப்பொழுது கீழே விழும் தருணத்தில், குரானில் இருந்து ஒரு அழகான மொழியை உதிர்த்தார். குரான் மொழியை கேட்ட மனிதர், காந்தியின் கால்களை தொட்டு வணங்கினார். தன் செயலுக்கு மன்னிப்பு கோரிய அவர், தனது செயலுக்கு வெட்கப்படவும் செய்திட்டார். "நான் ஒரு பாவம் செய்திட்டேன். நான் உங்களுடன் இருப்பேன், உங்களுக்கு துணையாய் இருப்பேன். எனக்கு ஏதாவது பணி இருந்தால் சொல்லுங்கள்" என்றார். அந்த தருணத்தில் இரக்கம் மிக்கவராய், "யாரிடமும், இங்கு நடந்ததை சொல்லாதே, இல்லாவிட்டால் மீண்டும் இந்து முஸ்லீம் கலவரம் உருவாகலாம்.. என்னையும், உன்னையும் முற்றிலும் மறந்து விடு" என்கிறார். நடந்த செயலுக்கு வருந்தியவனாய் அந்த மனிதன் அந்த நிமிடம் விடைபெற்று சென்றான்.


கருணையும் கொடூரமும்:
மற்றொரு வலிகள் நிறைந்த சம்பவம். இந்த சம்பவம், ஆச்சார்யா கிருபாலினி யின் மனைவி சுதேச கிருபாலினி விவரித்தது. அவர் காந்தியின், அமைதி யாத்திரையில் நவகாளியில் உடன் சென்றவர். ஒரு நாள் நள்ளிரவில் சில முஸ்லிம் மனிதர்கள், அமைதி யாத்திரையில் உடன் வரும் மூன்று இந்து இளம் பெண்களை கடத்திட திட்டமிட்டு உள்ள தகவல் கிடைக்கிறது. அது கலவரம் சூழ்ந்த நாட்கள். நள்ளிரவில், அருகில் இருந்த முஸ்லீம் மனிதரின் கதவை தட்டிய கிருபாலினி, இந்த மூன்று பெண்களையும், உங்கள் கட்டுப்பாட்டில் விட்டு செல்கிறேன். நீங்கள் இவர்களை உங்களின் பெண்களாக கருதி பாதுகாத்து வர வேண்டுகிறார். அந்த மனிதரும், இசைகிறார். மூன்ற மாதம் கழித்து கலவரம் ஒரு வழியாய் முடிவுக்கு வருகிறது. மூன்று பெண்களும் அவர்களின் வீடு செல்கின்றனர். அந்த நிலையில், அவர்களின் பெற்றோர் நீங்கள், முஸ்லீம் வீட்டில், மூன்ற மாதம் இருந்து வந்துளீர். ஆகவே ஆச்சாரமானே, வைதீகமான வீட்டில், உங்களுக்கு இடமில்லை என விரட்டுகின்றனர். அப்படி நிராதரவானவர்க்கு, காந்தியின் ஆசிரமமே இல்லமாய் போனது. அவர்களை திருமணம் செய்திட யாரும் முன்வரவில்லை. இது காந்தியை மிக மிக அதிகம் வருந்த செய்திட்டது.

இப்படி காந்தியின் வழியெல்லாம், மனித நேயம் மணம் பரப்புகிறது.
.
.
.