ஒவ்வொரு மாணவனுக்கும், ஞானத்தின் சுடரை ஏற்றுகிற பணி ஆசிரியருடையது. அவர்களை நன்றியுடன் நினைவுகூரவும், அவர்களின் பணி தொடர வாழ்த்தவும், ஆசிரியர் தினம். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் இந்திய குடியரசு தலைவர் பொறுப்பேற்ற தருணம், அவரை அணுகிய அவரது மாணவர் சிலர், அவரின் பிறந்த தினத்தை, கொண்டாடிட அனுமதி கேட்டனர். அவர்களுக்கு, தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாய் கொண்டாடினால் அகமகிழ்வு கொள்வேன் என கேட்டு கொண்டார். அது முதல் செப்டம்பர் ஐந்து, ஆசிரியர் தினமாய் கொண்டாட படுகிறது.
தனது வாழ்வில் ஆசிரியர் பணியை பெருமையாய் கருதியவர், ராதாகிருஷ்ணன். ஆசிரியர் தொழிலுக்கு மரியாதை கொடுத்தவர். பெருமையை கொணர்ந்தவர்; ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயணப்பட முடியும் என்பதற்கு அவரே நேரடி செயல் விளக்கம். பல ஆசிரியர்கட்கு முன்னுதாரணம். ஆசிரியர்கள், மாணவர்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் மாணவர்களுக்கு, வாழ்வின் முன்னுதாரணமாய், என்றென்றுமான உந்து சக்தியாக மாறி போகின்றனர். ஆசிரியரிடம் கற்கிற பாடங்கள், மாணவரின் வாழ்வு முழுதும் வழிநடத்தும் சக்தியாக மாறுகின்றன. ஆசிரியர்களே, எல்லா தடைகளையும் உடைத்து, மாணவர்களின் ஆன்மாவுள் நுழையவும், சுய ஒளியை தரவும் தகுதி பெற்றவர்கள்.
ஒரு சமூகம், அதி உன்னத நிலை அடைந்து இருந்தால், நிச்சயமாக அதன் பின்னால் அற்புதமான ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால், ஆசிரியர் சமூகம், தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப்புகளும், அதிக முக்கியத்துவமும் நிறைந்தது அவர்கள் பயணம். மாணவர்களுக்கு அதிகம் தேவைப்படுவது, என்றென்றுமான ஊக்கமும், தன்னம்பிக்கையும், நன்னெறிகளும் .. இதை சரியாக மலர செய்திட்டால், அங்கே ஆசிரியர் வேலை அதன் முழு நிறைவை எட்டியதாக அர்த்தம். ஒரு மாணவன் ஆசிரியரை அடையும் தருணத்தில், வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில், சிலையாக வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது.
இது ஒரு கதை. ஒரு கவிதையின் உரை வடிவம். இறைவன் ஆசிரியனை உருவாக்கும் முயற்சியில் முனைந்து இருக்கிறான். அது இடைவிடாத ஆறாவது நாள் வேலை அவருக்கு. அவர் முன்னாள் ஒரு தேவதை தோன்றியது. இந்த வடிவை உருவாக்க ,நீங்கள் தேவைக்கும் அதிகமாக நேரத்தை எடுத்து கொள்கிறீர்கள் என தேவதை இறையிடம் முறையிட்டது. இறைவனை பொறுத்தவரையில், ஆசிரியன், தொழில் நிறைய பொறுப்புகளை உள்ளடக்கியது. அவர் நிறைய இளம் உள்ளங்களை சென்றடைய வேண்டியவர். அந்த நிலையில் இறைவனின் கைகளில் ஒரு செயல் விளக்கம். வேறு என்ன? ஆசிரியர் இந்த கலவையோடு இருக்க வேண்டும் எனும் குறிப்புகள் தான். அதை தேவதையின் கைகளில் கொடுத்த இறைவன், அதை சரிபார்க்க சொன்னார். அவை இப்படி சென்றது..
- ஆசிரியன், அனைவர்க்கும் மேம்பட்டவராய் இருக்க வேண்டும், இத்துடன் மாணவரின் நிலைக்கு இறங்கி வர கூடியவராய் இருக்க வேண்டும்.
- அவர் தான் கற்பிப்பதற்கு சம்பந்தம் இல்லாத நூற்று என்பது விஷயங்களை செய்திட கூடியவராய் இருக்க வேண்டும்.
- முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள கூடியவராய், தினமும், சரியான நேரத்தில் இருப்பவராக .
- தனக்கு செலவிடும் நேரத்தை விட அடுத்தவருக்கு அதிகம் செலவழிக்க வல்லவராய்..
- என்றென்றும் தவழும் புன்னகையுடன், பிரச்சனையுடன் வலம் வரும் மாணவரையும், பெற்றோரையும் எதிகொள்ள வல்லவராய் ..
- மற்றவர் தமக்கு துணை நிற்காத தருணத்திலும் தனது பணியை சிறப்புற செய்பவராய், தம் மாணவருக்கு இன்னொறு பெற்றோராய்..
- மூன்று இணை கைகளை கொண்டவராய் இருக்க வேண்டும்..
ஒரு இணை கண்கள், ஒரு மாணவனை அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அணுகிட.. அடுத்தவர் குத்தும் முத்திரைகளை ஏற்காத பக்குவம்.. அடுத்த இணை கண்கள், எதையும் காணாமல், அந்த மாணவனை பற்றி அறிந்து கொள்ள வழிவகுப்பதாய். இந்த கண்கள், தலையின் பின்புறம் அமையும். முன்புறம் உள்ள கண்கள், அவர்களை நோக்கி, நான் உன்னை புரிந்து கொண்டேன், உன் மீது மற்ற எவரையும் விட , என்றென்றும் நம்பிக்கை கொண்டுள்ளேன், உன் மேல் பெரும் மதிப்பு கொண்டுள்ளேன் என ஒரு வார்த்தையும் உரைக்காமல் சொல்ல..
அதற்கு தேவதை இது என் வரையில் பெரிய செயல் வடிவம் போல் தோன்றுகிறது. நீங்கள் ஏன் நாளை தொடர கூடாது என்றது. அதற்கு இறை, அது முடியாது. இங்கு நான், என்னை போல் ஒருவரை உருவாக்கும் முயற்சியில் உள்ளேன். அவர்கள் நோயுற்ற தருணத்திலும் தம் பணியில் இருப்பார். தம் இதயத்தில், தம் மாணவர்க்கு என தனி இடம் கொடுத்து இருப்பார். எந்த மாணவரையும் சீர்தூக்கி பார்க்க கூடியவராய், மாணவர்களின் சிக்கல்களை புரிந்து கொள்ள கூடியவராய் இருப்பார்.
தேவதை அந்த உருவை, அந்த சிற்பத்தை, இன்னும் சற்று அருகே சென்று கண்டது. இது மென் இதயம் பெற்ற உரு இல்லையா என ஆச்சர்யத்துடன் கேட்டது ? அதற்கு இறை ஆம், ஆனால் வலிமையானதும் கூட என பதில் சொன்னது. இந்த ஆசிரியன் எவ்வளவு மன திண்மை கொண்டவன் என உன்னால் அனுமானிக்க முடியாது என்றது. இந்த உரு சிந்திக்க வல்லதா? ஆம், நிஜம், அத்துடன், சரியான காரணத்துடன், சமாதானம் கொள்ளவும் மிக்கது. அந்த நிலையில் தேவதை, உருவின், கன்னத்தை தொட்ட நிலையில் ஒரு நீர் துளியை கண்டது.
இறையிடம் திரும்பி இதோ ஒரு நீர்கசிவை விட்டு விட்டீர்கள் என்றது. இது நீர்க்கசிவு அல்ல. இது ஒரு கண்ணீர்த்துளி என்றது இறை. கண்ணீர் துளி? ஏன்? - இது தேவதை.
இறை நிறைய சிந்தனையுடன் சொன்னது.. இது ஆசிரியருக்கு அடிக்கடி வர கூடியதே. இது ஒரு ஆண்டு முழுவதும் மாணவர்களுடன் இருந்து, அவர்களை வழியனுப்பி விட்டு, புது மாணவரை வரவேற்கும் தருணத்தில் அரும்பும். ஒரு சில மாணவர்களை சரிவர அணுக முடியாமல் போன வருத்தத்தில் அரும்பும். அந்த மாணவரின் பெற்றோர் கொள்ளும் இரக்க உணர்வில், அவர்கள் மாணவர்கள் சாதிக்கும் சிறு சிறு விஷயங்களில் பெருமையுடன் கண்ணீர் துளிர்க்கும்,என் மாணவர்கள் புதிய சிகரங்களை, மேன்மையை அடையும் தருணங்களில் துளிர்க்கும் ,என இறை முடித்தது.
ஒரு சமயம் அரிஸ்டாட்டில் தம் மாணவருடன் ஆற்றின் கரைக்கு வந்தார். மாணவர்களை கரையில் நிற்க வைத்தவர், நான் ஆற்றின் அக்கரை வரையில் சென்று, ஆற்றில் ஏதாவது சுழல்கள் உள்ளதா என பார்த்து வருகிறேன் என்றார். அவர் ஆயத்தம் கொண்ட சமயம், அவரின் ஒரு மாணவர் தண்ணீரில் நீந்தி செல்வதை கண்டார். மறு கரை வரை சென்று திரும்பிய மாணவர், குருவே, சுழல்கள் இல்லை., நாம் தைரியமாய் ஆற்றை கடக்கலாம் என்றார். அந்த நிலையில், அரிஸ்ட்டாட்டில், உன்னை சுழல்கள் எடுத்து சென்றிருந்தால் என்னவாகி இருக்கும் என்றார். அதற்கு அந்த மாணவன், இந்த அலெக்சாண்டர்(Alexander) போனால், ஆயிரம் அலெக்சாண்டர்களை உருவாக்கும் வல்லமை உள்ளவர் நீங்கள். ஆனால் ஒரு அரிதான குருவை இழந்தால் நாங்கள் பரிதவித்து போவோம் என்றான். அப்படி ஆசிரியர் மாணவர் உறவு அமைவது நல்ல சமூகத்துக்கு புது சுவாசத்தை கொணரும்.
என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு, ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.. உங்கள் அரிய பணி தொடரட்டும். நல்வாழ்த்துக்கள்... உலகில் தனக்கென வாழாமல் பிறர்க்கென வாழ்பவர்கள், பிறரால் என்றென்றும் ஞாபகம் கொள்ள படுகிறார்கள்.நீங்கள் அந்த வரிசையில் முதலில் உள்ளவர்கள்.
.
.
.
3 comments:
சிறந்த பதிவு..!
நன்றி!
very nice. pl avoid spelling mistakes.
நன்றி அனானி நண்பரே.. இனி அப்படி நேராமல் பார்த்து கொள்கிறேன்
Post a Comment
உங்களின் கருத்துக்களை இங்கே சொல்லுங்கள்! உங்களின் அனைத்து எண்ணங்களையும் வரவேற்கிறேன்