Sunday, February 6, 2011

வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் "


வண்ணதாசன் அவர்களின் "அகம் புறம் " தொகுப்பை மீண்டும் படிக்க நேர்ந்தது. ஒரு தித்திப்பான அனுபவமாய் அது இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் விகடனில் வாசித்தது என்றாலும், மீண்டும் வாசிக்கும் பொழுது தனித்துவமான அழகு அதில் இழையோடி இருந்தது. அவரின் கவிதைகளும், எழுத்தும் அப்படி இருப்பது தான் இயல்பு போலும். வாசித்த நாட்களில் அந்த தொடர் விதைத்த அத்துணை நிகழ்வுகளோடும் நானும் பயணித்தேன்.. நதிக்கரையில், அதற்கே உரித்தான நகர்வோடு பயணித்த உணர்வு   அதன் நகர்வில், அதன் வீச்சில்.. வாழ்வின் எல்லா புள்ளிகளையும் ஒரு தொடர்  தொட்டுவர முடியும் என நிரூபிக்கும் ஒரு  புத்தகம்;

அவரின் தொடரோடு பயணிப்பது ஒரு சுகானுபவம். இந்த தொடர் விகடனில் ஆரம்பிக்கும் முன், அவரோடு ஒரு பேட்டி கண்டு பிரசுரித்து இருந்தனர் விகடன் குழுமத்தினர்.. . "உங்கள் கனவில் தாமிரபரணியும், கல் யானைகளும் தற்பொழுது எல்லாம் வருவதில்லையா" என கேட்டிருந்தனர்.  அவரும் அப்படி கனவு வருவதில்லை என சொல்லி இருந்தார். பின்னர் வந்த நாட்களில், இதே கேள்விக்கு விடையாய்,  தொலைபேசியில் அழைத்திருந்த அவர் " சமீபத்தில் அந்த கனவு மீண்டும் வந்ததை மகிழ்வோடு சொல்லியதாய்" அந்த பேட்டி சென்றது.

இயற்கையோடும், அதன் அழகோடும் அப்படியே பயணிப்பது அவரின் எழுத்துக்கள்.   பி சி ஸ்ரீராம், பாலு மகேந்திரா, ரவி கே. சந்திரன், சந்தோஷ் சிவன் - இவர்களின் கேமரா கண்களை விட வண்ணதாசன் அவர்களின் பேனா படம் பிடித்து, எழுத்துக்கு எடுத்து வந்திருப்பவை, பறித்து வந்திருக்கும் மனோரஞ்சிதங்கள் மிக மிக அதிகம்.

சிந்தாமல், சிதறாமல், வாழ்வை அதன் இருளோடும், ஒளியோடும்  இரு கைகளுக்குள் பொத்தி எடுத்து காட்டும் அற்புத சக்தி அவரின் எழுத்துக்கள். இலையில் சிதறும் மழை துளியாயினும், காற்றில் கரகரத்து உதிரும் ஒற்றை சருகாயினும், புல்லாங்குழல் வழியே நழுவும் ஆழ்ந்த இசைபோலும்    வண்ணதாசனின் வரிகளில் மறு உயிர்ப்பு பெறுகின்றன. கரைந்தோடும் மனம்.. வளர்ந்து வளர்ந்து சிந்தை தொடும் சொல் நயம்.. அவரின் கட்டுரைகள் எங்கெங்கும்.

அவர் உவமையாய் சொல்லி சென்ற மனோ ரஞ்சித  பூ போல்,  அவரின் எழுத்து அத்தனை  வாசனை கொண்டதே. கன்ன கதுப்புகளில் படரும் இளம் புன்னகையோடு,  எண்ணங்களில் உலவுவது சுகமானதே. பக்கத்திற்கு பக்கம், அர்த்தம் சேர்க்கும் ஓவியங்கள், படங்கள்(அந்த சிவப்பு மிளகாய், அந்த சலூன் கடை, வீதியில் சிரிக்கும் பெண்கள், குழந்தைகளோடு ஓடிவரும் ஆட்டுக்குட்டி, அந்த  கிளிகள்,அந்த  மீன்கள், மனநிலை தவறிய மனிதர்கள்,  மர பொந்தில் இருந்து எட்டி பார்க்கும் சிறு குருவிகள் ), தொடரை அற்புதமாக்க போதுமானதாய் இருந்தது. நம் வீதியில் சந்திக்கும் அத்தனை மனிதர்களையும் எழுத்தில் கொண்டுவர இயலுமா? வண்ணதாசன் சாதித்து உள்ளார்;

அந்த தொடரோடு அவர் கண்ட அக உலகம் , புற உலகம் அற்புதமாய் விரிந்து காட்சி தந்தது. விகடனில் வெளி வந்த முதல் கட்டுரை தொடரே, அவரின் வீச்சை பிரதி பலித்தது. அந்த ஊஞ்சலில் நாங்களும் சக தோழராய் சலிக்க, சலிக்க ஆடினோம்.. தொடரில் வரும் பெயர்கள் - பிரம்ம நாயகம், பரமன், ஜான்சி, அருணா இவை எல்லாம் அற்புத அர்த்தம் தருபவை;

அட அந்த பள்ளி  வகுப்பறை, ஜான்சன் சார் - என பள்ளி நினைவுகளை மீண்டும் கண் முன் கொண்டுவரும்  பக்கங்கள்;என்ன ஒரு பசுமையான நினைவுகள் உங்களுக்கு;


" எத்தனையோ இரவுகளில் அசையாமல் தொங்குகிற அந்த ஊஞ்சல் சங்கிலிகளும் ஆள் அற்ற  பலகைகளும் என்னவோ செய்யும்... என்னவோ சொல்லும்"


அந்த தொடர் நகர்ந்த நாட்களில் தான் "லா. ச. ராமாமிர்தத்தின்" மறைவும் சுஜாதா அவர்களின் விடை பெற்ற நிகழ்வும், நடந்தது.. இதோ, அவரின் வார்த்தைகளில்..
"லா ச ரா வின் ஞாபகத்துடன் "அபிதா"வை  படிக்க வேண்டும் போல இருந்தது. புத்தகத்தை காணோம். யாராவது வாங்கி போயிருப்பார்கள். நல்ல புத்தகம் ஆறு மாதிரி. நகந்து கொண்டே இருக்கும். என்னிடம் இருந்து நகந்து போனவை போல, இங்கே நகர்ந்து வந்திருப்பவற்றுக்கும் குறைவில்லை. "ஜமிலா " என் புத்தக அலமாரியில் இருக்க என்னுடைய "அபிதா" வேறு யாரிடமோ இருப்பாள், அல்லது எங்கும் இருப்பாள். இப்படி சொற்களின் பகடை உருட்டி எத்தனை சதுரங்கம்! சொற்களின் அகல் ஏற்றி எத்தனை திருக்கார்த்திகை!    "

"ஒவ்வொரு இலை உதிரும் போதும், அப்பா அது இருந்த மரத்தையும் உதிர்ந்த விதத்தையும் பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறார்.. லா.  ச. ரா. ஒரு இலை, மாமா ஒரு இலை, வேலாண்டி பெரியப்பா ஒரு இலை, சமீபத்தில் சுஜாதா ஒரு இலை.. "

வண்ணதாசனின் சிறுவயதில் அவருக்கே இருந்த கேள்விகள்.... நம்முடைய வாழ்விலும் இப்படி தானே. ..

"சங்கர்லால் என்பது தமிழ்வாணன் அவர்களா, வேறு யாராவதா? ஓவியர் சில்பி எப்படி அச்சு அசலாக வரைந்து விடுகிறார்? எப்படி இவ்வளவு சின்ன வயதில், ரயில்வே பிடர் ரோடு கூட்டத்தில், நா காமராசனும், காளிமுத்துவும் இவ்வளவு அருமையாக பேசுகிறார்கள்.. ட்ராபால்கர் சதுக்கத்தில் மட்டும் ஏன் அவ்வளவு புறாக்கள்? சப்போட்டா பழ விதைக்கு, கருப்பு எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது?   "

சிறுவர்களின் உலகத்து பறவைகள் தொலையும; இறகுகள் ஒருபோதும்,  தொலையாது;

"கண்ணுக்கு தெரிபவற்றை  காட்டிலும், மண்ணுக்குள் புதையுண்டு போன கல் ரதங்கள்  தான் பார்க்கப்பட வேண்டியவை.. "

"எல்லா முகங்களையும் நான் ஏற்று கொள்கிறேன். என் முகத்தையும் அவர்கள் ஏற்று கொள்ள கூடும். நிராகரிப்பதற்காக அல்ல, ஏற்று கொள்வதற்காகவே இந்த வாழ்வு, இந்த மனிதர்கள்..  இந்த நதி. இந்த படி துறை. இந்த கல்மண்டபம்..

இந்த நதி ஓடும் பொது, இந்த படித்துறையில் குளிக்கிற நேரத்தில், இந்த கல்மண்டபத்தில்,   அமர்ந்து இருக்கையில், நான் அழகாக இருக்கிறேன். உள்ளும் வெளியும் அழகு. உள் தான் வெளி. அகம் தான் புறம். நான் தான் நீங்கள்..   "

அவர்களுக்குள் அப்படி ஒரு நல்ல  நட்பு;நட்பில் என்ன ; நட்பே நல்லது தானே;

இங்கே சொடுக்கவும்.. அவரின் அற்புத உலகில் சில முத்துக்கள்..
 உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா?
அபிதா

இந்த தொடர் முடிந்த பின், வண்ணதாசனுக்கு நன்றி சொல்லி, என் ஆழ்ந்த நேசிப்பை, வாசிப்பை அர்த்தப்படுத்தி கொடுத்தமைக்காய், ஒரு  கடிதம் எழுத வேண்டும் என்னும் எண்ணம் என்னுள் முளைத்தது. அது தான் இப்படி பதிவை உருமாறி உள்ளதோ?

 தொடரின் முதல்  பக்கத்தில், புத்தகத்தை அபிதாவுக்கு சமர்ப்பித்திருந்தார்; மீண்டும் அந்த பக்கத்தை புரட்டும் தருணங்கள், கண்கள் நீர் திரைக்கட்டும்;

.
.

No comments:

Post a Comment

உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்