Saturday, February 12, 2011

கிரிக்கெட் திருவிழா - ஒரு பார்வை


இதோ தொட்டுவிடும் தூரத்தில் கிரிக்கெட் திருவிழா. டீ கடை பெஞ்ச் முதல், வசந்த் அன் கோ ஷோ ரூம்[அட அங்க தானுங்க, பெரிய டீவில கிரிக்கெட் காட்டுறாங்க!  ] வரை கிரிக்கெட் விவாதங்கள் சூடு பிடிக்கும். ஜெயித்து விட்டாலும் சரி, தோற்று விட்டாலும் சரி, ஒரு மூச்சு அத்தனையும் பேசி விட்டால் தான் நம் மனசு ஆறும்..   இந்த பிள்ளையாண்டான் இப்படி விளையாடி இருக்கணும் என அங்கலாய்போம் ..  முடிந்தால் அவனுக்கு, கத்து குட்டி என எண்ணி ஆட்ட நுணுக்கங்களை கற்று தர முன் வருவோம்..


 டாஸ் வென்று பவுலிங் எடுத்து இந்த கேப்டன் கெடுத்தான்?! என பட்டியலை அடுக்கி தள்ளுவோம்... அட! அட! எவ்வளவு நல்ல கேட்ச்.. லட்டு மாதிரி புடிச்சிருக்கணும் அல்ல?( இந்த கிரிக்கெட்டரை,  ஒரு நடை திருப்பதிக்கு அனுப்பினால் என்ன ? அங்க தான் நாள் முழுக்க லட்டு பிடிக்கிராங்களே!  ).. இப்படி கோட்டை விட்டு, நெடுமரம் மாதிரி நிக்கிறான் பாரு? என டோஸ் விடுவோம்..  இந்த பாலை இப்படியா விசுறது.. நான் கூட சரியா வீசுவேன் என சொல்வோம்... ஒரு ரோஷம் இருக்குதா பார்? எதோ வந்தமா வீசி போனோமான்னு நிக்கிறான்.. என வசை பாடுவோம்..

இதை விட நம்மவர்க்கு பெரிய சந்தேகம் வரும். அது எப்படி அவன்( முக்கியமாய் ஆஸ்திரேலியா, தென் ஆபிரிக்க பவுலர்.. ) வீசுனா மட்டும் தோள்பட்டைக்கு மேல பந்து எகுறி சீறுது? நாம வீசுனா, முழங்கால் வரை கூட எழும்ப மாட்டேங்குது என புலம்பி நம்மை நாமே கேட்டு கொள்வோம்.. அவர்களும்( இந்திய பவுலர் தானுங்க.. ) நாங்க என்ன வெச்சுகிட்டா வஞ்சனை பண்ணுறோம்.. எதோ எங்கனால முடிஞ்சது! இப்படி எங்களை கேட்ட நாங்க என்ன தான் பண்ண முடியும்?   நீங்க எப்பவும் போல "கமான் இந்தியா!", "சக்தே இந்தியா!" சொல்லணும்.. ஆமா!  அப்ப தான் நாங்களும் ஏதோ எங்களால முடிஞ்ச வரை விளம்பரமா நடிச்சு தேர்த்த முடியும் என எண்ணுவார்களோ என்னவோ? 

இந்த முறை, எப்போதும் இல்லாத வகையில்  "டெண்டுல்கருக்காக இந்த உலக கோப்பை" என மகி முதல் மற்றவர் வரை களத்தில் உள்ளனர்.. "தனி நபருக்காக இப்படி எல்லாம் தத்து பித்துன்னு உளறி வைக்க கூடாது..நாட்டுக்காக விளையாடுகிறோம் என்பது நினைவில் இருக்க வேண்டும் " என பெரியண்ணன், ஸ்டீவ் வா சொல்லி இருக்கிறார். அவர் சொன்னா, சரியா தான் இருக்கும்..  எப்படியோ, இந்த உலக கோப்பை முடிந்த உடன், மிக பெரிய பட்டாளம் ஓய்வை நோக்கி அடியெடுத்து வைக்கும்..

எனக்கான கிரிக்கெட் மீதான நட்பு, பிரியம், ஈடுபாடு, வெறி ஏறக்குறைய இருபது ஆண்டுகளாய் இருக்கிறது.. இப்போ முன்ன மாதிரி இல்லை( வெறி, வெல்ல கட்டி எல்லாம் தானுங்க.. ).. சூதாட்ட புகார் வந்த பின், தெருவோர கிரிக்கட் ரசிகன் கூட "அட காசு பார்த்துட்டனுகளோ என்னவோ? " என அவ நம்பிக்கை கொண்ட பின் நாம் சுதாகரிக்காமல் விட்டால் எப்படி..   என்னவோ போங்க! காங்கிரசில் தஞ்சம் அடைந்த  அசாரின் ஆட்டம், ஜடேஜாவின் சிக்சர்கள், குரோனியே விட்டு சென்ற கேப்டன் இலக்கணங்கள் நிச்சயம் ஆச்சரியமானவை.. 

என்னை கவர்ந்த உலக கோப்பை நட்சத்திரங்களில், மிக முக்கியமானவர் "மார்டின் குரோ". அவர்கள் நாட்டில் போட்டி நடந்ததை மூலதனமாய் கொண்டு புது உத்திகளை வெளிப்படுத்தி, நியுசிலாந்து அணியை அரை இறுதிவரை 1992 உலக கோப்பையில்  கொண்டு வந்தவர்.  அரை இறுதியில் பாகிஸ்தானுடன் தோற்று வெளியேறினாலும், அந்த உலக கோப்பையை     நியுசிலாந்து உலக கோப்பை என சத்தியமாக சொல்லலாம். அந்த உலக கோப்பையில் அதிக ரன்களை அள்ளிய "க்ரோ", ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முழு உதாரணம்.. "ஒரு குண்டூசியை எப்படி பயன்படுத்த வேண்டும்" என்பதை க்ரோவிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என அன்று புகழாரம் சூட்ட பட்டார். அந்த அளவு கேப்டன்ஷிப்பை பயன்படுத்தி இருந்தார். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் "தீபக் படேலை"  வீச வைத்து எதிர் அணிக்கு தண்ணி காட்டினார். அதற்கு கை மேல் பலன் கிடைத்தது. "கிரேட் பாட்சை"  வைத்து, துவக்க ஓவர்களில் அடித்து ஆடி, புது உத்திகளை கொண்டு வந்தார்.

அந்த உலக கோப்பையில், இம்ரான் உலக கோப்பையை வென்றதும், அந்த பணத்தை தன் தாயின் நினைவாய், தான் அமைக்க இருக்கும் கேன்சர் மருத்துவமனைக்கு   செலவு செய்வதை சொன்னதும் நிறைய மனிதர்களின் புருவ உயர்வுக்கு காரணமாய் இருந்தார்..

1999 உலக கோப்பையை நிச்சயம் "தென் ஆப்பிரிக்காவின் "  உலக கோப்பை என சொல்லலாம்.. இந்த உலக கோப்பையில், "லான்ஸ் க்ளுஸ்னர்" ஆடினாரே ஒரு ருத்ர தாண்டவம்.. அது நிச்சயம் ஒரு சிலிர்ப்பான அனுபவம்.. அப்படி ஒரு ப்ளேயரை இதுவரை கண்டதில்லை.. பந்து கையில் இருந்தாலும் சரி, பேட் கையில் இருந்தாலும் சரி! ஒரு கை பார்க்காமல் அவர் விட்டதில்லை..  எதை வீசினாலும்( வேகம், சுழல் தான் ) சரி, பந்து பவுண்டரியில் தான் நிற்கும்.. அவர் ஆடிய 1999 உலக கோப்பை, அரையிறுதி இன்னும் இமை ஓரம் மினுங்குகிறது. அந்த கடைசி ஓவர் அடுத்தடுத்த இரண்டு பந்துகள் பவுண்டரியை தொட்ட தருணம், மனிதர் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் வல்லமை உள்ளவர் என சொன்னது.. அடுத்த பந்துகள், உலக கோப்பையை பறித்தாலும்[ கிப்ஸ் நழுவ விட்டது வேறு விஷயம்..  ], அவரின் ஆட்டம் ஈடு இணை அற்ற  "சாம்பியன்" ஒருவரின் ஆட்டமே..  

ஆஸ்திரேலியா அணியின் இன்றைய எழுச்சிக்கு காரமான ஒரு மனிதரை சொல்லவேண்டும் என்றால் நிறைய பேர் இவரை தயங்காமல், கை காட்டுவார்.. அது ஸ்டீவ் வா. 1994 தருணத்தில், ஆஸ்திரேலிய அணி, மேற்கிந்திய தீவுகளில், டெஸ்ட் தொடரை வென்றது.. இதில் ஸ்டீவ் வா 200 ரன்களை அள்ளி,  முக்கியமான ஆட்டத்தில் வென்றார்.. அந்த ஆட்டமே இவர்களின் இன்றைய எழுச்சி வரை இட்டு வந்திருக்கிறது.. அருமையான மன உறுதியும்,   கள வியூகமும்,  எந்த தருணத்திலும் போட்டியை முன் எடுத்து செல்லும் பக்குவமும்( 1999 அரை இறுதி, அதற்கும் முந்தய லீக் சுற்று நிச்சயம் சாம்பியன் ஆட்டமே! ) இவரின் தனி பாணி.. இவர் உலக கோப்பையை வென்றெடுத்த இரண்டு ஆஸ்திரேலிய அணியில் இருந்திருக்கிறார்..

இவர்களுக்கு சற்றும் குறையாத ஒரு மனிதர் உண்டென்றால் அது "ஆடம் கில்க்ரிஸ்ட்". துறுதுறுப்புக்கும், வேகத்துக்கும் இவரை போல வருமா என யாரும் சொல்வர்.. அப்படி ஒரு ஆட்டக்காரர். இவர் ஆடிய மூன்று உலக கோப்பையில், ஆஸ்திரேலிய அணி, உலக கோப்பையை தட்டி சென்றுள்ளது.. பாண்டிங் அண்ணனுக்கு, அமைந்த வரமே அங்கே இருந்த தூண்கள் தான்.. "மெக்ராத், வார்னே!, கில்க்ரிஸ்ட், ஹய்டன்! ". அணி எந்த நிலையில் இருந்தாலும், எந்த இக்கட்டான போட்டி என்றாலும், எதிர் அணி பவுலரை நிலை குலைய வைக்கும் திறமை "கில்லிக்கு"  உண்டு..  அந்த வகையில் அவர் ஆடி கொடுத்த 2007 உலக கோப்பை இறுதி போட்டியும், அவர் அடித்து நொறுக்கிய சதமும் நிச்சயம் சாதனை மயில் கல்லே..     

இந்த வரிசைகளில் முதல் உலக கோப்பையில் சாதித்த "கிளைவ் லாயிட்", இரண்டாவது உலக கோப்பையில் அற்புதமாக ஆடிய "விவ் ரிச்சர்ட்ஸ்", மூன்றாவது உலக கோப்பையை வென்று தந்த "கபில்", ஆறாவது உலக கோப்பையை ரசனை ஆக்கிய  "ஜெயா சூர்யா! ", பல தருணங்களில் அசத்திய மெக்ராத், வார்னே,  இவர்கள் முக்கியமானவர்கள்.

இந்த உலக கோப்பையை பொறுத்த வரையில், என் பார்வையில், இந்த அணிகள் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வல்லவையாய் இருக்கின்றன.. "ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, இலங்கை, இந்தியா?! " அடி பட்டு எழுந்து வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி நிச்சயம் பழைய பலத்துடன் இருக்கிறது.. அவர்களின் அசத்தல் ஆட்டம் இந்த உலக கோப்பையிலும் தொடரும்.. அவர்கள் விடாமல் தொடரும்( 1999 உலக கோப்பை முதல்  எந்த போட்டியிலும் தோற்காத பயணம் )  வெற்றி, இன்னமும் தொடர்கிறது. ஒரு நாள் உலக கோப்பையில், நாம் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்கிறோம்.. நாம் ஆஸ்திரேலியாவிடம் வாங்கும் அடியை யாராவது நினைத்தது உண்டா? 1987 க்கு பின் அடுத்தடுத்து நாம் அடி வாங்கியே வருகிறோம்..

சரி இந்த உலக கோப்பையில் இந்திய அணி எப்படி? மட்டயாளர்களில், இரண்டு மூன்று பேரே தற்போது முழு பார்மில் உள்ளனர்( ஷேவாக், பதான், கொஹ்லி ).. நம் ஷாட் பிட்ச், பலவீனத்தையே, பல அணிகள் பலமாய் பிடித்து கொண்டு விட்டன.. எதிர் அணியை அசத்தலாய் வீழ்த்த கூடிய பந்து வீச்சாளர்கள், மிரட்ட கூடிய வேக பந்து வீச்சாளர்கள் நம்மிடம் இல்லை.. நம், பலமான சுழல் கூட்டணி சற்றே சுணக்கத்தில்.. 'பாஜி'  நல்லா  தான் மட்டை பிடிக்கிறார்? ஆனா விக்கட்?( ரொம்ப கஷ்டமுங்க... ) . கடந்த உலக கோப்பையை வென்று வந்த அணிகளையும், நம் பலத்தையும் சற்றே தராசில் நிறுத்துங்கள்.. நாம் நிச்சயம் கோட்டை தாண்டவில்லை.      

எந்த ஆட்டத்திலும் இரண்டு ஆட்டகாரர்களின் எழுச்சி, மற்றவர்களின் துணை ஆட்டம், அணியை கரை சேர்க்க கூடும்.. பந்தை சரியாய் தடுக்கும் திறன் இருந்தால், நிச்சயம் அது அணிக்கு அருமையான பலம்.. அப்படி இருக்க நம்மிடம் ஒரு சிலரே தேற கூடியவர்களாய் உள்ளனர்.. ம்ம் .. பார்போம்.. அரை இறுதி வரை அணி வந்தால் அது நிச்சயம் பாராட்ட கூடியதே.. மும்பை வான்கடே மைதானமும், ஏப்ரல் இரண்டும் நிறைய விஷயங்களை சொல்ல கூடும்.. இதோ எதிர்வரும், கிரிக்கெட் திருவிழாவை ஆரவாரமாய் வரவேற்போம். இந்திய அணி சாதித்து காட்ட வாழ்த்துக்கள்:)
.
.           

2 comments:

சி.கருணாகரசு said...

நல்லாதான் சொல்லுறிங்க..... தொடர்க.

கே. ஆர்.விஜயன் said...

வழக்கம்போல் இந்தியா தான் ஜெயிக்கும் என நம்புகிறோம். அப்படி சொல்லுபவரைதான் பிடிக்கவும் செய்கிறது. ஆனால் நீங்கள் சொல்வது மாதிரி சட்டியில் இருந்தால் தானே ஆப்பையில் வரும். பார்ப்போம்.

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்