Tuesday, January 26, 2010

அம்மாவின் தோழி


சில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வர எங்கள் பேருந்துக்காக, புளிய மர நிழலில் காத்திருந்தோம். அந்த நிலையில், சம்பூ.. நல்ல இருக்கிறாயா? எனும் குரல் கேட்டது.. நானும், அம்மாவும் ஒரு சேர திரும்பி பார்த்தோம். அந்த சமயம் ஐம்பதை கடந்த ஒரு பெண்மணி, அம்மாவின் கைகளை பிடித்து குதூகலமாய் விசாரிக்க ஆரம்பித்தார். சற்றே மாநிரத்தொடு, ஐம்பது வயதுக்கான உடல் மாற்றங்களோடு, உற்சாகமாய் பேச ஆரம்பித்தார். அவரின் கூந்தலை கவனித்தேன்.. அன்று அணிந்த மல்லி - கனகாம்பர கதம்பம் அவர்களை அலங்கரித்தது. அவர்களின் பேச்சின் இடையே, நான் அருகில் இருப்பதை கவனித்த அந்த அம்மா.. யார் உன்னோட பையனா? என்ன பண்றான்? படிக்கிறானா? என விசாரிக்க ஆரம்பித்தார்.

என் அம்மாவும், முகம் முழுக்க சிரிப்போடு, என்னையும், தம்பியையும், குடும்ப உறுப்பினர்களையும் எடுத்து சொல்லி கொண்டு இருந்தார். அவர்களின் உரையாடலை கண்ட நான் அவர்கள் பால்ய தோழிகளாய் இருக்க வேண்டும் என முடிவுக்கு வந்தேன். அவ்வளவு அன்யோன்யம்.. அவ்வளவு சந்தோசமும் திருப்தியும் அவர்களது பேச்சில்.. வெகு நாட்கள் தொடர்பு விட்டு போய் நிகழ்ந்த சந்திப்பாய் இருக்க வேண்டும்.. நான் அவர்கள் பேச்சில், அந்த அம்மா.. நொடிக்கொருமுறை, சம்பூ.. என விளித்தார்.. எனக்கு தெரிந்து யாரும், என் அம்மாவை இப்படி அழைத்ததில்லை. ஏன், என் தந்தை கூட மணமான நாட்களில், இப்படி அழைத்திருப்பார் என எனக்கு தோன்றவில்லை. அப்பொழுது தான், அந்த பேருக்கு அவ்வளவு, மகத்துவம் இருக்கும் என்பது புரிந்தது.. பெயர் அவ்வளவு அழகாகி, கூப்பிடும் மனிதரும், பெயருக்கு சொந்தக்காரரும், அவ்வளவு சந்தோசம் கொள்வார்கள் என... ஒரு பெயர் அழைக்கப்படுவதில், மனிதரின் மன நிலை பொறுத்து, குயிலின் குரலாகவோ மயிலின் குரலாகவோ இருக்கிறது.

மணமாகி வந்தபின், பெண்களின் உலகம் முற்றிலும் மாறி போகிறது. அவர்களுக்கு என ஒரு குடும்பம், குழந்தைகள் மாமனார், மாமியார் என பிரிதொரு வட்டத்துக்குள் தம்மை முழுமையாக்கி கொள்கிறார்கள்.. அவர்களுக்கு பிறந்தகம் செல்வதும், தம் நட்பு வட்டத்தை காண்பதும் அபூர்வமாய் போகிறது. ஆண்களின் உலகம் அப்படி இல்லை. பல நேரங்களில், நண்பர்களை காண பேருந்து பிடித்து செல்வதும், அவர் இங்கு வந்து காண்பதுவும் நடக்கிறது. பெண்களின் உலகில், தம் பையன், பெண்களின் திருமணம், உறவு வட்ட திருமணம் என சில நிகழ்வுகளில், மட்டுமே நட்பு வட்டத்தை, உறவு வட்டத்தை காண முடிகிறது. அவர்கள் பகிர்ந்து கொள்ளவும் ஆயிரம் விஷயம் தம் மன குடுவையில் உள்ளது.. உண்மையில், நம் ஒட்டு மொத்த வாழ்வில், நமக்கு உவப்பான விஷயம், நமது பெயரே.. அந்த பெயரும், ஒரு சிலரின் அழைப்பில் இத்தனை அழகாய், இவ்வளவு பொருளாய், நாம் எதிபார்க்காத அளவில் இருக் கிறது.. பல நேரங்களில், நாம் வருத்தம் கொள்கிறோம் .. என்ன பெயர் இது என.. ஆனால் இந்த நிமிடங்கள், இது போன்ற தருணங்கள், அதை பொய் ஆக்குகின்றன.

பல தருணங்களில், வீட்டில் இருப்பவர்கள், பெயர் சொல்லி அழைப்பதில்லை.. சின்னம்மினி, பெரியம்மினி, பெரிய தம்பி, சின்ன தம்பி, ஊர் பெயர் சொல்லி அந்த அம்மணி என பெயர்கள் இன்னொரு வடிவம் எடுக்கின்றன.. சிரார்களாய் இருக்கும் தருணத்தில், சின்ன பாப்பா, பெரிய பாப்பா.. சின்ன பாப்பனா .. பெரிய பாப்பனா என பெயர்கள்.. இப்படி பெயர்கள் பல வடிவங்களில்..


சமீபத்தில், ஒரு சிறு செய்தி படித்தேன்.. சாண்டோ சின்னப்பா தேவரிடம் ஒரு பையன் வேலை கேட்டு வந்தான். அவனிடம் அவர் வைத்த ஒரு கோரிக்கை, அவன் பெயரை மாற்றி கொள்ள வேண்டும் என்பதே.. அன்று முதல் அவன் பெயர் முருகன் என மாறி போனது.. தேவர் வாய்க்கு வாய், முருகா முருகா என கூப்பிட்டு அகமகிழ்ந்தார்.. தேவர் பேசும் பொழுதும் மனிதர்களை நீங்கள் என சொல்வதற்கு பதிலாய், முருகா என சொல்லவும் பழகி இருந்திருக்கிறார்.. முருகன் என்ற பெயர் அவருக்கு அவ்வளவு தித்திப்பை தந்து இருக்கிறது. இன்றும் மருதமலைக்கு, கால்நடையாக, பயணித்து மலை ஏறினால், காணும் எல்லா கல் மண்டபங்களிலும், இளைப்பாறும் கற்கள்,  தேவரின் பெயர் தாங்கி நிற்கின்றன.  முருக பக்தர்கள் இளைப்பாறி செல்ல உதவுகின்றன.. தேவரும் அந்த நிலை மண்டப தூண்களில் ஏதாவது ஒன்றில் குடிகொண்டு யாவற்றையும் அர்த்தத்தோடு பார்த்து கொண்டு இருக்க கூடும்..
 
சில நாட்களுக்கு முன், அந்த பெண்மணி, எங்கள் இல்லம் வந்து, தன பெண்ணின் திருமணத்துக்கு அழைத்தார்.. அந்த பெண்மணி தன மகள் அமரிக்காவில் போய் வேலை செய்ய பிரியப்பட்டதாகவும், அப்படியே அங்கு போய் இரண்டு வருடங்களாக வேலை செய்வதாகவும் சொன்னார்.. அப்படி சொன்னவரின் முகத்தில், பெரு வெளிச்சம்.. மாப்பிள்ளையும், அமெரிக்காவில், வேலை  செய்வதை சொன்னார்.. அவர் சென்ற பின்னர், என் தாய், அவர்களின் வாழ்வை, ஒரு முப்பது, முப்பத்து ஐந்து வருடத்திற்கு பின்னான நாட்களை விவரித்து இருந்தார்..


அந்த நாட்களில், பெரிய படிப்புகள் ஏதும் இல்லை.. பச்சை பயறு , தட்டை பயறு - பறித்தல் , பருத்தி எடுத்தல், தென்னை மரத்துக்கு தண்ணீர் சுமந்து ஊற்றுதல் என அவர்களின் நாட்கள் இருந்து இருக்கின்றன..

கிராமத்துக்கு வரும் பாத்திரக்காரனிடம் பேரம் பேசி வாங்கும் எவர் சில்வர் பாத்திரங்கள், அவர்களுக்கே உரித்தான பழக்கம்.. வருடத்துக்கு ஒருமுறை வரும், மாகாளி அம்மன் திருவிழாவும், அவர்கள் விளையாடி களித்த தூரிகளும், அன்று சுவைத்த குச்சி ஐசும், திருவிழாவுக்கு வரும் வளையல் காரனிடம், வகைக்கு ஒன்றாய் கை நிறைய வளையல் இட்டு நிரப்பியதும், சைக்கிளில் துணி கொண்டு வருபவனிடம் பேரம் பேசி வாங்கிய திருவிழா துணி மணிகளும், அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது.. அதுவே அவர்களின் தித்திப்பு நிமிடங்கள். இரவுகளில், அவர்கள் கற்ற கோலாட்டமும், கும்மியும், என்றென்றும் ஞாபகம் கொள்ள வைக்கின்றன.. அவர்கள் விட்டு வந்த கோலாட்ட குச்சிகள், அற்புத வேலைப்பாடோடும், அதன் நிறம் மாறாமல், அவர்களின் நினைவை போல் அப்படியே இருக்கின்றன. நாட்கள் பல கடந்தும், யாரும் அதை பெற்று கொள்ளவோ, எடுத்து பழகவோ இல்லை.. ஒரு வேலை, அது வீடு இடிக்கும் பொழுது, தண்ணீர் அடுப்புக்கு விறகாய் போகலாம்..
 
அதன் பின், வீட்டில், பார்த்த மாப்பிள்ளைக்கு வாழ்க்கைப்பட்டு, வாழ்வில், வெகுதூரம் வந்து விட்டார்கள்.. அவர்களுக்கு, நன்றாக சிவப்பேறிய மருதாணி கைகள், உவகை கொள்ள, மற்றவர்களிடம், காண்பிக்க போதுமானதாய் இருந்தது.. திருமணமாகி வந்து பார்த்த படங்கள், குழந்தையின் அழுகையோடு பார்த்த படங்கள் அவர்கள் நினைவுகள் எங்கும்..  ஆனால் அவர்களின், பெண்கள் அப்படி இல்லை.. அவர்கள் நிச்சயம் பெருமை பட்டு கொள்ளலாம்.. சிலர் அமெரிக்காவிலும், சிலர் சிங்கபூரிலும் நிறைய ஆங்கிலம் பேசி வாழ்கிறார்கள். தங்களையும் வந்து தங்கிவிட்டு செல்லுமாறு பிள்ளைகள் அழைத்தபடி இருப்பதை சொல்லி பூரிக்கின்றனர். வாழ்க்கை மாற்றம் எப்படி இருக்கிறது? நிச்சயம் அழகான, ஆச்சர்யம் கொண்ட மாற்றமே..
.
.

சுவாமி ரங்கநாதானந்தர் - தொடர் பதிவு II


எனது முந்தய பதிவின் தொடர்ச்சி இந்த பதிவு..
http://sinthanaipookal.blogspot.com/2010/01/blog-post_24.html

சுவாமி ரங்கநாதானந்தரின் இயற்பெயர் சங்கரன். சங்கரன்  இந்த பூமிக்கு வந்த நாள், டிசம்பர் 15 , 1908 . அந்த தினம், தூய அன்னை சாரதா தேவியாரின் பிறந்த தினம்(அதே டிசம்பர் 15 ) .. கேரள மாநிலம் திருச்சூருக்கு அருகே உள்ள, திருக்குர் கிராமம் இவரது பிறந்த இடம். ஒரு சிறிய கிராமத்தில் பிறந்திருந்தாலும், இவரது பார்வை மிக மிக விசாலமாய் இருந்தது. தான் உலகம் முழுமைக்குமான மனிதன் எனும் எண்ணம் நாளாக நாளாக வளர்ந்து இருந்தது. சிறு வயது முதல் நீச்சல் அவருக்கு விருப்பம் உடையதாய் இருந்தது. எங்கும் தண்ணீர் நிறைந்து இருப்பது கேரள மாநிலம்.. அவருக்கு நீர் விளையாட்டில் விருப்பம் ஏற்பட்டதில் ஆச்சர்யம் இல்லை. ஒரு மீன் குஞ்சை போல் அவருக்கு நீச்சல் எளிமையாய் இருந்தது..

அவரது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாய்  கொண்டு இருந்தது. அவரது சிறு வயதில் நடந்த இரு சம்பவங்களை பின்னாளில் உவகையோடு நினைவு கூர்கிறார். அவர் பத்து வயதாய் இருந்த தருணத்தில், அவரது தாய் நோய்வாய்பட்டு இருந்தார். அவரது கிராமம் ஒரு நதியின் கரையில் இருந்தது. அந்த நிலையில், அவரது தாய்க்கு மருத்துவம் அளிக்க வேண்டிய நிலை. அது சரியான, அடைமழை காலம். நதி முழுக்க வெள்ள காடாக இருந்தது. ஒரு ஆயுர்வேத மருத்துவர் நதி கரைக்கு அப்பால் வசித்து வந்தார். அவர்களின் வீட்டு சமையல்காரர், அந்த வீட்டு பையன்களில் ஒருவர் அவருடன் வந்தால், தன்னால் நதியை கடந்து மருந்து கொண்டு வர முடியும் என நம்பினார். அந்த நிலையில், இளம் சங்கரன் தான் அவருடன் சென்று வர முன் வருகிறான்.. அவரின் முடிவிற்கான காரணத்தை அவரே சொல்கிறார். ஒன்று அன்னையிடம் கொண்ட ஈடிணை அற்ற அன்பு. மற்றொன்று சாகசத்தின் மேல் அவர் கொண்ட அலாதி பிரியம். அன்று துடுப்பு போடுவது, அவருக்கு ஒரு இனிய விளையாட்டாக இருந்திருக்க கூடும்..

வாழ்வு முழுவதும், அவர் எளிய பாதைகளை தேர்ந்தெடுத்ததில்லை. கடினமான பாதைகள் அவரை மிக நன்றாக உற்சாகப்படுத்தி உள்ளது. உவகை கொள்ள செய்துள்ளது.... அவர் குறிப்பிடும் மற்றொரு சம்பவம்.. இளம் சங்கரனுக்கு 12 அல்லது 13 வயது இருக்கும்.. அவர் அன்று வீட்டில் இருந்தார். அப்பொழுது அவர் வீட்டுக்கு அருகே ஒரு மனிதரை தகாத வார்த்தைகளால் நிந்திக்கிறார்.. அதை கவனித்து விட்ட அவரது தாய், உடனே அவரை இடைமறித்து, மகனே! உனது நாக்கு கலைமகளின் உறைவிடம்.. அதன் வாயிலாக, தகாத வார்த்தைகளை உச்சரித்து, களங்கப்படுத்தி விடாதே என்கிறார். அன்று அவரது தாய் சொன்ன விஷயம், நேராக அவரது மூளைக்கும், இதயத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது . பின்னர் நீண்ட எண்பது ஆண்டு கால வாழ்வில், அவரது வாழ்வில் பேரர்த்தம் உள்ள ஒரு விஷயமாய் மாறி போனது. ஒவ்வொரு முறையும், அது அவரது எண்ணத்தில் நிழலாடி, அவரை வழிப்படுத்தி, நெறிப்படுத்தி உள்ளது. தாயின் வார்த்தைகளுக்கு அவ்வளவு மகத்துவம்..

அவரது வாழ்வின் பதினைந்தாவது வயதில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்பட்டது. அப்பொழுது அவர் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த தருணத்தில், அவரது பள்ளி சகா திருச்சூர் நகர நூலகத்தில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வந்திருந்தார். அந்த புத்தகத்தை இவரிடம் காண்பித்த நண்பர், இந்த புத்தகத்தை படிக்க விருப்பமா? என கேட்டார். ஆங்கிலத்தில் இருந்த அந்த புத்தகம்.. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின், "அமுத மொழிகள்" தொகுப்பு - The gospels of sri ramakrishna .. நிறைய மனிதர்களின் வாழ்வை மாற்றிய அந்த புத்தகம், அவரது வாழ்வையும் மாற்றியது. புத்தகத்தை வாங்கிய அவர், முதல் நூறு பக்கங்களை படிக்கும் வரை புத்தகத்தை அவர் கீழே வைக்கவில்லை. ஸ்ரீ ராமகிரிஷ்ணரின் வார்த்தைகள் என்னை முழுமையாக ஆட்கொண்டன என்கிறார். வாழ்வை பற்றிய எண்ணங்களை விசாலமாக்கியத்தில் அந்த புத்தகம் மேற்கொண்ட பங்கு மிக மிக அதிகம்..

அதன் தொடர்ச்சியாக அவருக்கு சுவாமி விவேகானந்தரின் the complete works புத்தகத்தின், மூன்று, நான்கு தொகுப்புகளை படித்து முடித்தார்... அடுத்து அவருக்கு கிடைத்தது, சகோதரி நிவேதிதையின், "என் பார்வையில் ஆசிரியர்.. "[The master as i saw him ]. இந்த சமயத்தில், அவர் கற்ற பாடல் சுவாமி அபேதானந்தர், அன்னையை பற்றி எழுதிய மகத்துவமான வரிகள்.. [ பிரக்ரிதீம் பரமாம் அபயம் வர தாம்..] எனும் துதி பாடல்... தம் ஒட்டுமொத்த வாழ்க்கைகான விதை இங்கே அவருக்கு விழுகிறது. இறை மேல் கொண்ட பக்தி, மனிதர் மேலான பேரன்பாய் மாறி போகிறது.

அமுத மொழிகளின் தொகுப்பை படித்த பின், இளம் சங்கரனுக்கு, 'ம' - என்கிற மகேந்திர நாத் குப்தரின் மேல் அளப்பரிய  மரியாதை தோன்றுகிறது. மகேந்திர நாத் குப்தர் - ஸ்ரீ ராம கிருஷ்ணரின் இல்லற சீடர்களில் ஒருவர். அவர் குருதேவர்- ராம கிருஷ்ணரை சந்தித்த தருணங்களில், அங்கு நடந்த உரையாடல்களை, அங்கு நடந்த நிகழ்வுகளை, கேட்டு குறிப்பெடுத்து கொண்டவர். அவையே அமுத மொழிகள் தொகுப்பாய் பின்னாளில் மலர்ந்தன.. சங்கரன் பின்னாளில், பிரம்மச்சர்ய தீட்சை பெற, 1929 ஆம் ஆண்டில், பேலூர் மேடம் வந்த நாட்களில், அவர் 'ம' வை சந்திக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த சமயத்தில், 'ம' வை வணங்கி   தன அன்பை காணிக்கையாக்கினார். அடுத்த சில நாட்களில், சில சாதுக்களோடு, ம - வை அவரது வீட்டில் சந்தித்தனர். அவர்கள் அங்கு இருந்த மூன்று மணி நேரத்தில், 'ம ' ஸ்ரீ ராம கிருஷ்ணரை பற்றி மட்டும் பேசிக்கொண்டு இருந்தார் என சுவாமி ரங்கநாதானந்தர் பின்னாளில் நினைவு கூர்கிறார் .
.
.
.
சுவாமி ரங்கநாதனந்தரின் சில சொற்பொழிவுகள் இங்கே..


மற்றொன்று உபநிடதத்தின் கருத்துக்கள் சொற்பொழிவுக்கு முன் சென்னையில் 1994


அன்னையை பற்றி

Sunday, January 24, 2010

சுவாமி ரங்கநாதானந்தர் - ஒப்புயர்வு அற்ற துறவி


சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வில் அபூர்வமாய் அமையும். சில மனிதர்களின் சந்திப்பு வாழ்வை அர்த்தமுள்ளதாக்கும். நல்ல மனிதர்களின் தொடர் பழக்கம், நம் ஒட்டுமொத்த வாழ்வை புரட்டி போடுகின்றது. சில மனிதர்களை நாம் வாழ்வில் சந்திக்க முடியவில்லையே என மனம் வருத்தம் கொள்கிறது. அந்த வருத்தத்தை போக்க நம்மிடம் இருப்பது அவர்கள் விட்டு சென்ற அவர்களின் புத்தகம், அனுபவங்கள், கருத்துக்கள்.. . ஒரு மனிதரை பற்றிய புத்தகங்கள், அவரோடு நாம் வாழ்ந்த அனுபவத்தை நமக்கு தரவல்லவை என்கிறார் பரமன் பச்சைமுத்து.

அப்படி நான் புத்தகங்கள் மூலம் அறிந்த மனிதர் சுவாமி ரங்கநாதானந்தர். சுவாமி ரங்கநாதானந்தர் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தின் பதின்மூன்றாவது தலைவராய் இருந்தவர். மிகப்பெரிய மாறுதல்களை தன்னகத்தே கொண்டிருந்த சென்ற நூற்றாண்டோடு, இவரது வாழ்வும் பின்னி பிணைந்திருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை.


வெறும் பள்ளி படிப்போடு இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர், சுவாமி ரங்கநாதானந்தர். மடத்தில் இணைந்தவுடன், அவர் மேற்கொண்ட பணி, சமையலில் உதவுவதும், தோட்ட வேலைகளை கவனிப்பதுவும்.. அப்படி எளிமையாய் துவங்கிய அவரது பணி, உலகம் முழுவதும் கிளை பிரித்து பரந்திருக்கும், இயக்கத்தின் தலைவரானதும், ஒப்புயர்வு அற்ற பேச்சாளராய், உலகம் முழுவதும், வேதாந்தத்தை, சுவாமி விவேகானந்தரின், ஸ்ரீ ராம கிருஷ்ணரின் எண்ணங்களை பரப்பிய வானம்பாடியாய் என அவரின் பயணம், அவரது விஸ்வரூபம், ஆச்சரியமும், உவகையும் கொண்டது.

அவர் மிக எளிய மனிதர். யாரும் அவரை அணுகும் வண்ணம் இருந்தது அவரின் அரிய பலம். அவரது நீண்ட பயணத்தில், எல்லா காரியங்களையும் சாத்தியமாக்கக கூடியவராய் இருந்தார். ஒரு துறவியின் வாழ்வில், உலகை நன்கு உணர்ந்தவராய் இருந்தார். நேரு , இந்திரா காந்தி துவங்கி, எல். கே அத்வானி, இன்றைய பிரதமர் மன்மோகன் வரை இவரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர்கள். இஸ்லாம் பற்றிய இவரது பேச்சை கேட்ட, ஜின்னா, ஒரு முகமதியன் எப்படி வாழ வேண்டும் என இன்று கற்று கொண்டேன் என்கிறார். சமூக பரப்பினில், இவரது பேச்சு, நிறைய இதயங்களை ஆற்று படுத்தி உள்ளது.       

ஹைதராபாத், கராச்சி, கல்கத்தா, பர்மா[ரங்கூன்] , தில்லி என இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், தன் பணியில் தனி முத்திரை பதித்தவர். தில்லியில் ஞாயிறு அன்று நடக்கும் இவரது தொடர் சொற்பொழிவு மிக பிரபலம். மைசூர் மற்றும் பெங்களூரில், சிறை கைதிகளுக்கு வகுப்புகள் நடத்தி உள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணரின் பிறந்த நாள் விழா சிறையில் நடந்தது. அனைத்து கைதிகளும் சுவாமிஜியிடம் ஆசி பெற்றனர். ஹரி கதையுடன் அன்று நடந்த நிகழ்வை, நிறைய பேர் உள்ளன்போடு வரவேற்று மகிழ்ந்தனர்..

எனது அறை நண்பர், பேலூர் ராமகிருஷ்ண மடத்தில், சுவாமி ரங்கநாதானன்தரை சந்தித்ததையும், அவர் வரவேற்று உபசரித்ததையும், உவகையோடு இன்றும் நன்றியோடு நினைவு கூர்கிறார். தான் வாழ்ந்த நாட்களில், தன்னை பற்றி எந்த புத்தகத்தையும் அனுமதிக்காத உண்மை துறவி. அவர் ஏற்று கொண்ட துறவு நெறிக்கு ஏற்ப, வாழ்வு முழுதும் அப்பழுக்கு அற்று , சக மனிதர்கள், அடித்தட்டு மக்களின் வாழ்வுக்காக, அவர்களின் மறுமலர்ச்சிக்காக தொடந்து போராடியவர்.   

மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி ஒரு முறை இப்படி குறிப்பிட்டார். " நமது நாடு அதன் தொன்மை கலாச்சாரத்தாலும், தத்துவ சிறப்பாலும், உயரிய எண்ணங்களாலும், ஒப்புமை அற்றது. ஆனால், இவற்றை பற்றி பல தருணங்களில், வெளிநாட்டிலோ, ஏன், நம் மக்களிடையே கூட, வெளிச்சமிட்டு காட்டியதில்லை. இதில் இருவர் விதிவிலக்கானவர்கள். அவர்கள், சுவாமி விவேகானந்தரும், சுவாமி ரங்கநாதனந்தரும் ஆவர்."

தேசிய நல்லிணக்கத்துக்கான, இந்திரா காந்தி விருதை முதன் முதலில் பெற்றவர் சுவாமி ரங்கநாதானந்தர். எந்த விருதாக இருந்தாலும், தனக்கு, தன் பெயரில் அளிக்காமல், இராம கிருஷ்ண இயக்கத்துக்கு அளித்தால், ஏற்று கொள்வேன் என உறுதியாக நின்றவர். துறவிக்கு விருதுகள் தேவையில்லை என்பதும், நான் செய்த எல்லா செயல்களும், என் சகோதர துறவிகளோடு இணைந்தே நிறைவேற்றினேன் என்பது அவரின் எண்ணம். 

பதினெட்டு வயதில், இராமகிருஷ்ண இயக்கத்தில் இணைந்தவர் ஏறக்குறைய, எழுபத்தெட்டு ஆண்டுகள், இயக்கத்தில், தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தற்போதைய ராம கிருஷ்ண இயக்க தலைவர் சுவாமி ஆத்மஸ்தானந்தர் வார்த்தைகளில் சொன்னால், " நான் தவறாக குறிப்பிட்டால், என்னை மன்னியுங்கள்.. சுவாமி விவேகானந்தருக்கு பின், சுவாமி ரங்கநாதானந்த மகாராஜ் போல், உலகமெங்கும் ஆன்மீக கருத்துக்களை பரப்பியவர் வேறு யாரும் இல்லை " என்கிறார்.

    "நீ ஆன்மீக மலர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாயா ?
     நீ மற்றவரை நேசிக்கிறாயா? அனைவருடனும்
     ஒன்றிய நிலையை நீ உணர்கிறாயா? உன்னுள்
      அமைதியை உணர்ந்து, அதை உன்னை சுற்றிலும்,
     சுடர்விட செய்கிறாயா? அது தான்
     ஆன்மீக வளர்ச்சியாகும்.....
     அகமுகமாக தியானத்தாலும், புற முகமாக
     சேவை மனப்பான்மையுடன் செய்யும் பணியாலும்
     அது விழிப்படைகிறது."    - சுவாமி ரங்கநாதானந்தர்.
.
.
.சுவாமி ரங்கனதானந்தரின் சொற்பொழிவு..


மற்றொரு சொற்பொழிவு - நடைமுறை வேதாந்தம்

Wednesday, January 13, 2010

தேசிய இளைஞர் தினம் - சுவாமி விவேகானந்தர்

 சுவாமி விவேகானந்தர் - பெயரை உச்சரிக்கும் தருணங்களிலேயே மனதில் ஒரு அபூர்வ ஆளுமையும், அவருக்கே உரித்தான தீட்சண்யமும், கம்பீர தோற்றமும் நிழலாடும். வலிமையே வாழ்வு முழுதும் போதித்தவர். கீழை தேசத்தின் மகிமையை உலகமெங்கும் எடுத்து சென்றவர், வேதாந்தத்தின் விளக்கம், ஒரு ஆன்ம ஒளி, இருண்ட தேசத்தின் வெளிச்ச விடிவெள்ளி என அவருக்கு நிறைய பக்கங்கள்.  அவரின் உருவத்திற்கும், அவரின் செயல்பாட்டுக்கும் அவர் என்றென்றும் இளைஞர். அவரின் பிறந்த நாளை இளைஞர் தினமாய் கொண்டாடுவது மிக மிக பொருத்தமானதே.

அவர் உருவாக்கிய உந்து சக்தி மிக மிக அரிதான செயல். நேதாஜி தன் வாழ்க்கை பயணத்தை சுவாமி விவேகானந்தரிடம் கற்று கொண்டவர். அவரின் பேச்சும் கருத்துமே நேதாஜிக்கு வாழ்வை, அதன் கட்டற்ற எழுச்சியை, தியாகத்தை விதைத்தது.


தன் இறுதி நாட்களில், போதும் நான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான பணியை முடித்து விட்டேன்... என சொல்ல முடிந்தது. ஒரு மனிதரின் கருத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழ முடியுமா? முடியும்.. புத்தர் நடை முறை உதாரணம்.. 
 
வாழ்வின் எல்லா வெற்றிகளையும், தன் குருதேவர் ஸ்ரீ ராம கிருஷ்ணரின், பாதத்திற்கே அர்பணிக்க முடிந்தது. அவரின் எல்லா செயல்களும், குருதேவரின் அனுமதியால் மட்டும் நடந்தவை. அப்படி ஒரு குருவும், அப்படி ஒரு சீடரும் அமைந்தது உலகம் செய்த பெரும் தவம்.  தனக்கு பின்னால், ஒரு மிகப்பெரும் குரு பரம்பரையை தோற்றுவித்து உலகுக்கு விட்டு சென்றது அவரின் எல்லா செயல்களுக்கும் சிகரம். 
 
தேசம் முழுதுமான அவரது பயணம் ஒரு தேசத்தின் சரியான நிலை எடுத்து சொன்னது. குமரி முனையில் அவர் செய்த தவம், ஒரு புத்தெழுச்சி மிக்க இந்தியாவை கொணர்ந்தது. 
 
ஒவ்வொரு இதயமும், வணக்கத்துக்கு உரியது என்பது அவர் கொண்ட அரிய நிலை.

விழிமின் எழுமின் கருதிய காரியம் கைகூடும் வரை ஓயாது உழைமின்.. இது எழுச்சி தீபம்...

அவரை தன் வாழ்வின் வழிகாட்டியாக எத்தனையோ மனிதர்கள் எண்ணி உள்ளனர். - என்றென்றும் பொய்க்காத  அடிவானத்து விடிவெள்ளி அவர்  . 

அது சுவாமி விவேகனந்தர் தன்  தாய் புவனேஸ்வரி அவர்களிடம் துறவுக்காய் அனுமதி கேட்டிருந்த காலம். ஒரு நாள் திடீரென நீ துறவு நெறிக்கு செல்லலாம் என அனுமதி தந்தார். சுவாமிஜி அவர்கட்கு ஆச்சர்யம். அதற்கான விளக்கத்தை அவரின் அம்மா தந்தார். ஒவ்வொரு நாளும் பழம் சாப்பிட, நறுக்க ஒரு கத்தியை அவரின் அம்மா எடுத்து வர சொல்வார். அன்று சுவாமிஜி கத்தியை தரும் பொழுது, கத்தியின் கூர் முனை அவரின் புறம் இருந்தது. அதை சுட்டி காட்டிய அவரின் அம்மா, உனது இதயம் எல்லா தியாகத்துக்கும் தயார் ஆகி விட்டது. இனி உன் முன் யார் வேண்டுமானாலும் பயம் இன்றி வந்து செல்லலாம் என சொன்னார்.
ஒவ்வொரு மனிதனும் இறைவனாக மாறலாம் என்பது அவர் கொடுத்த புது வெளிச்சம்.. அவர் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.. 
.