இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் பரபரப்புக்கு பஞ்சம் ஏதும் இல்லாமல் இருந்தது. ஆறாவது முறையாக அமெரிக்க ஓபனை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஜர் இறுதி போட்டியில் தோற்றது, ஒரு குழந்தைக்கு தாயான பின் ஒரு கிராண்ட்ஸ்லாம் போட்டியை வென்று அசத்திய கிம் க்ளிஷ்டர்ஸ், இரட்டையர் போட்டியில் வென்ற லியாண்டர் - லுகாஸ் ஜோடி என பல ஆச்சர்ய அதிசயங்கள்.
முதலில் பெண்கள் போட்டியில் வென்று சாதித்த கிம் கிளிஷ்டர்சுக்கு ஒரு ராயல் சல்யூட். ஒரு குழந்தைக்கு தாயாகி, நான்கு வருட இடைவெளிக்கு பின் களமிறங்கி, தன் அசாத்திய ஆட்டத்தால், பல முன்னணி வீராங்கனைகளை வென்று[ செரீனா உட்படவே ], தன் பெயரில் இன்னொரு கிராண்ட்ஸ்லாம் வெற்றியை சேர்த்து கொண்டது. குழந்தையுடன், பரிசு கோப்பையுடன் அவர் கையசைத்தது - அசத்தல் நிமிடங்கள்.
நிறைய கலகம் - அம்மணி செரினா வில்லியம்ஸ்- ஐ சேரும். பின்னே ; ராக்கெட்டுக்கு அல்லவா தெரிந்திருக்கும் அந்த வலி; ஆக்ரோஷமாக ராக்கெட்டால் , கோர்ட்டை அடித்த பொழுது, பார்வையாளர்கள் அதிர்ந்தே போனார்கள். லைன் நடுவருடன் தகராறு, தான் எந்த தவறும் செய்திடவில்லை, இதற்க்கு எதற்கு மன்னிப்பு என முதல் நாள் சொன்னவர்; அடுத்த நாள் அந்தர் பல்ட்டியுடன் மன்னிப்பு கோரினார்; ஆனாலும் அபராதம் கட்டி பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார்.
அடுத்தது டெல் போர்டோ - இந்த ஆண்டு பிரன்ச்சு ஓபெனில் ரோஜருடன் மல்லு கட்டியவர், அரை இறுதியில் நேர்செட்களில் நடாலை தோற்கடித்து, இறுதியில் ரோஜரை தோற்கடித்து சாதித்து காட்டியவர். இருபது வயதில் அவரது உயரம் போலவே அவரது ஆட்டமும் தொட முடியாத உயரத்தில் நின்றது. ரோஜர், நடால் தாண்டி இன்னொரு அற்புத ஆட்டக்காரர். .
இறுதி ஆட்டத்தில் தோற்ற ரோஜர். இந்த ஆண்டில் எல்லா கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் அசத்தியவர்[ எல்லா இறுதி ஆட்டத்திலும் ], இந்த தருணத்தில் எதிர்பாராத தோல்வி. ஆனாலும் சளைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆட்டம் அவர் கைகளில் தான் உள்ளதே. இந்த முறை அமைதியே ஆன ரோஜருக்கும் அபராதம் ஆனாலும் அதிகமே. தான் சில விநாடிகள் எடுத்து கொண்டாலும் தனக்கு நடுவர் பாரபட்சம் காட்டுகிறார் என சொன்னவர். சில பல தருணங்களில் தன்னால் மறு பரிசீலனைக்கு நடுவரை கோர முடியவில்லை என்பது அவர் வாதம்.
அடுத்த அசத்தல் - லியாண்டர் - லூகாஸ் ஜோடி. பல போட்டிகளில் இறுதி போட்டியில் கோப்பையை தவற விடுபவர்கள், இந்த முறை வென்று சாதித்தனர். அரை இறுதியில் பிரயன் ஜோடியை வென்றது அசாத்திய பாய்ச்சல். கலப்பு இரட்டையரில் வெல்லாவிடினும், இந்த வெற்றி அவரை நிச்சயம் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கும். வாழ்த்துக்கள் பயஸ். ஆட்டம் வயதாக வயதாக மெருகேறுகிறது. ஆனால் எதிர்த்து ஆடிய முன்னாள் பாட்னர் மகேசுக்கு திருப்தி பட்டுக்கொள்ள ரன்னர் அப் மட்டுமே. ம்ம். பார்க்கலாம் அடுத்த முறை..
.
.
.
Friday, September 25, 2009
Tuesday, September 22, 2009
நினைவுகள் - இன்று ஒரு தகவல் புகழ் தென்கச்சி அவர்கள்
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள், தினம் தோறும் வானொலி மூலமாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ நம் வரவேற்பறையை அலங்கரித்தவர். அவரின் எண்ணங்கள் பல நேரம் நம் பார்வையை விசாலப்படுத்தியவை. அவர் கையாண்ட எளிய நடை, அரிதான, சிக்கல் மிகுந்த விஷயங்களையும் யாருக்கும் கொண்டு சேர்க்கும் வல்லமை, அவருக்கே உரித்தான நகைச்சுவை, ஒரு அரிய மனிதரின் இழப்பை உணர செய்கின்றன.
எந்த மனிதருக்கும் கதைகள், எந்த வயதிலும் அலுப்பதில்லை; நாம் வாழ்வின் பல பகுதிகளில் கற்றலை, கதைகள் மூலமாக தெரிந்து இருக்கிறோம் . கதைகளை நம்மிடம் இருந்து பிரித்தால் நம் வளர்ச்சி அங்கு இல்லை. இந்த அரிய விஷயத்தை, நன்கு உணர்ந்தவர் சுவாமிநாதன் . கதைகளையும் நகைச்சுவையையும், பத்திரிக்கை உலகம், வானொலி, தொலைக்காட்சி என எல்லா ஊடக உலகிலும் தம்முடன் அழைத்து சென்றவர். அவரது பரிணாமம், ஆன்மிகம், சிந்தனை, நடந்த நிகழ்வுகள் என நீண்டு இருந்தது.
தம் முதல் விவசாய நிகழ்ச்சியில், எளிய நடையில், பயிர் பாதுகாப்பை, பூச்சிமருந்து தெளிப்பதை சொன்னவர், தம் எல்லா நிகழ்ச்சிகளிலும், அதே எளிய இனிய நடையை கொண்டு வந்தார். அவரது சிந்தனைகள், நிறையவே யோசிக்க வைத்தன. ஒவ்வொருவர் பார்வையிலும் , புதிய கோணத்தை அறிமுகம் செய்து வைத்த மிக முக்கிய மனிதர் சுவாமிநாதன். ஒரு நல்ல ஊடகவியலாளர். ஒரு நல்ல சமூக சிந்தனையாளர்.
தனது பணிக்காலம் முடிந்த பின், சமூகத்தின் பரபரப்பில் இருந்து ஒதுங்கி, அமைதியாக தனது வாழ்வை முன்னெடுத்து செல்ல முனைந்தவர். நல்லதொரு கேள்வி பதில் பகுதியை நடத்தி செல்லும் வல்லமை கொண்டவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், ராமகிருஷ்ண குருபூஜை விழாவில், அவரை காணவும் அவர் பேச்சை கேட்கும் அரிய வாய்ப்பையும் பெற்றேன். முப்பது நிமிடங்கள் அவரது நகைச்சுவை பேச்சு நீண்டது. அவர் சொன்ன அரிதான இரு விஷயங்கள் இங்கே.
குரு, ஆசிரியர் இருவர்க்கும் என்ன வேறுபாடு?
ஆசிரியர் பாடங்களை போதிப்பவர்.அத்துடன் அவரது வேலை முற்று பெறுகிறது. குரு வாழ்ந்து காட்டுபவர். உலகம் முழுவதும் , குருமார்களே மிக அதிகம் மதிக்க படுகிறார்கள்.
பார்வை எப்படிப்பட்டது? நம் பார்வை எப்படி இருக்க வேண்டும்?
பல நேரங்களில் நம் பார்வை மாற வேண்டும், அதை நாம் மாற்றுவதில்லை. ஒரு அரசனுக்கு உடலில் மனதில் பிரச்சனை. அவன் உடல் நிலை சரியாக, அவன் பார்க்கும் எல்லாம் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என - ஒரு முனிவர் போகிற போக்கில் சொல்லி சென்றார். அவர் சென்று, இரண்டு மாதம் கழித்து ஊருக்கு திரும்பி வந்தார். வந்தவர், ஊரே பச்சை நிறமாய் மாறி இருப்பதை கண்டு திகைத்தார். அவரையும், பச்சை சாயத்தில் குளிப்பாட்ட முனைந்தனர் மன்னனின் ஏவல் சமூகத்தினர். காரணம் கேட்ட முனிவருக்கு தலை சுற்றியது; முனிவரே நீங்கள் சொன்னதை தான் நாங்கள் செய்தோம்; இப்போது பாருங்கள் ஊரே பச்சை நிறமாய் உள்ளது; மன்னன் பார்வை படும் இடம் எல்லாம் பச்சை நிறம் என்றனர். அவர்களை தடுத்த முனிவர்; நீங்கள் ஏன், அரசனுக்கு ஒரு பச்சை கண்ணாடி வாங்கி கொடுத்து இருக்க கூடாது என கேட்டார்? நம் பார்வைகள் பல நேரம் இப்படி இல்லையே என்பதே பிரச்சனை.
இந்த பதிவு மிக மிக காலம் தாழ்த்தி வந்ததே. ஆனாலும், ஒரு நல்ல உள்ளத்தின் மறைவு வார்த்தைகளாய் வருவதை தடுக்க முடியவில்லை. ஐயா, நீங்கள் உங்களுக்கே உரித்தான; உங்களின் ஏற்ற இறக்கத்துடன் சொல்லி வந்த அத்தனை விஷயங்களும், எங்கள் நினைவில் என்றென்றுன் நிழலாடும். போய்வாருங்கள். உங்கள் காலம், உங்கள் வார்த்தைகள், சக மனிதர் வாழ்வில் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டது.
.
.
Labels:
தென்கச்சி சுவாமிநாதன்
Saturday, September 12, 2009
இந்த நாள் இனிய நாளே
ஒவ்வொரு நாளும் புலரும் பொழுதும் அதன் அழகோடு பிறக்கிறது. நம் பார்வைகளால் அந்த நாளை அதிர்ஷ்டம் கொண்டதாய், அர்த்தம் அற்றதாய் பார்க்க பழகுகிறோம். ஒவ்வொரு காலையும் பளிச் புன்னகையோடு, நம்மை எதிர்கொள்ள தயார் ஆகிறது. ஒவ்வொரு செடியும், நான் இன்று இந்த இடத்தை, அழகு படுத்துகிறேன் என சொல்லியே சிரிக்கின்றன.சிறகடிக்கும் ஒவ்வொரு புள்ளினமும், இன்னொரு நாளை தன இனிய குரலால் துவங்கி தன் மகிழ்ச்சியை, இளம் நாளையும், காலையும் கொண்டாடுகின்றன.ஒவ்வொரு நாளும் பெறற்கரிய வரம்.
ஒவ்வொரு நாளும் நமக்குள் சிந்திக்கவும் செயல்படவும் சில..
- இன்று நாம் ஒரு ஈவு இரக்கம் அற்ற பழி சொல்லை, இழி சொல்லை உதிர்க்கும் முன், பிறவி ஊமையாய் பிறந்த இன்னொரு சக மனிதனை நினைப்போம். நம்மில் உணர்வு இருந்தால், நம் ஒவ்வொரு வார்த்தை தடத்திலும், கலைமகள் இடம்பெருவாள். சொல்லும் ஒவ்வொரு சொல்லும், ஆயிரம் அர்த்தம் நிறைந்த இதிகாசமாய் மாறி போகும்.
- நம் உணவை குறை கூறும் முன், பிரபஞ்சத்தின் இன்னொரு மனிதன், உண்ண ஏதும் இல்லாமல் பரிதவிப்பவனை, ஒவ்வொரு ரொட்டி துண்டுக்கும், அலைபவனை நினைவுக்கு கொணர்வோம். உண்ணும் எல்லா பருக்கையும், நமக்கு அமிர்தமாய் மாறி போகும்.
- உங்கள் மனைவியை/கணவனை குறை கூறும் முன் ஒரே ஒரு நிமிடம் யோசிப்போம். உலகில் எத்தனையோ மனிதர்கள், துணைக்காக, சக மனிதனின் கரங்களுக்காக, வாழ்வின் பிடிப்புக்காக இறைவனை மன்றாடுபவரை நினைவுக்கு கொணர்வோம்.
- இன்று உங்கள் வாழ்வை குறை கூறும் முன், வாழ்வில் மிக இளம் வயதிலேயே இந்த மண்ணில் இருந்து விடைபெற்ற ஒருவரை நினைவுக்கு கொணருங்கள்[ நிலநடுக்கத்தில் புதைந்தது போன ஒரு குஜராத் பள்ளி குழந்தையோ, சுனாமியில் சுவடு மறைந்த ஒரு குழந்தையோ யாராயினும் பொருந்தும் ].
- இன்று ஒரு மனிதனை சுட்டி காட்டி நீ குற்றஞ் செய்தவன் என சுட்டும் முன், யோசிப்போம்... ' இங்கு யார் தான் குற்றம் குறை அற்றவர்கள்.? பிரபஞ்சத்தின் எல்லோரும் எதோ ஒரு வழியில் குற்றம் புரிந்தவராய் இருப்பார். ஆனால் நம் கண்கள் இன்னொரு மனிதன் குறையே பெரிதுபடுத்தும் பூத கண்ணாடியாய் இருக்கிறது. அவ்வளவே. '
- உங்களை எப்பொழுதெல்லாம், தாழ்வுணர்ச்சி ஆட்கொள்கிறதோ , உங்களை நீங்களே தரம் குறைந்தவராய் எண்ணம் உருவாகிறதோ அந்த நிமிடம் உங்களுள் எண்ணுங்கள் , நீங்கள் இன்னும் இந்த மண்ணில் உயிர் உடன் , உணர்வுடன் உலவுகிறீர்கள். ஒரு அர்த்தம் நிறைந்த புன்னகை உங்கள் முகத்தை அழகு படுத்தட்டும்.
முருகதாஸ் சொன்ன சம்பவம் நினைவுக்கு வருகிறது. மும்பை பகுதியில், ஒரு தாய் தன மகளை வீட்டில் வைத்து பூட்டி செல்கிறார். அவரால் தொடர்ந்து ஆறு நாட்கள் வீடு திரும்ப முடியவில்லை. ஆறு நாட்களுக்கு பின் சிறுமியை பிணமாய் பார்க்க முடிந்தது. போஸ்ட் மார்டம் தகவல் சொன்னது, அவள் குடலில் ஒரு பருக்கை கூட ஒட்டி இருக்கவில்லை என. அந்த சிறுமிக்கு ஒரு ரொட்டி துண்டு இருந்திருந்தால் கூட அவள் இன்று நம்முடன் ஒட்டி இருந்திருப்பாள். ஒவ்வொரு முறை உணவை வீணடிக்கும் பொழுதும் இந்த சம்பவம் நினைவில் நிழலாடட்டும்.
.
.
Labels:
சிந்தனைகள்
Friday, September 4, 2009
ஆசிரியர் தினம்
ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு தலைவர் பொறுப்பேற்ற தருணம், அவரை அணுகிய அவரது மாணவர் சிலர், அவரின் பிறந்த தினத்தை, கொண்டாடிட அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர்; ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியாக மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.
ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
இது ஒரு கதை. ஒரு கவிதையின் உரை வடிவம். இறைவன் ஆசிரியனை உருவாக்கும் முயற்சியில் முனைந்து இருக்கிறான். அது இடைவிடாத ஆறாவது நாள் வேலை அவருக்கு. அவர் முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. இந்த வடிவை உருவாக்க ,நீங்கள் தேவைக்கும் அதிகமாக நேரத்தை எடுத்து கொள்கிறீர்கள் என தேவதை இறையிடம் முறையிட்டது. இறைவனை பொறுத்தவரையில், ஆசிரியன், தொழில் நிறைய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவர் நிறைய இளம் உள்ளங்களை சென்றடைய வேண்டியவர். அந்த நிலையில் இறைவனின் கைகளில் ஒரு செயல் விளக்கம். வேறு என்ன? ஆசிரியர் இந்த கலவையோடு இருக்க வேண்டும் எனும் குறிப்புகள் தான். அதை தேவதையின் கைகளில் கொடுத்த இறைவன், அதை சரிபார்க்க சொன்னார். அவை இப்படி சென்றது..
- ஆசிரியன், அனைவர்க்கும் மேம்பட்டவராய் இருக்க வேண்டும், இத்துடன் மாணவரின் நிலைக்கு இறங்கி வர கூடியவராய் இருக்க வேண்டும்.
- அவர் தான் கற்பிப்பதற்கு சம்பந்தம் இல்லாத நூற்று என்பது விஷயங்களை செய்திட கூடியவராய் இருக்க வேண்டும்.
- முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக .
- தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய்..
- என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்லவராய் ..
- மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய்..
- மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும்..
ஒரு இணை கண்கள், ஒரு மாணவனை அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அணுகிட.. அடுத்தவர் குத்தும் முத்திரைகளை ஏற்காத பக்குவம்.. அடுத்த இணை கண்கள், எதையும் காணாமல், அந்த மாணவனை பற்றி அறிந்து கொள்ள வழிவகுப்பதாய். இந்த கண்கள், தலையின் பின்புறம் அமையும். முன்புறம் உள்ள கண்கள், அவர்களை நோக்கி, நான் உன்னை புரிந்து கொண்டேன், உன் மீது மற்ற எவரையும் விட , என்றென்றும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உன் மேல் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன் என ஒரு வார்த்தையும் உரைக்காமல் சொல்ல..
அதற்கு தேவதை இது என் வரையில் பெரிய செயல் வடிவம் போல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் நாளை தொடர கூடாது என்றது. அதற்கு இறை, அது முடியாது. இங்கு நான், என்னை போல் ஒருவரை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவர்கள் நோயுற்ற தருணத்திலும் தம் பணியில் இருப்பார். தம் இதயத்தில், தம் மாணவர்க்கு என தனி இடம் கொடுத்து இருப்பார். எந்த மாணவரையும் சீர்தூக்கி பார்க்க கூடியவராய், மாணவர்களின் சிக்கல்களை புரிந்து கொள்ள கூடியவராய் இருப்பார்.
தேவதை அந்த உருவை, அந்த சிற்பத்தை, இன்னும் சற்று அருகே சென்று கண்டது. இது மென் இதயம் பெற்ற உரு இல்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டது ? அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது. இந்த உரு சிந்திக்க வல்லதா? ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது.
இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்க்கசிவு அல்ல. இது ஒரு கண்ணீர்த்துளி என்றது இறை. கண்ணீர் துளி? ஏன்? - இது தேவதை.
இறை நிறைய சிந்தனையுடன் சொன்னது.. இது ஆசிரியருக்கு அடிக்கடி வர கூடியதே. இது ஒரு ஆண்டு முழுவதும் மாணவர்களுடன் இருந்து, அவர்களை வழியனுப்பி விட்டு, புது மாணவரை வரவேற்கும் தருணத்தில் அரும்பும். ஒரு சில மாணவர்களை சரிவர அணுக முடியாமல் போன வருத்தத்தில் அரும்பும். அந்த மாணவரின் பெற்றோர் கொள்ளும் இரக்க உணர்வில், அவர்கள் மாணவர்கள் சாதிக்கும் சிறு சிறு விஷயங்களில் பெருமையுடன் கண்ணீர் துளிர்க்கும்,என் மாணவர்கள் புதிய சிகரங்களை, மேன்மையை அடையும் தருணங்களில் துளிர்க்கும் ,என இறை முடித்தது.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கரை வரையில் சென்று, ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலெக்சாண்டர்(Alexander) போனால், ஆயிரம் அலெக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. உங்கள் அரிய பணி தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்... உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.நீங்கள் அந்த வரிசையில் முதலில் உள்ளவர்கள்.
.
.
.
Tuesday, September 1, 2009
நடிகர் சிவக்குமாருடன் ஒரு நேருக்கு நேர் - நிகழ்ச்சி - ஜி தமிழ் தொலைக்காட்சி
இந்த ஞாயிறு எதேச்சையாக தொலைக்காட்சியை கண்ட தருணத்தில், நடிகர் சிவக்குமாருடன் பேட்டியை காணும் வாய்ப்பு பெற்றேன் ( தமிழர் பார்வை - சுதாங்கனுடன் நேர்முகம்). சிவக்குமார் அவர்களின் பேச்சை கேட்பது ஒரு சுகானுபவம். ஒரு கால பெட்டகம், வாழ்வின் அர்த்தத்தை, தன் நடந்து வந்த சுவடுகளை, அரிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாய் அமைந்தது சிறப்பு. சமீப நாட்களில் சிவக்குமார் பங்கு பெரும் அனைத்து நிகழ்வுகளும் அதி முக்கியத்துவம் பெறுகின்றன. இதோ நேற்று பேரூர் சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் சிவக்குமார் பேசி இருக்கிறார்...
இரண்டு மணி நேரம் தொடர்ந்த அந்த தொலைக்காட்சி, பேட்டி ஒரு உணர்வு குவியலாய் மாறி மகிழ்ச்சி தந்தது. குற்றாலத்தில் குளிக்கும் போது, எந்த துளி என்னை தொட்டு சென்றது என இனங்காட்ட முடிவதில்லை... அப்படித்தான் அவரது பேச்சும்.. ஒரு பிரவாகமாய் நீள்கிறது..
இனி அவரது எண்ணங்களில்..
எம். ஜி ஆருடன் தொடர்ந்த பயணம், சிவாஜியுடன் தொடர்ந்த நட்பு, ஜெய் சங்கருடன் பூண்ட நட்பு என அவரது வார்த்தைகளில் பேட்டி சென்றது. அனைத்தும்.. சம்பவங்கள் வழியாகவே..
உங்களின் மூன்று படங்கள் - துவக்கத்திலேயே வெற்றி - ஆனால் நீங்கள் எதிர்பார்த்த உயரம் தொடவில்லையே...?
எனது படம் அன்னக்கிளி - சுஜாதாவின் நடிப்புக்காக ஓடியது. அடுத்து வந்த ஆட்டுக்கார அலமேலு-ஆட்டிற்காக ஓடியது. அது தான் நிஜம். வாழ்வில் நான் எண்ணியது.. வாழ்வு முழுவதும் சினிமா சோறு போடும் என்பதே.. அது நடந்தது. சினிமா என்னை கைவிட வில்லை என்றார். நான் எந்த தருணத்திலும், அண்ணா நீங்கள் படம் எடுக்கிறீர்கள் போல் கேள்விப்பட்டேன் என எப்போதும் தொடர்பு கொண்டு கேட்டதில்லை. அனைத்து வாய்ப்புகளும் என் கதவை தட்டியவையே...
உங்கள் வாழ்வை எப்படி அமைத்து கொண்டீர்கள்:
நான் எனக்காக ஒரு கிராப் வைத்து இருந்தேன் . ஒரு கட்டுபாடான, ஒழுக்கமும், நேர்த்தியும் உள்ளதாய் நடந்து வந்தேன் என்கிறார். அதையே என் குழந்தைகளுக்கும், பால பாடமாய் போதித்து வந்தேன் என்கிறார்.
காதல் திருமணம் பற்றி..
எனி வருங்காலம் முழுதும், காதல் திருமணமே நிறைந்து இருக்க போகிறது. காதலர்கள் திருமணம் செய்த பின், சிறிது காலத்தில் பிரிந்து போகாமல், பிரச்சனைகளை கண்டு ஒதுங்காமல், அடுத்த தலைமுறைக்கு உதாரணமாய் வாழ்ந்தது காட்ட வேண்டும் என்கிறார்.
மக்களில் நான் எவ்வளவு தூரம் பயணித்து இருக்கிறேன் என்பதே எனது வெற்றி என்கிறார். புகழும், பணமும் நிலையற்றவை. அதன் பின் ஓடுவதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை என்கிறார். இன்னொரு மனிதனை வாழ வைக்க பணம் பயன்பட்டால் அது சிறப்பானது என்கிறார்.
எனது ஊரை நேரம் வாய்க்கும் பொழுது எல்லாம் தரிசிக்கிறேன். என் பள்ளியில் என்னுடன் படித்தவர்கள், என் குடும்பத்துக்கு ஆரம்பம் முதல் உழைத்து வந்த சலவை தொழிலாளி, என் வீட்டை கட்டிய கொத்தனார், அவரது குடும்பம், இன்னும் அதே நிலையில் உள்ளது. ஆக நான் ஆண்டவனால், அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை உணர்கிறேன் என்கிறார். தான் தொடர்ந்தது சக மனிதனுக்கு உதவுகிறேன் என்கிறார்.
எப்படி நீங்கள் இலக்கியத்துக்கு வந்தீர்கள்?
நான் தனிமையை விரும்புபவன். சினிமா இனி போதும் என முடிவுக்கு வந்த பின், வாழ்வின் எனது எஞ்சிய நாட்களை இலக்கியத்தில் செலவிட முடிவு செய்தேன் என்கிறார். தமிழ் இலக்கியம் அவரை கவர்ந்ததில் ஆச்சர்யம் இல்லை. சிவக்குமார் என்ற மனிதன் வாழ்ந்தான் என அடுத்த தலைமுறை சொல்ல சில நல்ல விஷயங்களை கொடுத்து செல்ல முனைகிறேன் என்கிறார். அடுத்த தலைமுறைக்கு நம் தொன்மையை, நல்ல இலக்கியத்தின் சாற்றை பிழிந்து தர முனைகிறேன் என்கிறார். பேச்சு கம்பராமாயணம் பக்கம் திரும்புகிறது. சென்ற ஒரு ஆண்டில், கம்பராமாயணத்தில், முழுக்கவும், பயணித்து இருக்கிறார்... சிவக்குமார்.
ஏன் கம்பராமாயணம்? எது ஈர்த்தது? ஈடுபாடு எதனால்?
கம்பன் என்னை ஈர்த்தான் என்கிறார். " கல்வியில் சிறந்த தமிழ்நாடு புகழ் கம்பன் பிறந்த தமிழ் நாடு.. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என பாரதி வள்ளுவனை பின்னுக்கு கொண்டு சென்று கம்பனை முன்வைத்தான் என்கிறார். தான் அதிகம் கலங்கிய பகுதி.. ராவணன் மரணம், பிரம்மனின் பேரன் மரணம் தான் கலங்கி போக காரணமாய் அமைந்தது என்கிறார். இமய மலையை தூக்கியவன், சிவனை புகழ்ந்து சாம கானம் தீட்டியவன் ராவணன்.. ராமன் முழுக்க முழுக்க நல்லவன் அல்ல.. ராவணன் முழுக்க முழுக்க தீயவன் அல்ல என்பது சிவக்குமார் கருத்து..
பாரதியும், கண்ணதாசனும் இலக்கியத்தில் தன்னை அதிகம் ஈர்த்தவர்கள் என்கிறார்.
இன்னொரு பிறவி உங்களுக்கு கிடைத்தால் ?
எனக்கு மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை. " பிறவாமை வேண்டும்.. மீண்டும் பிறப்புண்டேல் என்றும் உன்னை மறவாமை வேண்டும்" அப்படி பிறப்பு கிடைத்தால்.. தமிழ் மண்ணில், இன்னொரு முறை கலை உலகில் பயணித்திட வேண்டும், ஓவியனாய் மாற வேண்டும் என்கிறார். முத்தாய்ப்பாக.. என் தாய்க்கே மீண்டும் மகனாக வேண்டும் என்கிறார். பிரவாகமாய் வந்த பேச்சு தன் தாயின் நினைவால் தழுதழுத்த குரலை அடைகிறார்.
தான் எஸ் எஸ் வாசனை முன் மாதிரியாய் கொண்டு இருந்தேன் என்கிறார். வாசன் அற்புதமான திறமை கொண்ட மனிதர். தனக்கு இருக்கும் நோயை இறுதி வரை கூட தன் மகனுக்கு சொல்லாதவர். தனது மறைவும் கூட எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி முடிய வேண்டும் என விரும்பினார் என்கிறார்.
சிவக்குமார் அவர்களின் சொல் ஆழம், கருத்துக்களில் தெளிவு அவரது வாழ்வை படிகமாய் பிரதிபலிக்கிறது.. மறைந்த பின்பும் மக்கள் ஒரு மனிதனை நினைவு கொள்கிறார்கள் என்றால் அவன் வாழ்வு அர்த்தம் நிறைந்தது என்கிறார்.
[ சிவக்குமார் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் : உங்களின் எனண்ணங்கள் எங்களை செழுமைக்கு எடுத்து செல்கின்றன. உங்கள் எண்ணங்கள் எங்களை நிறைய தழுவ வேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஒரு சக பயணியாய், உங்கள் கைகளை பற்றிய படி பயணிப்பது போல் இருந்தது உங்கள் நேர்முகம்.. உங்களுக்கு, நன்றியும் எங்களின் ,உளமார்ந்த வணக்கமும்.. ]

Subscribe to:
Posts (Atom)