வெண்ணிற இரவுகள்(White Nights) - ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி (Fyodor Dostoyevsky)
வெண்ணிற இரவுகள்(White Nights) - தாஸ்தோவ்ஸ்கி அவர்களால் 169 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்டது. அதன் தமிழாக்கத்தை "எதிர்" வெளியீடாக "ரா. கிருஷ்ணய்யாவின்" மொழியாக்கத்தில் படிக்க நேர்ந்தது. தாஸ்தோவ்ஸ்கியின் எழுத்தை முதல் முதலில், முழுமையாக வாசிப்பது உண்மையில் பேரனுபவம்; முன்னர் நான் வாசிக்க முற்பட்ட 'The Ediot' புத்தக அலமாரியில் நீண்ட துயில் கொள்கிறது. அருமையான வடிவமைப்பில், ருஷ்ய சிறுகதை தமிழில். எஸ். ரா. அவர்களின் இந்த கதை பற்றிய எண்ண ஓட்டங்கள் கதையின் முன்னுரையாக தரப்பட்டுள்ளது சிறப்பு.
அந்த நாளைய செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கதை நிகழ்கிறது. பகல் நீண்ட இரவிலும் சூரியன் நீளும் உலகு கதையில் விரிகிறது. இரண்டு ஆண்கள்,ஒரு இளம் பெண், ஒரு பாட்டி என கதை மாந்தர்கள் சொற்பமானவர்களே; இந்த கதை சொல்லி அவரின் வாயிலாகவே கதை விரிகிறது; அவர்க்கு என பெயர் இல்லை; அவர் ஒரு கனவுலக வாசி;
கதையின் துவக்கத்தில்,அன்று உச்சத்தில் இருந்த கவிஞர் துர்கனேவ் அவர்களின் 'பூக்கள்' தொகுப்பின் கவிதை இடம்பெற்று உள்ளது.
"நின்காதல் நிழல் தன்னில்
நின்று மகிழ்வோம்
மின்னி மறையும்
கண்ணிமை பொழுதெனினும்
போதுமது என்றெண்ணிப்
பிறந்தானோ ?.."
"The Flower" by Ivan Turgenev....
"And was it his destined part
Only one moment in his life
To be close to your heart?
Or was he fated from the start
to live for just one fleeting instant,
within the purlieus of your heart."
இந்த கவிதையே கதைதனை சொல்லிவிடுகிறது; தாஸ்தோவ்ஸ்கி கதையில் அவரின் வாழ்வனுபவம் ஏராளம் இடம் பெறும். இந்த கதையின் பின் தாஸ்தோவ்ஸ்கி நின்று பேசுவது போல் கதை உள்ளது; அவரின் எல்லா நாவல்களும் அவரின் வாழ்வே! என்ன; அங்கங்கே ஒவ்வொரு கதா பாத்திரம்.. அவ்வளவே ? ஏனெனில் தாஸ்தோவ்ஸ்கி வாழ்ந்த வாழ்வும், தொடர்ந்த நிழல் போன்ற நெருக்கடிகளும், சுமைகளும் அத்தகையவை; தாஸ்தோவ்ஸ்கி அவர்களின் அக உலகம் போன்றது தான் இந்த கதை நாயகனின் உலகமும்; ஏன் - நம்மில் பெரும்பான்மையானவர்கள் இயைபும் அப்படி தானே! நான்கு இரவுகள், ஒரு பகல் என கதை முடிந்து விடுகிறது;கதை நாயகன் தன்னை ஒரு கூச்ச சுபாவம் கொண்டவராய், தனிமையில் உழல்பவராய் தன்னை சுட்டுகிறார்;
அவர் ஒரு இளம் பெண்ணுக்கு உதவ போய்(நாஸ்தென்கா), அறிமுகமாகி, அவளின் காதலுக்கு உதவுகிறார்; இந்த தருணத்தில் அவர்க்கு நாஸ்தென்கா மீது காதல்; நாஸ்தென்கா - வின் கடிதத்துடன் அவரின் காதலரை சந்திக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில்,ஓர் இடத்தில் சந்திக்கும் இவர்களின் எண்ண ஓட்டம், தொடர் பேச்சு, அழுகை , மகிழ்ச்சி, நட்பு, சுய மதிப்பீடுகள் இவை கதையை நகர்த்துகின்றன. நாஸ்தென்கா தன் கண் தெரியாத பாட்டியுடன் வாழ்வபள். ஒரு வருடத்துக்கு பின், தன் காதலன் வரவை இப்பொழுது எதிர்பார்த்து காத்திருப்பவள்;
நான்காவது நாள், தன் காதலன் வராத நிலையில் நாஸ்தென்கா கலங்குவதும், கதையின் நாயகனிடத்தில் தானும் காதல் வயப்படுவது போல் கதை நகர்ந்து, திடீர் திருப்பமாய் காதலன் அங்கே உதயமாகிறான்; அந்த நிலையில், கதை நாயகனிடம் நாஸ்தென்கா விடைபெறுகிறாள்;
அடுத்த நாள் , பகல் பொழுதில் நாஸ்தென்காவின் கடிதத்தை கண்ணீரோடு வாசிப்பதோடு கதை முடிகிறது; நீ எங்கிருந்தாலும் வாழ்க! உன் மங்கள குங்குமம் வாழ்க! என்பதாய் திரை விழுகிறது;
" உன் வானம் என்றும் நிர்மலமாய் ஒளிர்வதாக! உனது இனிய புன்னகை துன்பத்தால் தீண்டப்படாது என்றும் ஒளி வீசுவதாக;"
My God, a moment of bliss. Why, isn't that enough for a whole lifetime?
I am a dreamer. I know so little of real life that I just can’t help re-living such moments as these in my dreams, for such moments are something I have very rarely experienced. I am going to dream about you the whole night, the whole week, the whole year.
http://www.sramakrishnan.com/?p=689